அத்தியாயம் -1

       வேனலின் வெண்பூவே!

 

அத்தியாயம் -1 

 

நெய்தல் மலரே! உன் வாசத்தில் 

நெக்குருகிக் போனேனே.

           -ஆதி.

 

காலை நான்கு மணி இருபது நிமிடங்கள் எனக் கருப்பு நிறத்தில் காட்டிய அந்த நவீன வகைக் கடிகாரத்தில் மணியைப் பார்த்தபடி பேருந்திலிருந்து இறங்கினாள் அந்தப் பெண். 

அவளுடைய உடைமைகளைச் சரிபார்த்தவள், அதை இழுத்துக் கொண்டு நடந்தாள். அந்தத் தங்கும் விடுதியில் நடைபாதையில் ஒளிர்ந்து கொண்டிருந்த அழகிய விளக்கில் அவளுடைய முகம் தெரிந்தது. 

வட்டமான முகத்தில் குட்டிக் குட்டியாக அழகிய விழிகளும், வில்லென வளைந்த புருவம், எடுப்பான சிறிய நாசி மற்றும் சிவந்த உதடுகள் என அழகி அவள். சிவப்பு நிற சட்டையும், கருப்பு நிற ஜீன்ஸ் வகை கால் சட்டையும் அவள் நெடு நெடுவென உயரத்தை இன்னும் அதிகமாகக் காட்டின. காலில் இருக்கும் சப்பாத்துகள் அவள் இலகுவாக நடக்க உதவியது.

‘நெய்தல் நிழல்’ என்ற பெரிய எழுத்துகள் இரவு நேரத்தில் வெண்ணிறத்தில் ஒளிர அதன் கீழே ஆங்கிலத்தில், ‘ரிலாக்ஸ், பிளே, வொர்க்.’ என எழுத்துகள் இள ரோஜா வண்ணத்தில் ஒளிர்ந்தது.

அதனை நிமிர்ந்து பார்த்துப் பெருமூச்சு விட்டவள், மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். கண்ணாடிக் கதவைத் திறந்து அந்த விடுதியின் வரவேற்பறைக்குள் சென்றவள் விழிகளால் அங்கு யாரும் இருக்கின்றனரா? எனத் தேடினாள்.

சுற்றி முற்றிலும் பார்க்கும்போது, வாயில் ஒரு மின்சாரம் இருக்கிறதா எனப் பார்க்கும் கருவியோடு ஒருவன் அந்தப் பழுப்பு நிற ஆளுயர மேசையின் பின் எழுந்து அமர்ந்தான். விழிகளுக்கு இதமான மஞ்சள் நிற வெளிச்சத்தில், கருப்பு வெள்ளை உடையில், இடது பக்க மார்பு சட்டையில் அவன் உலோக பெயர் பொறிக்கப்பட்டு குத்தப்பட்டிருந்தது.

“வெல்கம் டூ நெய்தல் நிழல் மேம்! நெய்தல் நிழலுக்கு உங்களை வரவேற்கிறோம்!”

அந்த அதிகாலையில் ஆழ்ந்து ஒலித்த குரலுக்குச் சொந்தமானவன் முகமும் களையாக இருந்தது. மாநிறத்தில் வசீகரமும் குடியேறி இருந்தது.

தன் உடைமைகளை இழுத்தபடி அருகே சென்றவள், “ரூம் வேணும்.” என்றாள்.

“எத்தனை ரூம் மேம்? சிங்கில் காட்?”

“ஒரு ரூம். சிங்கில் காட்.”

“எத்தனை நாளுக்கு?”

நாள் என்றதும் அவள் முகம் சுருங்கியது. 

“30 நாள்.”

கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். 

“உங்க பேரு மேம்? நீங்க எதுக்காக முப்பது நாள் இருக்கப் போறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?”

அவன் கேட்டதும் உதடுகளைக் கடித்தவள், “நான் பத்மமுகி. இங்க நான் கவர்மெண்ட் புராஜக்ட்க்காக வந்துருக்கேன்.” என்றவள், “அதோட ஐ லெப்ட் மை ஹோம். யாரு வந்து கேட்டாலும் என்னோட பிரைவசி முக்கியம்.” எனச் சேர்த்துக் கூறினாள்.

“நோ பிராப்ளம் மேம்! உங்க ஆதார் கார்ட் அப்படியே கவர்மெண்ட் ஐடி கார்டும் காட்டுங்க.”

அவன் கேட்டவற்றை எடுத்துக் காட்டினாள். ஆதார் கார்ட் எண்ணை மட்டும் பதிந்து கொண்டவன் இரண்டையும் திருப்பிக் கொடுத்தான்.

“எந்தப் பிரைஸ் ரேஞ்சில் ரூம் வேணும்ங்கிறதைப் பாருங்க மேம்?”

அவளிடம் கையடக்க கணினியினை நீட்டினான்.

“உங்களுக்குப் பிடிச்சதை தேர்ந்தெடுத்தா அதில் மொத்தத் தொகையோட காட்டும்.”

முதல் தளத்தில் உள்ள அறையைத் தேர்ந்தெடுத்து அவனிடம் கொடுக்க, வாங்கிக் கொண்டவன், முன் தொகையைக் கூற அதைப் பணமாகக் கொடுத்தாள்.

“பத்மமுகி மேம், நீங்கக் கொடுத்த தொகை, காலை, மாலை இரு வேளை உணவுக்கும் பொருந்தும். மதியம் சாப்பாடுக்கு தனியாகக் கட்டணம் இருக்கு. காலை உணவிலிருந்து நீங்க வேலைக்கு உணவு எடுத்துட்டு போகலாம். இங்க இருக்கற சாகச விளையாட்டுகள் உங்களுக்கு ஒரு வாரம் இலவசம். என்ன சந்தேகமாக இருந்தாலும் வரவேற்பிற்கு கால் பண்ணுங்க. சாப்பாட்டு மெனு, கீக்கார்ட் இந்தாங்க.” என அவற்றை அழகாக ஒரு பையில் போட்டு நீட்டினான்.

அவன் அழகாகத் தமிழில் பேசுவதால், “நன்றிகள் பல!” என முகியும் தமிழில் நன்றி கூறினாள்.

“வாங்க, நான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன்.”

அவளுடைய பைகளை வெள்ளி நிறமுடைய கம்பிகளால் ஆனா சக்கரங்கள் பொருந்திய சுமப்பானில் அடுக்கியவன், மின் தூக்கி இருக்கும் இடத்திற்குப் போக முகியும் அவனைத் தொடர்ந்து அதற்குள் ஏறி நின்றாள்.

பொத்தானை அமுக்க அது முதல் தளத்திற்குச் சென்றது.

“மேம், உங்களுக்குச் சாப்பாடு பார்த்துட்டு அதில் எதாவது ஒவ்வாமை இருந்தால் முன்னாடியே சொல்லிடணும். எதாவது ஹெல்த் கன்டிஷன் இருந்தாலும் சொல்லிடுங்க. அப்பதான் முதல் உதவிக்குச் சரியாக இருக்கும்.”

சரியெனத் தலையசைத்தாள். 

முதல் தளத்தில் நடக்க ஆரம்பிக்க, பழுப்பு நிறத்தில் வரிசையாகக் கதவுகள் எண்களுடன் இருந்தது.

“111” என்ற அறைமுன் நின்றனர் இருவரும்.

“இதுதான் உங்க அறை. இங்குத் தங்கும் நாட்கள் உங்களுக்கு இனிதாக இருக்கட்டும்.” என வாழ்த்தியவன் முகி தலையசைக்க விடைபெற்றான்.

அறையின் சாவியை தேய்த்தவளுக்கு அந்த அறை திறந்து, வெளிச்சமும் நிரம்பியது.

ஊதா நிறமும், மஞ்சள் நிறமும் கலந்து அறை வண்ணமடிக்கப்பட்டிருக்க, கீழே பழுப்பு நிறத்தில் தரை இருந்தது. நடுவில் அழகிய மரக்கட்டிலும், அடர் சிவப்பு வண்ணத்திலும் படுக்கை விரிப்பு இருந்தது.

பார்த்துதான் தேர்ந்தெடுத்திருந்தாள் அவள். இடது புறம் கண்ணாடியிலிருந்து பார்க்கக் கடலலைகள் கரை மோதிக் கொண்டிருந்தன. அருகே அமர நீள்விரிக்கை போடப்பட்டிருந்தது. வலது புறம், குளியலறை சகல வசதிகளுடனும் இருந்தது. குளிர்பதன வசதியென அனைத்தும் இருந்தது.

பெருமூச்சினை விட்டவள், காலணிகளைக் கழற்றி அறைமுன் இதற்காக இருக்கும் பிரத்யேக இடத்தில் வைத்தவள், கைப்பேசியில் அலாரம் வைத்தபடி மெத்தென்று இருக்கும் மெத்தையில் விழுந்தாள். இரவு முழுவதும் உறங்காதவள் உறங்க முயற்சிக்க நித்ரா தேவி கொஞ்சம் கருணை காட்ட உறக்கம் வந்தது.

***

காலைச் சூரியன் கடற்மேற்பரப்பில் தன்னுடைய வண்ணங்களை வாரி இறைக்க, நெய்தல் நிழலின் சமையலறையில் அனல் பறந்து கொண்டிருந்தது.

அங்கு இடுப்பில் கை வைத்தப்படி நின்றுகொண்டிருந்தான் ருத்ரசேனா. அவன் தலைமை சமையல்கலைஞர் என்பதற்கு அடையாளமாக அவனுடைய வெண்ணிற மேகம் போன்ற தொப்பி தனியாகத் தெரிந்தது. இருபத்தி ஏழா? என ஆச்சரியமாகக் கேட்கும் அளவு ஆஜானுபாகுவான தோற்றம். இயல்பாகவே தந்தையிடமிருந்து வந்திருந்த உடலமைப்பு, அவன் உடற்பயிற்சியால் மெருகேறி இருந்தது என்று கூறினால் மிகையில்லை. ஆறடிக்கு ஒரு அங்குலம் குறைவு. கரிய கேசம், மஞ்சள் நிற முகத்தில் கூரிய விழிகளும், பிரஞ்சு தாடியும் அவனை இன்னும் இளமையாகக் காட்டியது.

“செஃப் ருத்ரா. இந்த மெனுவை நீங்கக் கண்டிப்பாக ஆட் பண்ணனும்.”

“நான் ஏற்கனவே சொன்னதுதான் மிஸ். சிவகாமி.” அவன் அப்பெயரை அழுத்தமாக உச்சரிக்கும்போது அவன் தோளுயரம் இருந்த அழகி அவனை விழிகளால் முறைத்துப் பார்த்தாள்.

“சிவகாமினி என்னோட பெயர்.”

அவளைச் சட்டை செய்யாமல் அடுப்பில் இருக்கும் வோக் என்ற அகன்ற பாத்திரத்தில் இருக்கும் உணவுப் பொருளைப் காற்றில் தூக்கிப் போட்டுப் பிடித்தான் எதையோ தூவ அதில் சட்டென நெருப்புப் பற்றி எரிந்தது. 

“ருத்ரா நான்…” என அவன் அருகே நெருங்கி வர முயற்சிக்க அது நெருப்பின் பக்கமாகப் போய் விட அவளை வலது கையால் கழுத்தைப் பிடித்து நகர்த்தினான்.

“அவுட் மிஸ். சிவகாமி!” கோபத்துடன் பல்லைக் கடித்தபடி அவன் அழுத்தமான குரலில் கூற, 

“இதுக்கு நெருப்பே தேவலைடா. ருத்ரான்னு பேரு வச்சால் நெருப்புல வெந்த மாதிரி சுத்தணும்னு இருக்கா என்ன?” என முணுமுணுத்தாள்.

“என்ன சொன்னீங்க மேம்?”

“பட்டர் வழுக்குது பலாப்பழம் இனிக்குதுன்னு…”

அவன் பழுப்பு நிற விழிகளில் மேலும் அனலேறியது.

“ரோகித், ஹோல்ட் இட்!”

உடனே வெண்ணிற உடை அணிந்த ஒருவன் அவன் தாங்கி இருந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டான்.

ருத்ரா முன்னே நடக்க, சிவகாமினி அவனைத் தொடர்ந்தாள்.

குதிரை வால் அசைய அவனைத் தொடர்வது அழகிய பொம்மை ஒன்று ருத்ரனை தொடர்வது போலிருந்தது. மாநிறத்தில் ‘வி’ வடிவ முகத்தில் பெரிய கண்கள், மூக்கு, நாசியென ‘அனிம் சீரிஸ்’ பெண்களைப் போன்ற தோற்றம்.

சமையலறையை விட்டு வெளியே வந்தனர் இருவரும்.

“ருத்ரா, நீ கன்சிடர் பண்ணு.”

“சிவகாமி, நான் சொன்னது சொன்னதுதான்.”

“சி…வ…கா…மி…னி எத்தனை தடவை சொல்றது உனக்கு? எனக்கு மெனுவில் இந்த டிஷ்ஸஸ் வேணும்.”

“என்னால் இதை அக்சப்ட் பண்ண முடியாது.”

“நம்ம ஹோட்டலுக்கு ஃபாரீனர்ஸ் நிறைய பேர் வராங்க. அவங்க நாட்டு டிஷ் இங்க இருந்தால் என்ன தப்பு?”

“தப்பில்லை. ஆனால் நம்ம ஹோட்டல் ஆத்தன்டிக் தமிழ் ஃபுட்ஸ் கொடுக்கறோம். அதோட இந்தியாவோட மத்த ஸ்டேட்ஸ் குஸைனும் இருக்கு. அவங்க இங்க வரது இந்தியாவை எக்ஸ்பிளோர் பண்ண, தமிழ் கலாச்சாரத்தைத் தெரிஞ்சுக்க!”

“நாம எதுவும் மாத்தலை ருத்ரா. ஒரு சில டிஷ் சேர்க்க சொல்றேன்.”

“நீ சொல்ற ஒவ்வொரு டிஷ் இங்க வொர்க் பிரசரை அதிகப்படுத்தும். இப்ப இருக்கற டைமிங் ரொம்பவே மாறும். அதோட இன்வென்ட்ரி செலவும் அதிகரிக்கும்.”

“ருத்ரா, இன்னும் ஹையர் பண்ணலாம்.”

“நோ!” என உறுதியான குரலில் தெரிவித்தான் அவன்.

“ருத்ரா, நைட் பேசிக்கலாம். லீவ் நவ்!”

அவளைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் உள்ளே சென்று தனியே அவன் பணியைப் பார்க்கச் சென்றான்.

சிவகாமினி தன்னுடைய மேலாளார் அறைக்குள் நுழைந்தாள். அங்குக் கணினியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான் சிவகார்த்திக். அவளுடைய இரட்டை. சில நிமிடங்களுக்கு முன் பிறந்தவன்.

உள்ளே வந்ததும் மேசையில் குத்தியவளைப் பார்த்ததும் மெல்லிய நகைப்பு சகோதரனின் முகத்தில் உருவானது.

“என்ன மினியன்? மறுபடியும் அட்டம்ப்ட் கொடுக்கணுமா?”

“டேய்… உன்னை! ஏன்டா இந்த ருத்ரா இப்படி இருக்கான்? நான் சொல்றதைக் கேட்கவே மாட்டேங்கிறான். டாடி அவன் ஓகே சொல்லணும்னு சொல்றாரு.”

“மினியன், அவசரப்படக் கூடாது. ருத்ரன் சொல்றான்னா ரீஸன் இல்லாமல் மறுக்கமாட்டான்.”

“நீயும் ருத்ரசேனைக்கு கொடி பிடிக்க வேண்டாம்.” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ருத்ரனைக் கேட்காமல் டாடி எதையும் அப்ரூவ் செய்ய மாட்டேங்கிறாரு. என்ன செய்யறதுன்னே தெரியலை!”

“ருத்ரனும் ஷேர்ஹோல்டர் அக்கா.”

“இருக்கட்டும். என்னோட பேரை வேணும்னே தப்பா சொல்றான்டா. ஒன் இயர் பெரியவ எனக்கு எந்த மரியாதையும் இல்லை. ஏஜை விட, மேனேஜர்… அந்தப் பதவிக்கு மரியாதை கொடுக்கலாம் இல்லை?”

“மினியன், நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?”

“என்ன ஐடியா?” என ஆவலாகத் தன் விழிகளை விரித்தவளைப் பார்த்தான்.

“வெரி ஈஸி. இந்த விஷயத்தை விட்ரு. ருத்ரனைத் தாண்டி உன்னால் இதைச் செய்யவே முடியாது.”

“உன்னை…” எனப் பற்களைக் கடித்தாள்.

“ருத்ரனை எப்படியாவது இதுக்கு ஒத்துக்க வைக்கலை என் பேர் சிவகாமினி சிவசந்திரன் இல்லை.” எனச் சபதமிட்டவளைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தான்.

“இப்பவே உன்னை அவன் அப்படித்தான் கூப்பிடறான். நான் மினியன்னு கூப்பிடறேன். ஸ்டாப்ஸ் காமினி மேம்னு கூப்பிடறாங்க. போமா… போமா. வடக்க ஏதோ பிளம்பிங்க் பிரச்சினை. போய் அதைச் சரி பாரு.”

இரு கைகளையும் மடக்கி, “ஹூம்ம்ம்.” எனக் கத்தியவள் வெளியே வந்தாள்.

‘கூடப் பொறந்தது கொய்யாபழம், கூட வேலை செய்யறது அன்னாசிப் பழம்!’ என மனதுக்குள் திட்டியவள் வடக்குப் பக்கம் நடக்க ஆரம்பித்தாள்.

***

அலாரம் அதிர புரண்டு புரண்டு படுத்த பத்மமுகி எழுந்து அதை அணைத்துக் கைப்பேசியை உயிர்ப்பித்தாள்.

அதில் இருவரும் தலையை உரசியபடி சிரித்துக் கொண்டிருக்கும் படம் தெரிய நொடியில் உஷ்ணமேறியது பெண்ணவளின் பார்வை. தன் கைப்பேசியை தூக்கிப் போட்டவள் அருகில் இருந்த நீரை எடுத்துக் குடித்து விட்டுக் கைப்பேசியை எடுத்து, நேர்மறை எண்ணம் கொண்ட ஒரு வாசகத்தை மாற்றினாள். 

அவனை விட்டு ஓடலாம்! அவள் நினைவுகளிலிருந்து ஓட முடியுமா? துரத்தும் நினைவுகளைப் போல் அவனும் வருவானா?

 

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page