அத்தியாயம் 15

கௌரி, கரண் சொன்ன அந்த ஐந்து நட்சத்திர விடுதியை அடைந்ததும் அங்கு பிரகாஷின் நண்பன் ஒருவன் மட்டும் இருந்தான். வேறும் யாரும் இல்லை. கௌரி அவனிடம் விவரத்தை கேட்க, அவன், வர்ஷினி உடம்பு சரியில்லைன்னு சொன்னதாலே அவளை அப்பவே பிரகாஷ் வீட்ல விடுறதா சொல்லி தன் காரிலேயே கூட்டிட்டு போயிட்டானே, இன்னும் வர்ஷினி வீட்டுக்கு வரலையா என்றதும் கௌரிக்கு பயம் வந்து ஒட்டிக்கொண்டது. என்னது அவன் கூட போனாளா, போன தடவையே அவன் கூட காரில் போகாமல் பாதியிலேயே  இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு போனாளே, இப்போ எப்படி அவனை நம்பி காரில் போனா என்று யோசித்துக் கொண்டே தன்  பைக்கை எடுத்துக் கொண்டு அவளை தேடி சுற்றி திரிந்தான். போகும்போதே வர்ஷினியின் தோழிகள் , மித்ரா என்று அனைவரிடம் அலைபேசி மூலம் விசாரிக்க யாருமே அவளை பார்க்கவில்லை என்றதுமே அவனுக்கு இன்னும் பதட்டம் ஏற்பட்டது. அவனால் வண்டியை கூட சரியாக ஓட்ட முடியவில்லை. நடு வழியிலேயே வண்டியை நிறுத்தி தெருவில் அப்படியே அமர்ந்து விட்டான். எங்கே தாண்டி இருக்கே ! உனக்கு என்னதான் ஆச்சு! என்று ஒருமூச்சு புலம்பி தீர்த்தான். பின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு  தன் வண்டியை எடுத்துக்கொண்டு ஒரு இடம் விடாது சுற்றி கடைசியில் பிரகாஷ் கார் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதனை நோக்கி சென்றான். 

இரவு நேரம் கும்மிருட்டாக இருந்ததால் அங்கு விபத்து நடந்தது யார் கண்ணிலும் படவில்லை. கௌரி வெகு அருகில் வந்ததும் அங்கு பிரகாஷ் மயக்க நிலையில் பார்த்ததும் அதிர்ந்தான். வர்ஷினியை தேட அவள் காருக்குள் இல்லை. பதட்டத்துடன் தன் அலைபேசியின் ஒளிவிளக்கை உயிர்ப்பித்து நாலாப்பக்கமும் தேட, புதரில் இருந்து மெலிதாக முனங்கும் சத்தம் கேட்கவே அங்கே விரைந்து சென்றான். அங்கு வர்ஷினியை கண்டதும் அதிர்ந்து , வர்ஷினி, வர்ஷினி எழுந்திருஎன்று அவள் கன்னத்தை தட்டி எழுப்ப, அவள் பாதி மயக்க நிலையில்  அப்படியே கிடந்தாள். அவளை தூக்கி தன் தோளில் போட்டு கொண்டு வெளியே வந்தான். முதலில் மருத்துவ ஊர்திக்கும் பின் காவல் நிலையத்துக்கும்  தகவல் தெரிவித்து விட்டு அவளை தெருவில் கிடத்தி  ஏதாவது வாகனம் வருகிறதா என்று பார்த்துக் கொண்டே அவளை சுய நினைவு பெற அவள் கன்னத்தில் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான். பின் பிரகாஷையும் தட்டி எழுப்பிட அவனிடமும் சுய நினைவே இல்லை. இரவில் போக்குவரத்து நெரிசல் அதிகம்  இல்லை என்பதால் மருத்துவ ஊர்தி விரைவாகவே வந்து சேர்ந்தது. இருவரையும் ஏற்றிக் கொண்டு அந்த வண்டி செல்ல அதனை பின் தொடர்ந்து இவனும் சென்றான். மருத்துவமனை அடைந்ததும் இருவரையும்

 ஐ.சி.யு. வில் அனுமதித்து விட்டு அவன் வெளியில் அங்கும் இங்கும் நடை பயின்றுக்கொண்டிருந்தான். பின்னர் ஞாபகம் வந்தவனாக  வர்ஷினியின் தந்தைக்கு விஷயம் சொல்லி அவரை படத்தப்படாமல் வருமாறு சொன்ன அவனுக்கு உடம்பெல்லாம் வேர்த்து கொட்டியது. வர்ஷினியை தோளில் தூக்கியதால்  அவளுடைய இரத்தம் அவனுடைய சட்டை முழுவதும் கீற்றாக இருந்தது.    

அரை மணி நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்தார். அந்த பொண்ணுக்கும் பையனுக்கும் நீங்க என்ன வேணும் என்று கேட்க, கௌரி சற்று தயங்கி பின் பிரெண்ட் டாக்டர், அவங்க எப்படி இருக்காங்க? என்று விசாரிக்க, அந்த பொண்ணு உருண்டு போனதால உடம்பு முழுக்க காயம் இருக்கு.  அப்புறம் பின்மண்டையிலே அடி பட்டதாலே ரத்தம் நெறைய வெளியே போயிருக்கு.  பலமான அடியா அல்லது லேசானதா என்று ஸ்கேன் பார்த்த தான் தெரியும். அந்த பையனுக்கு சுய நினைவே இல்லை. கோமாவுக்கு போய்ட்டான். போலிஸுக்கு சொல்லிடீங்களா? என்று கேட்க கௌரி, ஆமாம் என்று தலையசைத்தான்.

இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து தான் முழு விவரமும் சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் கரணும் அங்கு வந்து சேர்ந்தார். என் பொண்ணு எப்படி இருக்கா? என்று கேட்டவரிடம் கௌரி, தலையிலே அடிபட்டதில்லாலே ரத்தம் அதிகமா  போயிருக்குனும் ஸ்கேன் எடுக்கணும்னு சொன்னாரு. இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தான் முழுசா சொல்லமுடியும்னு சொல்லிட்டு போனாரு என்று அவன் கூறியதை கேட்ட கரணுக்கு  நெஞ்சம் பதைத்து விம்மினார். கடவுளே! இன்னும் என் குழந்தைக்கு எத்தனை கஷ்டம் தான் கொடுப்ப? என்று புலம்பியவாறு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். கௌரி அவரிடம் வந்து, வருத்தப்படாதீங்க அங்கிள், வர்ஷினிக்கு ஒன்னும் ஆகாது என்று  ஆறுதல் கூறி அவரை தேற்றினான். 

 

இரண்டு மணி நேரம் கழித்து டாக்டர் வெளியே வந்து உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லை. இரத்தம்  ஏத்திடிருக்கோம். தலைலேயும் ஸ்கேன் எடுத்து பாத்துட்டோம். லேசான அடி தான். கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிஞ்சிடும். நீங்க போய் பாக்கலாம். அந்த பையன் தான் இன்னும் கோமாவேலே இருக்கான் என்று சொல்லிவிட்டு சென்றதும், வர்ஷினிக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று தெரிந்தவுடன் தான் இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி மலர்ந்தது. சிறிது நேரம் கழித்து செவிலியர் அழைக்க , இருவரும் வர்ஷினியை சென்று பார்த்தனர். கரணை கண்டதும் வர்ஷினி அப்பா!  என்று கண் கலங்க, கரண் ஒன்னும் இல்லம்மா. எல்லாம் சரியாகிவிடும் என்று அவள் கையை பிடித்து ஆறுதல் கூறினார். பின்னால் நின்னிருந்த கௌரியை அவள் பார்க்க, கரண் இந்த தம்பிதாம்மா உன்னை கண்டுபிடிச்சு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தது என்று கூற அவள் கண்கள்  நன்றி கலந்த பார்வை பார்க்க, அவனும் நான் இருக்கிறேன் என்று சொல்லும் வகையில் கண் மூடி திறந்தான்.    

என்னம்மா ஆச்சு? என்று கரண் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அங்கு செவிலியர் வந்து தயவுசெய்து அவங்கள தொந்தரவு செய்யாதீங்க. அவங்க நல்லா தூங்கட்டும் என்று சொல்லிவிட்டு சென்று விட இருவரும் அங்கிருந்து அகன்றார்கள். வெளியே வந்ததும் கரண் கௌரியை பார்த்து உனக்கு இன்னும் நன்றி கூட சொல்லலப்பா. என் பொண்ணை தேடி கண்டு பிடிச்சு மருத்துவமனையில் சேர்த்திருக்கே. இதுக்கு நான் உனக்கு என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல என்று நெகிழ்ந்து கூறினார். அய்யோ அங்கிள் நீங்க பெரியவர் எனக்கு போய் நன்றி எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க, வர்ஷினியையும் எங்கள் குடும்பத்தில் ஒருத்தராதான் நினைக்கிறன். அதோடு அவ என்னுடைய பால்ய தோழி அங்கிள். அவளுக்கு ஒண்ணுன்னா நா வராமே  வேறு யார் வருவா. அங்கிள் நான் இந்த நேரத்தில இத கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க, வர்ஷினிக்கு எப்படி டிவோர்ஸ் ஆச்சு? அதுவும் கல்யாணமாகி ஓரிரு வருஷத்திலேயே எப்படி ஆச்சு? என்று கேட்க கரண் வர்ஷினியின் கல்யாண வாழ்க்கையை பற்றி சொல்ல ஆரம்பித்தார். நாமும் அவருடன் சென்று பார்ப்போம். 

வர்ஷினிக்கு மேலும் படிக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் அவளின் பெற்றோரின் வற்புறுத்தலால் குறிப்பாக கஸ்தூரி தன்னுடைய பெண்ணின் திருமணத்தை பார்க்காமல் சென்று விடுவோமா என்ற அச்சத்தால் தான் அவளை வற்புறுத்தி  திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாள். வர்ஷினி ஆர்யாவை அன்று பெண் பார்க்கும் படலத்தில் பார்த்ததோடு சரி பின் வேறு எங்கும் அவனை பார்க்கவில்லை. இடைபட்ட காலத்தில் அலைபேசியில் கூட இருவரும் பேசவில்லை.  திருமணத்தில் தான் அவனை மீண்டும் பார்த்தாள். அவள்  மற்ற பெண்களை  போல் பல கலர் கனவுகள் போல் திருமணம் புரியவில்லை. ஆயினும் தன்னுடைய பெற்றோர் வருந்துமாறு புகுந்த வீட்டில் நடந்துக்க கூடாது என்று நினைத்தாள். ஆர்யாவின் குடும்பத்தில் அவன் அம்மா விசாலாட்சி, அப்பா சசிகுமார் வினய் என்ற தம்பியும் இருந்தான். ஆர்யா ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தான். பையன் பெரிய வேலையில் இருக்கிறான், நன்றாக சம்பாதிக்கிறான், ஒரு தம்பி மட்டும் தான், தன் பெண் நன்றாக இருப்பாள் என்று எண்ணி தான் ஆர்யாவிற்கு மணம் முடித்து கொடுத்தார்கள்.ஆனால் வெகு சீக்கிரமே தங்களிடம் திரும்பி வருவாள் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

திருமணம் முடிந்து முதலிரவுக்கு சென்ற வர்ஷினி  பால் செம்பை எடுத்துக்கொண்டு கதவை தட்டி அவன் அறைக்கு சென்றவுடன் அவள் அதிர்ந்து தான் போனாள். படுக்கையில் ஒரு கையில் சிகரெட்டும் மறு கையில் மது  பாட்டிலுமாய்  “பகலினில் ஆட்டம், இரவினில் தூக்கம், இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம் ” என்று பழைய பாடலை பாடிக்கொண்டே குடித்துக் கொண்டிருந்தவனை  பார்த்ததும் அவளுக்கு வேறு என்ன வரும். அவள் அருகே சென்றதும், அவன் யாரது  ராகினியா, ரோகிணியா அல்லது ரூபிணியா, புதுசா இருக்கியே யாரு பேபி நீ, யாராயிருந்தாலும் இன்னைக்கு  வேண்டாம், ஒரு வாரம் கழித்து வா, இன்னிக்கு என்னுடைய புது பொண்டாட்டி வருவா என்று கூறியதை கேட்டு மேலும் அதிர்ந்த வர்ஷினி ஏங்க நான் உங்க பொண்டாட்டி தான் என்று கூற, அவன் அவளை மேலும் கீழும் பார்த்து பொண்டாட்டியா, வா, வா வந்து இங்கே பக்கத்தில் உட்க்காரு என்று வாய் குழறி கூற , அவள் அவனைப் பார்த்து மருண்டு  கொண்டு நிற்க, ஏன் உனக்கு காது கேக்காதா, இங்கே வாடி என்று அவன்  மறுபடியும்  அழைக்க அவள் மெதுவாக அவன் அருகில் சென்றாள். அவன் அவளை பார்த்து  குழைவாக பயந்துட்டியா, உன் பெயர் என்ன என்று கேட்க அவள் பெயர் கூடவா தெரியாமல் கல்யாணம் செய்தான் என்று நினைத்துக் கொண்டு, வர்ஷினி என்று கூறியதும், வாரஷிணி, நண்பர்கள்  எல்லாம் கல்யாணத்துக்காக பார்ட்டி கேட்டார்கள். பார்ட்டி கொடுத்தேனா அவங்க எல்லாரும் நாங்க மட்டும் குடிச்சா  போதுமா, புது மாப்பிள்ளை நீ குடிக்க வேண்டாமா என்று சொன்னதாலே நானும் குடிச்சேன் என்று சொல்லிவிட்டு சிரிக்க, அவள் மனதிற்குள் நல்ல நண்பர்கள்தான் என்று நினைத்துக்கொண்டே நிற்க, என்ன பாக்கிற, நான் இப்படித்தான் வாரம் ஐந்து நாள் ஆபீஸ்க்கு போவேன் வார கடைசி இரண்டு நாள் இப்படி தான் ஜாலியா இருப்பேன். நீயும் குடிக்கிறாயா என அவளிடம் நீட்ட அவள் எனக்கு வேணாம் என்று மறுக்க, அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. என்னுடைய பொண்டாட்டி நீ, நான் குடிக்கும்போது நீயும் குடிக்கணும் அப்போ தான் எனக்கும் பிடிக்கும். நாம ஜாலியா குடிச்சிட்டே முதலிரவே  கொண்டாடுவோம்  என்று சொல்லிக் கொண்டே அவள் வாயருகே மதுவை கொண்டு செல்ல, அவள் எனக்கு வேணாம் என்று அதனை தட்டி விட, அந்த கண்ணாடி மது குடுவை கீழே விழுந்து நொறுங்கியது. அதை பார்த்த ஆர்யா சிவந்த கண்களுடன் அவளை பார்த்து ,என்னடி நான் கொடுத்ததை தட்டி விடற, என்ன தைரியம் உனக்கு, என்று அவளை பளார் என்று  கன்னத்தில் அறைந்தான். அவன் அடித்த அறையில் மெல்லியவள் காதில் அணிந்து இருந்த ஜிமிக்கி அறுந்து கீழே விழுந்தது . அவள் கன்னம் திகு திகுவென்று எரிந்தது. அவள் அவனை அழுது கொண்டே பார்த்துக் கொண்டிருக்க  மேலும் அவன் சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளால் அவளை திட்டிக் கொண்டே மதுவை குடித்துக் கொண்டிருந்தான். அவள் அப்படியே விக்கித்து போய் சிலையாக நின்றுவிட்டாள் . சிறிது நேரத்துக்கெல்லாம் அவன் அப்படியே தூங்கியும் போய் விட்டான்.

அவள் தான் பின் சுயஉணர்வு பெற்று படுக்கையையும் கிழே உடைந்த கண்ணாடி துண்டுகளையும் சுத்தம் செய்து விட்டு கீழே ஒரு போர்வையை விரித்து படுத்துகொண்டாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை மாறாக கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக்கொண்டே இருந்தது. இரெவெல்லாம் அழுது தீர்த்த பின் விடியற்காலையில் தான் சற்று கண்ணயர்ந்தாள். 

 

கதவு தட்டும் ஓசை கேட்டு தான்  கண் விழித்தாள். மணியை பார்க்க அது எட்டு என்று காட்டியது. ஐயையோ! இவ்வளவு நேரம்  தூங்கிவிட்டோமா என்று நினைத்துக் கொண்டே அவசர அவசரமாக எழுந்து போய் கதவை திறந்தாள். அங்கு அவள் மாமியார் விசாலாட்சி நின்று கொண்டிருந்தார். அவளை பார்த்து என்னம்மா, முதல்   நாளே இப்படி தூங்கினா வீடு விளங்கிடும். போய் சீக்கிரமா குளிச்சுட்டு வந்து விளக்கு ஏத்திட்டு சமயலறைக்கு வா, உங்க அம்மாவும் அப்பாவும் வரதா போன் பண்ணியிருந்தாங்க என்று மாமியார் என்ற தன் அதிகாரத்தை காட்டி விட்டு சென்றாள். அவளுக்கு மனதெல்லாம் வலித்தது. பயமாய் கூட இருந்தது. இருந்தாலும் தன்னுடைய பெற்றோருக்காக  அனைத்தையும் சமாளித்து தான்  வாழவேண்டும் என்று தன்னையே தேற்றி கொண்டாள். அவள் ஆர்யாவை திரும்பி பார்க்க அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். 

 

குளித்து முடித்து கீழே வந்தவுடன் அவள் மாமியார் இங்க பாரு வர்ஷினி முதல் நாள் ஆனதால நான் உன்னை சும்மா விடறேன். நாளையிலிருந்து நீதான் பொறுப்பா எல்லாத்தையும் பாத்துக்கணும். காலையில் ஐந்து மணிக்கே எழுந்து ரெடியாகி கீழே வந்திடனும். ஆமா. உனக்கு சமைக்க தெரியுமா என்று கேட்க, கொஞ்சம் தெரியும் அத்தை என்று வர்ஷினி கூறியதும் அதென்ன கொஞ்சம், ஒரு வாரம் என்கூடவே இருந்து நான் செய்யற எங்க வீட்டு சமையலை கத்துக்க. அதுக்கப்புறம் நான் சமையல் அறை பக்கமே வரமாட்டேன். நீ தான் சமைக்கணும். உன் புருஷன் அதிகமா வீட்டில சாப்பிடமாட்டான். ஆனா சின்னவனுக்கு வீட்டு சாப்பாடு தான் பிடிக்கும். சின்னவன் எட்டு மணிக்கெல்லாம் ஆபீஸ்க்கு போயிடுவான். உன் மாமனாரும் ஒன்பது மணிக்கு கடையை திறக்க போயிடுவார். அதுக்குள் டிபன், மத்தியானம் சாப்பாடு எல்லாத்தையும் முடிச்சிடனும் என்று கட்டளை பிறப்பிக்க அவளும் வெறுமனே தலையாட்டினாள். அதற்கும் விசாலாட்சி ஏன் பேசமாட்டியா? பேசினா வாயில் இருந்து முத்து உதிர்ந்திடுமோ! என்று கூற, சரி அத்தை என்று மெலிதாக கூறினாள். மனதை ஒருவாறு பக்குவப்படுத்திக் கொண்டு வேலையில் மூழ்க, ஆனால்  மறுநாளே ஆர்யா செய்த வேலை அவளை மேலும் அருவெறுப்படைய செய்தது. மனம் இன்னும் பாரமாகியது. 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண்மணியே காதலில் கரைந்திட வா
801 10 4
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page