அத்தியாயம் 17
அபிராமியை விவாகரத்து செய்து விடலாம் என்று நினைத்து முடிவு செய்தது அஸ்வந்த்திற்கு வருத்தமாக இருந்தது.
ஏனென்று தெரியாமல் காரணம் இல்லாமல் அவனின் இதயம் வலியை உணர்ந்தது.
முதல் திருமணமும் விவாகரத்து என்ற உறவை அறுக்கும் ஒரு உயிர்கொல்லியிடம் இருந்து தப்பி வந்து இப்பொழுது இரண்டாவது திருமணம். அதுவும் விவாகரத்து செய்து அந்த உறவும் முறிந்து விட்டால் பெண்ணவள் நிலைமை என்ன? என்று நினைத்தான்.
இதற்கு நாம் திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாமே என்று சிந்தித்தான். தன் குழந்தையை அவள் குழந்தை என்று நினைத்து தாயாக மாறி அவனை அவள் சீராட்டும் போது இருவரையும் பிரித்தால் என்னவாகும் என்று மேலும் அவனின் மனம் கேள்வி கேட்டு துளைத்தது.
யோசித்து யோசித்து தலை வலி வந்தது போல் இருந்தது அவனுக்கு. தலையை இரு கைகளாலும் அழுத்தி பிடித்தான்.
அவளுக்கு குழந்தை பொறக்காது பா என்று தாய் கூறிய வார்த்தைகள் இரு காதுகளிலும் நிற்காமல் ஒலித்தது.
தலையை இன்னும் அழுத்தி பிடித்து காதுகளையும் மூடினான். ஒரு பெண்ணின் வாழ்க்கை தன்னால் சீரழிய வேண்டுமா? என்ன செய்வது? அவளுடன் சேர்ந்து வாழ மனம் ஒப்பவில்லையே. என் மனதில் சுகன்யாவை தவிர வேறு யாரும் இல்லையே…. ஹ்ஹ்ஹா……
அபி என்று சத்தமாக அழைத்தான் அஸ்வந்த்.
அவனின் அபி என்ற சத்தமான குரல் அறை எங்கும் எதிரொலித்தது.
என்னங்க என்று வேகமாக அவனின் அருகில் வந்தாள் அபிராமி.
தலை வலிக்குது அபி. ஏதாவது பண்ணு டி என்றான்.
என்னாச்சுங்க. திடிர்னு எப்படி தலை வலி என்று கேட்டவள் அவனின் புஜத்தில் கை வைத்து இங்க தள்ளி உட்காருங்க என்று கூற, இரு கைகளையும் தன் தலையிலிருந்து எடுத்தவன் அவள் கூறியது போல் நகர்ந்து அமர்ந்தான்.
தலையணையை எடுத்து அவன் தலைக்கு அணை கொடுத்து அவனை தலையணையில் சாய்த்தாள்.
அவன் கண்கள் கோரமாக சிவந்து இருந்தது. தலை வின் வின் என்று வலித்தது.
நல்லா தானே இருந்தாரு என்று நினைத்தவள் ஆயின்மெண்ட் எதுவும் போடாமல் அவள் விரல் கொண்டு தலையை நீவி விட்டாள் .
அவள் ஸ்பரிசம் பட்டதும் தலை வலி குறைந்தது போல் முகத்தில் வலியை காட்டாமல் அபிராமியின் கண்களில் தன் கண்கள் கலந்தான்.
என்னங்க என் முகம் மறைந்து சுகன்யா முகம் உங்களுக்கு தெரியுதா? என்று கேட்டவளை அதிர்ச்சியோடு பார்த்தான் அஸ்வந்த்.
என்ன பதில் சொல்வான். அமைதியாக அதிர்ச்சியோடு அவளின் முகம் பார்த்தான்.
காலையிலேயும் அப்படி தான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சிருப்பேன். அதான் என்னைய அப்படி பார்த்தீங்க என்றாள்.
எப்…. எப்படி… உனக்கு தெரியும் திக்கி திணறி கேட்டான் அஸ்வந்த்.
நேற்று என்னைய உங்க ரூம்குள்ள இருக்க கூடாதுனு திட்டுனீங்க. அப்பறம் காலையிலேயே என்னைய நீங்க அப்படி பார்த்தால் நான் என்ன நினைச்சிருப்பேன்.
நேற்று தாலி கட்டுனதும் இன்னைக்கு காலையில அன்பு வந்துருச்சு. பொண்டாட்டின்னு என்னைய ஏத்துக்கிட்டிங்கனு நினைப்பேனா? சொல்லுங்க.
உங்க சுகன்யா என்னைய மாதிரி தான் காலையிலே குளிச்சிட்டு அதே ட்ரெஸ்ஸிங் டேபில் முன்னாடி அவங்க தலையை உலர்திருப்பாங்க. நானும் அது மாதிரி பண்ணதும் உங்களுக்கு சட்டுனு அவங்க ஞாபகம் வந்துருக்கும். ஆனால், நான் வேணும்னு அப்படி பண்ணலைங்க.
நீங்க என்னைய பார்த்ததும் தான் நானே நீங்க என்னைய பார்க்கல. உங்க மனைவி ஞாபகம் வந்துருக்கும்னு தெரிஞ்சிகிட்டேன் என்றாள்.
அஸ்வந்த் விழிகளை விரித்தான். ஒரு பார்வையில் அனைத்தையும் கண்டு கொண்டாளா? இது எப்படி சாத்தியம் என்று புரியாமல் அவளை பார்த்தான்.
நீவிய விரல்களுக்கு ஓய்வு கொடுத்து இப்போ தலை வலி சரி ஆயிடுச்சா? என்று கேட்டாள் அபிராமி.
அவளின் முகம் பார்த்த அஸ்வந்த் தலை வலி சரி ஆயிடுச்சு அபி. ஆனால் இப்போ நான் உன்னைய தான் பார்த்தேன். உன்னோட கண்களை தான் பார்த்தேன் என்றான்.
அபிராமி மெல்லிய அதிர்வை வெளிப்படுத்தினாள்.
தேங்க்ஸ் அபி என்றான் அஸ்வந்த்.
எதுக்கு?
தலை வலி சுத்தமா போச்சு என்றான்.
தேங்க்ஸ் வேணாங்க. நீங்க ரெஸ்ட் எடுங்க என்றாள்.
சரி என்று தலை அசைத்த அஸ்வந்த் மறுபடியும் அதே சிந்தனையில் சிக்கி கொண்டான்.
நாம் வேறு ஒரு பெண்ணை பார்த்தாலே சுகிக்கு கோபம் தலைக்கு ஏறும். அன்று முழுவதும் தன்னுடன் பேச மாட்டாள். ஏன் தன்னை பார்க்கவே மாட்டாள். நாம் கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பினாலும் அதற்கும் பதில் அளிக்க மாட்டாள். அஸ்வந்த்தின் சிந்தனை முழுவதும் அவளாகவே இருக்க விரும்புவாள்.
இதை யோசித்த நம் நாயகனுக்கு புதிதாக ஒரு கேள்வி மூளையை குடைந்தது.
மனதில் சுகன்யாவை நினைத்து கொண்டு அவளை ரசித்திருக்கிறோம் என்று தெரிந்தும் முகத்தில் எந்த ஒரு உணர்வையும் பிரதிபலிக்காமல் சென்று விட்டாளே. அவளுக்கும் அது வேதனையை அளித்திருக்குமே என்று நினைத்தான்.
யோசனையில் இருந்தவன் திடீரென்று நிமிர்ந்து பார்த்தான். அவளின் இந்நாள் மனைவி கைகளில் ஒரு கோப்பை கரும்பு சாற்றை ஏந்தி நின்று இருந்தாள்.
இதை குடிச்சி பாருங்க. தலைவலி பறந்து போயிரும் என்றவள் அவன் கைகளில் கரும்பு சாற்றை கொடுத்தாள்.
அவனின் அருகில் அமர்ந்து அவனை பார்த்தாள் அபிராமி.
கரும்பு சாறில் பனிக்கட்டி போட்டு கொண்டு வந்திருந்தாள். அதை பருகியதும் அஸ்வந்த் நெஞ்சில் சில் என்ற உணர்வு.
நீ குடிச்சியா டி? என்று கேட்டான் அஸ்வந்த்.
ஆச்சர்யமாக அவனை பார்த்தாள் அபிராமி.
இல்லை அங்க அம்மாகிட்டே வாங்கி குடிச்சிக்கிறேன் என்றாள் அபிராமி.
அவன் குடித்த கரும்பு சாற்றில் இன்னும் மீதம் இருக்க, இதை குடிக்கிறியா? என்று கேட்டான்.
வேண்டாம் என்று மறுப்பாளா அபிராமி.
முகத்தில் மிளிர்ந்த தவுசன்ட் வாட்ஸ் பல்பின் பிரகாசத்திற்கு அவள் முகம் மிளிர்ந்தது.
அவன் எச்சில் பட்ட கரும்பு சாற்றை வாங்கி அமிர்தம் போல் பருகினாள் அபிராமி.
அவளின் பழைய வாழ்க்கையை தெரிந்து கொள்ள விரும்பினான் அஸ்வந்த்.
ஒரு வருட தாம்பத்திய வாழ்க்கையில் உடனே குழந்தை பிறந்து விடும் என்று கூற முடியாது. நன்றாக இருப்பவருக்கே மூன்று நான்கு வருடங்கள் தள்ளி போகும். அப்படி இருக்க இவளுக்கு குழந்தை பெற்று கொள்ள தகுதி இல்லை என்று விவாகரத்து செய்த கணவனை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தான்.
யார் அவன்? நாம் இவளை பிரிந்து சென்ற பின் அவனிடம் மீண்டும் பேசி சேர்த்து வைத்தால் என்ன என்று தோன்றியது அந்த தாராள பிரபுவுக்கு.
அபி என்று அழைத்தான்.
கையில் கோப்பையோடு அவனின் அருகில் அமர்ந்திருந்த அபிராமி கணவன் அபி என்று தன்னுடைய பெயரை சுருக்கி அழைத்ததில் உதடு விரிய சிரித்து வைத்தாள்.
என்ன? ஏன் அப்படி சிரிக்குற?
உங்களுக்கு என்னைய அபினு கூப்பிட பிடிச்சிருந்தா அப்படியே கூப்பிடுங்க என்றாள்.
தான் அவளை செல்லமாக அழைக்கிறோம் என்று நினைத்து கொண்டாளோ என்று உணர்ந்தவன் ” அப்படியே கூப்பிடுறேன் நல்லா தான் இருக்கு உன் பேரு” என்றான்.
ம்ம் சம்மதமாக தலை அசைத்தாள்.
சரி உன்கிட்டே ஒரு விஷயம் கேட்கணும். ப்ளீஸ் தப்பா எடுத்துக்காத என்றான் அஸ்வந்த்.
அப்படி என்ன விஷயம்? தப்பா எடுத்துக்காதன்னு சொல்லுறீங்க என்று கேட்டாள்.
உன்னைய பற்றி தெரிஞ்சிக்க தான் கேட்குறேன். ஒரு வேலை நான் கேள்வி கேட்குறது உன் மனசை சங்கடப்படுத்திரக் கூடாது இல்லையா. அதான் முன்னாடியே சொல்லுறேன் என்றான் அஸ்வந்த்.
அவளுக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்று தெரிந்து கொள்ள தான் கணவன் கேட்கிறான் என்று நினைத்த அபிராமி, என்னைய பற்றி நீங்க கேட்டு நான் சொல்லுறதை விட நானே மொத்தமா சொல்லுறேன் என்றாள் அபிராமி.
அதுவும் சரி தான் நாம் ஏதாவது மனம் நோகும் படி கேட்டு இவள் கண்களில் இருந்து நீர் வந்தால் அதற்கும் நம் மனதிற்குள் இருக்கும் நல்லவன் வேறு ஏதாவது கேள்வியை நம் மனதிற்குள் கொண்டு வருவான். அதற்கு இவளே கூறி விடட்டும் என்று நினைத்தான். ( ரொம்ப நல்லவன் தான் பா நீ. அதான் நேற்றே அந்த பொண்ணை அழ வச்சிட்டியே. இப்பொழுதும் மனசாற்றி எழுந்து வர தயாராக நின்றான்)
எனக்கு எங்க அப்பாவை ரொம்ப புடிக்கும். எங்க அப்பாக்கும் நானா உயிர்.
அஸ்வந்த் அவள் கூறுவதை ஆர்வமாக பார்த்தான்.
எனக்கு டீச்சருக்கு படிக்க அசை அது மாதிரி அப்பாவும் என்னைய படிக்க வச்சாங்க. நான் கொஞ்சம் அமைதி. அம்மா அப்பா எது சொன்னாலும் கேட்டுப்பேன். அதுனால நான் சமத்து பொண்ணு. என்கிட்டே பழகுறவங்களுக்கு என்னைய உடனே புடிச்சிரும் என்றவள் லேசாக நிறுத்தி, என் ஸ்கூல் பசங்க மாதிரி என்றாள்.
அஸ்வந்த் அவள் கூறுவதை ஆர்வமாக பார்த்து அவ்வளோ தானா? என்று கேட்டான்.
குழந்தைங்கனா ரொம்ப புடிக்கும். குழந்தைகளும் ஒரு தடவை என்கிட்டே வந்துட்டாங்கனா அப்பறம் என்னைய விட மாட்டாங்க. நம்ப பையன் மாதிரி என்றாள்.
எல்லாத்தையும் சொல்லுறாள். ஆனால், முக்கியமான விஷயத்துக்கு வர மாட்டிக்கிறாள் என்று யோசித்தான் அஸ்வந்த்.
அவ்ளோ தானா அபி? என்று கேட்டான்.
வேற என்ன என்று நாடியில் விரல் தட்டி யோசித்தாள் அபிராமி.
அவள் நாடியில் விரல் தட்டி யோசிக்கும் விதம் அவனின் கண்களை கவர்ந்தது உண்மையே. ஆனால், தலையை சிலுப்பி தன்னை உலுக்கி கொண்டான்.
அது வந்து…. உன…க்கு குழந்தை பொறக்காதா? என்று அவன் சிரமப்பட்டு வார்த்தையை தொண்டை குழியில் இருந்து வெளி கொண்டு வந்தான்.
இப்படி ஒரு கேள்வியை அவனிடம் இருந்து எதிர்பார்க்காத அபிராமி கணவனை அடிபட்ட பார்வை பார்த்து அவன் முகம் பார்க்காமல் எழுந்து நின்றாள்.
அவளின் கண்கள் தரையை பார்த்தது. கண்களில் இருந்து குபு குபுவென்று நீர் கொட்டியது.
சரம் சரமாய் கொட்டும் அவளின் கண்ணீரை பார்த்த அஸ்வந்த் மிரண்டு போய் அவளின் கன்னங்களை இரு கை கொண்டு பற்றினான்.
அவளின் முகத்தை தன்னை பார்க்கும் படி நிமிர்த்தினான்.
ஒரு பொண்ணால குழந்தை பெத்துக்க முடியலைன்னா அவள் ஆயுள் வரை, அவளால அவள் புருசனோடு சேர்ந்து வாழ முடியாதா என்றவள், மேலும் தொடர்ந்து,
உங்க அம்மாகிட்டே என்னைய பத்தின விவரங்கள் சொல்லிருப்பாங்க. அவங்ககிட்டே கேட்டுக்கோங்க. ப்ளீஸ் என்கிட்டே இந்த மாதிரி கேள்வி கேட்காதீங்க. என்னால தாங்கிக்க முடியல என்று கண்ணீரில் கதறினாள் பெண்ணவள்.
அவளின் அழுகையை போக்குவதற்கு ஆறுதலுக்காக அவளை அள்ளி அணைத்து கொண்டான் அஸ்வந்த்.
கணவனின் அணைப்பில் கோழி குஞ்சி போல் அவனின் நெஞ்சில் தஞ்சம் கொண்டாள் அபிராமி.
தொடரும்.
