அஞ்சலாதிரு

பொருள் – ‘பலமாய் இரு’

 

இலக்கில்லா வானின் தேகமெங்கும் இருள் மை சூழ்ந்துவிட்ட இரவு நேரம் அது. இடைவிடாது நச்சுத்தூறல் தூறி, இருப்பவர்களை இம்சித்துக் கொண்டிருந்தது. 

 

வண்ண விளக்குகளால் தன் அங்கமெங்கும் அலங்கரித்துக் கொண்ட அழகுப் பதுமை போல், ஒய்யாரமாய் நிமிர்ந்து நின்றிருந்தது அந்த சூப்பர் மார்க்கெட்.

 

நேரம் ஒன்பது மணியை நெருங்கிவிட்டதால் ஆங்காங்கே உலவிக் கொண்டிருந்த ஒரு சிலரும் விரைவாக பில் கவுண்ட்டரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். வேகமாக வீட்டிற்கு போக வேண்டும் எனும் அவசரம் அத்தனை பேர் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது…

 

ப்ளூ வண்ண ஜீன்ஸும் அதற்கு தோதான வெள்ளை டிஷர்ட்டும் அணிந்திருந்த ஒருவன், சாவகாசமாய் அந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றிக் கொண்டு வந்தான்.

 

வினித்! சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை. அவன் எந்த வேலையிலும் மூன்று மாதம் கூட தாக்குப் பிடிப்பது கிடையாது.

 

இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்த மூன்றாவது மகனாதலால், இவனுக்கு மாதா மாதம் பணம் அனுப்பி பாழாக்கியது அவன் குடும்பம். பிறகென்ன கவலை?

 

அவன் கால்கள் தனக்கு விருப்பமான திசையில், இசை போட்ட படி நடக்க, கைகளோ வேண்டியது வேண்டாதது அனைத்தையும் ட்ராலியில் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்தது.

 

இதற்கு மேல் ட்ராலி தாங்காது என்றானதும், வினித் அதை தூரமாய் தள்ளி விட்டான். நேராகப் போய், ஒரு செல்ஃபி முட்டிக் கொண்டு நின்றது ட்ராலி. அது முட்டியதன் அடையாளமாய், பலகையிலும் கீறல் பல்லைக்காட்டிற்று…

 

முன் வரிசையிலிருந்த தின்பண்டங்களை தடவிக் கொடுத்துக் கொண்டே சென்றவனின் கை ஓரிடத்தில் நின்றது. அங்கே ஒரு ஐந்து ரூபாய் சிப்ஸ் பாக்கெட் இருந்தது…

 

அதை மட்டும் பில் போடும் இடத்திற்கு எடுத்துக்கொண்டு சென்றான். அவன் விட்டுச் சென்ற ட்ராலியை பார்த்த பணிப்பெண், கிட்டத்தட்ட அழுதுவிடும் மனநிலையோடு ஒவ்வொரு பொருளையும் அதன் இடத்தில் அடுக்கத் துவங்கினாள்.

 

சடுதியில் பணம் கட்டும் வேலை முடிந்துவிட்டது வினித்திற்கு. அதற்கு கூட பொறுக்காதவன் போல, உடனே பாக்கெட்டை பிரித்து தின்னத் தொடங்கிவிட்டான் அவன். 

 

பசியோடு பணி செய்திருந்த அனைவரும், கறுக் முறுக்கென சிப்ஸ் தின்பவனை ஓர் நொடி திரும்பிப் பார்த்துவிட்டு, நாகரீகம் கருதி முகத்தை திருப்பிக் கொண்டனர்.

 

அனைவரையும் வெறுப்பேற்றி முடித்துவிட்டு வாசல் பக்கம் நகர்ந்தவன், அங்கே அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வட்ட வடிவ சோப்பு டப்பாய் கோபுரத்தினைப் பார்த்தான். 

 

அடுத்த கணமே அவன் கோணல் புத்தி தன் வேலையைக் காட்ட, கீழ் பகுதியிலிருந்த ஒரு சோப்பை மட்டும் தெரியாமல் மிதிப்பது போல உதைத்துவிட்டான். ஒற்றை அடிமானம் நகர்ந்ததும், அதன் ஒட்டுமொத்த வரிசையும் ஆட்டம் காண, சரிந்து விழுந்தது கோபுரம்.

 

“அச்சச்சோ… தெரியாம நடந்திடுச்சு, சாரி…” என்றவனை, அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் பார்வையாலேயே எரிப்பது போல பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

சிரித்தபடியே வெளியே வந்தவன் தின்று கொண்டிருந்த சிப்ஸ் பாக்கெட்டை, வேண்டுமென்றே சூப்பர் மார்க்கெட்டின் வாசலில் தலைகுப்புற போட்டுவிட்டு போனான்.

 

செக்யூரிட்டி, “ஏப்பா, ஏய்… நில்லு” என்று கத்திக் கொண்டிருக்க, ஒரே நொடியில் அவன் எந்திர புரவி அவனை அப்பகுதையை விட்டு தூரமாய் அழைத்துச் சென்றிருந்தது.

 

“சனியன், நமக்குனு வந்து சேருதுபாரு” என்றவர், வெகு சிரமப்பட்டு குனிந்து சிதறிய சிப்ஸ்களை அள்ளி குப்பைத் தொட்டியில் போட்டார்.

 

‘அப்படியேவிட்டால், அடுத்து வருபவர்கள் மிதித்து அள்ளக்கூட முடியாதபடி தூளாக போய்விடுமே…’ எனும் நல்ல எண்ணம்தான் அந்த முதியவரின் முதுகை வளைத்து வைத்திருந்தது.

 

விரைந்து பறந்த வினித், வீடு சென்று சேர்வதற்கு இருள் சூழ்ந்த வீதிகளையே அதிகம் தேர்ந்தெடுத்தான். இதுவும் அவனது அன்றாட வாடிக்கைதான்…

 

அப்படி அவன் போகும் பாதையில் யாரேனும் நடப்பது தெரிந்தால், வேண்டுமென்றே வேகத்தை அதிகமாக்கி, அவர்களை இடிப்பதுபோல் வண்டியைச் செலுத்துவான்.

 

அவன் விளையாட்டால் உயிர்பயத்தோடு, ‘ஆ…’ என அலறுபவர்கள் அநேகம். 

 

ஒரு சிலர் பயத்தினால் தப்பிக்க நினைத்து, தவறி விழுந்தும் இருக்கின்றனர். அதிர்ச்சிக்குள்ளான அவர்களின் முகபாவனைகளை மனதிற்குள் ரசித்தபடியே வீடு போய் சேர்வான் வினித்.

 

இதோ, இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றான். வேலைக்கு போய்விட்டு திரும்பிச் செல்லும் ஐம்பது வயது பெண்மணியை, இடிப்பது போல் சென்றான்.

 

அவரோ, தங்கச் சங்கிலியை அறுக்க வரும் திருடர் கூட்டத்தில் ஒருவனாய் அவனை எண்ணிக்கொண்டு, “திருடன் திருடன்…” என்று கத்தினார்.

 

வினித் இதைப் போல எத்தனை பேரை பார்த்திருப்பான்?! அவர் பய அலறலைக் கேட்டு ரசித்தபடி ஸ்கூட்டரை வேகமாக செலுத்தினான்.

 

இருள் பாதையில் ஒருவரும் உதவிக்கு வராமல் போனதால் அந்த பெண்மணி, ‘இதற்குமேல் கடவுள்தான் என்னை காப்பாற்ற வேண்டும்…’ என்றெண்ணி கண்களை மூடிக்கொண்டு கீழே உட்கார்ந்துவிட்டார்.

 

அவரை உரசுவது போல் பறந்த வினித், தெரு முனைக்கு சென்றதும் ஒருமுறை திரும்பிப் பார்த்தான். இன்னும் அந்த பெண்மணி அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார்.

 

“ஹா… ஹா…” என்றொரு பேய்ச்சிரிப்புடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

 

இரண்டு தெரு தள்ளி, மீண்டும் ஒரு இருளான பாதை தெரிந்தது. இம்மியும் யோசிக்காமல், இயந்திர புரவியை திருப்பினான் அந்த சாலைக்கு…

 

அவன் ஆசைப்படி ஒரு சிறு பெண் குழந்தை தனியே அந்த சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தது. அவசரமாய் மளிகை கடைக்கு போய் விட்டு வருவதன் அடையாளமாய், அந்த பிள்ளையின் கையில் ஒரு குட்டி கூடை இருந்தது.

 

அலுங்காமல் குலுங்காமல் கூடையைத் தூக்கிக் கொண்டு வரும் பிள்ளைக்கு நேராக பைக்கை ஓட்டினான் வினித். பயந்துபோன பாப்பா, பதற்றத்தில் கூடையை கீழே போட்டுவிட்டு, ‘ஆ…’ என அலறினாள்.

 

விழுந்த கூடையிலிருந்த முட்டைகள், வேதனையோடு தன் இன்னுயிரைத் துறந்தன. அடுத்தடுத்து இருவரை அழவைத்த சந்தோஷத்தில், ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தான் வினித்.

 

அந்த சாலையின் முடிவில் அவன் பைக் திரும்பிய அதே நேரம், எதிரில் வந்த சிவப்பு வண்ண கார் அவனோடு நேருக்கு நேராய் மோதியது.

 

கார் இடித்த வேகத்தால், பைக் பலமான சப்தத்தோடு சரிந்து விழ, சற்று தூரம் தள்ளி வீசப்பட்டான் வினித்..

 

“ஐயோ… அம்மா…” என்று பலமாய் முணங்குபவனை, சில நிமிடங்களுக்கு நின்று நிதானமாய் பார்த்து ரசித்தது காரிலிருந்த உருவம்‌.

 

“ஹெல்ப்… ஹெல்ப்…” என்று உயிர் தேய கெஞ்சினான் வினித்.

 

கார் கண்ணாடி மெது மெதுவாய் கீழே இறங்க, டிரைவர் இருக்கையில் மை பூசிய மான் விழியாள், இருப்பதைக் கண்டான் அவன்.

 

இதழ் சுழித்துச் சிரித்தவள், “வலியோடவே செத்துப்போ…” என்று கூறிவிட்டு தன் சிவப்பு வண்ண காரை நகர்த்த துவங்கினாள்.

 

அவள் காரின் முகப்பு பகுதியில், ஒரு வாரத்திற்கு முன் மாரடைப்பால் இறந்து போன அவளது தாத்தாவின் புகைப்படம் இருந்தது‌. 

 

பாவம்! ஒரு வண்டிக்காரன் இடிக்க வந்ததனால், நகர்ந்து போக முயன்று தடுக்கி விழுந்துவிட்டார். விழுந்த வேகத்தில் நெஞ்சுவலி வர, மருத்துவமனை போய் சேர்வதற்குள் அவர் ஜீவன் இவ்வுலகை விட்டு விலகிவிட்டது.

 

அவர் போட்டோவைத் தொட்டு முத்தம் தந்த பேதை, சற்று தூரம் தள்ளி அழுது கொண்டிருந்த சின்ன பிள்ளையின் முன் தன் காரை நிறுத்தினாள்‌

 

ஐநூறு ரூபாய் தாளினை நீட்டி, “யாருக்கும் சொல்லாத, என்னென்ன வாங்கினியோ அதை திரும்ப வாங்கிட்டு மீதியை வேற யாருக்காவது கொடுத்துடு” என்றாள்.

 

என்ன செய்வதென்று தெரியாமல், அந்த பணத்தை வாங்கிக் கொண்டாள் அச்சிறுமி. இதுவரை இருள் பாதைகளைத் தேடித் திரிந்த சிவப்பு வண்ண கார், இப்போது வெளிச்சம் மிகுந்திருந்த பாதையில் பயணிக்க துவங்கியது.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
222 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
304 15 1
வேண்டினேன் நானுன்னை
532 6 0
நீ எந்தன் நிஜமா?
374 8 1
என்துணை நீயல்லவா?
448 12 0
கற்றது காதல்
211 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page