அத்தியாயம் 18
பிரதிக்ஷா ‘திருடன் திருடன்’ என்று கத்தவும் விதுரன் அவளின் வாயை பொத்தி விட்டு, ” ஏண்டி இப்படி கத்துற! நல்லா கண்ண தொறந்து பாரு நான் தான்!” என்று சொல்ல, விதுரனை நெருக்கத்தில் பார்த்த பிரதிக்ஷா அவள் விழிகளை அகல விரித்தாள்.
பிரதிக்ஷாவின் விழிகள் விரிந்து படபடக்கும் பட்டாம்பூச்சி போல் அவளின் இமைகள் மூடி திறக்க, இறுக்கமாய் மூடி வைத்திருந்த விதுரனின் இதயமும் இளக்கமடைந்தது!
மிக நெருக்கத்தில் அவளின் கண்களை பார்த்தவன் அவள் கண்கள் ஆடும் கதக்களி ஆட்டத்தில் தன்னையே தொலைத்து ரசனையில் மூழ்கினானோ என்னவோ சில வினாடிகள் அவளின் கண்களை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனின் கூரிய விழியிலிருந்த பார்வை எனும் அம்பு பாய்ந்து பாவையவளின் உணர்வுகளை தட்டி எழுப்ப தன்னவனின் பார்வையில் அவள் மெய்யும் கரைந்து கொண்டிருந்தது.
ரஞ்சித்தின் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த விதுரனின் கார் கண்களுக்கு எட்டிய தொலைவு வரை வராமல் போக, “என்ன ஆச்சு விதுரனோட காரை இன்னும் காணோம்! கார நிறுத்திட்டு அவனுக்கு கால் பண்ணி எங்க வந்துட்டு இருக்கான்னு கேட்டுட்டு அவன் பக்கத்துல வரவும் காரை ஸ்டார்ட் பண்ணு ரஞ்சித்!” என்று சரஸ்வதி சொல்ல சரஸ்வதிக்கு எந்த பதிலும் சொல்லாம கார் கண்ணாடியில் பின்னால் அமர்ந்திருந்த சரஸ்வதியின் முகத்தை பார்த்துக் கொண்டே காரை நிறுத்தினான் ரஞ்சித்.
நிறுத்தியவன் தன் அலைபேசியிலிருந்து விதுரனின் அலைபேசிக்கு அழைப்பு விடுக்க, எழுந்த சத்தத்தில் மெய்மறந்த இரு உயிர்களும் சுயம் தெளிந்து ஒருவரையொருவர் விட்டு நகர்ந்தனர்.
அலைபேசியை அட்டென்ட் செய்து “என்னாச்சு ரஞ்சித்?”என்று விதுரன் கேட்க, “என்னாச்சு எங்க இருக்க உன்னோட காரை காணோம்!” என்று கேட்டான் ரஞ்சித்.
சில வினாடிகள் பிரதிக்ஷாவை பார்த்துவிட்டு, ” கார நிறுத்திட்ட பக்கத்துல இருந்த ஹோட்டலுக்கு போய் ரெஸ்ட்ரூம் யூஸ் பண்ணிட்டு இப்போதான் வெளிய வந்தேன். உன்னோட கார் எங்க நிக்குதுன்னு லேண்ட்மார்க் சொல்லு, இன்னும் 10 மினிட்ஸ்ல அங்க வந்துருவேன், காரை ஸ்டார்ட் பண்ண போறேன்!” என்று விதுரன் சொல்ல,
“சரி சீக்கிரமா வா! உனக்காக நாங்க எல்லாரும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம்!” என்று ரஞ்சித் கூற அழைப்பை அணைத்தான் விதுரன்.
“எல்லாருக்கும் விதுரன் சொன்னது கேட்டிருக்குமுனு நினைக்கிறேன்” என்று கண்ணாடியில் தெரிந்த சரஸ்வதியின் முகத்தை பார்த்துக் கொண்டே கூறினான் ரஞ்சித்.
சரஸ்வதியும் எதுவும் சொல்லாமல் முன் கண்ணாடியில் தெரிந்த ரஞ்சித்தின் முகத்தை பார்த்தார். இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்ததே தவிர இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இங்கு,
பிரதிக்ஷாவை பார்த்து முறைத்துக் கொண்டே எல்லாம் இவளால வந்தது என்று சலித்துக் கொண்டான் விதுரன்.
“நான் என்ன பண்ணேன், நான் உங்களை காரை நிறுத்த சொன்னேனா? ஆமா எதுக்கு கார நிறுத்தினீங்க?” என்று கேட்டாள் பிரதிக்ஷா.
அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்து “அதான் சொன்னேனே, உனக்கு கேட்கலையா?”என்று சமாளித்தான் விதுரன்.
பிரதிக்ஷா கார் கண்ணாடியின் வழியே எட்டிப் பார்த்து சாலையின் இரு புறங்களில் தன் கண்களால் அலச எந்த இடத்திலும் ஹோட்டல் இல்லவே இல்லை,
“பக்கத்துல இருந்த ஹோட்டல்ல ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்னு சொன்னீங்க இங்க எந்த ஹோட்டலும் இல்லையே?” என்று தன் சந்தேகத்தை கேட்க, ” இவ வேற கேள்வி கேட்டே சாவடிக்கிறா!” எப்படி சமாளிக்கிறது என்று நினைத்துக் கொண்டு,
“ஹோட்டல் கொஞ்ச தூரத்தில் இருக்கு, அங்க கார நிறுத்துவதற்கு கொஞ்சம் சிரமமா இருக்கும் அதனால இங்கேயே நிறுத்திட்டு நான் நடந்து போயிட்டு வந்துட்டேன்!” என்று கூறினான்.
பிரதிக்ஷா, ஹோட்டல்ல எப்படி காரை பார்க் பண்ண இடம் இல்லாமல் இருக்கும் என்று அடுத்த கேள்வியை கேட்க வர,
அவளைச் சமாளிக்க எண்ணி,”அது இருக்கட்டும், ஏண்டி என்னைய பார்த்து நீ திருடன் திருடனு என்று கத்தின!” என்று பேச்சை திசை திருப்பினான் விதுரன்.
பிரதிக்ஷாவும் அவள் கேட்க வந்த கேள்வியை மறந்து விட்டு, “சம்பந்தமே இல்லாம கழுத்துல கை வச்சால், நகைய எவனோ பறிக்க வந்துட்டான் போலன்னு நெனச்சு திருடன் திருடன்னுதான் கத்துவாங்க” என்று பிரதிக்ஷா சொல்ல,
“யாரு நானு, திருடன்! அதுவும் உன் கழுத்துல கிடக்கிறத பறிக்க பார்த்தேன்” என்று சொல்ல, அவளின் வெண்சங்கு கழுத்து ஞாபகம் வர ஒருமுறை கழுத்து வளைவுகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஆடவனுக்குள் வந்தது.
அவன் எவ்வளவோ தன்னை கட்டுப்படுத்தி பார்த்தும் தன் உணர்வுகளை அடக்க முடியாமல் அவளின் வெண் சங்கு கழுத்தின் மேல் மையல் கொண்டான்.
விதுரனின் பார்வை போன இடத்தை பார்த்த பிரதிக்ஷா பெண்ணுக்குரிய அனிச்சை உணர்வால் அவன் கட்டியிருந்த சேலையை லேசாக இழுத்து விட அவளை முறைத்தான் விதுரன்.
தன் பார்வை பட்டதும் பிரதிக்ஷா தன ஆடையை சரி செய்ததை பார்த்த விதுரன் தன்னை அயோக்கியன் போல சித்தரித்து ஆடையை சரி செய்கிறாள் என்று நினைத்து கோபத்தில் “கவலைப்படாத! இந்த உலகத்துல கடைசியா நீயும் நானும் மட்டும் மிஞ்சி இருந்து, ஏன் என் எதிரில நீ ஆடையே இல்லாமல் இருந்தாலும், உன்னை லேசா கூட பாக்க மாட்டேன்!” என்று கூறினான்.
“அது சரி! இப்ப எதுக்கு பார்த்தீங்களாம்” என்று பிரதிக்ஷா கேட்க கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணற, அவள் கழுத்தில் அணிந்திருந்த நகை அவன் கண்களில் பட்டது.
“இல்ல நீ போட்டிருக்கிறது எங்க பாரம்பரிய நகை மாதிரி இருக்கே! எங்க அம்மா தானே உனக்கு இதை கொடுத்தாங்க!” என்று கேட்டான் விதுரன்.
விதுரன் கேட்கவும் பிரதிக்ஷாவுக்கு திரு திருவென்று விழித்தாள். “அது எப்படிடி எங்க வீட்டு நகையவே நான் திருட பார்த்தேன்னு திருடன் திருடன்னு கத்தின!” என்று அவளைக் கேட்க பாவமாக முகத்தை வைத்தாள் பிரதிக்ஷா.
“இப்படி பாவம் மாதிரி மூஞ்சிய வச்சு தானே, எல்லாத்தையும் பண்ணுன இப்பயும் எதுக்கு இந்த நடிப்பு நடிக்கிற!” என்று கேட்டுக்கொண்டே அவள் கழுத்து வளைவுகளை மீண்டும் பார்த்தான்.
ஏனோ ஒருமுறை அந்தக் கழுத்து வளைவுகளில் ஆழப் புதைந்து அவள் ஸ்பரிசத்தை உணர்வதற்கு ஒரு முறையாவது வாய்ப்பு கிடைத்திருந்தால், இத்தனை முறை அவனின் கண்கள் அவள் கழுத்தின் மேல் மையல் கொண்டு இருக்காதோ என்னவோ,?
“என்ன கழுத்தையே பாத்துட்டு இருக்கீங்க, கவலைப்படாதீங்க வீட்டுக்கு போனதும் எல்லா நகையையும் கழட்டி கொடுத்துடுவேன்!” என்று சொல்ல,
“அதைத்தான் நானும் சொல்ல நெனச்சேன்! இந்த நகை எல்லாம் எங்க குடும்பத்தோட பாரம்பரிய நகை, அது ஏனோ உன் கழுத்துக்கு பொருந்தாத மாதிரி எனக்கு தெரியுது, அதனால தான் அதை பார்த்துக்கிட்டு இருக்கேன், இந்த நகை எல்லாம் மனிஷா கழுத்துல போட்டால் ரொம்ப அழகா இருந்திருக்கும்!” என்று விதுரன் சொல்ல பிரதிக்ஷாவின் முகம் வாடியது.
பிரதிக்ஷாவின் முகம் மாற்றத்தை விதுரன் கண்டு கொண்டாலும், அதை பெரிதாக எடுக்காமல் காரை ஸ்டார்ட் செய்தான்.
விதுரன் சொல்லியது பிரதிக்ஷாவின் மனதில் வருத்தத்தை உண்டு பண்ண எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.தூரத்திலே ரஞ்சித்தின் கார் நின்று கொண்டிருக்க, விதுரன் முன்னேறி செல்லுமாறு சைகை செய்ய ரஞ்சித்தும் காரை ஸ்டார்ட் செய்தான்.
சில வினாடி பயணத்திற்கு பிறகு இரண்டு கார்களும் குலதெய்வம் கோயிலை அடைந்தது.
பூஜைக்கு தயாராக தங்கள் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் காரில் இருந்து அம்பிகாவும் சரஸ்வதியும் ரேணுவும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
“விதுரன், பிரதிக்ஷாவை கூப்பிட்டு குலதெய்வம் சன்னதிக்கு முன்னாடி போய் நில்லு!” என்று சரஸ்வதி சொல்ல வேண்டா வெறுப்பாக விதுரன் செல்ல அவன் பின்னாடியே எதுவும் சொல்லாமல் சென்றாள் பிரதிக்ஷா.
அவர்கள் இருவரின் முகமும் சரியில்லாததை பார்த்து, “ரெண்டு பேரும் சண்டை போட்டு இருப்பாங்க போல!” என்று கூறினார் அம்பிகா.
“அவங்க ரெண்டு பேரும் எந்த சண்டையும் போடலைன்னா தான் ஆச்சரியம், நேரம் ஆகுது நீ எல்லாத்தையும் எடுத்து ஐயர் கிட்ட கொண்டு போய் கொடு!” என்று சொல்ல, அம்பிகா சரஸ்வதி கொடுத்த பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு ஐயரிடம் கொடுத்தார்.
ரஞ்சித் கோயிலுக்குள் போகாமல் தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்றவைத்து புகையை ஊதி தள்ளிக் கொண்டு இருந்தான்.
“என்ன ரெண்டு பேரையும் ஏதோ பண்ணுவேன்னு சொல்லிட்டு இங்க வந்து கூலா சிகரெட்ட பத்த வச்சிக்கிட்டு நிக்கிற?” என்று மனிஷா கோபமாய் கேட்க,
“அவசரப்படாத பேபி! அதெல்லாம் சிறப்பா பண்ணிடுவோம்!” என்று கூறினான் ரஞ்சித்.
“அப்படி என்ன பண்ணப் போற?” என்று மனிஷா கேட்க, ” முன்னாடியே எல்லாத்தையும் சொல்லிட்டா சுவாரஸ்யமா இருக்காது! நீ போய் சாமி கும்பிடு, நான் வாரேன்!” என்று கூறினான் ரஞ்சித்.
“என்னமோ பண்ணு, வீட்ல இருந்து கோயிலுக்கு வரும்போது எல்லாரும் என்னைய கடுப்பேத்தி சிரிச்சாங்க! இங்க இருந்து போகும்போது நான் அவங்க எல்லாரையும் பார்த்து சிரிக்கணும்!” என்று கூறிவிட்டு கோயிலுக்குள் சென்றாள் மனிஷா.
பூசாரி பூஜைக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு பூஜையை ஆரம்பிக்க, அனைவரும் கண்ணை மூடி சாமி கும்பிட ஆரம்பிக்க ரஞ்சித் வேகமாக சாமி கும்பிடும் இடத்திற்கு வந்து பிரதிக்ஷாவின் அருகில் நின்றான்.
அம்பிகா சரஸ்வதி என இருவரும் விதுரன் பிரதிக்ஷா வாழ்வு சிறக்க வேண்டும் என்று எண்ணி கண்களை மூடி உருகி பிரார்த்தனை செய்து கொண்டிருக்க ரஞ்சித் பிரதிக்ஷாவின் பக்கத்தில் நின்றதை யாரும் கவனிக்கவில்லை மனிஷா ஒருத்தியை தவிர!
ஐயர் பூஜையை முடித்துவிட்டு தீப ஆராதனையை கொண்டு வந்தவர் விதுரனை தாண்டி, பிரதிக்ஷா, ரஞ்சித் இருவருக்கும் காட்டிவிட்டு , ” தீர்க்காயிஷா பொண்டாட்டி புருஷன் ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமா வாழனும்!” என்று சொல்லிவிட்டு சாமிக்கு பூஜை செய்த மாலையை எடுத்து ரஞ்சித் பிரதிக்ஷாவின் கழுத்தில் போட, அனைவரும் அப்படியே அதிர்ந்தனர்.
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய எண்ணங்களை விமர்சனங்களாக பதிவேற்றிச் செல்லுங்கள்.
