அத்தியாயம் 11

மன்னன் தந்த மாலை

 

அத்தியாயம் 11

 

“என்ன ஆச்சு…?” என்றவனின் ஒற்றைக் கேள்விக்கு அந்தப்பக்கம் சொல்லப்பட்ட பதிலில் அனிச்சையாய் அவனின் அலைபேசி கீழே விழுந்து சில்லு சில்லாய் நொறுங்கியது அவனின் மனதைப் போல.

நிச்சயமாய் இப்படியொரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனின் அதிர்ந்த முகமே காட்டிக் கொடுத்தது.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ அடுத்த சிறிது நேரத்தில் அவனின் அலுவலக உதவியாளர் வந்தவன் தன் அலைபேசியைக் கொடுத்து,

“சார், உங்களுக்குப் போன்…” என்றவனின் பார்வை கீழே விழுந்து உடைந்து போயிருந்த போனைக் கண்டதுமே எதுவோ நடந்துள்ளது என்று புரிந்து கொண்டவன் அதற்கு மேலும் எதுவும் கேட்காமல் தன் அலைபேசியை விவேகனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

அலைபேசியைக் காதில் வைத்து, “ஹலோ…” என்றிட அந்தப் பக்கத்தில் இருந்தவனோ,

“உன் போன் என்னாச்சு? சீக்கிரம் வரப்பாரு… அவ கண் திறக்கும்போது நீ இங்கே இருக்கணும்.” என்றவன் அத்துடன் அலைபேசியை அணைத்துவிட்டான்.

கண்கள் கலங்க தன்னவளின் வதனம் மனதில் தோன்ற, “என்ன காரியம்டி பண்ணியிருக்க? அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” என்றவனின் முகத்தில் வலியின் சாயல்.

‘எப்படி நம்பிக்கை இருக்கும்? இத்தனை நாளாக அவளுக்காக நீ இருக்கேன்னு சொல்லிருப்பியா, இல்லை செயல்ல தான் உணர்த்திருப்பியா? அவ தான் அத்தனை முறை சொன்னாளே… நீ வரலைன்னா நான் உயிரோட இருக்க மாட்டேன்னு… ஆனா அப்பவும் நீ அலட்சியமா தானே இருந்த? இப்போ என்னவோ இப்படி துடிக்குற…’ என்று அவனின் மனசாட்சியே இடித்துரைக்க அதற்கு அவனால் பதில் பேச முடியாததால் நிலைகுலைந்து தான் போனான்.

இனியும் தன்னை மறைத்து வாழ முடியாது என்பதை உண்ர்ந்தவன் அவனின் பட்டுவைத் தேடிப் புறப்பட்டுவிட்டான்.

*

இங்கே பூட்டப்பட்ட அந்த அறையின் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளிருந்து மருத்துவர் குழு வெளியே வர அதுவரை பதற்றத்துடன் இருந்த பிரவீனும், அமுதாவும் அவர்களை நோக்கிச் சென்றனர்.

“டாக்டர், அந்தப் பொண்ணுக்கு எப்படி இருக்கு?” என்ற பிரவீனின் சீருடையைப் பார்த்து,

“ஷீ எஸ் ஆல்ரைட் சார்… அவங்க இப்போ ஓகே தான். மருந்து குடுத்துருக்கோம். இப்போ நல்லா தூங்குறாங்க. அவங்க எழுந்ததும் ஒருமுறை செக் பண்ணிடலாம்.” என்றார் தலைமை மருத்துவர்.

“டாக்டர், அரும்மாவை ஒரு தடவை மட்டும் பாக்கலாம்ங்களா?” என்றார் அமுதா.

“இல்லைங்கம்மா அது ஐ சீ யூ… அவங்களை வார்டுக்கு ஷிப்ட் பண்ணதும் போய்ப் பாருங்க. இப்போ போனீங்கன்னா மத்த நோயாளிகளுக்கும் டிஸ்டர்பன்ஸ் ஆகும். அதுதான் சொல்றேன்.” என்றார் மருத்துவர் தனது கடமையாக.

அதைக் கேட்ட அமுதாவும் அருந்ததி உயிருடன் வந்ததே போதும் என்று அங்கிருந்த நாற்காலியில் ஒடிந்து போய் அமர்ந்துவிட்டார்.

பிரவீனும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட அப்பொழுது தான் அவனைக் கண்ட அமுதா,

“தம்பி, நீங்க யாருன்னு தெரியலை. நீங்க ரொம்ப வருசத்துக்கு தீர்காயுசா இருக்கனும்பா. அந்த அப்பாவி பொண்ணைக் காப்பாத்திட்டீங்க… அவ ரொம்ப நம்பிக்கையா அவளோட அத்தான் வருவான்னு நினைச்சா… ஆனா அவருக்கு இவளைக் கொஞ்சமும் நினைவுல இல்லை போல… இந்தப் பொண்ணுக்கு இன்னும் எவ்வளவு கஷ்டம் தான் அந்த ஆண்டவன் வச்சிருக்கானோ தெரியலை?” என்று புலம்பியபடி அங்கு அமர்ந்திருக்க அதேநேரம் அங்கே அழுத்தமான காலடி ஓசை கேட்க அதில் நிமிர்ந்து பார்த்தவர் அங்கே கம்பீரமாய் வந்தவனைக் கண்டு முதலில் யாரென்று அவருக்குப் புரியவில்லை.

ஆனால் சற்று நேரம் உற்று பார்த்தபோது தான் உணர்ந்தார் அது விவேகன் என்று.
 
“ராஜா…” என்றபடி எழ அவனோ வேகமாய் அவரருகில் வந்தவன் அவரின் கைகளைப் பிடித்தபடி,

“பட்டு எப்படி இருக்கா?” என்றான் பதற்றமாக.

அப்போது அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த பிரவீனோ எழுந்த வேகத்தில் வேகமாய் விவேகனின் கன்னத்தில் அறைந்திருந்தான்.

“இடியட்! அறிவிருக்கா உனக்கு? எப்படிடா உனக்கு இப்படியொரு துணிச்சல் வந்துச்சு? அவ எப்படிப் போனாலும் பரவாயில்லைன்னு தானே வராம இருந்த? இப்போ என்ன உனக்குப் புதுசா பாசம் வந்துருச்சு?” என்றான் கோபமாக.

அதைக் கண்ட அமுதாவோ அதிர்ச்சியாய் பார்த்தவர் பிரவீனிடம் திரும்பி,

“தம்பி, நீங்க என்ன பண்றீங்க?” என்றார் படபடப்பாக.

அவருக்கும் விவேகன் மீது கோபம் இருக்கிறது தான் ஆனால் அதைத் தாண்டி இத்தனை நாளாய் பார்க்காமல் இன்று பார்த்ததில் வளர்த்த பாசம் தான் முன்னே இருந்தது.

“இதை நீங்கப் பண்ணிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனா நீங்கத் தான் வளர்த்த பாசத்துல விட்டுக் குடுத்துட்டு இருக்கீங்களே… ஆனால் என்னால இவனை இப்படியே விட முடியாது. இவன் தப்பு பண்ணா நான் தடுத்து நிறுத்தணும். இப்பவும் நான் அமைதியா இருந்தா தான் அது தப்பு.” என்றான் கோபமாய்.

அதே கோபத்துடன் விவேகன் பக்கம் திரும்பியவன்,

“என்ன கலெக்டர் சார் உங்க சேவையை முடிச்சிட்டு வந்துட்டீங்களா இல்லை இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா? சொல்லுங்க, இல்லை இன்னும் ஏதாவது இருந்தா முடிச்சிட்டு வந்தீங்கன்னா அந்தப் பொண்ணை சுடுகாட்டுக்கு எடுத்துட்டு போகுறதுக்கு வசதியா இருக்கும். சொல்லுங்க சார், என்ன பண்ணலாம்? எதுக்கு அவ்வளவு பண்ணிட்டு, பேசாம இப்படியே அந்தப் பொண்ணை அனுப்பி வச்சிரலாமே… ஒரு வேலை முடிஞ்சிரும் இல்லை. உங்களுக்கும் எல்லாம் முடிஞ்சு நாட்டுக்கு நாலு நல்லதை செய்வீங்க இல்லை…” என்றான் கொஞ்சமும் ஆத்திரம் தீராமல்.

அவனை அடிபட்டப் பார்வை பார்த்த விவேகனின் விழிகளில் ‘நீயும் என்னைப் புரிந்து கொள்ளவில்லையா?’ என்ற செய்தி தாங்கி இருந்தது.

அது புரிந்தாலும் கூட இப்போது நடந்த விடயத்தை அவனால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. கொஞ்சம் கவனிக்காமல் இருந்திருந்தாலும் கூட இப்போது அநியாயமாய் ஒரு உயிர் பிரிந்திருக்குமே? என்ற ஆதங்கமே அவனை மேலும் யோசிக்க விடாமல் செய்தது.

“பிரவீன், நான் பட்டுவைப் பாக்கணும்.” என்றான் கெஞ்சலாய்.

“ஐ சி யூ ல இருக்கா. இப்போதைக்கு பாக்க முடியாது. நார்மல் வார்டுக்கு மாத்தினதுக்கு அப்புறம் தான் பாக்க முடியும்.” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டே.

அதைக் கேட்டவன் சற்று தளர்ந்து போய் முன்பு அமுதா அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தான். அவனருகில் பிரவீனும் சென்று அமர்ந்தவன் அமுதாவைப் பார்த்து,

“என்ன பாக்குறீங்க? வந்து உட்காருங்க, நர்ஸ் வந்து சொல்லுவாங்க.” என்றபடி தன் அருகில் இருந்தவனைப் பார்த்தான்.

நண்பனின் பார்வையை‌ உணர்ந்தவன் அமுதாவைப் பார்த்து,

“வந்து உட்காருங்க…” என்றான் வலியைத் தேக்கிய விழிகளுடன்.

“தம்பி, எங்க ராஜாவை உங்களுக்கு முன்னவே தெரியுமா?” என்ற அமுதாவின் விழிகள் இருவரையும் தழுவியபடி இருந்தது.

அதைக் கேட்ட பிரவீனோ, “ஓ… நல்லாவே தெரியுமே! இந்த நல்லவனோட தானே நான் படிச்சேன், அப்போ தெரியாமையா இருக்கும்.” என்றான் அவனைப் பார்த்தபடியே.

அதற்கு ஆம் என்பது போல்‌ விவேகனும் அமைதியாகி விட அவரும் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டார்.

மூவரும் அருந்ததி எழும் நொடிகளுக்காகக் காத்திருந்தனர்.

*

இங்கே தன் அறையில் அமர்ந்திருந்த கற்பகநாயகியின் விழிகள் எங்கோ வெறித்திருக்க அவரின் நினைவடுக்குகளில் பழைய நிகழ்வுகள் நிழல் படமாய் ஓடிக் கொண்டிருந்தது.

அதன் தாக்கம் அவரை மட்டும் அல்லாமல் அவரின்‌ உடலைக் கூட நடுங்கச் செய்தது.

நாம் செய்யும் நன்மையும் தீமையும் கண்டிப்பாக உடனுக்குடன் அதன் தீர்வைக் கொடுத்து விடும்.

அதேநேரம் அவரின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த மாணிக்கத்தின் விழிகளில் பயத்தைத் தாண்டிய மிரட்சி தான் தெரிந்தது.

“அம்மா‌…” என்றபடி அவர் அருகில் சென்று அமர்ந்தார்.

அவரைப் பார்த்தவர் எதுவும் பேசாமல் மீண்டும் தன் பார்வையை திருப்பிக் கொண்டார்.

“அது அவன் தானேம்மா…?” என்றார் பயமாய்.

“என்ன‌ இதுக்கே பயந்துட்டியா? இன்னும் எவ்வளவோ இருக்கில்ல… எந்தக் குடும்பத்தோட கௌரவத்தைக் காப்பாத்த நான் போராடினேனோ இன்னைக்கு உன் பொண்டாட்டியால அது போயிடுச்சு. இனி என்ன நடக்கப் போகுதுன்னுஎனக்குத் தெரியலைலை.” என்றவரின் பார்வையில் ஒரு வெறுமை தான் தெரிந்தது.

இனி எதையும் மாற்றி அமைக்க முடியாது. அனைத்தும் தன் கையை மீறிப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டவரால் எதுவும் பேச முடியவில்லை.

எந்த வசதியான வாழ்வுக்கும் கௌரவத்திற்கும் ஆசைப்பட்டு அனைத்தையும் செய்தாரோ இன்று அதுவே அவரைக் கழுத்தை நெறிக்கும் பாம்பாய் மாறியதை அறிந்து அவரின் உள்ளம் வெறுமையை தாங்கியிருந்தது.

“இங்கேயிருந்து போ மாணிக்கம். என்னைக் கொஞ்சம் தனியா இருக்க விடு.” என்றவரின் குரலில் இருந்த அழுத்தம் அவரை அங்கிருந்து அகற்றியது.

தன் தாயை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே சென்றார். மகனின் பார்வையை உணர்ந்தாலுமே எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்துவிட்டார் கற்பகநாயகி.

அவர் அமைதியாக இருந்தால் போதுமா என்ன? இறைவன் அவரை அப்படியே விட வேண்டுமே?

பொறுத்திருந்து தான் பார்ப்போமே இவர்களுக்கான தண்டனை என்னவென்று.

“ஏங்க, என்னாச்சு அத்தை நார்மலாகிட்டாங்களா?” என்ற சகுந்தலாவை ஒரு பார்வை பார்த்தவர் அங்கிருந்து அமைதியாய் சென்று சோபாவில் அமர்ந்துவிட்டார்.

தான் கேட்ட கேள்விக்குப் பதில் வராமல் போக அதே கோபத்துடன் தன் கணவனின் பக்கம் அமர்ந்தவள்,

“என்னாச்சு உங்களுக்கு நான் கேட்ட கேள்விக்குப் பதிலே சொல்லலையே?” என்றாள் அதிகாரமாய்.

“ப்ச்… சகுந்தலா கொஞ்சம் அமைதியா இரு. நீ பண்ணி வச்ச வேலைக்கு அம்மாகிட்ட போய்ச் சீக்கிரம் பேச முடியாது. நீ கொஞ்சம் அமைதியா இரு.” என்று எரிந்து விழுந்த கணவனைக் கண்டவள் அமைதியாய்
சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

*

மெல்ல மெல்ல தன் சிப்பி இமைகளைத் திறந்து பார்த்தவளுக்கு இமைகள் பாரமாய் இருந்தது போலும். கண்களில் வலியுடன் தன் பார்வையைத் திருப்பிப் பார்க்க அங்கே அவளுக்கு முன்னே அமுதா பதற்றத்துடன் நின்றிருக்க, அவரின் அருகே ஆண்கள் இருவர் நின்றிருக்க அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

ஆனால் புரிந்த விடயம் தான் இன்னும் உயிருடன் இருக்கிறோம் என்பதையே நம்ப மறுத்தது பெண் உள்ளம்.

“அமு…” என்றாள் மெதுவாய்.

“என் தங்கமே! என்ன வேலைடா பாத்து வச்சிட்டே? ஒரு நிமிஷம் என்னை நினைச்சுப் பாத்தியா நீ? இவ்வளவு பெரிய முடிவு எடுக்குறோமே நம்ம அமு தாங்கிப்பாளான்னு யோசிச்சியா?” என்றவர் அழுதபடி அவளின் கரத்தை மெல்ல பற்றிக் கொண்டார்.

தன் கைகளை இறுக்கமாய் பற்றியவரின் உடல் நடுக்கமே சொன்னது அவரின் பயத்தை.

“அமு, அத்தான் வரவே இல்லைல. அவருக்கும் நான் வேணாம் இல்ல…?” என்றவளின்‌ குரலில் இருந்த வலியை ஆடவனும் உணர்ந்தவன் வேகமாய் அவளருகே வந்து அவளின் கரத்தைத் தன் கரத்தினால் பற்றியவன்,

“பட்டுமா…” என்றான் மென்மையாக.

அவனின் பட்டு என்ற அழைப்பில் பெண்ணவளின் உள்ளம் அவனை நோக்கிச் சாய அவனைப் புரியாத பார்வை பார்த்தவள்,

“யாரு நீங்க?” என்றாள் அழுத்தமாய்.

அவளின் வார்த்தையில் ஆடவனின் உள்ளம் உடைந்து சிதறிப் போனது.

உண்மையில் பெண்ணவள் ஆடவனை மறந்துவிட்டாளா என்ன? அடுத்த பாகத்தில் பாக்கலாம் செல்லம்ஸ்.

 

மாலை வரும்…✍️

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page