வேனலின் வெண்பூவே!
அத்தியாயம் 10
காமினி சொன்ன ஒரு விஷயம் என்னை ரொம்ப யோசிக்க வச்சுது. நம்மளோட மன நிம்மதி, நாம ஒரு செயலுக்கு எப்படி எதிர்வினை புரியறோம் அப்படிங்கிறதில் இருக்கு. நமக்கு ஒருத்தங்க கெட்டது செய்யறாங்கன்னு நாமும் பதிலுக்குச் செஞ்சோம்னா திரும்ப அவங்க ஏதாவது செய்வாங்க. நாம மறுபடியும் ஏதாவது செய்வோம். நம்மளோட சக்தி எல்லாத்தையும் ஒருத்தங்களை கெடுக்கறதில் பயன்படுத்துறதை விட, நாம எப்படி முன்னேறிப் போகணும் என்பதில் செலுத்தணும். அதான் நம்மளை முன்னேத்திக் கூட்டிட்டுப் போகும். அதோட நம்மளோட நிம்மதி, சந்தோஷம் எல்லாம் நம்மகிட்டதான் இருக்கு. அதுவும் சரிதான். என்னோட வாழ்க்கையில் மிகப் பெரிய பங்கா இருக்கக்கூடிய திருமண வாழ்க்கை முடிஞ்சு போயிருக்கலாம். ஆனால் இதுக்கப்புறம் எனக்கு வாழ்க்கை இல்லாமல் இல்லையே. ஐம் ஸ்டில் அலைவ். நான் கடவுளோட பிள்ளை!”
-பத்மமுகி.
சிவகார்த்திக் தந்தையுடன் அலுவல் அறையில் அமர்ந்திருந்தான். அவன் இடப்பக்கத்தில் இருக்க, வலப்பக்கத்தில் ருத்ரசேனா அமர்ந்திருந்தான். விடுதிக்குச் சில பணியாளர்கள் தேவைப்பட்டிருக்க அவர்கள் இணையத்திலும், செய்தித்தாளிலும் அறிவிப்பு செய்திருந்தனர். அதன்படி நேரடித் தேர்விற்கு ஆட்கள் வந்திருந்தனர். காலையிலிருந்து நேரடித் தேர்வு நடக்க, ருத்ராவும் அதில் கலந்து கொண்டான்.
அவனுக்குமே பெரிதாய் எந்தத் திருப்தியும் இல்லை. வந்தவர்களில் சிலர் வேலை பார்ப்பதை விட விடுமுறை நாட்களைப் பற்றி அதிகம் கேட்டனர். சிலருக்குப் பொறுமை குறைவு.
பத்தாவது நபரையும் அனுப்பி விட்டு, சுழல் நாற்காலியில் பேனாவைச் சுழற்றியபடி தந்தையைப் பார்த்தபடி சுழன்று நிறுத்தினான் சிவகார்த்திக்.
“அப்பா, யாருமே சேட்டிஸ்ஃபையிங்கா இல்லை. இன்னும் ரிசப்ஷனிஸ்ட்தான் பேஸ் ஆஃப் தி ஹோட்டல். இவங்க நாம கேள்வி கேட்கறதுக்கே முகத்தைச் சுளிக்கிறாங்க. இவங்க டிஃபிகல்ட் கஸ்டமர்ஸ் வந்தால் எப்படி டீல் பண்ணுவாங்க? நீ என்ன ருத்ரா சொல்ற?”
“அடுத்து வரவங்களைப் பார்ப்போம்.” என அவன் பதில் கூறியதும்,
“அதுவும் சரிதான்.” எனச் சிவபொன்னம்பலம் தலையசைத்தார்.
அடுத்த நபரை நேர்முகத் தேர்வுக்கு உள்ளே வரச் சொல்லிச் செயலாளருக்கு அழைத்துக் கூறிய கார்த்திக், அதற்கு முன் உள்ள நபரின் கோப்பை எடுத்துத் தனியே வைத்து விட்டு, தற்போது வரும் நபரின் கோப்பை எடுத்து முன்னே வைத்தான். அதற்குள் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, மெல்லிய ஹீல்ஸ் சத்தத்துடன் நடந்து வந்தாள் அவள். அவளைப் பார்த்ததும் சிவகார்த்திக்கின் விழிகள் தானாக விரிந்தன.
அவன் இதழ்கள் அவள் பெயரை மெதுவாக உச்சரித்தது.
“கன்யா.”
ஆரஞ்சு நிறமும், பச்சை நிறமும் கலந்த பருத்திப் புடவையில் வந்தவள் எதிரில் இருப்பவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் முகத்தில் அதிர்ச்சி என்றாலும், சிவபொன்னம்பலத்தின் அழைப்பில் தன்னை மீட்டுக் கொண்டவள் நிமிர்ந்து நின்றாள்.
“வாம்மா உட்காரு. பேரு என்னம்மா?”
“கன்யா சுப்பிரமணியம்.”
சிவபொன்னம்பலம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். சிவகார்த்திக் எதிரில் இருப்பவளை அமைதியாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். ருத்ரன் அவன் பக்கம் பார்வையைத் திருப்ப, அமைதியாக இருக்கும் கார்த்திக்கைப் பார்த்து அவனுக்கும் மனது துணுக்குற்றது.
“உன்னோட சொந்த ஊர் இதில்லையாம்மா?”
“நோ சார். இங்க ஜாப் கிடைச்ச உடனே மூவ் ஆகணும்.”
“இதுக்கு முன்னாடி எங்க வொர்க் பண்ண? அந்த ஹோட்டலே ரொம்ப பெரிய ஹோட்டல்தானே?”
“யெஸ் சார். டெல்லியில் வொர்க் பண்ணேன். ஆனால் அங்க ஏர் பொல்யூசன் அதிகம். அம்மாவுக்கு உடம்பு முடியலை. சரி தமிழ்நாட்டுக்குப் போகலாம்னு முடிவு எடுத்தப்ப இங்க வேகன்சி இருக்குறதைப் பார்த்தேன். அப்ளை பண்ணேன்.”
அதன் பிறகு ருத்ரா கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான். அனைத்திற்கும் சளைக்காமல் பொறுமையாகப் பதில் அளித்தாள்.
இன்னும் சிவகார்த்திக்கிடமிருந்து ஒரு கேள்வி கூட வரவில்லை.
ஏற்கனவே ஐந்து நட்சத்திர விடுதியில் பணியாற்றியதால் அவளுக்கு வெளிநாட்டினர் மற்றும் பல தரப்பட்ட மக்களிடம் இயல்பாகவே பழகும் தன்மை இருந்தது. மொழிகள் பலவற்றிலும் கைத்தேர்ந்திருந்தாள்.
பருத்திப் புடவையில் சிறிய வைரக்கல் வைத்த தோடு, அதற்குப் பொருத்தமான கழுத்து நகை, கையில் கடிகாரம் சகிதம் எளிமையாக ஆனால் அழகில் மிளிர்ந்தாள்.
சிவபொன்னம்பலத்திற்கு அவள் கூறிய பதில்களில் திருப்தி. ருத்ராவிற்குமே இவளைப் போல் தகுதியுடைய பெண் இருந்தால் பரவாயில்லையெனத் தோன்றியது.
சிவகார்த்திக் தன் தந்தை மற்றும் ருத்ராவின் முகபாவனையில் இருந்தே அந்தப் பெண்ணைப் பிடித்து விட்டது என்று தோன்றியது.
“சிவா, நீ எதுவும் கேட்கணுமா?” என ருத்ரன் கேட்டான்.
“எனக்கு எதுவும் கேட்கறதுக்கு இல்லை. இவங்க ஓவர் குவாலிஃபைடுன்னு தோணுது. நாம அவங்க முன்ன வேலை செய்த ஹோட்டலை விடப் பே ஸ்கேல் குறைவாகக் கொடுக்கறோம்.”
கன்யா, சிவகார்த்திக் இப்படி கூறுவானென எதிர்ப்பார்க்கவில்லை.
“யெஸ் சார். அதையும் பார்த்துட்டுதான் அப்ளை பண்ணேன். எனக்குச் சேலரி ஓகே.” எனப் புன்னகைத்தபடி அதற்கும் பதில் கொடுத்தாள்.
“சரிம்மா நீங்கப் போலாம்.” எனப் பொன்னம்பலம் கூற எழுந்து மூவருக்கும் வணக்கம் வைத்து நன்றி கூறி விடைபெற்றாள்.
சிவகார்த்திக்கின் முகம் அவள் புன்னகையைப் பார்த்தபின்னர் கடுகடுவென மாறியது.
“ருத்ரா, எனக்கு இந்தப் பொண்ணு ஓகேன்னு தோணுது.” என்றார் பொன்னம்பலம்.
“எனக்கும் ஓகேதான்.”
“கார்த்திக், நீ என்னப்பா சொல்ற?”
“எனக்கு அவ்வளவா ஓகே இல்லை. ஆனால் மெஜாரிட்டி டிசிஷன்படி போவோம். மத்தவங்களும் இண்டர்வியூ முடிக்கட்டும்.”
மதியம் மூன்று வரை தொடர்ந்த நேரடித் தேர்வில் வரவேற்பில் இரவு நேரத்திற்கு ஒரு ஆணையும் தேர்ந்தெடுத்திருந்தனர். கன்யா தவிர வந்த பெண்கள் யாரும் திருப்தியாக இல்லை.
விளைவாகக் கன்யாவிற்கு அன்றைய இரவே மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியில் ‘நெய்தல் நிழல்’ விடுதியில் சேர்வதற்கான கடிதம் அனுப்பட்டது.
***
கடல் நடுவில் நிலாவும் நட்சத்திரங்களும் மின்னிக் கொண்டிருந்தன. முகி தன்னுடைய கதையைக் கூற ஆரம்பித்திருந்தாள்.
முகிக்கு அவன் தன் காதலைச் சொன்ன நாள் இரவு தூக்கமில்லை. அவனின் கண்ணியமும், நேரடியான பேச்சும் பெண்ணின் இதயத்தில் சலனத்தைத் தூவிச் சென்றிருந்தன.
இரவு தாமதமாய் தூங்கி காலை எழும்போது, “குட் மார்னிங். சன்ஷைன்.” எனச் செய்தி அவள் கைப்பேசியில் வந்திருந்தது.
“குட் மார்னிங்.” எனப் பதிலுக்கு அனுப்பிவிட்டவள் எழுந்து மடமடவென வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அவளுடன் சேர்ந்து இன்னும் இரண்டு பெண்கள் தங்கி இருக்கின்றனர். அவர்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் இரவு நேரப் பணியாளர்கள் என்பதால் இரவு நேரத்தில் அவள் மட்டும் தனியாக இருப்பாள். காலை நேரம் அவர்கள் வந்து விடுவார்கள்.
காலை நேரத்தில் முகி சமைத்து வைத்து விடுவாள். அதில் அவர்களுக்கும் மதிய நேரத்திற்கு அவை போதுமானதாக இருக்கும். மாலை முகிக்கும் சேர்த்து சமைத்து விட்டு, இரவு அவர்கள் உணவை எடுத்துக் கொண்டு சென்று விடுவர். ரூம்மேட்கள் கிடைப்பது வரம். முகிக்கு அது நன்றாக அமைந்துவிட்டது. அவள் இரு வாரத்திற்கு உணவுப் பட்டியல் வைத்திருக்க, அதை அப்படியே அவர்களும் ஏற்றுக் கொண்டனர். தினமும் எதைச் சமைக்க எனத் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வெளியில் சாப்பிடுகிறார்கள் என்றால் செய்தி அனுப்பியோ இல்லை அழைத்தோ கூறிவிட நிம்மதியாக வாழ்க்கை சென்றது முகிக்கு. அனைத்தையும் பங்கிட்டுச் செலவும் செய்ய வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை.
மாலை வீட்டுக்கு வந்தால் சிறிது நேரம் தொலைக்காட்சியைப் போட்டு விட்டு, தன்னுடைய மேற்படிப்புக்கான ஆராய்ச்சியில் மூழ்கிவிடுவாள். இப்படி நதிபோல் அமைதியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது அவளுக்கு. அதில் காதலென்னும் புயல் முதன் முதலாக வீச ஆரம்பித்திருந்தது.
அவனைச் சந்தித்தப் பிறகு அடுத்து வந்த வாரம் முழுக்க அவளுக்குக் காலை, இரவு மறக்காமல் குறுஞ்செய்தி வந்துவிடும். இவளும் பதில் அளிப்பாள். தினமும் ஒரு விஷயம் நடக்கும்போது, அது அடுத்த நாளும் வேண்டும் என நினைப்பது இயல்புதானே! தான் ஒரு முக்கியமான வேலையில் இருப்பதால் அவளைச் சந்திக்க வர முடியவில்லை என்பதையும் அவன் குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்திருந்தான்.
இப்படி இரண்டு வாரங்கள் கழிந்தது. அன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் இருந்தாள் பத்மமுகி. ஒரு டீசர்ட்டும், பேன்ட்டும் எனத் தலைமுடியைக் கிளிப் போட்டுச் சுற்றிக் கொண்டிருந்தாள்.
அப்போது பத்மமுகியின் அலைபேசி அடிக்க அதில் ஆதி மனோகரன் என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
“ஹாய் முகி! பிஸியா?”
“ஹலோ! சண்டேதான் வீட்டுல இருக்கேன்.”
“அப்ப என் கூட வெளியில் வர முடியுமா?”
“ம்ம்ம்… எங்க வரணும்?”
“வீட்டுக்கு வெளியில்தான் இருக்கேன்.”
“வாட்?” என அதிர்ந்தவள் உடனே பால்கனி வழியே கீழே எட்டிப் பார்த்தாள்.
காரில் சாய்ந்தபடி கண்களில் மாட்டிய கூலருடன் நின்றுகொண்டிருந்தான்.
“இங்க என்ன செய்யறீங்க?”
“கிளம்பி வாங்க மேடம். வெயிட் பண்றேன்.”
“ஹய்யோ! ட்வென்ட்டி மினிட்ஸில் கிளம்பி வரேன்.”
முகியை என்றுமே இல்லாத பரபரப்புத் தொற்றிக் கொண்டது. தன்னுடைய பீரோவைத் திறந்து உடைகளைத் தேடினாள். டிஸ்யூ குர்தி ஒன்றை எடுத்தவள் வேகமாகக் குளியலறைக்குச் சென்று தலைக்குக் குளித்தாள். ஞாயிறு என்பதால் பொறுமையாகக் குளிக்கலாமெனத் தலைக்கு எண்ணைக் காப்பு சாத்தி இருந்தாள்.
“இவரு வேற சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிக்கறாரு.” எனப் புலம்பியபடி வேகமாகக் குளித்து உடனே ஹேர் டிரையரின் உதவியுடன் தலைமுடியை உலர்த்தினாள்.
குர்தி ஜீன்ஸ் அணிந்தவள் காய்ந்த தலைமுடியை கற்கள் பதித்த கிளிப் போட்டுத் தலை சீவியவள் கண்ணாடியில் ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக் கொண்டாள். குட்டிப் பொட்டு ஒன்றையும், நறுமண ஸ்பிரே, சன்ஸ்கிரீன் என எளிமையாக முடித்துக் கொண்டாள்.
தன்னுடைய கைப்பை, கைப்பேசி ஆகியவற்றை எடுத்துக் கொண்டவள் வீட்டைப் பூட்டி விட்டுக் கீழே வந்தாள். அதற்குள் அரை மணி நேரம் கடந்திருந்தது.
மகிழுந்தில் அமர்ந்திருந்தான் ஆதி மனோகரன். ஆளை அசத்தும் தோற்றத்தில் அவளைப் பார்த்ததும் முகத்தில் புன்னகை ஒன்று எழுந்தது.
“திடீர்னு வந்து கூப்பிட்டதுக்கு ஸாரி! முன்னாடியே சொல்லி இருக்கணும்.”
“இட்ஸ் ஓகே.”
மகிழுந்தைத் திறந்து வெளியே வந்தவன் பின் சீட்டில் வைத்திருந்த சாக்லெட்டுகள் இடையே வைத்துச் செய்யப்பட்ட மலர்க்கொத்தைப் பரிசளித்தான்.
“நைஸ், தேங்க் யூ!” என வாங்கிக் கொண்டாள்.
“உட்காருங்க.” எனக் மகிழுந்தின் கதவையும் திறந்து விட முகி மலர்ந்த முகத்துடன் ஏறி அமர்ந்தாள்.
“எங்க போறோம் மனோகரன் சார்?”
“சொல்றேன்.”
அவன் அழைத்துச் சென்ற இடத்தில் நடந்த சம்பவத்தில் முகி கொதித்துப் போயிருந்தாள்.
தொடரும்…
