அத்தியாயம் 11: தப்பியோடும் நிலவுகள்

இசை நிகழ்ச்சியில் நடந்த அந்த அதிரடித் திருப்பம் தமிழகத்தையே உலுக்கியிருந்தது. சமூக வலைதளங்கள் முழுவதும் ஆர்யனின் துணிச்சலும், அந்த மர்மப் பெண்ணின் (யாழினி) தியாகமும் தான் பேச்சாக இருந்தது. ஆனால், வெளிச்சத்திற்குப் பின்னால் ஒரு பெரிய இருட்டு அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

“ஹலோ வணக்கம் சென்னை, நான் உங்க ஆர் – ஜே, விஜயா. நீங்க கேட்டுக்கொண்டிருப்பது நட்சத்திர FM, 100.3. கேட்க, கேட்க ஒரே தூளு. இன்னிக்கு நாடே பரபரப்பா பேசிக்கிட்டு இருக்கிற, ஆர்யனோட , மியூசிக் கன்சர்ட் அரசாங்கத்தில் நடந்த மாபெரும் ஊழலை மக்கள் முன்னால் கொண்டு வந்து சேர்த்ததை மக்கள் என்ன பேசிகிறாங்க என்பதை பற்றி பார்ப்போம்”

மக்களில் ஒருவன், “என்ன மேடம் ஆட்சி இது?  மக்கள் நம்பியிருந்த மருத்துவ துறை இப்படி விலை போனது. யாராலையும் ஏத்துக்க முடியாத தலைவலியா இருக்கு.”

இன்னொருவர், “ இனி இலவசம்னு எது கொடுத்தாலும் மக்கள் நம்ப கூடாது, எதுக்கு இலவசமா கொடுக்கிறீங்கன்னு கேள்வி கேட்கணும். எங்களை இலவசமா வாங்க வைக்கிற அளவுக்கு உங்க அரசாங்கம் எங்களோட பொருளாதாரத்தை வச்சிருக்குன்னா, அதுக்கு ஆட்சியாளர்கள் தான் தலை குனியனும், அதுக்கு பதிலா இலவசம்னு கொடுத்து இப்ப மக்கள் உயிரையே காவு வாங்கியிருக்க அந்த ஊழல் அரசியல்வாதிக்கு தூக்கு தண்டனை கொடுக்கணும்”

பெண் ஒருவர், “ முதல அந்த மருந்து கம்பெனியை நாட்ட விட்டு தொரத்தனும்”

இப்படி ஒவ்வொரு மக்களும் ஊழல் அரசியல் வாதியையும், மருத்துவ கம்பெனியையும் நேரடியாக தாக்கினர்.  

அமைச்சர் ரத்தினவேல் தனது மற்றொரு சொகுசு பங்களாவில் ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தார். “என் முப்பது கால அரசியல் வாழ்க்கையை ஒரு காது கேட்காதவனும், ஒரு ஊமைப் பொண்ணும் சேர்ந்து அழிச்சிட்டாங்களா? அவங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்கக் கூடாது!” என்று கர்ஜித்தார்.

அமைச்சர் ஆட்கள், பங்களாவை விட்டு  கருத்த கார்களில் வெளியேறினர்.

பண்ணை வீட்டிற்குள் கௌதம் வேகமாக ஓடிவந்தான்.

நியூஸ் சேனலில் அரசு பற்றியும், அமைச்சரின் ஊழல் பற்றியும் டிபட் நடந்து கொண்டிருந்தது. ஆர்யனும், யாழினியும் அதனை பார்த்துக்கொண்டிருந்தனர். எதிர்க்கட்சி  முன்னாள் எம்,எல்,ஏ ஒருவர், “இது போது சேவைக்கு நடந்த மானக்கேடு, இனி இந்த ஆட்சி இருப்பது  என்ன நியாயம்?”

ஆளுங்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், “ ஆனா, ஊனா ஆட்சியை பத்தி குத்தம் சொல்லக்கூடாது. அமைச்சர் மீது வந்துள்ள குற்றச்சாட்டு முதலில் உண்மையானு கண்டுபிடிக்கணும், அது உண்மை என நிருபீங்கப்பட்டா அதற்கு தகுந்த தண்டனை வழங்க நீதிமன்றம் இருக்கு”

செய்தியாளர், வீடியோ ஆதாரம் வெளியான பிறகும் உண்மை இல்லைன்னு நினைக்கிறீங்களா?

ஆளுங்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர், “ என்ன சார் பேசுறீங்க? Ai காலத்துல வாழ்ந்துட்டு இருக்கோம், இப்போ எம்ஜிஆரே  டான்ஸ் ஆட வைக்க முடியும்! முதல வழக்கு நீதி மன்றம் வரட்டும் அப்பறம் தான் எல்லா விவரத்தையும் சொல்ல முடியும்”

நடப்பதை பார்த்தால், அமைச்சரை காப்பாற்றும் வேலை தான் தீவிரமாக நடக்கிறது என ஆர்யனுக்கு தோன்றியது. அப்போது உள்ளே வந்த கௌதம்,

“ஆர்யா… நீ உடனே சிட்டியை விட்டு கிளம்புனும்! யாழினி நீயும்தான். நாம பண்ணின வேலைக்கு நல்ல ரெஸ்பான்ஸ், ஆனா அந்த அமைச்சர் இன்னும் அடங்கல, நாம எங்க இருந்தாலும் தேடி வருவாங்க. இப்ப வந்ததும் இருக்காங்க”

சரி கௌதம் இப்ப, எப்டி?

“அதபத்தி நீ கவலைப்படாத! வண்டி ஒண்ணு வரும் அதுல ஏறினா போதும். அங்க மினிஸ்டர் ஆளுங்க பாம்ப, கொத்துற கழுகு கணக்கா சுத்திட்டு கிடக்கானுங்க? நீங்க ரெண்டு பேரும் மாட்டினா, மொத்தமா முடிச்சு விட்டுருவாங்க. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ.”

யாழினியும், ஆர்யனை சாந்தப்படுத்த, அமைதியானான் ஆர்யன்.

அன்று இரவு, ஆர்யனும் யாழினியும் ஒரு ரகசிய ஆம்புலன்ஸ் மூலம் சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கௌதம் தான் எல்லாவற்றிலும் முன்னிருந்து இதற்கெல்லாம் ஏற்பாடு செய்திருந்தான். போலீஸ் பாதுகாப்பை விட, அமைச்சரின் ஆட்கள் ஊடுருவ முடியாத ஒரு இடம் அவர்களுக்குத் தேவைப்பட்டது.

நீண்ட கருத்த சாலையில், மின்மினி பூச்சி போல ஆம்புலன்ஸ் அமைதியாக சென்று இருந்தது. இயற்கையை அவர்களை ஆசீர்வதிக்கும் வண்ணம் சிறு தூரலையும் தூவியது.

அவர்கள் சென்றுகொண்டிருந்த அந்த ஆம்புலன்ஸின் உள்ளே, மங்கலான வெளிச்சத்தில் ஆர்யன் யாழினியின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தான். யாழினியின் நெற்றியில் போடப்பட்டிருந்த கட்டு, அந்த மேடை விபத்தின் ரணத்தை நினைவுபடுத்தியது.

ஆர்யன் ஒரு காகிதத்தில் எழுதினான்: “யாழினி, நீ ஏன் மேடைக்கு வந்தாய்? உனக்கு ஏதேனும் ஆகியிருந்தால் நான் என்ன செய்திருப்பேன்?”

யாழினி அவனது கண்களை ஆழமாகப் பார்த்தாள். அவனது கையைப் பிடித்து தனது இதயத்தின் மீது வைத்தாள். பிறகு மெல்ல எழுதினாள்: “உன் குரல் உலகம் முழுவதற்கும் கேட்க வேண்டும் ஆர்யன். நீ பாடும்போது என் உயிர் உனக்குக் கவசமாக இருப்பதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்க முடியும்?”

ஆர்யன் நெகிழ்ந்து போனான். அவளது நெற்றிக் கட்டின் மீது மென்மையாக ஒரு முத்தமிட்டான். அந்தச் சிறிய ஆம்புலன்ஸ் அறைக்குள், மரண பயத்தையும் தாண்டி ஒரு மாபெரும் காதல் அலை வீசிக்கொண்டிருந்தது. ஆர்யன் அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான். இசை மூலம் மக்களுக்கு புரட்சியை கொடுத்த உலக  மூத்த இசை கலைஞர்களை பற்றி எண்ணி, தானும் அதில் இணைந்தது, ஆர்யனுக்கு பெருமையாகத் தான். இருந்தது. ஆனால் அந்த புரட்சியின் விதை யாழினி அமைத்துக்கொடுத்தது. அதற்கு என்றென்றும் இந்த இயற்கைக்கும், இசைக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், என மனதார நன்றியுணர்வில் நனைந்திருந்தான்.   அவனது கேட்கும் திறன் போன பிறகு, யாழினியின் மூச்சுக்காற்றின் வெப்பம் தான் அவனது உலகமாக மாறியிருந்தது.

திடீரென்று ஆம்புலன்ஸ் ஒரு பெரிய அதிர்வுடன் நின்றது. ஆர்யன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். ஆம்புலன்ஸின் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, நான்கு கறுப்பு நிற கார்கள் அவர்களை வழிமறித்து நின்றன.

கௌதம் முன்னால் அமர்ந்திருந்தான். அவன் பதற்றத்துடன் சைகை காட்டினான். “அமைச்சரோட ஆளுங்க வந்துட்டாங்க! இப்ப பேசுறது நேரமில்ல. ஆர்யா, பின்னாடி கதவைத் திறந்துட்டு காட்டுக்குள்ள ஓடிடுங்க!”

ஆர்யன் யாழினியின் கையை இறுக்கமாகப் பற்றினான். “யாழினி, ஓடு!” என்று சைகை செய்தான். இன்னொரு கையில் இரும்பு ராடை எடுத்துக்கொண்டான்.  

இருவரும் அந்த இருண்ட காட்டுப் பகுதிக்குள் குதித்தனர்.  சாரல் மழை இப்போது பெரு மழையாக பெய்தது. இயற்கைக்கு கூட இக்காதலை காப்பாற்ற எண்ணம் கொண்டிருக்கும் போல, அடை மழை வெளுத்து வாங்கியது. ஆர்யன், எனக்கு பின்னால் துப்பாக்கிச் சூடு சத்தம், மற்றும் தீப்பொறிகள் கிளம்பியது.  ஆர்யனுக்கு அந்தச் சத்தம் கேட்கவில்லை என்றாலும், மரங்களில் பட்டுத் தெறிக்கும் குண்டுகளின் அதிர்வுகளை அவனால் உணர முடிந்தது.

ஈரமான காட்டில், கடும் இருட்டில் கால் வைக்க இடத்தை தேடாமல் வேகமான குருட்டு ஓட்டத்தை இருவரும் கடை பிடித்தனர். சில நிமிடங்களில் யாழினி வழுக்கி விழ, அவளை காப்பாற்ற ஆர்யனும் வழுக்கி சென்றான்.  ஒரு நீளமான பள்ளத்தை நோக்கி இருவரும் வலுக்கியவாறு சென்றனர். அடை மழையில் நீர் தேங்கிய சிறு குட்டையில் இருவரும் விழுந்தனர்.

“ யாழினி, யாழினி உனக்கொன்னும் ஆகலையே,”

யாழினி அழுதவாறு, இல்லை என்பது போல தலையை ஆட்ட, ஆர்யன் அவளை அப்படியே மார்போடு அனைத்துகொண்டு ஆறுதல் படுத்தினான்.

அவர்கள் முட்செடிகளுக்கு இடையே, கற்களுக்கு இடையே ஓடினார்கள். யாழினிக்கு மூச்சிரைத்தது,  சில தூரம் ஓடினாலும் அதற்கு மேல் அவளால் முடியவில்லைன், ஆனால் ஆர்யன் விடவில்லை அவளைத் தூக்கிக் கொண்டு ஓடினான். ஒரு மலைச்சரிவில் இருந்த சிறிய ஓடைக்கு அருகே அவர்கள் மறைந்து கொண்டனர்.

மழையும் சற்று வெறித்து, வானம் கரு மேகங்களை விலக்கி, நிலவொளியை காடெங்கும் பரவ செய்தது.

காட்டின்  ஒரு பெரிய பாறைக்கு பின்னால் அமர்ந்து மூச்சு வாங்கினர். நிலவொளி அந்த ஓடையின் தண்ணீரில் பட்டுத் தெறித்தது. யாழினி பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். ஆர்யன் அவளது முகத்தை இரு கைகளாலும் ஏந்தினான். அவனது கண்கள் அவளிடம் பேசின: “உயிரே போனாலும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்.”

யாழினி அழத் தொடங்கினாள். அவளது கண்ணீர் ஆர்யனின் கைகளில் விழுந்தது. அந்தச் சூழலிலும், ஆர்யன் அவளை மெல்லத் தன் பக்கம் இழுத்து அவளது இதழ்களில் ஒரு நீண்ட முத்தத்தைப் பதித்தான். அது ஒரு விடைபெறுதல் அல்ல, அது ஒரு சபதம். “நாளை விடியும் போது, நாம் ஒரு புதிய உலகத்தில் இருப்போம்,” என்று அவனது மௌனமான முத்தம் சொன்னது.

தூரத்தில் டார்ச் லைட் வெளிச்சங்கள் கூட்டமாக மின்னின. வேட்டை நாய்களின் குரைப்பு சத்தம் (யாழினிக்கு மட்டும் கேட்டது) காட்டை அதிர வைத்தது.

ஆர்யன் யாழினியைப் பார்த்து ஒரு குறும்புத்தனமான புன்னகையைச் சிந்தினான். அவன் கையில் அந்த இரும்பு ராடு மீண்டும் இருந்தது. “இசை முடிஞ்சிருச்சு யாழினி… இப்போ ஆட்டம் ஆரம்பம்,” என்று சைகையில் சொல்லிவிட்டு, எதிரிகளை நோக்கித் திரும்பினான்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page