அத்தியாயம் 2

 

முப்பது வருடத்திற்கு பிறகு…

நாற்பத்தைந்து வயதை தொட்ட ராம்குமார் அவரின் வண்டியில் சிக்னலில் நின்று கொண்டிருந்தார்… அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த டீக்கடை ஒன்றிலிருந்து அழகிய லைலா என்ற பாடல் ஓடியது.

அந்தப் பாடலை அப்போது கேட்கும் போதெல்லாம் ராம்குமாரின் உடலில் ஒரு துள்ளல் எழுவதை ஆவரால் மறைக்க முடியாது… ஆனால் இப்போதெல்லாம் அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் வெறுப்பாகி போகிறது.

ஒரு பத்து வருடத்திற்கு முன் பெண் பார்க்க கிளம்பினார் ராம்குமார்… அப்போதும் இப்படித்தான் இந்த பாடல் தான் அவர் சென்ற வண்டியில் ஓடிக் கொண்டிருந்தது.

கேட்க கேட்க கல்யாண பெண்ணை நினைத்து மனதில் என்னென்னமோ தோன்றியது… மன்மதனே உன் ரதி எங்கே? என்ற வார்த்தையை கேட்கும் போதெல்லாம் உடலில் ஏற்படும் குறுகுறுப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருக்க அவரின் அருகில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அவரின் நண்பன் சசிகுமார்

“ராம்குமாரின் ரதியை காண தானே போகின்றோம்…” என்று நண்பனின் தோளில் இடித்தார்.

இவ்வாறு கல்யாண கனவோடு முப்பத்தைந்து வயதில் பெண் பார்க்க செல்ல பெண்வீட்டினர் “மாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் அதிகமா இருக்கு… மாப்பிள்ளையோட தம்பினா எங்களுக்கு சம்மதம்…” என்றே கூறிவிட்டனர்.

ராம்குமார் பேச்சற்று எழுந்து வெளியே வந்துவிட அவரின் அம்மா அந்த பெண்ணையே தம்பிக்கு பேசி முடித்துவிட்டார்… பெண் பெரிய இடம் என்ற காரணத்தை கூறி.

நடந்தற்காக ராம்குமாரை விட அவரின் நண்பன் சசிகுமார் தான் கலங்கினார்.

“அவங்களுக்காகவே வாழ்ந்தியேடா… கடைசியா உன்னைய வேணாம்னு சொன்ன வீட்டு பொண்ணையாடா உன் அம்மா உன் தம்பிக்கு பேசணும்? அவன முட்டி தேய உழைச்சி டாக்டர் ஆக்குனியே… அவனாவது அண்ணன வேணம்னு சொன்ன வீட்டு சம்பந்தம் எங்களுக்கு வேணாம்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே…” என்று ஆதங்கப்பட

கையில் இருந்த மதுவை வாயில் சரித்துக்கொண்டு “உங்களுக்கு வேணாம்னு தோணுனா சொல்லுங்க அண்ணா… எனக்கும் இந்த கல்யாணம் வேணாம் அப்படின்னு சொன்னாண்டா…” என்ற நண்பனை வேதனையுடன் பார்த்தே

“அங்க எல்லாத்துக்கும் சம்மதம் சம்மதம்னு தலையாட்டிட்டு வந்துட்டு இங்க உன் கிட்ட நடியோ நடினு நடிக்கிறான்… நீயும் அத அப்படியே நம்புற… போடா நீதான் என்னமோ அவங்க தான் உனக்கு எல்லாம்னு நினைக்கிற… அவங்களுக்கு எல்லாம் நீ வெறும் பணம் தர மிஷின் அவ்வளவு தான்…” என்றே முழுவதுமாக குடித்து மட்டையான நண்பன்

எப்போதும் அவனுக்காக யோசிக்கும் நண்பன் இப்போது உயிரோடு இல்லை… அவன் இறந்து ஒருவாரம் ஆகிவிட்டது… இன்னமும் நண்பனின் பிரிவை தாங்க முடியவில்லை ராம்குமாரால்.

ஆனால் என்ன செய்ய? அனைத்தையும் கடந்து சென்று தானே ஆகவேண்டும்… நண்பனும் அவனின் மனைவியும் போன கார் விபத்து ஆனதுக்கு பதிலாக தன் உயிர் போயிருக்கலாம் என்று இறவனை வேண்டாத நிமிடமே இல்லை.

இப்போது ஏதோ ஒரு நம்பரில் இருந்து நண்பனின் வீட்டுக்கு வக்கீல் ஒருவர் வர சொல்ல ராம்குமாரும் அங்கு தான் போயிக்கொண்டு இருக்கிறார்… சிக்னல் எடுத்ததும் ராம்குமாரின் வண்டி வேகம் பிடித்தது… நேராக நண்பன் சசிகுமாரின் வீட்டின் முன் தான் வண்டி நின்றது.

தனி பங்களா வீடு அது… போர்டிகோவில் வண்டியை நிறுத்திய ராம்குமார் வீட்டின் உள்ளே நுழைந்தான்… அங்கு அமர்ந்திருந்த அனைவரின் பார்வையும் ராம்குமாரின் மீது வந்தது.

ஆறடி உயரம்… மாநிறம்… எப்போதும் யாரையும் எடைபோடும் இருவிழிகளையும் மாறைக்கும் கூலர்… இறுக்கமான சவரன் செய்த முகம்… இடது கரத்தில் ரோலக்ஸ் கைக்கடிகாரம்… வலது கரத்தில் பிளாட்டின பிரேஸ்லெட்… கோர்ட் சூட் என்று கம்பீரமாக நின்றார் ராம்குமார்.

நாற்பத்தைந்து வயதை தொட்டிருந்தாலும் இன்றும் முப்பது முப்பத்தைந்து வயதையே உடையவராக தான் ராம்குமார் பார்க்க அவர்களுக்கு இருந்தார்.

அவர்களை எல்லாம் கேள்வியாக பார்த்தே அவ்விடம் வந்து தனியாக இருந்த ஒரு சோபாவில் அமர்ந்தார்.

“யார் இவர்? என் அண்ணனுக்கு என்ன என்ன இருக்கு… என்மருமகள் கிட்ட அதெல்லாம் எப்படி வந்து சேரும்னு பேசும் போது இவர் எதுக்கு?” என்று ஒரு பெண்மணி எழுந்து கேட்டார்.

“ஓ… இது தான் சசியோட தங்கச்சியா? என்னைய பத்தி கொஞ்சமும் யோசிக்காம எவளையோ கட்டிக்கிட்டு வந்தவன வீட்ட விட்டு துரத்துல நாளைக்கே நானும் இப்படி எவன் கூடவாவது ஓடிப்போவேன்…” என்று பெத்தவர்களிடம் சொல்லியே வீட்டை விட்டு அண்ணனையும் அண்ணியவும் விரட்டிய புண்ணியவதியை ராம்குமார் நக்கலாக பார்த்தார்.

அவரின் பார்வையை எல்லாம் கண்டு கொள்ளாத அந்தப் பெண்மணி “இதோ பாருங்க வக்கீல் சார்… எங்க அண்ணன் சொத்த எல்லாத்தையும் எப்படி என் மருமகள் பேர்ல மாத்தணும் அப்படிங்கறது எல்லாம் சொல்லி அந்த வேலையை சீக்கிரம் முடிச்சு கொடுத்தீங்கனா எங்க மருமகள நாங்க எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகணும்…” என்றார்.

அதன்பின்பே ராம்குமாரின் பார்வை நண்பனின் மகளை தேடியது… அங்கு சசிகுமாரின் அம்மா அப்பா தங்கை மாமா அவங்க பசங்க அதேபோல் சசிகுமாரின் மனைவியின் குடும்பம் என்று மொத்த பேரும் இருந்தனர்… ஆனால் அந்த பெண் இல்லை.

சசிகுமாரின் ஒரே மகளை அம்மாவின் சொந்தம் அப்பாவின் சொந்தம் என்று இருதரப்பும் நாங்க அழைத்து போகின்றோம் நாங்க அழைத்து போகின்றோம் என்று சண்டையிட ஆரம்பித்தனர்.

அதை பார்த்த ராம்குமாருக்கு சினமே தலைக்கு ஏறியது… எல்லாமே சொத்துக்காக பணத்துக்காக வந்திருக்காங்க… இப்போது மட்டும் நண்பனிடம் பணம் எதுவும் இல்லை, சொத்து எதுவும் இல்லை, கடன் தான் இருக்கிறது என்று கூறினால் போதும் அந்தப் பெண்ணை அப்படியே நட்டாத்தில் விட்டு விட்டு ஓடிவிடும் இந்த சொந்தம்.

அன்று என் குடும்பத்தை விட்டு சென்றது போல் இன்று இந்த பெண்ணையும் விட்டுவிட்டு இவர்கள் ஓடி விடுவார்கள் என்று தெளிவாக புரிய வக்கீலை பார்த்த ராம்குமார் “எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க வக்கீல் சார்… எனக்கு நிறைய மீட்டிங் இருக்கு… நீங்க வர சொன்னதால எல்லாத்தையுமே தள்ளி வச்சிட்டு வந்து இருக்கேன்… இன்னும் ஒன் ஹவர்ல நான் அங்க போகணும்…” என்றார் நேரத்தை பார்த்தப்படியே.

வக்கீலும் ஒருமூச்சை விட்டே “சார் உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை… நானே இவங்க கூப்பிட்டதால் தான் வந்தேன்… சசிகுமார் சாரோட பேர்ல இருக்கிற எல்லாமே அவரோட பொண்ணுக்கு தான் சொந்தம்… ஆனா என்ன பண்ண? சென்னையில் இருக்கிற இந்த பங்களா, கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ்ல சசிகுமார் சார் பேர்ல இருக்குற ஷேர்ஸ், பேங்க்ல இருக்குற நகை எல்லாத்து மேலையும் சசிகுமார் சாரும் அவரோட மனைவியும் பல கோடி கடன் வாங்கியிருக்காங்க… அதோட வட்டி பணத்தையும் அடைக்காததால எல்லாமே மூழ்குற கண்டிஷன்ல தான் இருக்கு… இன்னும் ஒரு வாரத்துல கடன அடைச்சா இது எல்லாத்தையும் மீட்கலாம்… இல்லாட்டி அது அப்படியே மூழ்கிடும்…” என்றவரை ஒட்டுமொத்த பெரும் அதிர்ந்து பார்த்தனர்.

“என்ன சார் சொல்றீங்க? என் அண்ணன் அவ்ளோ பெரிய பிசினஸ்மேன்… எவ்ளோ கட்டடம் கட்டி இருக்காரு தெரியுமா? எவ்வளவு பணம் சம்பாதிச்சு இருப்பாரு… அதெல்லாம் எங்க போச்சி? ஆமா என் அண்ணன் எதுக்கு கடன் வாங்கினார்? அவ்வளவு பணம் சம்பாதிக்கிறவர் எதுக்கு கடன் வாங்கணும்?” என்று சசிகுமாரின் தங்கை கேட்டாள்.

மற்றவர்களும் அவள் கேட்பது சரியே என்று வக்கீலை பார்க்க வக்கிலும் “என்னைய கேட்டா நான் என்ன மேடம் பண்றது? எல்லாமே அவர் வாங்குன கடன் தான்… அதற்கான ஆதாரம் எல்லாமே இருக்கு… பேங்க்ல போய் கேட்டீங்கன்னா கூட சொல்லுவாங்க… இந்த விஷயத்தை நான் சசிகுமார் சார் இறப்புக்கும் அடுத்த நாளே அவரோட பொண்ணுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்… அந்த பொண்ணும் சரி சார் அத அப்படியே விட்டுடுங்க… அப்பா சம்பாதித்தது அவர் வாங்குன கடனை அடைக்க தானே போகுது… போகட்டும்… என்னைய என் தாய்மாமாவும் என் அத்தையும் பாத்துப்பாங்கனு சொல்லிட்டாங்க… நாணும்… சரின்னு விட்டுட்டேன்…” என்று முழு மூச்சாக சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தார்.

அவர் கூறிய மொத்தத்தையும் கேட்டு முடித்தும் கூட அந்த வீடு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்பது போலவே தான் அத்தனை அமைதியாக இருந்தது.

ராம்குமாருக்கு சிரிப்பு வருவது போல் இருந்தது… ஆனாலும் அமைதியாகவே அவர் அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேரின் முகத்தையும் பார்த்தார்… அவர்களின் முகத்தில் இருள் பரவியிருப்பது போல் இருந்தது.

சசிகுமாரின் மனைவியின் அண்ணன் “அதான் மாப்பிளையோட தங்கச்சியே மருமகள கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னாங்க இல்ல… அவங்க கூட்டிட்டு போவாங்க…” என்று கூறி அவர் எழுந்து விட

“இல்ல இல்ல… நீங்க கூட்டிக்கிட்டு போறது தான் சரியா இருக்கும்…” என்று கூறி அவரும் எழுந்துவிட்டார்.

“வாவ் வாவ்… என் கூட தான் வரணும் என் கூட தான் வரணும்னு ஒரு வாரமா என் காதுல சொல்லி சொல்லி என் செலவுக்கு அள்ளி அள்ளி காசு கொடுத்த என் அத்தையும் மாமாவும் இப்ப ஒரே நேரத்துல நீ கூட்டிட்டு போ நீ கூட்டிட்டு போனு பேசுறீங்களே… ஏன் இப்ப அப்படி என்ன ஆச்சி? நான் கூட்டிட்டு போறேன் நான் கூட்டிட்டு போறேன்னு சொன்ன வாயெல்லாம் நீ கூட்டிட்டு போ நீ கூட்டிட்டு போனு சொல்லுது…” என்று குளறிய பேச்சியுடனே வீட்டு வாசலில் ஒரு உருவம் நின்றது.

நண்பனின் காரியத்தின் போது வெண்ணிற சுடிதாரில் நின்ற பெண் இப்போது கையில்லா பனியன் தொடை தெரிய ஒரு டவுசருடன் நின்றவளை பார்த்த ராம்குமார் அதிர்ந்து எழுந்து நின்றார்.

மற்றவர்களோ ஒருவாரமாக அவள் போடும் அரைகுறை ஆடைகளை பார்த்தே இருந்ததால் சாதரணமாக பார்த்தனர்.

அவள் கேட்டதற்கு பதிலாக “ம்… நாங்க என்ன கோடிஸ்வரங்களா உன் அப்பனும் ஆத்தாலும் வாங்கின கடன எல்லாம் அடைச்சி உன்னைய கூட்டிக்கிட்டு போயி உனக்கு பண்ணையம் பாக்க… போடி அங்குட்டு…” என்று முகத்தை வெட்டிக்கொண்டு அத்தை செல்ல

தாய்மாமாவின் மனைவி “அம்மாடி எங்க பக்கம் எல்லாம் பார்க்காத… நீ வாங்கி குடிக்கிற சரக்க கூட வாங்க காசு எங்க கிட்ட இல்லமா… ஆளவிடு…” என்று சொல்லியே மகனை அவளுக்கு கட்டி வைத்து சொத்து முழுவதையும் அடையலாம் என்ற கனவுக்கு கொள்ளி வைத்தே மகனின் கையை பிடித்து இழுத்து செல்ல அவர்கள் பின் தாய்மாமாவும் சென்றுவிட்டார்.

ஆகமொத்தம் சொத்து பணம் எதுவும் இல்லை என்றதும் அவர்களின் இரத்தமான அந்த பெண்ணை அப்படியே விட்டுட்டு ஒருவாரமாக தங்கியிருந்த பொட்டியை கட்ட போயிட்டாங்க… தாத்தா பாட்டி கூட போயிட்டாங்க.

அவர்கள் செல்வதை பார்த்த சசிகுமாரின் மகளுக்கு சிரிப்பு தான் வந்தது.

சிரித்த படியே விலை உயர்ந்த ஒரு பாட்டிலை கையில் பிடித்து தள்ளாட்ட நடையுடன் வக்கீலை நோக்கி வந்தவள்

“பார்த்தீங்களா சார்… மனுஷன விட பணத்துக்கு தான் மதிப்பு… ஆமாம்… யார் இந்த சாரு?” என்று கேட்டாள் ராம்குமாரின் முகத்தை பார்க்காமல் கரத்தை மட்டும் அசைத்து… ஆனால் என்ன? பதிலை கேக்கும் முன்பே அப்படியே போதையில் மயங்கி ராமின் மீதே விழுந்தாள்.

வருவாள் ரதி…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page