“நாழி ஆயிடுத்து பொண்ண அழச்சிட்டு வாங்கோ” என்ற சத்தம் விக்ரமின் காதில் தேனாய் ஒலிக்க, அவனை சிறிதும் ஏமாற்றாமல் ஆத்விகாவை அழைத்து கொண்டு வந்தனர் அவள் தோழிகள்.
அவனின் கண்ணிற்கு தங்கசிலை ஒன்று நடந்து வருவது போல் தோன்றியது ஆத்விகாவின் வருகை.
கண்ணிமைக்காமல் அவள் வருகையையே பார்த்து கொண்டு இருந்தவனிடம், “ஆத்துக்காரிய அப்புறமா பாருங்கோ! இப்போ இங்க கவனிங்கோ” என்று கூறினார் ஐயர்.
முத்து பற்கள் தெரிய ஐயரிடம் வழிந்து கொண்டிருந்த தன்னவனை அப்பட்டமாய் ரசித்தபடி நெருங்கி கொண்டிருந்தாள் பெண்ணவள்.
மணமேடையில் அமர்ந்த பின், “நீ இந்த டிரஸ்ல ரொம்ப அழகா இருக்க விக்ரம்” என்றாள் ஆத்விகா.
“உன் அளவுக்கு இல்ல ஆத்வி! உன்ன அப்படியே…. கடிச்சி திங்கணும் போல இருக்கு! இத்தன அழக இவ்ளோ நாள் எங்க டி மறச்சி வச்சி இருந்த! அப்படியே பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு உன்ன!” என்று அவளழகில் மயங்கி அவன் புலம்ப, ஆத்வி நாணப் புன்னகை புரிய, சுதா மாங்கல்யத்தை எடுத்துக் கொண்டு எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு இருக்க, அந்த நேரம் சரியாக மண்டபத்திற்குள் நுழைந்தான் அவன்.
திடீரென திருமண மண்டபத்திற்குள் பரபரப்பாக நுழைந்த அந்த ஆறடி ஆண்மகன் மணமேடையை பார்த்து விட்டு, “தேங்க் காட்! எல்லாம் முடியுறதுக்கு முன்னாடி வந்துட்டேன்” என்று தனக்கும் கடவுளுக்கும் நன்றி சொல்லிக்கொண்டே வீரநடையிட்டு உள்ளே வந்தான்.
அவனைக் கண்ட ஆத்விகா, “இவனா? இந்த ஜந்து ஏன் இப்போ இங்க வந்து இருக்கு? இவன் மூஞ்ச பார்த்தாலே மூட் அவுட் ஆகுது எனக்கு!” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள்.
அவளை முறைத்துக் கொண்டே மணவறை நோக்கி வந்தவனை இடை நிறுத்தினர் ஆத்வியின் தாயும் தந்தையும்.
“இதான் ப்ரெண்ட்டு மேரேஜ்க்கு வர டைமா டா? பெரியம்மா எங்க? அவங்கள ஏன் அழச்சிட்டு வரல?” என்று கேள்விகளை அடுக்கினார் ஆத்விகாவின் தாய் சௌமியா.
அவருக்கு பதில் கூறாமல் அமைதியாக மணமேடையை வெறித்தவனின் நயனங்களில் இருந்த உணர்வை புரிந்து கொள்ளவோ அல்லது தெரிந்து கொள்ளவோ அங்கு யாருக்கும் பக்குவம் இல்லை.
மணவறையில் அமர்ந்து இவனையே முறைத்துக் கொண்டிருந்தாள் ஆத்விகா.
“இந்த வளந்து கெட்டவனுக்கு இவ்வளவு வரவேற்பா? ச்ச! ஏன் தான் இந்த அம்மாவும் அப்பாவும் இவன இப்படி தாங்குறாங்களோ? நான் அவ்ளோ சொல்லியும் இவன என் மேரேஜ்க்கு இன்வைட் பண்ணி இருக்காங்க! கல்யாணம் முடியட்டும் அவங்களுக்கு இருக்கு” என்று நினைத்து முகம் சுழித்து கொண்டாள்.
சுதா மாங்கல்ய தட்டுடன் அவனை தாண்டி மணவறைக்கு செல்ல முயல, அவரை தடுத்து நிறுத்தியவன், சட்டென அந்த மாங்கல்யம் இருந்த தட்டை வாங்கி கொண்டு மணமேடை ஏறினான்.
“கடைசியில இவன் கையால தான்…. நாங்க தாலி வாங்கிக்கணுமா?” என்று கரித்துக் கொண்டு இருந்தாள்.
யாரும் எதிர்பாராத வண்ணம் தாலியை கையில் எடுத்தான். அவள் எதிர்பாரா நேரம், அவள் கழுத்தில் மங்கள நாணை பூட்டினான் அவன். ஆத்விகா அதிர்ந்து அவனைப் பார்க்க அவனோ திமிரான பார்வை ஒன்றை அவள் மீது வீசி விட்டு கெத்தாக நின்றான்.
அவன்தான் இந்தரேஷ்வரன். ஆறடிக்கும் சற்றே அதிகமான உயரத்தில், பல வருடங்களாக சிரிக்க மறந்த இறுகிய உதடுகளும், மாநிறத்தில் கட்டுக்கோப்பான உடல் அமைப்பும், தீட்சண்ய விழிகளும் உடையவன். அந்த ஊரின் பிரபலமான ஈஸ்வர் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஈஸ்வர் சூப்பர் மார்கெட்ஸின் சொந்தக்காரன். பள்ளி பருவத்திலேயே தாய், தந்தையை இழந்துபாட்டியோடு வசித்து வரும் அந்த முரடனுக்குள், அன்பு என்ற வார்த்தை மரித்து போயிருந்தது.
ஆத்விகாவின் வீட்டில் மட்டுமல்ல, அந்த ஊரிலேயே அனைவரிடமும் நற்பெயர் எடுத்தவன். ஆதலாலே அவன் எது செய்தாலும் சரி என்று எல்லோருக்கும் மனதில் பதிந்திருந்தது. ஏனோ சிறுவயதில் இருந்தே இவர்கள் இருவருக்கு இடையே மட்டும், எலியும் பூனையும் போலத்தான் சண்டை நடக்கும். சுட்டு போட்டாலும் எந்த விசயத்திலும் ஒத்தே போகாது. தன் வாழ்வில் அடியோடு வெறுக்கும் ஒருவன் தனக்கு அத்தனை பேர் முன்னிலையிலும் தாலி கட்டியதை நினைத்து உறைந்து நின்றாள் ஆத்விகா.
“டேய் சைக்கோ! ஏன்டா இப்படி செஞ்ச? எதுக்காக எங்க வாழ்க்கையை பாழாக்குன? உன்னை சும்மா விட மாட்டேன்டா! உன் சாவு என் கையால தான்டா” என்று கர்ஜித்த விக்ரமை, அவனின் அக்காவும் மாமாவும் இழுத்துப் பிடித்தனர்.
அவன் கதறலை தன் கால் தூசென பார்த்தான் இந்தர். நடந்ததை ஏற்க முடியாமல் தன் தந்தையை நோக்கி ஓடினாள் ஆத்விகா.
“இவன நம்பாதீங்க! இவனுக்கு இவ்ளோ இடம் குடுக்காதீங்கன்னு ஆரம்பத்தில இருந்து சொன்னேனே கேட்டீங்களாப்பா? இப்போ பாருங்க! என்ன பண்ணி வச்சிருக்கான்னு… ! நீங்க பெத்த பொண்ண விட உங்களுக்கு அவன் தானப்பா பெருசா தெரிஞ்சான்? அவன் தான் இன்னைக்கு உங்க பொண்ணு வாழ்க்கையவே கெடுத்துட்டான்” என்று கதறினாள் ஆத்விகா.
இந்தர், “வீட்டுக்கு போய் பேசிக்குவோம்” என்றிட, அவருக்கு அதற்கு மேல் யோசிக்க தெரியவில்லை.
“பொறுமையா இரும்மா, அவன் எதையும் காரணமில்லாம செய்ய மாட்டான். அவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு! அது என்னன்னு கேப்போம்” என்று துளியும் கோபமில்லாமல் கூறினார் ஆத்வியின் தந்தை கணேசன்.
“இப்போ கூட இந்த மனுஷனுக்கு கோவம் வரல பாரும்மா. ஏன்மா அப்பா இப்படி இருக்காரு? அப்படி என்னமா அவன் மேல இவருக்கு நம்பிக்கை?” என்று தன் தாயிடம் கதறினாள்.
“அமைதியா இரும்மா, வீட்ல போய் பேசிக்கலாம்” என்றார் சௌமியா.
ஏற்கனவே இந்த காதல் திருமணத்தில் விக்ரமின் தந்தைக்கு விருப்பமில்லாததால் அவர் எந்த வம்பும் செய்யாமல், “நடந்தது நடந்து போச்சு, எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சிக்கோ” என்று மகனுக்கு ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தி அழைத்து செல்வது போல் உள்ளுக்குள் மகிழ்ச்சியாகவே விக்ரமை அழைத்துக்கொண்டு சென்றார்.
விக்ரம் இந்தரேஷ்வரிடம் தான் தோற்றதை பெரிய அவமானமாகவே கருதினான். அவனுக்கு திருமணம் நின்றதை விடவும் இந்தரால் நின்று விட்டதே என்ற கோவம் தான் அதிகமாக இருந்தது. அவனை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று மனதுக்குள் வன்மத்தை சேர்த்து கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினான் விக்ரம்.
“யாருக்கு யாருன்னு… எழுதி இருக்கோ… அதான் நடக்கும்! இதுதான் அந்த ஆண்டவன் ஆசையும் போல! இப்படியே நின்னுட்டு ஆளாளுக்கு பேசிட்டு இருந்தா எப்டி? பொண்ணு மாப்ளைய வீட்டுக்கு அழைச்சிட்டு போய் ஆக வேண்டியதை பாருங்க” என்று பெரியவர் ஒருவர் கூற இந்தரோ, “ஒரு நிமிஷம்” என்று கத்தினான்.
“என்ன இந்தர்? என்னாச்சு?” என்று கேட்டார் சௌமியா.
ஐயருக்கு அருகே சென்றவன் அங்கிருந்த குங்குமத்தை எடுத்து வந்து ஆத்விகாவை இழுத்து தன்னோடு நெருக்கி கொண்டு அவள் நெற்றி வகிட்டில் வைத்து விட்டான் அவள் திமிர திமிர. அவளது கலங்கிய கண்கள் இப்போது சிவந்துப் போனது கோவத்தில்.
“இனிமே இந்த இந்தரோட ஆட்டத்த பார்ப்ப டி” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி உறுமினான். அவன் மனையாள் அவனை அதிர்வாக பார்த்தாள்.
இருவரையும் அழைத்துக் கொண்டு கார் அருகே வந்தனர் சௌமியாவும், கணேசனும்.
இந்தரின் காரில் ஆத்வியை ஏறக் கூற அவளோ, “இவன் கார்லையா? இவனோடல்லாம் ஒன்னா உக்காந்து வர மாட்டேன் நான்! நம்ம கார்ல நான் ஏறிக்கிறேன்! நீங்க எப்டி வரணுமோ வாங்க” என்று கத்தி விட்டு வேகமாக சென்றுவிட்டாள். அவள் தந்தை இந்தரை கலக்கமாக பார்த்தார்.
“விடுங்க அங்கிள்! நீங்க அவ கூட போங்க! நான் பாத்துக்கிறேன்” என்று அவளின் தந்தையை அவளோடு அனுப்பி வைத்தான் இந்தர்.
“மாமா அப்போ நான் உங்களோட வர்றேன்” என்று அவனோடு தொத்திக் கொண்டான் ஆத்விகாவின் தம்பி ராகவன்.
“என்னடா உனக்கு என் மேல கோவம் இல்லையா? உங்க அக்கா வாழ்க்கைய கெடுத்துட்டேன்னு” என்று கிண்டலாக கேட்டான் இந்தர்.
“அட போங்க மாம்ஸ்! உண்மைய சொல்லணும்னா எனக்கு அந்த விக்ரம பிடிக்கவே இல்ல! இவன எல்லாம் மாமான்னு கூப்பிடணுமான்னு யோசிச்சிட்டு இருந்தேன்! நல்ல வேளையா எங்க அக்காவ மட்டுமில்ல என்னையும் காப்பாத்திட்டிங்க” என்றான் அவன் வெகுளியாக.
அவன் கூறியதில் சடன் பிரேக் அடித்து நிறுத்தி, “ஏன்டா! உன் அக்கா அவன் மேல பைத்தியமா இருக்கா! உனக்கு ஏன் அவனை பிடிக்கல?” என்றான் ஆச்சர்யமாக.
“என் அக்கா அவன் மேல பைத்தியமா தான் இருக்கா. ஆனா அவன்…. அப்படி இல்லையே! அக்கா பிரண்ட்ஸ்ல இருந்து வீட்டு வேலைக்காரி வர எல்லார் கிட்டயும்ல வழியுறான்! இத சொன்னா அக்கா மட்டுமில்ல அப்பாவும் சண்டைக்கு வர்றாங்க! படிச்சவங்க நாலு பேர் கிட்ட சிரிச்சி தான் பேசுவாங்க! அத போய் தப்பா நினைக்கிறன்னு சொல்றாங்க! எனக்கு சுத்தமா அவனை பிடிக்கல மாம்ஸ்! அவன் மூஞ்ச பாத்தீங்களா? நல்லா மொழுக்கு மொழுக்குன்னு மீச கூட இல்லாம ஏதோ கொழுக்கட்டை மாதிரி இருக்கான்! என் அக்காளுக்கு என்ன டேஸ்ட்டோ? அவன போயி லவ் பண்ணி இருக்கா! ஆளும் சரி இல்ல! அவன் மூஞ்சியும் சரி இல்ல! அவனை போய் கொண்டாடிட்டு இருக்கா” என்று மனதில் உள்ளதை புலம்பிகொட்டினான் ராகவன்.
அவன் வார்த்தைகள் இந்தரின் மனதை படித்தது போல் இருக்க, அவன் இதழ்கள் ஒரு பக்கமாக வளைந்தது.
“உனக்கு எப்டி மாமா இந்த அடங்காபிடாரிய கல்யாணம் பண்ணனும்ன்னு தோணுச்சு? உன் வாழ்க்கையை பத்தின பயம் இல்லை?” என்று கேட்டான் ராகவன்.
அவன் கேள்வியில் சற்றே அதிர்ந்தவன், “உங்க அக்கா ரொம்ப நல்ல பொண்ணுடா! எல்லாரையும் சந்தோசமா வச்சுக்கணும்ன்னு நினைகிற நல்ல மனசு இருக்கு அவளுக்கு” என்று உணர்ந்து கூறிய இந்தர் காரை கிளப்பினான்.
“அது மத்தவங்களுக்கு மாமா! உங்க கிட்ட அவளோட நல்ல விஷயம் எதையும் அவ காட்டிகிட்டதே இல்லயே! ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், உங்களுக்கும் அவளுக்கும் தான் ஆகவே ஆகாதே! அப்றம் ஏன் இந்த விபரீத முடிவு?” என்றான் ராகவன் குழப்பமாக.
“ஏன் டா இவ்ளோ கொஸ்டின்ஸ் கேட்குற?”
“இல்ல மாம்ஸ்! நீங்க முன்னாடியே சொல்லிருந்தா நம்ம பிளான் பண்ணி நல்லா கிராண்ட்டா கல்யாணத்த முடிச்சிருக்கலாமே! இப்போ பாருங்க மேரேஜ்க்கு பாட்டி கூட வரல” என்று வருந்தினான் அச்சிறுவன்.
“முன்னாடியே சொல்லிருந்தா உங்க அக்கா, லெட்டர எழுதி வச்சிட்டு அந்த விக்ரம் கூட எங்கையாச்சும் ஓடி இருப்பா. இல்லன்னா உசுர விட்டுருப்பாடா” என்று இந்தர் கூறி முடிக்கும் முன்,
அவன், “நாளைக்கு நீங்க உயிரோட இருப்பீங்களான்னு தெரியலயே” என்று கூறி சிரித்தான் ராகவன்.
இந்தர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனினும் ஆத்வியின் கோவம் நினைவுக்கு வந்து சென்றது.
