அத்தியாயம் 16
நாய்கள், யானைகள் மனிதர்களைவிடப் பலம் மிகுந்தவை. நிலத்திலேயே மிகப் பெரிய விலங்கு யானை. அதே போல் அதனுடைய, எடையும் சக்தியும் அதிகம். மரத்தை அப்படியே முறிச்சு சாப்பிடும். நாய்கள் சிறிதாகவும், பெரிதாகவும் இருக்கும். நாய்கள் ஒரு அனைத்துண்ணி. நாய்களுக்குப் பயப்படுபவர்கள் அதிகம். அதனுடைய கடி அப்படி இருக்கும். ஆனால் யானைகளும், நாய்களும் மனிதர்களுக்குக் கட்டுப்படும். அதுவும் சிறிய சங்கிலிகள் அவற்றைக் கட்டுப்படுத்தி நிற்க வைக்கும். இதன் பெயர் கன்டிஷனிங். இப்படித்தான் பெண்களும் தங்களை பலவீனமானவர்களாவும், சமூக எதிர்பார்ப்புகளைச் சந்திக்கவில்லை எனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் சிறு வயதில் இருந்தே பழக்கப்படுத்தப் படுகின்றனர். இந்தச் சமூகம் ஒரு பெண்ணைத் திருமணத்தை நோக்கியும், திருமணத்திற்குப் பின்னும் உணர்வுகளால் கட்டுப்படுத்த முயல்கிறது.
-பத்மமுகி.
பத்மமுகி மனது அலை பாய்ந்து கொண்டிருந்தது. புதிதாக மணமான பெண்ணுக்கே உரிய அலைப்புறுதல் அது. எளிமையான பட்டுப் புடவையில் சொற்ப அலங்காரத்தில் தயாராகிக் கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவளுக்கு மனதில் ஆயிரம் கற்பனைகள். வெளியில் அமிர்தாவும், முகியின் தோழிகள் இருவரும் பேசியபடி வந்து கொண்டிருப்பது கேட்டது. அறையின் கதவைத் திறந்தபடி உள்ளே நுழைந்தனர். அமிர்தா கையில் இரண்டு குவளைகளும், முகியின் தோழி கையில் இரண்டு குவளைகளும் இருந்தது. கதவைத் திறந்ததும் இனிப்பின் வாசனை நாசியில் ஏறியது.
“என்ன புதுப்பொண்ணு ஆவலாக வெயிட் பண்ணிட்டு இருக்கு! ஆனால் நல்ல நேரத்திற்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கு. இந்தா பாயாசம் குடி. நாங்களும் உனக்குக் கம்பெனி குடுக்கலாம்னு கொண்டு வந்தோம்.” என அமிர்தா பேசியபடி பீங்கான் குவளைகளை எடுத்துக் கொடுத்தாள்.
ஒவ்வொரு குவளையும் ஒவ்வொரு நிறமாக இருந்தது. நால்வரும் மெதுவாக அவற்றைப் பருகியபடி சாதாரணமாகப் பேசினர். அரை மணி நேரம் கழியும் முன்னே, முகிக்கு தூக்கம் இலேசாக வரும் போல் இருந்தது. மீண்டும் அவளைக் கேலி செய்து, கலகலத்தபடி அவளை ஆதியின் அறைமுன் விட்டுச் சென்றனர்.
முகியின் விழிகள் சொக்க ஆரம்பித்தது. இரண்டு நாட்களும் திருமணத்தால் நன்றாகத் தூங்கவில்லை. அத்தோடு நேரத்திற்கு தூங்கிப் பழக்கப்பட்டவள். மணி பத்தைத் தாண்டி இருக்க, அவளுடல் தூக்கத்திற்குக் கெஞ்சியது. தலையை உலுக்கி தூக்கத்தை விரட்டியபடி அறைக்குள் நுழைந்தாள். அறையில் இயல்பான உடையுடன் ஆதி கைப்பேசியில் எதையோ பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான். அறை மல்லிகை, தாமரை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அதன் சுகந்தம் அறை முழுவதும் பரவி முகியின் நாசியில் ஏறியது.
தன் முன் அழகுப் பதுமையாய் வருபவளை நிமிர்ந்து பார்த்தான் ஆதி. இமைகள் குடை தாழ அவன் அருகில் வந்து நின்றாள்.
“முகி.” என மெல்லிய குரலில் அவன் அழைக்கவும், நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் விழிகள் காணத் தயக்கத்துடன், தூக்கமும் சேர்ந்து கொண்டது.
“முகி, போய் டிரஸ் மாத்திட்டு வா.”
“ஹ்ம்ம்…” என்று அடுத்த அடி எடுக்கும்போது முகி தள்ளாடினாள்.
“ஆ…தி… தூக்க…ம்…” அப்போதுதான் தன் மனைவியின் நிலையைச் சரியாகக் கவனித்தான். அவள் குரல் குழறலாக ஒலித்தது.
தன் மனைவியை அணைத்துப் பிடித்தவன், “ஏன் முகி தூக்கம் வருதா?” என்றான்.
“ஹ்ம்…ம்…” அங்கே அவள் விழிகள் சொக்கிக் கொண்டிருந்தது. முகியின் உடல் ஒரு நிலையில் இல்லை.
“சரி முகி. வா தூங்கலாம்.” இரவு விளக்கைப் போட்டவன், மெலிதாகத் தன் மனைவியை அணைத்தபடி உறங்க, அதிகாலை நேரத்திற்கு முன் அடித்துப் பிடித்து எழுந்தாள் முகி. அவள் அலைபேசி வழக்கம்போல் அலராம் அடித்து வைத்திருக்க, முகியின் உறக்கம் முற்றிலும் கலைந்திருந்தது.
தன்னை அணைத்தவாறு படுத்திருக்கும் ஆதியின் முகத்தைப் பார்த்தாள். நேற்றிரவு எதுவும் நடக்கவில்லை என்பது அவள் உணர, ‘இப்படி பண்ணிட்டியே முகி?’ என மனதுக்குள் தன்னைத் திட்டிக் கொண்டாள்.
“ஸாரி ஆதி! எப்படி எனக்கு அவ்ளோ தூக்கம் வந்துச்சோ தெரியலை.” என அவன் நெற்றியில் முத்தமிட்டவளை தன் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டான். சட்டென்று அவன் வாரிச் சுருட்டியதில் அதிர்ந்தாலும், முகி தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டாள்.
“ஃபர்ஸ்ட் நைட் வேணாம் முகி. ஃபர்ஸ்ட் மார்னிங்கை இன்ட்ரஸ்டிங்கா கொண்டாடிடலாம்.” என அவன் கூறியதில் முகியின் விழிகள் இரண்டும் விரிந்தது.
முகிக்கும் கணவனின் அன்பில் கரையும் அவா எழ, அவள் விழிகளும் சம்மதம் என மூடித் திறக்க, தன் மனைவியின் இதழ்களைக் கொய்ய ஆரம்பித்தான் அவன். இதழ்கள், கன்னம், மூக்கு, கழுத்து எனப் பாய, கரங்களோ தடையாய் இருப்பனவற்றை நீக்க, மனைவியோ வெட்கம் கொண்டு தாமரையாய் அவளை மூடிக் கொள்ள, கதிரவன் கதிர்போல் அவளைத் தீண்டி வெட்கத்தைப் போக்கி, காதலின் சங்கமத்தை இருவரும் ஆரம்பித்தனர். அவன் ஜாலங்களில் மதி மயங்கிக் கிடந்தாள் அவள். கூடலை முடித்தவுடன் களைப்புடன் கிடந்தவளின் தலைமுடியை ஒழுங்கு படுத்தியவன், “ஐ லவ் யூ முகி!” எனக் கூறினான். ஆதியுடன் அவள் இன்னும் ஒட்டிக் கொண்டாள். இருவரும் மீண்டும் உறங்க ஆரம்பித்தனர்.
அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு, ஆதியின் அலைபேசி அடித்தது. உடனே ஆதி எழுந்து விட முகி சத்தத்தில் மேலும் அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். தன் மனைவியைப் பார்த்துப் புன்சிரிப்பொன்றை உதிர்த்தவன் அழைப்பை ஏற்றான்.
“ஆதி, முகியை சீக்கிரம் கீழ வரச்சொல்லு. முகிதான் இன்னிக்கு வீட்டுச் சமையல் செஞ்சு மத்தவங்களுக்குப் போடணும். நம்ம சொந்தக்காரங்க வரதுக்குள்ள அனுப்பிவிடு.”
“சரிக்கா.” என முகியை எழுப்ப, அவளும் எழுந்து கொண்டவுன் தகவலைக் கூறினான்.
உடனே முகி வேகமாகக் கட்டிலை விட்டு இறங்க, அவளைக் கையைப் பிடித்துத் தன் பக்கம் சுண்டி இழுத்த ஆதி இதழ்களால் அவளைத் தீண்டிய பின்னேதான் விட்டான். குளித்துவிட்டு புடவையுடன் கீழே சென்று பரபரவெனச் சமையலை ஆரம்பித்த முகி ஒரு மணி நேரத்திற்குள் சட்டென்று சமைத்து முடித்திருந்தாள்.
அமிர்தாவும், மாதவியும் இதை எதிர்பார்க்கவில்லை. முகியைப் பாராட்டினர். அடுத்து சில மாதங்கள் முகியின் வாழ்க்கை இயல்பாகக் கழிந்தது. காலை, மாலை வீட்டு வேலை, அலுவலக வேலையென ஒரு வட்டத்திற்குள் ஓட ஆரம்பித்தாள். அவளை அறியாமல் வீட்டின் பொறுப்புகள் அனைத்தும் அவள் தலையில் வந்து விழுந்தன.
அதில் உட்ச பட்சமாக அமிர்தா ஏழாவது மாசம் என அன்னையின் வீட்டில் வந்து தன் முதல் குழந்தையுடன் தங்கிக் கொள்ள, அமிர்தாவை அடிக்கடி கண் விழித்துப் பார்ப்பது, அவள் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவது என அனைத்தையும் செய்தது முகிதான். ஆதிக்கும், அவளுக்கான நேரங்கள் குறைந்து கொண்டே வந்தது. அவனுக்கும் முக்கியமான வேலை அலுவலகத்தில் சென்று கொண்டிருந்ததால் இருவருக்குமான தருணங்கள் குறைய ஆரம்பித்தது. ஆனாலும் என்ன இருந்தாலும் காலை நேரம் இருவரும் பேசிவிடுவர். அமிர்தா அங்கே எட்டு மாதங்களுக்குப் பக்கம் தங்கி விட, அவளைப் பார்க்க வந்த அந்த வீட்டின் மாப்பிள்ளையையும் முகிதான் தாங்கினாள். குழந்தையையும் பல நேரம் முகிதான் பார்த்துக் கொண்டாள்.
“இப்பவே பிராக்டீஸ் பண்ணிக்கோ முகி. அப்பத்தான் உனக்கும் ஈஸியாக இருக்கும்.” என அமிர்தா அவளைக் கேலியுடன் கூற முகி சிரித்தபடி சென்று விடுவாள்.
அவளுக்கும் குழந்தை இல்லை என்ற துக்கம் மனதில் எழவே செய்தது. அவளுக்குத் தெரிந்தவர்கள் விஷேசங்களுக்குப் போனால் ஆதியின் சொந்தக்காரர்களும் இங்கிதமின்றி அதைக் கேட்கவே செய்தனர். மாதவி ‘குழந்தைக்கு முன்னாடி புருஷன் பொண்டாட்டி ஒருத்தரையொருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கணும்.” எனச் சமாளித்து விடுவார்.
அமிர்தாவும் தன் வீட்டுக்குச் சென்று விட்டாள். ஒரு வருடம் ஓடி இருந்தது.
முகிக்கு தன் கணவனின் பிறந்த நாளுக்கு அலுவலகத்தில் சந்தித்து ஆச்சரியப்படுத்த நினைக்க, தன் கணவனின் செயலாளரின் முன் நின்றாள்.
தலை முதல் கால்வரை பிரான்டட் அயிட்டம் உதவியால் அலங்கரிக்கப்பட்டிருந்தவள், ரோஸ் நிற நகச் சாயம் பூசிய நகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தாகினி. தன் முன்னே எளிமையாகக் குர்தாவில் நின்றவளை இளக்காரமாகப் பார்த்தாள்.
“ஆதியை மீட் பண்ணனும்.”
“அப்பாயின்ட்மெண்ட் இருக்கா? உங்க பேர் என்ன?”
“அப்பாயின்ட்மெண்ட் இல்லை. நான் அவரு வைஃப்.” என்று கூறியவளை தலை முதல் கால்வரை அலட்சியமாகப் பார்த்தாள்.
“இப்படி பொய் சொல்லி ஆதியையும், சுக்ரீவையும் பார்க்க எத்தனை ரிப்போர்ட்டர்ஸ் வந்துருப்பாங்க. அதுவும் உன்னை மாதிரி ஒரு லோக்கிளாஸ் ஆதிக்கு வைஃபா? இதை நான் நம்ப முட்டாளா?”
முகி தன்னை ஒரு முறை எதிரில் எதிர்ந்த கட்டிடத்தின் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். சந்தன நிற குர்தி, ஜீன்ஸ். முகம் அலுவலக வேலையாலும், வீட்டில் உள்ள வேலையாலும் இளைத்துக் கருத்திருந்தது.
“யாராக இருந்தாலும் இப்ப அவரைப் பார்க்க முடியாது. ஏன்னா அவரு இப்ப ஒரு முக்கியமான வொர்க்கில் இருக்கார்.”
“சரி, நான் அவருக்குப் போன் பண்றேன்.” என முகி தன் கணவனுக்கு அழைக்க அது எடுக்கப்படவே இல்லை.
எதிரில் இருந்தவளின் முகத்தில் இகழ்ச்சிப் புன்னகை. சுக்ரீவுக்கும் முகி அழைக்க அது செல்லவே இல்லை. தாகினி உடனே அலுவலக பாதுகாவலர்களுக்கு அழைக்க அவர்களால் மோசமாக வெளியே அனுப்பப்பட்டாள் முகி.
அவள் விழிகளில் நீர் நிறைந்திருக்க, முதன் முதலில் அவமானப்படுத்தப்பட்டது அவளைக் காயப்படுத்தி இருந்தது. அமைதியாக அங்கிருந்து உடைந்த மனதுடன் வெளியேறினாள்.
இரவு நேரம் மற்ற வேலைகள் செய்து முடித்தவுடன் முகி அறைக்கு வர ஆதி அவள் வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருட்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கட்டிக் கொள்ள, முகியின் மனதின் பாரங்கள் அனைத்தும் கரைந்து போயின.
ஆதிக்கு தனக்குப் பார்த்துப் பார்த்துச் செய்யும் முகியைப் பிடித்து இருந்தது. முகியும் தன் கணவன் ஏதோ வேலையாக இருந்ததால் தான் தன் அழைப்பை ஏற்கவில்லை என்று நினைத்து அத்தோடு அவளும் அலுவலகத்தில் நடந்ததைப் பற்றி எதுவும் கூறவில்லை. மகிழ்ச்சியான நேரத்தில் கெட்ட விஷயங்கள் எதற்கென மறைத்து விட்டாள்.
குழந்தை இல்லை என்பதால் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்லும்படி மாதவி கூறி இருந்தார். அதுவும் அவளைப் பட்டும் படாமல், “ஒரு செக்கப் நீ பார்த்திடு முகி. ஆதிட்ட நான் சொல்லிடறேன்.” என அவர் கூற மாமியாரின் பேச்சைத் தட்ட முடியாமல் அவளும் சென்றாள். அங்கு அவர் கொடுத்த பதில் முகியை கவலை கொள்ளச் செய்தது.
தொடரும்…
