அத்தியாயம் 19: லண்டன் பனியில் ஒரு பழைய பகை

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம். சென்னையின் வெப்பத்திற்குப் பழகிய ஆரியனுக்கும் யாழினிக்கும், லண்டனின் உறைபனி காற்று ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ஆரியன் ஒரு கறுப்பு நிற நீண்ட ஓவர்கோட் அணிந்து கம்பீரமாக இருந்தான். அவனது கைகளைப் பிணைத்தபடி யாழினி, காஷ்மீர் சால்வையில் ஒரு தேவதை போல அவனுடன் நடந்தாள்.

லண்டனின் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா குழு அவர்களை மிகவும் மரியாதையுடன் வரவேற்றது. ஆனால், அவர்களுக்குத் ஒதுக்கப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான ஹோட்டல் அறையில் நுழையும்போது, ஆரியனின் கண்கள் சுவரில் இருந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்து உறைந்தன.

அது ஒரு பழைய இசை நிகழ்ச்சியின் புகைப்படம். அதில் ஆரியனுக்கு அருகில் ஒருவன் சிரித்துக் கொண்டிருந்தான். அவனது பெயர் விக்ரம். ஆரியன் புகழின் உச்சியில் இருந்தபோது, அவனது வெற்றியைப் பொறாமையுடன் பார்த்த அவனது சக இசைக்கலைஞன். ஆரியனின் காது கேட்காமல் போன அந்த விபத்தின் பின்னணியில் விக்ரமுக்குத் தொடர்பு உண்டு என்று ஒரு வதந்தி இருந்தது.

“என்ன ஆச்சு ஆர்யன்?” என்று யாழினி அவனது கையைத் தொட்டுக் கேட்டாள். அவளது குரலில் இப்போது ஒரு முதிர்ச்சியான அன்பு இருந்தது.

ஆர்யன் அந்தப் புகைப்படத்தைச் சைகை செய்தான். “இவன் விக்ரம். என் வாழ்க்கையோட இருண்ட காலத்துல இவனும் ஒரு காரணம். இப்போ இவன் லண்டன் ஆர்கெஸ்ட்ராவோட லீட் வயலினிஸ்ட்டா (Lead Violinist) இருக்கான்.”

யாழினியின் முகம் மாறியது. “அப்போ இவன் நம்ம ஆல்பத்துல இருக்கானா?”

“ஆமாம். இது தற்செயலா நடந்ததுன்னு எனக்குத் தோணலை,” என்றான் ஆர்யன். அவனது செவித்திறன் இப்போது 90% மீண்டுவிட்டாலும், சில நுணுக்கமான ஒலிகளைக் கேட்பதில் இன்னும் சிரமம் இருந்தது.

அன்று மாலை முதல் ஒத்திகை (Rehearsal) தொடங்கியது. பிரம்மாண்டமான அரங்கில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் காத்திருந்தனர். விக்ரம் தனது வயலினுடன் மேடையின் நடுவில் நின்றிருந்தான். ஆரியனைக் கண்டதும் அவன் ஒரு குரூரமான புன்னகையை வீசினான். அவனது பார்வையே ஆர்யனை சுத்தமாக பிடிக்காதது போல இருப்பதை யாழினி உணர்ந்தாள்.

“வெல்கம் பேக், ஆர்யன்! உன் காதுகள் இப்போ நல்லா கேக்குதுன்னு கேள்விப்பட்டேன். ஆனா இந்த சிம்பொனியோட வேகம் உன்னால ஈடுகட்ட முடியுமான்னு தெரியல,” என்று விக்ரம் ஆங்கிலத்தில் எகத்தாளமாகச் சொன்னான்.

ஆர்யன் பதில் பேசவில்லை. அவன் யாழினியைப் பார்த்தான். யாழினி அவனுக்குத் தைரியம் தருவது போலக் கண்களைச் சிமிட்டினாள்.

விக்ரமிற்கு ஆர்யன் மீது கொளுந்து விட்டு எரியும் பொறாமை. விக்ரம் நல்ல வசதியான வீட்டில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் ஆர்யன் அப்படியல்ல திறமையால் வசதி நிலைக்கு வந்தவன். ஒரு கிதார் வாங்க கூட காசு இல்லாமல் வாடகைக்கு எடுத்து வாசித்த நாட்களில் விக்ரம், ஆர்யனை ஒரு அசட்டு பார்வை பார்ப்பான். காரணம் அவன் அணிந்திருக்கும் சாதாரண உடை மற்றும் தன்னம்பிக்கை இல்லாத நடை. இருப்பினும் இவனுக்குள் இருந்த அந்த வெறித்தனமான இசைக்கான உழைப்பு, விக்ரமை பொறாமை கொள்ள வைத்தது.  இவனுக்குள்ளும் ஒரு திறமையா என ஏளனமான பார்வையை பார்க்க வைத்தது. அதன் பின் கௌதம் வந்த பிறகு ஆர்யன் நிலையே மாறியது.  ஆர்யனின் வளர்ச்சியை விக்ரமால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆர்யனை ஆராய்ந்து,ஆராய்ந்து விக்ரம் தனக்கான உழைப்பில் கோட்டை விட்டான். ஆர்யன் தனக்கான ஒரு கோட்டையைக் கட்டிவிட்டான். மேலும் அமைச்சரை எதிர்த்து போராடிய போராட்டத்தை சற்றும் எதிர் பார்க்காத விக்ரம், அதன் மூலம் ஆர்யனுக்கு கிடைத்த புகழ், நற்பெயர், பிரதமரின் பாராட்டு போன்றவற்றை சமூக வலைதளங்களில் கண்டு எரிச்சல் அடைந்தான். யார் வயிறு இருந்தால் என்ன உழைப்பவர்கள் எப்போதும் முன்னேறி செல்வார்கள்.

இசை பயிற்சி தொடங்கியது. ஆர்யன் பாடத் தொடங்கினான். விக்ரம் வேண்டுமென்றே தனது வயலினின் சுருதியைச் சற்று உயர்த்தி, ஆர்யனைத் திசைதிருப்ப முயன்றான். ஆர்யன் தடுமாறினான். அவனது காதுகளில் ஒரு மெல்லிய இரைச்சல் ஏற்பட்டது.

யாழினி இதை உணர்ந்தாள். அவள் சட்டென்று எழுந்து ஆர்கெஸ்ட்ரா குழுவிற்கு முன்னால் சென்றாள். அவள் அங்கிருந்த ஒரு சிறிய பியானோவை அதிர வைத்தாள். அந்தச் சத்தம் விக்ரமின் தந்திரத்தை முறியடித்தது.

யாழினி விக்ரமை நேருக்கு நேர் பார்த்தாள். “இசைங்கிறது உணர்வு, அது போட்டி இல்லை. உன் வயலின் அழலாம், ஆனா ஆர்யனோட குரல் என்னிக்கும் தோற்காது,” என்று அவள் உறுதியாகச் சொன்னாள். இசைக்கலையில் இணைந்து வேலை செய்யுற உங்களுக்கு எப்படி சாமான்ய மனிதரோட பொறாமை குணம் எப்படி வந்தது. அந்த குணம் உங்களை மட்டும் அல்ல, உங்க எதிர் கால வாழ்க்கையே  அழித்துவிடும் என எச்சரித்து சென்றாள்.

அரங்கமே அமைதியானது. விக்ரமின் முகம் கோபத்தில் சிவந்தது. ஆரியன் யாழினியின் கையைப் பிடித்துக் கொண்டான். அந்தப்பிடி ஆறுதலாகவும், அன்பின் இலக்கணமாகவும், உன்னால் முடியும். நீ தான் வெற்றிப் பெற போகிறாய் என்பதை தெளிவாகக் கூறியது.

 சில நிமிடங்களில் கௌதம் வந்து சேர்ந்தான்.

“ என்ன ஆர்யா… அந்த விக்ரம் ஏதோ வம்புக்கு வந்தானா?”

“ இல்ல கௌதம், அவனை பத்தி தான் தெரியுமே உனக்கு அப்பறம் என்ன விடு, மியூசிக்ல பிரச்சனை வேணாம்.”

“ ஆர்யா… அவன்கிட்ட எச்சரிக்கையா இருக்கணும். சொகுசு வாழ்க்கை வந்தவனுக்கு கஷ்டப்பட்டு மேல வந்தவனோட அர்ப்பணிப்பு புரியாது, இங்க நீ இப்படி அவனுக்கு நல்லது யோசிச்சுட்டு இருப்ப ஆனா அங்க உனக்கு எத்தனை அடியில குழி தோண்டுனா கரெக்டா இருக்கும்னு யோசிச்சிட்டு இருப்பான். அதான் உனக்கும், அவனுக்கு உள்ள வித்யாசம். அவனை ஈசியா கடந்து போக வேணா ஆர்யா. எப்பையும் ஒரு கண்ணு இருக்கட்டும்.”

“சரி. கௌதம் நான் பாத்துக்கிறேன்”

“ வேணா, வேணா அந்த நெகடிவ் பத்தி நீ யோசிச்சா சரியா இருக்காது. நீ உன்னோட மியூசிக்ல மட்டும் கவனம் செலுத்து அவனை நான் பாத்துக்கிறேன்.” என பல்லை கடித்துக்கொண்டு கௌதம் சென்றது, பார்க்க  நல்லதொரு நட்பை விக்ரம் தேவையில்லைமல் சுரண்டி பார்க்கிறான் என்பது போல தோன்றியது யாழினுக்கு,

அன்று இரவு, லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையில் அவர்கள் இருவரும் உலாவச் சென்றனர். “யாழினி, நீ இல்லாம நான் இன்னைக்கு அந்த மேடையில உடைஞ்சு போயிருப்பேன்,” என்றான் ஆர்யன்.

“தைரியம் தான் உன்னோட அழகு, அதை யாராலும் நெருங்க கூட முடியாது. தமிழ்நாட்டுல அரசாங்கத்தையே அதிர வச்ச ஆர்யனா இப்படி பேசுறது.”

யாழினி அவனை அணைத்துக் கொண்டாள். “உன்னை யாராலயும் உடைக்க முடியாது ஆர்யன். ஏன்னா, உன் இசையில இப்போ என் உயிரும் கலந்திருக்கு. விக்ரம் என்ன தந்திரம் வேணா பண்ணட்டும், நாம நம்ம காதலால அவனை ஜெயிப்போம். எதிரி இல்லாமல் எப்படி வெற்றி, சிறந்த வெற்றியாகும். அப்படி பெரும் வெற்றியை விட எதிரி கொடுக்கும் தொந்தரவை மீறி திறமையால் கிடைக்கும் வெற்றி தான் பெரிய வெற்றி, அது தான் மாபெரும் தனி சிறந்த வரலாற்று நிகழ்வாகும். ஆனால் எதிரியை கருணையால் மன்னிக்கும் பொழுது நீ இறைவனுக்கு மிக நெருக்கம் ஆகின்ற உயிராற்றலா மாறி இருப்ப!

லண்டனின் அந்தப் பனி இரவில், அவர்கள் இருவரும் ஒரு புதிய சபதம் எடுத்துக்கொண்டனர். ஆர்யனுக்கு யாழினி கூறிய ஒவ்வொரு வார்த்தையும் நேரடியாக தன்னம்பிக்கை விதையை நெற்றி பொட்டில் ஊன்றியது போல ஆர்யனின் முகத்தில் அப்படி ஒரு பொலிவு. அந்த இசை ஆல்பம் வெறும் பாடல்களின் தொகுப்பாக இருக்காது; அது ஒரு காதலின் வெற்றியாக இருக்கும்.

லண்டனின் குளிர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆனால், ஆரியன் மற்றும் யாழினியின் அறையிலோ காதலின் வெப்பம் நிறைந்திருந்தது. ஆரியன் தனது புதிய ஆல்பத்தின் இறுதி மெட்டை மெருகேற்றிக் கொண்டிருந்தான். யாழினி அவனுக்குத் துணையாக வரிகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அப்போது கதவு தட்டப்பட்டது. உள்ளே வந்தவன் விக்ரம். அவனது கையில் ஒரு விலையுயர்ந்த ஒயின் பாட்டில் இருந்தது. விக்ரம் எண்ணம் சரியாக இல்லை என்பதை ஒயின் பாட்டில் ஆட்டமே காட்டிக்கொடுத்தது.

“சாரி ஆர்யன்… நேற்று ஒத்திகையில் நான் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டேன். எதற்கு அப்படி நடந்துகொண்டேன் என்று எனக்கே தெரியவில்லை.  பழைய நண்பர்கள் நாம், ஒரு சின்ன சமாதானத்திற்காக இதைக் கொண்டு வந்தேன்,” என்று போலியான புன்னகையுடன் விக்ரம் சொன்னான்.

யாழினிக்கு அவன் மேல் துளியும் நம்பிக்கை இல்லை. அவள் அவனை எச்சரிக்கையாகப் பார்த்தாள். விக்ரம் இரண்டு கிளாஸ்களில் ஊற்றி ஆரியனிடம் நீட்டினான். ஆரியன் நாகரிகத்திற்காக அதை வாங்க முயன்றபோது, யாழினி குறுக்கிட்டாள்.

“வேண்டாம் ஆர்யன்… உனக்கு நாளைக்கு ரெக்கார்டிங் இருக்கு. தொண்டைக்கும் ஆரோக்கியத்திற்கும் இது நல்லது இல்லை,” என்று சொல்லிவிட்டு விக்ரமைப் பார்த்து, “மிஸ்டர் விக்ரம், உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால் எங்கள் இலக்கு இசை மட்டுமே,” என்றாள் உறுதியாக. ஆர்யனுக்கும் அது சரியாகப் பட்டது.  தன்னை இது போல கட்டிக்காக்க ஒரு பெண்மணி நிச்சயம் வேண்டும். அதுவும் மனைவி என்றால் கேட்கவா வேண்டும்.  அப்படி ஒருவள் வாழ்க்கையில் கிடைத்து விட்டால் அது போல நிம்மதி, முன்னேற்றம் எங்கும் கிடைக்காது. அது தான் பெண். அவள் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. இந்த இடத்தில் யாழினி மட்டும் இல்லையென்றால் பழைய நட்பை புதுப்பிக்கும் விதமாக ஆர்யன் ஒயினை  அள்ளிப்   பருகியிருப்பான்.  உடலைக் கெடுத்து நடக்கப் போகும் இசை நிகழ்ச்சிக்கு  சரியான பயிற்சி  இல்லாமல் நடத்தப்படும் அவமானத்தில் மனதையும் கெடுத்து  புகழ் வெளிச்சம், போதையால்  குப்பைக்குக்கு சென்று இருக்கும். ஆனால் நல்ல வேளை அன்று  அவன் அருகில் யாழினி இருந்தாள். உற்ற மனைவியாக,  உண்மை தோழியாக, வழித்துணையாக வந்த வரம் எப்படி ஆர்யனை தவறான பாதையில் செல்ல விடுவாள்.

 யாழினியின் ‘மிஸ்டர் விக்ரம்; என்ற அந்த  அதிகார பதிலை கேட்ட விக்ரமின் கண்கள் ஒரு நிமிடம் கோபத்தில் மின்னின. அவன் அங்கிருந்து வெளியேறினான். “அவன் எதோ திட்டம் போடுகிறான் ஆர்யன், நாம் கவனமாக இருக்க வேண்டும்,” என்றாள் யாழினி.

“ சரி, யாழினி நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை எல்லாம் நீ பார்த்துக்கொள்வாய் என்ற அசாத்திய தைரியத்தில் நான் என்ன வேணாலும் செய்ய என்று வார்த்தையை தொடங்கியதும்,  யாழினியின் கூர்மையான முறைத்த பார்வை, என்ன வேணாலும் செய்ய  முயற்சி மட்டும்  செய்யலாம் என சொல்ல வந்தேன் என்று ஆர்யனை மழுப்பி கூற வைத்தது.

ஆர்யன் முதல் முறையாக மனைவி என்ற ஸ்தானத்திற்கு மதிப்பு கொடுத்து பணிந்து பேசியது உள்ளுக்குள் ஒரு பூரிப்பைக் கொடுத்தது. அது தான் ஒவ்வொரு மனைவிக்கும் தேவையென்ற உண்மையை கணவன்மார்கள் எப்போது அறிவார்கள் என்ற வேதனை அடக்கிய பெண்களுக்கு யாழியின் இந்த பூரிப்பு சமர்ப்பணம்.  

அன்று இரவு, ஆரியன் உறங்கிக் கொண்டிருந்தபோது அவனது போனுக்கு ஒரு மர்மமான மெசேஜ் வந்தது. அது யாழினியின் அண்ணன் பிரகாஷ் தொடர்பான ஒரு ரகசிய ஆவணம் போல இருந்தது. அதைப் பார்த்ததும் ஆரியன் அதிர்ச்சியடைந்தான். அந்த ஆவணத்தில் பிரகாஷின் மரணத்திற்கு லண்டனில் இருக்கும் ஒரு தொழிலதிபர் நிதி உதவி செய்திருப்பது போலக் குறிப்புகள் இருந்தன. இந்த முகவரிக்கு வந்தால் எல்லாத் தகவலும் தெளிவாக கிடைக்கும் என்று  குறிப்பிடப் பட்டு இருந்தது.

ஆரியன் அதை  பார்த்ததும் ஒரு  சந்தேகம் எழும்பியது. இருப்பினும்   யாழினியை எழுப்ப விரும்பவில்லை. அவன் தனியாக அந்த முகவரிக்குச் செல்ல முடிவெடுத்தான். லண்டனின் நள்ளிரவு வீதிகளில் பனிப்பொழிவுக்கு நடுவே ஆரியன் கார் ஓட்டிச் சென்றான். சில சிக்னல்களை கடந்த பிறகு அவன் சென்ற இடம் ஒரு பாழடைந்த கிடங்கு (Warehouse). கல்யாணம் ஆனபிறகு முந்திரிக்கொட்டை முட்டாளாக செயல் ஆற்றுவது ஆண்களுக்கு கை வந்த கலை. அது ஒரு பெண்ணிடம் இணைந்து விட்டாள் எல்லாம் கிடைத்து விடும், நாம் செய்வது அனைத்தும் சரி என்ற அசாத்திய நம்பிக்கை அவர்களுக்குள் பிறப்பது யதார்த்தமே  ஆர்யனும் அதற்கு விதி விலக்கு அல்ல. அதன் அடையாளமாக அங்கே விக்ரம் தனது ஆட்களுடன் காத்திருந்தான்.

“ஆர்யன்! நீ வருவாய் என்று எனக்குத் தெரியும். யாழினியின் அண்ணன் மரணத்தைப் பற்றிச் சொன்னால் நீ துடிதுடித்து வருவாய் அல்லவா? இப்போது பார், நாளை உன்னால் பாட முடியாது,” என்று சொல்லி விக்ரம் ஒரு சிக்னல் கொடுத்தான்.

அங்கிருந்த அடியாட்கள் ஆரியனைத் தாக்கத் தொடங்கினர். ஆரியன் தற்காத்துக் கொண்டான், ஆனால் அவர்கள் அவனது தொண்டைப் பகுதியை இலக்காக வைத்துத் தாக்க முயன்றனர். ஒருவன் ஆரியனின் தலையில் பலமாகத் தாக்க, ஆரியன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எதிர்கொண்டாலும் முட்டாள் தனமாக செய்த செயலுக்கு, நிச்சயம் பரிசு உண்டு.

சரியாக அந்த நேரத்தில், ஒரு காரின் ஹெட்லைட் வெளிச்சம் அந்தக் கிடங்கை நனைத்தது. காரிலிருந்து இறங்கியது யாழினி மற்றும் ரியா! யாழினி ஆரியனின் போனில் இருந்த ‘லொகேஷன் ஷேரிங்’ (Location Sharing) மூலம் அங்கே வந்து சேர்ந்திருந்தாள்.

“விக்ரம்! நிறுத்து!” என்று யாழினி கத்தினாள். ரியா தனது துப்பாக்கியை விக்ரமை நோக்கி நீட்டினாள்.

விக்ரம் பயந்து பின்வாங்கினான். யாழினி ஓடி வந்து ரத்தம் சொட்டும் ஆரியனைத் தாங்கிக் கொண்டாள். “ஆர்யன்… என்னைப் பார்… பயப்படாதே,” என்று அழுதாள்.

ஆரியன் மெல்லக் கண்களைத் திறந்தான். அவனது பார்வை மங்கலாக இருந்தது. ஆனால் யாழினியின் குரல் அவனுக்கு ஒரு மருந்தாகச் செயல்பட்டது. அப்போது உணர்ந்தான் ஆர்யன். அந்த மெசேஜ் வந்த போதே யாழினியிடம் காட்டியிருக்கலாம். அவளது ஆலோசனை கேட்டு இருக்கலாம் என பலவிதமான எண்ணங்கள் மனதிற்குள் ஓடியது.

“ஆர்யா… நீ எதையும் நீ நினைச்சு குழம்பாதே… நான் வந்துட்டேன். கூட ரியாவும் வந்திருக்காங்க. இனி நாங்க பார்த்துக்கிறோம்”

என ஆர்யனுக்கு யாழினி பக்க பலமாக நின்றாள். ஆர்யன் அந்த நிலையிலும் ஒரு புன் சிரிப்பை உதிர்த்து… மெல்ல மெல்ல  திக்கி தயங்கிய குரலில்,  “அவனை… அவனை விட்டுடு யாழினி… அவனோட பொறாமை தான் அவனை அழிக்கும். நாம… நாம நாளைக்கு மேடையில பதிலடி கொடுப்போம்,” என்று ஆரியன் திக்கித் திக்கிச் சொன்னான்.

யாழினி விக்ரமைப் பார்த்து எச்சரித்தாள், “உன் இசை உன்னைக் காப்பாற்றாது விக்ரம். நாளை உலகம் ஆரியனின் குரலை மட்டுமல்ல, உன் உண்மையான முகத்தையும் பார்க்கும்.”

ரியாவின் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டிருக்கும் விக்ரமிற்கு எதுவும் செய்ய முடியாமல் திணறிக்கொண்டு இருந்தான். ஆர்யனை தாங்கி சென்றால் யாழினி. ரியா ஆர்யனின் இசை கச்சேரியை பார்க்கும் திட்டத்தில் லண்டன் வந்திருக்கிறாள். அதே நேரம் ஆர்யன் ஹோட்டலில் இல்லாததை ரியாவிற்கு தெரிவித்ததும் ராணுவ மூளை உடனே செயலாற்றி ஆர்யனை காக்கும் பொருட்டு காளி தேவி போல வந்து நின்றனர். காப்பாற்றி சென்றனர்,

நாளை என்ன திட்டம் தீட்டியிருக்கிறார்கள். ஆர்யன் தப்பித்து விட்டானே என்ற கோபம் ஒரு புறமும், அவனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் வெறுப்பு ஒரு புறமும் விக்ரமை  தூங்க விடாமல் எண்ணத்தை பல மடங்கு பெருக்கிக் கொண்டே சென்றது. விக்ரமின் எதிர்மறை குணம்.  

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page