அத்தியாயம் 19
அதிகாலை 3 மணி..
பால்கனியில் நின்று கொண்டு சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் தீரன்.
கட்டிலில் ஒருக்களித்து படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் மித்ராவை பார்த்து பெருமூச்செறிந்தான்.
அவளுடன் சற்று நேரத்திற்கு முன்பு நடந்த கூடலில்.. எந்த வித எதிர்ப்பையும் அவள் தெரிவிக்கவில்லைதான் ஆனால் அதே சமயம் அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் கிட்டத்தட்ட ஒரு பொம்மை போல அவள் படுத்திருந்ததை பார்த்ததும், அவனுக்குள் பொங்கி எழுந்த ஆசை தாகம் பரவசம் போன்ற அனைத்து உணர்ச்சிகளும் தண்ணீர் தெளித்து விட்டது போல அடங்கி போனது..!!
‘ என் நுனி விரல் தங்கள் மேனியில் படாதா என்று எத்தனை பெண்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் இவ என்னடான்னா, நான் தொட்டாலே கம்பளிப்பூச்சி மேல ஊருற மாதிரி மூஞ்சிய அருவருப்பா வச்சிருக்காளே.. ச்சே..!!
இவ குடுக்குற ரியாக்ஷனை பார்த்தால் திரும்பவும் இவகிட்ட நெருங்கனும் என்கிற எண்ணமே வராது போலருக்கு.. ஆனா நான் விடமாட்டேன், சும்மாவா.. பத்து லட்சம் செலவு பண்ணி கூட்டிட்டு வந்திருக்கேன் அது எப்படி என்னுடைய ஆசையை அவள் நிறைவேற்றாமல் போகலாம்.. ‘, என்று முரண்டு பிடித்தது அவனுடைய மனம்.
எந்த வித கவலையும் இல்லாமல் அவள் என்னவோ உறங்கி விட்டாள் ஆனால் இவனுக்குத்தான் இருப்புக் கொள்ளவில்லை..
இதற்கு முன்பெல்லாம் அவனுடைய திருப்தியை தேடி செல்லும் பொழுதெல்லாம் யார் முகத்தில் என்ன ரியாக்ஷன் இருக்கிறது ,என்ன உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் அவன் கவனித்தது கிடையாது அவ்வளவாக..
ஆனால் , இப்பொழுதெல்லாம் அவன் ஏதாவது செய்தால் அதற்கு அவள் என்ன விதமான ரியாக்ஷனை வெளிப்படுத்துகிறாள் என்று உன்னிப்பாக அவளை கவனிக்க தொடங்குகிறான்.. தன்னிடம் இருக்கும் அதே பரவசமும் ஆனந்தமும் அவளிடமும் இருக்கிறதா தென்படுகிறதா??, என்று ஒவ்வொரு முறையும் அவன் தேடுகையில் அவனுக்கு கிடைப்பது என்னவோ ஏமாற்றம் மட்டுமே..
சரி இந்த விஷயத்தில் தான் இவளுக்கு எந்த வித உணர்ச்சியும் வர மாட்டேங்குது.. ஒருவேளை இயல்பிலேயே இப்படித்தானோ என்னவோ..
ஆனால் இவள் அருண் கிட்ட பேசினா மட்டும் எனக்கு பொறாமை வருது.. அதே போல இவளுக்கும் , நான் வேற ஒரு பொண்ணு கூட பேசினா பொறாமை வருமா?? என்று யோசித்தது அவனுடைய மனம்.
அப்படி ஒரு டெஸ்ட் செஞ்சு பார்த்திடுவோமா ?? அப்படி வந்தா ஓகே இல்லன்னா இந்த மாதிரி சில பிரச்சனைகள் எனக்கு மட்டும்தான் வருதுன்னு அர்த்தம்..
என் லைஃப்ல இதுவரைக்கும் இப்படி ஒரு பிரச்சனையை ஃபேஸ் பண்ணதே கிடையாது புதுவிதமா இருக்கு.. இதுக்கு என்ன பதில்னு கூட தெரியல நான் ஃபேஸ் பண்ற அதே பிரச்சனையை இவளும் ஃபேஸ் பண்றாளான்னு பாக்கணும்.. என்று முடிவெடுத்தவன் ஒருவழியாக போய் உறங்க தொடங்கினான்.
வழக்கம்போல் காலையில் வேகமாக எழுந்து குளித்து தயாராகி அவனுக்கு முன்பாக கிளம்பி அலுவலகம் சென்று விட்டாள் மித்ரா.
அவனோ இரவு தாமதமாக உறங்கிய காரணத்தினால் காலையில் கண் விழிக்க முடியாமல் கஷ்டப்பட்டு ஒரு வழியாக ஒன்பது மணிக்கு கண்விழித்தவன் அரக்க பறக்க கிளம்பி தயாராகி அலுவலகம் சென்றான்..
அவளை கண்களாலேயே தேடவும் மறக்கவில்லை..
அவளைப் பற்றி தன் தாயிடம் விசாரிக்கவும் மறக்கவில்லை அவன்..
ஆனால் நேற்று போலவே அவனுக்கு இன்றும் பதில் பூஜ்யம் தான்..!!
இப்படி வீட்டில் அம்மாவிடம் கூட சொல்லாமல் எங்கே போறா ??ஏன் இப்படி மறைக்க வேண்டும் ??அப்படி என்ன ஒரு பெண்ணுக்கு அழுத்தம் வேண்டி கிடக்கிறது?? என்று கோபமும் உண்டானது..!!
கண்டிப்பாக நேற்று போன அதே இடத்திற்கு தான் அவள் போயிருக்க வேண்டும் மறுபடியும் அருணை பார்க்க தான் போய்விட்டாளோ என்னவோ தெரியவில்லை..
முக்கியமான மீட்டிங் ஒன்னு இன்னைக்கு ஆபீஸ்ல இருக்கு கண்டிப்பா நான் போயாகணும் அதனால அந்த வேலையை முடிச்சிட்டு அதுக்கப்புறம் தான் இங்க வந்து பார்க்க முடியும்..
இல்லனா இருக்குற கோவத்துக்கு நேரா அங்க போய் அவளை உண்டு இல்லைன்னு பண்ணுவேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அவன்.
அவள் மீது இருந்த கோபத்தை கார் ஸ்டியரிங் மீது காட்டியவன் வேகமாக காரை டாப் கியரில் ஓட்டிக்கொண்டு சென்றான்..
அலுவலகம் சென்றவன் முக்கியமான பைல்களை எல்லாம் முதலில் புரட்டி பார்த்துவிட்டு அதன் பிறகு மீட்டிங் நடக்கும் ஹாலுக்கு சென்றான்.
இவன் வருகையை உணர்ந்ததும் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் வைத்தனர்.
வரவேண்டிய முக்கியமான ஆட்கள் எல்லோரும் வந்து விட்டார்களா என்று ஒரு முறை சரிபார்க்க சொல்லி மேனேஜரிடம் கூறிவிட்டு..
அவன் எதையும் கண்டுகொள்ளாமல் ஜன்னல் பக்கம் போய் நின்று விட்டான்..
கிடைக்கும் சிறிது நேரத்தில் கூட மீண்டும் சிகரெட் புகைக்க தொடங்கினான்.
சிறிது நேரம் கழித்து அவனுடைய மேனேஜர் வந்து அவனை அழைத்தான்.
” சார் மீட்டிங் டைம் ஆயிடுச்சு எல்லாரும் ரெடியா இருக்காங்க உங்களுக்காக தான் காத்துட்டு இருக்காங்க”, என்று அவன் சொல்லவும் மீட்டிங் நடக்கும் ஹாலுக்கு மீண்டும் வந்தான்.
வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் கூறி தங்கள் கம்பெனியின் சிறப்புகளை எடுத்துக் கூறினான் சில நிமிடங்கள்.. அதன் பிறகு மீட்டிங்கிற்கு தேவையான பைல்களை எடுத்து வர சொல்லி அதைப் பார்த்து பிரசன்டேஷன் வழங்கிக் கொண்டிருந்தான் அவன்.
கோட் சூட் அணிந்த பல தொழிலதிபர்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்கள் என்று சிலர் வந்திருந்தனர் அதில் பெண்களும் ஆண்களுமாக கலந்து அமர்ந்திருந்தனர்..
வலப்பக்கமாக இருந்த வரிசையில் நான்காவதாக அமர்ந்திருந்த அந்த நீல வண்ண சேலை கட்டிய பெண்ணை ஒரு நிமிடம் உற்று கவனித்தான்..
“ஹே.. ஹே.. இவ.. இவ.. எப்படி இங்க..??”, ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர.. அவளைப் பார்த்தான் தீரன்.
கையில் வைத்திருக்கும் பைல் , அதில் இருக்கும் தகவல்கள், எதிரே அமர்ந்திருக்கும் தொழிலதிபர்கள், அருகில் நின்று கொண்டிருக்கும் மேனேஜர்.. இப்படி எதுவும் அவனுடைய கண்களுக்கு தென்படவில்லை..
எல்லாமே அவுட் ஆஃப் ஃபோக்கஸ் ஆகிவிட அந்த நீல வண்ண சேலை உடுத்திய பெண் மட்டுமே அவனுடைய கண்களுக்கு தெரிந்தாள்.
இவன் பார்த்து அதிர்ச்சியானதை கண்டதும் அந்த பெண்ணும் இவனை பார்த்து லேசாக புன்னகை புரிந்தாள்.
” கடவுளே இவ எப்படி இங்கே வந்தா?? வீட்ல யார்கிட்டயும் சொல்லாம வெளியே எங்கேயோ போயிட்டா.. அந்த அருணை பார்க்க போயிட்டாளோ என்று ஒரு நிமிஷம் தவறாக நினைத்துவிட்டேன், அவசரப்பட்டுட்டேன்.. பார்த்தா இவ இங்க இருக்காளே.. அப்படின்னா நம்மளை பார்க்கத்தான் இங்க வந்தாளா ?? இது தெரியாம ஏகப்பட்ட வார்த்தைகள் சொல்லி திட்டிட்டேனே மனசுக்குள்ள.. ஆனா எதற்காக சொல்லாம வரணும் ??சொல்லிட்டு வந்திருக்கலாமே.. இங்க வர்றதை சொல்லிருந்தா நானே கார்ல கூட்டிட்டு வந்திருப்பேன்.. எதுக்காக இப்படி பண்ணா அதுவும் இல்லாம அதிசயமா இன்னைக்கு என்னை பார்த்து சிரிக்கிறாளே??”, என்று மனமகிழ்ந்து போனவன் அவளை பார்த்து சிரிக்க தொடங்கினான்.
பதிலுக்கு அவளும் சிரிக்க.. சுற்றி யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் அவன் பாட்டுக்கு அவள் அருகே சென்றான் கையில் இருந்த பைலை மேஜை மீது எறிந்து விட்டு .
” மித்ரா நீ எப்படி இங்க?? நீ எப்போ இங்க வந்த ?? என்கிட்ட சொல்லவே இல்ல சொல்லிருந்தா நானே கூட்டிட்டு வந்திருப்பேனே அம்மாகிட்ட கேட்டா எனக்கு எதுவும் தெரியாது காலையிலயே சீக்கிரம் கிளம்பி போயிட்டா அப்படின்னு சொல்றாங்க..??”, என்று கூறியவன் அவளை நெருங்கி அவளின் பட்டு கன்னங்களை தொட்டுப் பார்த்தான்.
அதிசயமா இருக்கு..
என்னை பார்த்து சிரிக்கிறா.. அவகிட்ட இப்படி வந்து நெருங்கி நிற்கிறேன் கன்னத்தை தொட்டு பேசுறேன் இப்ப கூட என்னை பார்த்து முறைக்கல.. கையை தட்டி விடல அருவருப்பா முகத்தை சுளிக்கல இங்கிருந்து என்னை விட்டு போகல.. எப்படி இதெல்லாம் சாத்தியம்?? ஒரே நாளில் எப்படி மாறி போனா?? ஒண்ணுமே புரியலையே.. என்று மனதிற்குள் குழம்பிக் கொண்டே அவளை மேன்மேலும் நெருங்கினான்.
” மித்து.. நிஜமாகவே இது நீ தானா?? அதிசயமா இருக்கு நான் இவ்வளவு கிட்ட வந்து நிக்கிறேன் உன்கிட்ட இப்படி பேசுறேன் ஆனா உனக்கு என் மேல கோவமே வரலையே அதுதான் எனக்கு சந்தேகமா இருக்கு நிஜமாவே நீ மித்ரா தானா?? எதுக்கும் ஒரு தடவை என்னுடைய சந்தேகத்தை நான் உறுதிப்படுத்துகிறேன் “, என்றவன் அவளின் இடையில் கை வைத்து தன்னோடு இறுக்கி அணைத்து இதழோடு இதழ் பதிக்க முயன்றான்..
ஆசை அதிகரிக்க விழிகளை மூடி கொண்டான் பரவசத்துடன்..!!
அவன் மூடிய கண்களுக்குள் அவளின் செர்ரி பழ இதழ்கள் மட்டுமே தென்பட்டது..
அதை சுவைக்க வேண்டும் என்கிற வேகம் மட்டும்தான் அவனிடம் இருந்தது.. யார் இருக்கிறார்கள்?? இல்லை.. எந்த இடத்தில் இருக்கிறோம் என்றெல்லாம் அவன் மண்டைக்கு உரைக்கவே இல்லை அனைத்தையும் மறந்து விட்டு அவன் வேலையை தொடங்கினான்..
” சார் சார் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?? சார் நிறுத்துங்க சார்.. மிஸ்டர் தீரன்.. என்னது இது?? மிஸ்டர் தீரன்..”, இப்படி ஏகப்பட்ட கூச்சல் போடும் குரல்கள் ஒலித்த போதும் கூட அவன் கொஞ்சம் கூட அசரவே இல்லை கண்களை திறக்கவும் இல்லை அவளை விடவும் இல்லை..
எத்தனை பேர் கத்தியும் அவன் அவளை விட்டு விலகவே இல்லை மேலும் மேலும் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்..!!
” சார் என்ன சார் பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும் பாக்குறாங்க”, காதின் அருகே வந்து மேனேஜர் கத்த தொடங்கவும் தான் லேசாக சுய நினைவு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தது அவனுக்கு..
அனைவரும் பிடித்து அவனை ஒரே நேரத்தில் இழுக்கவும் தான் ஒரு கட்டத்தில் லேசாக அவளை விடுவித்துவிட்டு வேறு பக்கம் நகர்ந்தான் தீரன்..
முத்தமிடும் வேகத்தில் கண்களை பரவசத்தில் மூடியவன் இப்பொழுதுதான் மெதுவாக கண்களை திறக்கிறான்..
எதிரில் பயத்துடனும் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடன் பலவிதமான உணர்ச்சிகளை தேக்கிய வண்ணம் அவனையே பார்த்துக் கொண்டு அங்கே பலரும் நின்று கொண்டிருந்தார்கள்..!!
அடக்கடவுளே.. இத்தனை பேர் நின்னுட்டு இருக்காங்களே..
அட ஆமா இன்னைக்கு மீட்டிங்.. அதுக்காகத்தானே ஆபீஸ் வந்தோம் வந்த இடத்தில் அவளை பார்த்ததும் யார் இருக்காங்க இல்லைன்னு பாக்காம நான் பாட்டுக்கு இப்படி நடந்து விட்டேனே எல்லாரும் என்ன நினைப்பாங்க என்று யோசித்துக் கொண்டு எதிரில் நிற்கும் மித்ராவை பார்ப்பதற்காக திரும்பினான்..
ஆனால் அங்கே அவன் கைப்பிடிக்குள் மித்ராவுக்கு பதிலாக நின்று கொண்டிருந்தது என்னவோ…
மிகப்பெரிய தொழிலதிபரான வைபவ் தான்..!!
– தொடரும்..
