அத்தியாயம் 13

விக்னேஷ் காரில் வராமல் பேருந்தில் தான் வந்தான். பேருந்து விட்டு இறங்கியதும் நெமிலியகரம் என்ற பேர் பலகை அவனை வரவேற்றது. சுற்றிலும் கண்ணுக்கு குளிர்ச்சியான தென்னை மரங்கள்,  பச்சைபசேலென்ற வயல் வெளியும் பார்க்க ரம்மியமாக இருந்தது. அவனுடைய தந்தை அவனிடம் பேருந்தை விட்டு இறங்கியவுடன் மாரிமுத்து என்ற பெயரை சொன்னாலே அவர் இருக்கும் இடத்தை சொல்லுவார்கள் என்று கூறி இருந்தார். எனவே தன் பெட்டியை எடுத்துக் கொண்டு நடந்தான். காலை நேரம் ஆனதால் பறவைகள் கிரீச் கிரீச் என்ற சத்தம் கேட்க இனிமையாக இருந்தது. பரபரப்பான சூழ்நிலையில் வாழ்ந்த அவனுக்கு இந்த இடம் புது உலகத்திற்கு   வந்தது போல் இருந்தது. சிறிது தூரம் சென்றதும் ஒரு டீக்கடை தென்பட்டது. இங்கு தேநீர் குடித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவும்  அந்த கடையை நோக்கி சென்றான். ஒரு டீ சொல்லிவிட்டு அங்கிருந்த மர நாற்காலியில் அமர்ந்தான். டீ விற்பவர் அவரிடம் ஊருக்கு புதுசா சார்? ஆமாம். இங்கு மாரிமுத்து அய்யா வீடு எங்கிருக்கு? என்று கேட்க, அவருடைய வீடு இங்கிருந்து ஒரு மைல் நடந்து இடது புறமா திரும்பினா ஒரு மாட்டு கொட்டகை வரும்  அது பக்கத்தில் சின்னதா குடிசை வீடு தெரியும். அதுதாம்பா அவருடைய வீடு.  நீங்க என்ன அவருக்கு உறவா? என்று வினவ, இல்லைங்க. அவருக்கு தெரிஞ்சவர்தான், அவரை பார்க்கலாம்னு வந்தேன் என்று கூறி அதோடு நிறுத்திவிட்டான். டீ சுமாராய் தான் இருந்தது. அனால் வெட்டவெளியில் இயற்கை காற்றை சுவாசித்து டீ குடிப்பது ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. டீ கடைக்காரரிடம் ஒரு தலையசைத்துவிட்டு அவர் கூறிய இடம் நோக்கி சென்றான். 

 

வீடு அடைந்ததும் வீட்டில் முன் சாணி தெளித்து அழகாக கோலம் போட்டு இருபுறமும் விளக்கு ஏற்றி வைத்திருந்தார்கள். வீடு சிறியதாக தோன்றினாலும் பார்க்க அழகாக இருந்ததை கண்டு மாட மாளிகை அழகு கூட இதனிடம் தோற்று தான் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீட்டின் கதவை தட்ட, நடுத்தர பெண்மணி வந்து கதவை திறந்தார். அவரை பார்க்கவே அவ்வளவு மங்களகரமாக இருந்தார், முகத்தில் மஞ்சள் பூசி நெற்றியில் சற்று பெரியதாக போட்டு வைத்து  காதில் சிறிய கம்மல், கழுத்தில் மஞ்சள் கயிறு, தலையை வாரி கொண்டை  போட்டு அதில் சிறியதாக பூ  வைத்திருந்தாள். அவ்வளவு தான் அவருடைய ஒப்பனை.  தம்பி யாருப்பா நீங்க என்று கேட்டதும் நான் மாரிமுத்து அய்யாவை  பார்க்க வந்திருக்கேம்மா என்று கூறியதும் , நேற்று அவர் சொன்னார் விக்னேஷ்னு ஒரு தம்பி வருவாருனு அவரு நீங்க தானா? ஆமாமா என்று கூறியதும், உள்ளே வாங்க தம்பி என்று கூறி ஒரு சிறு நாற்காலியை இழுத்துப் போட்டார். இல்லமா, நான் கீழேயே உக்காந்துகிறேன் என்று கூறியதும் நீங்க படிச்சவங்க பெரிய வேலை பாத்தவங்க  நீங்க போய் கீழே உக்காந்துகிட்டு என்று அவர் இழுக்க பரவாயில்லைம்மா நான் இனிமே இங்கே தானே தங்க போறேன், எனக்கு மரியாதை எல்லாம் வேண்டாம்மா என்னையும் உங்க வீட்டில ஒருத்தரா  நடத்தினாலே போதும் என்று சின்ன சிரிப்புடன் கூறினான்.சரிப்பா. இருப்பா, பாய் எடுத்து போடறேன் என்று பாய் போட்டு அவனை அமர வைத்தாள். அது ஒரு சிறிய கூடம். அதில் சின்னதாக தடுத்து சமையலரையாகியிருந்தார்கள். சற்று தள்ளி ஒரு அறை இருந்தது. அந்த அறை மூடியிருந்தது. அவன் வரும் போதே பார்த்தான். வெளியே குளியலறை மற்றும் கழிவறை தனித்தனியாக இருந்தது. அவ்வளவு தான் அந்த வீடு. ஆனால் பார்க்க சுத்தமாக அழகாக இருந்தது. சற்று நேரத்தில் மாரிமுத்து அய்யாவும் வர அவன் எழுந்து நின்றான். வா, தம்பி உட்காருப்பா. நான் வெள்ளெனவே எழுந்து பயிருக்கு தண்ணி பாய்ச்சிட்டு வரேன். அதனால் தான் நீ வரும் பொது நான் இல்லை. பரவாயில்லை ஐயா என்றதும் கற்பகம் தம்பிக்கு காபி தண்ணி குடுத்தியா?என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும்வேணாங்க  ஐயா, நான் வரும்போதே டீ குடித்துவிட்டு தான் வந்தேன்.என்று கூற, சரிப்பா கொஞ்ச நேரத்தில் டிபன் ஆயிடும். நீங்க போய் குளிச்சிட்டு வாங்க, சாப்பிட்டு பேசலாம் என்றதும்  அவனும் தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றான். குளித்து முடித்து வந்ததும் அவன் எதிரே சுட சுட இட்லியும், மணக்க மணக்க சாம்பார் மற்றும் புதினா கொத்துமல்லி சட்னியும் இருந்தது. சாப்பிட வாப்பா என்று இருவரும் அழைக்க, அவனும் அமர்ந்து சாப்பிட்டான். உணவு ருசியாக இருக்கவே ஒரு பிடி  பிடித்து விட்டு திண்ணையில் வந்து அமர்ந்தான்.   

 

அதற்குள் வீட்டிற்குள் இருந்து சத்தம் கேட்டது. ஜெயந்தி எழுந்திருடி, எவ்வளவு நேரம் தூங்குவே, கல்லூரிக்கு நேரமாகுதுலே என்று கற்பகம் குரல் கேட்க,எழுந்திக்கிறேமா என்று பதில் வந்தது. சாப்பிட்டு விட்டு மரிமுத்துவும் அவன் அருகில் வந்து அமர்ந்தார். தம்பி நீ விவசாயம் செய்ய போறதை நினச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு இரண்டு பிள்ளைகள். பெரியவன் எனக்கு இந்த விவசாயம் எல்லாம் வேண்டாம் நான் சென்னையில் தான் வேலை செய்வேன் என்று சென்னைக்கு போய்ட்டான். பொண்ணு இப்பதான் காலேஜ் படிக்குது. ஆனால் அதுக்கும் விவசாயத்தில் விருப்பம் இல்லை. நல்லா படிச்சிட்டு வக்கீல் வேலை செஞ்ச நீங்க அதையெல்லாம் விட்டுட்டு  இங்க வந்திருக்கேனா ரொம்ப பெரிய விஷயம்ப்பா. உனக்கு என்ன உதவி வேணும்னு சொல்லு என்னால முடிந்த உதவியை நான் மனசார செய்றேன் என்று சொல்ல, அய்யா நானும் உங்க கூட வயலுக்கு வறேன்யா . எப்படி  உழுவணும், எப்போ விதை போட்டு தண்ணி பாய்ச்சணும், எந்த நேரத்தில் அறுவடை செய்யணும்னு  எல்லாத்தையும் கத்துக் கொடுங்க. நீங்க ரொம்ப அனுபவசாலி உங்க கிட்ட கொஞ்ச நாள் இருந்து இதையெல்லாம் தெரிஞ்ச பிறகு நான் உங்ககிட்ட நிலத்தை வாங்கி பயிர் செய்யறேன் என்று கூறியதை கேட்ட அவர் நல்லது தம்பி, எந்த தொழில் செஞ்சாலும் அதை பத்தி ஆதி முதல் அந்தம் வரை  தெரிஞ்சிட்டு அதிலே பயிற்சி எடுத்திட்டு பிறகு அதில் இறங்கணும் என்பதை நல்லா தெரிஞ்சு வச்சியிருக்கிறேப்பா. நீ கண்டிப்பா பெரிய ஆளா வருவே என்று அவர் கூற, உங்களை போன்ற பெரியவங்க ஆசிர்வாதம்  இருந்தால் நான் கண்டிப்பா ஜெயிப்பேன் அய்யா. நல்லதுப்பா. உனக்கு பயண களைப்பா இருக்கும். கொஞ்சம் ஓய்வெடு, நாம் மத்தியானமா வயலுக்கு போவோம் எனக்கும் ஒரு சின்ன வேலை இருக்கு. நான் முடிச்சிட்டு வரேன் என்று கூறி அவர் கிளம்பியதும், ஹாய் அண்ணா,என்று ஒரு இனிமையான குரல் அழைக்க விக்னேஷ்  திரும்பி பார்த்தான். 

 

அங்கு ஒரு ஒடிசலான பாவாடை தாவணி போட்டுக் கொண்டு நீண்ட முடியை பின்னி அழகான முக வடிவுடன் சின்னதாய் ஒரு பெண் நின்று இருந்தாள். . எந்த வித ஒப்பனையும் இல்லாமலே அவள் அழகாக இருந்தாள். அவனை பார்த்து சிரித்து எப்படி இருங்கீங்க அண்ணா ? என் பேரு  ஜெயந்தி. நான் இந்த வீட்டின் குட்டி இளவரசி ,பக்கத்தில் இருக்கும் கல்லூரியில்தான் படிக்கிறேன்.நேத்து அப்பா சென்னையில் இருந்து ஒருத்தர் வருவாரு, அவர் இங்கே நம்ம கூட தான் தங்குவார் அவரை நல்லா பாத்துக்கணும்னு சொன்னாரு. நானும் வயசான ஒருத்தர் வருவார்னு நினச்சா இவ்வளவு யங்கா, ஹாண்ட்சம்மா இருப்பீங்கனு நினைக்கலே. நீங்க லாயரா வேலை செஞ்சதா சொன்னாங்க, அதை விட்டுட்டு விவசாயம் செய்ய வந்துருகீங்க என்று கேட்டதும், அவன் எல்லா படிச்சவங்களும் வேற வேற வேலைக்கு போய்ட்டா பயிர்தொழிலை யார் பார்க்கறது அதனாலே தான் நான் இங்கு வந்திட்டேன்.  எல்லோருக்கும் சோறு   முக்கியம்மா அது இல்லனா எந்த வேலையும் செய்யமுடியாது என்று கூற அவள் அதைக் கேட்டு வக்கீல் இல்ல அதான் நல்லா  பேசுறீங்க என்று கூறி கலகலவென சிரித்தாள். அவன் மற்றவர்களிடம்  இவ்வளவு பேசியது  அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவன் நீதிமன்றத்தில் தான் எடுத்துக் கொண்ட வழக்குக்காக பேசுவானே தவிர வீட்டில் உள்ளவர்களிடம் இவ்வளவு சகஜமாக பேசியதில்லை. ஏன் தன் தாயிடம் கூட இவ்வளவு இலகுவாக பேசியதில்லை. இந்த பெண்ணை கண்டவுடன் அவளுடைய கள்ளக் கபடமற்ற பேச்சு, அவளுடைய சாந்தமான முகமும்,  தனக்கு ஒரு தங்கை இருந்தால் அவளும் தன்னுடன் இப்படி தான் பேசுவாள் என்ற எண்ணம் ஏற்படவே அவன் சகஜமாக பேசினான். சரிண்ணா. எனக்கு கல்லூரிக்கு நேரம் ஆயிடுச்சி. இன்னும் கொஞ்சம் நேரம் இங்க இருந்தா அம்மா வைவாங்க. நாம சாயந்தரம் பேசலாம்  என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றாள். அவனுக்கு ஏனோ இந்த இடமும் இங்கு இருக்கும்  மனிதர்களையும் மிகவும் பிடித்து போனது. 

 

  வர்ஷினி கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே அங்கு படிக்கும் சீனியர் மாணவன் பிரகாஷ் இவளிடத்தில் வந்து தன் காதலை சொல்லியிருந்தான். அவன் தான் இவளை ரேக்கிங் இருந்து காப்பாற்றினான். அன்று இவளை பார்ததிலிருந்தே இவளை பிடித்து விட உடனே தன் காதலை பூங்கொத்து கொடுத்து சொல்லிவிட்டான். வர்ஷினி அவனை சூழ்ந்து எல்லோரும் இருக்கும் பட்சத்தில் அவன் அவமானம் பட கூடாது என்று அதனை வாங்கி கொண்டாள். பின் அவனை தனியே சந்தித்து எனக்கு காதலில் எல்லாம் நாட்டம் இல்லை என்று கூறி அந்த பூங்கொத்தை அவனிடமே திருப்பி தந்துவிட்டாள். இருந்தும் அவன் நான் ஒரு வருடம் இங்கு தான் படிப்பேன். எப்ப வேணுனாலும் என் மேல் உனக்கு காதல் வரலாம் அதுவரை நான் உனக்காக காத்திருப்பேன் என்று கூறி சென்றுவிட்டான். அன்று முதல் அவன் தினமும் அவளுடன் பேசாமல் செல்லமாட்டான். அவளுடைய துறையே அவனும் என்பதாலும் அவன் சீனியர் என்பதாலும் அவனிடம் கடுமையாக நடந்துக்க கொள்ள முடியாமல் பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக சென்று விடுவாள். 

 

அன்றும் அவள் கல்லூர விட்டு வெளியே வரும் போது பிரகாஷ் வந்தான். என்ன வர்ஷினி வீட்டுக்கு போறியா? நான் இன்னைக்கு எங்கப்பாவோட கார் கொண்டு வந்திருக்கேன். வாயேன் போகலாம் என்று அவன் கூப்பிட்டதும், வேண்டாம் நான் பஸ்சிலே போய்க்கொள்கிறேன் என்று மறுத்து நடந்து கொண்டிருந்தபோது கௌரியை பார்த்துவிட்டாள்.  பிரகாஷ் வந்து மறுபடியும் அழைக்க சரி நீங்க இவ்வளவு கூப்பிடறதாலே நான் வரேன் என்று கூறி பிரகாஷ் வண்டியில் ஏறிக்கொண்டாள். அதை பார்த்துக்கொண்டிருந்த கௌரிக்கு அவளுடைய எண்ணம் புரிந்து விட்டது. அவன் மனதிற்குள் என்னை வெறுப்பேத்தறாளாம்!  உன்னை நான் சின்ன வயசிலிருந்தே பாக்கிறேன்,உன்னை பத்தி எனக்கு தெரியாதா ஸ்வீட்டி ! என்று நினைத்துக்கொண்டே அங்கிருந்து அகன்றான்.  காரில் ஏறிய வர்ஷினி சிறிது தூரம் சென்றதும் கௌரி தன்னை பின்தொடர்கிறானா என்று கண்ணாடி வழியாக பார்த்தாள். அவன் வரவில்லை என்று தெரிந்ததும் காரை நிறுத்து பிரகாஷ், என்று கூறியதும், ஏன் வர்ஷினி என்னாச்சு? இங்கேயே ஏன் நிறுத்த சொல்ற ? நான் உன்னை வீட்டிலேயே விடுறேன்  என்று கூறியதும் நாசமாய் போச்சு என்று நினைத்துக்கொண்டு, இல்லை பிரகாஷ் இப்ப தான் ஞாபகம் வந்திச்சு எனக்கு ஒரு  சின்ன வேலை இருக்கு நான் இங்கேயே இறங்கிக்கிறேன் ப்ளீஸ் காரை நிறுத்துங்க என்று சொன்னதும், என்ன வேலை வர்ஷினி, எங்கே போகணும்னு சொல்லு நானும் உன் கூட வரேன் என்றதும் அது என்னுடைய பர்சனல் அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது. ப்ளீஸ் இங்கேயே காரை நிறுத்துங்க என்றதும் அவளை ஏமாற்றமாக பார்த்து சரி வருஷ் என்று ஓரமாக காரை நிறுத்த வர்ஷினி அவனிடம் நன்றி கூட சொல்லாமல் விட்டால் போதும் என்று விடு விடுவென்று அங்கிருந்து நடந்து சென்றாள். பிரகாஷ் கார் அங்கிருந்து சென்றதும் ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள். ஆட்டோவில் வந்து இறங்கியதும் எதிரே கௌரி புன்சிரிப்போடு நின்றுக் கொண்டிருந்தான். உடனே வர்ஷினி திரும்பிக் கொண்டு இந்த கருவாயன் அதுக்குள்ள இங்க எப்படி வந்தான், இவன் ஐ.டி லதான் வேலை பாக்கிறானா? அல்லது எனக்கு தான் பாதுகாப்பு அதிகாரியா இருக்கானானு தெரியல. நெட்டையன் என்னை பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கான் என்று அவனை திட்டியவாறே வீட்டுக்குள் நுழைந்தாள்.   

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண்மணியே காதலில் கரைந்திட வா
794 10 4
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page