அத்தியாயம் -18

வேனலின் வெண்பூவே!

 

அத்தியாயம் 18

 

வாழ்க்கையில் சில விஷயங்கள் கண்ணை மூடிக் கண்ணைத் திறக்குறதுக்குள்ள நடந்திடும். நம்ம வாழ்க்கையில் அர்த்தமாக இருந்தவங்க எதிர்பார்க்காத சமயத்தில் நம்மை விட்டுப் போயிடுவாங்க. அவங்க விட்டுட்டுப் போனதால் இருக்குற வெறுமையை யாராலும் நிரப்ப முடியாது அப்படிங்கிறதுதான் உண்மை.
   -சிவகாமினி

மாலை நேரம் கதிரவன் மெல்ல மேற்கு நோக்கித் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருக்க, அந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரின் அறைக்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்திருந்தாள் பத்மமுகி. அவளைச் சுற்றி வயிற்றைப் பிடித்துக் கொண்டு கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளைக் கையில் வைத்துக் கொண்டு தாயோடும், கணவனோடும் நிற்கும் பெண்கள் என அங்கிருக்கும் ஒவ்வொருவரும் துணையோடு நின்றிருந்தனர். 
தான் மட்டும் தனித்து நிற்கும் நிலையை எண்ணி மருகினாள் பத்மமுகி. எதிரில் இருக்கும் நாற்காலியைப் பார்த்தவள் மீண்டும் கைப்பேசியை எடுத்து ஆதிக்கு அழைத்தாள். அழைப்பு ஏற்கப்படவே இல்லை. பன்னிரண்டு முறை அழைத்தவள் எப்படியும் தன் கணவன் வந்து விடுவான் என்று எண்ணினாள். அவனுக்கு இருக்கும் வேலைபற்றி அறிந்துதான் இன்று மருத்துவமனை செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆதியும் நிச்சயம் வருவதாக உறுதி அளித்திருந்தான்.

“பத்மமுகி.” எனச் செவிலியர் அழைக்க, பத்மமுகி ஆதி வருகிறானா எனப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள். ஆனால் ஆதி வரவே இல்லை. மருத்துவர் பேசிக் கொண்டிருக்க அதில் கவனம் இல்லை என்றாலும் கேட்டுக் கொண்டாள். தன் கணவன் வரவில்லையே என்ற ஏக்கம் மனம் முழுக்க வியாபித்திருந்தது.

வீடு திரும்ப மனது இல்லாமல் அலுவலகம் செல்லும் வழியில் வாடகைக்கு எடுத்த வாகனத்தைவிடச் சொன்னாள். ஆதி அவளுக்கெனத் தனியாக மகிழுந்து வாங்கிக் கொடுத்திருந்தாலும், முகி பெரும்பாலும் தன்னுடைய இரு சக்கர வாகனத்திலேயே பயணம் செய்வாள். இன்று ஆதியோடு திரும்ப வீட்டுக்கு வரும் திட்டம் இருப்பதால் வாடகை வாகனத்தில் வந்திருந்தாள்.

இதோடு பல முறை ஆதி அவளுடன் போட்டிருந்த திட்டங்களுக்கு வரவில்லை. 
இவற்றை எதுவும் பற்றி உணராமல் ஆதி மருத்துவமனையில் அவசரப் பிரிவில் நின்றுகொண்டிருந்தான்.

“அம்மாவுக்கு ஒன்னுமில்லைதானே டாக்டர்.”

“பயப்படறதுக்கு ஒன்னுமில்லை. ஆனாலும் நாங்க கார்டியாலஜிஸ்ட்கிட்ட ரெஃபர் பண்றோம். நீங்க அவர் சொல்ற டெஸ்ட் எடுத்துக்குங்க.”

மாதவி அங்கு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தார். மருத்துவர் ஒன்றுமில்லை என்று கூறியதும் அவர் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.

“ஆதி… எனக்கு என்னவோ பண்ணுது?”

“அம்மா, உங்களுக்கு ஒன்னுமில்லை. வாயுப் பிடிப்பு மட்டும்தான். கவலைப்படாதீங்க.” என மருத்துவரும் அவருக்குக் கூற மாதவியின் முகத்தில் கவலை படர்ந்து கிடந்தது.

“ஆ…தி முகிக்கிட்ட சொன்னேன், போக வேண்டாம்னு. எங்கேயோ கிளம்பி போயிட்டாள். இப்ப பாரு எனக்கு இப்படி ஆகிருச்சு.”

“அம்மா, உங்களுக்கு எதுவும் இல்லை. முகி உங்களுக்குச் சீரியஸ்னு நினைச்சுருக்க மாட்டாள்.”

அப்போது சரியாகத் தாகினி வந்து சேர்ந்தாள்.

“சரி பரவாயில்லை விடுங்க. தாகினி கரெக்ட் டைமில் வந்துட்டாங்கல்ல.”

ஆலிவ் நிற சூட்டில் பளபளப்பாக வந்து நின்றாள் தாகினி.

“தாகினி, ரொம்ப தேங்க்ஸ்! என்னோட மொபைல் கொடுங்க. நான் என் சிஸ்டரை வரச் சொல்றேன்.”

தாகினி தன் கைப்பையில் இருந்த கைப்பேசியை எடுத்து நீட்டினாள்.

“ஆன்ட்டி, உங்களுக்கு எதுவும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. யூ ஆர் ஆல் ரைட்.”

கைப்பேசியை வாங்கிய ஆதியின் முகம் சுருங்கியது. அங்கு முகியின் அழைப்புகள் முன்னே அறிவிப்பில் தெரிந்தன. கைப்பேசியைப் பார்க்கும்போது அது ஒலியற்ற நிலையில் இருந்தது. மருத்துவமனை வந்தபோது அன்னையை கைதாங்கலாகப் பிடிக்கும்போது அவன் கைப்பேசி விழுந்திருக்க, அதைத் தாகினி எடுத்து வைத்திருந்தாள். அவன் அன்னைக்குப் பரிசோதனை முடிந்து மருத்துவர் முடிவு வரும் வரை அவனுக்குக் கைப்பேசி தேவைப்படவில்லை.

உடனே மனைவிக்கு அழைக்க அவள் அழைப்பு ஏற்கப்படவில்லை.

இரண்டாவது முறை அழைக்க முகி அழைப்பை எடுத்தாள்.

“முகி, எங்க இருக்க? அம்மா ஹாஸ்பிட்டலில் இருக்காங்க.”

“நானும் இப்பதான் ஹாஸ்பிடலிலிருந்து கிளம்பினேன். உங்களுக்கு மறந்துருச்சா?”

“அய்யோ முகி! ஸாரி, மறந்துட்டேன். இங்க அம்மாவுக்கு முடியலை.”

“இப்ப எப்படி இருக்காங்க?”

“பரவாயில்லைடா. டாக்டர் எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாங்க.”

“ஓகே.”

முகியின் குரல் சரியில்லை. அன்னையின் அழைப்பை ஏற்க முடிகிறது. தன்னுடைய அழைப்பை ஏற்க முடியவில்லை. தான் முழுவதும் இரண்டாம்பட்சமென முகி உணர, ஆதி-முகியின் திருமண வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரியாத இடைவெளி ஒன்று உருவாக ஆரம்பித்தது. தன்னுடன் அவன் வெளியே வர இருக்கும் சமயங்கள் பல ஏதோ ஒரு காரணத்தால் கழிப்பட்டிருக்க, முகிக்கு தெளிவாகப் புரிந்திருந்தது. ஒருத்தருடன் நேரம் செலவிட வேண்டும் என்றால் நாம் தான் உருவாக்க வேண்டும். தானாக நேரம் உருவாகாது.

அன்றைய நாளில் முகி வெகுவாகத் தளர்ந்து போயிருந்தாள். ஆதிக்கு அலுவலகத்தில் மேலும் ஒரு வேலை இருந்ததால் அங்குச் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்தான். முகி தன்னறையில் முடங்கி இருந்தாள். மாதவியை அமிர்தா அன்று தன்னுடைய வீட்டுக்கு அழைத்துப் போயிருந்தாள்.

அறையில் சுருண்டு படுத்திருந்தவளைப் போய் உடனே அணைத்துக் கொண்டான் ஆதி.

“ஸாரிம்மா, என்னோட செட்யூலில் ரிமைண்டர் இருந்துச்சு. ஆனாலும் எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியலை. ஸாரி… ஸாரி… அதுக்குள்ள அம்மாவுக்கு இப்படி…”

“இட்ஸ் ஓகே.” என முகி ஒரு புன்னகையை மட்டும் கொடுத்தாள்.

“சாப்பிட்டியா?”

“இன்னும் இல்லை.”

உடனே வெளியில் சென்று தட்டில் உணவை எடுத்து வந்து ஆதி முகிக்கு ஊட்டி விட, அவள் கோபம் எல்லாம் பரிதி கண்ட பனியாய் விலக ஆரம்பித்தது. ஆதியைப் பார்க்கவும் மிகவும் களைத்துத் தெரிந்தான்.

“முகி, இந்த வாரம் நம்ம கம்பெனி ஆன்வல் டே பார்ட்டி இருக்கு. நாம இரண்டு பேரும் போகணும். டிரஸ் உனக்கு நான் வாங்கிட்டேன். நாளைக்கு வீட்டுக்கு வந்துரும்.”

முகி இதுவரை தயக்கத்தின் காரணமாக ஆதியின் அலுவலகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதில்லை. அதனால் பலருக்கு முகியை சரியாகத் தெரியாது. இந்த முறை முகியும் போக வேண்டும் என முடிவெடுத்திருந்தாள். ஆதியின் மனைவியாகத் தான் அறியப்பட வேண்டும் என்று நினைத்திருக்க, அது அவள் மனதை அறுக்கும் விஷயமாக மாறி இருந்தது.

***

ஆண்டு விழா நாள். ஆதி தான் எடுத்துக் கொடுத்த சிவப்பு நிற பப் வைத்து, டைமண்ட் நெக்குடன் அதற்கு இணையான ரூபி நகையும், தோடும், பிரேஸ்லெட் அணிந்து மாடிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்தான்.

முன்னை விடச் சற்று இளைத்திருந்தவளுக்கு அந்தக் கவுன் மிகவும் பாந்தமாக இருந்தது.

“என் வைஃப் அப்படியே தூக்கிட்டு போற அளவுக்கு அழகு!” என ஆதி கூற, முகியின் முகம் பிரகாசித்தது. கணவன் கூறும் பாராட்டுகள் அழகுதானே!

அவனும் சிவப்பு பிளேசர், பேன்ட் மற்றும் வெள்ளை சட்டையில் மிளிர, தன் கணவனின் கம்பீரத்தை ரசித்துக் கொண்டாள்.

இருவரும் கைக்கோர்த்தபடியே பேசிக் கொண்டு மகிழுந்தில் சென்றனர். அன்று முகி முந்தைய விஷயங்களை எல்லாம் மறந்து நிம்மதியாக இருந்தாள். கணவன் மனைவி உறவில் ஆயிரம் பிணக்குகள் வந்தாலும் விட்டுக் கொடுத்துப் போவதால் ஒன்றும் கெட்டுப் போய்விடுவதில்லை என்று அவளுக்குத் தெரியும். ஆதி அவளை மோசமாக நடத்தியது இல்லை. அவளுக்குத் தேவையான அனைத்தும் அவளுக்குக் கொடுத்திருந்தான். மதிப்புடன் நடத்தினான் என்று அவனின் நல்ல பக்கங்களை மட்டும் நினைத்துக் கொண்டாள்.

ஆண்டு விழா நடக்கும் இடம் அலங்கார விளக்குகளால் மின்ன, சிவப்பு வண்ணக் கம்பளத்தில் கைக்கோர்த்தபடி நடந்து சென்றனர் தம்பதிகள் இருவரும். விழா நடக்கும் இடத்தில் இருவர், நால்வர் அமரும்படியும் இருக்கைகள் போடப்பட்டிருந்தது. ஆதி தன் மனைவியை இருவர் அமரக்கூடிய மேசையில் அமர வைத்து, அவனும் அமர்ந்து கொண்டான். உடனே பணியாளர்கள் அவர்களுக்கு இனிப்பையும் தண்ணீரையும் வைத்தனர்.

“ஆதி, ரொம்ப அழகாக டெக்கரேட் பண்ணி இருக்காங்க.” அந்த இடம் முழுக்க வெளிர் ரோஸ் நிறம், மற்றும் வெண்ணிறப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

“உன்னைவிட எதுவும் அழகில்லை முகி!” என மனைவியை விழிகளால் கொள்ளையிட்டான். முகியும், ஆதியின் விழிகளை நோக்கிக் கொண்டிருக்க, மாதவி, தாகினி, அமிர்தா மூவரும் அவர்கள் அருகில் வந்தனர்.

தாகினி முகியைப் பார்த்த பார்வையில் வெம்மை கூடி இருந்தது. மாதவி வந்ததும் ஆதியைக் கேள்வி கேட்டார்.

“என்ன ஆதி எப்பவும் நானும், அமிர்தாவும் உன்னோடதானே உட்காருவோம். இந்த வருஷம் என்ன மாறி இருக்கு?” என மாதவி அதிகாரமாகக் கேட்டார். அமிர்தாவின் பார்வையிலும் அந்தக் கோபம் தெரிந்தது. முகிக்கு அவர்கள் பேச்சில் அசௌகரியமாக இருந்தது.

“அடடே! மாது ஆன்ட்டி வந்தாச்சா? என்ன மாமியார் மருமகள் சண்டையா?” எனக் கேலி செய்தபடி சுக்ரீவ் அருகில் வந்தான்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சுக்ரீவ். எல்லா வருஷமும் ஒன்னா உட்…” என அவர் கூறும் முன் இடைவெட்டிய சுக்ரீவ்,

“சீட்டிங் எல்லாம் என்னோட அரேன்ஜ்மென்ட் ஆன்ட்டி. நானும் உங்க எல்லாரையும் மொத்தமாக அக்காமடேட் பண்ணலாம்னு பார்த்தேன். ஆனால் முடியலை. இந்த வருஷம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.” என்று சுக்ரீவ் கேட்டவுடன் மாதவி தலையசைக்க, அவர்களுக்கு இடத்தைக் காட்டி அமர வைத்தான்.

நண்பனைத் தப்பித்த நிம்மதியுடன் ஆதி பார்க்கச் சுக்ரீவ் கண்ணடித்தான். முகியின் மனநிலை அவர்கள் மூவரும் வந்தபிறகு மாறியிருந்தது. முன்பு பதற்றத்திலும், மகிழ்ச்சியிலும் இருந்தவளுக்கு இப்போது தூரத்தில் அமர்ந்தாலும் தங்களைத் தொடரும் பார்வை நன்றாகத் தெரிந்தது. முகி விழா நடக்கும்போது அங்கிருந்த உணவைக் கொறித்தாள். விழா முடிந்து பார்ட்டி நடக்க ஆரம்பித்தது. ஆதியும் பலருடன் முகியை அறிமுகம் செய்து பேச ஆரம்பித்தான். இடையில் முகி உடையைச் சரி செய்யச் செல்வதாகக் கூறிச் செல்ல மாதவியும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பின் தொடர்ந்தார்.

“என்ன முகி? அம்மாவையும், மகனையும் பிரிச்ச சந்தோஷமா?” என்றார்.

அவரின் கோப வார்த்தைகளில் திரும்பினாள் முகி. பொது இடத்தில் அவரிடம் வார்த்தையிட அவளுக்கு விருப்பமில்லை.

“குழந்தை இல்லாத உன்னை என் மகன் சீக்கிரம் டைவர்ஸ் பண்ணிடுவான். அந்தத் தாகினி மாதிரி பொண்ணுதான் எங்களுக்குச் சரி.” என அவர் வெளிப்படையாக வன்மத்தைக் கொட்ட முகிக்கு உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அமைதியாக அங்கிருந்து வெளியேறித் தன் கணவனைத் தேட, அவன் அகப்படவில்லை. சுக்ரீவிடம் கேட்க, அவன் மாடிப்பக்கம் போனதாகக் கூறினான். தன் கவுனைத் தூக்கியபடி படியில் ஏறியவள், பால்கனி பக்கம் இருட்டாக மெல்லிய வெளிச்சத்துடன் இருந்தப் பகுதியில் கேட்ட பேச்சு சத்தத்தில் அப்படியே நின்றாள்.

“ஆதி ஐ லவ் யூ!”

“தேங்க் யூ ஃபார் டெல்லிங் மீ தாகினி.”

ஆதி கூறியதை நம்ப இயலாமல் இன்னொரு படி ஏறி எட்டிப் பார்த்தவளுக்கு தாகினியும், ஆதியும் இதழில் முத்தமிடும் காட்சி தெரிய, இதயம் நொறுங்க நின்றாள் முகி.

 

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page