அத்தியாயம் 18

மன்னன் தந்த மாலை

 

அத்தியாயம் 18

 

“ஏய்! என்ன யாருகிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரியுதா? அவரு நம்ம அப்பா… அவருகிட்ட போய்த் திமிரா பேசிட்டு இருக்கே? இத்தனை நாளா உன்னை உன் இஷ்டத்துக்கு விட்டதுல கொழுப்பு ஏறிப்போச்சுன்னு நினைக்குறேன்.” என்ற மாணிக்கம் மீண்டும் அவளை அடிக்க வர அவனின் கைகளைத் தடுத்தான் கைலாசநாதன்.

“மாணிக்கம், என்ன பண்ணிட்டு இருக்க? வயசுக்கு வந்த பிள்ளை மேல கைவச்சிட்டு இருக்க…அறிவு இருக்கா உனக்கு?” என்று தம்பியைக் கண்டித்தான்.

“அவனை ஏன் தடுத்து நிறுத்தற கைலாசம்? அவன் செஞ்சதுல என்ன தப்பு இருக்கு?” என்ற ராஜவேலுவின் கோபத்தில் அவரைப் பார்த்தவன்,

“அப்பா, நீங்க என்ன பேசுறீங்க? அவ நம்ம வீட்டுப் பொண்ணு. நாமளே அவளை அசிங்கப்படுத்துற மாறி இருக்குப்பா…” என்றவனுக்கு அப்போதும் தங்கையை விட்டுக் கொடுக்கும் எண்ணமில்லை.

“அண்ணா, அவ நம்ம குடும்பத்தோட மானத்தைப் பத்திக் கவலைப்படல… நம்மகிட்ட கைக்கட்டி அண்டி பிழைக்குற ஒரு கீழ் ஜாதிப் பையனைக் காதலிக்குறேன்னு வந்து நின்னா எப்படி ஒத்துக்க முடியும்?” என்று உத்தமனாய் அண்ணனிடம் பேசினான்.

அவனைப் புரியாத பார்வை பார்த்தான் கைலாசம். அவனின் காதல் தான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே! ‘அவளின் காதல் தவறு என்றால் அப்போது உன் காதலை என்ன சொல்வது?’ என்ற பார்வை தான் தொக்கி நின்றது.

தன் அண்ணனின் பார்வையிலிருந்த பொருளை உணராமல் அப்போதும் கோபமாக இருந்தான் மாணிக்கம். கைலாசத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. இப்போது யாரை சமாதானம் செய்வது என்றும் புரியாமல் நின்றிருந்தான். ஏன் சிவகாமிக்கு கூட இந்த விடயத்தில் தான் தலையிடலாமா வேண்டாமா என்று புரியாத நிலை தான்.

ஆனால் ராஜவேலுவுக்கும் கற்பகநாயகிக்கும் தங்கள் மகளின் மேல் அத்தனை கோபமும் ஆத்திரமும் பொங்கியது. தங்களின் குடும்ப கௌரவத்தைக் குழி தோண்டி புதைக்க வந்த பிசாசாய் பார்த்தனர்.

எந்த அளவுக்கு அவளின் மேல் பாசம் இருந்ததோ இப்போது அதே அளவுக்குக் கோபமும் இருந்தது.

“வசு கொஞ்சம் பொறுமையா பேசு. அப்பா அம்மா உன்னைப் புரிஞ்சிக்குவாங்கடா…” என்றான் கைலாசம் பாசமான அண்ணனாய்.
“அண்ணே, நீதான் இவங்களைப் பத்தி புரிஞ்சிக்காம பேசுற… ஆனா சின்ன அண்ணா, உன்னைத்தான் நான் ரொம்பவே தப்பா கணக்குப் போட்டுட்டேன்.” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.

அவளின் குரலிலிருந்த வித்தியாசம் உணர்ந்தாலும் கூட அதை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கைலாசதிற்குப் புரிந்தது தங்கை என்ன சொல்கிறாள் என்று!

ஆனால் அதற்கு மேலும் அவளின் பேச்சை அங்கே யாரும் கேட்பதாக இல்லை. உடனே ராஜவேலு மாணிக்கத்திடமும், கைலாசத்திடமும் திரும்பியவர்,

“இதோ பாருங்க, அவளுக்கு வர முகூர்த்தத்துல கல்யாணம். மாப்பிளையை நான் பாக்குறேன். ஆனா இனி இவ இந்த வீட்டுப் வாசப்படியை தாண்டக் கூடாது. கைலாசம் முக்கியமா இது உனக்குத் தான். ஏன்னா நீதான் தங்கச்சி பாசத்துல அவ சொல்றதை அப்படியே கேட்ப. அவ இந்த வீட்டை விட்டு வெளியே போனா அவளோட சேர்த்து இந்தக் குடும்பத்தோட மானமும் கௌரவமும் போகும். நீ இந்த வீட்டுக்கு மூத்த பையன். இந்த வீட்டோட கௌரவத்தைக் காப்பாத்த வேண்டிய கடமை உனக்கும் இருக்கு.” என்று மகன்களிடம் கட்டளையிட்டவர் அங்கே இருந்து தன் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

உடனே மாணிக்கம் வசுந்தராவின் கரத்தை இழுத்துக் கொண்டு சென்று ஒரு அறையில் அவளை உள்ளே தள்ளிக் கதவைச் சாத்தினான்.

அதைக் கண்ட கைலாசம் மாணிக்கத்திடம், “மாணிக்கம், நான் சொல்றதை கேளு. அவ நம்மோட தங்கச்சி… அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்கு நாம கொடுக்கணும்டா…” என்றான் மனது தாளாமல்.

எப்படியும் யாரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதை அறிவான் தான். ஆனால் அதற்காகப் போராடாமல் தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமில்லை.

ஆனால் மாணிக்கமோ தன் சகோதரன் சொல்லியதைக் காதில் கேளாதவன் போல் இருந்தான். சிவகாமிக்கு யாரின் பக்கம் என்ன சொல்வது என்றே புரியவில்லை.
அவளுக்கும் தெரியும் இந்தக் குடும்பத்தைப் பற்றி. தாங்களே சரிக்கு சரியாய் அவர்களிடம் நின்று பேசப் பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் வீட்டு பெண்ணைத் தங்களுக்குக் கீழே வேலை செய்பவனுக்கு திருமணம் செய்து வைப்பார்களா என்ன?

“என்னங்க ஏன் இப்படி இருக்கீங்க? உங்க அப்பா அம்மாவைப் பத்தி என்னைவிட உங்களுக்குத் தான் நல்லா தெரியுமே… அவங்க எப்படி இந்தக் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுவாங்கன்னு நீங்க நினைச்சீங்க?”என்றாள் மென்மையாய்.

“அது இல்லைம்மா, இந்த மாணிக்கம் சப்போர்ட் பண்ணுவான்னு நினைச்சி தான் பேசுனேன். ஆனா அவன் இப்படி பண்ணுவான்னு தெரியலைம்மா…” என்றவனின் யோசனை எங்கெங்கோ சுற்றியது.

“அவரே உங்க அப்பா அம்மா மாறித் தான் இருக்காரு… அவரு எப்படி உங்களுக்கு ஆதரவா நிப்பாரு? இந்தக் குடும்பத்துல தப்பி பிறந்தது நீங்களும் உங்க தங்கச்சியும் தான். மத்த எல்லாருமே ஒரே மாறித் தான் இருக்காங்க. விடுங்க அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலை.” என்றாள் பதற்றத்துடன்.

“எனக்கும் ஒன்னும் புரியலை சிவகாமி. வசுந்தரா அவளோட பிடிவாதத்துல இருந்து இறங்கி வரமாட்டா. இவங்களும் அப்படித்தான், இப்போ என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியலை.” என்றான் கவலையாய்.

“பாக்கலாம்ங்க அந்தக் கடவுள் நிச்சயம் ஒரு வழி காட்டுவார்.” என்றபடி தன்னவனுக்கு ஆறுதல் கூறினாள் சிவகாமி.

கணவன் மனைவி இருவரும் பேசுவதைக் கண்டு கொள்ளாமல் ஏதோ ஒரு நினைவில் அமர்ந்திருந்தான் மாணிக்கம்.

அவனின் நினைவு அமுதாவை தான் ஆக்ரோஷத்துடன் நினைத்தது.

பின்னே அவளால் தானே இப்படியொரு பிரச்சனை.

அவளின் தூரத்துச் சொந்தமான அண்ணன் என்ற ஒருவன் தானே வசுவின் மனதைக் கலைத்தது. அப்படி என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க, அவனின் தங்கை தான் அமுதாவின் அண்ணனான வித்யாதரனின் மேல் காதல் கொண்டுள்ளாள்.

அதேநேரம் அறையில் இருந்த வசுந்தராவும் தன்னவனைப் பற்றித் தான் நினைத்தாள்.

வித்யாதரனின் தாய் தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட, அமுதாவின் தந்தையான பொன்னப்பன் தான் அவனை வளர்த்தார்.

அவனைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் அவன் ஒரு முரட்டு முட்டாள். பள்ளி வாசனையைக் கூடத் தீண்டாதவன். அவனுக்குத் தெரிந்தது எல்லாம் ஓய்வில்லாத வேலை மட்டுமே. இடையில் கொஞ்ச நாட்களாக வட மாநிலத்தில் வேலை செய்தவன் இப்போது மீண்டும் தங்கையின் குடும்பத்தோடு வந்துவிட்டான்.

நல்லவன் தான் ஆனால் கோபக்காரன். அவனின் முன்னே யாரேனும் தவறு செய்தால் அதைக் கண்டு பொறுக்கமாட்டாமல் பொங்கி எழுபவன். அதனாலேயே அவனை முரடன் என்று சொல்பவர்கள் தான் அதிகம்.

ஆனால் அவனை நன்கு புரிந்தவர்களுக்கு அவன் ஒரு பாசக்காரன். அவளை முதல் முறை பார்த்தபோது அவனைப் பற்றிப் பெண்ணவளோ பெரிதாய் எண்ணவில்லை. ஆனால் மறுமுறை அவனைக் காணும் நேரம் அவளை ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றினான் அவன்.

முதலில் சற்று தயங்கினாலும் பின்பு அவனின் குணத்தைக் கண்டு அவனை விரும்ப ஆரம்பித்தாள் வசுந்தரா. தன் காதலை முதலில் அவனிடம் சொல்லும்பொழுது அவனுக்கு அது புரியவில்லை. அன்பை மட்டுமே தெரிந்தவனுக்கு இந்தக் காதல் புதிதாய் தெரிந்தது. அது மட்டும் அல்லாமல் அவளின் வசதி அந்தஸ்து இவற்றைப் பார்த்து அவளிடமிருந்து தள்ளிச் சென்றான்.

எப்போதும் பணக்காரர்களைக் கண்டால் அவனுக்குப் பெரிதாகப் பிடித்ததில்லை. அதன் காரணம் பெரிதாய் ஒன்றும் இல்லை வசதி படைத்தவர்கள் அகங்காரம் பிடித்தவர்கள் என்ற மனப்பான்மை அவனிடமிருந்தது. ஏன் வசுந்தராவின் தாய் தந்தையும் அப்படித்தானே! அவள் மட்டும் அதில் விதிவிலக்காகவா இருக்கப் போகிறாள்? என்று எண்ணியவன் அவளை விட்டு விலகினான். அதிகம் யோசிக்க தெரியாது தான் ஆனால் அடிப்படையை யோசிக்கும் அளவுக்குச் சற்று நிதானமானவன் தான் வித்யாதரன்.

தன் பின்னே காதல் என்று சுற்றுபவளைப் பிடிக்காமல் உதாசீனப்படுத்தியவன் தான் அவன்.

ஆனால் தமிழில் ஒரு பழமொழி உள்ளது எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்பது போல அவளின் இயல்பான திமிரான நேர்கொண்ட பார்வையும் அவனை யோசிக்க வைத்தது.

மற்றொன்றும் கூர்ந்து கவனித்தான். அவளின் தாய் தந்தையிடமிருந்த அந்தப் பணக்கார திமிர் அவளிடம் இல்லை. பாமர மக்களிடமும் அதே அன்புடனும் பாசத்துடனும் இருந்தாள் பெண்ணவள். அவனுக்கு அவளின் குணங்கள் பிடித்திருந்தாலும் கூட ஏதோ ஒரு தயக்கம் அவனை ஆட்கொண்டது.

அதுவே அவளிடமிருந்து விலக்கியும் வைத்தது. அவன் மட்டும் நினைத்தால் போதுமா? உடன் அவளும் அல்லவா நினைக்க வேண்டும் அவனைப் பிரிய வேண்டும் என்ற எண்ணத்தை? ஆனால் பெண்ணவளோ அவனை அதீதமாய் நேசிக்கத் தொடங்கினாள். அதன் விளைவு அடிக்கடி அவனைச் சந்திக்க நேர்ந்தது. அந்தச் சந்திப்பு அவர்களுக்குள் ஒரு பிரியத்தை தோற்றுவித்தது.

மெதுமெதுவாய் அவளின் காதலை ஏற்றுக்கொள்ள தொடங்கியவனுக்கு கொஞ்சம் மனது நெருடத்தான் செய்தது. முதலில் அவளின் வசதி தடையாய் இருந்தது என்றால் இப்போது அவளின் படிப்பு தடையாய் தெரிந்தது.

அந்த ஊரிலேயே மெத்த படித்தவள் அவள். அவளின் புத்திசாலித்தனம் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதுதான் அவனைத் தயங்கவும் வைக்கும்.

அன்றும் அப்படித்தான் அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்பொழுது வித்யாதரன் மெதுவாக அவளிடம் பேச்சை ஆரம்பித்தான்.

“ஏங்க உங்களுக்கு நிஜமாவே என்னைப் புடிச்சிருக்கா? உங்க அளவுக்கு நான் படிக்கல. பெருசா என்கிட்ட எந்த வசதியும் இல்லை. உங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்களா?” என்று தடுமாற்றமாக அவளிடம் கேட்டான்.

அவன் அவளை எப்போதும் வாங்க போங்க என்று அழைத்தே பழக்கப்பட்டவன். அதை இடையில் அவனால் மாற்றிக் கொள்ள முடியவும் இல்லை. அவன் மாற்றிக் கொள்ளவும் இல்லை. அவளின் படிப்பு, அந்தஸ்து அந்த மரியாதையை அவளுக்குக் கொடுக்கச் சொல்லியது.

ஆனால் பெண்ணவளும் அதற்கு அப்பாற்பட்டவள்.

“உங்ககிட்ட எத்தனை தடவை சொல்றது? வசுந்தரான்னு உரிமையோடு கூப்பிடாம எதுக்கு இந்த வாங்க போங்க எல்லாம்…” என்றாள் கோபமாய்.

அவளின் கோபத்தில் அவன் மௌனமானான்.

“இத ஒன்னு கத்துக்கோங்க திட்டினா உடனே அமைதியாகிடறது.” என்றவள் அவனிடம் மெல்லச் சிரித்தபடி,

“இதப் பாருங்க நீங்க நினைக்கிற மாறி அந்த வசதியையோ இல்ல அந்தஸ்தையோ நான் கட்டிக்கிட்டு வாழப் போறது கிடையாது. ஒரு மனுஷனை தான் கட்டிக்கிட்டு வாழப் போறேன். அந்த ஒரு மனுஷனா நீங்க இருங்க போதும்.” என்று அவனைச் சமாதானப்படுத்தியவள் அறியவில்லை அவனைக் கரம் பிடிக்க அவள் குடும்பத்தையே உதறித் தள்ளும் நிலை வரும் என்று.

 

அடுத்த பாகத்தில் பார்க்கலாம் செல்லம்ஸ்.

மாலை வரும்… ✍️

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page