பாகம்-21
அரவிந்த் இப்பொழுது மனம் விட்டு பேசுகிறான்..” சொல்ல முடியாதுடா நவீன். நான் உன்னிடம் சும்மா சொல்லலாம்.. சந்தேகப்பட மாட்டேன்.. அவளோடு நேர்மையாய் வாழ்வேன் என்று ..ஆனால் என் புத்தி எப்படி வேண்டுமானாலும் போகும்.. கண்டிப்பாய் என் மனைவியை சந்தேகப் படுவேன். என் மகனையும் சந்தேகப் படுவேன்.. அதனால் ஆதி அண்ணாவை நான் எந்த காலத்திலும் பிரியக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளடா..”
இப்படி சொன்னது மே வேகமாக எழுந்து அவன் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டுகிறான்..
“ஆ வலிக்குதுடா நவீன் அறிவு கெட்டவனே.. எதற்கடா அடிக்கிற .. ”
“ ஆங் போகாத ஊருக்கு வழியை தேடுகிறாயா..அதற்காகத்தான் அடித்தேன்.. அவர்கள் ஏதோ ஒரு ஊர்ல இருக்காங்க.. பெண் குழந்தை வைத்திருக்கிறார்கள். இதோ இப்பொழுது பத்திரம் பதிவு செய்ய வரும் போது அந்த பெண் மூன்று மாதமாக இருப்பதாக சொன்னார் என்று சொன்னாய்.. ”
அடுத்த குழந்தை பிறக்கும் வரையுமே உன்னிடம் பேசிக் கொண்டிருப்பார்கள் என்று கட்டாயம் கிடையாது.. வேண்டுமென்றால் அடுத்த குழந்தைக்கும் ஒரு பிளாட் வாங்குவதற்கு உன்னை தொடர்பு கொள்ளலாம்..உன் மனைவியை நீசந்தேகப்படாமல்இருக்க வேண்டும் என்பதற்காக அந்த ஆதியோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்க சொல்லி என்னை சொல்கிறாயே ..உன்னை அடிக்காமல் வேறு என்ன செய்வது..லேசாக குட்டினேன் என்று சந்தோசப் பட்டுக் கொள் ..எனக்கு வரும் கோவத்திற்கு பெல்ட் எடுத்து வீசி விடுவேன் . “
“சரிடா நவீன் திரும்பவும் என் மனைவியை சந்தேகப்பட்டு அடுத்ததாக வேறு ஒரு டிடெக்டிவ் ஏஜென்சிக்கு போக வேண்டும்.. போய் என்னுடைய காசை எல்லாம் கரைத்து உளவு பார்க்க சொல்லவா ..திரும்பவும் அவர்களும் இதே போல தான் அவங்க வீட்டுல போய் விசாரிச்சு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்வாங்க. எனக்கு இப்ப நல்லா புரிஞ்சு போச்சுடா ..உனக்கு பொறாமை ஆதி அண்ணா மேல இல்ல ..என் மகன் மீதும் என் மனைவி மீதும் தான் .. ”
” அரவிந்த் நீ இப்படிதான்டா பேசுவ.. ஏன்னா உனக்கு உயிர் நண்பனாய் இருக்கேன்ல..அதுக்காக நீ இதுவும் பேசுவ , இன்னமும் பேசுவ..ஆனா திரும்பவும் உன் மனைவியை சந்தேகப்பட மாட்டேன்னு எனக்கு சத்தியம் செய் .. “என்றதும் அரவிந்த் தயங்குகிறான்..
” இந்த எழவுக்காக தான் நான் உன்னிடம் படித்து படித்து சொல்கிறேன் ..எனக்கு ஒன்னும் உன்னிடம் இப்படி எல்லாம் பேச்சு வாங்க வேண்டும் என்று தலையெழுத்தே கிடையாது.. போதும் மிச்சத்தை நாளைக்கு பேசிக் கொள்வோம் என்று கோபித்துக் கொள்கிறான் நவீன் ..
“சரிடா நான் இதற்கு மேல் எதுவும் பேச மாட்டேன் ..என்ன செய்யணும்னு மட்டும் சொல்லு கேட்டுக்கறேன்..”
“ நாம ஏற்கனவே போட்ட திட்டம் தான். இன்னும் ஒரே ஒரு துருப்பு சீட்டு தான் இருக்கிறது .. ”
அது என்ன என்று அரவிந்துக்கு மறந்து போய் விட்டது.
“என்னடா அது.. ”
“உன் மனைவியோட பழைய உடைந்து போன செல்கள் . அதை நீ கொஞ்சம் ரிப்பேர் பார்த்து நோண்டிப் பாரு. எந்த பிரச்சனையும் இல்லை என்றதும் எல்லா செல்லையும் ஒரு மூட்டையாய் கட்டி ஏதாவது பாழம் கிணற்றிலோ, பழைய குளத்திலோ கொண்டு போய் தலையை சுற்றி வீசி விட்டு வா. அதன் பிறகாவது என் தங்கையையும் என் தங்கை மகனையும் சந்தேகப்பட மாட்டேன் என்று எனக்கு வாக்கு கொடு.. ”
இதை சொன்னதுமே ஓடிவந்து நவீனை இறுகக் கட்டி கொள்கிறான் அரவிந்த்.
” நான் உன்னை ஏதேதோ தவறாய் சொல்கிறேன் ..எப்படி எப்படியோ திட்டுகிறேன் .ஆனாலும் நீ எனக்கு நல்லதுதான்டா செய்கிறாய் .சாரிடா நண்பா நான் உன்னை திட்டியதற்கு சாரி..
” உனக்கு ஆதி அண்ணனையும் பிரியக்கூடாது. உன் மனைவி குழந்தையையும் சந்தேகப்படக்கூடாது. அதற்கு இது ஒன்று தான்டா வழி..வேற எதுவுமே இல்ல. உன்னுடைய மனசை சரி செய்வதற்காகத்தான் நான் இந்த கசப்பு மருந்தையே குடிக்க சொல்கிறேன் உனக்கு புரிகிறதா .. “என்றதும் திரும்பவும் சாரிடா என்று மன்னிப்பு கேட்டு விட்டு வருத்தத்துடன் விடைபெறுகிறான் அரவிந்த்..
தெளிவாக கூறி விட்டு தான் கிளம்புகிறான்.. “ நீ சொன்னதற்காக உடனே செல்லை எடுத்து நான் ஆராய்ச்சி செய்யப் போவதில்லை.. எனக்கென்று ஒரு பைத்தியம் பிடித்த மனநிலை வரும்.. அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன்.. நான் செய்வது தவறு என்று எனக்கு தெரிகிறது தான். ஆனால் ஏனோ என் உள்ளுணர்வு ஏதோ ஒன்று சரியில்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது.. அது என்ன என்று அதனிடம் நிரூபித்து விட்டால் அதன் பிறகு என் வாழ்க்கை நிம்மதியாகி விடும் .. ”
அவன் தோளில் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்துகிறான் நவீன் .. “நானுமே உன்னை சந்தேகப்பட்டு துப்பு துலக்க சொல்ல வில்லையடா .உன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் இந்த வியாதியைப் போக்குவதற்காக தான் கூறுகிறேன். இவ்வளவு தூரம் நீ தெளிவாகப் பேசுவதைக் கேட்கவே மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது .. ”
எப்பொழுது உனக்கு பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாயோ ..அப்பொழுது சரி செய்து கொள் .. அதற்குப் பிறகு உன் மனதில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இருக்கக்கூடாது .சந்தேக புத்தியும் இருக்கக் கூடாது ஓகே தானே.. ”
அரவிந்தும் ஓகே என ஒத்துக் கொள்கிறான்.. அப்படியே ஆதி அண்ணாவிடமும் அவர்கள் குடும்பத்திடமும் கலகலப்பாய் பேசிய படியே நாட்கள் செல்வதுமாய் வாழ்க்கை நன்றாகத் தான் போகிறது .அதே ஈடுபாட்டை தன் குடும்பத்திலும் அரவிந்த் காட்டுகிறான் ..
இப்பொழுதெல்லாம் அப்பாவும் மகனும் அப்படி இணைந்து விளையாடுகிறார்கள். இதற்கு தானே மித்ராவும் ஆசைப்பட்டாள்.. இருவருமே ஒட்டாமல் வாழ்க்கையே நிம்மதி இல்லாமல் போகிறது என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்தவளது சூழலே தலைகீழாக மாறுகிறது ..
அவள் கூப்பிட்டாலும், ” போம்மா நான் இன்னும் கொஞ்ச நேரம் அப்பாவோட இருந்துட்டு வருகிறேன்..” என்று அனுப்பி விடும் அளவிற்கு மாறுகிறது..
கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆதி இந்த செய்தியை கூறுகிறார்.. ” அரவிந்த் தம்பி எனக்கு ஆபீஸில் ஆறு மாதம் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறதடா..
தம்பி என்ற உரிமையில் வாடா போடா தான் ..
ஏனோ அரவிந்துக்கு இந்த செய்தியைக் கட்டணம் கொஞ்சம் பதட்டமாகியது”அப்படியா அண்ணா நீங்கள் என்ன சொன்னீர்கள் .சரியான ஒத்துக்கொண்டு விட்டீர்களா.
எனக்கு மட்டும் ஆசையா என்ன.. என் பேச்சை எங்கே கேட்டார்கள். என் ஆஃபீஸில் எனக்கு இடப்பட்ட கட்டளை என்று கூட சொல்லலாம் ..வேறு வழியே இல்லைடா, போய் தான் ஆகணும்.. ஹூம் எல்லாம் தலை எழுத்து .என்று நொந்து கொள்கிறான் ஆதித்யா.
“அண்ணி அங்கேயும் போய் நாம் இதே போல பேசிக் கொள்ளலாம் தானே.. ”
” பேசலாம் தான் என்று நினைக்கிறேன்..பார்ப்போம் இந்த அளவுக்கு பேச முடியுமா என்னவென்று வேறு தெரியவில்லை.. ஆதி மனகசப்புடன் தொடர்ந்து பேசவும் அவனை சமாதானம் செயகிறான் அரவிந்த்..
“பரவாயில்லை அண்ணா, நீங்கள் உங்களுடைய வேலைகளை பாருங்கள்..முடிந்த போது நாம் தொடர்பில் இருந்து கொள்ளலாம்.. ”
சொல்லி விட்டானே தவிர அந்த மாதக் கடைசியின் ஞாயிற்றுக்கிழமை ஆதியின் போனை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறான் ..ஆதி அவ்வளவு தூரம் சொன்ன பிறகு தானாக போன் செய்யவும் யோசனையாக இருக்கிறது..
அவர் விடுமுறை என்று எங்காவது ஊர் சுற்ற போய் இருப்பார். தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று எண்ணிக் கொள்கிறான்..
அதற்கேற்றார் போலவே பத்மாவுக்கும்குளிர் பிரதேசம் புது வாழ்க்கை சூழல் என்று பல விதங்களிலும் உடம்பு ஒத்து வரவில்லை.. கர்ப்பிணியாய் இருப்பதால் இங்கே உள்ள மாத்திரைகளும் அவளுக்கு அங்கு கிடைக்கவில்லை. அதனால் வாழ்க்கை கொஞ்சம் போராட்டமாக தான் செல்கிறது.
ஆதி அங்கு சென்ற ஆறு மாத காலத்தில் ஒரே ஒரு முறை மட்டும் போன் செய்து புலம்பித் தள்ளுகிறான்..” இங்கே ஒரே கஷ்டமா தான் இருக்கு அரவிந்த். என்ன செய்றதுன்னு தெரியல .. கர்ப்பிணிப் பெண்ணை அவ அம்மா வீட்டுல விட்டுட்டு வர முடியல.. இவளுக்கு பிள்ளையை படிக்க வைக்கிற வேலை இருக்கு. இவளிடம் அப்படியும் சொன்னேன்.. கலெக்டருக்கா படிக்க வைக்கிற எல்கேஜி யுகேஜி தானே …பிள்ளை பிறக்கும் வரை அம்மா வீட்டில் இருந்து கொள்ளேன் என்று .. “
“ என்னைப் பிரிந்து இருக்க மாட்டாளாம் .. ஒத்துக் கொள்ளாமல் பிடிவாதமாய் இங்கு வந்து அவளும் கஷ்டப் படுகிறாள் .என்னையும் கஷ்டப் படுத்துகிறாள்.. இதில் அங்கு இருக்கும் வரை ஆறு மாத காலம் என்று சொன்னார்கள் ..இப்பொழுது இன்னும் ஒரு ஆறு மாத காலமாகும் என்கிறார்கள்.. எரிச்சலாக வருகிறது ..பூங்குழலியின் ஆறாவது பிறந்த நாளின் போது தான் நான் நம்ம ஊருக்கே வர முடியும் போல.. ”
இதில் அவள் பிறப்புச் சான்றிதலை வேற வாங்காமல் வைத்திருக்கிறேன்.. பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்திருக்க வேண்டியது அங்கே பிரசவம் பார்த்த நர்சி ஏதேதோ கோளாறு செய்து இன்னுமும் நம்ம வாங்க முடியாமல் போய்விட்டது ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம் என்றால் இங்கே இருக்கும் நெட்வொர்க் பிரச்சனையில் எதுவுமே செய்ய முடியவில்லைஇங்கே எல்லாவற்றுக்குமே எல்லா சான்றிதழ்களும் தேவைப் படுகிறது. நான் வந்து தான் வாங்க வேண்டும் போல ..அவன் புலம்பியதில் இந்த வார்த்தையை அரவிந்த் கருத்தில் ஏற்றிக் கொள்ளவில்லை ..
அப்படியும் , “நீங்க சிரமப்படாதீங்க அண்ணா .எப்பொழுது தேவை என்று சொல்லுங்க.. பாப்பா பிறந்த ஹாஸ்பிடலில் போய் வாங்கி வருகிறேன். ” என்கிறான் …
“ஓகே அரவிந்த் நீ போய் சிரமப்பட்டு கொண்டு இருக்காதே ..ஆன்லைனில் மூலமாக இங்க இருந்து செய்ய முடியவில்லை ..கால தாமதத்தினால் OTP தாமதமாய் கிடைக்கிறது ..அது செட் ஆக மாட்டேங்குது ..நேரடியாக என்றாலும் எங்களுடைய ஆதார் அட்டை ரேஷன் கார்டு எல்லாமே வேண்டும்..நான் ஊருக்கு வந்து பார்த்துக் கொள்கிறேன் விடு.. அப்புறம் முடிந்த வரை நானும் உனக்கு கடைசி சண்டே போன் செய்கிறேன் பைடா ..சொல்லி விட்டு போனை வைக்கிறார். இவ்வளவும் சொன்ன பிறகு அரவிந்த் ஏன் போன் செய்கிறான்.. இப்படியே ஆறு மாத காலம் ஓடி விடுகிறது .ஆறு மாத காலத்தையும் பல்லை கடித்துக் கொண்டுதான் ஓட்டுகிறான். ஒரு ஞாயிற்றுக் கிழமைக்கு அத்தனை சக்தியா என்று ஆச்சரியப் படுகிறான்.
அந்த ஒரு ஞாயிற்றுக் ககிழமை ஒரு மணி நேரம் பேசுவதில் என்ன வந்திருக்கப் போகிறது . ஆனால் அதை எதிர்பார்த்து மனம் காத்துக் கொண்டிருந்த கிடைக்கவில்லை என்றதும் விரக்தி ஆகிறது..
விரக்தி கோபத்தை உண்டாக்குகிறது
தொடரும்..
