அத்தியாயம் 13: உடைந்த மௌனத்தின் முதல் சொல்

யாழினுக்கு, ஆர்யனிடம் மனம் விட்டு பேச வேண்டும். உள்ளுக்குள் இருக்கும் வலிகளை வார்த்தைகளாக ஒப்படைத்தை மனதை ஒரு ஓய்வு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும், என்ற எண்ண ஓட்டங்கள் ஓடியபடி இருந்தது. ஆனால், அண்ணனை கொன்ற வேகத்தில் யாழினியை துரத்திய அடியாட்கள் கொடுத்த பதற்றத்தில் தொண்டை நரம்புகள் தசையோடு பின்னிக்கொண்ட வலியினை எப்படி இனி வார்த்தையாக கொண்டு வர இயலும்? ஆனாலும் முயற்சி செய்தாள்.

பாறைக் குகைக்குள் தீப்பந்தத்தின்  வெளிச்சம் சுவர்களில் நிழலாடி நர்த்தனம் ஆடியது. காதலர்களுக்கு பாதுகாப்பு கிடைத்த மகிழ்ச்சியை மழை மேகங்கள், கொட்டி தீர்த்து தங்களது சந்தோஷத்தையும், ஆசீர்வாதத்தையும்  வழங்கின. வெளியே பெய்யும் மழையின் சத்தம் ஆரியனுக்குக் கேட்கவில்லை என்றாலும், குகையின் தரை வழியாகப் பாயும் அந்த ஈரப்பதமான அதிர்வை அவன் உணர்ந்தான். ரியா குகையின் சிறிது தூரத்தில் துப்பாக்கியைச் சுத்தம் செய்துகொண்டிருக்க, ஆரியனும் யாழினியும் ஒரு மூலையில் அமர்ந்திருந்தனர்.

யாழினியின் முகம் வாடிப்போயிருந்தது. தன் அண்ணன் பிரகாஷின் நினைவுகள் அவளை அலைக்கழித்தன. ஆரியன் மெல்ல அவளது விரல்களைக் கோர்த்தான். அவளது கைகள் ஐஸ் கட்டியைப் போலக் குளிர்ந்திருந்தன. அவன் அவளது கைகளைத் தன் உள்ளங்கைக்குள் வைத்துத் தேய்த்து வெப்பமூட்டினான். அந்த உணர்வு சற்று கதகதப்பை அளித்தது.

ஆரியன் தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும்,  தனது டைரியைத் திறந்து எழுதினான்: “யாழினி, உன் அண்ணன் ஒரு மாவீரன். அவர் விட்டுச் சென்ற போராட்டத்தை நாமதான் முடிக்கணும். ஆனா, அதுக்கு முன்னாடி உன்னோட இந்தச் சோகம் மறையணும். எனக்காக ஒருமுறை சிரிப்பாயா?”

 

யாழினி அந்த வரிகளைப் பார்த்தாள். சிரிப்பு சில இல்லாத ஒரு உணர்வு, ஆர்யன் தனது வாழ்வில் வந்த போது அவ்வப்போது தனது உதட்டில் வந்து அமர்ந்த ஆகாய உணர்வு. அதை அவனே கேட்கும் பொழுது, அவளது கண்கள் கலங்கின. இன்னும் எவ்வளவு போராட்டம் காத்திருக்கிறது, போராட்டத்தின் முதல் அத்தியாயத்தில் இருப்பதை அவள் உணர்ந்தாள். ஆனால் நேசம் கொண்ட மனம் விரும்பி கேட்கும் ஒரு நல் உணர்வை அவள் எப்படி மறுப்பாள், ஆனாலும் வரவில்லையே அந்த புன்னகை. இந்த கருமை அடர்ந்த காட்டில், கருமை சூழ்ந்த சமுதாயத்தின் சீர்கேட்டை வெளிச்சம் பாய வைக்கும் சிறந்த நேர்கோட்டில் பயணிக்கும், கடினமான சூழலிலும் எப்படி சிரிக்க முடியும்?  அவள் மென்மையாக ஆரியனின் நெஞ்சில் தலை சாய்த்துக்கொண்டாள். அவனது இதயத்துடிப்பு அவளுக்கு ஒரு சீரான தாளம் போலக் கேட்டது. அவள் முதல் முதலில் அந்த தேவாலயத்தின் மரத்தின் அருகே அமர்ந்த போது நிகழ்ந்த ஆர்யனின் இதயத் துடிப்பு ஒலியில் கிடைத்த  அதே பாதுகாப்பு இப்போதும் உணர்ந்தாள். அது தான் கலைஞனின் சரிசம உணர்வோ?  ஆனால் அப்போது முன்பை போல இல்லாமல் அந்தத்துடிப்பில் ஒரு ஆழமான காதலையும் இப்போது  உணர்ந்தாள். சரிசம உணர்வு கூட காதலால் ஒரு படி ஏறலாம், இறங்கலாம். ஆர்யனின் இதயத் தாளத்தில் அவள் மேலும் உறுதியான பாதுகாப்பை நெருங்கினாள். மார்பில் சாய்ந்த முகம், இதயத்திலும் ஆணி வேர் போல படர்ந்திருப்பததை ஆர்யன் உணர்ந்தான், யாழினியின் தோள்களை மெல்லத் தட்டி ஒரு குழந்தையை பேணுவது போல ஆறுதல் அளித்தான்.

திடீரென்று யாழினி நிமிர்ந்து ஆரியனின் முகத்தைப் பார்த்தாள். அவளது இதழ்கள் துடித்தன. ஏதோ ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகு, அவள் தனது தொண்டையிலிருந்து ஒரு ஒலியைப் பிரசவிக்க முயன்றாள்.

“ஆ… ரி… ய…”

அந்தக் குரல் மிகவும் மெல்லியதாக, சிதைந்த நரம்பின் ஓசை போல இருந்தது. ஆரியனுக்கு அது கேட்கவில்லை. ஆனால், அவளது இதழ்களின் அசைவையும், அவளது கழுத்து நரம்புகள் துடிப்பதையும் வைத்து அவன் அதிர்ந்து போனான். அவன் கண்களில் வியப்பு மேலோங்கியது.

“யாழினி… நீ… நீ பேச முயற்சி பண்றயா?” என்று அவன் சைகை செய்தான்.

யாழினி மீண்டும் ஒருமுறை முயற்சி செய்தாள். இந்த முறை அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. “ஆ… ரி… யன்…” – அவள் அவனது பெயரை முழுமையாகச் சொல்லிவிட்டாள். ஆரியன் அவளது முகத்தை இரு கைகளாலும் ஏந்திக்கொண்டு, ஆனந்தக் கண்ணீருடன் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

அவளுக்குப் பேச்சுத் திறன் போகவில்லை, மாறாக அதிர்ச்சியால் உறைந்திருந்தது என்பதை அவன் உணர்ந்தான். அவனது காதல் அவளது மௌனத்தை உடைக்கத் தொடங்கியிருந்தது.

அந்தத் தருணத்தில் ரியா அருகில் வந்தாள். “அஞ்சலி… சாரி, யாழினி… உன்னோட குரல் தான் உன்னோட பலம். இப்போதைக்கு பாரத நாட்டின் நிலைமை மற்றும் நம்மோட நிலைய சொல்ல, மகாபாரதத்தில் இருந்து ஒரு நிகழ்வ சொல்றே! அத கேட்டா உன்னோட மனம் இன்னும் வலிமை பெரும்னு நினைக்கிறேன்.” ஆர்யனும், யாழினியும் ஆமோதிக்க ரியா மகா பாரத நிகழ்வை எடுத்துரைக்கத் துவங்கினாள். “ குருசேத்திர போர் முடிந்து, இனி பிறக்க போகும் கலியுகத்தில் மனிதர்கள் அப்படி இருப்பார்கள் என பகவான் கிருஷ்ணனிடம் தர்மன் கேள்வியை கேட்க… கிருஷ்ணரும், தர்மா நீ சற்று நகருக்குள் ஒரு நடை பயணம் சென்று வா என கூற, தர்மனும் சரி என்று நடை பயணத்தை துவங்கினார். அங்கு சென்ற போது இரண்டு தும்பிக்கை உள்ள யானையை பார்த்து சற்று அதிசயத்து போய், கிருஷ்ணரிடம் பார்த்த விஷயங்களைப் பற்றி பகிரும் பொழுது, கிருஷ்ணர் கூறுகிறார். கலியுகத்தில் மனிதர்களின் நிலை பேசுவது ஒன்றாகவும், செயல் ஒன்றாகும் இருக்கும், அரசை ஆட்சி செய்பவர்கள் இரண்டு கைகளாலும் மக்களின் அதிகாரத்தை, பணத்தை சுரண்டவே முயற்சி செய்வார்கள் அது தான் கலியுகத்தின் விதி, அதில் தர்மம் காணாமல் போயி, அதர்மம் அதன் உச்சத்தில் ஆட்சி புரியும் பொழுது மீண்டும் நானே அவதரித்து தர்மத்தை வாழ வைப்பேன்னு சொல்றாரு! அவர் வர வரைக்கும் நாம எப்படி சும்மா இருக்க முடியும்? நம்ம வேலையை நாம பாக்கணும்  இல்ல!”

ஒரு ராணுவ வீரருக்குள் இருக்கும் இலக்கியத் தன்மையை கண்டு இருவரும் வியந்து போயினர்.

  “ஆனா இப்போதைக்கு நாம கிளம்பணும். அமைச்சரோட ஆளுங்க காட்டோட எல்லை வரைக்கும் வந்துட்டாங்க.  நாம இங்கிருந்து ஆந்திரா  பார்டர் வழியா தப்பிக்கணும்,” என்றாள்.

ஆரியன் எழுந்து நின்றான். “அதான் மிலிட்டரியே கூட இருக்கும் போது நாம ஏன் பயந்து ஓடணும், எங்களுக்கு நீங்க பாதுகாப்பு கொடுங்க, ஆதாரத்தை நாங்க தர்றோம்”

“ சரி தான் ஆர்யன், ஆனா இருக்குற ஆதாரத்தை அதிகாரத்தில் இருப்பவங்க எளிதாக உடைத்து உங்க உயிரையும் குடித்து விடுவார்கள். இப்போதைக்கு உங்க உயிரை காப்பாற்றுவது என்னோட பொறுப்பு” என்று முகத்தில் அடித்தார் போல பேசி முன்னோக்கி நடந்து சென்றாள். ஆர்யன்  காது கேட்காதவனாக இருக்கலாம், ஆனால் ரியாவின் உடல் மொழியும், உச்சரிப்பும் ஆர்யனுக்கு நாட்டின் நடைமுறை விசித்திரமாக இருந்தது. யாழினி “ வா” என்ற ஒற்றை வார்த்தையை கஷ்டப்பட்டு பேசியபோது,  யாழினியின் குரல் கேட்ட ஒரு புதிய சக்தியை உணர்ந்தான். தன் காதலியின் குரலை முழுமையாக மீட்கும் போராட்டத்தில் அவன் ஒரு போர்வீரனாக மாறியிருந்தான். சரி நாட்டின் நிலைமை என்னவாக இருந்தாலும் என்னவளை காப்பாற்றுவது எனது கடமை, என மனதிற்குள் நினைத்துகொண்டு ரியா காட்டிய பாதையில் நடக்கத் தொடங்கினர்.

அவர்கள் குகையை விட்டு வெளியே வந்ததும்.  அந்த அடர்ந்த காடு நாட்டின் எதிர்மறை குணத்தை விட கடும் இருளாக இருந்தது. மழையின் வேகம் அதிகரித்திருந்தது. ரியா வேகமாக முன்னேறி சென்றாலும் அவளின் கண்கள், காதுகள் எல்லாம் காதலர்கள் இருவரையும் சுற்றியே இருந்தது.  ஆரியன் யாழினியின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.  அவனது அழுத்தமான  பிடியில் ஒரு பாட்டே பாடலாம் என வார்த்தைகள் உள்ளுக்குள் உருண்டோடினாலும் அவள் பேசும் முன் ஆர்யன், “இனி உன் குரலாக நான் இருப்பேன், என் இசையாக நீ இரு,” என்று அவன் சைகையில் சொன்னான். அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த கடினமான சூழலிலும் ஒரு மென் சிரிப்பை உதிர்த்தாள். ஆர்யனுக்கு அது உத்வேகத்தை  அளித்தது.

காட்டின் இருளுக்குள் அவர்கள் மீண்டும் ஒரு பெரும் பயணத்தைத் தொடங்கினர். கடினமான பாறைகளும், சரிந்து ஓடும் சிறு ஓடைகளும் அவர்களின் பாதையை மறிக்கவில்லை.  அவர்களின் மன திடம், பெரும் மரங்களும் பாதை வகுத்து தரும் நிலையில் தான் இருந்தது.  நடை சில மணி நேரத்தில் ஒரு ஓட்டமாக மாறியது. அதற்கு காரணம் முன்னாள் செல்லும் ரியா தான்,  ஆனால் இம்முறை அவர்கள்  பயத்தில் ஓடவில்லை; ஒரு இலட்சியத்திற்காக நகர்ந்தனர். 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page