அத்தியாயம் 23
பிரதிக்ஷா விதுரனை பார்த்து, ” காச குடுங்க? ” என்று சொல்ல விதுரன் திருதிருவென விழித்தான்.
பிரதிக்ஷா தன் முன்னால் நின்ற சிறுவனை பார்த்து லேசான புன்னகையை உதிர்த்து விட்டு, ” அவனுக்கு நிறைய வேலை இருக்கும். பணத்தை கொடுத்து சீக்கிரம் கொடுத்து அனுப்புங்க!” என பிரதிக்ஷா சொல்ல தடுமாறினான் விதுரன்.
இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதை சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை சமாளிப்பதற்காக “சில்லறை இல்ல போல அதான் யோசிச்சிட்டு இருக்காரு! பெரிய பிசினஸ்மேன் ஒரு நாள்ல கோடிக்கணக்கில் வரவு செலவு பண்ணுவாரு என்று!” என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தாள்.
“அண்ணனை பார்த்தாலே தெரியுது அக்கா!” என்று அந்தச் சிறுவனும் வழிமொழிந்தான்.
“இவ வேற! பணம்கிறதே எதுவும் கிடையாது எல்லாம் கார்டாவே இருக்கு, இப்ப என்ன சொல்லி சமாளிக்க?” என்று விதுரன் நினைத்துக் கொண்டிருக்க,
“என்னங்க பாத்துகிட்டு இருக்கீங்க, காசு கொடுக்குறீங்களா? இல்லையா?” என்று கோபப்பட்டாள் பிரதிக்ஷா.
“அடியே லூசு! என்கிட்ட காசே இல்ல, காசு இருக்கா இல்லையான்னு என்கிட்ட கேட்காம நீ சுண்டல் வாங்கி தின்னுட்ட, நானே என்ன பண்ணப் போறேன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன்!” என்று விதுரன் மெதுவாக சொல்ல, பிரதிக்ஷா விதுரனை அதிர்ச்சியாக பார்த்தாள்.
இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அந்த சிறுவன் “என்னாச்சுக்கா ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க, “அது ஒன்னும் இல்ல தம்பி, அவசரத்துல வந்ததனால அவர் கேஸ் எடுத்துட்டு வரல! எல்லாம் கார்டா இருக்கு, நீ அக்கவுண்ட் நம்பர் சொல்லு உனக்கு ஜிபே பண்றோம்!” என தயங்கிக்கொண்டே அந்தச் சிறுவனிடம் கூறினாள் பிரதிக்ஷா.
“அக்கா என்கிட்ட அக்கவுண்ட் எல்லாம் இல்ல!” என்று கூறினான் அந்த சிறுவன்.
“அப்போ, என்ன பண்றது?” என்று பிரதிக்ஷா கேட்க, ” பரவால்லக்கா இருபது ரூபா தானே! இன்னொரு நேரம் நீங்க இங்கே வரும்போது நான் வாங்கிக்கிறேன்!” என்று பெருந்தன்மையாக கூறினான் அந்த சிறுவன்.
“உனக்கு கிடைக்கிறதே இருபது ரூபாய் தான், அதையும் இன்னொரு நேரம் வாங்கிக்கிறேன்னு சொல்றியே? எங்க மேல உனக்கு எப்புடி நம்பிக்கை வந்துச்சு?”என்று கேட்டாள் பிரதிக்ஷா.
“வேற என்னக்கா செய்ய? உங்ககிட்ட தான் பணமா இல்லையே! யாரு ஏமாற்றுவா, ஏமாத்த மாட்டாங்கன்னு முகத்த வச்சு கண்டுபிடிச்சிடுவேன் அக்கா! உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒன்னும் பிரச்சனை இல்ல,அடுத்த நேரம் இந்த பக்கம் நீங்க வரும்போது குடுங்க!” என்று அந்தச் சிறுவன் கூறினான்.
பிரதிக்ஷா புன்னகைத்துக் கொண்டே, ” சரி வேலை விஷயத்த பத்தி சொன்னேனே நீ எதுவும் சொல்லலையே? ” என்று கேட்க,
“அம்மா கிட்ட இத பத்தி பேசிக்கிறேன்! வேலைய விடுறதுக்கு முன்னாடி எனக்கு வேலை கொடுத்த ஓனருக்கு சொல்லனும் அக்கா, அப்போ தான் எனக்கு பதிலா வேற யாரையாவது வேலைக்கு வைப்பாரு.அதுக்கப்புறம் நான் சொல்லிட்டு வேலையை விட்டு நின்றுவேன், நம்மளால யாரும் பாதிக்கப்படாக்கூடாதுல அக்கா!” என்று சிறுவன் சொல்ல விதுரன் திகைத்துப் போனான்.
“சரிக்கா எனக்கு நேரமாகுது நான் கிளம்புறேன் இன்னொரு நாள் பார்ப்போம்!” என்று சொல்லி விட்டு விடை பெற்றான் அந்தச் சிறுவன்.
விதுரன் போகின்ற சிறுவனையே சில வினாடிகள் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.ஏழ்மையும் வறுமையும் அவனிடத்தில் அளவு அதிகமாக இருந்தாலும் நேர்மையும் உண்மையும் அதிகம் என்று நினைத்துக் கொண்டான் விதுரன்.
விதுரனின் பார்வையை உணர்ந்த பிரதிக்ஷா, “பாத்தீங்களா யாருனுமே தெரியாதவன வேலைக்கு சேர்த்து விட்டு பிரச்சனையில மாட்டிக்கிறதனு சொன்னிங்க. ஆனால் அவன் நம்மள நம்பி சுண்டலுக்கு கொடுக்க வேண்டிய காச கூட இன்னொரு நாள் வாங்கிக்கிறேன்னு பெருந்தன்மையா சொல்லிட்டு போறான்.
இருபது ரூபா தானனு உங்களுக்கு தோணலாம்! ஆனால் அந்த இருபது ரூபாய்க்காக தான் அவன் இவ்வளவு கஷ்டப்படுறான்!” என்று பிரதிக்ஷா சொல்ல விதுரனுக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.
“யாரையும் தோற்றத்தை பாத்து எடை போடாதீங்க, அவங்க மனச பாருங்க, அவங்க கிட்ட பேசி பாருங்க, அப்போ யாரு நல்லவங்கணும் உங்களுக்கு புரியும்!” என்று சொல்லி விட்டு அமர்ந்திருந்தவள் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
பிரதிக்ஷாவின் பேச்சை புரிந்து கொண்ட விதுரன் பிரதிக்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்க எண்ணி “ஒரு தடவை தப்பு பண்ணுனாலும் தப்பு தான். அவங்க நல்லவங்கணும யாரும் சொல்ல மாட்டாங்க, அவங்க நடத்தையிலேயே தெரியும் அவங்க யாருன்னு!” என்று கூறினான் விதுரன்.
“இங்க யாரும் நல்லவங்களும் கிடையாது, அவங்க பண்ணுன தப்பு வெளியே தெரியாதவரை அவங்க நல்லவங்க.வெளியே தெரிஞ்சால அவங்க கெட்டவங்க அவ்வளவுதான். அவங்க அவங்க செஞ்ச தப்புக்கு அவங்க பக்கம் நியாயம் இருக்கும். சில நேரங்கள்ல அவங்க எந்த சூழ்நிலையில அதை பண்ணி இருப்பாங்கன்னு கொஞ்சம் யோசிச்சு பார்க்கலாம்!” என்று சூசகமாக விதுரனுக்கு உரைத்தாள். ” நீ சொல்ற மாதிரி யோசிச்சா எல்லார் பக்கமும் நியாயம் இருக்கும். சூழ்நிலைய காரணம் காட்டினாலு தப்பு தப்பு தான்!” என்று அலட்சியமாய் கூறினான் விதுரன்.
“சரி அதை விடுங்க பொண்டாட்டியை வெளியில கூட்டிட்டு வர்றோமே, அவ ஏதாவது வாங்கி கேப்பா வாங்கி கொடுக்கணுமே, காசு எடுத்துட்டு வர மாட்டீங்களா? காசு இல்லைன்னு சொல்றீங்களே உங்களுக்கு அசிங்கமா இல்ல!”, என்று பிரதிக்ஷா கேட்க, பிரதிக்ஷாவை முறைத்தான் விதுரன்.
என்ன முறைக்கிறீங்க என்று பிரதிக்ஷா கேட்க, ” அடியே லூசு, நான் இப்படி எங்கேயும் வெளியில வந்தது கிடையாது. இப்படி அஞ்சு, பத்து செலவழிச்சதும் கிடையாது. எல்லாமே கூகுள் ட்ரான்ஸாக்ஷன் தான். அதனால எங்கிட்ட பணம் இருக்காது “என்று கூறினான்.
“அப்ப இப்ப எப்படி இருபது ரூபாய்க்கு அசிங்கப்பட்டிங்களோ அப்படித்தான் இனிமேலும் அசிங்கப்படுவீங்க” என்று கூறினாள் பிரதிக்ஷா.
“நான் எதுக்கு அசிங்கப்பட போறேன், நீ என்ன என் கூடயேவா இருக்க போற! ஆறு மாசத்துல நீ என் வாழ்க்கைய விட்டு போயிருவ, மனிஷா இப்படி இடங்களுக்கு எல்லாம் வரமாட்டா. பெரிய பெரிய ஹோட்டல் ரெசார்ட் அந்த மாதிரி தான் அழைச்சிட்டு போக சொல்லுவா? அதனால எனக்கு இந்த பத்து ரூபா பிரச்சனை இனிமேல் வராது!” என்று அலட்சியமாய் சொல்லிவிட்டு அங்கிருந்த கடந்து சென்றான் விதுரன்.
‘நீ ஏன் கூடயேவா இருக்க போற , ஆறு மாசத்துல உனக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது’ என்று விதுரன் என்று சொன்ன வார்த்தை பெண்ணவளின் உள்ளத்தில் ஆழமாக பதிய அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
முன்னே சென்ற விதுரன் தன் பக்கத்தில் வந்து கொண்டிருந்த பிரதிக்ஷாவின் நிழல் தன்னோடு தொடர்ந்து வராமல் அங்கேயே நின்று விட்டதை பார்த்து திரும்பி,
“என்னாச்சு அங்கேயே நின்னுட்ட!” என்று கேட்க, ஒன்னும் இல்லை என்பதைப் போல் தலை அசைத்து விட்டு விதுரனை நோக்கி முன்னேறி வந்தாள் பிரதிக்ஷா.
இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக காரில் ஏறி வீடு நோக்கி புறப்பட்டனர்.
இங்கு விதுரனின் வீட்டில்,
இங்கு இவர்களின் வருகைக்காக சரஸ்வதியும் அம்பிகாவும் ஹாலில் காத்துக் கொண்டிருந்தனர்.
‘பிரதிக்ஷாவின் முகம் வாடி இருப்பதை பார்த்துவிட்டு, டைவர்ஸ் ஆபீசுக்கு போனனாலதான் பிரதிக்ஷாவோட முகம் வாடி இருக்குது போல’ என்று இருவரும் நினைத்து விட்டனர்.
“சரி எனக்கு டயர்டா இருக்கு நான் பிரஷாக போறேன்!”என்று விதுரன் சொல்ல,
“விதுரன் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சரஸ்வதி சொல்ல அப்படியே நின்றான் விதுரன்.
“என்னம்மா என்ன பேசணும்?” என்று விதுரன் கேட்க, ” நான் வீட்டுக்கு போறேன் அப்பா அங்க தனியா என்னை எதிர்பார்த்துகிட்டு இருப்பாரு!” என சரஸ்வதி சொல்ல சரஸ்வதியை பார்த்தான் விதுரன்.
“நீயும் பிரதிக்ஷாவும் இப்ப டைவோர்ஸ் ஆபீஸ்க்கு தான் போயிட்டு வர்றீங்கன்னு எனக்கு தெரியும். ஆனாலும் ஒரு தாயா என்னோட எண்ணத்தை உன் கிட்ட சொல்ல ஆசைப்படுறேன். நீ டைவர்ஸ் பண்றது எனக்கு புடிக்கல? “என்று சரஸ்வதி சொல்ல அப்படியே அதிர்ந்து போனான் விதுரன்.
“அம்மா….கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு நீங்க தானே புடிக்கலைன்னா டைவர்ஸ் பண்ணிடுன்னு சொன்னீங்க?” என்று விதுரன் கோபத்தோடு கேட்க,
“ஆமா சொன்னேன்! கோபமா இருந்த உன்னைய சமாதானப்படுத்துவதற்காக சொன்னேன். பிரதிக்ஷா ஏதோ ஒரு திட்டத்தோட தான் இப்படி பண்ணியிருப்பாளோனு சந்தேகப்பட்டு சொன்னேன். ஆனால் இப்ப பிரதிக்ஷா மேல எனக்கு சந்தேகமும் இல்லை.இந்த வீட்டுக்கு பொருத்தமான மருமகன்னு என் மனசு சொல்லுது, யார் யாரோட சேரனும்கிறது கடவுளோட திட்டம் நம்ம ஒன்ன நெனச்சு திட்டம் போட்டு இருக்கும்போது அந்தத் திட்டம் மாறி வேற ஒன்னு நடக்குதுன்னா அவங்க ரெண்டு பேரும் தான் ஒன்னு சேரணும்கிறது தான் கடவுளுடைய திட்டமா இருந்திருக்கும்.
நீனும் பிரதிக்ஷாவும் சேர்ந்து வாழணும்ங்கறது தான் கடவுளுடைய திட்டம்னு நாங்க நம்புறோம் . அதனால நடந்ததை மறந்துட்டு பிரதிக்ஷாவோட சேர்ந்து வாழ பாரு!” என்று சரஸ்வதி சொல்ல பிரதிக்ஷாவை முறைத்துப் பார்த்தான் விதுரன்.
“அவளை எதுக்கு முறைக்கிற, அவதான் என்கிட்ட ஏதோ சொல்லி இப்படி பேச வச்சிருக்கான்னு நினைக்கிறியா? உனக்கு தெரியும் என்னைய பத்தி, யாரு என்ன சொன்னாலும் என்ன நெனச்சாலும் நான் என்ன நினைக்கிறேனோ, அதை மட்டும் தான் செய்வேன்! அடுத்தவங்க சொல்றதை எப்பவுமே செய்ய மாட்டேன்!” என்று அழுத்தமாக கூறினார் சரஸ்வதி.
“அம்மா உங்கள பத்தி எனக்கு தெரியும், என்னைய பத்தியும் உங்களுக்கு தெரியும்! நான் முடிவெடுத்தது எடுத்ததுதான். நான் டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டு வந்துட்டேன். ஆறு மாசம் ரெண்டு பேரும் சேர்ந்து தான் வாழனும்னு சொல்லி இருக்காங்க! இந்த ஆறு மாசம் கழிச்சு அவ இந்த வீட்ட விட்டு வெளியில போயிருவா?
அதை ஞாபகம் வச்சுக்குருங்க. அத மறந்துட்டு இவதான் உங்க மருமகன்னு நீங்க நெனச்சு உங்க மனசுல ஆசைய வளர்த்திராதீங்க! மனிஷா தான் உங்க மருமக, நான் அவளதான் காதலிக்கிறேன்! அவளோட சேர்ந்து வாழ ஆசைப்படுறேன்!” என்று கோபமாக கூறினான்.
சரஸ்வதி எதுவும் சொல்லாமல் அமைதியாக ” ஒரு தாயா நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்! நான் கிளம்புறேன்” என்று சொல்ல,
“நான் வந்து உங்களை விட்டுட்டு வரவா?” என்று விதுரன் கேட்க, ” அதெல்லாம் வேண்டாம் நான் போய்கிருவேன்” என்று பிடிவாதமாக சரஸ்வதியும் கூறினார்.
இவங்க ரெண்டு பேரும் பேசறதும், கோபப்படுறதும் ஒரே மாதிரி இருக்கே, உண்மையிலேயே அம்பிகா தான் இவரைப் பெத்த அம்மாவா இல்ல சரஸ்வதி அத்த தான் இவரை பெத்த அம்மாவா? கண்டிப்பா சரஸ்வதி அத்தை தான் விதுரனோட அம்மாவா இருக்கும், உண்மை என்னனு சீக்கிரம் கண்டு புடிக்கணும்!”என நினைத்து கொண்டாள் பிரதிக்ஷா.
