அத்தியாயம்- 10

இந்த ஒரு வார்த்தையை சொன்னது என் மனதை அறுக்கிறதடி ..நான் என்றைக்கு உன்னை சந்தேகப்பட்டு இருக்கிறேன்.. நீ மாதமாக இருந்த போது புவனாவிடம் பேசியது  எனக்கு எரிச்சலாக வரும் ..ஆனாலும் நீ ஆசைப்படுகிறாய் என்றுதான் பொறுத்துக் கொண்டேன்.. பிள்ளை வளர வளர நீ அவளை ஒதுக்கி விடுவாய் என்று.. அதே போலவே நீ இப்பொழுது அவளிடம் தேவையில்லாமல் பேச மாட்டேன் என்கிறாய் ..இதெல்லாம் நான் சொல்லித்தான் உனக்கு தெரிய வேண்டும் என்று இல்லடி..” என்றதும் அவன் மனதில் இருப்பதை மித்ரா புரிந்து கொள்கிறாள் ..இனி தேவை இல்லாமல் அவனிடம் பேசி சிக்கல்  ஆக்கக்கூடாது என்று தெரிந்து கொள்கிறாள்..

உடனே அவள் தன்னிடம் கவலை கொள்ளும் படியாக பேசுகிறாள் .. “சாரிங்க இனிமேல் உங்க மனம் நோகும் படியா நான் பேச மாட்டேங்க..அது என்னமோ தெரியலங்க.. இந்த பயல் பிறந்ததிலிருந்து என் மனமே இப்படித்தான் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது .. நான் கூட நினைத்துக் கொண்டேன் ..ஒருவேளை பிரசவ சமயங்களில் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று ..ஆனாலும்  ஒரு வருடம் ஆகியும் இதே போலத்தான் இருக்கிறது ..பேசாமல் நாம் டாக்டரிடம் போய் காட்டி விட்டு வருவோமா..”

” எனக்கே கொஞ்சம் நான் இப்படி எடுத்தெறிந்து பேசுவதை பார்க்க பயமாகத்தான் இருக்கு..நான் இப்படி எல்லாம் இருக்கும் ஆளே கிடையாதுங்க..” சொல்லும் போதே அழுகிறாள்..

மனைவி அழுவதைக் கண்டதுமே அவன் மனம் உருகுகிறது.. “ ஆமாடி எனக்குமே அதுதான் கொஞ்சம் பயமாக இருக்கிறது..நான் டாக்டரிடம் போகலாமா என்று கேட்டால் அதற்குமே நான் என்ன பைத்தியமா என்று கத்துவாய்.. அதனால் தான் அமைதியாக இருந்தேன்..”

சொல்லி வாயை மூடுவதற்குள் அடுத்த சண்டை வருகிறது .. குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு இருக்கவும் ,அவளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று மென்மையாக பேசுகிறான்..

“உன்னுடைய செல்லை கொஞ்சம் கொடேன்.. புவனாவின் நம்பர் எனக்கு தேவைப்படுகிறது.. ”

வெடுக்கென்று பேசுகிறாள்.. ” ஏன் என்னுடைய செல்லை எதற்கு கேட்கிறீர்கள்.. நான் அவள் நம்பரை சொல்கிறேன் ..உங்கள் செல்லில் ஏற்றிக் கொள்ளுங்கள்.. ” என்கிறாள்..இப்படி சொன்னதுமே அரவிந்துக்கு கோபம் வருகிறது..

“ஏன்டி என்னை நம்பி கூட உன்னுடைய செல்லை கொடுக்க மாட்டாயா.. இப்பொழுதுதான் சொன்னாய்.. டாக்டரிடம் போகலாமா என்று.. அதற்காகத்தான் அவளிடம் பேச போன் நம்பர் கேட்கிறேன்.. ஒரு நிமிடம் கொடுத்தால் தான் என்ன .. ”

திரும்பவும் அழத் தொடங்குகிறாள்..

“நான் என் பிள்ளை மீது சத்தியம் அடித்து சொல்வேன்.. நீங்கள் என்னை சந்தேகம்தான் படுகிறீர்கள்  ..அதனால் தான் என்னுடைய செல்லை வாங்கி  அதை பரிசோதனை செய்து பார்க்க முயற்சிக்கிறீர்கள் .. ”

“அதற்கு நீ இல்லாத நேரமே நான் செய்து கொள்வேன்டி.. உன்னிடம் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது .. ”

“ உங்களுக்கு என்னுடைய பாஸ்வேர்டு எடுக்க முடியாது அல்லவா..அதுதான் என்னிடமே நேராக கேட்கிறீர்கள்.. ”

“என்னடி பெரிய பாஸ்வேர்ட் . ஊர் உலகத்தில் இல்லாத வார்த்தைகள்..  மிஞ்சிப் போனால் என்னுடைய பெயர் இல்லைன்னா என் பிள்ளையின் பெயரை போட்டு இருக்க போகிறாய். அதெல்லாம் எனக்கு ஒரு காரணமே கிடையாது ..நீ இப்படி பேசினாலே எனக்கு கோபம் தான் வருகிறது ..சாதாரண ஒரு விஷயத்தை பெரிதாக்கிஅதை கடைசியாக சண்டையில் தான் கொண்டு வந்து முடிக்க பார்க்கிறாய்.. ”

சொன்னதுமே மித்ரா என்ன நினைத்தாளோ தெரியவில்லை. ஃபோனை வேகமாக ஓங்கி தரையில் அடிக்கிறாள்.. ஓ அது தூள் தூளாகி விட்டதா..

நல்ல வேளை உடையவில்லை ..மெத்தை ஓரத்தில் பட்டு கீழே விழவும் மேல் பாகம் லேசாக நொறுங்குகிறது …அரவிந்த் தன்னையே நொந்து கொண்டு போனை கையில் எடுத்தவன் அதை அவள் பக்கத்திலேயே வைத்து விட்டு வெளியே வந்து விடுகிறான்.. வெளியே வந்தும் அவனுக்கு மனம் ஆறவில்லை .

‘ஏன் இவள் இப்படி நடந்து கொள்கிறாள்.. என்னவென்று புரியவில்லையே.. இதை பெரியவர்களிடம் போய் சொன்னால் குறிப்பாய் இந்த கயல் கிழவியிடம் பேசினால் வாய்க்கு வந்த வார்த்தைகள் எல்லாம் பேசுகிறது.. ஏற்கனவே இது நடந்த ஒரு விஷயம் தான்..,அம்மாவிடம் இதற்கு முன் பேசியதை நினைத்துப் பார்க்கிறான்..

“ அம்மா இவள் ஏம்மா இப்படி பைத்தியம் பிடித்தது மாதிரி நடந்து கொள்கிறாள். ”

அவன் எப்பொழுது இந்த கேள்வியை கேட்பான் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவரை போல உடனே பதில் கூறுகிறார் ..

“அதற்கு தான்டா நாங்கள் பெண் பார்த்து நீ தாலி கட்டி இருந்தால் எங்களுக்கு பயந்து கொண்டு கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக நடிக்கவாவது செய்வாள்.. இப்பொழுது நீயாகத்தானே பார்த்துக் கொண்டு வந்தாய்.. அதனால் நீதான் சமாளித்தாக வேண்டும் .. “இப்படி பேசி முடிப்பதற்குள்ளேயே மகன் திட்டுவதற்குள் மாறன் திட்டுகிறார் ..

“ஏன்டி அந்த பெண் நல்ல பிள்ளையா தானே இருக்கு.. உன்ன மாதிரி கிடையாது.. செடிகள் கிட்ட எல்லாம் எவ்வளவு பிரியமாக இருக்கு .அது மாதிரி இருக்கிறவங்க எல்லாருமே மதர் தெரசா மாதிரி இளகிய, கருணை மனம் கொண்டவங்களா தான் இருப்பாங்க..” உடனே கயல் உக்கும் என கழுத்தை நொடித்துக் கொள்கிறார்..

“ஆமா இவருக்கு செடிக்கு தண்ணி ஊத்திட்டா போதும் ..பெரிய எலிசபெத்  மகாராணி பட்டமே கொடுத்து விடுவாரு.. இங்க பாருடா நீ உன் பொண்டாட்டி உன் குடும்பத்தை பாரு.. நான் என் குடும்பத்தை பார்க்கிறேன். தேவையில்லாம இங்க வந்து பேசி எங்க இரண்டு பேருக்கும் பிரிவினை உண்டு பண்ணிடாத .. ”

கயல் இப்படி சொல்கிறாரே தவிர மருமகளிடம்  பிரியமாகத்தான் இருக்கிறார் ..மருமகள் தங்களிடம் கணவன் மனைவிக்கிடையே உள்ள ஊடல் பிரச்சனையை கொண்டு வந்தால் தவறாக நினைத்துக் கொள்வாள் என்ற காரணத்தினால் மகனை வெட்டி விடுகிறார் ..

அது புரியாமல் அரவிந்த் குமுறுகிறான்..”இங்க பாரு கயலு கிழவி.. உனக்கு அவ்வளவு தான்.. இனிமே உன்கிட்ட வந்து நான் பேசினேனா என்னை நான் போட்டு இருக்கிற செருப்பாலேயே அடி .. “

அதைக் கூட அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . “என்னடா இவ்வளவு நாளா கிழவி என்று மட்டும்தான் சொல்லிக் கொண்டிருந்த .. இப்பொழுது பெயரும் சொல்ல ஆரம்பித்து விட்டாயா.. உனக்கு அவ்வளவு திமிரா ..நீ சொன்னாலும் சொல்லாம விட்டாலும் இன்னொரு முறை என்னுடைய பெயரை சொன்ன .நான் போட்டு இருக்கிற செருப்பால உன்னை அடி அடின்னு அடிக்கிறேன் பாரு..”

“என்னடா உன் மனசுல நினைச்சுகிட்டு இருக்கே.. தேவையில்லாம அந்த பொண்ணு கிட்ட ஏதாவது பேச வேண்டியது ..அது கத்துதுன்னு வந்து சொல்ல வேண்டியது .. இதே வேலையா போச்சு..அதுவே தூக்கம் இல்லாமல் இரவெல்லாம் குட்டி பயலை பார்த்துக் கொள்ளுது .. பேரன் அழுதா உடனே பால் கொடுக்குது.. எவ்வளவு பொறுப்பா குழந்தையை பார்த்துக்குது தெரியுமா என் மருமகள்.. ”

“தூக்கம் இல்லன்னா எப்படி இருக்கும் .. பைத்தியம் புடிச்ச மாதிரி தான் இருக்கும் .. ஒரு நாள் நீ கண் விழித்து பாரேன் ..அப்பதான் உனக்கு தெரியும்.. ” இதை சொன்னதும் தான் அவனுக்கே தெரிகிறது ..

“குழந்தையை வளர்ப்பதற்குள் பெண்கள் அத்தனை கஷ்டப்படுவார்களா.., என்று..

ஆனாலும் முந்திரிக் கொட்டை தனமாய் அவரிடம் பேசி ஏதாவது பிரச்சனை தான் ஆகி விடுகிறது.. இப்போது அம்மாவிடம் கேட்டால் சரி வராது என யோசித்தவன்  கூகுள் தாத்தாவிடம் போய் கேட்போம் என்று அவரிடம் கேட்கிறான் ..அவரோ படம் போட்டு தெளிவாய் விளக்கி வைக்கிறார்..

இதன் பெயர் ( Mood Swing) மனநிலை ஊசலாட்டம் .. இது மாதிரி இருந்தால் அவர்கள் திடீரென சிரிப்பார்கள்.. திடீரென அழுவார்கள் .. முறையான உணவு முறை, உடற்பயிற்சி , போதுமான தூக்கம், யோகா, தியானம் என நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல்.. என்று மனநிலையின் மாறுபாடுகளை மேப்பெல்லாம் போட்டு காட்டுகிறார் ..அதை பார்த்ததும் தான் அவன் புரிந்து கொள்கிறான் ..

  அம்மாவோ, “தூக்கம் இல்லாமல்  சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ளாமல் பொழுதன்னைக்கும் பால் கொடுப்பதால் இப்படி இருக்காடா அந்த பொண்ணு.. அதுதான் ஒரு வயது ஆகி விட்டதே.. இன்னும் என்ன தாய்ப்பால் மட்டும் வேண்டி கிடக்கிறது.. ஏதாவது ஊட்ட சொல்ல வேண்டியதுதானேடா .. நான் அப்படியும் மித்ராவிடம் கேட்டுப் பார்த்தேன்.. அவன் சாப்பாடைப் பார்த்தாலே குமட்டுகிறான் என்கிறாள்.. ”

“இல்ல நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.அவனுக்கு பசி எடுக்க விடாமல் எப்பொழுதுமே பாலையே கொடுத்துக் கொண்டு இருந்தால் பிறகு எப்படி தான் அவன் சாப்பிடுவான்.. ஏதோ ஒரு  நேரம் கணக்கு வைத்து பால் கொடுத்து விட்டு பிறகு பசிக்க விட்டு அதன் பிறகு சாப்பாடு கொடுத்தால் ஆசையாய் வாங்கிக் கொள்வான்.. இப்போது ஒன்றும் தெரியாது .. இன்னும் வயது கூடியதும் தான் தெரியப் போகிறது.. அப்பொழுது அவன் நடை பால் ருசி வேறு கண்டு விடுவான் . அப்ப இவள் கஷ்டப்பட போகிறாள் பாரு..” குழந்தை வளர்த்த அனுபவ முறையில் கயல் சொல்கிறார்.

இதையெல்லாம் யோசிக்கவும் குழந்தைக்காக கஷ்டப்படும் மனைவியை எண்ணி மனம் உருகுகிறது.. ‘தேவையில்லாமல்  வம்பு செய்து விட்டேன் ..,திரும்பவும் உள்ளே செல்கிறான்..

மித்ரா எப்பொழுதும் சண்டை போட்டால் அந்த நேரம் மட்டும்தான் மனதில் வைத்திருப்பாள். அதன் பிறகு நடந்ததையே மறந்து போய்  மகனை கொஞ்சிக் கொண்டு இருப்பாள்.. அவனும் அதோடு சேர்ந்து கொள்வான்.. இன்று என்னவோ தெரியவில்லை.. இப்போது வரையுமே அழுது கொண்டே இருக்கிறாள்..

பதறிக் கொண்டு உள்ளே சென்றவன் “என்னடி மித்ரா என் செல்லம்ல.. ஏன் இப்படி அழுகிற .. நம்ம எப்போதும் சண்டை போட்டுக் கொள்வது தானே. புதுசா சண்டை போட்ட மாதிரி அழற.. என்ன ஆச்சுடி ,சாரிடாம்மா இனிமேல் உன்கிட்ட உன் மனம் கஷ்டப் படற மாதிரி எதுவுமே பேச மாட்டேன் ..என்னை மன்னித்து விடு ..நான் தெரியாமல்  பேசி விட்டேன்டி.. இந்த செல்லே வேண்டாம். இதை தூக்கி ஓரம் கட்டு.. “சிம்மை மட்டும் கழட்டி அவள் கையில் கொடுக்கிறான்..

வழக்கம் போல அவள் உடைந்த செல்களை போட்டு வைத்திருக்கும் கபோர்ட்டில் போட்டு விடுகிறான்..

உடைந்து செல்லுக்கு திரும்பவும் பிரச்சனை ஆரம்பித்தால் சரிவராது என்று மித்ராவும் அமைதியாகி விடுகிறாள் ..அவளுக்குமே இந்த   செல்லின் மீது கொஞ்சம் கோபம் தான்..

‘ இந்த செல்லை எந்த நேரத்தில் வாங்கி கொடுத்தாரோ .அதிலிருந்து எந்நேரமும் சண்டைதான்.., என்று எண்ணிக் கொள்கிறாள்..

சண்டை செல்லினாலா, இல்லை வேற காரணத்தினாலா என்று அவளுக்கு புரியவில்லை. கொஞ்ச நேரத்திலேயே, “இங்க பாருடி தம்பி தூங்கிக் கொண்டு இருக்கான். சீக்கிரமா கிளம்பு நம்ம வெளியே போவோம். ” என்கிறான்..

அதற்கும் சண்டைதான் வருகிறது..

தொடரும்.. 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page