அத்தியாயம் 10
கௌரி தன்னுடன் தொலைபேசியில் பேசியவன் சொன்ன இடத்திற்கு பத்து நிமிடத்துக்கு முன்பே வந்துவிட்டான். அது ஒரு பேருந்து நிலையம். அங்கு வெகு சிலரே நின்றிருந்தனர். கௌரி அங்கே சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டு நிற்க, அவனிடம் ஒருவன் வந்து நீங்க தானே கௌரி? நான் துப்பறியும் நிறுவனத்தில் இருந்து வருகிறேன் . உங்களை எங்க பாஸ் வர்மா அவர் இடத்திற்க்கு கூட்டிட்டு வரச் சொன்னார் என்று கூறி அவனுடைய அலைபேசியில் இருந்து அவனுடைய பாஸ் வர்மாவுக்கு அழைத்து அவனிடத்தில் கொடுத்தான். கௌரி ஹலோ சொன்னதும், அந்த பக்கத்தில் வர்மா, நான் அனுப்பிய ஆள் கூட என் இடத்திற்கு வந்துருங்க.அங்கு உங்களுக்கு எல்லாம் விளக்கமா சொல்றேன் என்று சொல்லி வைத்துவிட , கௌரி தன் பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு அவனுடன் காரில் சென்றான். சிட்டியை விட்டு 30 கிலோமீட்டர் தூரத்தில் கௌரியை அழைத்து சென்றான். அங்கு நிறைய மரங்கள் அடர்ந்து இருந்தன. அருகில் சிறு ஓடை போன்ற நீரூற்று. அதில் வாத்துகள் மிதந்துக் கொண்டிருந்தன. அக்காட்சிகள் பார்க்கவே ரம்யமாக இருந்தன அதன் அருகிலேயே சிறிய ஒட்டு வீடு. அந்த வீடும் பாக்க அழகாகவே இருந்தது. அங்கே காரை நிறுத்தி இருவரும் இறங்கி கொண்டனர். அங்கு வர்மா வாசலிலேயே அவர்களுக்காக நின்றுக்கொண்டிருந்தார். கௌரியை பார்த்ததும் வாங்க கௌரி! எப்படி இருக்கிறீங்க? என்று நலம் விசாரித்துவிட்டு, பொதுவாக என்கிட்ட வர வாடிக்கையாளர்களை என் அலுவலகத்திலேயே வச்சி அவங்க கேட்ட தகவல்களை கொடுத்துடுவேன், இல்லனா என் ஆட்கள் மூலமா கொடுத்து அனுப்பிவிடுவேன். ஆனா இதுல எம்.எல்.ஏ சதாசிவம் சம்பந்தப்பட்டு இருக்கிறதாலே உங்களை இங்கு அழைத்து வரச் சொன்னேன். இதுவும் என் வீடுதான். அந்த பணத்தை யாரு எடுத்தானு கண்டுபிடிச்சிட்டேன். உங்க அண்ணன் கூட வேலை செய்கிற ஸ்ரீனிவாசன் தான் இதை செய்திருக்கான். அவனுடைய பிள்ளைக்கு இருதய ஆபரேஷன் செய்ய பணம் தேவைப்பட்டிருக்கு. இதை தெரிஞ்சிகிட்ட அந்த எம்.எல்.ஏ உன்னை பழி வாங்கறதுக்காக அவனுக்கு நிறைய பணம் கொடுக்கிறேனு ஆசையை காட்டி அவன் மூலமா அந்த பணத்தை எடுக்க வச்சியிருக்கான். அந்த எம்.எல்.ஏ விக்கு லாயர் பத்மநாபன் பண விஷயத்தில் ரொம்ப கண்டிப்பானவர்னு தெரியும். பணம் காணாம போன அவர் கண்டிப்பா போலீஸ்ல புகார் கொடுப்பார் அதன் மூலமா விக்னேஷ் ஜெயிலுக்கு போயிடுவான் அவன் வேலையும் போயிடும்னு சரியாய் கணக்கு போட்டு காய் நகர்த்தி இருக்கான். இப்போ தேர்தல் நெருங்கறதாலே அவனாலே நேரிடையா விக்னேஷ்கிட்ட மோத முடியலே. அதனாலதான் அவன் விக்னேஷ் மீது திருட்டு பட்டம் போட பத்மநாபன் அலுவலகத்திலேயே ஆளை புடிச்சி அவன் மூலமா பணத்தை எடுத்து, விக்னேஷ் இரண்டு நாள் அலுவலகம் போக முடியாதபடி அவனுக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்திருக்கான் என்று வர்மா பேச பேச கௌரிக்கு ரத்தம் கொதித்தது. கண்கள் சிவந்து போயிருந்தது. கொஞ்ச நேரம் விட்டிருந்தா என் அண்ணன் உயிர்க்கே ஆபத்து ஆகி இருக்கும். இந்த எம்.எல்.ஏ வை சும்மா விடக்கூடாது, ஏதாவது செய்யணும் என்று கௌரி கொந்தளிக்க, அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் கௌரி. ஸ்ரீனிவாசன் வெறும் கருவி தான். நாம் அந்த சதாசிவத்தை தான் குறி வச்சி அவனை போல மறைந்திருந்து அவனை அடிக்கணும். ஆனால் அதுக்கு கொஞ்சம் பணம் செலவாகும் என்று கூற, உடனே கௌரி பணம் பற்றி கவலையில்லை. உங்களுக்கு எவ்வளவு வேணுமோ வாங்கிக்கோங்க என்று கூற அப்போ சரி கௌரி, மத்ததை நான் பார்த்துகிறேன். ஸ்ரீனிவாசன் கிட்ட இருந்து அவன் யாருக்காக பணம் எடுத்தான், எப்படி எடுத்தான்? போன்ற விவரங்களை என் அலைபேசியில் காணொளி மூலம் பதிவு செய்து இருக்கேன். அத உங்களுக்கு அனுப்பறேன். அதை வச்சி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை செயுங்க என்று கூற, ரொம்ப நன்றி வர்மா, நீங்க இப்போ எனக்கு செய்த உதவியை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன் சார் என்று கூற, அட என்னப்பா நீ! பணத்தை வாங்கிக்கொண்டு தானே செய்யறேன், இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம் இது தான் என் வேலையே அவ்வளவு தான் என்று கூறி கௌரியை அவனுடைய பைக் நிறுத்துமிடத்திற்கே தன்னுடைய காரிலேயே அனுப்பி வைத்தார்.
கௌரி தன் பைக்கை எடுத்துக் கொண்டு லாயர் பத்மநாபன் அலுவலகத்திற்கு விரைந்து சென்றான். அதிர்ஷடவசமாக அங்கு பத்மநாபன் அலுவலகத்தில் தான் இருந்தார். அவனை அவர் இதற்கு முன் பார்த்ததில்லை ஆதலால் பார்த்ததும் யார் நீங்க? என்ன கேஸ் விஷயமா வந்து இருக்கீங்க? என்று கேட்க கௌரி, நான் விக்னேஷின் தம்பி என்று கூறியதும் அவர் முகம் மாற, அந்த திருடனின் தம்பியா நீ? இங்கே எதுக்கு வந்தே? உங்க அண்ணன்னுக்கு வக்காலத்து வாங்க வந்தியா? உன் அண்ணனை ஜெயிலுக்கு அனுப்பாம விடமாட்டேன். இங்கிருந்து போய்டு, இல்லன்னா மரியாதை இருக்காது என்று அவர் கத்த தொடங்க, கௌரி அவரிடம் வந்து ரிலாக்ஸ் சார், இந்த வயசில இப்படி கத்தினா உடம்புக்கு ஆகாது. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையாய் கேளுங்க. என் அண்ணன் உங்களை தெய்வத்துக்கு சமமா மனசுல நினைச்சிட்டுருக்கான் அவன் போய் உங்க பணத்தை திருடுவானா சார்? இவ்வளவு நாள் அவன் மேல வச்சியிருந்த நம்பிக்கை எல்லாம் எங்கே போச்சு சார்? இவ்வளவு அனுபவசாலியா இருக்கிற நீங்க இப்படி தான் தப்பான முடிவு எடுப்பீங்களா? நீங்க அவனை திருடன்னு சொன்னதும் அவன் எப்படி ஒடிஞ்சி போய்ட்டான்னு தெரியுமா உங்களுக்கு? அதுமட்டும் இல்லாமல் அந்த எம்.எல்.ஏ வாலே அவன் செத்து பிழைத்து வந்திருக்கான் சார். இந்த காணொளியை பாருங்க உங்களுக்கு எல்லா உண்மையும் புரியும் என்று அவன் வர்மாவிடம் வாங்கிய காணொளியை காட்ட அதை பார்த்த பத்மநாபன் திகைத்து விட்டார். ஸ்ரீநிவாஸனா திருடியது! இது உண்மைதானா என்று அவர் நம்பாமல் கேட்க, ஆமா சார் என்று கௌரி கூற எம்.எல்.ஏ. சதாசிவத்தை பற்றி எனக்கு நல்லா தெரியும். ஆனா அவன் என்கிட்டயே இப்படி நடந்துக்குவான்னு நான் எதிர்பார்க்கல. உன் அண்ணன் மேல போட்ட கேஸை நான் வாபஸ் வாங்கிக்கிறேன்ப்பா. என்னுடைய சங்கத்திலும் பேசி அவனை மறுபடியும் வக்கீலா வாதாட செய்ய என்னால் முடியும். நான் கண்டிப்பா அதை செய்யிறேன்ப்பா. விக்னேஷை பற்றி புரிஞ்சிக்காம நான் மிகப் பெரிய தவறு செய்ஞ்சுட்டேன். முடிஞ்சா என்னை மன்னிச்சிட சொல்லு. நீ அவனை நாளைக்கு இங்கே வரச் சொல்லு. நான் அவன்கிட்ட நேரிடையாகவே மன்னிப்பு கேக்கிறேன். அவன் மறுபடியும் என் அலுவகத்திலேயே வேலை செய்யட்டும் என்று கூறியதும் கௌரிக்கு பெரும் பாரமே மனதிலிருந்து இறங்கியது போல நிம்மதி ஏற்பட்டது. ரொம்ப நன்றி சார். நான் விக்னேஷிடம் சொல்றேன் என்று மகிழ்ச்சியாக சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். லாயர் பத்மநாபனுக்கு குற்ற உணர்வாக இருந்தது. நல்ல பையனை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். நாளைக்கு அவன் வந்தா என்னுடைய கௌரவத்தை விட்டு மன்னிப்பு கேட்கணும் என்று நினைத்துக் கொண்டார்.
வீட்டிற்கு வந்ததும் கௌரி விஷயத்தை தன் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்ல, அனைவரும் சந்தோசம் அடைந்தனர். கவிதா, என் பிள்ளை மேலிருந்த திருட்டு பழி இன்னையோட முடிந்தது. விக்னேஷ் இனிமேல் உனக்கு நல்ல காலம் தான். இனி நீ வீட்டிலேயே முடங்கி கிடைக்காம வேலைக்கு போகலாம். நீ கோர்ட்க்கு போய் வழக்கறிஞரா வாதாடலாம் என்று சந்தோஷுடன் கூற விக்னேஷ் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது. அவன் தன் தம்பியை பார்த்து உன்னை நான் கட்டிபிடிச்சிக்கலாமா?என்று கேட்க, என்ன அண்ணா கேள்வி இது?என்று கௌரியே சென்று தன் அண்ணனை இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டான் இருவரின் விழியும் கலங்கி இருந்தது. ரொம்ப நன்றி கௌரி, உனக்காக நான் அண்ணனான இருந்தும் ஒன்னுமே செய்ததில்லை. ஏன் உங்கிட்ட பாசமாக கூட ஒரு வார்த்தை பேசியதில்லை. ஆனா நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கே தெரியுமா? என் மேலே இருக்கிற களங்கத்தை துடைச்சியிருக்கே. இப்படிப்பட்ட உன்னை இவ்வளவு நாள் புரிஞ்சிக்காம போய்ட்டேனு நினைக்கும் போது எனக்கு வெட்கமா இருக்கு. நான் தான் பெரியவன், எனக்கு தான் எல்லாம் முதலில் கிடைக்கணும் என்ற கர்வம், திமிர் என்னை உங்கிட்ட நெருங்கவிடாம செய்திடுச்சி.” தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்று பெரியவர்கள் சரியாகத்தான் சொல்லி இருக்காங்க என்று மீண்டும் அவனை இறுக்கமாக அனைத்துக் கொண்டான்.
அண்ணா, நாளையிலிருந்து உன் சீனியர் பத்மநாபன் உன்னை அவரது அலுவலகத்துக்கு வேலைக்கு வரச் சொல்லிட்டார். உனக்கு சந்தோஷம் தானே என்று கேட்க, இல்லை கௌரி இனிமேல் நான் அங்கு வேலைக்கு போறதா இல்லை. நான் அவர் மேலே வச்சிருந்த நம்பிக்கையும் அவர் என் மேல் வச்சியிருந்த நம்பிக்கையும் மதிப்பே இல்லாம போய்டிச்சி. என் மேல தப்பு இல்லனு நீ நிரூபிச்சி இருந்தாலும் அங்கு வேலை செய்யிற யாராவது ஒருத்தர் என்னை திருடன் என்ற கண்ணோடத்தில பார்த்தாலும் கூட என்னாலே தாங்க முடியாது. நான் ரொம்ப மதிக்கிற என் சீனியர்ரே என்னை நம்பாத போது வேறு யார் என்னை நம்பி கேஸ் கொடுப்பாங்க சொல்லு. அதோட எனக்கும் இந்த தொழில் இனிமேல் செய்ய விருப்பம் இல்லை என்று கூறி முடித்திருந்தான்.
உடனே கௌரி வேறே என்ன செய்யப்போறே அண்ணா என்று கேட்க, யோசிக்கணும். இப்போதைக்கு கொஞ்ச நாள் உங்ககூட நேரம் செலவிட விரும்புகிறேன். நான் ரொம்ப வருஷமா அம்மா, அப்பாவிடம் சரியாக பேசறதுகூட இல்லை. நான் அவங்க கூட அன்பா, சந்தோஷமா இருக்கணும். அதுக்கப்புறம் நான் என்ன பன்னேறேன்னு சொல்றேன், சரி தானே அம்மா என்று தன் அன்னையை நோக்கி கேட்க, சரிப்பா. உன் இஷ்டம் போல செய். எங்களுக்கு நீ சந்தோஷமா இருக்கணும் அவ்வளவு தான் என்று கூறி இனிப்பான சேதி கிடைச்ச இந்த நாளை இனிப்பு சாப்பிட்டு கொண்டலான எப்படி? நான் போய் எல்லாருக்கும் ஸ்வீட் செய்து எடுத்து வரேன் என்று சமையல் அறை நோக்கி ஓடினாள்.
கௌரி இவ்வளவு நாள் தன் அண்ணனுடைய வேலையில் மும்முரமாக இருந்ததால் அவனால் வர்ஷினியை பார்த்து பேச முடியவில்லை. இப்போது எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்ட நிலையில் வர்ஷினியை போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அன்று அலுவலகத்துக்கு விடுமுறையாதலால், இன்று எப்படியாவது வர்ஷினியை போய் பார்க்கவேண்டும் என்று சீக்கிரமாகவே எழுந்து குளித்து முடித்துவிட்டு கண்ணாடி முன் நின்றான். எந்த சட்டை போடலாம் என்று தன் அலமாரியை ஒரு வழி பண்ணிக்கொண்டிருந்தான். இறுதியாக வர்ஷினிக்கு ரெட் ஷேட் உள்ள நிறங்கள் பிடிக்கும் என்று எண்ணி மெரூன் நிறத்தில் சட்டையும் அதற்கு தோதுவாக சந்தன நிறத்தில் பேண்டும் அணிந்து தன் தலை ஜெல் வைத்து வாரிஅழகாக தயார் ஆகி வெளியில் வர, கவிதா அவனைப் பார்த்து என்னடா? விடுமுறை அதுவுமா இவ்வளவு சீக்கிரமா எங்கே கிளம்பிட்டே ? நான் டிபன் கூட இன்னும் செய்யலையே என்று கூற, அம்மாவுக்கு வர்ஷினியை பாக்க போறேன் சொன்னா விடமாட்டாங்க என்று நினைத்து கொண்டு அம்மா என்னுடைய பழைய நண்பர் ஒருத்தரை ரொம்ப நாள் கழித்து பார்க்க போறேன் அதான் சீக்கிரமா கிளம்பிட்டேன் என்று பாதி உண்மையும் பாதி பொய்யுமாக உரைத்தான். சரி சரி சீக்கிரமா பார்த்திட்டு மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்திரு. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று கூற அவனும் விட்டால் போதும் என்று தலையசைத்து விட்டு கிளம்பினான்.
முன்பே மித்ராவிடம் பேசி முகவரி வாங்கி வைத்திருந்தபடியால் அவனுக்கு அவளுடைய வீட்டை கண்டுபிடிக்க கஷ்டமாக இல்லை. வீட்டை அடைந்ததும் அவனுக்கு இவ்வளவு நேரமாக இல்லாத பயம் வந்து ஒட்டிக் கொண்டது . என்னை பார்த்ததும் என்ன செய்வா?அன்று மாதிரி உன்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்வாளா?சண்டை போட்டு கண்டபடி திட்டி வெளியே அனுப்பிடுவாளோ? என்று ஒரு மனம் நினைக்க இன்னோர் மனமோ நான் என்ன தப்பு செய்தேன். அவ தானே என்னை வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா . என்று கூறியது. கௌரி எதுக்கும் தயாரா இருடா! என்னவானாலும் அவ கிட்ட பேசாம போகக்கூடாது என்று நினைத்துக் கொண்டே வாசலில் வெளியே உள்ள அழைப்பு மணியை அழுத்தினான். சிறிது நேரம் கழித்து வர்ஷினியின் தந்தை கரண் வந்து கதவை திறந்தார். கொஞ்சம் உடல் மெலிந்து தலையில் அங்கும் இங்கும் சில வெள்ளை முடிகள் தென்பட்டன. முன்பு இருந்த அந்த கம்பீரம் இப்போது அவரிடம் இல்லை. சற்று தளர்வாகத்தான் காணப்பட்டார். இரண்டு மூன்று வருடத்தில் இவரிடத்தில் இத்தனை மாற்றம் வந்துவிட்டதா? என்று அவரையே பார்த்துக் கொண்டு நிற்க, அவர் கௌரியை கண்டதும் முகம் மலர்ந்து அடடே கௌரியா! உள்ளே வாப்பா! எப்படி இருக்கிறே? அம்மா, அப்பா, அண்ணா எல்லோரும் எப்படி இருக்காங்க ? என்று எல்லோரின் நலமும் விசாரிக்க, எல்லோரும் நல்லா இருக்காங்க அங்கிள், நீங்க எப்படி இருக்கீங்க ? ஆண்ட்டி இறந்துட்டாங்கனு கொஞ்சம் நாளைக்கு முன்பு தான் கேள்விப்பட்டேன். நீங்க பெங்களூரில் இருந்ததாலே எங்களால உங்களை தொடர்ப்பு கொள்ள முடியல. நீங்களாவது சொல்லி இருக்கலாமே அங்கிள் என்று கேட்க, எங்கப்பா சொல்ல முடிந்தது, எங்களுக்கு முன்பே அவளுக்கு உடம்பு சரியில்லாதது தெரியும். அவளுடைய கடைசி ஆசை தன் பொண்ணு கல்யாணத்தை பார்க்கணும் தான். அதனால தான் மேலே படிக்கணும்னு ஆசைப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணி வைத்தேன். என் மனைவி கஸ்தூரி தனக்கு உடம்பு சரியில்லாததை யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுனு சொல்லிட்டா. அதனாலதான் உங்ககிட்டே கூட சொல்லல. பொண்ணு மன வாழ்க்கை ஆறு மாசத்தில முடிஞ்சுடுன்னு நாங்க யாரும் எதிர்பாக்கலை, அந்த அதிர்ச்சியில் இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து இருக்க வேண்டியவள் சீக்கிரமாகவே எங்களை விட்டு போய்ட்டா! என்று கண்கலங்கி கூற, அதைப் பார்த்த கௌரியின் முகத்திலும் துக்கம் மேலிட , கவலைப்படாதீங்க அங்கிள், நாங்கள் எல்லோரும் உங்களுக்காக இருக்கோம். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்கிட்ட கேளுங்க. நான் கண்டிப்பாக உங்களுக்கு என்னாலானதை செய்வேன் என்று அவருக்கு ஆறுதல் கூறினான். வெகு நேரம் கடந்தும் அங்கு வர்ஷினி இல்லை என்பதை உணர்ந்து, கேக்கலாமா வேண்டாமா என்று தயக்கத்துடன் யோசித்துக் கொண்டிருக்க பிறகு ஒரு வழியாக அவரிடம் வர்ஷினி எங்கே அங்கிள் ? என்று வினவ, பக்கத்தில் இருக்கும் அவள் தோழி மித்ரா வீட்டிற்கு தான் போயிருக்கா, இப்ப வந்துடுவா என்று கூறிக் கொண்டே இருக்கையில் வெளியில் இருந்து வர்ஷினி உள்ளே வந்துக்கொண்டிருந்தாள்
