அத்தியாயம் 10: மேடை என்னும் போர்க்களம்

அரங்கமே மின்விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக்கொண்டிருந்தது. ஆர்யன் மேடையின் மையத்தில் வந்து நின்றபோது, பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. ஆனால், ஆர்யனுக்கு அந்தப் பேரிரைச்சல் கேட்கவில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், மேடைக்குக் கீழே சரியாக மூன்றாவது வரிசையில் நின்றிருந்த யாழினியின் முகம் மட்டும்தான்.

யாழினியின் கண்கள் ஆர்யனை நிலைபெறச் செய்தன. அவள் தனது இரண்டு கைகளையும் மார்பின் அருகே வைத்து, “நான் இருக்கிறேன்” என்பது போல ஒரு சைகை செய்தாள். ஆர்யன் தனது கிதாரை மீட்டித் தொடங்கினான்.

யாழினி தனது விரல்களை மென்மையாக அசைத்தாள். அது ஒரு கடிகாரத்தின் முள் நகர்வதைப் போல மிகத் துல்லியமான தாளம். ஆர்யன் பாடத் தொடங்கினான்.

“மொழிகள் தேய்ந்த மௌனத்தில்…

உன் இதயம் பேசும் ராகத்தில்…

நானும் கரைந்து போகிறேன்…

உன் மௌனமே என் சங்கீதம்…”

ஆர்யனும் இத்தனை நாள் அடை காத்த இசையை மாபெரும் கொடை வள்ளல் போல அள்ளி இரைத்தான். அவனது புது உத்வேக குரலும், துள்ளல் மிகுந்த உடல் மொழியும் எங்கே சென்றாலும் அதை ரசிக்க ஒரு கூட்டம் நிச்சயம் உருவாகும்.  இங்கும் புது ரசிகர்களை தனதாக்கி இசையின் அரசன் போல மேடையில் மகுடம் சூட்டிக்கொண்டான். அரங்கமே ஆர்யனினின் மாயாஜால குரலை ரசித்து மகிழ்ந்தது. ஆர்யனின் குரல் முன்னை விட இப்போது அதிக வலிமையுடனும், ஆழமான காதலுடனும்   ஒலித்தது. யாழினி ஒவ்வொரு வரிக்கும் ஏற்ப தனது உடல் மொழியால் அவனை வழிநடத்தினாள். ஆர்யன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். உலகமே அவர்களைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தாலும், அந்த இருவருக்கும் இடையே ஒரு மௌனமான அந்தத் தனி உலகம் மட்டுமே இருந்தது. அந்த காதல் உலகத்தில் இசை எனும் சிறகோடு இலக்குகள் இல்லா பெரும் பயணத்தை மேற்கொண்டனர். யாழினுக்கு இது புது அனுபவம், அதை கொண்டாடி மகிழ்ந்தாலும் உள்ளுக்குள் ஒரு பதற்றம் இருந்தது,  இருப்பினும் அதனை வெளிக்காட்டாமல் ஆர்யனுக்கு பக்க துணையாக நின்று இசை நிகழ்ச்சியை நேர்த்தியாக வழி நடத்தினாள்.

ஆனால், மேடையின் இடதுபுறம் நிழல்கள் அசைந்தன. அமைச்சரின் ஆட்கள் இருவர் மெல்ல மேடையின் பின்னால் ஊடுருவினார்கள். அவர்கள் கையில் துப்பாக்கிகள், மற்றும் கொடூர ஆயுதங்கள்  மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கௌதம் இதைக் கவனித்துவிட்டான். அவன் போலீஸை அழைக்க முயன்றான், ஆனால் அங்கிருந்த ஜாமர்கள் (Jammers) சிக்னலைத் தடுத்தன. தனது உதவியாளர்களை  வைத்து அமைச்சரின் அடியாட்களை கவனிக்க வைத்தான். அவர்களின் ஒவ்வொரு நடிவடிக்கையும்  உதவியாளர்கள் கவனமாக கவனித்தனர்.  

உதவியாளர்கள் ஒவ்வொருவருக்கும் கௌதம் சொன்ன, அறிவுரை  மனதில் வந்து போனது.

“ நல்ல கேளுங்க பாய்ஸ், இன்னிக்கு நடக்க போற  கச்சேரி… வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சி அல்ல, பொதுநலம் உள்ளடக்கிய சமூக விழிப்புணர் நிகழ்ச்சி. இதுல காக்க வேண்டியது, ஆர்யனையும், யாழினையும் நாம உயிரை கொடுத்துதாவது காப்பத்தனும், அவங்கள காப்பத்தினா, நாம நம்ம அடுத்தடுத்த தலைமுறையாக காப்பாத்தினக்கு சமம். இதை நிகழ்ச்சி முடியும் போது நீங்களே உணருவீங்க!”

என்ற வார்த்தைகள் உதவியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனி பலத்தைக் கொடுத்தது. அமைச்சரின் அடியாட்களை, உதவியாளர்கள் ஒவ்வொருவரும் கடுமையான கோபப் பார்வையில் கவனித்துக்கொண்டு இருந்தனர்.

பாடல் உச்சக்கட்டத்தை எட்டியது. ஆர்யன் உணர்ச்சிவசப்பட்டுப் பாடிக் கொண்டிருந்தான். சரியாக அந்த நேரத்தில், மேடையின் மேலிருந்து ஒரு பெரிய விளக்கு (Spotlight) அறுந்து விழும் நிலைக்கு வந்தது. இது ஒரு விபத்து அல்ல, திட்டமிட்ட சதி! மக்கள் வாயை மூட, விபத்து ஒன்றை அரங்கேற்றினால் போதுமானது என்னும்  சூழ்ச்சி, அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலையாயிற்றே ஆனால் இந்த காதல் கலைஞனுக்கு முன்னால், அக்கிரமகாரர்களின் வஞ்சம் எப்போதும் பலிக்காது.

யாழினி பாதி அறுபட்டு கிடந்த பெரிய விளக்கை பார்த்துவிட்டாள். அவளது முகம் வெளுத்தது. அவள் கத்த முயன்றாள், ஆனால் அவளது குரல் எழவில்லை. ஆர்யனுக்குச் சத்தம் கேட்காது என்பதால், அவனால் அந்த விளக்கு ஊசலாடும் சத்தத்தை உணர முடியவில்லை.

யாழினி சட்டென்று மேடை நோக்கி ஓடினாள். அடியாட்கள் அவளை கூர்மையாக கவனித்தனர். செக்யூரிட்டிகள் அவளைத் தடுக்க முயன்றனர், ஆனால் அவள் எல்லாவற்றையும் மீறி மேடை ஏறினாள்.

ஆர்யன் பாடுவதை நிறுத்திவிட்டு அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான். ரசிகர்களும் மேடையில் இருவரையும் ஆச்சர்யமாக பார்த்தனர்.  யாழினி அவனை ஓங்கித் தள்ளிவிட்டு, அவன் மீது விழுந்தாள். அடுத்த விநாடி, அந்த பிரம்மாண்டமான விளக்கு மேடையில் விழுந்து சிதறியது.

அரங்கமே அதிர்ச்சியில் உறைந்தது. புகைமூட்டத்திற்கு நடுவே, ஆர்யன் யாழினியைத் தன் கைகளில் தாங்கினான். அவள் மயக்க நிலையில் இருந்தாள், ஆனால் அவளது கைகள் ஆர்யனின் சட்டையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தன.

சரியாக அந்த நேரத்தில், ஆர்யன் கூட்டத்தைப் பார்த்தான். அவனது கண்களில் இப்போது ஒரு கலைஞனின் மென்மை இல்லை, ஒரு வேட்டையாடும் மிருகத்தின் ஆக்ரோஷம் இருந்தது. அவன் மைக்ரோபோனை எடுத்து, மேடையில் இருந்த ஒரு ஸ்கிரீனை நோக்கித் தன் போனை இணைத்தான்.

யாழினி கொடுத்த அந்த பென்-டிரைவில் இருந்த வீடியோக்கள் அங்கே ஒளிபரப்ப ஆரம்பித்தன. அமைச்சர் மருத்துவ முதலாளிகளிடம்  பணம் வாங்கிய வீடியோ மக்களை கோபப்படுத்தியது, அதிலும் “இந்த பிச்சைக் கார மக்களை பத்தி நீங்க கவலைப்படாதீங்க, அவங்கள வச்சு என்ன ஆராய்ச்சி வேணா பண்ணுங்க. எவனும் கேட்க வரமாட்டான்.” இந்த வார்த்தக்கள் மக்களை வெகுண்டெழ செய்தது. அமைச்சருக்கு எதிராக சமூக வலைதளங்களில் “ஊழல்” எனும் ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆனது.

மருத்துவக் கொலைகள் அனைத்தும் நேரலையாகப் பல்லாயிரம் ரசிகர்கள் முன்னால் ஒளிபரப்பானது. குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சமூக வலைதளங்களில்  நேரடியாக ஒளிபரப்பானது. மக்கள் ஒவ்வொருவருக்குள் ரத்தம் கொதித்தது. வீடியோவில் ஏழை மக்களின்,  அறியாமை அனைவரின் வாழ்க்கையும் பெரும் பணம் முதலாளிகளின் இலவச மருத்துவத்தை பற்றி கேள்விக்குள்ளாகியது.

அரங்கம் ஒரு போர்க்களமாக மாறியது. மீடியாக்கள் கேமராக்களை அந்தத் திரையை நோக்கித் திருப்பினார்கள். அமைச்சரின் ஆட்கள் அடிதடியில் இறங்கி கூட்டத்தை கலைக்க எவ்வளவு முயன்றும், கௌதம் உதவியாளர்களை தாண்டி எதுவும் செய்ய முடியவில்லை, அடியாள் ஒருவன் துப்பாக்கியை தூக்கி கூட்டத்தை நோக்கி சுட முயற்சிக்கும் போது, உதவியாளர் ஒருவன் அவனோடு மல்லுக்கட்டி துப்பாக்கியின் குறியை அடியாள் மீதே திருப்பி துப்பாக்கியை வெடிக்க செய்தான். அடியாள் தோள் பட்டையில்  குண்டு பாய்ந்து ரத்தம் கொப்பளிக்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற அடியாட்கள்  தப்பியோட முயன்றனர், ஆனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.  

ரசிக மக்களைக் குறை சொல்ல முடியாது,  நீதிக்கு ஒரு குந்தகம் என்றால் உடனே வெகுண்ட தயங்க மாட்டார்கள். என்ற உண்மை அன்று ஆர்யன் கண்ணெதிரே நடந்ததை பார்த்து புதிய நம்பிக்கை ஒன்று உண்டானது.

ஆர்யன்  மயங்கி கிடந்த யாழினியின் முகத்தைத் தட்டி எழுப்பினான். அவள் மெல்லக் கண்களைத் திறந்தாள். அவளது நெற்றியில் ஒரு சிறு காயம் இருந்தது.

“யாழினி… நாம ஜெயிச்சிட்டோம். நீ பேச நினைச்ச உண்மையை உலகம் பார்த்துடுச்சு,” என்று ஆர்யன் சைகையில் சொன்னான்.

யாழினி கண்ணீருடன் அவனைப் பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பைச் சிந்தினாள். அந்தப் புன்னகையில் காதல், வெற்றி, நிம்மதி என அனைத்தும் கலந்திருந்தது. இத்தனை மாத போராட்டத்திற்கு நிலையான வெற்றி கிடைத்த மகிழ்ச்சி யாழினியை ஆசுவாசப்படுத்தியது. கோடி இருந்த ரசிகர்கள் ஆர்யனின் சமூக பொறுப்பு வாய்ந்த கச்சேரியை வெகுவாக பாராட்டினர். கௌதம் நிம்மதி பெரு மூச்சு விட்டான். அவன் கூறியது போல அவனது உதவியாளர்களும் உண்மையை உணர்ந்து, கௌதம், மற்றும் ஆர்யன் மீது பெரிய மரியாதை ஒன்றை உருவாக்கியது அந்த இசைக் கச்சேரி. மேடைக்கு கௌதம் வந்தான். கூடியிருந்த ரசிகர்கள் எல்லாம் அரசு மீது அதிருப்தி கோஷத்தை மாமல்லபுரத்தை அதிரச் செய்தது.  உடன் இருந்த கௌதமை ஆர்யன் கட்டியனைத்தான். நட்பும், காதலும் இணைந்து சமூகத்திற்கு எதிராக நடந்த கொடூரத்தை சுட்டிக்காட்டியதில்  இத்தனை வருட இசை பயணத்தில் ஒரு முழுமையான இலக்கை அடைந்த திருப்தி ஏற்பட்டது.

கௌதமை, சிறை பிடிக்க வந்த குமாரும், காவலர் தோரணையில் வந்த நபரும், உதவியாளர்களின் நேர்மையான தாக்குதலில் குமார் ரிஷியின் உண்மையான  தம்பி அல்ல, உடன் வந்தவனும் போலீஸ் அல்ல என்ற உண்மையை ஒப்புக்கொண்டு அமைச்சரின் அறிவுறுத்தல் பெயரில் போலி நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு தக்க தர்ம அடி கொடுத்து உத்தியாளர்கள் ஓடச் செய்தனர்.

சென்னை நகரம் ஆவலோடு எதிர்பார்த்த கச்சேரி, இப்போது ஊழல் அரசியல் வாதியின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்ததில்  பெரிய அதிர்ச்சியும், மக்களுக்கு ஒன்று என்றால் மக்களால் பயன் பெரும் கலைஞன் சத்தியமாக மக்களுக்காக  எதிர்த்து கேட்பான் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவியது. ஆர்யனின் புகழ் வானம் தொடும் அளவு உயர்ந்தது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஆர்யனையும், யாழினியையும் பாராட்டி மகிழ்ந்தனர். இவ்வளவு பெரிய கலவரம் நடக்கும் எனத் தெரிந்தும், காவலர்கள் தகுந்த பாதுகாப்பை வழங்காததை வறுத்தெடுக்க தவறவில்லை. உடனடியாக சென்னை மாநகர கமிஷனர் தனிப்படை ஒன்றை மாமல்ல புரத்திற்கு அனுப்பி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். இசை கச்சேரிக்கு வந்த மக்கள் பாதுகாப்பாக வீடு செல்ல வழி வகை செய்தனர். ஆனால் ரசிகர் கூட்டம் வீட்டிற்கு செல்லாமல் நேராக அமைச்சர் வீட்டிற்கு சென்று, வீட்டில் கல்லெறிந்து, அமைச்சர் ரத்ன வேல் உருவ பொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை காட்டினர். அமைச்சர் வீடு இருந்த போட் ஹவுஸ் பகுதி பதற்ற நிலையை எட்டியது.

அன்று இரவு, ஆர்யனும் யாழினியும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆனால், இது ஒரு நீண்ட போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே. அமைச்சர் ரத்னவேல் இப்போது ஒரு காயம்பட்ட புலி போலக் காத்திருந்தான். அவனது வீடு தாக்கப்பட்டது, முகத்தில் வீசிய கொடுவாளைப் போல், முகம் கோபத்தில் சிவந்து கிடந்தது. மேலும் முதல் அமைச்சர் நேரடியாக ரத்னவேலுவை தொடர்பு கொண்டு வெளுத்து வாங்கியதில் இன்னும் கோபத்தின் எல்லைக்கு சென்றிருந்தான். பத்தா குறைக்கு மருத்துவ முதலாளிகள், “என்ன ரத்னா எந்த பிரச்னையும் வராதுன்னு சொல்லிட்டு இப்படி மொத்தமா மாட்டி இருக்கோம், இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க” என கேள்வி மீது கேள்வி கேட்டு ரத்ன வேலுவின் உறக்கத்தை உடைத்து எறிந்தனர். 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page