காதல் – 1

வீடு முழுவதும் நிறைந்திருந்த உறவினர்களின் சலசலப்பான உரையாடல் சத்தமும், தோழிகளின் ஏகத்துக்கும் மாறான கேலி பேச்சுகளுமே உணர்த்தியது அது ஒரு காதல் திருமணம் தானென்று. 

அந்த வீட்டின் இளவரசியான ஆத்விகாவிற்கு விடிந்தால் திருமணம். இரவு முழுவதும் தோழிகளின் கிண்டலுக்கு ஆளாகி தூக்கத்தை தொலைத்து பற்பல கனவுகளுடனும், கற்பனைகளுடனும் திருமண மண்டபத்திற்கு எப்போது செல்வோம், மனம் நிறைந்த மணாளனை எப்போது கரம் பிடிப்போம் என்ற ஏக்கத்துடன் காத்திருந்தாள் ஆத்விகா.

ஆத்விகா ஒரு நடமாடும் பார்பி டால் போல இருப்பவள். நிறத்திலும் சரி, முக அமைப்பிலும் சரி, நிபுணர்கள் நவீன கணினி மூலம் செய்து வைத்த பொம்மை போல அழகாக இருப்பாள். 

துறுதுறுவென எப்போதும் வாய் ஓயாமல் பேசும் சிறு குழந்தை போன்ற குணத்தை உடையவள் அவள். பெண்ணிற்குரிய எந்த குணங்களும் அவளிடம் இருக்காது. அவளையும் விட்டு வைக்கவில்லை இந்த பொல்லாத காதல்… 

விக்ரம் அவளின் காதலன். அவன் அழகாக இருக்கிறான், வெல் செட்டில்ட் மேன் மற்றும் தன் தாய் தந்தையருக்கு பிடித்தவன் என்ற காரணத்தினாலேயே அவளுக்கும் அவன் மீது காதல் வந்துவிட்டது. இதோ விடிந்தால் அவனின் மனைவி ஆகி விடுவாள் ஆத்விகா. அந்த சந்தோஷத்திலேயே அவளுக்கு உறக்கம் வர மறுத்தது. 

மூன்று வருடம் காத்திருந்தவளுக்கு அந்த அரைமணி நேரம் மிக தாமதமாய் நகர்வது போல் உணர்ந்தாள். நேரத்தை பார்த்தவளுக்கு அது அதிகாலை மூன்று முப்பதென காட்டியது. 

மற்ற நாட்களில் இத்தகைய நேரத்தை நள்ளிரவு என்று கூறுபவள் இன்று தான் முதல் முறையாக அதிகாலையாக உணர்கிறாள். அவளின் கனவுகள் கைகூடப் போகும் நாள் இல்லையா?

எழுந்து குளிப்பதற்கு ஹீட்டர் போட்டவள், ‘இந்நேரம் என்னவன் என்ன செய்து கொண்டிருப்பான்?’ என்ற கற்பனை உலகிற்கு மீண்டும் சென்று விட்டாள். 

அலைபேசி எடுத்து அவனுக்கு அழைப்பு விடுக்க சென்றன அவளின் பொன் வண்ண கரங்கள்.

“ஐயோ பாவம், அவனாவது நல்லா தூங்கி எழுந்து கல்யாணத்துக்கு பிரெஷ்ஷா வரட்டும்” என்று எண்ணி வைத்து விட்டாள். 

குளித்து முடித்து தலைக்கு ஹேர்ட்ரையர் போட்டு கொண்டு இருந்தவளை தோழிகள் படை சூழ்ந்தது. பெண்கள் கூடிவிட்டால், கேலிக்கு குறைவேது? தோழியை கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். 

குளித்து தயாராகி கிளம்பும் போது, “எப்போவும் போல அவர பாக்க இன்னிக்கும் நீ தனியா போயிடாத டி! நாங்களும் உன்கூட வருவோம்! பொண்ணு மாதிரி அடக்க ஒடுக்கமா இன்னிக்கு மட்டும் எங்க கூட வா….”என்று ஒருத்தி கூற அந்த அறையே அலை அடித்து போல் சிரிப்பால் நிறைந்தது. 

கேலி, கிண்டலோடு, சடங்கு சாம்பிரதாயங்கள் முடித்து அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பியாயிற்று. மணப்பெண்னின் கார் மண்டப வாயிலில் வந்து நின்றது.

மண்டபத்தில் எல்லா வகையான கல்யாண பாடல்களும் ஒலி பரப்பாகி கொண்டு இருந்தது.

அதிலும் முக்கியமாக தேவதை வைத்து நிறைய பாடல்கள் வந்தன….

ஆத்விகாவும் தேவதைக்கு சற்றும் குறைவில்லாத பெண்தான். ஆர்ப்பரிக்கும் அலங்காரத்துடன், கண்கவர் மின்விளக்குகள் மற்றும் மலர் அலங்காரத்துடன் அத்தனை ஆடம்பரமாக திகழ்ந்தது அந்த திருமண மண்டபம். 

காரை விட்டு இறங்கியதும், ‘தன்னை வரவேற்க தனக்காக காத்து கொண்டிருப்பான் தன் காதலன்!’ என்று எண்ணியவளுக்கு, ஏமாற்றத்தையே பரிசளித்தான் ஆடவனவன்.

வரவேற்பில் வைக்க பட்டிருந்த, “விக்ரம் வெட்ஸ் ஆத்விகா.”என்ற பெயர் பலகையை உற்று நோக்கியவள், ‘அவன் வரவேற்க வரவில்லையெனில் என்ன? அதான் அவன் பெயர் வரவேற்கிறதே…’ என்று மனதை அமைதி படுத்திக் கொண்டாள். 

அதற்குள் விக்ரமின் அக்கா சுதாவும் அவரின் கணவர் மனோகரும் பெண் வீட்டாரை வரவேற்க வந்து விட்டனர் வாசலுக்கு. 

“விக்ரம் அவசரமா ரெடி ஆகிட்டு இருக்கான்மா! நேரமாச்சுன்னு அப்பா திட்டுனாரு! அதான் இங்க உன்ன வெல்கம் பண்ண வர முடியல! நீயும் சீக்கிரம் போய் டிரஸ் மாத்திக்கோ டைம் ஆகிட்டு பாரு! பியூட்டிஷின் வேற வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்று கூறி மணப்பெண் அறைக்குள் அழைத்து சென்று விட்டுவிட்டார். 

இவள் சமாதானம் ஆகிவிட்டது தெரிந்ததும், திருமணத்திற்கு வந்த பெண் வீட்டாரையும், உறவினர்களையும் உபசரிக்க சென்று விட்டாள் சுதா.

சந்தன நிற கோட்டுக்குள் கருநீல நிற சட்டையை அடக்கி வைத்திருந்தான் விக்ரம். மணமகனுக்கு உரிய பூரிப்புடன் கர்வமாக நின்ற அவனின் கழுத்தில் மலர்மாலையை அணிவித்தான் ஆத்விகாவின் தம்பி ராகவன்.

சந்தன நிற பட்டில், கருநீல நிற முந்தானையை குஜராத்தி மாடலில் கட்டி விட்டு, அதற்க்கேற்றார் போல் ஆத்விகாவிற்கு ஒப்பனைகள் செய்திருந்தார் பியூட்டிசன். அவளுக்கு மாலை அணிவித்து விக்ரமின் அக்கா அழைத்து வர, வாயை பிளந்தபடி ஆ… என்று தான் பார்த்தான் விக்ரம் தன்னவளை.

“ஆத்வி இந்த சாரீல ரொம்ப அழகா இருக்க” என்றான் விக்ரம் அவள் காதோரமாக. 

“நீயும் இன்னைக்கு ரொம்பவே அழகா இருக்க விக்கி” என்றாள் ஆத்விகா. 

“ஏன்டி நைட் எல்லாம் தூங்கலையா? கண்ணு இப்படி சிவந்து கிடக்கு? ஃபேஸ் கூட இவ்ளோ டல்லா இருக்கே” என்றான். 

“ஆமா விக்கி என் பிரெண்ட்ஸ் எல்லாரும் வந்திருந்தாங்களா! என்ன தூங்கவே விடல! கிண்டல் பண்ணிட்டே இருந்தாங்க தெரியுமா?” என்றாள் அம்மாவிடம் குறை சொல்லும் குழந்தை போல்.

பின் பெரியவர்கள், “பையன மோதிரம் போட சொல்லுங்க” என கூறவும், விக்ரம் ஆத்விகாவின் விரலில் மோதிரம் அணிவிக்க வந்தான்.

உடல் மொத்தமும் புல்லரிக்க வெட்கத்தோடு தன் கையை நீட்டினாள் பாவை. விக்ரம் என்ற பெயர் பொறிக்க பட்ட மோதிரத்தை ஆத்விகாவின் விரலில் அணிவித்தான். அவனை கண்களால் முழுங்கி கொள்ளும் அளவிற்கு பார்த்து கொண்டு நின்றாள் பாவை. 

சட்டென கண் அடித்து, “எனக்கு…” என்று தன் கையை நீட்டி அவளை கற்பனை உலகிலிருந்து மீட்டெடுத்தான் அவளவன். 

அவளும் அவனுக்கென தேர்ந்தெடுத்த ஆத்விகா எனும் தன் பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தை அவன் விரலில் அணிவித்தாள். இந்த இனிய நிகழ்வை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய இருவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். 

மோதிரம் மாற்றியதற்க்கே திருமணம் முடிந்தது போன்றதொரு மகிழ்ச்சியை கொடுத்தது ஆத்விகாவிற்கு.

“சரி சீக்கிரம் முகூர்த்ததுக்குள்ள துணி மாத்திட்டு வாங்கோ! முகூர்த்ததுக்கு நாழியாயிடுத்து” என்று அங்கிருந்த ஐயர் கூற மணமக்களை அழைத்து சென்றனர் உறவினர்கள். 

“ஒரு நிமிஷம்” என்று கூறிக்கொண்டு ஆத்விகாவை அருகில் அழைத்தான் விக்ரம்.

“என்னடா?” என்று கேட்டு கொண்டே அவனருகில் சென்றாள் ஆத்வி. 

“ஆத்வி இப்போ தான் நீ என் லவ்வர்! இன்னும் கொஞ்ச நேரத்துல நீ என் ஒயிஃப்! அதனால உன் லவ்வரா இருக்க போற கடைசி நேரத்தில சொல்றேன்… ஐ லவ் யூ டி” என்று கூறி பறக்கும் முத்தமொன்றை பரிசளித்தான் விக்ரம்.

“ச்சீ போடா! எல்லாரும் பாக்குறாங்க! ஸ்வீட் பொறுக்கி” என்றவள் முகமெல்லாம் வெட்கத்தில் சிவந்து போனது. 

அதனைக் கவனித்த தோழிகள் அவளை சூழ்ந்து கொண்டு கேலி பேச ஆரம்பித்தனர். 

“ஏ.. இப்போவே மாப்ள பொறுமைய இழந்துட்டாருடி” என்று ஒருத்தியும், 

“அவ்ளோ வெறி மாப்பிளைக்கு” என்று ஒருத்தியுமாய் கேலி பேச, 

“போங்கடி உங்களுக்கு வேற வேலை இல்ல! உங்களுக்கும் ஒரு நாள் இப்படி நடக்கும்ல? அப்போ பாத்துக்குறேன் உங்கள எல்லாம்” என்று கூறிக்கொண்டு மணப்பெண் அறைக்கு ஓடினாள் ஆத்விகா.

இதற்கு முன் செய்யப்பட்டிருந்த ஒப்பனைகளை எல்லாம் கலைத்து விட்டு, முகம் கழுவி மெரூன் கலர் பட்டுடுத்திக்கொண்டு, இல்லை.. இல்லை.. உடுத்தி விடுபவரை பல கேள்விகள் கேட்டு கொண்டு நின்றிருந்தாள் ஆத்விகா. 

“ஏன் அக்கா இந்த பட்டு புடவை மட்டும் இவ்ளோ வெயிட்டா இருக்கு? எப்படிக்கா உங்களுக்கு மட்டும் எல்லாருக்கும் கஷ்டமில்லாம கட்டி விட தெரியுது? உங்க கல்யாணத்துக்கும் நீங்களாவே கட்டிகிட்டீங்களா?” என்று கேள்விகளை அடுக்கி தள்ளினாள் ஆத்வி. 

அவர் சிரித்து கொண்டே ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் அளித்துக்கொண்டே தன் வேலையையும் செய்து கொண்டு இருந்தார்.

ஒப்பனைகள் ஏதுமின்றி மெரூன் கலர் பட்டு புடவையில், முகத்தில் மின்னும் மகிழ்ச்சியோடு அத்தனை அழகாய் காட்சி தந்தாள் ஆத்வி. ஜடை பின்னிக்கொண்டு இருக்கும் நேரம் கதவு தட்டும் ஓசை கேட்டு யாரென்று கேட்டாள். 

“நான் தான் டி! கதவை திற” என்று கூறினாள் ஆத்விகாவின் தாய் சௌமியா. 

“இப்போவே எதுக்குமா கூப்பிடுறீங்க? அதுக்குள்ளவா நேரமாகிடுச்சு? இன்னும் ஒரு மேக்கப்பும் பண்ணலையே” என்றாள் கதவை திறந்து கொண்டே. 

“அது இல்லடி, நீ இன்னும் சாப்பிடலைல்ல? இனிமே தாலி கட்டி முடிஞ்சி, போட்டோ எல்லாம் எடுத்து, சொந்தகாரங்கல்லாம் போன பின்னாடி தான் சாப்பிட சொல்லுவாங்க! அதுக்கு இன்னும் எவ்ளோ நேரம் ஆகுமோ? அதுக்குள்ள நீ டயர்ட் ஆகிடுவ! அதான் சாப்பாடு எடுத்துட்டு வந்தேன்! நீ ரெடி பண்ணிட்டே இரு! நான் அப்படியே ஊட்டி விடுறேன்” என்று கூறிவிட்டு தன் மகளுக்கு உணவு ஊட்டி விட ஆரம்பித்தார் அவர். 

“இனி இந்த மாதிரி என்னை யாருமா பாத்துப்பா?” என்று கண் கலங்கினாள் ஆத்விகா.

“எங்க பேச்சை கேட்டு கல்யாணம் பண்ணி இருந்தா இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லி இருப்பேன். நீதான் உனக்கு பிடிச்சவனை நீயே கூட்டிட்டு வந்துட்டியே…” என்று கூறியதும் அவள் முகம் ஓர் நொடி, வெற்றிலை போல வாடிவிட்டது.

என்ன இருந்தாலும் பெற்றவருக்கு பிள்ளையின் முகம் வாடினால் மனம் தாங்குமா? அதுவும் திருமண நாளில்… எனவே உடனே பேச்சை மாற்றினார் சௌமியா.

“ஆத்வி கண்ணு! இப்போ தான் பாக்குறேன்…. இந்த பட்டுல நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா! கொஞ்சம் கூட மேக்கப்பே இல்லாமயே அம்மன் சிலை மாதிரி ஜொலிக்கிற” என்றாள் நிலைமையை சகஜமாக்க. 

அதில் ஆத்வியின் முகம் தாமரையென மலர்ந்தது. அதன் பிறகு ஜடை அலங்காரம், மலர் அலங்காரம், முக அலங்காரம் என அனைத்து வித அலங்காரங்களும் முடித்து ஊரே கண் வைக்கும் அளவிற்கு பேரழகியாய் தோன்றினாள் ஆத்விகா.

அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் பட்டு வேஷ்ட்டி சட்டையில் நெற்றியில் சந்தன கீற்றுடன் அவனுக்கே உரிய புன்னகையிலும், கம்பீரத்திலும் காண்பவர்களின் மனதை மயக்கும் ஆணழகனாய் மணமேடைக்கு வருகை தந்தான் விக்ரம்.

அவன் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை ஐயர் சொல்ல சொல்ல செய்து கொண்டிருந்தான்.

❤️ Loading reactions...
அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
231 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
306 15 1
வேண்டினேன் நானுன்னை
537 6 0
நீ எந்தன் நிஜமா?
375 8 1
என்துணை நீயல்லவா?
455 12 0
கற்றது காதல்
215 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page