அவள் முதல் அவள் வரை.
*******************
அத்தியாயம் – 2.
திருச்சி, ஸ்ரீரங்கம்.
காலைச் சிற்றுண்டிக்குக் கடிவாளமிடும் அவசரங்கள் முடிந்த நேரம்.
தொல்லைகள் ஏதுமில்லாத முல்லை நகரின் மூன்றாவது வீதியில், வலது புறமிருந்த நான்காவது வீட்டின் மாடிப் போர்ஷன்.
வரவேற்பறையில், ஷோஃபாவிற்கு வாழ்க்கைப்பட்ட டீப்பாயின் மேல் வைக்கப்பட்டிருந்த செல்ஃபோன் ஒலித்தது.
அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவன், “சொல்லுங்க மாமா” என்றான்.
“……….”
“கெளம்பிட்டேன் மாமா. சாப்டுட்டுக் கொஞ்ச நேரத்துல போயிடுவேன். பாப்பா இப்பத்தான் ஸ்கூலுக்குப் போனா. ஸ்வேதா கிச்சன்ல இருக்கா.”
“……….”
“எப்படியும் ஒரு வாரம் ஆகலாம்னு நெனைக்கிறேன்.”
“……….”
“ஓகே மாமா. நான் பாத்துட்டு உங்களுக்குக் கால் பண்றேன்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்த போது, சமையலறையில் தாளிப்புச் செய்யும் சப்தமும் வரவேற்பறையில் அழைப்பு மணியின் சப்தமும் ஒன்றாகக் கேட்டது.
அவன் சென்று கதவைத் திறந்து பார்த்த போது அங்கே சக்ரவர்த்தி நின்றிருந்தார்.
வெள்ளை நிற டீ சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டில் இன்னும் கொஞ்சம் இளமை கூடியிருந்தது.
“யார் நீங்க? என்ன விஷயம்?” என்றான் அவன்.
சக்ரவர்த்தி சில நொடிகள் அவன் முகத்தையே உற்றுப் பார்த்தார். அவரது கண்கள் அவன் முகத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தன. அந்தத் தேடலை, ராகவனின் அடுத்த கேள்வி வந்து தடுத்தது.
“சார் சொல்லுங்க. யார் நீங்க? என்ன வேணும்?”
நேற்றுப் பேருந்தில் உச்சரித்த பெயரை இப்போது தயக்கத்துடன் இழுத்தபடி உச்சரித்தார், சக்ரவர்த்தி.
“ராகவன்…”
“நான் தான். நீங்க?”
தொலைந்து போன பொருளொன்று கிடைத்த மகிழ்ச்சி தெரிந்தது சக்ரவர்த்தியின் முகத்தில். ராகவனின் கேள்விக்குப் பதில் தராமல், அடுத்த கேள்வி தொடுத்தார், சக்ரவர்த்தி.
“மிஸ்டர். சிவராமன்…?”
புருவங்களை இணைத்துச் சற்றே தலை சாய்த்து, “அப்பா தான்” என்றான்.
ராகவனின் பதில், சக்ரவர்த்திக்குப் போதுமானதாக இருந்தது.
தனது பெயரையும், அப்பாவின் பெயரையும் கேட்ட சக்ரவர்த்தியை வீட்டிற்குள் அழைத்தான், ராகவன்.
“உள்ள வாங்க சார். ப்ளீஸ்.”
“தேங்க் யூ” என்றபடியே உள்ளே வந்தவரை, “உக்காருங்க சார்” என்று சோஃபாவைக் காட்டி அமரச் சொன்னான்.
அவர் இன்னொரு தேங்க் யூவைத் தந்தபடியே, அமர்ந்தார்.
ராகவனின் மனைவி ஸ்வேதா, ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்துப் புன்னகையோடு சக்ரவர்த்தியை வரவேற்றாள். சக்ரவர்த்தி, நன்றிப் புன்னகையுடன் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். ராகவனைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்.
“ராகவன், நான் அப்பாவைப் பாக்கலாமா?”
ராகவனும் ஸ்வேதாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு ராகவன் பேசினான்.
“இறந்துட்டாரு.”
அதிர்ச்சியடைதலைத் தவிர வேறு வழியில்லை சக்ரவர்த்திக்கு. அதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முகம் மாறி வாயடைத்து அமர்ந்திருந்தார். ராகவனே தொடர்ந்தான்.
“ரெண்டு வருஷம் ஆயிருச்சு. இப்ப வந்து அப்பாவப் பாக்கணும்னு சொல்றீங்க. அப்பாவை உங்களுக்குத் தெரியுமா?”
அகமும் முகமும் வருத்தத்திலிருக்க, வாய் திறந்து பேச முடியாமல் இருந்தார், சக்ரவர்த்தி.
“சார், சொல்லுங்க. அப்பாவை உங்களுக்குத் தெரியுமா?”
ராகவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அடுத்ததாக ஒரு சொல் கேள்வியொன்றைச் சற்றே தயங்கிக் கேட்டார், சக்ரவர்த்தி.
அந்தக் கேள்வி அவரிடமிருந்து ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் வெளியில் வந்தது.
“ச… சந்திரா…?”
ராகவனின் முகம் சிவந்துக் குரல் சற்று உயர்ந்தது.
“சார்… யார் நீங்க? வந்ததும் அப்பாவக் கேட்டீங்க. இப்ப… அம்மாவக் கேக்கறீங்க. எனக்கு எதுவும் புரியல.”
சக்ரவர்த்தி, அந்த அறை முழுவதும் தன் விழிகளைச் சுழல விட்டு, சமையலறையின் வாசலில் நின்ற ஸ்வேதாவிற்குப் பின்புறம் ஒரு தேடல் பார்வையைச் செலுத்திவிட்டு ராகவனிடம் தன் பார்வையை நிறுத்தி மீண்டும் கேட்டார்.
“அம்மா…”
“ஏன் சார், நான் கேக்கறது உங்களுக்குப் புரியுதா இல்லயாஸ? கேக்கறதுக்குப் பதில் சொல்லாம நீங்க பாட்டுக்குப் பேசிட்டே இருக்கிங்க? முன்னப் பின்ன உங்களை நான் பாத்ததும் இல்ல. மொதோ நீங்க யாருன்னு சொல்லுங்க.”
“எம் பேரு சக்ரவர்த்தி. சொந்த ஊரு கோயமுத்தூர். உங்க அப்பாவை நான் பாத்ததில்ல. பாக்கணும்னு வந்தாஸ இப்ப அவரு இல்ல.
அவருக்கு என்னைத் தெரியுமான்னு எனக்குத் தெரியல. ஒரு வேளை தெரிஞ்சும் இருக்கலாம்…. உங்கம்மா சொல்லியிருந்தா.”
ராகவனும் ஸ்வேதாவும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நிறுத்திய இடத்திலிருந்து தொடர்ந்தார், சக்ரவர்த்தி.
“நானும் உங்க அம்மாவும் காலேஜ்ல க்ளாஸ் மேட்ஸ். நான், உங்க அம்மா, கிருஷ்ணன், வெங்கடாச்சலம், தனலட்சுமின்னு நாங்க ஒரு குரூப்பாவே இருப்போம். யாரு நெறய மார்க் வாங்கறதுன்னு எங்களுக்குள்ள போட்டி போட்டுக்குவோம்.
நானும் உங்க அம்மாவும்தான் மாறி மாறி ஜெயிப்போம். வேற யாரையும் ஜெயிக்க விடமாட்டோம். எங்க குரூப்புக்குள்ள நெறையச் சண்டைகள், சமாதானங்கள்.
அந்த வயசுல… அந்த நாட்கள்ல… அந்தச் சந்தோஷம்…” என்று நிறுத்திவிட்டுச் சற்றே மென்மையாகச் செருமி எச்சிலை விழுங்கிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“படிப்பு முடிஞ்சது. ஆளுக்கொரு பக்கமாப் பிரிஞ்சு போயிட்டோம். கொஞ்ச நாள் கிருஷ்ணன் தொடர்புல இருந்தான். மும்பைல வேலை கெடச்சுப் போனான். அதுக்கப்புறம் எந்தத் தொடர்புமில்ல.
போன வருஷம் வெங்கடாச்சலமும் போயிச் சேந்துட்டான்னு கேள்விப்பட்டேன். மத்தவங்களப் பத்தி எனக்கு எதுவும் தெரியல.
உங்க அம்மாவப் பத்தி விசாரிச்சதுல, உங்க குடும்பத்தப் பத்தியும் நீங்க இங்க இருக்கறதாவும் அரை குறையாத் தகவல் கெடச்சதே தவிர, முழுசாக் கெடைக்கல.
எப்படியும் வந்தே தீரணும்ங்கற மனநிலையோட சிரமப்பட்டு வந்திருக்கேன். ஆனா… லேட்டா வந்துட்டேன். முன்னாடியே வந்திருந்தாஸ அப்பாவப் பாத்திருக்கலாம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் ராகவனிடம் கேட்டார்.
“அம்மா….….”
ராகவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதை விடவும், “தயவு செஞ்சு சந்திராவும் போயிட்டான்னு மட்டும் சொல்லிடாதப்பா” என்று மனதுக்குள் தவிப்போடு சொல்லிக் கொண்டார்.
ராகவனின் முகம் இறுகியது. எழுந்தான்.
ஸ்வேதாவை நெருங்கி அவளிடம் மெதுவான குரலில் ஏதோ சொல்லிவிட்டுச் சக்ரவர்த்தியிடம் வந்து நின்று, ” சார்… ப்ளீஸ்… ம்…” என்றபடியே தனது இடக் கையை வாசலின் பக்கம் நீட்டினான்.
சக்ரவர்த்தி, வாசலைப் பார்த்துவிட்டு ராகவனைப் பார்த்தார்.
அவனோ, “எழுந்திருங்க… போலாம்” என்றான்.
அதைக் கேட்ட சக்ரவர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை. “போலாம்” என்றால் தன்னை வெளியில் போகச் சொல்கிறானா? அல்லது தானும் அவனுமாகச் சேர்ந்து வெளியில் போகலாம் என்பதான அர்த்தமா? என்று புரியாமல் எழுந்தார்.
திரும்பவும் முன்பு சொன்னது போலவே செய்கையில் “ம்….…” என்று ராகவன் வாசல் நோக்கிக் கை நீட்டவும், முகம் வெளிறிக் கவலையுடன் வெளியேறினார், சக்ரவர்த்தி.
அவரைத் தொடர்ந்து வந்த ராகவன், மாடியிலிருந்து கீழே இறங்கி வந்ததும் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடிப் பின்னால் அமருமாறு சக்ரவர்த்தியிடம் சொன்னான்.
சக்ரவர்த்தி எங்கோ செல்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டார். வாகனத்தின் பின்னால் அமர்ந்தார். வாகனத்தைக் கிளப்பினான் ராகவன்.
முல்லை நகரிலிருந்து வெளியில் வந்து பிரதான சாலை அடைந்து இரண்டு நிமிடப் பயணத்திற்குப் பிறகு சாலையின் இடது புறமிருந்த உணவகதத்தின் வாசலில் வாகனம் நின்றது. இருவரும் இறங்கினர்.
“வாங்க சார்” என்று சக்ரவர்த்தியிடம் சொல்லிவிட்டு உணவகத்திற்குள் நுழைந்தான், ராகவன்.
உணவகத்தின் இடது புறக் கடைசி டேபிளுக்குச் சென்றவன் அங்கிருந்த சேரில் அமர்ந்த பின் எதிரில் இருந்த சேரில் சக்ரவர்த்தியை அமரும்படியாகச் சொன்னான்.
“ம்… உக்காருங்க சார்.”
சக்ரவர்த்தி அந்தச் சூழலுக்குச் சற்றும் ஒட்டாத மனதோடு அவன் காட்டிய சேரில் அமர்ந்தார்.
“என்ன சாப்பிடறீங்க சார்?”
“இல்ல… எனக்கு எதுவும் வேணாம்.”
“சாப்பிடுங்க சார். இங்க எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும்.”
“நான் வரும் போதே சாப்டுட்டேன். வேணாம்.”
“ஓ.கே.”
அதற்குப் பிறகு சக்ரவர்த்தியிடம் எதுவும் பேசாமல் வெயிட்டரைத் தேடினான்.
சக்ரவர்த்தியால் அமைதியாக இருக்க முடியவில்லை.
“ராகவன்… அம்மாவப் பத்தி எதுவுமே சொல்லலியே…”
“இங்க பாருங்க சார்…. ஹோட்டல்ல சாப்பிடறதுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஆயிரத்தெட்டு காரணம் இருக்கும். எனக்கும் இப்ப ஒரு காரணம் இருக்கு.
எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. கடுங் கோபம் வந்தா… ஓட்டலுக்கு வந்து மூக்குப் புடிக்கச் சாப்பிடுவேன். என்னமோ… அப்படியே பழகிட்டேன்.”
புரிந்தது. சக்ரவர்த்திக்கு நன்றாகப் புரிந்தது. ராகவனுக்குத் தன் அம்மாவைப் பற்றிச் சொல்ல விருப்பமில்லை என்று புரிந்தது. தவிர, இதற்கு மேல் அவனிடம் பேசுவது மரியாதை இல்லை என்று உணர்ந்து கொண்டு அமைதியானார்.
ராகவன் வேண்டியதை ஆர்டர் செய்து சாப்பிட்டான். சாப்பிட்டதற்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சக்ரவர்த்தியிடம் போகலாம் என்று சொல்லிவிட்டு, மீண்டும் அவரை ஏற்றிக் கொண்டு இருசக்கர வாகனத்தைக் கிளப்பினான்.
திருச்சி பேருந்து நிலையம் வந்து வண்டியை நிறுத்தினான். சக்ரவர்த்தியை இறங்கச் சொன்னான். அவரும் இறங்கினார்.
“கோயமுத்தூருக்கு அடிக்கடி பஸ் இருக்கு சார். பாத்து நல்லபடியா ஊரு போயிச் சேருங்க” என்று சொல்லிவிட்டு சக்ரவர்த்தியின் பதிலை எதிர்பார்க்காமல் பட்டென்று வண்டியை விரட்டி மறைந்தான்.
சக்ரவர்த்திக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்படியொரு நிலையை அவர் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
மெதுவாகப் பேருந்து நிலையத்திற்குள் நடந்து சென்றார். கோயமுத்தூர் செல்லும் பேருந்துகள் நின்றிருந்தன.
பேருந்தில் ஏறாமல், சற்றுத் தள்ளி இருந்த தூணில் சாய்ந்து நின்றார்.
தனக்குள் கேள்விகள் கேட்டார். தனக்குள் பதில்கள் சொன்னார். தனக்குள் குழம்பினார். தனக்குள் தெளிந்தார்.
“நாம வந்தது தப்பா? தப்பாவே இருந்தாலும் அவன் இப்படி நடந்துக்கலாமா? கிட்டத்தட்ட இது நம்மள அவமானப்படுத்துனதாத் தான அர்த்தம்?
இத்தனை வருஷம் கழிச்சு, ஒரு வயசானவன் வீடு தேடி வந்திருக்கான்னாஸ அவன் எந்த மாதிரி மன நெலையில வந்திருப்பான்னு யோசிக்க வேணாம்? அந்த அளவுக்குக் கூடவா அவனுக்கு நல்லது கெட்டது தெரியாமப் போச்சு?”
இல்ல… அப்படியில்ல… அவனோட இடத்துல அவன் செஞ்சது சரிதான். திடீர்னு அம்மாவோட பேரச் சொல்லிக்கிட்டு ஒருத்தன் வந்தா… எந்த மகன் தான் ஒத்துக்குவான்? அவன் சரியாத் தான் நடந்திருக்கான். நமக்குத் தான் அறிவில்ல. அது தான் உண்மை.
அப்படியும் சொல்ல முடியாது. சந்திராவைப் பாக்கணும்னு நெனச்சது அப்படி ஒன்னும் தப்பில்ல. அதெப்படித் தப்பாகும்?
சக மனுஷியைப் பல வருஷம் கழிச்சுப் பாக்கணும்னு வரக்கூடாதா என்ன? வரலாம். அதுல ஒரு தப்பும் இல்ல.
எனக்கு நான் செஞ்சது சரி. அவனுக்கு அவன் செஞ்சது சரி. அவ்ளோ தான்.
இவ்வளவு ஆசப்பட்டு வந்து சந்திராவப் பாக்காமயே போறமேஸ சந்திராவோட இப்போதைய நெலம தான் என்ன? எதுவுமே தெரியாம இப்படித் திரும்பிப் போவம்னு நெனச்சுக்கூடப் பாக்கல.”
முகம் வாடி மனம் நொந்துத் தரையில் பார்வை குத்திட்டு நின்றபடியே மனதிற்குள், “சந்திரா…” என்று அழைத்த போது, தன்னை யாரோ நெருங்குவது போல உணர்ந்துத் திரும்பிப் பார்த்தார்.
அவரது பார்வை பிரகாசமானது. மழைத் துளிகள் விழத் தொடங்கிய வறண்ட நிலத்தைப் போல, அவரது முகம் மாறத் தொடங்கியது.
