காட்டின் இருட்டு ஒரு ராட்சத மிருகத்தைப் போல அவர்களைச் சூழ்ந்திருந்தது. தூரத்தில் மின்னும் டார்ச் லைட் வெளிச்சங்கள் எமனின் சிவப்பு கண்களைப் போலத் தெரிந்தன. ஆர்யனுக்குச் சத்தம் கேட்கவில்லை என்றாலும், நில அதிர்வுகளின் மூலம் எதிரிகள் நெருங்குவதை அவன் உணர்ந்தான்.
யாழினி பயத்தில் ஆர்யனின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தாள். அவளுக்கு மட்டும் கேட்கும் அந்த வேட்டை நாய்களின் குரைப்புச் சத்தம் அவளது நரம்புகளைத் தளர்ச்சியடையச் செய்தது.
“ஆர்யன்… அவங்க வந்துட்டாங்க…” என்று அவள் சைகையில் சொல்ல முயன்றாள், ஆனால் அவளது கைகள் நடுங்கின.
ஆர்யன் அவளை ஒரு பெரிய புளிய மரத்தின் பொந்துக்குள் அமர வைத்தான். அவளது நெற்றியில் ஒரு மென்மையான முத்தமிட்டு, “இங்கேயே இரு. நான் வர்ற வரைக்கும் வெளியே வராதே,” என்று சைகை செய்தான். அவனது கண்கள் காதலோடு ஒரு வீரத்தையும் வெளிப்படுத்தின.
ஆர்யன் கையில் இருந்த இரும்பு ராடுடன் இருட்டுக்குள் மறைந்தான். முதல் எதிரி நெருங்கி வந்தான். ஆர்யன் ஒரு சிறுத்தை போல அவன் மீது பாய்ந்தான். சத்தமில்லாத அந்தத் தாக்குதல் எதிரியை நிலைகுலைய வைத்தது. முகத்தில் இரும்பு கம்பியை வைத்து ஒரு அடி, அடியாள் முகம் அப்படியே சேற்றில் புதைந்தது. அடுத்தொருவன் ஆர்யனின் பின்பக்கம் இருந்து கழுத்தை பிடித்து நெறிக்க, ஆர்யனுக்கு சற்று மூச்சு வாங்கினாலும், வேகமாக இடது காலை மடக்கி பின்னால் இருப்பவனை முன்னால் முதுகைக் கொண்டு தூக்கி எறிந்தான். தனக்கு முன் விழுந்தவனின் முகத்தில் வேகம் குறையாமல் பல குத்துக்கள், அடியாள் முகம் நொறுங்கியிருக்கும் அப்படி தாக்குதல். அடுத்து நெருங்கி வருபவனை வீழ்த்த ஆனால் அருகில் இருந்த மரத்தின் விழுதை பற்றி மேலே ஏறினான். துரத்தி வந்தவர்கள் முன்னோக்கி ஓட, கடைசியாக வந்தவன் மீது பாய்ந்தான் ஆர்யன். அவனது கழுத்துக்கு மர விழுதால் சுருக்கு ஒன்றை போட்டு விழுதின் மறு புறத்தை பிடித்து வேகமாக இழுத்தான், கழுத்தில் சுருக்கு மாட்டப்பட்ட அடியாள் அப்படியே துடி,துடித்தபடி அந்தரத்தில் தொங்கினான். ஆர்யனுக்கு கொடுக்கும் ஒவ்வொரு அடியிலும் எதிரிகள் காயம் ஆவது போல, இவன் புது வலிமையை பெற்றான். எல்லாம் காதல் கொடுக்கும் வலிமை தான், எவன் ஒருவனையும் யாழினி அருகில் நெருங்காதவாறு சண்டை செய்தான். ஆனால், நாய்களை ஆர்யன் கட்டுப்படுத்த கொஞ்சம் சிரமம் பட்டான், அதை சரியாக வாய்ப்பாக கருதி அடியாட்கள் அவனை வளைத்து பிடித்தனர். இன்னும் பலர் பேர் துப்பாக்கிகளுடன் நெருங்கினர்.
ஆர்யனை சுற்றி வளைத்து, துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்தினர். ஆர்யன் தன்னுடைய சிறு நகர்வுக்கே துப்பாக்கி வெடித்து சிதறுவதை காண முடிந்தது. ஆர்யன் எதுக்கும் செய்ய முடியாத நிராயுதபாணியாக நின்றான். யாழினியின் உள்ளுணர்வும் அடித்துக்கொண்டது. இறைவா இந்த சிக்கலில் இருந்து எங்களை எப்படியாவது மீட்டுக்கொடு என வானத்தை பார்த்து பிராத்தனை செய்யத் துவங்கினாள்.
சரியாக அந்த நேரத்தில், ஒரு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. யாழினுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஆனால் அது அமைச்சரின் ஆட்களுடையது அல்ல. எங்கிருந்தோ புயல் வேகத்தில் வந்த ஒரு தோட்டா, ஆர்யனைத் தாக்க வந்தவனின் கையைத் துளைத்தது.
இருட்டுக்குள் இருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. அது ஒரு பெண்! நேர்த்தியான கட்டுக்கோப்பான உடல், தலையில் முன் சரிவில் விழுந்த தலை முடி தவிர மற்ற எல்லா இடங்களிலும் முடியே இல்லாத ஆக்ரோஷமான சிகை வெட்டு, ராணுவ உடையில் இருந்த அவள், கையில் ஒரு நவீன ரக துப்பாக்கியை வைத்திருந்தாள். அவள் பெயர் ரியா. அவளை நோக்கி பாய்ந்த ஒவ்வொரு துப்பாக்கி குண்டையையும் தடுத்து, விலகி சுலபமாக முன்னேறினாள். அவள் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரி தாக்குதல் நடத்தினாள், அமைச்சரின் ஆட்கள், களை எடுக்கப்பட்ட புற்கள் போல சரிந்து விழுந்தனர். துப்பாக்கி சத்தத்தில் நாய்கள் சென்ற இடம் தெரியாமல் மாயமாக மறைந்தன.
“ஆர்யன். யாழினி எங்க?” ஆர்யன் ரியாவை யாழினி இருக்கும் மரத்தை நோக்கி அழைத்து சென்றான். யாழினையை பார்த்த ரியா சற்று அமைதியானாள். “சீக்கிரம் என் கூட வாங்க!” என்று அவள் கத்தினாள்.
ஆர்யன் குழப்பமடைந்தான். “நீ யாரு?” என்று சைகையில் கேட்டான்.
“நான் யாழினியோட அண்ணன் பிரகாஷோட டீம். யாழினுக்கு ஒன்றும் புரியவில்லை அண்ணன் பிரகாஷ் ரொம்ப சாந்தமான குணம் கொண்டவன், அவனுக்கு ஒரு டீமா? இருப்பினும் ரியா மீது ஒரு சந்தேகம் ஏற்பட்டது. யாழினி ஆர்யனை கண்களால் விசாரித்தியா என்பது போல பார்க்க, ஆர்யன் இல்லை என கண்களால் சமிக்கை கொடுத்தான்.
“நீங்க என்ன சந்தேகப்படுறது எனக்கு புரியுது. சரி என்னப் பத்தி சொல்றே,” என கையில் வைத்திருந்த சிறிய பேட்டரி பொருத்திய கத்தியை ஒரு இரும்பு கம்பி மீது தேய்க்க, நெருப்பு பீறிட்டது. தயார் நிலையில் இருந்த பந்தத்தை கொளுத்த நெருப்பின் வெளிச்சம் ஆரியனுக்கும், யாழினிக்கு பாதுகாப்பு உணர்வை அளித்தது.
“சரி இங்க இருக்கிறது பாதுகாப்பு இல்ல கொஞ்சம் நடந்துகிட்டே பேசினால் நன்றாக இருக்கும், உயிருக்கும் பாதுகாப்பு” என கூற மூவரும் மெல்ல காட்டின் மையத்தை நோக்கி நடந்து சென்றனர்.
ரியா அவளது கதையைத் தொடர்ந்தாள். “நான் மிலிட்டரி ட்ரெயினிங் முடிச்சிட்டு அப்பறம் மிலிட்டரி கண்ட்ரோல் ல, இருக்குற ஹாஸ்பிடல் ல வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அப்பத்தான் உங்க அண்ணன் பிரகாஷை சந்தித்தேன், ஆளு பாக்க, பக்க ஒழுக்கமான பையன் மாதிரி தெரிஞ்சான். நானும், அவனும் ஈசியா ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். புதுசா வந்திருக்கிற மருந்து கம்பெனி மேல உள்துறை அமைச்சகத்துக்கு சந்தேகம் இருந்ததாலா என்ன ரகசியமா கண்காணிக்க சொன்னாங்க, நானும் அவங்க இலவச மருத்துவம் சொல்லி கேம்ப் போடுற இடத்துல எல்லாம், ஒர்க் பண்ணினே, அப்பதான் பிரகாஷ் சொல்ற ஒவ்வொரு விஷயமும் ஷாக்கிங் கா, இருந்துச்சி, கொஞ்ச நாள்ல அவனோட நடவடிக்கையில பதட்டம் தெரிஞ்சது என்னனு விசாரிக்கும் போது தான், எல்லாம் உண்மையும் சொன்னான். நானும் மிலிட்டரி ஹெட் ஆபிசர்க்கு தகவல் கொடுத்தேன். இந்த விஷயத்துல நாம இப்ப எதுவும் செய்ய முடியாது. ஆனா குடிமக்களை பாதுகாப்பது நம்ம பொறுப்பு, நீ ரகசியமா இது சார்ந்த மக்களுக்கு பாதுகாப்பு கொடுனு, சரியான ஆதாரத்தையும் கொண்டு வான்னு, என்னை உன்னை காக்குகுற பொறுப்புக்கு அனுப்பி வைச்சுருக்காங்க,”
“ என்ன காப்பாத்த நாடு வந்த மாதிரி, அண்ணனையும் காப்பாத்தி இருக்கலாம்,” என யாழினி கண் கலங்க மூவரின் நடை பயணமும் சில நிமிடம் அப்படியே நின்றது. ரியா, தேங்கி இருந்த அமைதியை கலைக்கும் வண்ணம் பேச்சை தொடர்ந்தாள்.
“அவனை அவங்க கொன்னப்போ அது ஒரு விபத்துனு மூடி மறைச்சதால் எங்களால எதுவும் செய்ய முடியல. அந்த விபத்துல ஆதாரமும் அழிஞ்சு போயிடுச்சுனு நினைச்சோம் ஆனா அந்த பென் டிரைவ நீங்க சிஸ்டம்ல போட்டு மக்களுக்கு வீடியோவ காட்டியதும் எங்களுக்கு சிக்னல் வந்துருச்சு. அந்த டிரைவ் மிலிட்டரிக்கு சொந்தமானது. அதுல தான் வீடியோ ஆதாரம் எல்லாத்தையும் காப்பி பண்ணி கொடு, நாம நிச்சயம் அதுக்கு தகுந்த பாடம் கொடுக்கலாம்னு சொன்னேன், ஆனா அது கைக்கு கிடைக்கிறதுக்குள்ள பிரகாஷ் நம்ம கூட இல்லை, ஆனா அந்த டிரைவ்! அது எங்க இருந்தாலும் நாங்க ஈசியா டிரேஸ் பண்ண முடியும், அப்படித்தான் நானும் வந்தேன். நாட்டுக்கு வெளிய இருக்குற தீவிரவாதியை விட இந்த ஊழல் வாதி தான் நாட்டுக்கு ரொம்ப ஆபத்து”
யாழினி, ஆர்யன் ஒரு பக்கம் மிரண்டு போயிருந்தனர். அஞ்சலியை (யாழினி) காப்பாத்தணும்ங்கிறது பிரகாஷோட கடைசி ஆசை,” என்றாள் ரியா.
அவர்கள் மூவரும் காட்டின் ஆழமான ஒரு பகுதிக்குச் சென்றனர். அங்கே ஒரு சிறிய குகை மறைவிடம் இருந்தது. ரியா அவர்களுக்குத் தேவையான முதலுதவி மற்றும் உணவை வழங்கினாள். அடுத்து என்ன செய்யலாம் என திட்டத்தையும் வெளிப்படுத்தினாள்.
குகைக்குள், தீப்பந்தம் மற்றும் அப்போதைக்கு ரியா தயார் செய்த நெருப்பின் வெளிச்சத்தில் ஆர்யன் யாழினியின் அருகில் அமர்ந்தான். யாழினியின் கண்கள் கலங்கியிருந்தன. தனது அண்ணனின் தோழி ஒருத்தியைச் சந்தித்தது அவளுக்குப் பழைய நினைவுகளைக் கிளறியது. இருவரும் கொடைக்கானல் தேவாலயம் பகுதியில் விளையாடியது, அண்ணன் முதல் முறையாக சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்தது, ஏமாற்றும் வியாபாரிகளை எப்படி அவர்கள் வழியில் சண்டை இல்லாமல் அமைதியாக தமக்கான நியாயம் பெறுவது போன்றவற்றை சொல்லிக்கொடுத்ததை எண்ணி மனம் கலங்கினாள், அந்த நினைவுகள் அண்ணன் இப்போது இல்லாததை எண்ணி கண்கள் கலங்கின!
ஆர்யன் அவளது கண்ணீரைத் துடைத்தான். “அழாதே யாழினி. உன் அண்ணன் உன்னைப் பார்த்துக்கிட்டு தான் இருக்காரு. நாம கண்டிப்பா ஜெயிப்போம்,” என்று சைகையில் சொன்னான்.
ரியா அவர்களைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையைச் சிந்தினாள். “உங்க ரெண்டு பேரோட காதல் தான் இந்த உலகத்துல இருக்குற ஆகப்பெரிய சக்தி. அந்த அமைச்சரால உங்களை ஒண்ணுமே செய்ய முடியாது,” என்றாள்.
அன்று இரவு, அந்தக் குகையின் அமைதியில் ஆர்யனும் யாழினியும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். வெளியுலகின் சத்தங்கள் அவர்களுக்குத் தூரமானது. அந்த மௌனமான காதலில், அவர்கள் ஒரு புதிய நம்பிக்கையைப் பெற்றனர்.
