ஆந்திரா எல்லையை ஒட்டியுள்ள அந்த அடர்ந்த காட்டுப்பகுதியின் சோதனைச் சாவடி (Check-post) இன்று வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் இருந்தது. அமைச்சரின் செல்வாக்கு மாநில எல்லைகளையும் தாண்டிப் பரவியிருந்தது. ஒவ்வொரு வாகனமும், ஒவ்வொரு மனிதனும் அங்கு தீவிரமாகச் சோதிக்கப்பட்டனர். ஆரியன் மற்றும் யாழினியின் புகைப்படங்கள் அந்தச் சோதனைச் சாவடியின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன.
ரியா அவர்களுக்கு ஒரு புதிய திட்டத்தைக் கொடுத்தாள். “அஞ்சலி, ஆரியன்… இப்போ நாம நேரடியா பார்டரைத் தாண்ட முடியாது. ஆனா, இங்க ஒரு மலை கிராமத்துல இருந்து வர்ற ஒரு நாடோடி இசைக்குழு (Folk Troupe) ஒரு திருவிழாவிற்காக இப்போ இந்த வழியா கடக்கப்போறாங்க. அவங்களோட சேர்ந்து நாமளும் ஒருத்தரா போகணும்,” என்றாள்.
யாழினிக்கு ஒரு பாரம்பரியக் ஆந்திர உடை (kalamkari sarees) வழங்கப்பட்டது. ஆரியன் தனது நவீன ஆடைகளைக் களைந்துவிட்டு, ஒரு நாடோடிப் பாடகனைப் போல வேட்டி அணிந்து, தலையில் ஒரு பெரிய தலைப்பாகையைக் கட்டிக்கொண்டான். அந்தத் தலைப்பாகை அவனது முகத்தின் பாதியை மறைத்தது.
யாழினி ஆரியனைப் பார்த்தாள். அந்த வேடத்தில் அவன் ஒரு மலைக் கடவுளைப் போல கம்பீரமாக இருந்தான். ஆரியன் அவள் கையைப் பிடித்துச் சைகையில் கேட்டான்: “நான் எப்படி இருக்கிறேன்?”
யாழினி தன் விரல்களால் அவன் கன்னத்தை வருடினாள். அவளது கண்களில் தெரிந்த காதல் “நீ எப்போதுமே என் ஹீரோ தான்” என்று சொன்னது. அந்த இக்கட்டான சூழலிலும் ஆரியன் அவளைத் தன் பக்கம் இழுத்து நெற்றியில் முத்தமிட்டான். “இந்த வேடம் கலைவதற்குள் நாம் பாதுகாப்பான இடத்திற்குப் போய்விடுவோம்,” என்று அவனது மௌனமான முத்தம் உறுதியளித்தது.
சில நிமிடங்களில் தம்பூரா, கும்மெட்டா, ஜமிடிகா, கின்னரா போன்ற இசைக்கருவிகளை வாசித்தவாறே பழங்குடி இசைக்குழு வந்தது. அவர்களிடம் ரியா பேசியதும், அவர்களும் ஒப்புக்கொண்டனர். அந்த நாடோடி இசைக்குழுவுடன் காதலர்கள் இருவரும் இணைந்தனர். ஆரியன் கையில் ஒரு பழைய தம்பூரா இருந்தது. வயதான இசைக்குழுவின் மூத்த தலைவர் ஒரு பாரம்பரிய பாடலை பாட, உடன் இருந்த அனைவரும் சேர்ந்து பாடினர்.
“ எல்லாம் வல்ல மலையே எங்கள் அரசா…
நடமாடும் நாட்டியமும் உங்களை காணவே…
அல்லாடும் வாழ்வை சிறக்க வா, துணையே…
வருங்காலம் இனிதாய் அமைக்க, வழியாய் வருவாயா…
என சுந்தர தெலுங்கில் நயம் பட, பாட உடன் இருந்த சிறுவ, சிறுமியர் ஆடலோடு நடை பயணத்தை துவங்கினர், ஆர்யனுக்கு அவனுக்குச் சத்தம் கேட்காது என்றாலும், அந்தக் குழுவினர் இசைக்கும் தாளத்தின் அதிர்வுகளைத் தனது கால்களின் வழியாக உணர்ந்து, அதற்கு ஏற்பத் தன் உடலை அசைத்தான். அவனது நடனம் வித்தியாசமா இருந்தாலும் சிறுவர்கள் அவனோடு சேர்ந்து ஆடியதில் அளப்பரிய மகிழ்ச்சி உண்டானது அவனுக்குள். யாழினி அவனுக்குப் பின்னால் தலையைக் குனிந்தபடி, ஆர்யனை ரசித்தே தொடர்ந்து நடந்தாள். ரியா ராணுவ மையத்தின் கட்டுப்பாட்டின் உள்ள ரகசியபாதை வழியாக சோதனை சாவடியை கடந்து சென்றாள். அவளால் இவர்களையும் அழைத்து வர முடியும். ஆனால் நாட்டுக்குள் எங்கு, எப்படி விலை போவார்கள் என்று உறுதியாக நம்ப முடியாது என்பதால் காதலர்களை இப்படி ஒரு இசை குழுவில் இணைத்து பயணிக்க வைத்தாள். மேலும் ராணுவ மையத்திற்குள் பொதுமக்கள் செல்வது தடை செய்யப்பட்டதாகும்.
சோதனைச் சாவடி வந்தது. ஒரு தடித்த மீசை வைத்த போலீஸ்காரர் அவர்களை வழிமறித்தார்.
“நிறுத்துங்க! யார் நீங்க?”
குழுவின் தலைவன் ஏதோ பதில் சொன்னான். போலீஸ்காரர்களின் கண்கள் ஒவ்வொருவர் முகத்தையும் ஆராய்ந்தன. அவர்கள் வைத்திருந்த இசை கருவிகள் மற்றும் திருவிழாவிற்கு கொண்டு செல்லும் பொருட்கள் என்று அத்தனையும் ஆராய்ந்தனர். தடித்த மீசைக்காரன் அவர் ஆரியனின் அருகே வந்தான். ஆரியனின் இதயம் வேகமாகத் துடித்தது, ஆனால் முகத்தில் எந்தச் சலனமும் காட்டவில்லை. போலீஸ்காரர் ஆரியனின் தலைப்பாகையைச் சற்று விலக்கிப் பார்க்க முயன்றார். ஆனால் குழுவின் பெரியவர் சாமிக்காக வேண்டிக் கட்டியை தலைப்பாகையை அவிழ்த்தால் சாமி குற்றமாகிவிடும் என எவ்வளவு வழக்காடியும் போலீஸ் காரர்கள் கேட்க வில்லை.
யாழினிக்கு உயிர் போவது போல இருந்தது. அவள் சட்டென்று ஒரு புத்திசாலித்தனமான காரியம் செய்தாள். அவள் கையில் இருந்த பித்தளைத் தாளத்தை (Cymbals) ஓங்கித் தட்டினாள். அந்தச் சத்தம் போலீஸ்காரரின் கவனத்தைத் திசைதிருப்பியது. அவள் தன் கைகளை அசைத்து, ஒரு ஊமைப் பெண் போலச் சைகை செய்து, ஏதோ ஒரு பசியால் துடிப்பது போல நடித்தாள். அருகில் இருந்த கற்பிணி பழங்குடி பெண்ணையும் சுட்டிக்காட்டி, உள்ளிருக்கும் குழந்தைக்கும் பசிக்கும் என பாவனை செய்தாள்.
அவளது நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருந்தது. போலீஸ்காரர் பரிதாபப்பட்டு, “சரி, சரி… போங்க…” என்று கையை அசைத்தார்.
அவர்கள் எல்லையைத் தாண்டினர். ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடந்த பிறகுதான் மூச்சு விட்டனர். காட்டின் ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் பாரம்பரிய உஜ்ஜடி டோலே( ujjadi tole) பழங்குடி மக்களின் முதியவர்களிடம் ஆசி பெறுதல் திருவிழா கலை கட்டியிருந்தது. சுற்றி இருந்த மலைக்கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்த பள்ளத்தாக்கு பகுதியே தாய் கிராமம். இங்குள்ள மூத்த மக்களின் ஆசி பெறுவது வருடம் தோறும் நடக்கும் பாரம்பரிய திருவிழா. திருவிழாவில் கலந்து கொண்ட ஆர்யன், மற்றும் யாழினி பழைய சோகத்தை மறந்து இருந்தனர். முதியவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக கிராம இளைஞர்கள் இசைக் கருவிகளை வாசித்தனர். யாழினிக்கும், ஆர்யனுக்கும் அவர்களின் பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது. சிறுவ, சிறுமியர் இசைக்கு தக்கபடி ஆட்டம் ஆடதொடங்கினர். அருகில் இருந்த ஆர்யனையும் ஒரு சிறுமி இழுத்து சென்று ஆட செய்தாள், ஆர்யன் முதலில் தயங்கினாலும் இசைக்கருவிகளின் சிலிர்ப்பூட்டும் இசையில் ஆட்டத்தை துவங்கினான். யாழினுக்கு ஆர்யனை பார்க்க, பார்க்க சிரிப்பு தான் வந்தது, அவனது குழந்தை தனமான நடனம் யாழினுக்கு பூரிப்பைத் தந்தது. தன்னை பார்த்து மகிழ்ந்த யாழினியை இழுத்துக்கொண்டு வந்து அவளையும் ஆட செய்தான், இருவரும் சோகம் மறந்து உற்சாகமாக நடனம் ஆடினர். ஆட்டத்தின் முடிவில் முதியோர்களின் ஆசி பெற்றது, புதிய உற்சாகத்தை வழங்கியது, அது யாழினியின் மன அழுத்தத்தை வெகுவாக குறைத்து பேச்சு வரும் அளவிற்கு ஒரு அதிர்வை கொடுத்தது. ஆனால் இன்னும் ஒரு இடத்தில் நிம்மதியாக இல்லாதது, அண்ணனின் மரணத்திற்கு நீதி கிடைக்காத அழுத்தம் அவளை ஆரோக்கியம் ஆகவிடாமல் தடுத்தது. இருவரும் மலை மக்களிடம் பிரியா விடை பெற்று, அவர்களின் ஆலோசனைபடி காட்டைக் கடந்து ஊருக்குள் வந்தனர். ஒரு அடர்ந்த சவுக்குத் தோப்பில் ரியா அவர்களுக்காகக் காத்திருந்தாள்.
அவர்களைப் பார்த்ததும்,
“கிரேட் எஸ்கேப்!” என்றாள் ரியா உற்சாகமாக.
ஆனால் ஆரியன் யாழினியை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டான். அவளது புத்திசாலித்தனம் மட்டும் இல்லையென்றால் இன்று அவர்கள் சிக்கியிருப்பார்கள். யாழினி ஆரியனின் நெஞ்சில் வெட்கத்தோடு சாய்ந்து கொண்டாள்.
“நீ என் உயிரைக் காப்பாத்திட்ட யாழினி,” என்று ஆரியன் சைகையில் சொன்னான்.
யாழினி மீண்டும் பேச முயன்றாள். “ஆ… ஆ… ஆரியன்… ந… நாம்… ஜெ… ஜெயிப்போம்,” என்று திக்கித் திக்கிச் சொன்னாள்.
அவளது குரல் மீண்டும் வரத் தொடங்குவது ஆரியனுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்தது.
“ஆமா, எதுக்கு இவ்ளோ லேட் ஆச்சு, வர வழியில ஏதாவது பிரச்னையா?”
ஆர்யன் ரியாவின் உதட்டசைவை கவனித்து,
“அதுவா… நாங்க திருவிழால கலந்துகிட்டோம், ஒரே ஆட்டம் பாட்டம் தான், அதான் லேட்”
ரியாவிற்கு அவர்கள் செய்தது பாதுகாப்பு இல்லாதது எனத் தெரிந்தும், அந்த திருவிழா பங்கேற்பு அவர்களின் மனதின் அழுத்தத்தை சீராக்கி, உற்சாகமூட்டியதில் மகிழ்ச்சி தான் அடைந்தாள். ஆந்திராவில் அந்தப் பச்சைப் பசேல் வயல்வெளிகளுக்கு நடுவே, அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு புதிய காதல் அத்தியாயம் தொடங்கியது. ஆனால், அதே சமயம் அமைச்சரின் கைபேசிக்கு ஒரு மெசேஜ் சென்றது: “அவர்கள் ஆந்திராவிற்குள் நுழைந்துவிட்டார்கள்.” என்று. எவ்வளவு பாதுகாப்பாய் கடந்து சென்றாலும் இவர்களின் நகர்வை ஏதோ ஒரு கண்கள் கண்காணித்துக்கொண்டு இருப்பதை காதலர்கள் அறியவில்லை, ரியாவும் அறியவில்லை. ஆனால் காசி அறிந்திருந்தான். காசியே இவர்களை கொடைக்கானல் முதல் கவனித்து வருகிறான். காசியின் தொழில் நுணுக்கம் என்னவெனில், முதலில் சிறு அடியாட்களை அனுப்பி எதிரியின் பலத்தை அறிவதே. இப்போதும் அவ்வாறே செய்தான். இனி என்னனென்ன செய்ய இருக்கானோ!
