நிஜம் – 1

இந்தியாவின் இதிகாச கதைகளை இன்றளவும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஓர் உன்னதமான நகரம் ராமேஸ்வரம். கடல் அலைகள் தொட்டும் தொடாமல் கரையை முத்தமிட்டு நகர்ந்து கொண்டிருக்க, காற்றில் மிதந்து வரும் ஈரப்பதத்தில், சரி பாதி வீதம் கருவாட்டு வாசம் கலந்து பரவி இருந்தது. 

அங்கு மாசி கருவாடு விற்பனைக்கு பெயர் போன நிறுவனம், சுந்தரம் அன்ட் கோ. ராமேஸ்வரத்தில் பூர்வீக குடியாய் வாழும் சுந்தரலிங்கம் குடும்பத்திற்கு சொந்தமானது. கடற்கரையை ஒட்டியிருந்த தெருவின் கடைசியில் தான் வீற்றிருந்தது அவரின் பிரம்மாண்ட அரண்மனை. 

காலம் காலமாக ஏற்றுமதி தொழிலில் கொடி கட்டி பறக்கும் குடும்பம் என்பதால், நூறு வருட பழமையான அரண்மனை இன்றும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. வழக்கத்திற்கு மாறாக இன்று அந்த அரண்மனை மேளதாளங்கள் முழங்க, புதுப்பொலிவோடு ஜொலித்துக் கொண்டு இருந்தது. 

வாசலில் தோரணம், பந்தல் என வீடே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஆம் அந்த அரண்மனையின் பெரியவர் சுந்தரலிங்கத்தின் பேத்தி மதியழகிக்கு தான் அன்று நிச்சயதார்த்தம்! 

கூடியிருந்த குடும்பத்தினர் அனைவரின் முகத்திலும் சந்தோஷம் நிறைந்து இருந்தது. தனது சொந்த மகள் வழி புதல்வன் சந்திரனுக்கு தான், மகன் வழி பேத்தி மதியழகியை மணம் முடிக்க ஏற்பாடு செய்திருந்தார் சுந்தரலிங்கம். 

பெண்ணின் தாய் தந்தையான ராஜேந்திரன், செண்பகம் ஜோடியும், மாப்பிள்ளையின் தயாரான பூங்காவனம் ஆறுமுகம் ஜோடியும் பரிபூரண சம்பந்தம் சொல்லும் வகையில் வெற்றிலை பாக்கு மாற்ற தயாராய் இருந்தனர். 

“நாழி ஆகிட்டே இருக்கு! நல்ல நேரம் முடியறதுக்குள்ள சீக்கிரம் தாம்பூலத்த மாத்திக்கோங்க!” என்று அருகில் அமர்ந்திருந்த ஐயர் கடிகாரத்தை பார்த்தபடி அனைவரையும் அவசர படுத்திக் கொண்டு இருந்தார்.

“குலதெய்வத்தை மனசுல நினைச்சுக்கிட்டு தட்ட மாத்திக்கோங்கப்பா” என்று தன் பங்கிற்கு தாத்தாவும் சொன்னார். 

அவர் உத்தரவின் பேரில் இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் தாம்பூலத்தை மாற்றிக்கொள்ள எத்தனித்தனர். அந்த வேளையில் வாசலில் கார் ஒன்று சீறிப்பாய்ந்து கொண்டு வந்து நின்றது. 

அனைவரும் அதிர்ச்சியாக வாசல் பக்கம் திரும்பி பார்த்தனர். யாராக இருக்கும் என்று அனைவரும் யோசித்துக் கொண்டு இருந்த வேளையில் சிங்கம் போல் உள்ளே நுழைந்தான் மகேந்திரன். அவனும் அந்த வீட்டுப் பேரன் தான், ஆனால் யாருக்கும் பிடிக்காதவன்!

அவனை பார்த்ததும் அங்கிருந்த அனைவருக்கும், ‘இவன் ஏதோ பிரச்சனை செய்யத்தான் வந்திருக்கிறான்’ என்று முன்னதாகவே தெரிந்து இருந்தது. 

அதனால் என்ன நடந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற மனநிலையோடு அவனை எதிர்கொள்ள தயாராக இருந்தனர். 

வேகவேகமாக உள்ளே நுழைந்தவன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் தாம்பூலத்தில் இருந்த பரம்பரை தாலியை எடுத்து, மணப்பெண் கோலத்தில் அமர்ந்திருந்த மதியழகியின் கழுத்தில் கட்டி விட்டான். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று கொண்டு இருக்க, தாத்தா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். 

அனைவரும் அவனை கொள்ளும் அழகு கோபத்தில் இருக்கும் பொழுது, மதியழகி மட்டும் தனது கழுத்தில் தொங்கி கொண்டு இருந்த தாலியை பார்த்து மிகவும் பூரித்து போய் மகிழ்ச்சியாக அமர்ந்து இருந்தாள். 

‘என் பல வருட கனவு நினைவாகி விட்டது!’ என்று ஒரு பெருமூச்சு விட்டபடி, அந்த தாலியையே உற்று நோக்கிக் கொண்டு இருந்தாள். 

அவன் தனக்கு தாலி கட்டுவது போல் பல நேரங்களில் பல விதமாய் கற்பனை செய்து, தனக்குள் ரகசியமாய் பூரித்து கொண்டு இருந்தவளுக்கு, தற்பொழுது அது நிஜத்தில் அரங்கேறி இருந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. 

“ஏன்டா! அனாதை நாயே! என்ன தைரியம் இருந்தா என் பேத்தி கழுத்துல தாலி கட்டியிருப்ப? உனக்கு என் பேத்திய தொடுற அளவு தைரியம் வந்துருச்சா? உன்னலாம் உன் அம்மா செத்தப்பவே இந்த வீட்டை விட்டு வெளிய துரத்தி இருக்கணும். உங்க பாட்டி பேச்சை கேட்டு இந்த வீட்ல தங்க வெச்சது எங்க தப்பு தான்! ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து கிளம்பிரு!” என்று கோபத்தில் கொந்தளித்தார் சுந்தரலிங்கம். அதை எல்லாம் சற்று கூட பொருட்படுத்தாது திமிரான தோரணையில் வேறொரு பக்கம் முகத்தை திருப்பியவாறு நின்று கொண்டு இருந்தான் மகேந்திரன்.

“இவ்வளவு சொல்றாங்க, கொஞ்சமாவது காது கொடுத்து கேக்குறானா பாருங்க! நான் அப்பவே சொன்னேன் இவனை வீட்ல தங்க வைக்காதிங்க. என்னைக்காவது ஒரு நாள் உங்களுக்கு எதிராவே வந்து நிக்கப் போறான்னு! இப்ப நடந்துச்சா? கடைசியில் என் பையன் வாழ்க்கையையும் கெடுத்துட்டான்!” என்று தன் பங்கிற்கு தன் மனக் குமுறல்களை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார் தாத்தாவின் இரண்டாவது மகளான பூங்காவனம். 

“நீ என்னடி லூசு மாதிரி பேசிட்டு இருக்க! இவன் தாலி கட்டிட்டா எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சுனு அர்த்தமா? நம்ம பொண்ணை இவனோட‌ அனுப்பி வெச்சிடனுமா? டேய்! இங்க பாரு… அவ என் வீட்டு மருமக! தாலி கட்டினா மட்டும் நீ புருஷன் ஆகிடுவியா? அந்த தாலியை கழட்டி எறிய ஒரு நிமிஷம் ஆகாது! மரியாதையா இங்க இருந்து கிளம்பி போயிடு. நல்லது நடக்க போற நேரத்துல வந்து இங்க பிரச்சனை பண்ணிட்டு இருக்காத!” என்று முரண்டு பிடித்தார் பூங்காவனத்தின் கணவர் ஆறுமுகம். 

“இவன்கிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்குது? அடிச்சு வெளிய தொரத்துங்க” என்று கடல் அலை போல ஆர்ப்பரித்தார் பூங்காவனம்.

“ஏன்டா இப்படி நல்லது நடக்குற நேரத்துல வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்க? அவங்க சொன்ன மாதிரி உன்ன வீட்டுக்குள்ள வச்சு சோறு போட்டோம் பாத்தியா! எங்க தப்பு தான்! என் கையால சாப்பிட்ட நன்றி கொஞ்சம் கூட இல்லாம நடந்துக்குறியேடா. உன்னையெல்லாய் நன்றி கெட்ட நாயேனு சொன்னாக்கூட நாய்க்குதான் கேவலம்.”  

தன் மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்ற மனக் குமுறலில் வார்த்தைகளை வரைமுறை இன்றி அள்ளி தெளித்தார் மதியழகியின் அம்மா செண்பகம். 

தாத்தா, “பெத்தவ சரியா இருந்தா பிள்ளைகளும் சரியா இருந்திருக்கும். பொறப்பே சரியில்லாத இதுகளை என்னனு சொல்லி திட்டுறது?”

தனது அம்மாவை பற்றி பேசியதும் மகேந்திரனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவனுக்கு வந்த கோபத்திற்கு அங்கிருந்த அனைவரின் தலையும் ஒரு நிமிடத்தில் பூமியில் உருண்டோடி இருக்கும். என்ன நினைத்தான் என்று தெரியவில்லை… 

தெளிவாகவும் உறுதியாகவும், “இனிமே அவ என் பொண்டாட்டி! நான் தாலி கட்டின பொண்டாட்டி. அது தேவையா, தேவை இல்லையானு அவளே முடிவு பண்ணட்டும். எங்க விஷயத்தை பத்தி பேசுறதுக்கு இங்க இருக்குற யாருக்கும் ரைட்ஸ் கிடையாது. என் அம்மா மேல குத்தம் சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? திரும்ப யாராவது ஒரு வார்த்தை என் அம்மாவை பத்தி ஏதாவது தப்பா பேசினீங்க அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது” என்று கர்ஜித்தான்.

அவளே சொல்லட்டும் என்று நினைத்த சுந்தரலிங்கம், “மதியழகி, அந்த தாலியை கழட்டி அவன் மூஞ்சி மேலேயே எறிம்மா” என்று கூறினார். அவளோ மௌனமாய் வீற்றிருந்தாள்.

அனைவர் பார்வையும் இப்போது அவள் பக்கம் திரும்ப, “வாடி போலாம்!” என்றான் மகேந்திரன்.

பொம்மை போல் எழுந்து நின்ற மதியழகியின் கையை பிடித்து இழுத்தவன், வேக வேகமாக அவளை கூட்டிக் கொண்டு வீட்டின் இறுதி மூலையில் இருந்த அவனது அறைக்குச் சென்றான். மதியழகியும் மறுமொழி எதுவும் கூறாமல், கடிவாளம் போட்ட குதிரை போல் அவன் பின்னாலேயே சென்று கொண்டு இருந்தாள். வேடிக்கை பார்த்திருந்த எல்லோரும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் ஸ்தம்பித்து போய் நின்று கொண்டு இருந்தனர். 

“என்ன மாமா! அவன் பாட்டுக்கு என் பிள்ளையை இழுத்துட்டு போயிட்டு இருக்கான். நீங்க எதுவுமே பேசாம அப்படியே நின்னுட்டு இருக்கீங்க. யாராவது போய் தடுத்து நிறுத்துங்க. மதிய ஏதாவது பண்ணிட போறான்” என்று செண்பகம் சுந்தரலிங்கத்திடம் அழுது மன்றாடினாள். 

அவர் அவ்வாறு கத்திக் கூப்பாடு போட்டு மன்றாடுவது கூட, தன் காதில் விழாமல் மனக் கலக்கத்தோடு நின்று இருந்தார் சுந்தரலிங்கம். காரணம், மதியழகி தாத்தாவின் பேச்சை மீறி விரல் கூட அசைக்க மாட்டாள். இன்று அவன் கூப்பிட்டது பூனை குட்டி போல பின்னால் ஓடிவிட்டாளே!

அந்த வீட்டிலிருந்த அறையிலேயே மகேந்திரன் தங்கி இருந்த அறை தான் மிகவும் சிறியது. அலமாரி என்று எதுவுமே கிடையாது! காற்று வந்து போக ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே உண்டு. ஒரு ஆள் மட்டும் பாய் விரித்து நன்றாக கால் நீட்டி படுக்கும் அளவிலானது. இரண்டாவது ஆள் உட்கார இடம் இராது! அதனுள், அவன் நினைவு தெரிந்த நாள் முதலாக தங்கி இருந்தான். 

சொல்லப்போனால் அவர்களின் அரண்மனையில் இருக்கும் கழிவறையே அந்த அறையை விட மிகவும் பெரியதாக இருக்கும். அந்த அறைக்கு மதியழகியை வேக வேகமாக இழுத்து வந்தவன், அவளை உள்ளே தள்ளிவிட்டு கதவை தாழிட்டான். 

விழுந்த வேகத்தில், “அம்மா…” என அவள் அலறிய சத்தம் வீடு முழுக்க எதிரொலிக்க, அதுவரை ஹாலில் இருந்த எல்லோரும் இங்கே ஓடி வந்தனர். 

தாத்தா மூடியிருந்த கதவை பலமாக தட்டி, “பொறுக்கிப் பயலே! கதவ தொறடா… என் பேத்திய என்ன பண்ணுற? அவளுக்கு மட்டும் எதும் ஆச்சுனா உன்ன சும்மா விட மாட்டேன்டா” என்று கத்தினார். 

அவரின் வார்த்தைகளை கொஞ்சம் கூட பொருட்படுத்தாது, கோபத்தோடு மதியழகியை நெருங்கினான். தட்டு தடுமாறி எழுந்து நின்றவளது இரு தோள்களையும் அழுத்தமாக பற்றினான்.

“என் மதிய நீ என்னடி பண்ண? அவள நீ எங்க பார்த்த? அவள பத்தி உனக்கு எப்படி தெரியும்? என் மதிய நீதான் என்னமோ பண்ணி இருக்க! அவள நீ என்ன பண்ண?” என்று ஆவேசமாக அவளைப் பிடித்து உலுக்கினான்.

அவளோ அழுத்தமான பதில் பார்வை பார்த்தாள். அவள் அவ்வாறு மௌனமாக இருக்க இருக்க இவனுக்கு பித்தம் தலைக்கு ஏறியது.

“வாய தொறந்து ஏதாவது சொல்லுடி! உன்கிட்ட தான் நான் கேட்டுட்டு இருக்கேன். என்னோட மதிய நீ என்ன பண்ண?” என்று அதே கேள்வியை திருப்பித் திருப்பி கேட்டுக் கொண்டிருந்தான் மகேந்திரன்.

“இப்ப நான் என்ன சொன்னாலும் உனக்கு புரியாது! சொல்ற நிலமையிலயும் நான் இல்ல. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு” என்று மிகவும் சாவகாசமான பதிலளித்தாள். 

அவளின் இந்த மெத்தனமான பேச்சு மகேந்திரனின் கோப எரிமலைக்கு பெட்ரோல் ஊற்றியது. அவள் சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் அவளது குரல் வளையில் தன் கைகளை ஆழமாக பதித்தான். மூச்சு விட முடியாமல் திணறினாள் மதியழகி. கண்கள் இரண்டும் சொருகிக் கொண்டு வர, ஒரு நொடி மரணத்தை தொட்டு திரும்பினாள். 

❤️ Loading reactions...
அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
231 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
306 15 1
வேண்டினேன் நானுன்னை
537 6 0
நீ எந்தன் நிஜமா?
375 8 1
என்துணை நீயல்லவா?
455 12 0
கற்றது காதல்
215 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page