மன்னன் தந்த மாலை
அத்தியாயம் 10
அங்கே மாப்பிள்ளையாய் இருந்தவனைப் பார்க்கப் பார்க்க அமுதாவின் உள்ளமோ துடியாய் துடித்தது.
கடவுளே! இது என்ன கொடுமை? எந்த ஊர்ல இந்தக் கொடுமை நடக்கும்? யாராவது பெத்த புள்ளைக்கு இப்படியொரு மாப்பிள்ளையைப் பார்ப்பாங்களா? கிளியை வளர்த்துப் பூனை கையில குடுக்கற மாறிப் பார்க்கவே இத்தனை மோசமானவனா என் தங்கத்துக்கு மாப்பிள்ளையா பாத்துருக்காங்க… இதை யாருமே கேட்கமாட்டாங்களா?’ என்று நினைத்தபடி கற்பகநாயகியையும், மாணிக்கத்தையும் பார்த்தார்.
ஆனால் அவர்களோ யாருக்கோ வந்த விருந்தென அமைதியாக இருக்க அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் வேகமாய் சமையல் கட்டிற்குச் சென்றுவிட்டார்.
அவருக்குத் தான் அந்தத் தவிப்பே ஒழிய பெண்ணவளோ யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் பொம்மையாய் அங்கே அமர்ந்திருந்தவளின் பார்வை எங்கோ வெறித்தபடி இருந்தது. ஊர் மக்கள் முக்கியமான சிலரை அழைத்திருந்தனர். அவர்களுக்கும் அருந்ததியின் வாழ்க்கையை நினைத்துக் கவலை தான் தோன்றியது. ஆனால் யாராலும் வெளியே சொல்ல முடியவில்லை. சொன்னால் கேட்கும் ரகமா சகுந்தலா?
அங்கே பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தது. அந்த மாப்பிள்ளையாகப்பட்டவனின் பார்வையோ உற்சவ சிலையாய் அமர்ந்திருந்த அருந்ததியின் மேல் தான் இருந்தது.
“அப்புறம் சம்பந்தி தட்டை மாத்திக்கலாமா?” என்றாள் மாப்பிள்ளையின் அக்கா.
“அதுக்கு என்ன சம்பந்தி தட்டை மாத்திக்க வேண்டியது தான்… ஏங்க அத்தை, நீங்களே தட்டை வாங்குங்களேன்.” என்றாள் சகுந்தலா சிரித்தபடி.
“இல்ல சகுந்தலா, நீயும் மாணிக்கமுமே வாங்குங்க…” என்றபடி விதியை நினைத்து நொந்து கொண்டு அமர்ந்திருந்தார்.
தன் கணவனைப் பார்வையாலேயே அழைக்க அதைப் புரிந்தவன் எதுவும் சொல்லாமல் அவளருகில் சென்று நின்று மாப்பிள்ளையின் அக்கா கொடுத்த தட்டை வாங்க முற்படும்போது அதுவரை அமைதியாய் அமர்ந்திருந்த அருந்ததியோ வாயில் நுரை தள்ள அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
“அய்யோ… அம்மா அருந்ததி…” என்ற பல குரல்கள் ஒலிக்க யாரும் அவளருகில் செல்லத்தான் இல்லை. கற்பகநாயகிக்கோ ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே விளங்கவில்லை.
இந்தக் களேபரங்களைக் கேட்டு உள்ளிருந்து வந்த அமுதாவோ அங்கே மயங்கியிருந்த அருந்ததியை பார்த்து விட்டு, “என் தங்கமே! அரும்மா, என்னடா ஆச்சு உனக்கு?” என்றபடியே வேகமாய் ஓடிவந்து அவளை மடிதாங்கிக் கொண்டாள்.
அதே நேரம் அந்த வீட்டில் திபுதிபுவெனக் காவல் நிலையத்து ஆட்கள் உள்ளே வர, அனைவருமே அதிர்ந்திருக்க, ஒருவன் மட்டும் அங்கிருந்து சரியாக நழுவப் பார்க்க அவனை மட்டும் சரியாகப் பிடித்தார்கள் காவலர்கள்.
அவன் வேறு யாருமில்லை இத்தனை நேரம் மாப்பிள்ளையாய் ஜம்பமாய் அமர்ந்திருந்தவன் தான்.
அனைவரும் அதிர்ச்சியில் இருக்க அதே நேரம் அழுத்தமான காலடி ஓசையுடன் உள்ளே வந்தவன்,
“இவனை அரெஸ்ட் பண்ணிக் கூட்டிட்டுப் போங்க… நான் வந்து மத்த ஃபார்மாலிட்டிஸை பாத்துக்குறேன்.” என்று தன் ஆட்களுக்கு உத்தரவிட்டவன் பார்வையில் வாடி வதங்கிப் போய் மயங்கியிருந்த அருந்ததியை கண்டவன்,
“என்னாச்சு இந்தப் பொண்ணுக்கு?” என்றான் படபடப்புடன்.
அவனைக் கண்ட அமுதாவோ, “சார், என் தங்கத்தைக் காப்பாத்துங்களேன். அய்யோ! இப்படி பேச்சு மூச்சில்லாம கிடக்கிறாளே?” என்றாள் கண்களில் வழியும் கண்ணீருடன்.
“ஒன்னும் கவலைப்படாதீங்கம்மா, நாம ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிடலாம்.” என்றவன் அவளைத் தன் கைகளில் தூக்க அவனின் முன்னே வந்து நின்ற துருவனோ,
“மிஸ்டர், நீங்கப் பாட்டுக்கு வந்து எங்க வீட்ல அதிகாரம் பண்ணிட்டு இருக்கீங்க… இவ என்னோட தங்கச்சி, இவளை எங்களுக்குப் பாத்துக்க தெரியும். இப்போ எதுக்கு எங்க வீட்டு மாப்பிள்ளையை அரெஸ்ட் பண்ணீங்க?” என்றான் தெனாவெட்டாய்.
தன் கைகளில் அரை உயிராய் இருந்தவளை ஒரு முறை பார்த்தவன் தன் ஆட்களில் ஒருவரை அழைக்க வேகமாய் அவனிடம் வந்தவரிடம் தன் கையில் இருந்தவளை ஒப்படைத்தவன்,
“சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போங்க…” என்று உத்தரவிட்டவன் தன் பின்னே திரும்பி அழுது கொண்டிருந்த அமுதாவைப் பார்த்தவன்,
“நீங்களும் கூடப் போங்க…” என்றான் அழுத்தமாய்.
அவனின் உத்தரவில் வேகமாய் அருந்ததியை அழைத்துச் சென்றவரின் பின்னே அழுது கொண்டே வேகமாய் சென்றாள் அமுதா.
அவர்கள் சென்றுவிட்டார்களா? என்று ஒருமுறை பார்த்து உறுதி செய்தவன் தன் முன்னே நின்றவனைக் கோபத்துடன் பார்த்து,
“என்ன கேட்ட, திரும்ப ஒருமுறை கேளு…” என்றான் காதைக் குடைந்தபடி.
“நீ யாருடா என் வீட்டுல வந்து நடக்குற விசேஷத்தைத் தடுத்து நிறுத்…” என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் வந்தவன்.
“அய்யோ! என் புள்ளை…” என்று அழுதுகொண்டே வந்த சகுந்தலாவை ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் தன் முன்னே இருந்தவனை திரும்பிப் பார்க்க அவனோ வாங்கிய ஒரு அறையில் அரை மயக்க நிலைக்குச் சென்றிருந்தான்.
“என்னைப் பாத்தா உன் வீட்டு வேலைக்காரன் மாறித் தெரியுதா என்ன? நல்லாப் பாரு நான் யாரு?” என்றான் அவனின் முடியைப் பற்றியபடி.
“சார்… சார்… சாரி சார்… மன்னிச்சிருங்க…” என்றான் படபடப்புடன்.
“இப்போ பாரு, என்னோட பேரு என்ன?” என்றபடி தன் சட்டையில் இருந்த பேட்ஜை எடுத்துக் காமிக்க அதில் பிரவீன் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலிஸ் என்றிருந்தது.
“பிரவீன் சார்…” என்ற துருவனின் வார்த்தையில் கற்பகநாயகியின் விழிகளில் அதிர்ச்சி தான் வந்து போனது.
அதைக் கண்டு கொண்டாலும் கூட அவரைத் திரும்பியும் பார்க்காதவன் துருவனிடம் திரும்பி,
“இதோ பாரு இனி உன் வாய் சவடாலை என்கிட்ட வச்சிக்கிட்ட நீ ஆயுளுக்கும் வெளியே வர முடியாதபடி பண்ணிடுவேன். ஆமா நீ அந்தப் பொண்ணுக்கு என்ன வேணும்?” என்றான் கேள்வியாய்.
“அண்ணன் சார்…” என்றான் பயத்துடன்.
“ஓஹோ! அண்ணனா நீ? ஆமா அந்தத் தெருப் பொறுக்கித்தான் உன் தங்கச்சிக்கு பாத்த மாப்பிள்ளையா? ஏன்டா பொறம்போக்கு உன் வீட்டுப் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குற அப்படின்னா அவனைப் பத்தி விசாரிக்க மாட்டீங்களாடா? எவன் வந்தாலும் குடுத்துருவியா? இத்தனை பெரியவங்க இருக்கீங்க அவனைப் பாக்கும் போதே தெரியலையா அவன் ஒன்னா நம்பர் பொறுக்கின்னு!
அவன் இதுவரைக்கும் அஞ்சு பொண்ணுங்களை கல்யாணம் பண்ணி விபச்சார விடுதியில வித்திருக்கான். அவனோட வயசு கூடவா இங்க இருக்குற யாருக்கும் தெரியலை?
ஏம்மா! நீங்கதானே இந்தக் குடும்பத்துக்குப் பெரியவங்க? அப்போ எப்படி இந்த மாறி மாப்பிள்ளையை நீங்க ஏத்துக்கீட்டீங்க? உங்களுக்கு எல்லாம் கொஞ்சமும் மனசாட்சி இல்லையா என்ன?” என்றான் ஆத்திரமாய்.
அதைக்கேட்ட கற்பகநாயகியின் சிரமோ பூமியைத் தழுவ அதைக் கண்டு வெற்றுச் சிரிப்பு சிரித்தவன்,
எவ்வளவு சுயநலம் இல்ல! ஆனா திரும்ப அந்தப் பொண்ணைத் தேடி யாரும் வந்துராதீங்க. உங்க கூட அவ இருக்குறதுக்கு அவ அனாதையா இருந்துரலாம். திரும்ப நான் வருவேன்.” என்று அனைவரையும் பார்த்துக் கூறியவன் கற்பகநாயகியிடம் சென்று அவரின் அருகே குனிந்தவன்,
“நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுதா? நீங்க விதைச்ச விதையை நீங்க அறுவடை பண்ண வேண்டாம்? இனி ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நரகம் தான். எந்தப் பேருக்காகவும் புகழுக்காகவும் நீங்கச் செய்யக் கூடாததை எல்லாம் செஞ்சீங்களோ இப்போ இருந்து அந்த மரியாதை போக ஆரம்பிச்சிடுச்சு… காத்திருங்க வருவேன் திரும்பவும் இல்ல வருவோம் திரும்பவும்…” என்று கூறியவன் கம்பீரமாய் அங்கிருந்து செல்ல அதைப் பார்த்தவரின் கண்கள் மெல்லக் கலங்கியது.
அதற்குள்ளாகவே வீட்டிலிருந்த அனைவரும் சென்றுவிட சகுந்தலாவோ கற்பகநாயகியின் அருகே வந்து,
“அத்தை…” என்றழைக்க இதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த கோபம் ஆக்ரோஷமாய் மாறிச் சகுந்தலாவை அறைந்தார்.
“அத்தை…” என்று அதிர்ச்சி பொங்க அவரைப் பார்க்க,
“ஏய்! உஷ்ஷ்… உன்கிட்ட நான் என்ன சொன்னேன். ஆனா நீ என்ன பண்ணி வச்சிருக்க? உனக்குத் தெரியும் இல்லை. எனக்கு இந்தக் குடும்பத்தோட கௌரவம் தான் முக்கியம்னு… ஆனா நீ இன்னைக்கு பண்ணி வச்சிருக்க வேலைக்கு இத்தனை நாள் நான் கட்டிக் காப்பாத்திட்டு வந்த என் கௌரவத்தைக் குழி தோண்டிப் புதைச்சிட்டியே…” என்று கத்தியவர் தன் மகனையும் பேரனையும் முறைத்துக் கொண்டு சென்றார்.
நல்லவேளை பரிமளத்தின் குடும்பத்தில் யாரும் அங்கே வரவில்லை. அதுவரை நிம்மதி என்று கால்கள் நடுங்கத் தன் அறைக்குச் சென்றார். இத்தனை நாள் காப்பாற்றப்பட்ட உண்மை உடையும் நேரம் வந்தது அறிந்ததும் அவரின் முகத்தில் வேதனையின் சாயல் தான்.
இனி என்ன நடந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேணுமோ?
இங்கே அந்தத் தனியார் மருத்துவமனையின் வராண்டாவில் அழுதபடி அமர்ந்திருந்தார் அமுதா.
சற்று நேரத்திற்கு முன்னர் மருத்துவர் சொன்ன செய்தியில் அவளின் உலகமே நிலைகுலைந்து போய்க் காணப்பட்டது.
கடவுளே! இந்தப் பெண் இப்படியொரு முடிவு எடுத்துவிட்டாளே? இந்தக் கல்யாணத்தை நிறுத்தத் தன் உயிரைக் காவு கொடுக்க நினைத்தவளின் மேல் கோபம் வந்தாலும் கூட அவள் நல்லபடியாக வர வேண்டுமே என்று தான் அவரின் உள்ளம் ஏங்கியபடி கடவுளிடம் அவளை மீட்டுத் தரச்சொல்லி வேண்டியது.
அதே நேரம் அங்கே பதற்றத்துடன் பிரவீனும் அங்கே வந்தான்.
“அம்மா, என்னாச்சு அந்தப் பொண்ணுக்கு? டாக்டர் எதாவது சொன்னாரா?” என்றான் படபடப்பாக.
“தம்பி, என் அரு அரளி விதையை அரைச்சுக் குடிச்சிட்டாளாம் தம்பி. இன்னும் எதுவும் சொல்லலைப்பா… எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இந்தப் பொண்ணோட வாழ்க்கையில எந்தச் சந்தோஷமும் நிலைக்காதா? கடவுளே! அந்தக் கடவுளுக்கும் கண் இல்லையோ?” என்று அழுது புலம்பியபடி இருந்தவரை மெல்லத் தோளில் தட்டிச் சமாதானம் செய்தவன்,
“ஒன்னும் இல்லைம்மா சரி ஆகிடும். நீங்க முதல்ல பதட்டப்படாதீங்க…” என்று அவருக்கு ஆறுதல் சொன்னவனின் அலைபேசி ஒலிக்க யார் என்று பார்த்தவன் அதைக் கட் செய்துவிட்டு அமுதாவை அங்கிருந்த சேரில் அமர வைத்தவன் தன்னை அழைத்த அலைபேசி எண்ணுக்கு,
‘கொஞ்ச நேரம் கழிச்சி கூப்பிடறேன்.’ என்று ஒரு குறுஞ்செய்தியை மட்டும் தட்டிவிட்டு வெளியே மருத்துவர் வரும் நொடிக்காகக் காத்திருந்தான்.
தன் அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியையே பார்த்தவனின் நெஞ்சமெங்கும் ஏதோ படபடப்புடன் பரிதவிப்பு உண்டானது.
அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனின் அலைபேசிக்கு அழைப்பு வர அதை எடுத்துக் காதுக்குப் பொருத்தியவனுக்குள் வந்த செய்தியில் அவனின் அலைபேசி கீழே விழுந்து சில்லு சில்லாய் சிதறிப் போயின.
யார் அவன்?
கொஞ்சம் கொஞ்சமாய் என்னோடு கலந்திட
உயிரை உருக்கும் ஓசையாய் உன்னுள்ளே
பூத்திட்ட பூவானேன் பூவையே…
என் உள்ளமும் உன் அருகாமைக்கு ஏங்க
அகமும் புறமும் என் நாற்கரவியலாய் நனிந்திட்ட…
பாவை நீயடி பெண்ணே…
அடுத்த பாகத்தில் பாக்கலாம் செல்லம்ஸ்.
மாலை வரும்…✍️
