மன்னன் தந்த மாலை
அத்தியாயம் 15
கைலாசம் தடுக்கத் தடுக்க அந்தப் பெண்ணின் முன்னே சென்று நின்றவள் அவளை மேலும் கீழுமாய் அளந்தாள்.
தன் போக்கில் வேலை செய்து கொண்டிருந்தவளின் முன்னே திடீரென்று வந்து நின்றவளைக் கண்டு பயந்தவளின் கண்கள் மிரட்சியில் படபடத்தது.
ஏனோ அவளை அப்படிப் பார்க்கையில் பெண்ணான வசுந்தராவுக்கே மிகவும் பிடித்துப் போக இயல்பிலேயே மென்மையான குணம் கொண்ட தன் தமையனுக்கு அவளைப் பிடித்துப் போனதில் அதிசயம் இல்லை தான்.
ஆனாலும் அவளிடம் சற்று விளையாட எண்ணி,
“நான் யாருன்னு தெரியுமா?” என்றாள் கேள்வியாய்.
அவளோ பயந்த முகத்துடனே, “ம்ம்…” என்று தலையாட்டினாள்.
“நான் யாரு?” என்றாள் சற்று அதிகார தொனியில்.
புதிதாய் பேசுபவர்களுக்குத் தான் அது அதிகார தொனியே தவிர அவளை நன்றாக உணர்ந்து கொண்டவர்களுக்கு அது அன்புடன் கூடிய அதிகாரம் என்று தெரியும்.
“எ… எங்க சின்னம்மா…” என்றாள் அழுகையுடன்.
கண்களில் கண்ணீர் கரை கொண்டிருக்க அவளைப் பார்த்த வசுவிற்கு சிரிப்பு தான் வந்தது.
ஆனால் அவள் அறியாதது. இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்டவள் அடுத்தவர் அதிகாரமாய் ஏதேனும் சொன்னால் அதை எதிர்த்துக் கேட்காமல் அடங்கியே பழக்கப்பட்டவளுக்கு, அதிகமாய் படித்து எப்போதும் கம்பீரமாய் வலம் வரும் வசுந்தராவைக் கண்டு அவளுக்குள் பயம் தான் அதிகம் முளைத்தது.
ஆனால் வசுந்தராவிற்கே அவளைப் பார்க்கப் பார்க்க மிகவும் பிடித்துப் போனது. ஏன் நட்பில் அன்பு மலரக்கூடாதா என்ன?
“உன் பேரு என்ன?” என்றவளின் குரல் அப்போதும் அதிகாரமாய்த்தான் தெரிந்தது மான்விழி கொண்ட நங்கைக்கு.
“அ… அஅ… அமுதா…” என்று திக்கியபடி தனது பேரை உரைத்திருந்தாள்.
“அ… அஅ… அமுதாவா… இப்படியொரு பேரை நான் பார்த்தது இல்லையே…” என்றாள் கிண்டலாய்.
“இல்ல, என்னோட பேரு அமுதா.” என்றவளின் கண்களில் கண்ணீர் தான் வழிந்தது.
“ப்ச்… இப்போ எதுக்கு இந்த அழுகை? முதல்ல அழறதை நிறுத்து. நான் என்ன பேயா பூதமா?” என்றவளின் குரலில் சற்று வருத்தம் இருந்தது.
இத்தனை நாளாக யாரும் தன்னைப் பார்த்து இப்படி பயந்ததில்லை. ஆனால் இந்தப் பெண் தன்னைப் பார்த்து அழுவதை பார்த்தவளுக்குச் சற்று வருத்தம் தான் ஆனது.
“இல்ல நீங்கச் சத்தமா பேசுறீங்க… எனக்குப் பயமா இருக்கு.” என்றாள் மென்மையாக.
அதில் சிரித்தவள், “சரி பயப்படாத, நான் சத்தமா பேசலை. ஆனா என்னை நீ எப்படி கூப்பிடுவ சொல்லு?” என்றாள் மெதுவாக.
“சின்னம்மா…” என்றவளின் முகத்தில் அப்போது தான் சிறிய புன்னகை உதயமாகியது.
உதட்டைப் பிரியாத அந்தச் சிறிய புன்னகை கூட அவளுக்கு மேலும் அழகூட்டியது.
அதைக் கண்டவளின் மனமோ அவளின் காலடியில் விழுந்தது.
“சின்னம்மான்னு ஒன்னும் சொல்ல வேணாம். உன்னைவிட ஒரு வயசு தான் கூட இருக்கும். பேசாம வசுந்தரான்னு சொல்லு.” என்றாள் இயல்பாக.
ஆனால் அதைக் கேட்டவளுக்கு தான் மனம் பதைத்துப் போனது.
ஏனென்றால் அவளுக்குக் கற்பகநாயகி ராஜவேலுவைப் பற்றி நன்றாகவே தெரியும்.
அவர்கள் அந்தஸ்தும் ஜாதியும் பார்த்துப் பழகும் ஆட்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்ணை ‘வசுந்தரா’ என்று பெயர் சொல்லி அழைத்தால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்ததில் பயந்து தான் போனாள்.
“அய்யோ! அப்படி எல்லாம் சொல்லக்கூடாதும்மா… நீங்கப் பெரிய வீட்டுப் பொண்ணு. உங்களை அப்படிக் கூப்பிட்டா அது தப்பாயிடும்மா…” என்றவளுக்கு உடலே நடுங்க ஆரம்பித்திருந்தது.
“என்ன தப்பாகும்? உன்னை அப்படிக் கூப்பிடச் சொல்றது நான் தானே… அப்புறம் என்ன பயம்? அப்படி யாராவது சொன்னா நான் தான் சொன்னேன்னு சொல்லிடு…” என்றவளுக்கு ஏனோ அமுதாவிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்ததில் அப்படியே பேச்சை வளர்க்க ஆரம்பித்து விட்டாள்.
கொஞ்ச நேரத்தில் அவளுடன் சகஜமாய் பேசியவள் அவளையும் பேச வைத்து விட்டுக் கடைசியில் ‘வசும்மா’ என்று அழைப்பதற்கு அவளும் ஒத்துக் கொண்ட பின்பு தான் அங்கிருந்து சென்றாள் வசுந்தரா.
அதேநேரம் இதை அனைத்தையும் பார்த்த இருவிழிகள் வேறொரு திட்டம் வைத்திருக்க வசுந்தராவும் அவளறியாமல் அமுதாவின் வாழ்வை திசைமாற்றி விட்டாள்.
மெதுமெதுவாய் தன் அண்ணனைப் பற்றி நல்லவிதமாய் சொல்லிச் சொல்லிப் பெண்ணவளின் இளமனதிலும் ஆசை வந்துவிட்டது.
இத்தனையையும் செய்த வசுந்தரா அந்தத் தமையன் யார் என்று சொல்லாதது தான் அமுதாவிற்கு பேராபத்தாய் முடிந்தது.
மென்மையான குணமும் பெண்களைத் தெய்வமாய் பார்க்கும் குணம் கொண்ட கைலாசநாதனை விட, மூர்க்க குணமும் பெண்களைப் போகப்பொருளாய் பார்க்கும் மாணிக்கம் தான் பெண்ணவளின் நினைவில் தோன்றினான்.
அதன் காரணம் இல்லாமல் இல்லை. வசுந்தராவின் அண்ணன் என்று அறியப்பட்ட மாணிக்கத்தை தான் அவளுக்குத் தெரியும்.
கைலாசநாதனை அவ்வளவாக யாருக்கும் தெரியாது. ஆனால் அந்த மக்களுக்குக் கைலாசம் எல்லாம் செய்தாலும் தான் செய்ததைப் போல மாணிக்கம் அவர்களின் முன்னே காட்டிக் கொண்டான்.
தன் தம்பி தானே என்று கைலாசம் மெத்தனமாய் விட்டதற்கு அவனின் காதலே விலையாய் போனது.
மாணிக்கத்திற்கு அமுதாவைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது. அவளின் பரிதாப மனம், யார் என்ன சொன்னாலும் அதை நம்பிவிடும் குணம், பணத்திற்கு அடிபணியாத அவளின் குணம் என அவளின் இயல்புகள் தெரிந்து போக மற்ற பெண்களைப் போல் இவளைப் பணத்தால் வளைக்க முடியாது என்று நினைத்தவன் அவளிடம் நல்லவனாய் நடிக்க ஆரம்பித்தான்.
வெள்ளை மனம் படைத்தவளுக்கு நடிப்பும் உண்மையும் புரியாமல் நடிப்பை உண்மை என்று நம்பியவள் மெல்ல மெல்ல அவனின் வலையில் விழுந்தாள். உண்மைக் காதலென நம்பியவளுக்கு கானல் நீரைப் பரிசளித்தான் மாணிக்கம்.
முதலில் இவற்றைக் கவனிக்காத வசுந்தரா கைலாசத்தின் பார்வையில் பட்டனர் அமுதாவும் மாணிக்கமும்.
அதைக் கண்ட வசுந்தரா அதிர்ச்சி அடைந்தாள்.
‘கடவுளே! இது என்ன இப்படி ஆகிடுச்சு… இது அண்ணாக்கு தெரிஞ்சா தாங்குவானா? இவளுக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சா என்ன? இந்த மாணிக்கத்தை எப்படி இவளுக்குப் பிடிச்சுது? அவளோட குணத்துக்குக் கொஞ்சமும் பொருந்தமாட்டானே.
இப்போ என்ன தான் பண்றது? இவனும் என் அண்ணன் தான். ஆனா இவளைக் கைலாசம் உயிராய் நேசிக்குறானே! கடவுளே! இது என்ன சோதனை? நான் எந்த அண்ணன் பக்கம் நிக்க… எனக்கு ஒரு வழியும் கிடைக்கலையே…’ என்றவளின் நினைவில் கைலாசம் தான் சிரித்த முகத்துடன் நின்றிருந்தான்.
அதற்கு மேலும் நின்று அதைப் பார்க்கத் துணிவில்லாததால் அங்கிருந்து சென்றவளுக்கு தெரியாது அவளின் தமையனும் இந்தக் காட்சியைக் கண்டு விட்டான் என்று.
கண்களில் கண்ணீர் வழிய அங்கே இருப்பவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான் கைலாசம். அவனால் இதைச் சுத்தமாக நம்ப முடியவில்லை. ஒரு முறைக்கு இரு முறை நன்றாகப் பார்த்தவன் மனதோரம் ஒரு சிறிய நப்பாசை, அது அவளாக இருக்கக் கூடாது என்று. ஆனால் அவன் ஆசை நிராசையாகிப் போனது. அது அவளே தான்.
அவன் வாழ்வில் முதன் முதலில் ஆசைப்பட்ட பெண், ஆனால் அவன் நேசம் அவள் அறியாதது தான். கொஞ்ச நாள் பொறுத்து அவளிடம் பேசி அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டவன் இன்று தன் தம்பியின் காதலியாகப் பார்க்கும்போது மனமதை ஏற்க முடியாமல் தத்தளித்தது.
உள்ளம் படும் வேதனையை வார்த்தையால் வடிக்க இயலவில்லை. உயிர் ஊசலாடியது போல் அவனின் நெஞ்சமும் ஊசலாடிக் கொண்டிருந்தது.
இனி அவள் தனக்கு இல்லை. தன் தம்பியை நேசிப்பவளை மனதால் நினைத்தாலும் கூடப் பாவம் என்று நினைத்தவனுக்கு அவளை மறப்பதென்பது அத்தனை சாத்தியமான விடயமாகத் தோன்றவில்லை.
அவளிடம் அவன் காதலை சொல்லவில்லையே தவிர அவளை மனதால் மணந்து மனைவியாகத் தான் பார்க்கிறான்.
ஆனால் இன்று வேறொருவனுடன் அவளைப் பார்த்ததும் அவனின் உள்ளம் சிதைந்து தான் போனது. உள்ளம் வலிக்க அங்கிருந்து நடைபிணமாய் சென்றான் கைலாசம். கண்களில் வழியும் வியர்வையைத் தடுத்து நிறுத்த இயலவில்லை ஆடவனால்.
வீட்டுக்குப் போக விருப்பம் இல்லாமல் அவனின் கால்கள் தன் போக்கில் சென்று கொண்டிருக்க, கருத்தினில் விழுந்தது அந்தக் கோவிலின் மணி ஓசை.
அந்தத் திசை பார்த்து நடந்தவனின் கால்கள் கோவிலுக்குள் மெல்ல பாதம் பதிக்க அவனின் உணர்வுகளை அவனாலேயே அடக்க முடியாமல் அந்தக் கைலாசநாதரிடம் சரண் புகுந்தான் இந்தக் கைலாசநாதன்.
வேள்விகள் யாவும் தீயாகி
யாகம் வளர்க்க…
மண்ணைத் தீண்டிய நீரின்
சுவாசம் அந்த யாகத்தை
அணைத்ததுவோ பரமேஸ்வரா…
இத்தனை நாட்களாய் எந்தவொரு பெண்ணிடமும் வழுவாத அவனின் மனம் முதல் முறையாக விழுந்து தோற்றது.
இங்கே தன்னால் ஒரு மனது உடைந்து போனதை அறியாமல் பெண்ணவளோ முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் மாணிக்கத்தின் அருகில் அமர்ந்திருந்தாள்.
“என்னங்க, உங்க வீட்ல என்னை ஏத்துப்பாங்களா? நம்ம கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா?” என்று பயத்துடன் கேட்டாள் பெண்ணவள்.
“நீ ஏன் பயப்படற அமுதா? அது தான் நான் இருக்கேன் இல்ல… நான் பாத்துக்குறேன். இப்போ என்னைக் கவனி. எப்போ பக்கத்துல வந்தாலும் தள்ளித் தள்ளி விட்டுட்டு இருக்க, நானும் மனுசன் தானே! எனக்கும் ஆசை இருக்கும் இல்ல…” என்றவனின் குரலில் காதலை விட மோகமே அதிகமாய் இருந்தது.
அவளிடம் பேசிக் கொண்டே அவளின் புடவையில் தெரிந்த இடுப்பில் கையை நகர்த்தியவன், மெல்ல மெல்ல முன்னேறி மேலேற்றிக் கொண்டே அவளின் காதுகளில் ரகசியம் பேசியவனின் கைகள் செய்த மாயத்தில் தன்னிலை இழக்க முற்படும் சமயம், எங்கிருந்தோ வந்த கோவிலின் மணி ஓசையில் தன்னிலை அடைந்தவளுக்கு மாணிக்கத்தின் கரங்கள் சொன்ன செய்தியில் விதிர்த்தவள் மெல்ல அவளிடமிருந்து விலக்கித் தள்ளியவளை ஆத்திரத்துடன் அவன் பார்க்க, அவளோ அவனின் பார்வையைச் சந்திக்க முடியாமல் கீழே பார்த்துக் கொண்டே,
“இதோ பாருங்க, இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்…” என்றவள் அதற்கு மேலும் நிற்காமல் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
அவள் அங்கிருந்து ஓடியதும் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தவன்,
“ச்சே! இன்னைக்கும் தப்பிச்சிட்டா… இவ இருக்குற நிலைக்கு நான் இவளைக் கல்யாணம் செஞ்சுக்கணுமா? ஏதோ ஒருமுறை தொட்டு அனுபவிச்சிட்டு விட்ரலாம்னு பாத்தா எப்போ பாரு கல்யாணம் கல்யாணம்னு பேசிட்டு இருக்கா. நாம இவ்வளவு பர்ஃபாமன்சை போட்டும் ஒன்னும் நடக்கலையே? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாம நினைச்சதை நடத்திட்டு இவளைக் கழட்டி விடணும்.” என்றவனுக்கு அவளால் ஏற்பட்ட மோகம் தணிக்க தற்சமயம் ஒரு பெண் தேவைப்பட விலைமாதுவை தேடிச் சென்றான்.
ஆனால் அவன் அறியாதது, என்ன தான் காகம் உயர உயரப் பறந்தாலும் அது கழுகாகிவிடாது என்று.
பொறுத்திருந்து தான் பார்ப்போமே… அடுத்தடுத்த பாகங்களில் பாக்கலாம் செல்லம்ஸ்.
மாலை வரும்…✍️
