அத்தியாயம் 18: அக்னி சாட்சியாய் ஒரு மௌன ராகம்

லண்டன் பயணம் இன்னும் சில நாட்களில் இருந்தது. உலகமே ஆரியனின் வருகைக்காகக் காத்திருந்தது. ஆனால், ஆரியனுக்குத் தனது வெற்றியைக் கொண்டாடுவதை விட, யாழினியைத் தனது வாழ்க்கையின் நிரந்தரப் பாதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே மிகப்பெரிய லட்சியமாக இருந்தது.

அலுவலகத்தில் கௌதம், லண்டனுக்கான பயணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான்.

அப்போது அவனது அலைபேசி அழைத்தது.

“சொல்லு ஆர்யா”

“கௌதம் நீ உடனே கிளம்பி கொடைக்கானல் வா”

“டேய்,… என்ன சொல்ற, வேலை தலைக்கு மேல இருக்கு! அம்பாசிடர் ஆஃபீஸ் க்கு, உடனே கிளம்பனும்”

என ஒவ்வொரு வேலையாக சொல்லி முடித்தான்.

“ அத விட முக்கியமான வேலை,”

கௌதம் கூர்மையாக அடுத்து சொல்ல வரும் வார்த்தையை கவனித்தான்.

“எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற வேலை”

“ சூப்பர் மச்சான்… ஆனா அதுக்கும் ஒரு இடத்தை பிடிக்கணும், கேமரா, லைட், சரி வீடு மச்சான் சேப்பாக்கம் கிரவுண்ட் ல, கிராண்ட் மேரேஜ். சும்மா கலக்கிடலாம்”

“அதெல்லாம் ஒன்னும் வேணா, சிம்பிளா பண்ணின போதும். இப்போதைக்கு நீ கிளம்பி வா”

என்று ஃபோனை கட் செய்தான், ஆர்யன்.

சரி நண்பன் சொல்லிட்டான், அதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது. உடனே உதவியாளர்களை வரவைத்து ஆளுக்கு ஒரு வேலையாக பிரித்துக்கொடுத்து இரண்டு நாட்களில் முடிக்க சொல்லி உத்தரவை பிறப்பித்துவிட்டு, அடுத்த விமானத்தில் மதுரை ஏர்போர்ட் வந்து இறங்கினான்.

கொடைக்கானலில் பூந்தோட்டத்தில் நடைபயணத்தில் இருக்கும் பொழுது, ஆர்யன் யாழினியை பார்த்து,

“யாழினி, உன்னைக் கடந்து வந்த இந்த வலிகள் எனக்கு ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கு. காலம் எப்போ வேணா யாரையும் பிரிக்கலாம். ஆனா, நாம பிரியக்கூடாது,” என்று ஆரியன் அவளது கைகளைப் பற்றிக் கேட்டான்.

யாழினி வெட்கச்சிரிப்புடன் சம்மதத்தை தெரிவித்தார்.

கொடைக்கானலின் அடிவாரத்தில் இருந்த ஒரு பழமையான, சிறிய சிவன் கோவில். விடியற்காலை நேரம். பனிமூட்டம் கோவிலைச் சுற்றி ஒரு வெண்மையான போர்வை போலப் படர்ந்திருந்தது. அங்கே ஆள் நடமாட்டம் இல்லை. கோவில் குருக்களும், கௌதமும் மட்டுமே சாட்சிகளாக இருந்தனர்.

யாழினி ஒரு அழகான பட்டுப் புடவையில் தேவதை போல வந்தாள். அவளது முகத்தில் இருந்த மௌனம் இப்போது ஒரு தெய்வீகப் புன்னகையாக மாறியிருந்தது. ஆரியன் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றிருந்தான். அவனது காதுகளில் இப்போது மந்திரங்களின் சத்தம் மெல்லிய ரீங்காரமாகக் கேட்டது.

மந்திரங்கள் ஓதப்பட, அக்னி சாட்சியாய், கௌதம் தாலி எடுத்துக்கொடுக்க ஆரியன் யாழினியின் கழுத்தில் தாலி கட்டினான். அந்த நொடி, யாழினியின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. ஆரியன் அவளது கண்ணீரைத் துடைத்து, அவளது நெற்றியில் குங்குமம் இட்டான்.

இருவரும் கௌதம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, எதற்கும் கலங்காத கௌதமே கண்கலங்கி நின்றான்.

“நல்லா இரு மச்சா, நல்ல இரு தங்கச்சி, என இருவரையும் வாழ்த்தி, இருவருக்கும் பரிசாக இரண்டு வைர மோதிரத்தை வழங்கினான்.

அதை இருவரும் சந்தோஷமாக ஒருவருக்கொருவர் அணிவித்தனர். கௌதம் அந்த நிகழ்வை தனது ஃபோனில் புகைப்படமாக எடுத்துக்கொண்டான்.

“இனி நீ என் பாதி இல்லை யாழினி… நீயே தான் நான்,” என்று ஆரியன் அவளது காதோரம் கிசுகிசுத்தான்.

யாழினி குனிந்து அவனது பாதங்களைத் தொட்டு வணங்கினாள். ஆரியன் அவளைத் தூக்கி நிறுத்தி, அவளது கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான். அந்தச் சிறிய கோவிலின் மணி ஓசை, அவர்களின் காதல் உலகிற்கு ஆசி வழங்குவது போல ஒலித்தது.

திருமணம் முடிந்ததும், அவர்கள் அந்த மலைச்சாலையில் தனியாக ஒரு நடைப்பயணம் மேற்கொண்டனர்.

“யாழினி, உனக்குத் தெரியுமா? நான் முதல்முதலா உன்னைப் பார்த்தப்போ, உன்னோட அமைதி என்னைக் கொன்னுடுமோன்னு பயந்தேன். ஆனா அதே அமைதி தான் எனக்கு இன்னைக்குப் பெரிய பலமா இருக்கு,” என்றான் ஆரியன்.

யாழினி அவனது தோளில் சாய்ந்துகொண்டாள். “ஆர்யன், நாம லண்டன் போறது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனா அங்கே நாம பாடப்போற பாட்டு, உலகத்துல இருக்கிற எல்லா ஊமை இதயங்களுக்கும் ஒரு நம்பிக்கையா இருக்கணும். காதலுக்குக் காதும் வேண்டாம், வாயும் வேண்டாம்… இதயம் இருந்தா போதும்னு நாம நிரூபிக்கணும்.”

இருவரும் கைகோர்த்து நடந்தபடியே தங்கள் வீட்டிற்கு வந்தனர்.

வீட்டில் வேலைக்கு இருப்பவர்களுக்கு புதிய துணி, மற்றும் பணத்தை கொடுத்து இன்னும் ரெண்டு நாளைக்கு உங்களுக்கு லீவு என்று கௌதம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினான். பணிபுரிபவர்களும் ஆர்யன், மற்றும் யாழினியை வாழ்த்தி சென்றனர்.

கௌதம் எப்போதும் போல, வேலையை முடித்ததும் கிளம்பியிருந்தான். “சரி, மச்சான் நானும் கிளம்புறேன்.” ஆர்யன் வழியனுப்ப கௌதம் மலையைவிட்டு காரில் இறங்கத்தொடங்கினான். அடுத்த வேலை அவனுக்காக எப்போதும் காத்து இருக்கும்.

அன்று இரவு மெழுகுவர்த்தி சூழ மஞ்சள் நிற வெளிச்சத்தில், இருவரும் ஒருவராக இணைந்து இளமை என்னும் தீயில் ஒளிர்ந்தனர்.

மறுநாள், விடிந்தும் இருவரும் மதியம் அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தனர். ஆர்யனே முதலில் எழுந்து தேயிலை செடியில் இருந்து புதிதாக தளிர்த்து வளர்ந்த கொழுந்து இலையினை பறித்து, சிறிது ஏலக்காய், மற்றும் இஞ்சியைத் தட்டி, ஒரு டீயை போட்டு மணக்க, மணக்க கொண்டு வந்து யாழினியை எழுப்பினான். யாழினி குழந்தை உறக்கம் கலைத்தது போல சிரித்த முகத்தோடு எழுந்து ஆர்யன் நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்தாள்.

இருவரும், முன்னால் படர்ந்து கிடந்த மலையினை ரசித்தபடி தேநீரை சுவைத்து அருந்தினர்.

“ரொம்ப, நாளைக்கு அப்பறம் நிம்மதியான தூக்கம் ஆர்யா”

“எனக்கும் தான் யாழினி”

“அது என்னன்னு தெரியில, 20 மேல கனவு எல்லாம் குட்டி, குட்டி கனவு. அண்ணன் வந்து வாழ்த்திட்டு போறாரு. நிறைய குழந்தைகள் கூட்டமா என்கூட விளையாடிட்டு இருக்காங்க. நாம ரெண்டு பேரும் அருவியில குதித்து விளையாடுரோம்  இப்படி நிறையா சந்தோசமான குட்டி,குட்டி கனவுகள்” என ஆர்யன் மீது தோள் சாய்த்தபடி தனக்கு வந்த கனவுகளை பற்றி பகிர்ந்து கொண்டிருந்தாள் யாழினி.

“சரி எல்லாமே நல்ல கனவு தான். இன்னிக்கு நாம எங்க போகப் போறோம் தெரியுமா?”

“எங்க”… என உற்சாகம் பொங்க யாழினி கேட்ட போது…

“பியர் ஃபால்ஸ்” காட்டுக்குள் இருக்குற ஒரு அருவி, குளிச்சு முடிச்சிட்டு அப்படியே சூடா சாப்பிட்டு அடுத்த பிளான் என்னனு சொல்றேன்”

இருவரும் ஒன்றாக சிரித்தனர்.

மதியம் நேரம் ஒன்றை நெருங்கி இருக்கும் அப்போது தான், சூரியனும் உறக்கம் கலைந்து வெளியே வந்தார்.

காரை எடுத்த காதல் ஜோடிகள் ஆனந்தமாக கரடி அருவியில் ஒரு குளியலை போட்டு மகிழ்ந்தனர். யாழினி அப்படியே அந்த அருவியின் கொட்டும் ஆசீர்வாதத்தை முழுவமையாக ஏற்பது போல, கைகளை விரித்தபடி நின்றாள். அவளுக்கு பின்னால் வந்த ஆர்யன் அவளை இடுப்போடு கட்டிக்கொண்டு ஒரு சுற்று, சுற்றி தண்ணீரின் வேகத்தில்  இருவரும் ஒன்றாக கீழே விழுந்து ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை தெளித்து விளையாடினர்.

நல்ல மணக்க, மணக்க கேரளா ஸ்டைலில், சிவப்பு அரிசி சாதமும், பொறித்த மாந்தள் மீன், மற்றும் மத்தி மின் குழம்புடன் அருமையான சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டனர்.

“சரி அடுத்து எங்க போகலாம்?”

“ டால்பின் மூக்கு பாறை,”

இருவரும் சிறிய மலைச்சரிவு பாதையில் மரத்தின் வேர்களே படிகள் போன்ற அமைப்பில் மெல்ல இறங்கினர். ஒரு அரை மணி நேர நடை பயணத்தில் டால்பின் மூக்கு பாறை வந்தது. அப்போது தான் யாழினிக்கு ஒன்று நினைவு வந்தது.

“ ஹே… இது பிரேமம் படத்துல வர்ற ஸ்பாட் தான?”

“ ஹ்ம்ம்… நிறையா படம் எடுத்து இருக்காங்க, வா நாமளும் ஒரு படத்தை எடுப்போம்,” என சொல்லி பாறையின் நுனியில் நின்றவாறு ஆர்யனும், யாழினியும் செல்ஃபி ஒன்றை எடுத்துக்கொண்டனர்.

“சரி அடுத்து…?” என யாழினி வினவ! ஆர்யன் அப்படியே கைகளை கீழே காண்பித்து

“இப்படியே ஒரு எட்டு கிலோ மீட்டர் நடந்து போனோ, வெள்ளக்கவினு ஒரு கிராமம் வரும். செம்ம ஸ்பாட். நைட்  அங்க தங்குறோம். செம்மையா என்ஜாய் பண்றோம்”

யாழினிக்கு ஆர்யனின் ஆர்வம் பிடித்து இருந்தாலும், “எட்டு கிலோ மீட்டரா” என வாயை பிளந்தாள். “நீ அப்படியே வாய மூடமா இரு வந்துறேன்” என்று வேகமாக கிளம்பியவன். அவள் வாயை மூடும் வண்ணம் ஆர்யன் ஒரு கோவேறு கழுதையை (மலை ஏற்றத்திற்கு பயன்படுத்தப் படும் சிறிய வகை குதிரை)  கூட்டி வந்தான். அவளை அப்படியே கோவேறு மீது ஏற்றி பள்ளத்தாக்கில் உள்ள கிராமத்திற்கு அழைத்துச் சென்றான்.  

செல்லும் வழிகளிலெல்லாம் அடர்ந்த மரங்களும், ஆங்காங்கே மலைகளில் தேன் எடுக்கும் மலை கிராம வாசிகளும், துணைக்கு வரும் நாய்களும், தாகம் எடுத்தால் தண்ணீர் தரும் ஓடைகளும் அவர்களின் பயணத்தின் தன்மையை மேலும் ஒரு படி ரசிக்க வைத்தது.  

கிராமத்தின் முன்னால், கிராமத்து மக்கள் செருப்பு இல்லாமல் நடப்பதை பார்த்த யாழினியும், ஆர்யனும் தங்களது ஷூக்களை கழட்டி கொண்டனர். ஒவ்வொரு வீட்டிலும் வெல்கம் என்றே எழுதியிருந்தது. சில வீடுகளில் வெள்ளைக்காரர்கள் விருந்தினர் போல தங்கியிருந்தனர். வெள்ளை கவியை பொறுத்த வரை சுற்றுலா வருமானமே பிரதானம், வரும் சுற்றுலா பயணிகளுக்கு உணவு, தங்க இடம், மற்றும் காட்டுக்குள் டிரெக்கிங் அழைத்து செல்வார்கள். மிக அன்பாக பழகும் மக்கள், ஆர்யனையும், யாழினியையும் புன் சிரிப்போடு வரவேற்று உபசரிக்கத் தொடங்கினர். சில நாட்கள் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தனர்.

நாட்கள் சென்றதே தெரியாமல், சுற்றுலா பயணம் இருந்தது. ஆனால் இப்பொழுது கனவை தேடிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். சுற்றுலாவை முடித்த நாளின்  இரவு அவர்கள் சென்னைக்கு கிளம்பி வந்தனர். கௌதமின் வழிகாட்டலோடு அன்று  மாலை அவர்கள் லண்டனுக்குப் புறப்பட்டனர். விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி நின்று அவர்களை வாழ்த்தினர். ஆரியன் யாழினியின் கையை ஒருபோதும் விடவில்லை.

விமானத்தில் அமர்ந்திருந்தபோது, மேகங்களுக்கு மேலே நிலவு தெரிந்தது. ஆரியன் யாழினியின் தலையைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான். லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுக்கான முதல் மெட்டை அவன் முணுமுணுத்தான். யாழினி அதற்கேற்பத் தாளமிட்டாள்.

அவர்களின் பயணம் இப்போது ஒரு தனிப்பட்ட காதலைத் தாண்டி, ஒரு கலைப் பயணமாக மாறியிருந்தது. ஆனால், லண்டனில் அவர்களுக்கு ஒரு புதிய சவால் காத்திருந்தது. அங்கே ஆரியனின் பழைய எதிரி ஒருவன் புதிய வடிவில் காத்திருப்பான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page