வேனலின் வெண்பூவே
அத்தியாயம் 22
“உங்க மனசைப் புரிஞ்சுகிட்டு, என்ன நடந்தாலும் உங்க கூட நிக்கிற கணவன் கிடைச்சால் நீங்க ரொம்ப லக்கி. இது எல்லாப் பெண்களுக்கும் இயல்பாக நடக்க வேண்டியது. ஆனால் இதை லக்கி சொல்ற நிலை ஆகிடுச்சு. அந்தக் காலம் மாதிரிதான் இன்னும் நல்ல கணவன் அமைவதெல்லாம் வரம்தான் போல. அதே சமயம் கணவன் மனைவி இருவருக்கும் புரிதல் இருக்கணும். எல்லா சமயத்திலும் ஒரே ஆளே புரிந்து கொண்டு போயிருந்தால் அது நன்றாக இருக்காது. கல்யாண வாழ்க்கைத் தராசு ஏறி இறங்கி சமநிலைக்கு வரலாம். ஆனால் எப்பவும் ஒரே தட்டு இறங்கி இருக்கக் கூடாது. மற்றவர் என்ன சொல்கிறார்கள் என இன்னொருவர் காது கொடுத்துக் கேட்க வேண்டும். நம் வாழ்க்கைத் துணை எப்ப பேசுனாலும் சண்டை வருதுன்னு நினைக்கக் கூடாது. அதே சமயம் ஏன் எதுக்காக இப்படி பேசுறேன்னு நினைக்காமல் அவர்களிடம் அமர்ந்து பேச வேண்டும். எந்தப் புள்ளியில் விரிசல் ஆரம்பிக்கிறது எனக் கண்டறிய வேண்டும். நம்முடைய வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கும் மிகப் பெரிய துரோகம் கண்டு கொள்ளாமல் இருத்தல். இது பெண்களுக்கு அதிக அளவில் நடக்கும். உங்க வீட்டுக்கு எல்லாத்தையும் விட்டுட்டு வரப் பொண்ணை நீங்கதான் கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ண வைக்கணும். அப்பதான் அவங்களுக்கும் அந்தச் சூழ்நிலையை அடாப்ட் பண்ண ஈசியாக இருக்கும். அடக்குமுறையில் இல்லை.
-பத்மமுகி.
மணி ஒன்பதைத் தொட்டுக் கொண்டிருக்க, நெய்தல் நிழலில் மாட்டப்பட்டிருந்த பழைய மணிக் கூண்டு கடிகாரம் ஒன்பது முறை அடித்தது. அப்போது ருத்ரனின் எதிரில் அமர்ந்திருக்க வேண்டிய கட்டயாத்தை எண்ணி காமினி பற்களைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
ருத்ரனின் அறையைக் காமினியே தேடிச் செல்ல வேண்டிய கட்டாயம். அவளுடைய உதவியாளரை அழைத்து, ருத்ரன் எங்கிருக்கிறானெனக் கேட்க, அவன் அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலையில் இருப்பதாகக் கூறக் காமினியே வேறு வழியின்றி அவன் அலுவலக அறைக்கு வந்தாள்.
பால்கனியில் அமர்ந்தவாறு காலை உணவை உண்டு கொண்டிருந்தான் ருத்ரா. கடற்கரையைப் பார்த்தபடி கடல் காற்று கருஞ்சிகையைக் கலைக்க, திரைச்சீலைகள் அசைந்தாட அதன் நடுவில் தாடை மெல்ல அசைய உணவை உண்டு கொண்டிருந்தான் ருத்ரன்.
காமினிக்கு அவனைப் பார்க்கப் புசுபுசுவென்று ஏறியது. எந்த இடத்தை விட்டு ஓடினாளோ அதே இடத்தில் நிற்கிறாள் அவள். அந்த இடத்தில் இதற்கு முன்பு நடந்தது வேறு நினைவுக்கு வந்து பாடாய்படுத்தியது.
காமினி அங்கேயே நிற்க ருத்ரா அழைத்தான்.
“இங்க வா காமினி.”
வேறுவழியின்றி தலையைச் சிலுப்பியபடி அவன் எதிரில் அமர்ந்தாள்.
“சாப்பிடு காமினி. உனக்குப் பிடிச்ச அயிட்டம்தான்.”
காமினிக்கு பிடித்த உணவுதான் அங்கிருந்தது. காமினிக்கு எல்லா வகை உணவுகளும் பிடிக்கும். அவள் ஒரு ஃபுடி.
“ம்கூம். வேண்டாம்.” என மறுப்பாகத் தலையசைத்தாள்.
ஆனால் காலையிலிருந்து வேலையில் மூழ்கி இருப்பவள் இன்னும் காலை உணவை உண்ணவில்லை என்பதுதான் உண்மை. உணவைப் பார்த்ததும் மூளை கட்டளையிட பசி ஆரம்பித்து நாவில் நீர் ஊறியது.
“சாப்பிடு. உனக்கும் சேர்த்துதான் எடுத்துட்டு வரச் சொன்னேன்.” அப்போதுதான் இன்னொரு தட்டும் அங்கிருப்பதைக் கவனித்தாள் காமினி.
அவளுக்கு ஒரு தட்டை வைத்தவன் உணவையும் எடுத்து வைக்க, காமினி ஸ்பூனை எடுத்து உண்ண ஆரம்பித்தாள். ஆனால் அவளுக்குக் கையில் உண்ணப் பிடிக்கும். மற்ற நேரங்களில் வெளியில் நாகரீகம் கருதி ஸ்பூனில் உண்பாள். வீட்டில் எல்லாம் கையில்தான். அபிதா அவளை அனைத்திற்கும் ஏற்றபடி பழக்கி இருந்தார்.
அங்கேயே கைக்கழுவ, வாஷ் பேசினும் இருக்க கைகளைக் கழுவிவிட்டு உண்ண ஆரம்பித்தாள். பசியில் இருந்தவளுக்கு உணவு வேகமாக இறங்கியது. இடையில் புரையேறத் தண்ணீரை எடுத்து நீட்டினான் ருத்ரா.
அவன் நீட்டியதை வாங்காமல் இன்னொரு கண்ணாடி தம்பளரிலிருந்து நீரைப் பருக, அவள் செய்கையில் இலேசாக ருத்ரனின் உதடுகள் வளைந்தது.
காமினிக்கு முன் அவன் உணவை உண்டு முடித்திருக்க, அவள் உணவை உண்ணுவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். காமினிக்கு அவன் தன்னைக் கவனிப்பது உறுத்தலாக இருந்தது.
“என்ன?” என விழிகளாலே அவனை மிரட்டும்படி பார்க்க ருத்ராவின் முகத்தில் புன்னகைதான்.
“நீ அழகுதான் தெரியும். ஆனால் இன்னிக்கு ரொம்ப அழகா இருக்குற மாதிரி தோணுது.”
அவன் கூறியதில் உணவை வாயில் வைத்துக் கொண்டு விழிகள் விரிய அவனை நோக்கியவளால் எதுவும் பேசமுடியவில்லை.
‘அடேய் எதுனாலும் சொல்லிட்டு செய்யடா? சத்தியமாக என்னால மிடிலடா. ரூடா இருக்கறவன் திடீர்னு ரோமியாவா மாறுனா! ஷாக்கா இருக்கு.’ என மனதில் வழக்கம்போல் மனசாட்சி பேசக் காமினி வெளியில் முறைத்தாள்.
கடைசி வாய் உணவை வாயிலிடுவதற்கு முன், “இது எந்தப் ஃபார்வேர்ட் மெசேஜ் ருத்ரா? தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்பிளிமெண்ட்.” எனப் பேசிவிட்டு உணவை மென்றாள். ருத்ராவிடம் எந்தத் தயக்கமுமின்றி பேசிவிடுபவள் அன்று வெளி நபர்களிடம் பேசுவதைப் போல் தோன்றியது. பேசிவிட்டு உணவுத் தட்டில் கவனம் வைத்து இமைகளைத் தாழ்த்தியவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
அமைதியாக எழுந்து கைகளைக் கழுவிக் கொண்டிருந்தவளை ருத்ரா சட்டென்று பின்னிருந்து அணைத்தான். அவனின் திடீர் அணைப்பில் உடல் கூசிச் சிலிர்க்க, மனமும், உடலும் முழுக்க நடுங்கியது காமினிக்கு.
அவளின் இடையை இரண்டு கைகளாலும் கோர்த்துப் பிடித்திருந்தவன் தலையை அவள் கழுத்தில் சாய்த்து விழிகளை மூடி இருந்தான். கைகழுவும் இடத்தில் கண்ணாடி பதிக்கப்பட்டிருக்க, சிவகாமினிக்கு தாங்கள் இருவரும் நின்ற கோலம் கல்வெட்டாய் மனதில் பதிந்து போனது.
“விடு ருத்ரா.” என அவன் இருகைகளைப் பிரித்துத் தன்னை அவனிடமிருந்து விடுவிக்க முயன்றாள்.
“ருத்ரா நோ.” என்றவளின் நலிந்த குரலில் அவன் பிடி இறுகி இன்னும் அவள் கழுத்து வளைவில் சாய, அவனது இலேசாக வளர்ந்திருந்த தாடி குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
இப்போது ருத்ராவும் விழிகளைத் திறக்க இருவரின் பார்வையும் கண்ணாடியின் வழியே மோதிக் கொண்டது. அந்த நொடிகள் உறைந்து போய் இருவரின் இதயத்துடிப்பும் தெளிவாகக் கேட்கும் நிலை.
அவள் கழுத்தில் முத்தமிட்டவன், சட்டென்று அவளைத் திருப்பி அருகில் உள்ள பால்கனி கம்பி தடுப்பில் சாய்த்து அவள் இதழ்களை அவன்வசம் இழுத்திருந்தான். பாவையோ விழிகளை மூடி இருக்க, இதழ்களில் அவன் ஈரம் படிந்திருந்தது.
பல விநாடிகள் கழித்து, “காமினி அங்க என்ன கண்ணை மூடி யோசனை?” என்ற ருத்ரனின் குரலில் விழிகளைத் திறந்தாள்.
‘இது எல்லாம் பகல் கனவா கோபால்?’ என அவளுக்குத் தோன்றியது. அவனைப் பற்றிய பயத்தில் இப்படி கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டோமோ என எண்ணினாள்.
ருத்ரன் அமைதியாக அவனிடத்தில் கைப்பேசியுடன் அமர்ந்திருக்க, அவன் பார்வையை நேர்கொண்டு பார்க்காமல் விழிகளைத் தாழ்த்தினாள்.
“மெனு பத்தி டிஸ்கஸ் செய்யலாமா?” என ருத்ரன் அழுத்தமான குரலில் கேட்க, காமினி கையடக்க கணினியை எடுத்துப் பார்ப்பது போல் அமர்ந்து கொண்டாள்.
“உனக்கு ஃபைல் அனுப்பிருக்கேன். அவங்க கேட்ட மெனு இருக்கு. பார்த்துட்டு சொல்லு.”
காமினிக்கு அவனின் முன் அமர்ந்திருப்பது வெட்கமாக இருந்தது. அவன் இயல்பாக இருக்க தன் கற்பனை இப்படி சென்றுவிட்டதை எண்ணி மனம் குமைந்தாள்.
‘நீ சரியில்லை காமினி’ எனத் தன்னைத் திட்டி இதழ்களைக் கடித்துக் கொண்டாள். ஏனென்றால் நடந்தது கற்பனையென நினைக்கும் அளவுக்கு எதிரில் இருந்த ருத்ரனின் முகபாவனை வேலை செய்யும் முனைப்புக்கு மாறி இருந்தது.
அவனே தெளிவாக எதுவுமில்லையென மாடியில் உரைத்திருந்தான். சட்டென்று நடந்து விட்ட ஒன்றை நினைத்து நிம்மதியை கெடுத்துக் கொள்ள வேண்டாமென முடிவு செய்தவள் உணவுப் பட்டியல்பற்றி ருத்ரனிடம் விவாதிக்க ஆரம்பித்தாள். ருத்ரன் அவள் முகத்தில் இருக்கும் குழப்பத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தான்.
***
இரவு பத்துமணி,
கன்யாவின் புடவை லேசாக நலுங்கி இருக்க, இரு சக்கர வாகனத்தில் வந்து வீட்டின் முன் இறங்க, அவளுடைய அன்னை கதவைத் திறந்தார். நரையோடிய முகத்தில் இலேசாக வேதனையின் சாயல்.
தென்னை மரமும், செடிகளும் கொண்ட காம்பவுண்ட் வீடு. மேல் வீட்டில் இன்னொருவர் வசிக்க, கீழ் வீட்டை இவர்கள் வாடகைக்கு எடுத்திருந்தனர். இரண்டு அறை, சமையலறை, ஒரு சிறிய ஹால் என அவர்களுக்கு ஏற்றபடி இருந்தது.
“இப்ப எப்படி இருக்கும்மா?”
“கொஞ்சம் பரவால்லமா.” எனப் பார்வதி பதில் அளித்தார்.
“வேலை எப்படி இருந்துச்சும்மா?”
கன்யா வாகனத்தை நிறுத்தித் தலைக்கவசத்தைக் கழற்றியபடி பேச ஆரம்பித்தாள்.
“ஓகேம்மா. நார்மல்.” எனப் பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தவள் உடை மாற்றி வந்ததும், உணவை மகளுக்கு வாஞ்சையுடன் ஊட்ட ஆரம்பித்தார் அவர்.
கன்யாவின் அப்பா இராணுவத்தில் இருந்தார். அவர் மிகவும் கண்டிப்பு. ஆனால் பார்வதி அவளுக்கு மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்தார். ஒற்றைப் பிள்ளை என்பதால் அவளுக்குச் சகலமும் கிடைக்க வேண்டும் என நினைப்பார். அதோடு மற்ற பிள்ளைகள்போல் தந்தை அருகில் இல்லை என்பதால் அதற்கும் சேர்த்து மகளைக் கொண்டாடித் தீர்த்தார்.
மகளுக்கு இருவேளையும் உணவை ஊட்டி விடுவார். கன்யாவும் தாய்க்கு உணவை ஊட்டி விடுவாள். அன்னை, மகள் இருவருக்கும் பாசம் அதிகம்.
“கன்யா குட்டி, அம்மா போய்த் தூங்கறேன். நீ ரெஸ்ட் எடு.” என மகளுக்குத் தனிமை கொடுத்து விட்டு அவர் சென்றுவிட, கன்யாவும் தன் அறைக்குச் சென்று படுக்கையில் வீழ்ந்து விழிகளை மூட எட்டிப் பார்த்தது சிவகார்த்திக்கின் தோற்றம்.
***
கன்யா பிரபல தனியார் கல்லூரியில் முதுகலை சேர்ந்திருந்தாள். கல்லூரியில் பட்டாம் பூச்சிபோல் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்திருந்தாள்.
அன்று விழா ஒன்று கல்லூரியில் நடந்து கொண்டிருந்தது. அவள் துறை சார்பாக வேலையில் ஈடுபட்டிருந்தவளுக்கு தலை சுற்றும் போல் இருந்தது. சட்டென்று தன் பையைத் தேடிப் பார்த்தவளுக்கு சாக்லெட் மற்றும் வேறு எந்த உணவுப் பொருளும் கையில் இல்லை. சரி உணவகம் சென்று விடலாமென முடிவெடுத்தவள் நடக்க ஆரம்பித்தாள். அன்று பார்வதி கூறுவதைக் கேட்காமல் வேலை இருக்கிறது எனக் கல்லூரிக்கு அவசரமாக வந்திருக்க, மதியம் வரை உணவு உண்ணவில்லை. தோழிகளும் அருகில் இல்லை.
நடந்து வந்தவளுக்கு விழிகளில் பூச்சி பறந்தது. சட்டென்று மயங்கிச் சரிய இருந்தவளைப் பிடித்து நிறுத்தி இருந்தான் சிவகார்த்திக்.
தொடரும்…
