வேனலின் வெண்பூவே!
அத்தியாயம் 12
காதல் ஒரு அழகிய பைத்தியக்காரத்தனம். நீங்கக் காதல்ல இருந்தீங்கன்னா உங்க காதலி கோவப்படறது கூடக் கியூட்டா இருக்கும். சில சமயம் அதுக்காவே சீண்டிப் பார்க்கத் தோணும். ஒரு மெஸேஜ் வரலைன்னா டென்ஷன் ஆகும். அவ நம்ம கூட இருப்பாளா மாட்டாளான்னு மனசு கிடந்து தவிக்கும். அதுவரைக்கும் இருந்த எல்லாரையும் விட இவங்க முக்கியமான ஆளா மாறிடுவாங்க.
-ஆதி.
“என்னை ஏன்மா முறைக்கிற?”
“பின்ன நீங்க எதுக்கு அந்தப் பொண்ணை விட்டீங்க? பேரண்ட்ஸைக் கூப்பிட்டுப் பொண்ணைப் பார்த்துக்க சொல்லணும்.”
அவள் கோபத்தை ரசித்தவன் மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு, “முகி, அந்தப் பொண்ணு ஏற்கனவே ரொம்ப பயந்து போயிருக்கு. இதில் நாமும் பேரண்ட்ஸ் அது இதுன்னு பயமுறுத்த வேண்டாம். அதான் அனுப்பிவிட்டேன். நம்மளும் மாரல் போலீசிங்க் பண்ணி அந்தப் பொண்ணைக் கஷ்டப்படுத்த வேண்டாம். அது அவங்க மனசை ஹர்ட் பண்ணும். அது வேண்டாமே!”
அவன் கூற்றில் இருந்த நியாயத்தை உணர்ந்த முகி ஒருவாறு மலை இறங்குவது அவள் முகத்தில் தெரிய சட்டென ஒரு நிம்மதி பிறந்தது.
“சரி முகி. சாப்பாடு ஆறிப் போயிரும். வா சாப்பிடலாம்.”
“ஹ்ம்ம்.” என முனகியவள் நடக்க ஆரம்பித்தாள்.
கடற்கரைக் காற்று இதமாக வீச, கடற்கரை மணலில் கால் புதைய முகி நடக்க, அவளுடன் இணையாகச் சேர்ந்து நடக்க ஆரம்பித்த ஆதியின் முகம் புன்னகையுடனே இருந்தது.
ஒரு பெண்ணுடன் இப்படி கடற்கரையில் அவன் நடந்தது இல்லை. தன்னருகில் நடந்து கொண்டிருப்பவளை ஓரக்கண்ணால் பார்த்தான். காற்றில் அவள் கூந்தல் அலையாடிக் கொண்டிருந்தது. சட்டென அதை ஒதுக்கி விட வேண்டும் என்ற அவாவினைக் கட்டுப்படுத்தியவன் அவளுடன் நடந்தான். இருவரும் மதிய உணவை முடித்தவர்கள் உணவகத்தை விட்டு வெளியே வந்தனர். வெயில் அதிகமில்லை என்ற காரணத்தால் இருவரும் கடற்கரை மணலில் மீண்டும் நடக்க ஆரம்பித்தனர்.
சிறிது நேரம் நடந்ததும், “ஆதி சார், வீட்டுக்குப் போலாமா?” என்றான்.
“ம்ம்ம்… ஷாப்பிங் போகலாமா?”
“ஷாப்பிங்கா… இல்லை வேண்டாம்.”
“அம்மாவுக்கு ஒரு புடவை எடுக்கணும். சிஸ்டருக்கும் டிரஸ் எடுக்கணும். ஏதோ பங்ஷனுக்கு போகணும்னு சொன்னாங்க. இரண்டு பேருமே பிஸி. அதனால் என்னை எடுத்துட்டு வரச் சொன்னாங்க. ஸோ, எனக்கு ஹெல்ப் பண்ணு முகி.”
“ஹ்ம்ம்… ஓகே போலாம்.”
முகி ஒப்புக் கொண்டதும் ஆதி உற்சாகமானான். யாருக்குத்தான் காதலிக்கும் பெண்ணுடன் நேரத்தை நீட்டிக்கப் பிடிக்காது. அவன் அவளுடன் நேரத்தைச் செலவிடத்தானே உடை எடுக்க வேண்டும் என்று அன்னை கூறியதாகச் சொல்லியது. காதலில் குட்டிக் குட்டி பொய்களும் அழகுதானே! அது தம் இணையுடன் சற்று நேரம் இருக்கலாம் என்றால் பொய்மையும் வாய்மையே!
மணலை உதறியவர்கள் மீண்டும் பயணித்தனர். முகிக்கு அவனுடன் புதிய அனுபவம். அவள் வேலை சார்பாக ஆண்களுடன் பழக நேர்ந்திருக்கிறது. அதைத் தாண்டி அந்நிய ஆணுடன் இவ்வாறு சென்றதில்லை. அதுவும் இப்படியொரு நட்புக்கும், காதலுக்கும் இடையில் இருப்பவனுடன் சென்றதில்லை. சௌகார் பேட்டையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் வாகனத்தை நிறுத்தக் கடையில் உள்ள பணியாளர்கள் அவர்களை வரவேற்றனர்.
“என்ன மேம் பார்க்கணும்?”
“சேரீஸ், சுடி மாதிரி.”
“ஃபர்ஸ்ட் ஃபுளோர் மேம்.” என அவர்களுக்கு வழிகாட்ட இருவரும் மேலேறினர்.
“ஆதி சார், சில்க் சாரியா? இல்லை எந்த மாதிரிப் புடவை கட்டணும்? அப்புறம் உங்க சிஸ்டருக்கு எப்படி எடுக்குறது? சுடி, லெஹங்கா, ரன்னிங் மெட்டீரியல் இப்படி நிறைய இருக்கு.”
“அம்மாவுக்கு சில்க் எடுக்கலாம். சிஸ்டருக்கு ரன்னிங் மெட்டீரியல் எடுக்கலாம். அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி டிசைன் பண்ணிக்கட்டும்.”
“ஓகே. அவங்க போட்டோஸ் காட்டுங்க.”
அவன் புகைப்படத்தைக் காண்பித்ததும் அவர்களை நன்றாகப் பார்த்துக் கொண்டாள் முகி. கடைப் பணியாளரிடம் புதிதாக வந்த உடை ரகங்கள் அனைத்தும் எடுத்துப் போடச் சொன்னவள், உடையை எடுக்க ஆரம்பித்தாள்.
அவள் உடை எடுக்கும் பாங்கினை ரசித்தபடி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவள் எது காட்டினாலும், இந்த நிறம் தன் தன்னையிடம் உள்ளது, இந்த ரகத்தில் ஏற்கனவே வைத்திருக்கிறார்கள் எனப் பொழுதை ஓட்டி, ஒன்றரை மணி நேரம் கழித்து உடை எடுத்து முடித்தான்.
“பத்மமுகி, நீயும் டிரஸ் எடுத்துக்கோ. இவ்ளோ நேரம் பார்த்தியே உனக்கு ஏதாவது ரொம்ப பிடிச்சிருந்தால் அதை எடுத்துக்கோ.”
“எனக்கா?” என முகி யோசித்தாள்.
“ஓகே.” என்றவள் சில நிமிடங்கள் புடவைகளையும், சுடிதார்களையும் ஆராய்ந்தவள் தனக்குப் பொருத்தமாகக் கொஞ்சம் விலை அதிகம் உள்ள ஒரு புடவை மற்றும் சுடிதார் செட் என இரண்டு எடுத்தவள், அதைத் தனி பில் எனக் கடைப் பணியாளரிடம் கொடுத்து விட, பணத்தைக் கட்டும் இடத்தில் ஆதி அவளுடைய உடைக்குப் பணம் கொடுக்க முற்பட அவனுக்கு முந்திக் கொண்டு தனக்குப் பணம் கொடுத்து விட்டாள் முகி.
அவள் பணம் கொடுத்ததில் ஆதியின் முகம் விழுந்து விட்டது. ஆனால் முன் பின் தெரியாத நபர்களின் முன்னிலையில் பேச வேண்டாமென நினைத்தவன் வெளியில் வந்ததும், முகியிடம் கேட்டான்.
“ஏன் முகி, உனக்கு நான் வாங்கித் தரக் கூடாதா? நீ எதுக்கு பில் பே பண்ண?”
“நீங்க ஏன் எனக்குப் பில் பே பண்ணனும்?” என அவனைத் திருப்பிக் கேட்டாள்.
“முகி.”
“ஏஸ் அ ஃபிரண்டா நீங்க எனக்குச் சாப்பாடு வாங்கிக் குடுத்தீங்க. நான் சாப்பிட்டேன். டிரஸ் எடுத்துக் குடுக்கற அளவு நாம இன்னும் குளோஸ் இல்ல. அது மட்டுமில்லாமல் யார்கிட்டாயாவது வாங்கிப் பழகிட்டா மனசு திரும்பவும் கேட்கும். இப்ப உங்களுக்கு நான் நோ சொல்லிட்டாலோ இல்லை உங்க வீட்டில் நம்ம மேரேஜூக்கு சம்மதிக்கலை அப்படின்னாலோ என்ன செய்வீங்க? டோன்ட் ஸ்பெண்ட் மணி ஆன் மி.
அப்புறம் வழக்கமாக என்னை மாதிரி யாரும் இல்லாத பொண்ணுங்க, என்னதான் சம்பாதிச்சாலும் உங்களை மாதிரி ஹை கிளாஸ் ஆளுங்களை டேட் பண்ணால் சுலபமாக இந்த உலகம் கோல்ட் டிக்கர்ஸ்னு சொல்லிட்டுப் போயிடும். இது பேஸ் வேல்யூக்கும், பிரான்ட்ஸ், மணி இதுக்கு முக்கியத்துவம் குடுக்குற உலகம். வாழ்க்கையில் என்னுடைய பெரிய நோக்கம் என்ன தெரியுமா? யாருடைய தயவிலும் வாழக் கூடாது. ஏன்னா அப்படித்தான் நான் சின்ன வயசிலிருந்து வாழ்ந்திருக்கேன்.
இப்ப நான் வேலைக்குப் போறேன். சம்பாதிக்கிறேன். என்னோட லோன்ஸ் பே பண்ணிக்கிறேன். யாரையும் சார்ந்து நான் இல்லை. அதனால் நீங்க லவ் பண்ணறதால், நான் உங்களை டேட் பண்ண ஒத்துகிட்டதால் நீங்கக் குடுக்குற எல்லாத்தையும் அக்சப்ட் பண்ணுவேன்னு எதிர்பார்க்காதீங்க. நீங்கக் குடுக்குற எல்லாத்தையும் அக்சப்ட் பண்ணிக்க முடியாது. பொக்கே, சாக்லேட், ஃபுட் ஃபைன். அதைத் தாண்டி நான் எதுவும் இப்போதைக்கு அக்சப்ட் பண்ண முடியாது.”
தெளிவாகவும், மெல்லிய குரலில் அவள் பேசியது அவனை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. அவன் பார்த்த மற்றப் பெண்களைவிட அவள் வேறுபட்டிருந்தாள். ஒரு தடவை வெளியில் டேட் என்று கூட்டிச் சென்றாலே ஆயிரங்களில் செலவு வைக்கும் பெண்களில் இவள் தனித்துத் தெரிந்தாள்.
“ஓகே ஓகே, கூல்!”
“ஐ காட் யுவர் பாயிண்ட். நான் லவ் பண்ணுற பொண்ணுக்கு எல்லாமே வாங்கித் தர எனக்கும் ஆசை. அதான் கேட்டுட்டேன். இனி ஏதாவது வாங்கனும்னா உன்னைக் கேட்குறேன். ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே நான்தான் பார்ப்பேன். என்னோட வைஃப்ப பார்த்துக்கிறது என்னோட கடமை.”
அவன் கூறியதுக்கு தலை அசைத்தாள் முகி.
“அப்ப வொய்ஃப் ஆக ஓகேவா?” என அவளிடம் தலையைச் சாய்த்துக் குறும்புடன் ஆதி கேட்க, நொடியில் தான் கூறியவற்றை தவறாக எடுத்துக் கொள்ளாமல் பேச்சை மாற்றி இலகுவாக்கியவனைப் பார்த்து முகியின் முகத்திலும் லேசான வெட்கத் தூறல்களுடன் புன்னகையும்.
“பார்றா! ஆசைப்படலாம். பேராசைப் படக் கூடாது.” என்றாள்.
“இதில் எனக்கு உடன்பாடு இல்லை. பெரிய ஆசை, பெரிய நோக்கம் எல்லாமே அவசியம். அப்படித்தான் புதுப் புது விஷயங்கள் இந்த உலகத்திற்கு வரும்.”
“அதுவும் சரிதான்.” என ஒப்புக் கொண்டாள்.
“சரி இப்பப் போலாமா?”
“ஹ்ம்ம்… போலாம். ஆனால் நான் பேசுன எதையும் தப்பா எடுத்துக்க வேண்டாம்.”
“ஓகே, நோ இஸ்யூஸ். குடுக்குறவங்களுக்கு எப்படி இருக்கும்னு நானும் யோசிச்சிருக்கணும்.”
“தேங்க்ஸ் ஃபார் அண்டர்ஸ்டேன்டிங்.”
அவளிடம் புன்னகை முகமாகப் பேசி இருந்தாலும், அவன் மனதுக்குள் இனி முகிக்கு அத்தனையும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உறுதியாகி இருந்தது. எதற்கும் அவள் அப்படி உணரக் கூடாது என்ற முடிவெடுத்திருந்தான். தன்னுடைய நிலையைப் பற்றி நிமிர்வுடனும், தன்னம்பிக்கையுடனும் கூறியிருந்தவள் மீது பிரியம் இன்னும் பல மடங்கு விசுவரூபம் எடுத்திருந்தது. எதற்கும் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது என்று நினைத்த அவளுடைய சுய மரியாதை அவனுக்குப் பிடித்தே இருந்தது. அதில் அவனுடைய அன்பு நிராகரிக்கப்பட்ட போதும்.
அதன் பிறகு மகிழுந்தில் வேலை சார்ந்த விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே செல்ல மணி நான்கைத் தொட்டிருந்தது. முகிக்கும் நேரம் சென்றது தெரியவில்லை.
தன் வீடு வந்ததும் வாகனத்திலிருந்து இறங்கியவள், “தேங்க்ஸ் ஆதி!” என்றாள்.
“நான்தான் சொல்லணும். தேங்க்ஸ்! இனி அடுத்து எப்போ?”
“அடுத்தா? பார்க்கலாம். சொல்றேன்.” உடனே ஆதியின் முகம் இலேசாக வாடியது.
“அடுத்த சண்டே பார்க்கலாம்.” என்று மீண்டும் அவன் முகம் பார்த்துக் கூறியவுடன் அவன் முகம் மலர்ந்தது.
கிளம்பிச் சென்றவன் மனமெல்லாம் முகி மலர்ந்து மணந்தாள். அவன் வாகனத்திலும், அவளுடைய வாசனை நிரம்பி இருக்க, அவளை நினைத்தபடி வாகனத்தைச் செலுத்தினான்.
இந்தப் பக்கம் முகியின் மனமெங்கும் இன்பப் பூக்கள் பூத்து மலர்ந்து கொண்டிருந்தது. அவனுடன் பேச, பழகப் பிடித்திருந்தது. உணவு முதற்கொண்டு அனைத்தையும் கவனித்துப் பார்த்த பாங்கு, தன் கருத்தை ஏற்றுக் கொண்ட பாங்கும் பிடித்திருந்தது.
அவன் கொடுத்த பூங்கொத்தில் இருந்த சாக்லேட்டை எடுத்தவள் அதை ஒரு சிறிய பெட்டியில் போட்டு வைத்தாள். பூக்களை எல்லாம் எடுத்துப் பூச்சாடியில் போட்டு மேசையில் வைத்துக் கொண்டவள் அதை மெல்ல வருடிப் பார்த்தாள். வானொலியை ஒலிக்க விட அதில் பாடல் ஓடிக் கொண்டிருந்தது.
“ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…
சுவாரசியமானது காதல்…” என ஒலித்தது.
தொடரும்…
