மன்னன் தந்த மாலை
அத்தியாயம் 2
விவேகன் அந்த வீட்டிற்கு வந்து வருடம் ஒன்று கடந்திருந்தது. இன்னமும் இங்கிருக்கும் யாரும் அவனை முழுவதுமாய் ஏற்றுக்கொள்ளவில்லை. அவனை ஏதோ தீண்டத் தகாதவனை போல்தான் நடத்தினர்.
அவனை அழைத்து வந்த கற்பகநாயகிக்கு கூட அவனைப் பற்றிய அக்கறை எதுவும் இல்லை. ஆனால் இந்தச் சமூகத்தின் மற்றும் ஊரின் மரியாதைக்காக மட்டுமே அவனை இந்த வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அமுதாவின் அன்பு மட்டும்தான் அவனை அங்கே நிற்க வைத்திருக்கிறது. அதுவும் எந்நேரமும் அவனையே, ‘த்தான் அத்தான்…’ என்று சுற்றித் திரிந்த அருந்ததியும் அவன் அங்கே நிற்க மற்றொரு காரணம்.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அவனை ஒதுக்கி வைக்க மழலையவளோ வீட்டிலிருக்கும் நேரம் அத்தனையும் அவனுடனே கழித்தாள்.
இதற்கு நடுவே ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த விவேகனை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் எண்ணம் அங்கே யாருக்குமே வரவில்லை.
ஆனால் அமுதாவால் அப்படி இருக்க முடியவில்லை. மெல்ல மெல்ல கற்பகநாயகியிடம் பேச்சுக் கொடுத்துத் திட்டு வாங்கி அந்தக் கிராமத்தில் இருந்த அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டாள்.
முதலில் சம்மதிக்காத கற்பகநாயகிக்கு அவரின் மரியாதையை முன்னிறுத்திச் சொல்லவும் போனால் போகுதென்று அரசுப் பள்ளியில் சேர்த்தார். ஆனால் அவரின் மற்ற பேரன் பேத்திகள் ஊரின் பக்கத்தில் இருந்த தனியார் பள்ளியில் படிக்க இவனோ அரசுப் பள்ளியில் தன் எதிர்காலத்தைத் துவங்கினான்.
அவனைப் பள்ளிக்கு அனுப்ப அங்கே யாருக்கும் பெரிதாய் விருப்பம் இல்லையென்றாலும் கற்பகநாயகியின் வார்த்தைக்காக அமைதி காத்தனர்.
அதுபோல் அவனை வீட்டாளாய் பார்க்காமல் வேலையாளைப் போல வேலை ஏவினார்கள். இதில் அடுத்த உச்சமாக விவேகனின் பெரியம்மா பரிமளத்திற்கும் அவனை ஏனோ பிடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தங்கை மகன் என்று கூட எண்ண வேண்டாம். தன் மகனின் நகலாய் இருந்தவனைக் கண்டும் கூடவா தாய் பாசம் இல்லாமல் போனது பரிமளத்திற்கு?
பரிமளத்திற்கு வசுந்தராவை மிகவும் பிடிக்கும். சிறுவயதில் இருந்தே ‘அக்கா அக்கா’ என்று பூனையாய் தன் பின்னே சுற்றிய தங்கையின் தைரியமும் துணிச்சலும் நிரம்பவே பிடிக்கும்.
அதுபோல் பிடிவாதம் பிடித்து அந்த ஊரிலேயே அதிகம் படித்தவளும் வசுந்தராதான்.
பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடனே பரிமளத்தை உள்ளூர் பண்ணையாருக்குத் திருமணம் செய்து கொடுத்தனர்.
பரிமளத்தை திருமணம் செய்து கொடுத்த இடம் அந்த ஊரிலேயே இவர்களுக்கு அடுத்தபடியான ராஜேந்திரன் குடும்பம்தான்.
பரிமளத்தின் அமைதியும் குடும்பப் பாங்கான முகமும் அவர்களுக்குப் பிடித்துப் பெண் கேட்க, ராஜவேலுவும் கற்பகநாயகியும் சந்தோஷமாய் திருமணம் செய்து கொடுத்தனர்.
பரிமளம் ராஜேந்திரன் தம்பதியருக்கு அன்பரசன் என்ற மகனும் இலக்கியா என்ற மகளும் உண்டு.
துருவன், அன்பரசன், இலக்கியா என்று தன் அக்கா அண்ணன் குழந்தைகளுக்குப் பெயர் வைத்தது முழுக்க முழுக்க வசுந்தராதான்.
மூவருமே அவள் தூக்கி வளர்த்த குழந்தைகள்தான். அவள் அன்பையும் பாசத்தையும் சுமந்த குழந்தைகள்தான் இன்று அவளை வெறுக்கின்றன.
அந்த வெறுப்பு விவேகனின் மீதுதான் அனைவருக்குமே திரும்பியது. அதில் அதிகமாய் வெறுப்பைக் காட்டியது என்றால் துருவன்தான்.
அன்பரசன் இலக்கியா கூட ஒதுங்கிப் போய்விடுவார்கள். ஆனால் துருவன்தான் விவேகனை தேடி வந்து வம்பிழுப்பான்.
ஆனால் அதற்கு விவேகன் எதுவும் பேசாமல் அங்கிருந்து அமைதியாய் விலகிவிடுவான்.
அவன் அமைதியாய் போவதாலோ என்னவோ அது துருவனுக்கு மேலும் அவனை வம்பிழுக்க வசதியாய் போனது.
அவன் செய்த அத்தனையையும் கடந்து விவேகனின் மனதில் இருந்த ஒரே ஒரு விடயம் அவன் தாயின் வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான்.
அதற்காக அவன் பயந்தவன் என்றெல்லாம் சொல்ல முடியாது. தாயின் துணிச்சலையும் விவேகத்தையும் ஒருங்கே பெற்றிருந்தவன். ஆனால் அவனின் தாய் சொன்ன சொல்லுக்காகவே இந்த அமைதி.
அரசுப் பள்ளியில் சேர்த்தால் என்ன படிக்க முடியாதா? என்று தாயின் போதனைகளை மனதில் உருவேற்றி அரசுப் பள்ளியில் பயின்று சாதனைகள் பல செய்து உலகையே இந்தியாவைப் பார்த்து வியக்க வைத்த அப்துல் கலாமை நெஞ்சில் நிறுத்திப் படிக்க ஆரம்பித்தான்.
ஆனால் அவனைப் படிக்கவே விடக் கூடாது எனத் தன்னால் முயன்ற அளவு அவனைத் தொந்தரவு செய்வதை தன் வாடிக்கையாகக் கொண்டான் துருவன்.
ஏன் துருவன் மட்டும் இல்லை சகுந்தலாவும் கூட அவனின் படிப்பை நிறுத்த எத்தனையோ முயன்றும் அவரால் அது முடியாமல் போனது.
காலை எழுந்தால் வீட்டின் பின்பக்கம் இருக்கும் மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்வதிலிருந்து வீட்டைச் சுத்தம் செய்வது என அத்தனை வேலைகளையும் அவனின் தலையில் சுமத்தினார் சகுந்தலா.
முன்பே அவளுக்கு வசுந்தராவை அவ்வளவாய் பிடிக்காது. பெரிதாய் காரணம் என்று எதுவும் இல்லை. தான் வாழ வந்த வீட்டில் தானே ராணியாய் ஆட்சி புரிய விரும்பியவளுக்கு எதிராய் இருந்த தடை என்றால் அது வசுந்தராதான்.
அந்த வீட்டில் வசுந்தரா வைத்ததுதான் சட்டமாகியது. அதுவே மனதிற்குள் ஒரு விஷ விதையாய் விழுந்து போனது.
வசுந்தரா அந்த வீட்டை விட்டுப் போனதும் அது சற்று அடங்கினாலும் கூடத் தன் கணவனைத் தலைகுனிய வைத்து விட்டுச் சென்றவளை அவளால் மன்னிக்க முடியவில்லை. அந்தக் கோபம் அப்படியே விவேகன் மீது திரும்பியது.
மொத்தத்தில் அவன் அந்த வீட்டின் வாரிசாக இல்லாமல் ஒரு வேலைக்காரனாக இருந்தான். அதில் அவனுக்கு ஒரு ஆறுதல் இருந்தது என்றால் அது அமுதாவும் அருந்ததியும்தான்.
அமுதாவின் பாசமும் அவனையே அத்தான் அத்தான் என்று மழலையாய் அவனையே சுற்றி வந்த அருந்ததியின் அன்பும் அவன்மேல் அவன் தாய் கொண்ட நம்பிக்கை இவைகள்தான் அவனை அத்தனை தடைகளையும் கடந்து போக வைத்தது.
ஏழு வருடங்கள் கழித்து அந்த வீட்டின் வரவேற்பறையில் மாணிக்கத்தின் குரலும் துருவனின் குரலும் ஓங்கி ஒலித்தது.
நடுநாயகமாய் கற்பகநாயகி அமர்ந்திருக்க அவருக்கு அருகில் மாணிக்கம் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்க அவரின் பின்னே கோபமாய் சகுந்தலா நின்றிருந்தார்.
அவர்களின் முன்னே கோபம் கொண்டவனாய் துருவன் தன் எதிரே நின்றவனை முறைத்தபடி நின்றிருந்தான்.
அவனின் முன்னே நின்றவனோ பாலகனாய் அல்லாமல் குமரனுக்கே உண்டான பருவத்தில் ஆங்காங்கே முளைத்த மீசையைக் கொண்டு அமைதியாய் நின்றிருந்தான் விவேகன்.
“ம்மா, நான்தான் அப்பவே இவனை எல்லாம் படிக்க வைக்க வேணாம்னு சொன்னேன். நீங்கதான் ஊரு மரியாதைன்னு சொன்னீங்க. ஏதோ பள்ளிக்கூடம் முடியட்டும்னு சொன்னீங்க விட்டேன். ஆனா இப்போ வந்து நான் காலேஜ் படிக்கப் போறேன்னு நிக்குறான். நீங்களும் கேட்டுகிட்டு அமைதியா இருக்கீங்க.” என்று மாணிக்கம் வெகுண்டெழுந்தார்.
மகனின் கேள்விக்கு எந்த விதமான பதிலும் சொல்லாமல் அமைதியாய் தன் எதிரே நின்றவனைப் பார்த்திருந்தார் கற்பகநாயகி.
“ஏய்! நீயே ஒரு அனாதை. நீயெல்லாம் படிச்சி என்னத்தை சாதிச்சி கிழிக்க போற? போ, போய்ப் போடறதை தின்னுட்டு மாட்டுப் பண்ணையில என்ன வேலை இருக்குன்னு பாரு.” என்றவனின் வார்த்தையில் அத்தனை துவேசம் இருந்தது.
துருவன் கூறியதைக் கேட்ட விவேகனுக்கு அத்தனை கோபம் வந்தது. இருந்தும் தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டவன் தன் கரங்களைத் தனக்குள்ளே கட்டிக் கொண்டான்.
அவனின் கரங்களின் இறுக்க தன்மையிலேயே அவனின் கட்டுப்படுத்தப்பட்ட கோபத்தைக் கண்ட கற்பகநாயகிக்கு என்னவோ மனம் தடுமாறியது.
தன்னையே நேர்கொண்ட பார்வையாய் பார்த்தவனை எதிர்கொள்ள முடியாமல் அவரின் நியாயம் சொல்லிய மனது குற்ற உணர்வில் அமிழ்ந்தது.
சற்று நேரம் எதையோ யோசித்தவர் ஒரு முடிவுடன் எழுந்து தன் மகனையும் பேரனையும் கண்டவர்,
“மாணிக்கம், துருவா அவன் படிக்கட்டும். நீங்க யாரும் அதுக்கு செலவு பண்ண வேண்டாம். அதுவும் கவர்மெண்ட் ஸ்கூல் மாறிக் கவர்மெண்ட் காலேஜ்தானே போறான். அவன் படிக்கட்டும்.” என்று விட்டு விவேகனைப் பார்க்காமல் திரும்பிக் கொண்டார்.
அதைக் கண்ட விவேகனின் முகத்தில் வெறுமையான புன்னகை ஒன்று உதிர்ந்தது.
“பாட்டி, நீங்க என்ன சொல்றீங்க?” என்ற துருவனை முறைத்துப் பார்த்தவர்,
“இதைப் பத்தி இனி எப்பவும் நீ பேசக் கூடாது துருவா.” என்றார் அழுத்தமாக.
அந்த அழுத்தத்தில் அதற்கு மேலும் அவரை மாற்ற முடியாது என்று புரிந்தவன் கோபமாக அங்கிருந்து செல்ல, பின்னேயே அவனின் தாயும் சென்றுவிட்டாள்.
மாணிக்கம் தன் தாயையும் விவேகனையும் ஒரு முறை பார்த்தவர் வேறு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
அனைவரும் சென்றபின்பு பாட்டியும் பேரனும் மட்டும் தனித்திருக்க அவனை நிமிர்ந்து பார்த்தவர் அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், “நீ எங்க படிக்கிறியோ அங்கேயேப் படிச்சிக்கோ… அவங்களால இனி உனக்கு எந்த விதமான இடைஞ்சலும் வராது.” என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவர் சென்றபின்பு ஒரு வெறுமையான புன்னகையுடன் திரும்பிப் பார்க்க அங்கே இவனையே பார்த்துக் கொண்டிருந்தது மையிட்ட இரு விழிகள். அவள் அருந்ததி. தற்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளின் விழிகளில் தெரிந்த பரிதவிப்பில் உள்ளம் உருக அவளின் அருகே சென்றவன் அவளின் உயரத்திற்குக் கீழாக மண்டியிட்டு,
“என்னாச்சி, எதுக்கு இப்போ கண்ணு கலங்குது என் பட்டுக்கு?” என்றான் மென்மையாய்.
“நீ என்னை விட்டுப் போறியா அத்தான்?” என்றவளின் குரல் என்னை விட்டுச் சென்றுவிடாதே என்றது.
அதை உணர்ந்தவன் மெல்ல சிரித்தபடி அவளின் கலைந்த தலையைச் சற்று ஒதுக்கி விட்டவன்,
“ம்ம்… சரி, நீ சொல்லு பட்டு என்ன பண்ணலாம்? பேசாம இங்கேயே மாடு மேய்ச்சிட்டு இருந்துடவா உன்னோட…” என்றான் குறும்பாக.
அவனுக்கு நன்றாகத் தெரியும் அவளின் பதில் என்னவாக இருக்கும் என்று!
“இல்லை இல்லை, நீ நிறைய படிக்கணும். மாடு மேய்க்கக் கூடாது. ஆனா இங்கேயே என்னோட இருந்தே படியேன் அத்தான்…” என்றாள் வேகமாக.
“இதோ பாரு பட்டு, அத்தான் இப்போ போய்ச் சேரப் போற காலேஜ் சென்னையில பெரிய காலேஜ். இங்கிருந்து படிக்கிறதுக்கு சரியா வராதுடா. இப்போ என்ன நான் அப்படியேவா போகப் போறேன்? லீவு விட்டா என் பட்டுவைப் பார்க்க ஓடி வந்துடுவேனே! என் பட்டுவைப் பார்க்காம என்னால இருக்க முடியாதே…” என்றவனின் குரலில் என்ன இருந்ததோ அவனே அறிவான்.
“அப்போ லீவு விட்டா கண்டிப்பா என்னைப் பாக்க வருவியா அத்தான்?” என்றாள் ஆர்வமாக.
“ஓ… கண்டிப்பா வருவேனே! அதுமட்டும் இல்லாம வாரத்துக்கு ஒரு தடவை அமுதாம்மாவோட ஃபோன்ல உன்கிட்ட நான் பேசுறேன்டா.” என்று அவளுக்கு உறுதியளித்தான்.
அவனுக்குத் தெரியாதே அவனால் இந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியாது என்று!
அவனின் வார்த்தையில் அவனை முழுதாக நம்பியவளுக்கும் தெரியாதே அந்தக் கண்ணனுக்காகக் காத்திருந்த மீராவாய் இவளையும் இவன் காத்திருக்க வைப்பான் என்று!
அப்படி எல்லாவற்றையும் முன்பே அறிந்து கொண்டால் இறைவனுக்குத்தான் இங்கே என்ன வேலையோ?
மனதில் நீங்காக் கனத்தோடு
உந்தன் பார்வை…
தப்ப முடியாமல் நானும் உன்னோடு தஞ்சம் கொண்டேன் பேதையே…
அடுத்த பாகத்தில் பாக்கலாம் செல்லம்ஸ்…
மாலை வரும்… ✍️
