அத்தியாயம் 2

யாதவ் அவன் கரத்தை ராம் கரத்திலிருந்து உருவிய போது ராம் அவன் உயிர்க் காதலி தன் காதலனிடமிருந்து கரத்தை விலக்கியது போல் முகத்தில் பாவனைகளை கொண்டு வந்தான்.

அதை முகம் சுருக்கி பார்த்த யாதவ், வெளிப்படையாக தன் நெற்றியில் அடித்துக் கொண்டு “சரி சொல்லி தொலை. என்ன பண்ணனும்?” என்று வேண்டா வெறுப்பாக கேட்டான்.

இது தான் நல்ல சந்தர்பம் என்று ராம், சட்டென்று யாதவ்வை அணைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சியபடி “மச்சி ஆபிஸ்ல இருந்து போன்டா. உடனே வர சொல்லி. கண்டிப்பா போயே ஆகணும். இல்லனா இப்போ பண்ண ப்ராஜெக்ட் கேன்சல் பண்ணிடுவாங்கனு மகி சொன்னாடா” என்று அவனிடமிருந்து விலகிச் சென்று நிறுத்தினான்.

யாதவ் சந்தேகப் பார்வையோடு “சரி அதுக்கு?” என்றான்.

ராமோ “எனக்கு இப்போ வேற வழி தெரியல மச்சி. நீ போற வழில தான் நம்ம ஸ்ரீ” என்று ஆரம்பித்தவனை இடைமறித்து,

“உன் ஸ்ரீ” என்று பற்களை கடித்துக் கொண்டு விளக்கி சொன்னான் யாதவ்.

‘ரொம்ப முக்கியம்’ என்று ராம் மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் “ஹான் சரி சரி என் ப்ரெண்ட் ஸ்ரீ தான். அவளுக்கு நாளைக்கு பர்த்டே. அதனால தான்டா அவளுக்கு பிடிச்ச கிஃப்ட் கொடுக்க நினைச்சேன். இப்போ என்னால அதை பண்ண முடியாது. ஆனால் எனக்கு பதிலா” என்று மீண்டும் யாதவ்வை சங்கடமாக பார்த்தான் ராம்.

நண்பன் என்ன கூற வருகிறான் என்று புரிய, இருந்தாலும் அவன் வாய் மொழியாக கேட்போம் என்று எண்ணி “உனக்கு பதிலா?” என்று யாதவ் கேட்க,

“அதான் மச்சி எனக்கு பதிலா நீ போற வழியில அந்த கிஃப்ட் கொடுத்துடுடா. ப்ளீஸ் மச்சி மாட்டேன்னு மட்டும் சொல்லாத. இன்னிக்கு விட்டா அவ அடுத்து இரண்டு மாசத்துக்கு ஊருக்கு வர மாட்டா. ப்ளீஸ் டா ப்ளீஸ்… போற வழி தானேடா” என்று காலில் விழாத குறையாக ராம் மிகவும் மன்றாட ஆரம்பித்தான்.

தன் நெற்றியை யோசனையோடு தேய்த்துக் கொண்ட யாதவ் நண்பன் கெஞ்சுவதை பார்த்து பெருமூச்சு விட்டவன் “டேய் நான் இந்த கிஃப்ட்டை கூட உன் ப்ரெண்ட் கிட்ட கொடுத்துடுறேன். ஆனா செஞ்சி போற வழி தான்னு மறுபடி மறுபடி சொல்லாத. காண்டாகுது” என்று கடுப்புடன் பரிசை ஸ்ரீயிடம் கொடுக்க சம்மதித்தான் யாதவ்.

அவன் சம்மதம் சொல்லும் வரை மூக்கை உறிஞ்சிக் கொண்டு இருந்த ராமுக்கு, யாதவ்வின் பதிலை கேட்டதும் சட்டென்று மூக்கு உறிஞ்சுதல் நின்று போக,

தன் முகத்தை இருக்கரத்தாலும் தேய்த்தவன் தலை மூடியை கரத்தால் சரி செய்துக் கொண்டு அணிந்து இருந்த ஆடையை தட்டி விட்டு மிடுக்காக,

“சரி மச்சி, அப்போ நீ கிளம்பு அவ இருக்கிற லொகேஷன் உனக்கு ஷேர் பண்றேன். நான் இப்படியே ஒரு கேப் புக் பண்ணி போறேன்” என்றான்.

ராமின் திடீர் மாற்றத்தையும் செய்கையையும் கண்ட யாதவ் இதற்கு முன் தன்னிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தவனா இவன் என்ற வியப்புடன் தான் பார்த்தான் யாதவ்.

யாதவ்வின் பார்வையை பார்த்த ராம், எங்கே அவன் மனது மாறி விட போகிறானோ என்று பயந்தவன், சிறிதும் தாமதிக்காமல் ஸ்ரீ இருக்கும் லொகேஷனை அவனுக்கு அனுப்பிவிட்டு அவசரம் அவசரமாக ஒரு கேப்பை புக் செய்து அடுத்த சிறிது நிமிடத்தில் அங்கே இருந்து வந்த வழியின் எதிர்புறம் நோக்கிச் சென்றான்.

தன் நண்பன் சென்ற திசையை வெறித்து பார்த்த யாதவ் பெருமூச்சு ஒன்றை எடுத்துக் கொண்டு காரில் ஏறி, அங்கே இருந்து புறப்பட்டான்.

அவன் மனதிலோ ‘அவ எப்படி இருப்பா. இதுவரை அவ குரலை கேட்டு இருக்கேன். நல்லா தான் இருக்கும்’ என்று வெறுப்பாக கூறினாலும் அவன் இதயத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருக்க தான் செய்தது.

சில வருடத்திற்கு முன் யாதவ் படித்த அதே கல்லூரியில் தான் ராமும் சேர்ந்தான்.

கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே தோழமையுடன் பழகியவன் தான் இந்த ராம்.

பார்த்ததும் யாதவ்வை ராமுக்கு பிடித்து போக, யாதவ்வுக்கும் ராமை பிடித்து போனது.

வந்த நாள் அன்றே நன்றாக பேச ஆரம்பித்து விட்டான் ராம்.

ஆண்களுக்குள் நட்பு வளர்த்துக் கொள்ள வழியா சொல்ல வேண்டும். எப்படி பல இயற்கைகள் தானாக வளர்கிறதோ… அதே போல் தான் பசங்களின் நட்பும்.

அப்படி பழக ஆரம்பித்து இருந்த யாதவ் ராம் நட்பு பிரிக்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டு இருந்தது.

சொல்ல போனால் இருவரும் அவர்களின் உள்ளாடைகளை கூட மாற்றிக் கொள்ளும் அளவிற்கு பின்னி பிணைந்து இருந்தன அவர்கள் நட்பு கல்லூரி படிக்கும் காலத்தில்.

ராமிடம் யாதவ்விற்கு பிடிக்காத ஒரே விஷயம் அவனின் சிறு வயது தோழி என்று சொல்லி ஒருவளிடம் மணிக்கணக்காக போனில் பேசுவது தான்.

ஆரம்பத்தில் மற்றவர்களை போல் யாதவ்வும் இருவரும் காதலர்கள் என்றே நினைத்தான். ஆனால் ராமுடன் பழக பழக அவனின் தோழி ஸ்ரீயை பற்றி பேச பேச தான் புரிந்தது, இருவரும் நல்ல நண்பர்கள் என்று.

எத்தனையோ முறை ஸ்ரீயிடம் ராம் வீடியோ கால் பேசும் போது யாதவ்வை அழைப்பான். ஆனால் ஏனோ யாதவ் ஸ்ரீயை தவிர்த்துக் கொண்டே வந்தான்.

அதன் காரணம் என்னவென்று அவனுக்கே இதுநாள் தெரியவில்லை.

அப்படி தவிர்த்தவளை தான் இன்று நண்பனுக்காக சந்திக்கச் செல்கிறான். யாரென்று முகம் அறியா ஒருவளை காண சென்றுக் கொண்டு இருப்பவன் ஸ்ரீயை அடையாளம் கண்டுக் கொள்ளவானா?

இதையெல்லாம் யோசித்துக் கொண்டே காரை ஓட்டிய யாதவ்வுக்கு அப்பொழுது தான் உரைத்தது. ஸ்ரீயின் புகைப்படத்தை கூட கேட்கவில்லையே என்று தன் நெற்றியில் அடித்துக் கொண்டு தொலைப்பேசியை எடுத்தவன் ராமுக்கு கூப்பிட்டான்.

அடுத்த இரண்டே ரிங்கில் எடுத்த ராம் “சொல்லு மச்சி. அதுகுள்ள போயிட்டியா?” என்று ஆச்சரியமாக கேட்டான்.

யாதவ்வோ “இன்னும் டென் மினிட்டா. சரி நீ லொகேஷன் அனுப்புனியே… அவ போட்டோ அனுப்புனீயா?” என்று கேட்டுக் கொண்டே செஞ்சி மலையின் அருகில் காரை பார்க் செய்த யாதவ், ராம் கொடுக்க சொன்ன கிஃப்ட்டை எடுத்துக் கொண்டு மலையை நோக்கி நடந்தான்.

அதை கேட்ட ராமுக்கு விக்கலே வந்து விட்டது.

விக்கிக் கொண்டே “டேய் நிஜமா நீ அவ போட்டோவை கூடவா இதுவரை பார்த்தது இல்லை?” என்று சந்தேகமாக கேட்டான்.

யாதவ் எந்த உணர்வுகளும் இன்றி அடுத்த நொடியே “வேண்டாதவங்க போட்டோவை நான் ஏன் பார்க்கணும். நீ வளவளனு பேசாம அவ போட்டோவை எனக்கு அனுப்பு” என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே பீப் பீப் என்ற சத்தத்துடன் அழைப்பு நின்று போக, கைப்பேசியை புருவம் சுருக்கி பார்த்த யாதவ் யோசனையோடு மீண்டும் ராமுக்கு அழைத்தான்.

ஆனால் எதிர்முனையில் கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கும் பெண் குரல் தான் கேட்டு அவனுக்கு எரிச்சலை மூட்டியது.

“நீங்கள் அழைத்திருக்கும் எண்ணானது இப்பொழுது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருக்கிறது” என்று சொல்வதை கேட்டவனுக்கோ வெறுப்பாக தோன்றியது.

நெற்றியில் கைப்பேசியை வைத்து தட்டிக் கொண்டே அங்கேயே சில கணங்கள் நின்று யோசித்தான்.

“அவன் அனுப்பின லொகேஷன்ல நிறைய பேர் இருந்தா என்ன பண்றது?” என்று புலம்பியவன் பின் “எப்படியோ அவனோட ப்ரெண்ட், அவனை மாதிரியே லூசா தான் இருப்பா. சோ கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸி தான்” என்ற முடிவோடு லொகேஷன் காட்டும் திசையை நோக்கிச் சென்றான் யாதவ்.

கைப்பேசியை தன் முன் நீட்டிக் கொண்டே பார்த்து வந்தவன், ஒரு கணம் பார்வையை உயர்த்தி பார்த்து விட்டு மீண்டும் கைப்பேசியில் பார்வையை செலுத்த போனவனின் புருவம் சுருங்க, மீண்டும் நயனங்கள் நிமிர்ந்து அவன் பார்த்த இடத்தை திரும்ப பார்த்தது.

அங்கே தூரத்தில், காற்றில் ஆடும் ஒரு பெண்ணின் துப்பட்டா மிக அழகாக தெரிந்தது அவனுக்கு.

இயற்கையோடு செல்லமாக விளையாடிக் கொண்டு இருந்த பெண்ணவளின் துப்பட்டாவில் ஒரு கணம் சித்தம் இழந்தவன்,

மெல்ல இரு விழியாலும் அங்கே நிற்கும் பெண்ணை ஆழமாக பார்க்க ஆரம்பித்தான் யாதவ்.

தலை முடியை சுற்றி கொண்டை போட்டுக் கொண்டு, இருக் கன்னத்திலும் சில முடிகள் மயிலிறகு போல் அடிக்கும் காற்றில் பறந்து, பெண்ணவளின் நீண்ட விரல்களால் அவ்வப்போது ஒதுக்கி விட்டபடி, அங்கும் இங்கும் அலை பாய்ந்து இருந்த மை தீட்டிய நயனங்கள் அவன் எதிரே நடந்து வந்துக் கொண்டு இருந்தவள் விழிகள் அவன் மீது பதிந்து நிலைக்குற்றி நின்றது.

அவனை பார்த்தவளின் இமைகள் வியப்பில் அப்படியே நிலைத்து இருக்க இதழோரம் வசீகரமான புன்னகை தானாக திடீரென்று முளைத்துக் கொள்ள, அவளின் மனமோ வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

யாரென்றே தெரியாத ஒருத்தியை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருப்பது புத்திக்கு உறைத்தாலும் கருவிழிகள் அவளை விட்டு நகருவேனா என்று அடம் பிடிக்க, தன் இதயத்தை மெல்ல தடவிக் கொடுத்தான்.

அவளை கண்டதும் ஏனோ யாதவ்விற்கும் இதயத்தின் பகுதியில் என்னவோ செய்ய, அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க போனவன் பின்னால் இருந்து,

“ஏய் யாஷ்மிகா இன்னிக்கு உன்னை பார்க்கிறேன்னு சொன்ன மாப்பிள்ளை வரலையாம்டி. அதனால பெரியப்பா நம்மளை சீக்கிரம் வீட்டுக்கு வர சொன்னாரு” என்று குரல் கேட்க, யாதவ்வின் கால்கள் அப்படியே நின்று விட்டது.

‘இவள் ஸ்ரீ இல்லையா?’ என்ற எண்ணமே அவனுக்கு பாகற்காய் போல் கசப்பை தர, மனமோ ‘மாப்பிள்ளையா? அப்போ இவளை பார்க்க வரும் பையனுக்காக காத்திருந்தாளோ. நல்லவேளை அந்த மாப்பிள்ளை வரல’ என்று ஏனோ அவன் மனம் நிம்மதியை தத்தெடுத்துக் கொண்டது.

ஆனால் படபடவென அடித்துக் கொண்டு இருந்த விழிகளுக்கு சொந்தக்காரியின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை காண தான் ஏனோ அவனுக்கு சகிக்கவில்லை.

தன் முன் வசீகரமாக நின்று இருந்தவனை ஒரு முறை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் “இதோ வரேன் இருடி” என்று அவனை தாண்டிச் சென்றாள் யாஷ்மிகா.

அவள் போவதை பார்த்தவனுக்கு மனதில் ஏனென்றே தெரியாத இதம் பரவியது.

அதே நேரம் இவனை தூரத்திலிருந்து பார்த்து விட்டாள் ஸ்ரீ.

பார்த்தவளின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

இதுவரை தன் நண்பனின் மூலமாக ஒருவனை பற்றி அறிந்துக் கொண்டு, யார் அவன் என்று எதிர்ப்பார்ப்புடன் நண்பனிடம் புகைப்படம் கேட்பதற்கு பலமுறை தடுமாற்றத்திற்கு பிறகு தைரியத்தை வர வைத்துக் கொண்டு ராம் புகழ்பாடும் அவனின் நண்பனின் படத்தை பார்த்தவளுக்கு ஒரு வித ஈர்ப்பு உண்டாவதை அவளால் தடுக்கவே முடியவில்லை.

அவனிடம் பேச மட்டுமே போன் செய்துக் கொண்டு இருந்தவள், தன் எதிரே நின்று இருப்பவனை பார்த்ததிலிருந்து அவனை பற்றி அறிந்துக் கொள்ள தன் நண்பனுக்கு போன் செய்ய ஆரம்பித்தாள் ஸ்ரீ.

நேரில் பார்த்து பழகவில்லை. ஆனால் அவனை பற்றி அறிந்துக் கொண்டு காதலில் விழுந்தவள் தான் இந்த ஸ்ரீ.

யாதவ்வை பரவசத்துடன் பார்த்தவள் முகம் சட்டென்று இருண்டது.

காரணம் யாதவ் முதலில் பார்த்த பெண்ணை கண்டு. பின் தன்னை கண்டு விட்டான் என்று எண்ணி இருந்தவளுக்கு வேற யாரிடமோ அவன் பேசியதை கண்டு.

யாதவ் தன்னை தாண்டி போகும் பெண்ணை ஓரவிழியால் பார்த்து விட்டு பெருமுச்சு விட்டவன் திரும்பி எந்த பெண்ணாவது இருக்கிறார்களா என்று பார்த்தான்.

பார்த்தவன் கண் முன் ஒரு பெண் அமர்ந்து இருப்பதை கண்டவன் நிச்சயம் இவள் தான் ராம் தோழியாக இருக்க வேண்டும் என்று நினைத்து அவளை நெருங்கி அந்த பெண்ணிடம் நேரடியாக தான் வந்த விஷயத்தை பற்றி பேச தொடங்கினான்.

“ஹலோ, ஐயம் யாதவ். இந்தாங்க இதை ராம் உங்க கிட்ட கொடுக்க சொன்னான்” என்று வேறு எதுவும் பேசாமல் கொடுக்கப்பட்ட வேலையை கண்ணும் கருத்துமாக செய்தான் யாதவ்.

அங்கே திண்பண்டங்களை விழுங்கிக் கொண்டு இருந்த பொண்ணோ “யார் நீங்க. ஆமா ராம் யாரு?” என்று கேட்டுக் கொண்டே சற்று தொலைவில் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்த அவளின் கணவனை அழைத்தாள்.

“என்னங்க, இங்க வாங்க. இந்த ஆளு என்னவோ சொல்றாரு” என்று சாப்பிட்டுக் கொண்டே அழைக்க மனைவியின் குரல் கேட்டதும் தொடர்பை கட் செய்து விட்டு வேகமாக தன் மனைவியின் அருகில் வந்து,

யாதவ்வை மிரட்ட ஆரம்பித்தான் அந்த கணவன்.

இதில் திடுக்கிட்டு போன யாதவ் “அய்யோ சாரி ஆளு மாத்தி” என்று அவனுக்கு மன்னிப்பு கூட கேட்க அனுமதி தராமல் அந்த ஆள் சண்டை பிடிக்க,

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ஸ்ரீக்கு சிரிப்பு வர, சிரித்துக் கொண்டே அவர்கள் அருகில் சென்று,

அங்கே திணறிக் கொண்டு இருந்த யாதவ்வை பார்த்து “நீங்க தேடி வந்த ஸ்ரீ நான் தான்” என்று கூறினாள்.

குரல் வந்த திசையை திரும்பி பார்த்த யாதவ் தன்னையே மறந்து போனான் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி பட்ட அழகி தன் நண்பனின் தோழியாக இருக்காது என்று எண்ணியவனுக்கு பல்பு வாங்குவது போல் இருந்தது நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல்.

ஸ்ரீயை பார்த்தவன் விழிகளில் ஒரு தடுமாற்றம்… இதயத்தில் ஏதோ ஒன்று அழுத்த இதற்கு முன் பார்த்த பெண்ணின் முகம் அழையா விருந்தாளியாக வந்துச் செல்ல, இப்பொழுது ஸ்ரீயை பார்த்தவனுக்கு உடலில் ஏதோ ஒன்று ஊர்வது போல் அருவருப்பாக இருந்தது அவனுக்கு.

ஏன் இந்த திடீர் மாற்றம் என்று அவனுக்கு தெரியவில்லை.

ஸ்ரீ அழகி தான் அதுவும் பேரழகி தான். அதிலும் பார்த்தவுடன் ஒருவரை தடுமாற வைக்கும் கொள்ளையழகி. ஆனால் இப்பொழுது யாதவ்வின் மனநிலை வேறாக அல்லவா இருந்தது.

எந்த பெண்ணின் பெயரை கேட்டால், கடுப்பாக உணர்வானோ இப்போது அந்த பெயருக்கு சொந்தமானவள் அவன் முன் நின்று இருப்பதை பார்த்து கோபம் கொள்ளாமல் ஒரு கணம் தடுமாற தொடங்கினாலும் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டான்.

அவனை கண்டு புன்னகை முகமாக “ஹாய் யாதவ்” என்று கையசைக்க, அந்த கணவன் மனைவியோ, “ஏதோ இந்த புள்ளையால நீ தப்பின மவனே. இல்லைனு வை” என்று தன் கழுத்தில் கரத்தை வைத்து வெட்டுவது போல் அவர் சைகை செய்ய, யாதவ் ஒரு அடி பின் சென்றான்.

அதை பார்த்த ஸ்ரீ சிரித்து விட, ஒரு அழகான பெண் முன்னால் தன் கெத்தை விட்டு விட கூடாதென்று, முன்னோக்கி வந்து நின்றவனை கீழிருந்து மேல் பார்த்து விட்டு தன் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கே இருந்து சென்று விட்டான்.

அவர்கள் போனதும் “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டான் யாதவ்.

அவனை புன்னகையோடு பார்த்த ஸ்ரீ “நீங்க என்னை பார்த்தது இல்லையா?” என்று கேட்டபடி அவன் அருகில் நெருங்கி நின்றாள்.

இல்லை என்று தலையை ஆட்டியவன் “அவன் உங்களை பத்தி பேசும் போதெல்லாம் கடுப்பா இருக்கும். அதான் பார்க்க தோனல” என்று வெளிப்படையாக உண்மையை பேசியவனை கண்டு ஆச்சரியம் தான் அடைந்தாள்.

“நீங்க ரொம்ப ஃபிராங்கா இருக்கீங்க. ஐ லைக் தட்” என்று சொன்னவள் “வாங்க போகலாம். கேமரா அங்கே இருக்கு” என்று ஒரு இடத்தை காட்ட, அவனோ சரியென்று தலையை ஆட்டியவன் அவளோடு நடக்க போக, அப்பொழுது தான் கையிலிருந்த பரிசு பொருள் அவன் கவனத்தை ஈர்த்தது.

“ஸ்ரீ ஒரு நிமிஷம். வந்த வேலையை மறந்துட்டேன் பாருங்களேன்” என்றவன் அவளை நிறுத்தி அவள் முன் தன் கையிலிருந்த பரிசு பொருளை நீட்டி “ராமின் அட்வான்ஸ் மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே. இது ராம் உங்க கிட்ட கொடுக்க சொன்ன கிஃப்ட்” என்று நீட்டினான்.

அதை இன்முகத்தோடு பெற்றுக் கொண்ட ஸ்ரீ “அப்போ நீங்க எனக்கு விஷ் பண்ண மாட்டீங்களா?” என்று மயக்கும் குரலில் கேட்டாள்.

அவனோ “கண்டிப்பா பண்ணுவேன்.” என்றவன் தன் கரத்தை நீட்டி “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று கூறியவனிடம் தன் நன்றியை தெரிவித்தாள் ஸ்ரீ.

யாதவ்வோ “சரி ஸ்ரீ நான் அப்படியே கிளம்புறேன்” என்று சொல்லி கார் சாவியை எடுத்தான்.

அவன் கிளம்புவதாக சொன்னதை கேட்ட ஸ்ரீ ஏமாற்றமான முகபாவனையுடன் “கிளம்புறீங்களா? என்ன யாதவ் இப்போ தான் வந்தீங்க. அதுக்குள்ள கிளம்புறேன்னு சொன்னா எப்படி. இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே இந்த செஞ்சிக் கோட்டையை சுத்தி பாருங்க” என்று சொன்னாள்.

அவனும் சாதாரணமாக சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “இங்க சுத்தி பார்க்க என்னங்க இருக்கு. வெறும் மலையா தானே இருக்கு” என்றவனை சட்டென்று திரும்பி பார்த்தவள்,

“என்னது மலை மட்டும் தான் இருக்கா? இந்த மலையோட வரலாறு தெரியுமா? தெரிஞ்சா இப்படி சொல்ல மாட்டீங்க. நான் சொல்றேன். அதை கேட்டு இப்போ மெதுவா இந்த மலைகளை பாருங்க.” என்று ஆழ்ந்து மூச்சை எடுத்து விட்டு சொல்ல தொடங்கினாள்.

“இது செஞ்சிக் கோட்டையின் வரலாறு மிகவும் பழமையானது யாதவ், இது பல அரசுகளால் ஆளப்பட்டு பல போர்களைக் கண்ட கோட்டை. இந்த கோட்டை சோழர்களால் “சிங்கபுர நாடு” என்றும், முகலாயர்களால் “பாதுஷாபாத்” என்றும் அழைக்கப்பட்டது. இது இயற்கையான மூன்று மலைகள் மற்றும் இரண்டு குன்றுகளை இணைக்கும் 12 கி.மீ. நீளமுள்ள சுவர்களால் ஆன முக்கோண வடிவ கோட்டையாகும், மேலும் இது “இந்தியாவின் மிகவும் அசைக்க முடியாத கோட்டை” என்று கருதப்படுது தெரியுமா? யாதவ்” என்று அவள் சொல்ல சொல்ல இப்பொழுது அங்கே சுற்றி இருந்த கோட்டைகளை ஆழமாக பார்த்து ரசிக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரம் அவள் படம் எடுப்பதை பார்த்தவன் “உனக்கு போட்டோ எடுக்கிறதுன்னா ரொம்ப பிடிக்குமோ? எப்போ ராம் உன்னை பத்தி பேசினாலும் ஸ்ரீ இந்த ஊர்ல போட்டோ எடுக்குறா ஸ்ரீ அந்த ஊர்ல போட்டோ எடுக்குறானு தான் சொல்வான். அதான் கேட்கிறேன்” என்றான் யாதவ்.

அவனை ஒரு மெல்லிய புன்னகையோடு பார்த்த ஸ்ரீ “ம் ஆமா யாதவ் எனக்கு வேர்ல்ட் லெவல் போட்டோஃகிராபர் ஆகணும்னு தான் ஆசை” என்றாள் கண்கள் மின்ன.

அவளின் முகத்தில் தெரிந்த பூரிப்பை கண்ட யாதவ்விற்கு அவளின் கனவு எப்படிப்பட்டது என்று புரிந்தது.

மனதார “கண்டிப்பா ஒரு நாள், உலகம் முழுவதும் தெரியும் ஒரு புகைப்படக் கலைஞராக அறிமுகமாவ பாரு.” என்று அவன் புன்னகையுடன் கூறினான்.

அவன் வார்த்தைகளை கேட்ட ஸ்ரீ புன்னகையுடன் “தேங்க்ஸ் யாதவ். நீ சொன்னது மட்டும் நடந்துச்சினா உனக்கு பெரிய ட்ரீட் வைக்கிறேன்” என்று சொன்னாள்.

அதன் பிறகு சிறிது ஒன்றாக பேசி விட்டு யாதவ் அவளிடமிருந்து விடைபெற, அவளும் அவனுக்கு புன்னகை முகமாகவே வழியனுப்பினாள்.

கார் இருக்கும் இடத்திற்கு வந்த யாதவ்வின் கைப்பேசியில் ஏகப்பட்ட நோட்டிஃபிகேஷன் வந்து இருப்பதாக சத்தம் வர, எரிச்சலுடன் கைப்பேசியை எடுத்து பார்த்தான்.

மலை மீது இருக்கும் வரை நெட்வொர்க் இல்லாமல் போனதால், இப்பொழுது நெட்வொர்க் கிடைக்கவும் ராமிடமிருந்து நிறைய குறுஞ்செய்திகளும் அழைப்பிற்கான மெஸேஜும் வந்தவண்ணம் இருந்தது.

முதலில் ராமுக்கு அழைத்து விஷயத்தை கூறி அழைப்பை வைத்தவனுக்கு அடுத்ததாக அவனின் தமையனிடமிருந்து அழைப்பு வந்து இருப்பதை பார்த்தான்.

அர்ஜூனுக்கும் தொடர்பு கொள்ள அடுத்த இரண்டே ரிங்கில் அழைப்பை ஏற்ற அர்ஜூன்,

“என்ன யாதவ் என் மாமனார் ஊர் பக்கம் போய் இருக்கியாமே அப்படியா?” என்று கேட்டான்.

யாதவ்வோ “மாமனார் ஊரா? இல்ல அண்ணா நான் செஞ்சிக்கு தான் வந்து இருக்கேன். ஓ அண்ணி செஞ்சியா?” என்று கேட்டான்.

“இல்லடா விழுப்புரம். ராம் கால் பண்ணான். உன் நம்பருக்கு கால் போகலையாம். ஏதோ வேலையா செஞ்சி வரைக்கும் அனுப்பி இருக்கேன். போன் போக மாட்டிக்குதுனு அழாத குறையா பேசினான் அதான் என்னனு கேட்க போன் அடிச்சேன்” என்று சொல்லிக் கொண்டே மடிக்கணினியில் தன் வேலைகளை பார்த்தான் அர்ஜூன்.

“ஓ அது ஒன்னும் இல்லண்ணா. ஜஸ்ட் இங்க ஒரு ப்ரெண்ட்டை பார்க்க அனுப்பினான்” என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே அவன் காரின் மீது ஏதோ ஒன்று இடித்ததற்கான பெரிய சத்தம் வர, “அண்ணா கூப்பிடுறேன் இருங்க” என்று சொல்லி அழைப்பை வைத்த யாதவ் என்னாச்சு என்று கார் பின் பக்கம் சென்று பார்த்தவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி தான்.

பின் பக்க காரின் அடியில் யாஷ்மிகாவின் ஸ்கூட்டி மாட்டிக் கொண்டு வண்டியின் கீழ் அவள் கால் மாட்டிக் கொண்டு பப்பரப்பா என்று கைகால்களை விரித்தபடி விழுந்து கிடந்தவளை பார்த்து அதீத கோபம் கொண்டான் யாதவ்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அரக்கனின் காதலி
141 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
276 10 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
245 3 0
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page