அத்தியாயம் 20
சித்தர் எழுந்து சென்றதை பார்க்கவும் இருவரின் மனமும் கலக்கமடைந்தது. சில நேரங்களில் ஏதாவது தவறாக நடக்க போகிறது என்றால் எதுவும் சொல்லாமல் அமைதியாக எழுந்து சென்று விடுவார் சித்தர் என்று கேள்விப்பட்டதுண்டு!
இப்போது சித்தர் அம்பிகா கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் எழுந்து போக, அவர்கள் இருவரின் கண்களும் தானாக கலங்கியது.
சாமி எதுவும் சொல்லாம எழுந்து போனால், ஏதோ துக்கமான சம்பவம் அவங்க வீட்டில நடக்கும்னு கேள்விப்பட்டிருக்கேனே! என்று சரஸ்வதி கண்கலங்கி கேட்க “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா, சாமிக்கு அருள் வாக்கு சொல்லும் போது சகுன தடை ஏற்பட்ட மாதிரி இருந்தால் அமைதியா எழுந்து போய்விடுவாரு! கொஞ்ச நேரம் கழிச்சு வந்து சொல்லுவாங்க, அதனால நீங்க மனசு போட்டு குழப்பிக்காதீங்க. அப்படி உங்களுக்கு நிம்மதி இல்லாம இருந்துச்சுன்னா அந்த அம்பாளை வேண்டிட்டு போங்க எல்லாம் நல்லபடியா நடக்கும்!”என்று சித்தரின் சிஷ்யன் வந்து சொல்ல இருவரும் அங்கிருந்து வெளியேறினார்.
அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகு”என்னாச்சு சாமி எதுவும் சொல்லாம நீங்க எழுந்து வந்துட்டீங்க பாவம் அந்த அம்மா ரெண்டு பேரும் பயந்து போயிட்டாங்க!”என்று சொல்ல,
“எதுவும் சொல்லாமல் இருந்ததற்கே பயந்தாங்கன்னா நடக்க போறத நான் சொல்லி இருந்தால் பயத்திலேயே நிம்மதி இழந்துருவாங்க.அதனால நடக்கும் போது அவங்க எல்லாத்தையும் தெரிஞ்சுக்கட்டும்! அந்தக் கடவுள் தான் அவங்க குடும்பத்துக்கு துணையா இருக்கணும்!” என்று சொல்லிவிட்டு அவர் மீண்டும் தன் தியானத்தில் ஈடுபட்டார்.
குலதெய்வம் கோயிலை சுற்றி காட்டிக் கொண்டே தனது சின்ன வயசு ஞாபகங்களை பிரதிக்ஷாவிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள் ரேணு.
பிரதிக்ஷாவும் ரேணு சொல்வதையெல்லாம் ரசித்து கேட்டுக் கொண்டே இருவரும் கோயில் வளாகத்தை சுற்றி வந்தனர்.
“சரி சொல்லு, நான் வந்து ரெண்டு நாள் ஆயிட்டு,நீ எங்க என்னைய பார்த்து இருக்கேன்னு கேட்டேன் அதுக்கு நீ பதிலே சொல்லலையே?” என்று பிரதிக்ஷா ரேணுவை பார்த்து கேட்க,
“அண்ணி சொல்லுவேன் கவலைப்படாதீங்க! அதுக்குன்னு நேரம் வரட்டும்! அது வர பொறுமையா இருங்க ” என்று கண்ணடித்தாள் ரேணு.
“என்னமோ போ, என்ன சுத்தி என்னென்னவோ நடக்குது, ஒன்னும் புரியல! சரி நான் கேட்ட கேள்விக்கு தான் பதில் சொல்ல மாட்ட, மனிஷாவை எத்தனை வருஷமா உங்க அண்ணன் காதலிக்கிறாரு! அவங்க ரெண்டு பேருக்குள்ள லவ் ரிலேஷன்ஷிப் எந்த அளவுக்கு இருந்துச்சுனுமாவது சொல்லு!” என்று தன் சந்தேகத்தை கேட்டாள் பிரதிக்ஷா.
“அதெல்லாம் தெரியாது அண்ணி. ஆனால ரஞ்சித் அண்ணா,விதுரன் அண்ணா,மணிஷா மூணு பேரும் நண்பர்கள். முன்னாடி மனிஷா எங்க வீட்டுக்கு வரும்போது அண்ணாக்களோட ஃப்ரெண்டுனு தான் அறிமுகம் ஆனாங்க. அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, மனிஷாவும் நானும் காதலிக்கிறோம்னு அண்ணா சொன்னாரு. அம்மா எப்பவுமே அண்ணா எது சொன்னாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க, அண்ணா சரஸ்வதி அம்மாவுக்கும் மட்டும் தான் கட்டுப்படுவாரு. ரஞ்சித்துக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சரஸ்வதி அம்மா சொன்னதுக்கு அப்புறம் அண்ணன் சரின்னு சொல்லியிருந்தாரு, அதுக்கப்புறம் தான் என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கு தெரியுமே!
என்னமோ தெரியல அந்த மனிஷாவை பார்த்தாலே எனக்கும் அம்மாவுக்கும் சுத்தமா புடிக்கிறது இல்ல, அவ கேரக்டர் கூட சரியா இருக்கும்னு எங்களுக்கு தோணல, கண்டிப்பா அவ எங்க அண்ணனுக்கு மனைவியா வரக்கூடாதுன்னு நானும் எங்க அம்மாவும் போகாத கோயில் இல்ல, கடைசில நீங்க எனக்கு அண்ணியா வந்துட்டீங்க இப்பதான் நீ எனக்கு சந்தோசமா இருக்கு!” என்று தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள் ரேணு.
“நீ வேற ரேணு, உங்க அண்ண என்கிட்ட இன்னைக்கு மியூச்சுவலா டைவர்ஸ் பண்றதுக்கு டாக்குமெண்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன்.அதுல சைன் பண்ண வக்கீல் ஆபீஸ்சுக்கு போகணும்னு காலையிலேயே சொல்லிட்டாரு!” என்று கூறினாள் பிரதிக்ஷா.
“அண்ணி என்ன சொல்றீங்க அதுக்குள்ளயா?”என்று கேட்க “நீ வேற இதுவே லேட்டு தான்.உங்க அண்ணன் நேத்தே கூட்டிட்டு போவாருன்னு நெனச்சேன், ஆனால் பரவாயில்ல ஒரு நாள் கழிச்சு தான் கூட்டிட்டு போறாரு!” என்று சொல்லி சிரித்தாள் பிரதிக்ஷா.
“அண்ணி உங்களுக்கு வருத்தமா இல்லையா? இப்போ என்னென்ன பண்ணப் போறீங்க? ” என்று ரேணு கேட்க “எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா!” என்று பிரதிக்ஷா கண்ணடித்தாள்.
அம்பிகாவும் சரஸ்வதியும் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்தை நோக்கி வந்தனர். அவர்களின் முகத்தை பார்க்க ஏதோ தவறாக நடந்து இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டனர் இருவரும்.
“என்னாச்சும்மா சித்தர் சாமிய பார்க்க போறோம்னு சொன்னீங்க! பாத்துட்டீங்களா? என்ன சொன்னாரு உங்க முகமே சரியில்லையே!” என்று ரேணு கேட்டாள்.
அங்கு நடந்ததை கூறினால் இவர்களும் கவலைப்படுவார்கள் என்று நினைத்துக் கொண்டு, “அதெல்லாம் ஒன்னும் இல்ல, நல்லபடியா தான் சொன்னாரு. ரொம்ப நேரம் டிராவல் பண்ணினது காலையில இருந்து சாப்பிடாம இருக்கிறதுனால ஒரு மாதிரியா இருக்கு சாப்பிட்டா எல்லாம் சரியா போயிரும்!” என்று கூறினார் சரஸ்வதி.
“சரி எல்லாரையும் கார்ல ஏற சொல்லு வீட்டுக்கு கிளம்புவோம்! போற வழியில ஒரு ஹோட்டல்ல பார்த்து நிப்பாட்டி சாப்பிட்டு போவோம்!” என்று சரஸ்வதி சொல்ல அனைவரும் காரில் ஏறி பயணத்தை மேற்கொண்டனர்.
அவர்கள் செல்லும் வழியில் இருந்த ஹோட்டல் ஒன்றில் காரை நிறுத்த,அனைவரும் இறங்கி அந்த ஹோட்டலில் சாப்பிடுவதற்காக அமர்ந்தனர். பிரதிக்ஷா அம்பிகாவிடம் ” ரெஸ்ட் ரூம் போயிட்டு ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்!” என்று சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூம் இருந்த இடத்திற்கு வந்தாள் பிரதிக்ஷா. உள்ளே வந்தவள் ரெஸ்ட்ரூமை உபயோகித்து விட்டு வெளியே வர, “ரதி எப்படி இருக்க?” என்ற குரல் கேட்க , யார் என்று திரும்பிப் பார்க்க அங்கு பிரதிக்ஷாவின் கல்லூரி தோழியான கலைவாணி நின்று கொண்டிருந்தாள்.
பிரதிக்ஷாவை அவளின் கல்லூரி தோழிகள் அனைவரும் ரதி என்றே அழைப்பார்கள். அதனால் கலைவாணி ரதி என்று அழைக்க, அந்தப் பெயரை கேட்டவுடன் பிரதிக்ஷாவும் திரும்பி பார்த்திருந்தாள்.
கலைவாணியை பார்த்த சந்தோஷத்தில் “நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க நீ எங்க இங்கே?” என்று பிரதிக்ஷா கேட்க, “அதை நான் கேட்கனும்டி, இது என்னோட சொந்த ஊரு அத மறந்துட்டியா!” என்று கலைவாணி கேட்க, ” சாரி டி மறந்துட்டேன்!” என்று கூறினாள் பிரதிக்ஷா.
“கோயில்ல திருவிழா நடக்க போகுது அதுக்கு பர்சேஸ் பண்றதுக்காக வந்தோம் வந்த இடத்துல சாப்டுட்டு போகலாம்னு முடிவு பண்ணி ஹோட்டலுக்குள்ள நுழைஞ்சோம், அப்போ உன்னைய பார்க்கவும், “என் பிரண்டு மாதிரி இருக்கு நான் போயி பார்த்துட்டு வாரேன்னு வீட்டு ஆளுங்க கிட்ட சொல்லிட்டு வந்தேன்!” என்று கூறினாள் கலைவாணி
“சரி சொல்லு நீ எப்படி இங்க?” என்று கலைவாணி கேட்க, ” நானும் கோயிலுக்கு தாண்டி வந்தேன். இந்த ஊர்ல இருக்கிற மீனாட்சி அம்மன் கோயில் தான் என் வீட்டுக்காரரோட குலதெய்வம்! அதான் சாமி கும்பிட்டுட்டு போகலாம்னு வந்தோம்!” என்று கூறினாள் பிரதிக்ஷா.
“எப்ப கல்யாணம் முடிஞ்சுச்சு, ஒரு வார்த்தை கூட சொல்லல? ” என்று கலைவாணி கேட்க “நேத்துதான் கல்யாணம் முடிஞ்சுச்சு” என்று கூறினாள் பிரதிக்ஷா.
“பார்த்தியா, உன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை கூட வைக்கல, என்னோட ஞாபகம் கூட உனக்கு இல்ல!” என்று செல்லமாய் கலைவாணி கடிந்து கொள்ள,
“ஞாபகம் எல்லாம் இருந்துச்சு, ஆனால் கல்யாணம் ஏற்பாட கொஞ்சம் அவசர அவசரமா வீட்டில பண்ணிட்டாங்க, அதனால யாரையும் கூப்பிட முடியல. ரிசப்ஷனுக்கு எல்லாரையும் கூப்பிடலாம்னு சொல்லிட்டாங்க! அதான் பத்திரிக்கை வைக்கல தப்பா நினைச்சுக்காதடி!” என்று சொல்லி சமாளித்தாள் பிரதிக்ஷா.
“உன் சூழ்நிலைய சொன்னதால தான் உன்னைய மன்னிச்சு விடுறேன், உன் ராஜகுமாரனையாவது கண்ணுல காட்டுவியா? இல்ல அதுக்கும் ஏதாவது காரணம் சொல்லுவியா!” என்று கேட்டாள் கலைவாணி.
“அதுக்கு என்னடி, இங்கதான் எங்கேயோ நின்னாரு!” என்று சுற்றி முற்றி பார்த்துவிட்டு ரஞ்சித்தோடு பேசிக் கொண்டிருந்த விதுரனை கை காட்ட, விதுரனை பார்த்து அதிர்ந்து போனாள் கலைவாணி.
“ஏய்! இவரு அவருல” என்று கலைவாணி கேட்க சிரித்தாள் பிரதிக்ஷா.
“நீ கனவுல பார்த்தேன்னு சொன்னவரு நிஜத்துல எப்படி? என்னால நம்ப முடியல, அவர பாக்கவும் நம்பாமலும் இருக்க முடியல! நீ எங்க கிட்ட சொல்லும் போதெல்லாம் நீ உளறுற உனக்கு பைத்தியம் புடிச்சிருக்குன்னு எத்தனையோ தடவை கிண்டல் பண்ணி இருக்கோம்! ஆனால் கண் முன்னாடி இவரை பார்க்கவும் எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல!” என்று கூறினாள் கலைவாணி.
“அண்ணி உங்க அம்மா கூப்பிடுறாங்க!” என்று ரேணு சொல்ல, ” ஒரு நிமிஷம் நில்லுடி அத்தை கிட்ட சொல்லிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அங்கு டேபிளில் அமர்ந்திருந்த அம்பிகாவிடம் சென்றாள் பிரதிக்ஷா.
பிரதிக்ஷா செல்லவும், ரஞ்சித்திடம் பேசிக் கொண்டிருந்த விதுரன் கை கழுவுவதற்காக வாஷ்பேஷனை நோக்கி வர அங்கு நின்று கொண்டிருந்த கலைவாணி,
“ஹாய் ப்ரோ, உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோசம், ரதி உங்கள பத்தி பேசி இருபத்தி நாலு மணி நேரமும் எங்க உயிரை எடுப்பா, அவளோட எல்லா நோட்புக்குள்ளயும் உங்களுடைய முகத்தை தான் வரைஞ்சு வரைஞ்சு வச்சிருப்பா, இவரை எங்கடி பார்த்தேன்னு கேட்டா கற்பனையில கனவுலன்னு சொல்லி கதை சொல்லுவா! நாங்க கூட நக்கல் அடிச்சு சிரிச்சு இருக்கோம், ஆனால் இன்னைக்கு உங்கள நேர்ல பாக்கவும் என் கண்ணையே என்னால நம்ப முடியல!” என்று படபடவென்று உணர்ச்சிவசப்பட்டு பேசி தள்ளிய கலைவாணியை ஒரு மாதிரியாக பார்த்தான் விதுரன்.
இந்தப் பொண்ணு நம்ம கிட்ட தான் பேசுதா, ரதினு யார் பெயரையோ சொல்லுது, என்று பின்னால் திரும்பி யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க யாரும் விதுரனின் கண்களுக்கு தென்படவில்லை.
அதுவா வந்துச்சு அதுவா ஏதோ, கனவு கற்பனை, ரதின்னு சொல்லி பேசிகிட்டு இருக்கு, லூசா இருக்குமோ என்று விதுரன் மனதில் தோன்ற இது எதுக்கு தேவையில்லாத பிரச்சனை என்று நினைத்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகன்றான் விதுரன்.
கலைவாணி விதுரனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதை பார்க்கவும் பிரதிக்ஷா அவசர அவசரமாக கலைவாணியின் அருகில் வந்து,” என்னடி அவர்கிட்ட சொன்ன? ” என்று கேட்க,
“நீ காலேஜ்ல பண்ண அலப்பறை எல்லாம் சொன்னேன்!ஆனால் அவரு எந்த பதிலும் சொல்லாம எனக்கு என்னனு போயிட்டாரு!” கலைவாணி வருத்தமாக கூறினாள்.
“அடியே அவருக்கு அது எதுவுமே தெரியாது, நீ எதையும் உளறி வைக்கவில்லையே!” என்று பிரதிக்ஷா சொல்ல அதிர்ந்து போனாள் கலைவாணி.
