அத்தியாயம் 15
உங்களைச் சுத்தி இருக்குறவங்க நீங்க ஈஸின்னு நினைச்சால் உங்களை எல்லா விதமாகவும் பயன்படுத்திக்கப் பார்ப்பாங்க. ப்ரோக்கன் விண்டோ தியரின்னு ஒன்னு இருக்கு. ஒரு கண்ணாடியை யாரோ ஒருத்தர் அடிச்சு உடைச்சிருந்தால் அடுத்து அதைப் பார்க்குறவங்களும் அடிச்சு உடைக்க ட்ரை பண்ணுவாங்க. இது குற்றங்களுக்கான மாதிரி. காவல் துறை பயன்படுத்துவாங்க. இதை நிறைய விஷயங்களுக்கு அப்ளை பண்ணலாம்.
-பத்மமுகி.
பத்மமுகி அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். கட்டி இருந்த புடவையை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டாள். அவளின் இந்தப் பரபரப்புக்கு முக்கியக் காரணம் அவளை இன்று நேரில் சந்திக்க மாதவி வரச் சொல்லி இருந்தார்.
பத்மமுகியிடம் அமிர்தா பேசுவதாகக் கூறி, அவளுடைய எண்ணை வாங்கிப் பேசி இருந்தாள்.
“அமிர்தா, நாம அவளை அவசியம் பார்த்தே ஆகணுமா?”
“அம்மா, கண்டிப்பா செய்யணும். அப்பத்தான் ஆதி நம்புவான்.”
அதனால் மாதவி சீவி சிங்காரித்து, தங்க நகைக்கடை மாடல்போல் கிளம்பி இருந்தாள். அமிர்தாவும் அதில் பாதி நகை அணிந்து பகட்டாகக் கிளம்பி இருந்தாள்.
அவளைப் பிரபல பொழுதுபோக்குக் கட்டிடத்தில் உள்ள தேநீர் விடுதிக்கு வரச் சொல்லி இருக்க, முகியும் பட்டுத்தி நகை ஒன்றையும், மோதிரத்தையும் அணிந்து கிளம்பி இருந்தாள். அவளுடைய பணத்தை மாதந்திரம் வரும் நகைக்கடை சீட்டில் போட்டு நகைகளை வாங்கி இருந்தாள். தங்க செயின், மோதிரம் என்று அழகிய தாமரை போல் கிளம்பி இருந்தாள். அவளை இனி வாழ்க்கை முழுக்கக் கசக்கத் திட்டமிட்ட இருவர் அழைக்கிறார்கள் என்று அறியாமல். இதை அறியாத ஆதியும், அவளைத் தைரியமாகச் செல்லும்படி அறிவுறுத்தி இருந்தான். அவனே மகிழுந்தில் அந்த இடத்திற்குக் கொண்டு வந்து விட்டு வெளியில் காத்திருந்தான்.
“தைரியமாப் போ முகி. உன்னை எங்கம்மாவுக்கு நிச்சயம் பிடிக்கும்.”
தன் சகோதரி கூறியது போல் ஒரு வாரம் வீட்டிற்குச் செல்லவில்லை ஆதி. அதனால் வேதனைப்பட்ட மாதவி முகியைச் சந்திக்க ஒப்புக் கொண்டிருந்தார். ஒப்புக் கொள்வது போல் நடித்திருந்தார். இதோ பத்மமுகி மாதவியின் முன் அமர்ந்திருந்தாள்.
மாதவி மேலிருந்து கீழ் வரை பத்மமுகியைப் பார்த்தார்.
‘அழகிதான்! அப்படியே பெரிய குடும்பத்துப் பொண்ணுங்க மாதிரி அழகும், கலரும் இந்தப் பஞ்சப் பரதேசிக்கு வாச்சுருக்கு பாரேன். அதான் என் பையன் விழுந்துட்டான்.’ என மனதில் எண்ணிக் கொண்டார்.
சிரித்தபடி கையில் காஃபி கொண்ட தட்டை ஏந்தியபடி வந்து மாதவியின் எதிரில் அமர்ந்தாள் அமிர்தா.
“ஹாய் பத்மமுகி! நான் அமிர்தா. ஆதியோட அக்கா.” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள், “காஃபி நானே எல்லாருக்கும் வாங்கிட்டு வந்துட்டேன். காஃபி குடிப்பதானே?” எனக் கேட்க முகியும் தலையசைத்தாள்.
“முகி, உன்னோட கம்மல் நல்லாருக்கு. எங்க வாங்குன?”
முகி ஒரு பிரபல நகைக்கடையின் பெயரைக் கூற, அதனை எதிர்பார்க்கவில்லை அமிர்தா.
“ஓ… அப்பச் செயின், மோதிரம், பிரேஸ்லெட் எல்லாம்?”
“அதுவும் அதே கடைதான் அக்கா.” என்றாள் முகி.
அமிர்தா தன் அன்னையைப் பார்த்தாள். இருவருமே முகிக்கு யாருமில்லை என்பதால் அனாதை அவளிடம் ஒன்றுமே இருக்காது என நினைத்திருக்க, அவள் அணிந்திருந்த அனைத்தும் சேர்த்து ஐந்தாறு பவுன் தேறும் என்பது போல் இருந்தது.
மாதவி தொண்டையைச் செருமினார்.
“இந்தா பொண்ணு, நான் என் பையனுக்கு எங்களைப் போல இருக்குற குடும்பத்திலிருந்து பொண்ணு எடுக்கணும்னு நினைச்சேன். ஆனால் உன்னைத்தான் என் பையனுக்குப் பிடிச்சுருக்கு. அவர் போனதுக்கு அப்புறம் எங்க வீட்டோட ஒரே ஆம்பளை அவன். அவன் அக்காவுக்கு, எனக்கு எல்லாமே அவன்தான் ஆதாரம். அவனுக்கு வரப் போற பொண்ணு இந்தக் குடும்பத்தில் தூண் மாதிரி நின்னு எல்லாத்தையும் பார்த்துக்கணும். வேலை செய்யணும். எங்க குடும்ப கவுரவத்தை சொந்தக்காரங்க, எங்க சர்க்கிள் இப்படி எல்லாத்திலும் நிலை நாட்டணும்.”
முகி புரிகிறது என்றபடி தலை அசைத்தாள்.
“உனக்குச் சமைக்கத் தெரியுமா?”
“தெரியும்மா. எல்லா வேலையும் தெரியும்.” என முகி அவளாகவே கூறினாள்.
“பரவாயில்லை.” என மாதவிப் பாராட்டும் விதமாகப் பார்த்தார்.
“சரிம்மா. காஃபியைக் குடி. உன்னோட சைட் யாருமில்லை அப்படிங்கிறதால் நிச்சயம், கல்யாணம் எல்லாம் ஒரே நாளில் வர மாதிரி சிம்பிளா வச்சுக்குவோம். தைரியமாப் போ.”
முகியும் மாதவியைப் பார்த்தபடி காஃபியைப் பருகினாள்.
“ஆமா முகி, எப்படி கவர்மெண்ட் எக்ஸாம்…?”
“ஏதோ ஒரு வேலைக்குப் போகணும்னு நினைச்சேன். அது இந்த வேலை.”
“ஆமா இந்தக் கவர்மெண்ட் எக்ஸாமில் ரேங்க் இருக்குமே? நீ என்ன ரேங்க்?”
“ரேங்க் 3.”
“பரவாயில்லை. ஆதி மாதிரி நீயும் புத்திசாலிதான். அவனும் நல்லாப் படிப்பான்.” என்றாள் அமிர்தா.
உள்ளுக்குள் அவள் அழகையும், அறிவையும் பார்த்துக் கொழுந்து விட்டு எரிந்த பொறாமையை மறைத்துக் கொண்டாள். அவள் படிப்பில் சுமார் ரகமே. அழகும் முகியை விடவில்லை.
மூவரும் காஃபியைக் குடித்து முடிக்க, முகி பதட்டத்தில் அவர்களின் முகபாவனையைக் கவனிக்கத் தவறினாள். அன்னையும், மகளும் விழிகளில் செய்து கொண்ட சமிக்ஞையைக் கவனிக்கவில்லை.
“சரி மருமகளே, அப்ப நாங்க கிளம்புறோம். நாங்க இருக்கோம். நீ தைரியமாக இரு.” என்றார் மாதவி.
முகிக்கு அவர்கள் பணக்காரர்கள் என்று தெரியும். ஆனாலும் மாதவி நல்ல மாதிரியாகப் பேச முகிக்கு மனதில் நிம்மதி. மருமகள்கள் புகுந்த வீட்டில் வேலை செய்வது எங்கேயும் நடப்பதுதானேயென அதை இயல்பாக எடுத்துக் கொண்டாள்.
மூன்று பெண்களும் சேர்ந்து வெளியில் வந்தனர். ஆதிக்கு அதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியே! அவளுடைய அக்கா தூரத்தில் இருந்தே பெரு விரலை உயர்த்தி, வெற்றிக் குறி காண்பிக்க ஆதிக்கு மனதில் பெருத்த நிம்மதி. புன்னகையுடன் மூவரையும் பார்க்க மகிழுந்தை விட்டு இறங்கி நின்றான்.
“ஆதி, நேத்தில இருந்தே தலை சுத்துற மாதிரி இருக்கு. இந்தச் சத்ததுக்கு இன்னும் ஒரு மாதிரி இருக்கு. என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போறியா?” என அன்னை வந்தவுடன் கேட்க ஆதி உடனே அவரை வந்து தாங்கிப் பிடித்துக் கொண்டான். முகியும் அவர் அருகே வந்து நின்றவள், வாடிய முகத்தைப் பார்த்தாள்.
“ஆதி, கூட்டிட்டுப் போங்க. அம்மா உள்ளேயே தலைவலிக்குதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க.”
மாதவியும், அமிர்தாவும் மகிழுந்தில் ஏறி அமர்ந்தனர். அன்னை அமர மகிழுந்தின் கதவை நீக்கி விட்டு உதவினான்.
“முகி, நீயும் ஏறிக்கோ. உன்னை டிராப் பண்ணிடறேன்.”
“முகி வீடு வேற பக்கம்தானே. நாம பார்க்கிற ஹாஸ்பிடல் இந்தப் பக்கம். இரண்டு பக்கம் அலைச்சல் ஆதி.” என அமிர்தா பேச,
முகி உடனே, “நீங்கப் போங்க. நான் போயிக்கிறேன். உடம்பைப் பார்த்துக்கோங்க அம்மா. பாய், பாய் அக்கா.” என இருவரிடமும் விடைபெற்றவள் ஆதியைப் பார்த்துத் தலை அசைத்தாள். ஆதிக்கு முகியை விட முடியவில்லை என்றாலும், அன்னையின் உடல் நிலை முக்கியம் என்பதால் மகிழுந்தை முகியைப் பார்த்தபடி தரிப்பிடத்திலிருந்து வெளியே எடுத்தான். அவன் அன்னைக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு வருவது வழக்கம் என்பது அவன் அறிந்தது.
மாதவியும், அமிர்தாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். முகி இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் நிற்க வேண்டி வரும் என அறியாமல் பேருந்து நிலையம் இருக்கும் வழியில் செல்ல ஆரம்பித்தாள்.
அவள் வீட்டுக்குச் சென்றதும் ஆதிக்கு அழைக்க அவன் எடுக்கவில்லை. அதனால் குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு அவன் அன்னையின் நலத்தை விசாரித்தாள்.
ஒரு மணி நேரம் கழித்து முகிக்கு அழைத்தான் ஆதி.
“முகி.”
அவன் அழைப்பில் இருந்த அன்பில் முகிக்கு மனம் உருகியது.
“இன்னிக்கு நான் ரொம்ப ஹேப்பியாக இருக்கேன். அம்மா நல்லாருக்காங்க. பிபிதான் வேற ஒன்னும் இல்லை. அத்தோட உன்னை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுருச்சு. நல்ல மருமகள்னு சொல்லிட்டு இருந்தாங்க.” என ஆதி கூறவும் முகிக்கும் மகிழ்ச்சி பொங்கியது.
“உங்களுக்குத்தாங்க நான் தேங்க்ஸ் சொல்லணும். உங்களால் எனக்குக் குடும்பம் கிடைக்கப் போகுது.” என்றாள் அவளும்.
காதலர்கள் பேசி நேரத்தை ஓட்ட, அடுத்த ஒரு மாதத்தில் ஆதியின் கரம்பிடித்து, அவன் மனைவியாய் வீட்டுக்கு வந்திருந்தாள் முகி.
மணப்பெண்ணின் புடவை முதற்கொண்டு, மண்டபம், சாப்பாடு என அனைத்தையும் மாதவி அமர்க்களப்படுத்தி இருந்தார். முகியின் புடவையே ஒரு லட்சத்தைத் தொட்டது. ஆதியும் முகிக்குப் பார்த்துப் பார்த்துச் செய்தான். முகியின் உடன் படித்தவர்கள், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், ஆசிரமத்தில் இருப்பவர்கள் என அவள் சார்பாகவும் நிறையப் பேர் வந்திருந்தனர். முகியின் சார்பாக ஆதியின் சொந்தத்தில் சிலர் நின்றிருந்தனர்.
மணவறையில் அமர்ந்திருந்த முகிக்கு, சற்று நேரத்திற்குப் பின் தான் ஆதியின் மனைவியாகும் அழுத்தம், சந்தோஷம் எனத் தாங்க முடியவில்லை. அத்தோடு மாமியாரும், நாத்தனாரும் அவளுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்ய, அவள் மனம் மகிழ்ச்சியால் நெகிழ்ந்திருந்தது.
“என்ன மாதவி, நீ பெரிய குடும்பத்திலிருந்து மருமக எடுப்பன்னு நினைச்சேன்?”
மாதவி அந்தப் பெண்மணியை அடுத்த வார்த்தைப் பேச விடாமல் இடைவெட்டினார். கல்யாணத்தில் இப்படி கலாட்டா செய்யும் பேர்வழிகளும் உண்டே.
“எனக்கு என்னோட மகன் சந்தோஷம்தான் முக்கியம். அதோட குணத்தில் என் மருமக தங்கம். உன்னோட மருமக மாதிரி நாலு மாசத்தில் தனிக்குடித்தனம் போகமாட்டாள். கவர்மெண்ட் வேலை. சொந்தமாகச் சம்பாரிக்கிற பொண்ணு. வீட்டு வேலை அருமையாகச் செய்வா. அடக்கமான பொண்ணு.” என அவருக்குப் பதில் கொடுத்து மூக்கை வெட்ட அங்கிருந்த பெண்மணிகள் அமைதியாகினர். அதை இடையில் எதற்கோ மணமகள் அறைப்பக்கம் வந்த முகியும் கேட்டிருந்தாள். ஆதியைப் போல்தான் அவள் அன்னையும், அக்காவும் என்பதே முகிக்கு மகிழ்ச்சி. அத்தோடு தன்னை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் அவர் பேசி விட முகிக்கு நெகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டது.
மணவறையில் கண் கலங்கி அமர்ந்திருந்தவளின் கைகளைக் கோர்த்துக் கொண்டான் ஆதி. அருகில் சுக்ரீவ் நின்றுகொண்டிருந்தான். தன் நண்பனின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என அவன் மனதில் வேண்டிக் கொண்டான்.
தாலியை மண்டபத்தில் இருக்கும் அனைவரும் ஆசீர்வாதம் செய்யும்படி அமிர்தா எடுத்துச் சென்று அட்சதை கொடுக்க அதை மீண்டும் மணமேடைக்கு எடுத்து வந்தாள்.
உறவினர் அனைவரும் சூழ, முகியைச் சார்ந்த நல்ல உள்ளங்கள் அனைவரும் அவளை வாழ்த்த, ஆதியின் நண்பர்கள், அவன்கீழ் பணிபுரிபவர்கள், பல முக்கிய புள்ளிகள் அனைவரும் மணமக்களை ஆசீர்வதிக்க, ஆதி முகியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு இருவரும் தம்பதிகளாகினர்.
மாதவியோ, “வாடி மருமகளே! இனி இருக்கு கச்சேரி.” என நினைத்துக் கொண்டு புன்னகைக்க, நாத்தனார் முடிச்சு போட்ட அமிர்தா நிமிர்ந்து தன் அன்னையைப் பார்த்தாள்.
தொடரும்…
