அத்தியாயம் 21

பிரதிக்ஷா விதுரனுக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லவும் அதிர்ந்து போனாள் கலைவாணி.

“என்னடி சொல்ற?” என்று கலைவாணி கேட்க, நடந்த அனைத்தையும் பிரதிக்ஷா சொல்ல அப்படியே அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று திரும்பினாள் கலைவாணி.

“இவ்வளவு நடந்து இருக்கா? நீ சொல்றத நம்பவும் முடியல, நம்பாமையும் இருக்க முடியல! சரி கல்யாணம்தான் நடந்திருச்சுல அதுக்கப்புறமாவது அவர்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம்ல!” என்று கேட்டாள் கலைவாணி.

“என் கனவுல வந்தாருன்னு   சொல்லி அவரோட முகத்தை வரைஞ்சு வரைஞ்சு  நான் வச்சதை எல்லாம் பார்த்த நீயே இதை எல்லாம் நம்ப முடியலையேன்னு சொல்ற, இப்ப அவர்கிட்ட போயி இதையெல்லாம் சொன்னால் எப்படி நம்புவாரு! என்னைய பைத்தியமுன்னு நினைப்பாரு ” என்று சலித்துக் கொண்டாள் பிரதிக்ஷா.

“அதுக்காக சொல்லாம இருப்பியா! நீ சொல்லாம இருந்தா அவரோட மனசுல நீ பொய் சொல்லி அவர ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டனு  நினைப்பு மட்டும்தான் இருக்கும், அதனால அவர் உன் கூட சேர்ந்து வாழ்றது ரொம்ப கஷ்டம்! அதனால அவர்கிட்ட உண்மைய சொல்லு” என்று கலைவாணி கூறினாள்.

“கண்டிப்பா சொல்லுவேன்! ஆனால் இப்ப இல்ல, என் காதலை அவருக்கு புரிய வச்சு அவரும் என்ன அவரோட மனைவியா ஏத்துக்கிட்டதுக்கு அப்புறம்  எல்லா உண்மையும் சொல்லுவேன்!”என்று கூறினாள்  பிரதிக்ஷா.

“எனக்கு என்னமோ நீ சொல்றது சரியா படல, ஆனால் நீ என்ன யோசிச்சுகிட்டு  சொல்ல கூடாதுன்னு நினைக்கிறேன்னு எனக்கு தெரியல, நீ எதை யோசிச்சாலும் அதுல ஏதாவது காரணம் இருக்கும், உன் இஷ்டப்படி செய்! உன் வீட்டுக்காரர் உன்னைய ஏத்துக்கிட்டதுக்கு அப்புறம் என்னைய நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு எங்களுக்கு ஒரு பார்ட்டி மட்டும் வச்சிரு!” என்று சொல்லி சிரித்தாள் கலைவாணி.

“கண்டிப்பா உங்களுக்கு இல்லாததா, சிறப்பு அரேஞ்ச் பண்ணிடுவோம்!” என்று  சொல்லிக் கொண்டிருக்க கலைவாணியின் குடும்பம்  கலைவாணியின் அருகே வந்தது.

“சரி போவோமா நேரம் ஆச்சு!”என்று அவளின் கணவர் சொல்ல, ” இது என் பிரண்டு ரதி என்று பக்கத்தில் இருந்த பிரதிக்ஷாவை பார்த்து கூறினாள் கலைவாணி.

” நல்லா இருக்கியாமா? ” என்று கேட்டுவிட்டு, “பக்கத்துல தான் வீடு இருக்கு வந்துட்டு போங்க!” என்று கலைவாணியின் கணவர் கூறினார். 

“நாங்களும்   ஊருக்கு  கிளம்பிட்டோம். இன்னொரு நாள் கண்டிப்பா வாரேன்  அண்ணா” என்று சொல்ல, பிரதிக்ஷாவிடம் சொல்லிவிட்டு கலைவாணியின் குடும்பம் கிளம்பியது.

பிரதிக்ஷாவும்   உணவு அருந்தி கொண்டிருந்தவர்களுடன் தானும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அனைவரும் காரில் ஏறி  வீட்டிற்கு சென்றனர்.

விதுரன் பிரதிக்ஷாவின் மேல் கோபமாக இருந்ததால் வரும் வழியில் எதுவும் பேசவில்லை.அம்பிகாவும் சரஸ்வதியும் கோயிலில் வைத்து நடந்ததை நினைத்துக் கொண்டு அமைதியாக வந்தனர்.

எல்லார் மனநிலமையும் கவலையில் இருக்க யாரும் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக அவரவர் அறைக்கு  சென்றனர்.

கோவிலிற்கு  சென்று விட்டு வீட்டிற்கு வந்தவன் தன்னுடைய அறைக்குச் சென்று தான் கட்டியிருந்த வேஷ்டியை மாற்றிவிட்டு எப்போதும் போல ட்ராக் சூட்டும்,டீசட்டும் அணிந்து கொண்டான்.

“சரி கிளம்பு வக்கீல் ஆபீஸ் போயிட்டு வருவோம்!” என்று   விதுரன்  சொல்ல பிரதிக்ஷாவிற்கு வருத்தமாக இருந்தது.

“என்ன யோசிக்கிற ஏதாவது பிரச்சனை பண்ணலாம்னு நினைக்காத!” என்று  விதுரன் சொல்ல, “அப்படி எல்லாம் நான் ஒன்னும் நினைக்கல, நான் சொன்ன மாதிரி நீங்க அக்ரீமெண்ட்ல சைன் பண்ணுனால் நீங்க கேட்ட மாதிரி நானும் மியூச்சுவலா டைவர்ஸ் வாங்குவதற்கு சைன் போடுவேன்!” என்று கூறினாள் பிரதிக்ஷா.

“அதான்  நேத்தே சொல்லிட்டேனே, நீ சொன்ன  எல்லாத்துக்கும்   எனக்கு சம்மதம்.  நான் சொன்ன மாதிரி மியூச்சுவலா டைவர்ஸ் வேணுன்னு சைன் பண்ணு!” என்று கூறினான்  விதுரன்.

“நில்லுங்க நான்  டிரஸ்  மாத்திட்டு  வந்துறேன்!”  என  சொல்லி விட்டு  குளியல் அறை சென்று குளித்துவிட்டு  சல்வார் ஒன்றை அணிந்து கொண்டு வந்தாள்  பிரதிக்ஷா.

இருவரும் காரில் ஏறி வக்கீல் ஆபீஸிருக்கு சென்றனர். போகும் வழியில் இருவரும் எதுவும் பேசவில்லை. காரணம் இருவரின் மனதில் இருந்த குழப்பம் மட்டுமே!

சில வினாடிகளில் வக்கீல் அலுவலகத்திற்கு செல்ல அங்கு மணிஷாவும் ரஞ்சித்தும், வேற ஒரு வக்கிலும்  அமர்ந்திருந்தனர்.

ஏதோ ஒரு வித தயக்கம் ஏற்பட அப்படியே அமைதியாக வந்து அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்  பிரதிக்ஷா.

“மியூச்சுவலா பிரிகிறதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் சம்மதம் தானே!” என்று அந்த வக்கீல் கேட்க, விதுரன் பிரதிக்ஷாவை பார்த்தான்.

” எனக்கு மியூச்சுவலா பிரிகிறதுக்கு சம்மதம் சார்!” என்று பிரதிக்ஷா சொல்லவும் தான் விதுரனுக்கு உயிரே வந்தது .

“ரஞ்சித் டாக்குமெண்ட  எடுத்துக் கொடு ரெண்டு பேரும் சைன் பண்ணட்டும்!” வக்கீல்  சொல்ல, ரஞ்சித்தும் டாக்குமெண்டை எடுத்து விதுரனின்  கையில் கொடுத்தான். 

விதுரன் பிரதிக்ஷாவின் கையில் கொடுக்க  பிரதிக்ஷா சிறிது நேரம் அப்படியே யோசித்துக் கொண்டிருக்க மனிஷாவும் ரஞ்சித்தும் அவளை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தனர்.

‘சாமி! கனவுல நான் பாத்துக்கிட்டு இருந்தவரை என் கண் முன்னாடி நீ கொண்டு வந்த, வந்தவர விட்ற கூடாதுனு நெனச்சு   நானும்  பொய் சொல்லி கல்யாணம் பண்ணிட்டேன். கல்யாணம் பண்ணி ரெண்டு நாள் கூட ஆகல டைவஸ்க்கு வாங்குவதற்கு வந்தாச்சு, ஆனால் என் காதல் மேலயும் உன் மேலயும் அதிகப்படியான நம்பிக்கை வச்சிருக்கேன். எனக்கு கொடுக்கப்பட்ட இந்த ஆறு மாச காலத்துல கண்டிப்பா என்னோட காதல விதுரனுக்கு புரிய வச்சு விதுரன் கையாலயே  டைவர்ஸ்  வேண்டான்னு   இந்த டாக்குமெண்டை கிழிக்க வச்சு அவரோட சேர்ந்து வாழ்றதுக்கு நீ தான் அருள் புரியணும்! உன்னைய நம்பி தான் இப்ப இந்த பேப்பர்ல சைன் பண்றேன்’  என்று நினைத்துக் கொண்டு கையெழுத்தை போட்டாள்  பிரதிக்ஷா.

“விதுரன்,  சரி நீ சொன்ன டாக்குமெண்ட்லயும் நான் சைன் பண்றேன்” என்று சொல்ல பிரதிக்ஷா சிரித்துக் கொண்டே,

“அந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம் உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு!நீங்க எனக்கு கொடுத்த வாக்க ஒரு காலமும் மீற மாட்டீங்கன்னு, அதனால உங்க வார்த்தைய நம்புறேன்!” என்ற பிரதிக்ஷா சொல்ல விதுரனுக்கு ஏதோ ஒரு மாதிரியாக ஆனது.

“ஒருவேளை  நான் சொன்ன வாக்கை காப்பாற்றலைனா நீ என்ன பண்ணுவ?” என்று விதுரன் தன் சந்தேகத்தை கேட்க,” இப்ப நம்ம பார்த்த வக்கீலயே திரும்ப சந்திச்சு  என்னைய பிளாக்மெயில் பண்ணி தான் கையெழுத்து போட வச்சாரு, எனக்கு மியூச்சுவலா பிரிக்கிறதுக்கு விருப்பம் இல்லைன்னு  சொல்லுவேன்!” என்று கண்ணடித்தாள் பிரதிக்ஷா. பிரதிக்ஷா சொன்னதைக் கேட்டு முறைத்தான் விதுரன்.

இருவரும் கையெழுத்து போட்டு அங்கிருந்து செல்லும் போது பிரதிக்ஷாவின் மனம் பாரமாக இருக்க கொஞ்சம் அவளின் மனதை ஆசவாசப்படுத்த  கடற்கரைக்குச் செல்லலாம் என்று தோன்றியது. “எனக்கு பீச்சுக்கு  போகணும்னு ஆசையா இருக்கு என்னைய கூட்டிட்டு போங்க!” என்று கூறினாள் பிரதிக்ஷா,

” ஆரம்பிச்சிட்ட போல!” என்று சொல்லிக்கொண்டு விதுரனும்  கடற்கரைக்கு செல்லும் வழியில் காரை ஓட்டினான். சிறிது நேரத்தில் கடல் காற்று அவள் முகத்தில் பட அவளின் மனம் புத்துணர்ச்சி பெற்றது.

எப்போதும் அவள் மனம் குழப்பமாகவோ கவலையாகவோ வருத்தமாகவோ இருந்தால் , கடற்கரைக்கு வந்து  கடல் காற்றை சுவாசித்து தன்னை தெளிவு படுத்திக் கொள்ளுவாள். இப்போதும் அவள் மனம் குழப்பத்தில் தவிக்க, தன்னை  தெளிவு நிதானப்படுத்தி கொள்வதற்காக  கடற்கரைக்கு அழைத்துச் செல்ல கூறியிருந்தாள்.

கடற்கரை சூழ்நிலையையும், கடல் காற்றையும் சுவாசிக்க குழப்பமான அவள் மனம் குதுகழித்து  குழந்தை போல் துள்ளி குதிக்க ஆரம்பித்தது.

காரின் கதவை திறந்து வேகமாக அங்கிருந்த மணல் பரப்பில் ஓடி சென்றாள். விதுரனோ அந்தக் காரிலே சாய்ந்தபடி   சீக்ரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே பிரதிக்ஷாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடம் மணலில் விளையாடியவள், பின்பு  அங்கிருந்த சிறு பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்த பந்தை வாங்கி அவர்களுடன்   விளையாடிக் கொண்டிருந்தாள்  பிரதிக்ஷா.

பிசினஸ் பிசினஸ் என்று நிற்க நேரமில்லாமல் அதை  நோக்கி ஓடிக்கொண்டிருந்தவன் இன்று  கடல் ஆர்ப்பரிக்கும் ஆர்ப்பரிப்யை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவ்வப்போது பிரதிக்ஷா என்ன செய்கிறாள் என்றும் அவனுடைய கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது.

பிரதிக்ஷா திடீரென்று விதுரனின் பக்கத்தில் ஓடி வந்து  , ” அத்தான் பீச்சுக்கு கூட்டிட்டு வந்தால் மட்டும் போதாது சுண்டல் ஏதாவது வாங்கித் தாங்க” என்று சொல்ல, அவளை முறைத்தான் விதுரன்.

“சுண்டல  எங்க அம்மா கிட்ட செஞ்சு கேட்டாவே எங்க அம்மாவே உனக்கு செஞ்சு தந்திருவாங்களே!” என்று  விதுரன்  சொல்ல நகைச்சுவையாய் சிரித்தாள் பிரதிக்ஷா.

“சுண்டல் பிரச்சனை இல்லை, இங்கு அடிக்கிற சுகமான காத்தோட ஆர்ப்பரிக்கிற அலைய பாத்து அப்படியே உட்கார்ந்து சுண்டல் சாப்பிடும் சுகமே தனி, அது உங்கள மாதிரி ஏசில வாழ்றவங்களுக்கு புரியாது! இப்ப  எனக்கு வாங்கி தருவீங்களா, மாட்டீங்களா?” என்று பிடிவாதமாக கேட்டாள் பிரதிக்ஷா.

“இருடி வாங்கி தரேன்!” என்று உரிமையாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகன்று போனான் விதுரன்.

இரு வருடமாக காதலித்த மனிஷாவை  ஒரு தடவை கூட டி என்று உரிமையாக அழைத்தது இல்லை. ஆனால் திருமணம் ஆன அன்றிலிருந்து பிரதிக்ஷா அவனுடைய பொண்டாட்டி என்னும் எண்ணம் அவனுக்கு வந்ததோ என்னவோ அவனை அறியாமலே  வார்த்தைக்கு வார்த்தை டி என்று உரிமையாக பேசிக் கொண்டிருக்கிறான்.

நகன்ற விதுரனின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு பிரதிக்ஷாவும் அவனோடு அந்த சுண்டல் வியாபாரியை  நோக்கி  நடந்தாள்.

“இப்ப எதுக்கு கைய புடிச்சு ஒட்டி உரசி கிட்டு வர்ற? ” என்று விதுரன் கேட்க,” புருஷன் பொண்டாட்டி மாதிரி நடந்துக்கணும்னு உங்ககிட்ட சொன்னேனே அதை மறந்துட்டீங்களா? புருஷன் பொண்டாட்டி எல்லாரும் இப்படித்தான் போவாங்க!” என்று கூறினாள் பிரதிக்ஷா.

‘ விதுரா ! இன்னும் ஆறு மாசத்துக்கு இதே மாதிரி டார்ச்சர் எல்லாம் தாங்கி தான் ஆகணும் ‘ என்று அவன் மனசாட்சி எடுத்துரைக்க, எதுவும் சொல்லாமல் அமைதியாக நடந்து போனான்.

கோவிலிலிருந்து வந்ததிலிருந்து  மனக்கலக்கத்தில் இருந்த சரஸ்வதி தன்னை ஓரளவுக்கு சமன்படுத்தி விட்டு வெளியே வந்து, பிரதிக்ஷாவை அழைக்க, “அம்மா அண்ணனும் அண்ணியும் வெளியில போய் இருக்காங்க!” என்று கூறினாள் ரேணு.

“எங்க போயிருக்காங்க?”  என்று சரஸ்வதி கேட்க, “அண்ணி கோயில வச்சு அண்ணா டைவர்ஸ் பண்ற  டாக்குமெண்ட்ல சைன் பண்றதுக்காக வக்கீல் ஆபீசுக்கு  கூப்பிட்டாருன்னு  சொன்னாங்க அதுக்குத்தான் ரெண்டு பேரும் போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்!” என்று ரேணு சொல்லிக் கொண்டிருக்க அப்படியே அதிர்ச்சியில் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார் சரஸ்வதி.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
விரகதாபம் தீருமோ விதுரா?
987 22 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page