அத்தியாயம் 16

வர்ஷினி சமயலறையில் இருக்கும்போது ஆர்யாவின் தம்பி ஆதேஷ் அங்கு வந்தான். குட் மார்னிங் அண்ணி சூட எனக்கு ஒரு காபி கிடைக்குமா? என்று கேட்க, இதோ தரேன் என்று சுட சுட மணக்க மணக்க காபி போட்டு வந்து அவனிடம் கொடுத்தாள். காபி குடித்த அவன் முகம் பிரகாசமாகி ரொம்ப தேங்க்ஸ் அண்ணி, காபி ரொம்ப நல்லாயிருக்கு, கிட்ட வாங்க ஒரு ரகசியம் சொல்றேன் என்றதும், அவள் அருகில் செல்ல, இவ்வளவு நாள் காபி என்ற பெயரில் கழனி தண்ணிதான் குடிச்சேன், இப்ப தான் நல்ல காபியே குடிக்கிறேன், அம்மாகிட்ட சொல்லிடாதீங்க, அப்புறம் மூன்று நாளைக்கு எனக்கு சாப்பாடு தர மாட்டாங்க என்று சொல்லிவிட்டு சிரிக்க  அவளும் லேசாக முறுவலித்தாள். அதற்குள் விசாலாட்சி வந்து அங்கே என்ன சிரிப்பு, அப்படி என்ன ரகசியம் பேசிக்கிறீங்க? என கேட்க, உடனே வர்ஷினி காபி நல்லாருக்குனு சொன்னான் அத்தை என்றதும், ஏன் இவ்வளவு நாளா நான் போட்ட காபி நல்லாயில்லையா? என்று சண்டைக்கு வர, உடனே ஆதேஷ்  அம்மா உன் காபியை யாராவது குறை  சொல்லுவாங்களா! சும்மா புதுசா வந்த அண்ணியை உற்சாகப்படுத்த சொன்னேன். உலகத்திலேயே என் அம்மா போட்ட காபி தான் சிறந்தது. அதுக்கு எந்த காபியும் ஈடாகாது என்று ஒரு பக்கெட் நிறைய ஐசை அவள் தலையில் வைத்து விட்டு நைசாக நழுவிவிட்டான். அதனை உண்மை என்று எண்ணி விசாலாட்சி  மருமகளை பெருமிதத்துடன் பார்த்தாள். வர்ஷினி மனதிற்குள் ஆதேஷ் இந்த குடும்பத்தில் தனித்து தெரிகிறான் என்று எண்ணிக் கொண்டாள். 

 

அவள் காலையில் சிற்றுண்டி செய்து கொண்டிருந்த நேரத்தில் வாசலில் கார் வரும் சத்தம் கேட்டது. அவள் சமையலறை ஜன்னலில் இருந்து எட்டி பார்க்க அங்கே இரண்டு இளம் யுவதிகள் காரில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஆடை அணிகலன்களை பார்க்கவே செல்வந்தர் வீட்டு பெண்கள் என்று தெரிந்தது. ஒரு பெண் குட்டை சட்டையும் கீழே குட்டை பாவாடையும் அணிந்திருந்தாள். மற்றோருத்தி இறுக்கமான கையில்லாத  பனியனும் கீழே ட்ரவுசர் போன்ற ஒன்றை போட்டிருந்தாள். அந்த ட்ரொவுசரும் இப்போவோ அப்பாவோ கழன்று விழுந்து விடுமோ என்பதை போல் தான் வர்ஷினிக்கு தோன்றியது. வீட்டிற்குள் நுழைந்ததும் ஆரி, ஆரி  என்று கத்திக் கொண்டு தான் நுழைந்தார்கள். அவர்கள் குரல் கேட்டதும் ஆர்யா மேலிருந்து வேகமா படியிறங்கி ஓடி வந்து ஹாய் ஸ்வீட்டிஸ் வாங்க, வாங்க எப்போ ஆஸ்திரேலயாவில் இருந்து வந்தீங்க? என்று கேட்க, நேத்தே வந்துட்டோம், வந்த உடனேயே உன்னை பாக்க ஓடி வந்துட்டோம் என்று கூறி இருவரும் அவனை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தனர். அவனும் அவர்களை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தான். வர்ஷினி , இந்த பெண்கள் பார்க்க இந்தியர்கள் மாரி தானே தெரிகிறார்கள், வெளிநாட்டில் இருந்தால் நம்முடைய கலாச்சாரத்தை, பழக்கவழக்கங்களை மறந்து விட வேண்டும் என்று இருக்கிறதா என்ன, இவரும் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார்? என்று அவர்களையே ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கோபம் வரவில்லை மாறாக அருவெறுப்பு தான் வந்தது . அவர்களில் ஒருத்தி என்ன மேன், எங்களுக்கு சொல்லாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டே, உன் வைய்ப் எங்கே  என்று கேட்டவுடனே  ஆர்யாவின் முகம் மாறியது. அவன் வர்ஷினி என்று அழைக்க, சமயலறையில் இருந்தவள் இவன் கூப்பிட்டதும் வேலையை அப்படியே போட்டு விட்டு வேர்க்க விறுவிறுக்க அப்படியே வந்து அவர்கள் முன் வந்து நின்றாள். அவன் அவளை ஒரு நிமிடம் கோபமாக பார்த்து மறு  நிமிடமே முகத்தை மாற்றிக் கொண்டு, வர்ஷினி இவர்கள் என்னுடைய நெருங்கிய தோழிகள். இவள் பேர் ஷைலா அவள் ஹேனி என்று அறிமுகப்படுத்தி வைக்க, அவர்கள் இவளை மேலிருந்து   கீழாக பார்த்தார்கள். வர்ஷினி மெல்ல ஹாய் சொல்ல அவர்கள் பதிலுக்கு அவளிடம் எதுவுமே சொல்லவில்லை. ஆர்யாவிடம் திரும்பி, ஏன் ஆரி, உனக்கு வேற பொண்ணா கிடைக்கல, உனக்கு இருக்கிற அழகுக்கும், படிப்புக்கும், அந்தஸ்துக்கும் இவதானா கிடைச்சா, நீ ஹும்னு சொல்லிருந்தா நாங்க இரண்டு பேரில் யாராவது ஒருத்தர் உன்னை கல்யாணம் பண்ணியிருப்போம். நீ தான் உனக்கு கல்யாணம் ஆன பின் தானே எங்களுக்கு சொன்னே என்று கொஞ்சலாக கூற, ஆர்யா உங்களுக்கு தான் என் அம்மாவை பத்தி தெரியுமே , அடக்கமான பொண்ணு மருமகளா வேணும்னு சொல்லி என்  மனதையே அடக்கம் பண்ணிட்டாங்க, என்று அவளை பார்த்தவாறே சொல்ல அவள் மனம் மேலும் மருகியது . கண்களில் நீர்  திரையிட, அதை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள். ஆர்யா அவர்களிடம் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க நான் குளிச்சிட்டு வந்திறேன் நாம வழக்கமா போற கிளப்புக்கு போகலாம்   என்று கூறி மேலே சென்றான். வர்ஷினி, இவங்க மாரி உடை உடுத்தி சிகரெட் பிடிச்சு, முத்தம் கொடுத்து மது குடிச்சி, இப்படி உடம்பு உரச நின்னு கொஞ்சி பேசினாத்தான் நான் நாகரிகமான பொண்ணு, அழகான பொண்ணுனா எனக்கு அது தேவையில்லை. இவரு என்கூட சேர்ந்து வாழலனாலும் பரவாயில்லை, நான் நானாத்தான் இருப்பேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். விசாலாட்சி அவர்களிடம் வந்து காபி குடிக்கிறீங்களாம்மா? என்று கேட்க, எங்களுக்கு எதுவும் வேணாம் ஆன்ட்டி என்று இருவருமே மறுத்துவிட்டனர். சொன்ன மாதிரியே ஆர்யா பத்து நிமிடத்தில் வந்து விட மூன்றும் பேரும் கிளம்பி அவர்களது காரிலேயே சென்றார்கள். போகும் அவர்களையே வர்ஷினி கனமான மனதுடன் பார்த்திருந்தாள்.            

 

அன்று இரவும் ஆர்யா நன்றாக குடித்து விட்டு தான் வந்தான். அவள் மாமியாரும் மாமனாரும் தூங்க போய் விட இவள் மட்டும் அவனுக்காக காத்திருக்க, அவனை காரில் இரண்டு பேர் பிடித்து அழைத்து வந்து ஹாலில் அமர வைத்து சென்று விட்டனர். அவனால் சரியாக நடக்க கூட முடியவில்லை. முழு போதையில் இருந்தான். ஆதேஷ் தான் அவனை தன் தோளில் தாங்கி அவனது அறையில் விட்டு சென்றான். வர்ஷினிக்கு அவன் சாப்பிட்டானா? அவனை எழுப்பலாமா? வேண்டாமா? என்று நினைத்துக் கொண்டே அவனை பார்க்க அவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். பின் மனது தாங்காமல் அவனை சாப்பிட வாங்க என்று எழுப்ப, அவன் ஏய், என்னை தொந்தரவு செய்யாதே, எனக்கு தூக்கம் வருது என்று புரண்டு படுத்துக்க கொண்டான். மீறி எழுப்பினால் ஏதாவது அமர்க்களம் செய்வான் என்று அவளும் அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்யாமல் கீழே படுத்துகொண்டாள்.  

 

ஒரு மாதம் இதுவேதான் தொடர்ந்தது. காலையில் அலுவலகம் செல்வதும் மாலையில் குடித்துவிட்டு வருவதும், அல்லது வீட்டிலேயே குடிப்பதுமாக கழிந்தது. வர்ஷினி பொறுத்து பொறுத்து பார்த்தாள். ஒரு நாள் காலையில் அவன் குளித்துவிட்டு வரும்வரை அவனுக்காக காத்திருந்தாள். அவன் வந்தவுடன் அவனிடம், நீங்க தினம் தினம் இது மாதிரி குடித்து விட்டு வந்தால் உங்க உடம்பு கெட்டுவிடாதா? நாம நம்ம வாழ்க்கையை எப்ப தான் ஆரம்பிக்கறது?என்று கேட்டவுடன் ஆர்யா அவளை முறைத்து பார்த்து என்னை கேள்வி கேக்கிற அளவுக்கு உனக்கு தைரியம் வந்திடிச்சா? என் பணம், என் உடம்பு நான் குடிப்பேன்! அதை கேக்க நீ யாரு? இந்த கேள்வி கேக்கறது அதிகாரம் பண்ணறது எல்லாம் என்கிட்ட வச்சிக்காதே, என் அம்மாவின் வற்புறுதலால தான் உன்னை கல்யாணம் பன்னினேன் , எனக்கு உன்னை பார்த்தாலே பிடிக்கலே. நீ என் டேஸ்ட்க்கு ஏத்த பொண்ணே இல்ல, உனக்கு மாடர்ன்னா டிரஸ் பண்ண தெரியுதா, தொள தொளனு ஒரு சுடிதார், எண்ணையை போட்டு நல்லா வழிச்சு வாரின தலைமுடி, சரி ட்ரெஸ்ஸிங் சென்ஸ் தான் இல்ல நல்லா பேசவாது செய்யிறியா, அதுவும் இல்லை, எப்போவுமே அழுது வடியிரே, நேத்து வந்த என் பிரெண்ட்ஸை பார்த்தே இல்ல எப்படி ஸ்டைலா எவ்வளவு அழகா இருக்காங்க. நான் உன்னை பொண்ணு பாத்த அன்னைக்கே உன்னை பிடிக்கலைனு என் அம்மாகிட்ட சொன்னேன். அவ தான் குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு உன்னை என்  தலையிலே கட்டி வச்சிட்டாங்க என்று அவன் கூற கூற வர்ஷினிக்கு உலகமே இடிந்து அவள் மேல் விழுந்தது போல் இருந்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. பக்கத்தில் இருக்கும் மேஜையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். கண்களில் தாரை தரையாய் கண்ணீர் கொட்டியது. தன்னை நிதானபடுத்திக்கொண்டு கல்யாணத்துக்கு முன்னே என்கிட்ட நீங்க சொல்ல வேண்டியதுதானே என்று கேட்டதற்கு, எங்க அம்மாதான் உன் கூட பேசக்கூடாதுனு சொல்லிட்டாங்க. இந்த கல்யாணத்தை நிறுத்தினா நான் செத்துவிடுவேனு மிரட்டினாங்க. அதனால் தான் வேறு வழில்லாமல் உன்னை கல்யாணம் பண்ணி தொலைச்சிட்டேன். அவள் அதைக் கேட்டு கதறி அழ,கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஏய், சும்மா அழுது வடிந்து, ஸீன் போடாதே தள்ளி நில்லு நான் போகணும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.     

 

வர்ஷினிக்கு மனது மிகவும் கஷ்டமாக இருந்தது. தன்னை மனைவியாக மதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு மனுஷியாக கூட மதிக்க அருகதை இல்லாதவளா நான்என்று மனம் குன்றி போனாள். அவள் தன் மன கஷ்டத்தை யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது என்று தெரியவில்லை. தன் அம்மாவிடமோ அப்பாவிடமோ சொல்லலாம் என்றால் அவள் அம்மாவே நோயினால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க தான் வேறு தன் கஷ்டத்தை சொல்லி  அவர்களை மேலும் துன்பப்படுத்தக்கூடாது என்று மனத்திலுள்ளயே மருகி போனாள். வீட்டில் உள்ள முழு வேலையும் அவள் தான் பார்த்தாள். இவளுடைய திருமணத்திற்கு முன் பாத்திரம் விலக்க, வீடு பெருகி துடைக்க வேலையாள் இருந்தனர். இவள் வீட்டிற்கு வந்தவுடன் வேலைக்காரர்களை அவள் மாமியார் நிறுத்திவிட்டார். நீ வீட்டில் சும்மா தானே இருக்கிறாய், நீயே செய் என்று அவளை பம்பரமாக சுழலவிட்டாள். விசாலாட்சிக்கு குறித்த நேரத்தில் அந்த அந்த வேலை நடந்தாகவேண்டும், இல்லையென்றால் அப்பளம் போல் பொரிந்து விடுவாள். அந்த வீட்டில் உள்ள சின்ன ஆறுதல் ஆதேஷ் தான். அவன் தான் வர்ஷினியிடம் அன்பாகவும் பாசமாகவும் பேசுவான். அவன் அம்மா இல்லாத நேரத்தில் அவள் வேண்டாம் என்று சொன்னால் கூட  காய்கறிகளை சுத்தம் செய்வது, நறுக்குவது போன்ற சிறு சிறு உதவிகள் செய்வான். அவனுக்கு அம்மா தன்னை திட்டிவிடுவார்கள் என்ற பயமில்லை ஆனால் அண்ணியை ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று தான் பயந்தான். இயந்திரதானமாக போய் கொண்டிருந்த  அவள் வாழ்வில் கணவருடைய நடவடிக்கையும் பாராமுகமும் அவளை மேலும் மேலும் இருகவே செய்தன. வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் ஏன் தான் வாழ்கிறோம் என்ற நிலையில் தான் அவள் மனம்  இருந்தது.         

 

அன்று சீக்கிரமாகவே ஆர்யா வீட்டிற்கு வந்திருந்தான். வந்ததும் யாரிடமும் எதுவும் பேசாமல் நேராக தன் அறைக்கு சென்று விட்டான். விசாலாட்சி அவளிடம் என் பையன் கிட்ட நீ ஒழுங்கா நடந்துக்கலை, அதனால் தான் உன் மேல் எரிந்து விழுகிறான். நீ அவன் மனசுக்கு பிடிச்ச மாதிரி நடந்திருந்தா அவன் ஏன் உன்னை வெறுக்க போறான். இந்த காபியை போய் அவனிடம் கொடுத்து பக்குவமா பேசு என்று அதிசயமாக விசாலாட்சியே காபியை போட்டு அவளிடம் கொடுத்தாள். தன் பிள்ளை இப்படி நடந்து கொள்வதற்கு தான்   

தான் காரணம் என்று அவர்கள் மனசாட்சியே சொன்னது போலும். வர்ஷினி காபியை எடுத்துக் கொண்டு உள்ளே போக அவன் குளியல் அறையில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு மனம் தாளாமல் அவன் வெளியே வந்தவுடன் தண்ணீர் பாட்டிலை குடுக்க, அவன் அதனை வாங்காமல் அங்கு இருக்கும் சிறு குளிர்சாதன பெட்டியில் இருந்து மது பாட்டிலை எடுத்தான். அவன் அவளை அடித்தாலும் கண்டபடி பேசினாலும் கூட அவன் உடம்பு சரியில்லாத நேரத்தில் கூட மதுவை குடிக்கிறானே என்று அவள் மனம் வாடத்தான் செய்தது. வர்ஷினி அவன் முன்னே வந்து உடம்பு முடியாம இருக்கிறீங்க இந்த நேரத்தில் கூட இந்த கருமத்தை குடிச்சு ஏன் இன்னும் உடம்பை கெடுத்துகிறீங்க, அதை வச்சிட்டு கீழே வாங்க சாப்பிடலாம் என்று அழைக்க, அவன் எனக்கு சாப்பாடு எல்லாம் வேணாம், உனக்கு பசியாய் இருந்தா நீ போய் கொட்டிக்கோ, இங்கிருந்து போ என்று அவளை பார்க்காமலே உரைத்துவிட்டு மீண்டும் குடிக்க ஆரம்பித்தான்.  என்னதான் அவளை கண்டபடி ஏசினாலும், அடித்தாலும் அவளால் அவன் குடித்து உடம்பை கெடுத்துக் கொல்வதை பார்த்து விட்டு சும்மா இருக்க முடியவில்லை. எனவே அவள் அவனருகே சென்று குடித்து கொண்டிருந்த பாட்டிலை பிடுங்கி விசிறி எறிந்தாள். அதை பார்த்து ஆர்யாவிற்கு கோபத்தில் கண்கள் சிவந்தது. அவன் அவள் தலைமுடியை பிடித்து, நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லியிருக்கிறேன் என் பேச்சுக்கு வராதே , என்னை தொந்தரவு பண்ணாதேனு, என் பேச்சையும் மீறி நீ இப்படி செய்யறதுக்கு உனக்கு எவ்வளவு தைரியம், திமிரு என்று அவளை தர தரவென இழுத்துக் கொண்டு மாடி படி இறங்கினான். அடுத்து அவன் செய்தது தான் இவனெல்லாம் மனுஷன் தானா, இன்னும் இந்த வீட்டில் இருக்கத்தான் வேண்டுமா என்று எண்ணம் ஏற்பட்டது. 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
கண்மணியே காதலில் கரைந்திட வா
797 10 4
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page