அத்தியாயம் 16

அதே ஆளுயர கண்ணாடியில் அபிராமியின் வதனம் பார்த்தான் அஸ்வந்த். 

 

அவனுக்கு அபிராமியின் முகம் மறைந்து சுகன்யாவின் முகம் தெரிந்தது. 

இருவரும் சில மணி துளிகள் தன்னை மறந்து ரசித்தனர். 

 

வீல் என்று அழுதான் அவர்களின் குட்டி கிருஷ்ணன். 

 

அஸ்வந்த் தன் அருகில் அழுது கொண்டிருக்கும் பாலகனின் சத்தத்தில் தன்னிலை வந்தான். 

 

அபிராமி ஓடி வந்து அவனை அள்ளினாள். 

 

தங்கம் என்று அவள் குழந்தையை கொஞ்ச, அவளின் குரலில் அவன் முகம் பார்த்த அஸ்வந்த் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. 

 

இவ்வளவு நேரம் தான் ரசித்த சுகன்யாவின் முகம் முற்றிலும் மறைந்து அபிராமியின் ஓவிய முகம் அவன் கண்களில் விழுந்தது. 

 

ஒரு முறை தன் கண்களை அழுந்த தேய்த்து அபிராமியின் வதனம் பார்த்தான் அஸ்வந்த். 

 

தங்கம் உங்கள நான் வந்ததுல இருந்து தங்கம் வெல்லம் செல்லம்னு கூப்பிட்றேன். உங்களுக்கு ஒரு பேரு வைக்கணுமே என்று குழந்தையிடம் பேச , அந்த பிஞ்சு குழந்தை தன் அழுகையை மறந்து தாயின் முகத்திற்கு பதிலாக இவளின் முகம் பார்த்து ” அவ்வ்வ்வ் ” என்றது. 

 

தன் மகனின் வாயிலிருந்து “அவ்வ்வ்”  என்று வெளி வந்த சத்தத்தையே இன்று தான் அஸ்வந்த் கேட்கிறான்.

 

கடந்த மூன்று மாதமும் மகனை அவன் தான் வைத்திருக்கிறான். பசிக்கும் நேரம் பாரிஜாதம் தான் அவனுக்கு பசியாற்றுவார். இது வரைக்கும் மகனிடம் இருந்து அழும் குரலை தவிர வேறு எந்த மொழியையும் இவன் கேட்டதில்லை. 

 

ஆனால் இன்று அபிராமியின் முகம் பார்த்து அந்த பிஞ்சு மொட்டு பேசியது. 

 

அப்போ குட்டிக்கு பேரு வச்சிருவோம். என் தங்கத்துக்கு என்ன பேரு வைக்கலாம் என்று யோசிப்பது போல் கண்களை உருட்டினாள் அபிராமி. 

 

“அவ்வ்வ்வ் அவ்வ்வ்வ்”  என்று மறுபடி சத்தம் தந்தான் குழந்தை. 

 

என்ன டி தங்கம் என்று குழந்தையின் குட்டி நெற்றியில் முத்தம் பதித்து பஞ்சு மெத்தையில் அமர்ந்தாள் அபிராமி. 

 

அபி… எம்மாடி அபி என்று மாமனார் ஹாலில் இருந்து சத்தம் வர, தன் பிறவா மகனை கையில் ஏந்தி கொண்டு சென்றாள் அபிராமி. 

 

அஸ்வந்த் எதுவும் பேசவில்லை. சிறு சிறு அதிர்வுகளை அவன் உடம்பு தாங்கி கொண்டது போல் உணர்ந்தான். 

 

மெதுவாக எழுந்து அவனும் குளிக்க சென்றான். கண்டிப்பாக தன்னையும் ஏலம் விடுவார்கள் என்று அவனுக்கு தெரியும். 

 

புத்தம் புது பறவையாக கையில் தன் பிறவா குழந்தையை தூக்கி கொண்டு கீழ் இறங்கி வந்தாள் அபிராமி. 

 

ஹாலில் இருவர் அமர்ந்திருப்பதை பார்த்து துள்ளளோடு அம்மா, அப்பா என்று அவர்களின் அருகில் சென்றாள். 

 

ஏதோ பல நாட்கள் மகளை பிரிந்த சோகத்தில் இருந்தவர்கள் போல் கௌரியும் கல்யாணும் அபிராமியை அணைத்து கொண்டனர். 

 

அபி இன்னைக்கு உங்கள மறுவீடு அழைச்சிட்டு போக உன் அம்மாவும் அப்பாவும் வந்துருக்காங்க மா. ரெண்டு பேரும் சேர்ந்து போய்ட்டு வாங்க என்றார் பாரிஜாதம். 

 

தன் பிறந்த வீட்டிற்கு கணவர் குழந்தையோடு செல்ல போகிறோம் என்று நினைத்த அபிராமி முகம் கொள்ளா புன்னகையுடன் “சரி அத்தை” என்றாள். 

 

அஸ்வந்த் யாரும் அழைக்காமல் குளித்து கீழே வந்தான். 

 

டேய் அஸ்வந்த் இன்னைக்கு மறுவீடு போய்ட்டு வந்துருங்க என்றார் அவனின் தாய். 

 

அவனும் இன்று நல்ல பிள்ளை போல் சரி மா என்றான். 

 

அபிராமியின் தாய் தந்தை இருவரும் வரும் பொழுதே காரில் வந்ததால் அதே காரில் இப்பொழுது மகளையும் மருமகனையும் அழைத்து சென்றனர். 

 

கார் ஓட்டுநரை பார்த்ததும் கண்களில் அதிர்ச்சியை காட்டினாள் அபிராமி. 

 

அன்று திருமணம் நின்று போன போது நால்வரையும் அழைத்து வந்து பாதுகாப்பாக இறக்கி விட்ட அதே ஓட்டுநர். 

 

அண்ணே எப்படி இருக்கீங்க?  என்று நலம் விசாரித்தாள் அபிராமி. 

 

நல்லா இருக்கேன் மா. வாழ்த்துக்கள் மா என்று அந்த ஓட்டுநர் உண்மையாகவே மனம் நிறைந்து அபிராமிக்கு திருமண வாழ்த்து கூறினார். 

 

நம் நாயகனுக்கு அபிராமியும் கார் ஓட்டுநரும் பேசியது தவறாகப்படவில்லை. திருமண வாழ்த்தை தெரிவிக்கிறார் என்று மட்டும் நினைத்து கொண்டான். 

 

அபிராமிக்கு அஸ்வந்த்துடன் நடந்தது தான் முதல் திருமணம் என்று தெரிந்தால் அவன் மன நிலை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லையே. 

 

ஒரு மணி நேர பயணத்தில் கார் வீட்டு வாசலில் வந்து நின்றது. 

 

ஜோடியாக கையில் மகனுடன் இறங்கினர் புது மண தம்பதிகள். 

 

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் கண்களில் நெருப்புடன் பார்த்தனர். 

 

ச்ச கல்யாணம் பண்ணிட்டாளே என்பது போல் அவர்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. 

 

வாங்க மாப்பிள்ளை என்று அழைத்தார் கௌரி. 

 

அபி மாப்பிள்ளையை அழைச்சிட்டு வா மா என்று கூறினார் தந்தை. 

 

வாங்க என்று தன் கணவனை அழைத்து கொண்டு ஜோடியாக வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தனர் இருவரும். 

 

ஹாய் பாஸ் என்று அகிலா தன் அக்காவின் கணவரை அழைக்க, 

 

அகி என்ன பழக்கம் இது? ஒழுங்கா முறை சொல்லி கூப்பிடு என்று அதட்டினார் கௌரி. 

 

ஹாய் மாமா. வெல்கம் ஹோம் என்றாள் அகிலா. 

 

நம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணின் அக்காவை தான் நாம் திருமணம் செய்திருக்கிறோம் என்று நினைத்த அஸ்வந்த் இப்பொழுது எதுவும் கேட்காமல் பதிலுக்கு நன்றாக சிரித்தே ஹாய் என்றான்.  

 

கௌரி அபிராமியின் அறைக்குள் சென்றவர் தன் மகள் பெற்று எடுக்காத மகனுக்கு பாட்டியாக மாறி அவன் படுப்பதற்கு ஒரு தொட்டிலை தயார் செய்தார். 

 

அபி கையிலேயே அவனை வச்சிட்டு இருக்காத மா. போய் தொட்டிலை படுக்க வை தூங்குவான் என்றார் கௌரி. 

 

சரி மா என்று அவளின் அறைக்குள் சென்று குட்டி பாலகனை அதில் படுக்க வைக்க, இவ்வளவு நேரம் தாயின் நெஞ்சு பொதிக்குள் முகத்தை புதைத்து தூங்கிய குழந்தையை தொட்டிலில் போட்டதும் அது ஒரு அசவுகரியத்தை உணர்ந்து லேசான சிணுங்கல் வைக்க,

 

அச்சோ தங்கம் நான் இங்க தான் இருக்குறேன். என் குட்டி பையன் எதுக்கு அழுகுறான்?  என்று பேச்சு கொடுத்து குழந்தையை தொட்டிலில் கிடைத்தினாள். 

 

அவளின் குரலில் நாம் பாதுகாப்பாக தான் இருக்கிறோம் என்று உணர்ந்த குழந்தை தூக்கத்திற்கு சென்றது. 

 

அபிராமி தட்டி கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளி  வந்தாள். 

 

அகிலாவும் அஸ்வந்தும் எதோ ஆழமாக பேசி கொண்டிருந்தனர். 

 

அப்படி என்ன பேசி கொண்டிருந்தனர்? 

நம் அஸ்வந்த் அவனின் அலுவலக விஷயத்தை பற்றி தன் மச்சினிச்சியிடம் கேட்க, கடந்த மூன்று மாதமாக நடந்த அத்தனையையும் கூறி கொண்டிருக்கிறாள் அகிலா. 

 

திருமணம் முடிந்ததும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தானே தவிர, தன் தந்தையிடம் அலுவலகத்தில் என்னன்ன வேலைகள் போய் கொண்டிருக்கிறது என்று கேட்கவில்லை. 

 

இப்பொழுது அகிலாவிடம் கேட்டு கொண்டிருக்கிறான். 

 

ஹேய் அகிலா இப்படி தான் பேசிட்டே இருப்பியா. மாப்பிள்ளைக்கு ஜுஸ் எதாவது கொடுத்துருக்கலாம்ல என்று கௌரி தன் சின்ன மகளை திட்டினார். 

 

தலையை சொறிந்த அகிலா, ஆமா மா சுத்தமா மறந்துட்டேன் என்று வேகமாக கிட்சனுக்குள் சென்று ஆப்பிள் ஜுஸ் போட்டு எடுத்து வந்தாள். 

 

சாரி மாமா என்றாள் அகிலா. 

 

இதுல என்ன இருக்கு அகிலா. வேணும்னா நானே கேட்டு வாங்கி குடிச்சிருப்பேன் என்று சாதாரணமாக பதில் கொடுத்தான் அஸ்வந்த். 

 

தங்கையிடம் சகஜமாக பேசி கொண்டிருக்கும் கணவனை பார்த்த அபிராமியின் நினைவு நேற்று அவர்களின் அறையில் நடந்த ரகளையில் சென்று நின்றது. 

 

அவரோட அறையில இருந்து வெளியே துரத்துறதுக்கு என்னென்ன பேசினாரு நம்பள. இப்போ நம்ப வீட்டுக்கு வந்ததும் என் இப்படி அமைதியா இருக்காரு என்று சிந்தித்தாள் . 

 

மாப்பிள்ளை அசதியா இருந்தா ஓய்வு எடுங்க மாப்பிள்ளை என்ற கௌரி, அபி மாப்பிள்ளையை உன் அறைக்கு அழைச்சிட்டு போ என்றார். 

 

வேணாம் அத்தை. நான் இங்கயே இருக்குறேன். அப்பறமா போறேன் என்றான் அஸ்வந்த். 

 

பரவாயில்லை மாப்பிள்ளை கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க என்று கௌரி கூறுவதை தட்ட முடியாமல் அபிராமியின் பின் சென்றான் அஸ்வந்த். 

 

அவளின் அறையை பார்த்து, இது உன் ரூமா டி? என்று கேட்டான். 

 

இ… இல்லைங்க.. நீங்க வந்துருக்கீங்கனு தனியா நமக்காக ரூம் அரேஞ் பண்ணிருக்காங்க அம்மா என்று ஆசிரியராக இருந்து கொண்டு பொய் கூறினாள். 

 

ஓ… என்ற அஸ்வந்த்,   கேட்டதும் அவள் யோசிக்காமல் பதில் கூறியதில் நம்பி கட்டிலில் அமர்ந்தான். 

 

ஒருவர் படுக்கும் கட்டில் தான். அதனால் சின்னதாக இருந்தது. 

 

என்ன முதல் திருமணம் நடந்த மாதிரி ரூம்ல ஒரு போட்டோவும் இல்லை என்று நினைத்து சுவற்றை பார்த்தான். ஒருவேலை டிவோர்ஸ் ஆனதும் கழட்டிருப்பாங்களோ என்று தனக்குள் யோசித்தான் .

ஆமால்ல கழட்டிருப்பாங்க. கண்டிப்பா கழட்டிருப்பாங்க அவனே பதில் சொல்லி கொண்டான். 

 

என்னாச்சுங்க என்ன யோசிக்கிறீங்க? 

 

ஒன்னும் இல்லை டி. 

 

அபிராமி வெட்க சிரிப்பு சிரித்தாள். 

 

என்ன டி? என்று அவளின் வெட்க சிரிப்பை சகிக்க முடியாமல் கேட்டான் அஸ்வந்த். 

 

நீங்க டி சொல்லுறது ரொம்ப புடிக்குதுங்க என்றவள் அவன் முகம் பார்க்காமல் சென்றாள். 

 

அவள் சொன்னது புரிந்ததும் தன் தலையில் தானே தட்டி கொண்டான் அஸ்வந்த். 

 

சீ… நம்ப அவளை திட்டுறதுக்கு யூஸ் பண்ண வார்த்தையை  நம்ப உரிமையா அவளை சொல்லிருக்கோம்னு நினைச்சிட்டாள் என்று அவனுக்குள் புலம்பினான். 

 

ஆனால் அவனுக்கு அபிராமியை ரசிக்க தோன்றவில்லை. அவளின் வெட்க சிரிப்பை பார்த்தும் அவளை பிடிக்கவில்லை. 

 

ஆனால் அவனின் மகனை அவள் அன்பாக பார்ப்பது பிடித்திருந்தது. 

 

கண்களை மூடி கட்டிலில் சாய்ந்தான் அஸ்வந்த். 

அவனின் நினைவுகள் யாவும் சுகன்யா நிறைந்து இருந்தாள். 

 

சுகி நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன் டா. இவளை நம்ப குழந்தையை பார்த்துக்க மட்டும் என்னோட அறைக்குள்ள தங்க விடலாம்னு நினைக்கிறேன் என்று மானசீகமாக சுகன்யாவிடம் பேசினான். 

 

பின் கண்களை திறந்தான். இதான் சரியான முடிவு என்றும் தோன்றியது. இவளிடம் வந்த பிறகு  தான் தன்னுடைய மூன்று மாத குழந்தையும் தனக்கு பேச தெரியும் என்று கூறியது.

 

அதுவும் அபிராமியின் முகத்தை பார்த்ததும் தான் அது பேசவே செய்தது. 

 

குழந்தை வளர்ந்ததும்  இவள் உன்னை பெற்றவள் இல்லை சுகன்யா தான் உன்னை பெற்றவள் என்று முழு உண்மையையும் அவனிடம் கூறி அபிராமியை விட்டு பிரிந்து விடலாம். அது வரை அவளின் நிழல் கூட நம் மேல் விழக் கூடாது என்று முடிவு செய்தான் அஸ்வந்த். 

தொடரும். 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
873 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page