வேனலின் வெண்பூவே
அத்தியாயம் 19
காதல் கொண்ட இதயம்
துரோக முட்களால்
குத்தப்பட்டுக் கிழிக்கப்பட்டது.
ஒட்ட அது காகிதமல்ல.
-பத்மமுகி.
முகி நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் கணவன் தனக்கு முன்னுரிமை கொடுத்ததில் அகமகிழ்ந்து போயிருந்தாள். ஆதியும், சுக்ரீவும் கண் சிமிட்டிப் பேசிக் கொண்டதை இவளும் பார்த்திருக்க, அவள் பக்கம் திரும்பியவன் கண்ணடித்தான்.
“உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணத் தோணுச்சு. அதான் ஸீட்டிங் மாத்திட்டேன் முகி.”
அவ்வப்போது அந்தப்பக்கம் இருந்து பார்வைகள் வந்தாலும் முகி தன் கணவன் இருக்கும் தைரியத்தில் விழாவைக் கவனித்தபடியே இருந்தவள், உடையைச் சரிப்படுத்தி கொஞ்சம் முகத்திற்கு ஒப்பனை செய்ய வேண்டும் என நினைத்தவள் மாதவியைச் சந்தித்துவிட்டு கணவனைத் தேடிச் சென்றவளின் இதயம் முழுக்க அவள் விழிகள் கண்ட துரோகத்தால் குருதி வழிந்தது. காதல் கொண்டு ஆசையாய் மணம் முடித்து இத்தனை காலம் பொறுமையாய் அவனுக்காகச் சகித்துக் கொண்டு வாழ்ந்திருக்க, அவளுக்குக் கிடைத்ததோ துரோகம். பச்சைத் துரோகம். அவளை நரகத்தின் நெருப்பில் தள்ளிவிட்டது போல் அந்த இடம் தகித்தது. சில நொடிகள் உறைந்து நின்றவள் அப்படியே திரும்பி வெளியே சென்றவள் அந்த விழா மண்டபத்தின் பின் பக்கம் வெளியே வர, அங்கே வாடகை மகிழுந்துகள் சில நின்று கொண்டிருந்தன. அங்கே ஒரு பெண் ஓட்டுநரும் இருக்க, முகி அவரிடம் விசாரித்து அதில் ஏறி வீடு வந்து சேர்ந்தாள். எப்படி அவ்வளவு தெளிவாக விசாரித்து ஏறினாளோ தெரியாது. மகிழுந்தின் இருக்கையில் சாய்ந்து கண்களை மூட, அதுவோ கண்ணீரை தாரைத் தாரையாக வார்த்தது.
அங்கிருந்த பெண் ஓட்டுநரும் அதைக் கவனித்து வந்தார்.
“எவ்வளவு?”
பெண் ஓட்டுநர் தொகையைக் கூறினார்.
அவள் கைப்பையிலிருந்து பணத்தை எடுத்து நீட்டினாள்.
“தங்கச்சி, இந்தா தண்ணீர் குடி. எதுவா இருந்தாலும் தைரியமாக இரு. உனக்கு என்ன ஹெல்ஃப் வேணும்னாலும் என்னைக் கூப்பிடு.” எனத் தன்னுடைய முகவரி அட்டையையும் கொடுத்துச் சென்றிருந்தார் அந்தப் பெண்மணி.
அவள் வீட்டின் கதவைக் காவலாளி திறந்து விட, இந்த வீட்டிற்கு மணப்பெண்ணாய் முதன் முதலில் அடியெடுத்து வைத்தது நினைவுக்கு வந்தது. துக்கம் பொங்க அவள் வீட்டை நெருங்க, புலனத்தில் அடுத்தடுத்து குறுஞ்செய்திகள் வந்து விழுந்தவண்ணம் இருக்க அதன் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அதை அணைத்து வைக்க முற்பட, அப்போது சரியாக அவள் அலுவலகத்திலிருந்து மேலதிகாரி அழைத்தார். வேறுவழியின்றி அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ பத்மமுகி! நாளைக்கு அந்தக் கடல் பக்கம் இருக்குற சைட்டுக்குப் போக வேண்டிய சுபாவுக்கு டெங்கு வந்து அட்மிட் ஆகிட்டாங்க. அவங்க அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற ஆள் நீங்கதான். உங்களால் அங்க போகமுடியுமா?”
நிமிர்ந்து எதிரில் வீற்றிருந்த வீட்டைப் பார்த்தாள். இனி அதில் அவள் இருக்கப் போவதில்லை. அவளை அன்பென்ற பெயரில் சிறை வைத்திருந்த மூவருடன் வாழ இனி துளியும் விருப்பமில்லை. சில நொடிகளில் முடிவை எடுத்திருந்தாள்.
முதலில் அந்தக் கடலோர மாவட்டத்திற்குச் செல்வோம். பிறகு அங்கிருந்து ஏதாவது செய்து கொள்ளலாம் என்று. என்றோ அவளுடைய ஆசிரமத்தில் வேலை பார்த்த பெண் கூறியது நினைவுக்கு வந்தது.
“பொண்ணுக்கு எதுவும் நிரந்திரம் கிடையாது தாயி. அப்பன், அண்ணன், தம்பி, புருஷன், மகன் யாரு வேணாலும் கைவிடுவாங்க. ஆனால் படிப்பு கைவிடாது. படிப்பை மட்டும் புடிச்சுக்கோ. அதுதான் யாரு இல்லைன்னாலும் உன்னைக் காப்பாத்தும்.” அவர் கூறியதின் மொத்த அர்த்தத்தையும் அன்று அவள் உணர்ந்திருக்கக் கிளம்பிவிட்டாள்.
வீட்டினுள் வந்தவள் தன்னறைக்குச் சென்று அவன் கணவன் வாங்கித் தந்த அத்தனையும் கழற்றி வைத்தவள், தான் வாங்கி வைத்திருந்த உடைகள் அனைத்தையும் எடுத்துப் பெட்டியில் போட்டு அடுக்கினாள். தன்னுடைய சான்றிதழ்கள் என ஒன்றும் விடாமல் எடுத்துக் கொண்டவள் கணவன் போட்டிருந்த தாலிக் கொடியையும், அவன் திருமணத்தின்போது அணிவித்த மோதிரத்தையும் கழற்றிவைத்தாள்.
தனக்குத் தாலியைக் கட்டிவிட்டு இன்னொரு பெண்ணிடம் இருப்பவனுக்கு தாலி என்ன மரியாதை தந்துவிடப் போகிறது? தன்னை உயிரோடு கொன்று, இதயத்தைப் புதைத்தவன் கட்டிய தாலிக்கு என்ன மதிப்பு? இந்தச் சட்டமும், சுற்றத்தார் முன்னிலையிலும் அங்கீகாரத்துடன் கட்டப்பட்ட தாலி, கடைசி வரை உனக்கென நான் இருப்பேன் எனக் கட்டப்பட்டதை அந்த நொடியில் துறந்திருந்தாள்.
(கலாச்சார காவலர்களே! பொங்கி விட வேண்டாம். இவை எல்லாம் நான் பல இடங்களில் பார்த்தவை. எப்போதும் இரு மனங்களைச் சட்டமோ, தாலியோ பிடித்து வைக்க இயலாது. அதை மனம்தான் தீர்மானிக்கிறது.)
அத்தோடு ஆதி அவளுக்குக் கொடுத்திருந்த பிளாட்டினம் வங்கி அட்டையென எதையும் விடவில்லை. அவன் சார்ந்த அத்தனையையும் அங்கேயே விட்டுவிட்டு தன்னுடைய சுயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறியவள், தன்னை மகிழுந்தில் விட்ட பெண்மணிக்கு முன்பே அழைத்துக் கூறியிருந்ததால் அவர் வெளியில் வந்து காத்திருந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த அங்கு இன்னொரு மகிழுந்து காத்திருந்தது.
“நீ கேட்ட இடத்திற்கு இவர் கூட்டிட்டுப் போவாரும்மா. பயப்படாம போ. வெளில சவாரி நான் போறதில்லை. இவரு அந்தப்பக்கம் அதிகமாகப் போவாரு. அவர் சொந்த ஊரு அது.” என அவளுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்திருக்க, முகியும் நன்றியுரைத்தப்படி மகிழுந்தை மாற்றி ஏறிக் கொண்டாள். இப்படித்தான் அவள் நெய்தல் நிழலுக்கு வந்து சேர்ந்தாள்.
சிவகாமினியின் விழிகளில் நீர் கசிந்திருந்தது. முகியின் விழிகளிலும் நீர் இன்னும் அதிகமாக வந்து கொண்டிருந்தது. விழிகளைத் துடைத்தாள்.
நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்க, காமினி வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
“இந்த உலகம் ரொம்ப பெருசு அக்கா. பார்க்க நிறைய இருக்கு. நீங்க ஸ்ட்ராங் கேர்ள். உங்க ஹஸ்பண்ட்டைப் பார்த்தால் சுடுதண்ணீர் ஊத்துறேன். உங்க கஷ்டத்தை எல்லாம் இந்தக் கடலில் விட்டுட்டு வரதா நினைச்சுக்குகோங்க.” என அவனைத் திட்டியவள் முகியின் தோள்களை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தாள். முகியின் மனம் இன்னும் தெளியவில்லை.
சிவகாமினி விழிகளைத் துடைத்துக் கொண்டவள், “சரி போய்த் தூங்குங்க. நான் கொஞ்ச நேரம் செயில் பண்ணிட்டு, ஆங்கர் போட்டுட்டு வரேன். மார்னிங் நாம ஹோட்டலுக்குப் போயிடுவோம்.”
முகி நிமிர்ந்து சுக்கானைத் திருப்பிக் கொண்டிருக்கும் காமினியைப் பார்த்தாள். என் வாழ்வில் அவ்வப்போது தன்னலம் பார்க்காத நல்ல உள்ளங்கள் இருக்கின்றன என்ற நிம்மதி அவளுள் பரவியது.
“கடவுளே! என்னைக் காதலை மறக்க வச்சுரு.” என வேண்டிக் கொண்டவள் அமைதியாக எழுந்து உள்ளே சென்றாள்.
மனதில் இருந்த அழுத்தம் மேலும் குறைந்தது போன்ற தோற்றம். படகில் அமைந்துள்ள படுக்கை அறைக்குள் சென்றவள் அமைதியாக விழிகளை மூடிப் படுத்துக் கொண்டவளின் மனதின் அலைப்புறுதல் மெல்ல கடல் அலைகளின் தாலாட்டால் சமன்பட்டு உறங்க ஆரம்பித்தாள்.
சிவகாமினி யோசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இன்னும் சில விஷயங்களைப் பத்மமுகி கூறவில்லையோ என்று தோன்றியது. அத்தோடு கணவனின் துரோகம்தான் அவளை அதிகம் பாதித்து இருக்கிறது என்றும் உணர்ந்து கொண்டாள்.
“சொல்லுடா மாறா! நான் செஞ்சது சரியா தப்பான்னு தெரியலை. அதான் உன்னைத் தேடி வந்துட்டேன். எங்க இரண்டு பேருக்குமே சொல்யூசன் கிடைச்சால் பரவாயில்லை.” எனச் சுக்கானிடம் பேசியவள் ஒரு மணி நேரம் கழித்துப் படகை நிலை நிறுத்திவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்று உறங்க ஆரம்பித்தாள்.
காலை நேரம் படகைக் கொண்டு வந்து படகுத்தளத்தில் நிறுத்தியவள் தன்னுடைய சகோதரனுக்கு அழைக்க அவன் எடுக்கவில்லை.
“ஏற்கனவே சொல்லி இருந்தேன் அக்கா. அவன் பிக்கப் பண்ண வருவான். நாம தரைக்குப் போலாம்.”
இருவரும் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு படகை விட்டு வெளியே வந்து தரையை நோக்கிக் கடற்கரைவரை போடப்பட்ட மரப்பாலத்தில் நடக்க ஆரம்பித்தனர்.
சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். இன்று தாமதம்தான். மஞ்சள் ஒளியில் வெண்ணிறத்தில் சிவப்பு வண்ணமிட்ட மேக்ஸியில் காமினி வந்து கொண்டிருக்க, பத்மமுகி பச்சை நிற மேக்ஸியில் அவள் அருகில் பேசியபடி வந்துகொண்டிருந்தாள்.
சற்று தொலைவில் நின்ற தங்களுடைய மகிழுந்தைக் கண்டுவிட்டாள் சிவகாமினி.
“அக்கா, கார் அங்க இருக்குது. வாங்க போலாம்.”
மகிழுந்தின் அருகில் சென்றபோது அங்கு யாரும் இல்லை. அதன் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தது. சுற்றும் முற்றும் விழிகள் தேட, அவன் அகப்பட்டான்.
வெண்ணிற சட்டையில் இரண்டு பட்டன்கள் கழற்றிவிடப்பட்டிருக்க, விழிகளில் பழுப்பு நிறக் கண்ணாடி வீற்றிருந்தது. வெண்ணிற கால்சட்டையில் ஒரு பக்கமுள்ள பாக்கெட்டில் தன் இடது கையை விட்டபடியும், வலது கையில் பிரபலமான காபிக்கொட்டை வடிநீர் நிறுவனத்தின் காஃபியை உறிஞ்சு குழாய்மூலம் அதனை உறிஞ்சியபடி வந்துகொண்டிருந்தான் அவன். சூரியனின் கதிர்கள் அவன்மீது விழுந்து அவன் கம்பீரத்தை மிளிரச் செய்ய எதிரில் வருபவனை உற்றுப் பார்த்த காமினி அதிர்ச்சியில் நின்றாள்.
“ருத்ரா?”
காமினி அவன் பெயரை முனக, முகியோ காமினியின் பின்னால் சென்று திரும்பி நின்று கொண்டாள். பெண்கள் இருவரின் அருகில் நெருங்கிக்கொண்டிருந்தான் ருத்ரா.
தொடரும்…
