பாகம் – 22
ஆரம்பத்தில் அவள், ” என்னங்க உங்கள் ஆண் பாய் பிரண்ட் இன்னும் கால் செய்யவில்லையா. ” என்று கேட்ட போதெல்லாம் லேசாக புன்னகைப்பதோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவான்.. போன் பேசியே மாதக்கணக்கில் ஆகவும் அவள் கேட்டாலே எரிந்து விழ ஆரம்பிக்கிறான்..
“அய்யய்ய உங்க கிட்ட வந்து தெரியாம பேசினேன் பாருங்க..சும்மா சாதாரணமா கேட்டா கூட இப்படி எரிந்து விழறீங்களே.. இப்பதான் கொஞ்ச நாளா கொஞ்சம் பிரியமா இருந்தீங்க.. அது இந்த கடவுளுக்கு பிடிக்கல ..அந்த அண்ணாவை உங்களிடம் இருந்து பிரித்து விட்டு எங்க உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறார் .. “கழுத்தை நொடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு விலகி செல்கிறாள் மித்ரா..
அவன் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போனதால்தான் மித்ராவும் இளகி தன்னிடத்தில் இருந்து இறங்கி வந்தாள்.. இப்பொழுது அவன் மனிதர்களை பார்த்தாலே திட்ட ஆரம்பிக்கவும் அவளும் அதே போலவே நடந்து கொள்ள ஆரம்பிக்கிறாள் ..மித்ராவின் குணம் முகம் பார்க்கும் கண்ணாடியை போல ..எதிராளி பார்க்கும் பார்வையில் தான் அவளுடைய நடவடிக்கையும் இருந்தது..
மித்ராவிடம் என்று இல்லை.. அப்பா அம்மாவை பார்த்தாலும் சிடுசிடுக்கவும் கயல் மருமகளிடம் புகார் கூறுகிறார்..
“என்னடி இவனுக்கு வந்தது. நன்றாகத்தானே இருந்தான் ..சும்மா போய் என்னடா ஆளையே பார்த்து ரொம்ப நாள் ஆகுது.எப்படிடா இருக்கேன்னு கேட்டதற்கு வள்ளுன்னு நாய் விழுந்து பிடுங்குற மாதிரி பேசறான்.. ஆமா இவன்கிட்ட நீ எப்படி குடும்பம் பண்ற.. ” மாமியாரே இப்படி பேசவும் மித்ராவுக்கு சிரிப்பு வந்து விடுகிறது ..
“அவங்களுக்கு அவங்க ஃப்ரெண்ட் கிட்ட பேசி ரொம்ப நாளாகுதாம். அதனால் தான் கோபம் வருது .. “
“அதுக்கு போன் செய்து பேச வேண்டியதுதானே.. நம்மளா அவனை பேச வேண்டாம்னு சொல்றோம். அறிவு கெட்டவன் இவன் கிட்ட போய் நான் இனிமே பேசினா சொல்லு ..நான் என்ன சோத்துல உப்பு போடாமலா இருக்கேன். எனக்கு சூடு சொரணை இல்லன்னு நினைச்சிக்கிட்டானா..கூப்பிடுடி அவனை..இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சுகிட்டு போறேன்.”
மகன் காரை கிளப்பும் சத்தம் கேட்டதும் தான் மருமகளிடம் தைரியமாக பேச வந்தார்..
“கோபித்துக் கொள்ளாதீர்கள் அத்தை.. அவங்களுக்கு கொஞ்சம் ஏதோ பிரச்சனை போல. அதை வேற யாரிடம் காட்டுவாங்க . உரிமை உள்ளவங்களிடம் தானே.. “
உடனே அவர் திருப்பிக் கொள்கிறார்.. “இது என்னடி நியாயம் .. அவன் என்ன பேசினாலும் என்னை வாய மூடிட்டு இருக்க சொல்றியா .. “
“நான் எங்கே அத்தை அப்படி இருக்க சொன்னேன் .. “
” இல்ல நீ இப்ப சொன்னியே . உரிமை உள்ளவங்க கிட்ட தான் கோபத்தைக் காட்டுவாங்கன்னு ..எனக்கு நீ அறிவுரை சொல்லாதடி ..அப்படின்னா உனக்கு அவன் உரிமை இல்லையா..நானாவது கேட்டுகிட்டு வந்து உன்கிட்ட கம்பளைண்ட் தான் பண்றேன் ..நீ என்ன செய்ற. அவன் எப்படி சத்தம் போடறானோ ..அதற்கு மேல பேய் மாதிரி கத்துற ..ரெண்டு பேர்ல யாரு ஜெயிக்கிறது என்று பார்க்கிறீர்கள் போல. ச்சே வீடாவா இருக்கு. வர வர எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. இன்னொரு புள்ள பெத்து தொலைந்து இருந்தால், அவன்கிட்டயாவது போய் இருந்திருக்கலாம். எல்லாம் என் தலையெழுத்து .ஒரு பிள்ளையை பெத்துட்டு நான் படற அவஸ்தை இருக்கே அப்பப்பப்பா ..”அந்த வார்த்தைகளை மித்ரா புத்தியில் பதிந்துக் கொள்கிறாள்..
‘அத்தை சொன்னதும் உண்மைதான். ஒரு பிள்ளையாய் இருந்தால் கஷ்டம் தானோ.. ” இதை மாமியாரிடமே கேட்கிறாள்.
” ஆமாங்க அத்தை ஒரு பிள்ளையா இருந்தாலும் கஷ்டம் தானே .. “
அவர்தான் எது கேட்டாலும் அவளிடம் திருப்பி கொள்கிறாரே.. இப்போதும் அதே போலத்தான் நடக்கிறது ..
“ஆமாம் டி உன் பிள்ளை மாதிரி இருந்தால் கஷ்டம் தான். என் பிள்ளை என்றால் அவன் என்னை கடைசி வரைக்கும் உறியில வச்சு சாப்பாடு போடுவான்.. ஒத்த புள்ள உறி சோறுன்னு அந்த காலத்தில் சொல்லியிருக்காங்க.
மூணு புள்ள பெத்தா முச்சந்தியில.. நாலு புள்ள பெத்தா நடுத்தெருவுலம்பாங்க..”
“ஐயோ அத்தை அதெல்லாம் எதுகை மோனைக்காக சொன்னதா இருக்கும் அத்தை ..”
“எதுக்கு சொன்னதோ.. எனக்கு தான் திமிர் வச்சிப் போய் ஒன்னே ஒன்னுன்னு விட்டுட்டேன். இன்னும் ரெண்டு மூணு பெத்து இருக்கலாம் ..ஹும் இனிமே பேசி என்ன பண்றது ..ஒன்னும் பிரயோஜனம் கிடையாது.. “மித்ரா இதை சொன்னதும் லேசாக சிரிப்பதை போல அவருக்கு தோன்றுகிறது..
“ஆனாலும் என் பிள்ளை உன் பிள்ளை மாதிரி கிடையாதுடி.. இவன் ரொம்ப நல்லவன்..” இப்பொழுது மித்ரா சண்டை போடும் மனநிலையில் இல்லை..
அதனால் தான் கயல் வகையாய் வாய்க் கொடுத்தும் தப்பித்துக் கொள்கிறார்..
அவள் தன்னைத்தானே தற்சோதனை செய்து மனதை கொஞ்சம் ஆராய்ந்து கொண்டிருந்தாள் .
‘இருக்கும், இனி வரும் காலம் அத்தை சொல்வதைப் போலத்தான் இருக்கும் போல ..மனைவி பேச்சைக் கேட்டுக் கொண்டு நடுத்தெருவில் மகன் விட்டு விட்டால் என்ன செய்வது.. அதனால் இவனை மட்டும் நம்பி இருக்காமல் அவனுக்கு துணையாய் இன்னும் ஒன்று பெற்றுக் கொள்ள வேண்டியதுதான்.., என்று..
அதுவும் இல்லாமல் அரவிந்தும் இதேதான் சொல்லிக் கொண்டிருக்கிறான் .. ” ஒரே பிள்ளையா இருந்தால் தறுதலையாய் போயிடுவான்டி ..அதிலும் நீ கொடுக்கிற ஓவர் செல்லத்துக்கு பத்து வயதிலேயே வீணா போயிடுவான்.. அவனுக்கு போட்டிக்கு, துணைக்கு ஒரு ஆள் வேணும் டி .அப்போதுதான் அவன் கொஞ்சம் அடங்கி வருவான்.. என்று..
அதெல்லாம் நிஜம் தான் போல..அடுத்த குழந்தை என்று யோசிக்க ஆரம்பித்ததும் தான் தன் கணவனின் கோபமே அவளுக்கு கொஞ்சம் புரியவும் தொடங்குகிறது
‘ஒருவேளை நான் அடுத்த குழந்தை பெற்க்க முயற்சிக்காததால் தான் இப்படி சத்தம் போடுகிறாரோ என்னவோ. அந்த அண்ணாவுக்கு இரண்டாவதாக குழந்தை வேறு பிறக்கப் போவது என்று சொல்லிக் கொண்டிருந்தாங்க ..முதல் குழந்தை இரண்டு பேரும் ஒரே தேதியில் பிறந்திருப்பதால் இவங்களுக்கும் அது மாதிரி ஆசை இருந்திருக்கும் .. நான் தான் பிடி கொடுக்காமல் பேசிக் கொண்டிருக்கிறேன் .அவங்க வந்ததும் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ள தயார் என்று சொல்ல வேண்டியதுதான்..,
கழுதை கத்து என்று சொன்னால் கத்தாதாம்.. அது பாட்டுக்கு தன் போக்கிற்கு கத்துமாம்.. அந்த கதையா இருக்கிறது மித்ராவுக்கும் அரவிந்துக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகள்.. இவன் சொன்ன போது அவள் கேட்கவில்லை. இப்பொழுது அவள் பேச வருவதையே அவன் காது கொடுத்து கேட்கவில்லை..
அத்தை சொன்ன சூட்டோடு அடுத்த குழந்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தவள் அவனிடம் அதைப் பற்றி பேசவே முடியவில்லை என்றதுமே கொஞ்சம் அலுத்து தான் போகிறாள்.. அதுவும் இல்லாமல் குழந்தை பெற்று ஐந்து வருடங்கள் ஆகவுமே அடுத்த குழந்தையை திரும்பவும் மசக்கையிலிருந்து பிரசவம் வரைக்கும் அனுபவிக்க வேண்டுமே என்று பயம் வேறு ஏற்படுகிறது ..
தன்னால் முதல் குழந்தையை சுமந்ததைப் போல திரும்பவும் பத்து மாதங்கள் பொறுமையாய் சுமந்து கொண்டிருக்க முடியுமா என்று ஒரு யோசனை ..அதோடு முதல் குழந்தைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு சொகுசாக இருந்ததோ, அதற்கு எதிர் மாறாக அடுத்த குழந்தைக்கு சிரமப்பட வேண்டி இருக்கும் என்ற எண்ணமும் வருகிறது..
அதுவும் இல்லாமல் அமிர்தனுக்கு, தான் இருபத்தி நான்கு மணி நேரம் கூடவே இருப்பதோடு இன்னும் நான்கு மணி நேரம் அதிகமாக இருந்தால் கூட தேவலாம் போல இருக்கிறது … ‘அவங்க சொன்னது போல மூன்று வயதிலேயே அரை நாள் ஸ்கூலுக்கு அனுப்பி இருக்கலாம்.. இப்பொழுது எல்கேஜி செல்வதற்கே அழுதழுது தானே செல்கிறான் ..இனி அடுத்த வருடம் தான் முழு நேரமாக ஸ்கூல் அனுப்ப வேண்டும்.. வேண்டுமானால் அப்பொழுது அடுத்த குழந்தையை பற்றி யோசிக்க வேண்டியதுதான்.., என்று அடுத்த குழந்தையை பற்றிய சிந்தனையை கிடப்பில் போட்டு விடுகிறாள்..
அரவிந்தோ மாதங்கள் அதிகமானால் கொஞ்சம் பழகிய பழக்கத்தை மறந்து விலகலாம் என்று இல்லை.. வேண்டுமென்றே மனதிற்குள் ஆதித்யாவை பற்றிய எண்ணங்களையே உருப் போட்டு புதுப்பித்துக் கொள்கிறான்.. அவனுக்கும் வேறு சிந்தனையும் தான் இல்லை..அவனையே கோபித்து என்ன செய்வது..இந்த நேரம் மித்ரா சமயோகிதமாக யோசித்து அடுத்த குழந்தையை வயிற்றில் சுமந்து இருந்தால் சிந்தனையெல்லாம் அதில் சென்றிருக்கும்..
அவன் ஒன்று என்று வாயை திறப்பதற்குள் மித்ரா பத்து என்று முடிக்கிறாள் ..பிறகு கயல் சொன்னதைப் போல இரண்டு பேரும் சண்டை போட்டு வேற என்ன இன்பத்தை கண்டார்கள். இப்படியேதான் நாட்களும் செல்கிறது. முன்பு விட்டிருந்த அந்த குத்தி காட்டும் குணத்தை திரும்பவும் அரவிந்த் ஆரம்பிக்கிறான் .அவளுக்கு எதை சொன்னால் கோபம் வருமோ அதை தான் கூறுகிறான் ..
சில சமயம் மித்ரா , ச்சே இவரோடு குடும்பம் நடத்துவதற்கு பேசாமல் விவாகரத்து வாங்கிக் கொண்டு அம்மா வீட்டிலாவது போய் கிடக்கலாம் ..,என்று யோசிக்கிறாள்.
தன் மகனையும் தான் வாழும் வசதி வாய்ப்புகளையும் எண்ணி, ‘ அம்மா வீட்டில் இவனை வைத்துக் கொண்டு ஒரு நாள் கூட குப்பை கொட்ட முடியாது. படித்த படிப்புக்கு முன்பு வேலைக்கு சென்று இருந்தால் இப்போது புதிதாக வேலைக்கு போவதற்கு சுலபமாக இருந்து இருக்கும். அதுவும் இவனை வைத்துக் கொண்டா..,அவசரமாய் யாத்திரமாய் நினைத்த கேள்விகளை எல்லாம் உடனே மனதிற்குள் அழித்துக் கொள்கிறாள் .எல்லாவற்றிற்கும் அமிர்தன் தான் கேள்விக் குறியாகிறான்..
வேறு வழியில்லை. சகித்துக் கொண்டு பொறுத்துதான் போக வேண்டும் ..அந்த நேரம் தான் அப்படி நினைக்கிறாள் ஆனால் சண்டையை ஆரம்பித்தால் இரண்டு பேரும் ரத்த வெறி கொண்டவர்கள் அதன் ருசியை விட முடியாமல் திரும்பத் திரும்ப தொடங்குவதை போல தான் இருக்கிறார்கள்..சில நாட்கள் மித்ரா பொறுத்து கொள்கிறாள் ..திரும்பத் திரும்ப அதையே சொல்லவும் அதற்கு மேல அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..
“என்னடி இவனுக்கு என்னுடைய சாயலே இல்லை.. என்னடி இவனுக்கு என்னுடைய தலைமுடி மாதிரி இல்லாமல் சுருளாக இருக்கிறது .. “
இதை சொல்லும் போது , “என் ஆதித்யா அண்ணாவின் தலைமுடிக்கு ஈடாகுமா இவனுடையது ..அவருடைய சுருள் முடி அத்தனை அழகாக இருக்கும்.. ” இப்படி பேசும்போது இவனிடம் என்ன என்று சண்டை போடுவது ..
பேசாமல் ஆதி அண்ணாவிடம் நானாவது ஒரு மெசேஜ் போட்டு வைக்கலாம் என்று யோசிக்கிறாள் மித்ரா..
” இங்க உங்களால் தான் ஒரே பிரச்சினையாக இருக்கிறது .. “.என்று.
‘அதை செய்தால் அதோடு தன் வாழ்க்கையை முடிந்து போனது.. அவர் இவனுக்கு போன் செய்து என்ன என்று கேட்டால், தான் மெசேஜ் போட்டது தெரிந்து விடுமே இதுவும் வம்பு தான்.. அமைதியாக இருப்போம்.., என்று அமைதியாகிறாள்..
அமைதிக்கு பின் புயலோ?
தொடரும்..
