நிழல் – 1
அதிகாலை சூரியன், காலைப் பனியினை கிழித்துக்கொண்டு கிழக்கு வானில் உதித்திருந்த நேரம் அது. ஷாலினி அவசர அவசரமாய் தன் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டாள். சென்னையில் ஒரு புகழ்பெற்ற கணினி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நவநாகரீக யுவதி அவள்.
வர்ணங்கள் ததும்பும் பட்டாம்பூச்சி போல இலக்கின்றி பறந்து கொண்டிருந்தவளை காதல் எனும் ஒரே ஒரு செயல், ஒட்டுமொத்தமாய் புரட்டி போட்டுவிட்டது. அன்று முதல் அவள் வாழ்வில் எல்லாமே விருப்பத்திற்கு மாறாக சென்றுவிட்டது.
இந்த வேலை ஒன்று தான் இப்போதைக்கு அவளுக்கு இருக்கும் ஒரே பிடித்தமும் பிடிமானமும். இதை மட்டுமாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில்தான், எல்லா இன்னல்களையும் தாண்டி வேலைக்கு போகிறாள்.
சென்னையின் காலை நேரத்து போக்குவரத்து நெரிசலில் தன் ஸ்கூட்டியை முயன்ற அளவிற்கு வேகமாக ஓட்டிச் சென்றாள். ஆனாலும் கூட நேரம் பத்து மணியை கடந்த பிறகு தான் அலுவலகத்தை அவளால் நெருங்க முடிந்தது.
‘கொடுத்த டார்கெட்டை முடிக்கவே இல்ல. இன்னிக்கி மேனேஜர் என்னெல்லாம் பேச போறாரோ?!’ என்ற மன அழுத்தம் வேறு அவள் இதயத்தினை வண்டாக குடைந்து கொண்டிருந்தது.
அது போதாது என்பது போல அவளுக்கு ஜூனியராக இருக்கும் சங்கீதா வேறு லீவு வாங்கி சொந்த ஊருக்கு ஓடி விட்டாள். கைவசம் இருக்கும் ஒற்றை ஜுனியரை வைத்துக்கொண்டு டார்கெட்டை முடிப்பது நிச்சயம் குதிரைக் கொம்பு தான். இந்த விஷயம் மேனேஜருக்கும் தெரியும் என்பதால் இன்றைக்கு நிச்சயம் ரவுண்டு கட்டி அடிப்பார் என்று அவள் மனசாட்சி சொன்னது!
அது சரி… என்பது போல அவள் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தார் மேனேஜர் கண்ணாயிரம். அவருக்கு யார் இந்த பெயர் வைத்தார் என்று தெரியவில்லை. பேருக்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு கட்டிவிட்டார் போலும். அவருக்கு கீழே வேலை செய்யும் அனைவரின் செயலையும் தன் ஆயிரம் கண்களால் உற்று கவனித்துக் கொண்டே இருப்பார்…
ஷாலினி உள்ளே நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்த இரண்டே நிமிடத்தில், அவளுக்கு மேனேஜரிடம் இருந்து அழைப்பு வந்து விட்டது.
‘பழனி மலை முருகா, வர்ற சஷ்டிக்கு உனக்கு பால்குடம் எடுக்குறேன். கார்த்திகைக்கு கார்த்திகை விரதம் இருக்குறேன். என்னை எப்படியாவது அந்த காண்டாமிருகத்துட்ட இருந்து காப்பாத்து’ என்று வேண்டுதல் வைத்தபடி மேனேஜரின் அறைக்குள் நுழைந்தாள்.
அவள் துரதிஷ்டம், அந்த கடவுள் கூட கட்சி மாறிவிட்டார் போல. காண்டாமிருகத்தோடு, கரும்புலியையும் சேர்த்து அவளுக்காய் காத்திருக்க வைத்திருந்தார்.
“மே ஐ கம் இன் சார்?” கேட்டபடி உள்ளே நுழைந்தவள், அப்போதுதான் அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவனை கவனித்தாள்.
மேனேஜரோடு சிரித்துப் பேசியபடி அமர்ந்திருந்த பிரபாகரன், அவள் குரலைக் கேட்டதும் ஒரு நொடி பார்வையை திருப்பினான். மறுகணமே அவன் முகம் இறுகி விட்டது. அதைப் பார்த்ததும் ஷாலினிக்கு தொண்டை வறண்டு விட்டது.
இல்லாத சிரிப்பினை வரவழைத்தபடி, “குட் மார்னிங் சார்” என்றாள் மேனேஜரிடம்.
“வாங்க மேடம் உங்களுக்காக தான் இவ்வளவு நேரம் காத்துட்டு இருக்கேன். இன்னிக்கு என்ன அதிசயமா ஆபீஸ்க்கு சீக்கிரமா வந்துட்டீங்க? ஏன் கேட்கிறேன்னா எப்பவும் பத்து மணிக்கு தானே வீட்டுல இருந்தே கிளம்புவீங்க. இன்னைக்கு என்ன அதிசயமா இந்நேரமே ஆபீஸ் வந்துட்டீங்க?” என்று நக்கலாக கேட்க, இவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
“நான் முன்ன மாதிரி இல்ல சார்” அவருக்கும், இரை கண்ட புலியாய் அமர்ந்திருக்கும் அவனுக்கும் சேர்த்தே பதில் சொன்னாள்.
“இத நான் நம்பனுமா? வேண்டாத பேச்செல்லாம் எதுக்கு. உங்க கிட்ட டார்கெட்டை முடிக்கச் சொல்லி ஒரு மாசம் ஆச்சு. அந்த வேலை எந்த அளவுக்கு போயிருக்கு? கிளையண்ட் என்னை கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னிக்கு ஈவினிங் கூகுள் மீட் வச்சிடலாம் தானே?” என்று கேட்க பதில் சொல்லாமல் நின்றாள்.
“சரி, இல்லை!ன்னு ஏதாவது ஒரு பதிலை சொல்லுமா. புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி இருந்தா நான் என்ன நினைக்க?”
“சார் வேலை முடிய இன்னும் ரெண்டு நாள் ஆகும். என் ஜூனியர் சங்கீதா வேற லீவ். நானும் இன்னொரு
ஜூனியரும் சேர்ந்து, எப்படியாவது ரெண்டு நாள்ல முடிச்சு கொடுக்குறோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே விருட்டென்று தன் நாற்காலியில் இருந்து எழுந்து விட்டார் மேனேஜர்.
“ஏற்கனவே உங்களுக்கு அலாட் பண்ணின டைம் பீரியட் தாண்டி ஒரு மாசம் கொடுத்தாச்சு. இன்னும் ஒரு நாள் ரெண்டு நாள்னு எத்தனை மாசத்துக்கு இந்த வேலையை கடத்த போறீங்க? உங்களுக்கெல்லாம் ஆபீஸ்க்கு வர இஷ்டம் இருக்கா இல்லையா? அட்லீஸ்ட் பேப்பர் போட்டுட்டு வீட்ல இருந்தீங்கன்னா, என்னை மாதிரி ஆளுங்களாவது நிம்மதியா இருப்போம்…” என்று திட்டிக் கொண்டே போக இவளுக்கு கண்ணீர் குடம் குடமாய் கொட்டியது.
அத்தனையும் அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த பிரபாகரன் ஒரு வார்த்தை கூட இவளுக்காக பேசவில்லை. அவ்வளவு ஏன்? குறைந்த பட்சம் முகத்தை திருப்பி இந்த பக்கம் பார்க்க கூட இல்லை. ஒரு காலத்தில் நிழல் போல அவளோடு இருந்தவன்! அவளுக்கு வலிக்கவே இல்லை என்றாலும், வலியை தர நினைப்பவர்களை உண்டு இல்லை என ஒரு கை பார்த்தவன்! இன்று யாரோ போல விலகி நிற்கிறான்.
அவன் பாராமுகம் இவள் மனதில் இடியாய் இறங்கியது. அதை அவனுமே அறிந்திருந்தான். ஆனபோதும் அவளுக்காக தன் இமையை கூட நகர்த்துவதற்கு அவன் தயாராக இல்லை.
இத்தனைக்கும் அவள் கழுத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் மஞ்சள் கயிற்றை கட்டிய கணவனே அவன் தான். எத்தனை பெரிய விரோதியாக இருந்தாலும், தாரமானவள் இன்னொருவரிடம் திட்டு வாங்குவதை எந்த ஆணும் விரும்புவதில்லை. ஆனால் பிரபாகரன் இழுத்துப் பிடித்த கோபத்தோடு அசையாது இருந்தான்.
மேனேஜர், “அழுது முடிச்சிட்டீங்கன்னா போய் வேலையை பாருங்க. நாளைக்கு காலையில ப்ராஜெக்ட் கம்ப்ளீட் ஆகி என் கைக்கு வரணும். இல்லனா நானே உங்களுக்காக முதலாளி கிட்ட ரெசிக்னேஷன் லெட்டர் ஸ்பெஷலா கேட்டு வாங்குற மாதிரி இருக்கும்” என்று கூற அவள் அதிர்ந்து விழித்தாள்.
“அப்படி எல்லாம் செஞ்சுராதீங்க சார். நான் எப்படியாவது நாளைக்குள்ள முடிச்சிடுறேன்.”
“இது எத்தனாவது சத்தியம்னு தெரியல. பிரபாகரன் எனக்கு தெரியும், உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் ஏதோ மனஸ்தாபம் இருக்குன்னு. இருந்தாலும் இப்போதைக்கு அதையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு இந்த ப்ராஜெக்ட்டை முடிக்க அவங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்…”
இதற்கு முன் பலமுறை அவள் ப்ராஜெக்டை முடித்துக் கொடுத்தவன் என்ற உரிமையில் பிரபாகரனிடம் கேட்டுவிட்டார். மறுத்து பேச அவனுக்கு சங்கடமாக இருந்தது!
அதே சமயம் அவனின் குறுக்கு புத்தி இன்னொரு திட்டம் போட்டது. அவளை துன்புறுத்த தனக்கு கடவுள் தந்த வாய்ப்பாக இதை நினைத்துக் கொண்டான் அவன்.
“நீங்க இவ்வளவு தூரம் சொல்றதால பண்றேன் சார்” என்று ஒரு மார்க்கமாக ஷாலினியை பார்த்துக் கொண்டே கூறினான்.
‘இருந்திருந்து இவன் கிட்ட போயா உதவி கேட்பாரு இந்த மேனேஜர்? என் கையில இருந்த கடைசி வாய்ப்பும் கெட்டு குட்டிச்சுவரா போச்சு. என்ன செய்ய காத்திருக்கானோ?’ என்று மனதிற்குள் புலம்பினாள் பேதை.
“ஷாலினி நீயும் உன்னோட ஈகோவை மறந்துட்டு, ஒழுங்கா பிரபாகரனோட சேர்ந்து வேலையை முடிக்க பாருங்க.”
“ஓகே சார். இனிமே இப்படி நடக்காது” என சொல்லிவிட்டு வெளியேறி சென்றாள்.
பின் தொடர்ந்து வந்த பிரபாகரன், அவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தானே தவிர ஒரு வார்த்தை கூட ப்ராஜெக்ட்டில் என்ன பிரச்சனை என்று கேட்கவே இல்லை. அவ்வப்போது அவள் கணினி திரையைப் பார்த்தான். பிரச்சனை என்ன என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து விட்டது அவனுக்கு. ஆனாலும் அது சம்பந்தமாக சிறு ஒத்துழைப்பும் தருவதாக இல்லை.
அவன் இப்படி சும்மா இருப்பதே மிகப்பெரிய உதவி என்று எண்ணிக் கொண்ட ஷாலினி அமைதியாக தன் வேலையில் கவனத்தை செலுத்தினாள். அவள் நினைத்தது போலவே ஒன்றைத் தொட்டால் ஒன்று என அடுத்தடுத்து எர்ரர் வந்து கொண்டே இருந்தது. அருகிலேயே உட்கார்ந்து வேடிக்கை பார்த்த மன்னவன் ஆறு மணி அடித்ததும் வண்டியை கிளப்பிக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு விட்டான்.
இரவு ஒன்பது மணி ஆன பிறகும் ஷாலினிக்கு பாதி வேலை கூட முடியவில்லை. அதற்கு மேல் தாமதித்தால் தனியாக இரவில் பயணிக்க வேண்டி இருக்கும். ஊருக்கு ஒதுக்குப்புறம் இருக்கும் நிறுவனம் ஆதலால், ஆள் அரவமற்ற பாதையினைக் கடந்த பிறகுதான் மெயின் ரோட்டை சென்றடைய முடியும். பெண் என்பதால் பத்து மணிக்கு மேல் எதிர்பாராத பிரச்சினைகள் அதிகம் வரவும் வாய்ப்பு உண்டு. எனவேதான் மேற்கொண்டு யோசிக்காமல் உடனே புறப்பட்டு விட்டாள்.
வீடு வந்து சேர்வதற்குள் நேரம் ஒன்பதே முக்கால் ஆகிவிட்டது. டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த ராஜம், ஓய்ந்து போய் உள்ளே நுழைந்தவளை வா என்று ஒரு வார்த்தை கூட கூப்பிடவில்லை.
இவளாக போய், “அத்தை சாப்பிட்டீங்களா?” என்று கேட்டதற்கும் பதில் கிடைக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு வரை, அவளை ஈன்றெடுத்த அன்னையை காட்டிலும் இவர்தான் அதிகம் தாங்கு தாங்கென்று தாங்கினார். அப்படிப்பட்டவர் இப்போது அவளிடம் முகம் கொடுத்து பேசுவது கூட கிடையாது.
அத்தனைக்கும் காரணம் அவள் செய்த அந்த ஒரு பிழை தான்! அதன் காரணமாகத்தான் இவளும் அத்தனை புறக்கணிப்புகளையும் உளமாற ஏற்றுக் கொண்டு இங்கே மருமகளாய் வாழ்கிறாள்.
“சாப்பிடலனா நான் தோசை போட்டு தர்றேன்” என்று கூறியதற்கும் பதில் வரவில்லை.
இதற்கு மேலும் இங்கே நிற்பது வீண் என தோன்ற, ஷாலினி கிச்சனுக்குள் நுழைந்தாள். அங்கே அவளின் மாமனார் ஷங்கர் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார்.
“ஐயோ மாமா நீங்க எதுக்கு இந்த வேலை எல்லாம் பாக்குறீங்க?” என்று கேட்க,
“அதனால என்னமா? எல்லாம் நம்ம வீட்டு வேலை தானே” என்றார் சிரித்த முகத்தோடு.
“நீங்களும் அத்தையும் சாப்பிட்டாச்சா மாமா?”
“ஆச்சுமா, சப்பாத்தியும் குருமாவும் சாப்பிட்டோம். உனக்கு குருமாவை சூடு பண்ணி தரட்டுமா?”
“இல்ல மாமா ஏகப்பட்ட வேலை பெண்டிங் இருக்குது. நான் உடனே லேப்டாப்ல வேலையை ஆரம்பிக்கணும். இருக்கிறத சாப்பிட்டு கிளம்புறேன்…”
“சரிம்மா, டைனிங் டேபிள் மேல எடுத்து வைக்கிறேன். கை கால் கழுவிட்டு வா…” என்றதும் உளமாற மகிழ்ந்த ஷாலினி இரண்டு அடி நடந்திருப்பாள்.
திடுமென கிச்சனுக்குள் நுழைந்த ராஜம், “நீங்க கிச்சன்ல நின்னு என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று தன் கணவரை பார்த்து கொந்தளித்தார்.
அப்போதுதான் அவர் பார்வை பாதி காலியாகி இருக்கும் சிங்க் மேலே பதிந்தது. முக்கால்வாசி பாத்திரங்களை தன் கணவனே கழுவி வைத்திருப்பது புரிய, அவர் பார்வை கோபமாய் ஷாலினி மேல் பதிந்தது.
“மன்னிச்சிடுங்க அத்தை, நாளையில இருந்து சீக்கிரம் வந்துடுறேன்” என்று கூறியவள், சத்தம் இல்லாமல் மீதி பாத்திரங்களை கழுவி அடுக்க ஆரம்பித்தாள்.
“இட்லி மாவு அரைக்கணும், அரிசி பருப்ப ஊற வச்சேன். அதையும் முடிச்சிடு” என்று அதிகாரமாய் கூறியவர், தன் கணவனை பார்வையாலே தன்னோடு கட்டி இழுத்துச் சென்று விட்டார்.
