அத்தியாயம் 24

கோவை பேரூர் ரோட்டில் உள்ள அந்தப் பிரம்மாண்டமான திருமண மஹாலில், மேடையில் மணமக்களான சத்யா, பாரதி இருவரும் அவர்களது உறவினர்களுடன் போட்டோக்கள் எடுத்துக் கொண்டிருக்க, ஆர்க்கெஸ்ட்ரா இசைக்குழுவில் இருப்பவர்கள் இனிமையான பாடல்களை பாடிக் கொண்டிருக்க, அங்கங்கே பெரியவர்களும், இளையவர்களும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 

நதியா வெள்ளை நிறத்தில் சீக்வன்ஸ் ஒர்க் செய்திருந்த அனார்கலி சுடிதார் அணிந்திருக்க, வைஷாலி அதே மாதிரியே வான நீல நிறத்தில் அணிந்திருந்தாள். ‘இதுதான் மிதுன் பொண்டாட்டியா?’ ராஜீவ் நதியாவைப் பார்த்தவன், தன் குடும்பத்தாரிடமும் அவளைச் சுட்டிக்காட்டினான். 

விஷ்ணு அவர்களுக்கருகில் வந்தமர்ந்திட, “விச்சு.. சேம் பின்ச். நாம ரெண்டு பேரும் ஒரே கலர்ல ட்ரெஸ் பண்ணியிருக்கோம் பாருங்க” குழந்தையாய் வைஷு சிரித்துக் கொண்டே சொல்ல,

அப்போதுதான், தானும் அதே வான நீல நிறத்தில் ஹாஃப் காலர் குர்தா சட்டை அணிந்திருப்பதைக் கவனித்தான். வைஷு சமீபகாலமாக தன்னிடம் நட்போடு பழகுவது விஷ்ணுவுக்குப் பிடித்திருந்தது. 

அங்கு வந்த அரவிந்தும், ரேஷ்மியும் அவர்களுக்கருகில் அமர்ந்து கொண்டனர். ரேஷ்மியின் அண்ணன் குழந்தைகள், சத்யாவின் அக்கா குழந்தைகள் என எல்லோரும் அங்கே விளையாடிக் கொண்டிருக்க, 

நதியாவும், வைஷாலியும் அவர்களுடன் சேர்ந்து குறும்புத்தனமாகப் பேசி, சிரித்து விளையாடினர்.

குழந்தைகள் பாடல்களுக்கு ஏற்றவாறு நடனம் ஆடிக் கொண்டிருக்க, நதியாவும், வைஷாலியும் அவர்களை ரசித்தவண்ணம் இருந்தனர். மிதுனுக்கு அலுவலக விஷயமாக செல்போனில் ஏதோ முக்கியமான அழைப்பு வர, பாட்டுச்சத்தம் அதிகமாக இருந்ததால் வெளியே கொஞ்சம் தள்ளிச் சென்று பேசிக் கொண்டிருந்தான். 

குழந்தைகளோடு விளையாடிய நதியா, அவர்களைத் துரத்திப் பிடிக்கச் சென்றவள், அங்கே நின்றிருந்த மிதுன் மீது மோதிச் சரிந்தாள். அவளைத் தாங்கிப் பிடிக்க நினைத்தவனும் நிலைதடுமாற, இருவரும் ஒன்றாகத் தரையில் விழுந்தனர்.

தரையில் சாய்ந்திருந்த மிதுனின் மீது, அவள் பூவனமாய் விழுந்து கிடக்க, உடல்கள் உரசிக் கொண்டதில் இருவருக்குள்ளும் மின்சாரம் பாய்ந்த உணர்வு. இருவரின் உடல்களும் இணைவது புதிதல்ல, அவர்களின் உணர்வுகள் தான் புதிது. 

மிதுன், நதியா இருவரின் ஆழ்மனதில் மறைந்திருந்த காதலும், அவர்களின் ஸ்பரிசமும் ஒன்று சேர, அந்த தருணத்தின் உன்னதத்தில் காலம் அப்படியே உறைந்து போனது.

ஓ… அவள் முகம் பார்த்து…

நான் இன்று தடுமாறினேன்… 

ஓ… நிழல் தொட வேர்த்து…

உயிர் கொண்ட சிலை ஆகிறேன்… ஓ…

சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்…

மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்…

சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்…

மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்…

டோண்ட் யூ பேப் ப்ரேக் மை ஹார்ட்…

ப்ரேக் மை ஹார்ட் ப்ரேக் மை ஹார்ட்…

சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்…

மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்…

சோ பேபி டோண்ட் யூ…

டோண்ட் யூ டோண்ட் யூ…

அவர்களுக்கு அருகில் இருந்த ஸ்பீக்கரில் பாடல் அலற, இருவரும் சுயத்திற்கு மீண்டனர். மிதுன் மார்பில் சரிந்திருந்தவள் மெல்ல தலைநிமிர்ந்து அவனைப் பார்த்திட, பல மாதங்களாக அவனது நினைவுத் திரையில் மங்கலாகத் தெரிந்த அந்த முகம், இப்போது அவன் மூச்சுக் காற்றின் தூரத்தில் தெரிய, அது நதியா தான், அவனது உள்ளம் சூளுரைத்தது.

“சாரி..” சிரித்தவாறு அவன் மார்பில் கைவைத்து எழுந்தவள், “சார்.. எழுந்திருங்க” கையை நீட்டி இளகிய குரலில் அழைத்திட, அது அவன் தேடிக் கொண்டிருந்த காதலியின் குரலே தான். அவனைத் தூக்கிவிட்டவள் அங்கிருந்து மண்டபத்திற்குள் நுழைய மிதுன் அவளின் பின்னே சென்றான். 

வைஷாலியின் அருகே சென்று அவள் அமர்ந்திருக்க, மிதுனின் காதல் ததும்பும் பார்வை அவளின் மீதே படர்ந்திருந்தது. நதியா அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தாலும் துறுதுறுவென ஏதேனும் செய்தவாறு இருக்கிறாள். படபடக்கும் அவள் இமைகளை சிமிட்டிக் கொள்கிறாள், நுனிமூக்கை அடிக்கடி சுருக்கிச் சிரிக்கிறாள். இதழை நாவால் ஈரப்படுத்துகிறாள். தன் மெல்லிய விரல்களால் கழுத்துச் செயினைத் தொட்டு விளையாடுகிறாள். 

அவள் வாயைத் திறந்து சத்தமாக சிரித்திட, இன்று தான் அவளுடைய அழகுக்கு அழகு சேர்க்கும் தெற்றுப் பல்லைப் பார்க்கிறான். அவளின்  முத்துப் பற்கள் வரிசை மாறியிருந்தாலும், புன்னகையோ இதழ்களுக்கு இடையே மின்னும் மின்னல் கீற்றெனத் தெரிந்திட, அதில் தொலைந்திருந்தான் அந்த கம்பீர ஆணவன்.

ஓ… இதுவரை பார்த்த பெண்ணில் உனைபோல எனையாருமே…

அழகாலே கொன்று தின்று உயிர் மீட்டு தரவில்லையே…

உன்னோடு நடக்கின்ற சிறுதூரம்…

கிடைக்கின்ற சில நேரம்…

என் வாழ்வின் வரமாகவே…

இரவெல்லாம் உனை தேடி அலைகின்றேன்…

கிடைத்தும் நான் தொலைகின்றேன்…

புயல் காற்றில் விளக்காகவே…

பாடல் வரிகள் காற்றில் ஒலித்துக் கொண்டிருக்க, அவன் மனமும் அவளுக்காக அந்தப் பாடலை உள்ளுக்குள் முணுமுணுத்தவாறு இருந்தது. 

அவனது பழுப்பு நிற விழிகளால், அவள் அழகை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தவனைத் திரும்பிப் பார்த்தவள் சிரித்திட, இருவரின் மனதில் இருந்த காதலை அவர்களது விழிகள் பரிமாறிக் கொள்ள, இருவருக்குள்ளும் இனம்புரியாத இன்பமான மெல்லிய அதிர்வு.

வீட்டிற்குத் திரும்பிய பின்னரும், காதல் அவஸ்தையில் தூக்கமின்றித் தவித்தவர்கள் மெத்தையில் புரண்டு படுத்தபடி இருந்தனர். தென்றலென அவனை தழுவிச் சென்றவளின் உடல் தீண்டிய, அவனது உடல் பாகமெல்லாம் அவளை மொத்தமாய்க் கேட்க, தாப உணர்வுகளில் தவித்துப் போயிருந்தான் மிதுன். 

அதிகாலை எழுந்து சத்யாவின் திருமணத்திற்குத் தயாராகினர். மிதுன் கொடுத்த டிசைன்படி வைஷாலி நதியாவிற்காக ஒரு லெஹங்கா வடிவமைத்திருந்தாள். டிரெஸ்ஸிங் ரூமில் கருமை நிறத்தில் ஜமிக்கியும், கற்களும் பதித்த அழகிய வேலைப்பாடுகள் கொண்ட லெஹெங்கா வை அவள் அணிந்து கொண்டே அவனுடைய வார்டுரோபை பார்த்தாள். 

அங்கிருந்த பெரும்பாலான டீஷர்ட், ஜீன்ஸ், பிளேஸர், ஷெர்வானி, ஷர்ட் என எல்லாமே அவனுக்குப் பிடித்த கருமை நிறத்தில் தான் இருந்தன. ‘இவருக்கு வேற கலரே பிடிக்காதா?! இது கொஞ்சம் கறுப்பு, இது நிறைய கறுப்பு, இது பயங்கர கறுப்பு, இது கறுப்புல பயங்கர ஒர்க் பண்ணியிருக்கு. இது கருநீலம் அய்யோ ஒரே இருட்டா இருக்கே. சும்மா இருந்த எனக்கும் கறுப்பு டிரெஸ்ஸை மாட்டி விட்டுட்டார்’ புலம்பியவாறே உடையை அணிந்து கண்ணாடியின் முன்பு நின்றவள், தன்னழகில் மெய்மறந்து போனாள். 

அவள் தயாராகி வெளியே வந்ததும் மெத்தையில் அமர்ந்திருந்தவன், நிமிர்ந்து அவளைப் பார்த்துத் தன் புருவங்களை உயர்த்தி, அவளை விழி இமைக்காமல் ரசித்தான். 

அவனும் குளித்து முடித்து, டிரெஸ்ஸிங் அறையிலிருந்து வெளியே வந்தவன், “நதியா.. கிளம்பலாமா?” என்று கேட்க, செல்போனில் இருந்து பார்வையை விலக்கி அவனைப் பார்த்தவள், வெள்ளை நிறத்தில் கோட்டின்(Coat) ஒரு பக்கம் மட்டும் கோல்டன் நிறக் கற்கள் பதித்திருந்த பிளேஸர் செட் அணிந்து, மிடுக்காய் நின்றிருந்த ஆறடி ஆணவன் அழகில் மயங்கித் தன்னை மறந்து, “வாவ்…” என்றிருந்தாள். 

மனம் நிறைந்த மகிழ்ச்சியில் அவன் இதழ்களை நன்கு பிரித்து வசீகரமாய் சிரித்திட, ‘அய்யோ அழகா சிரிக்கிறாரே!! இந்த சிரிப்பை எங்கேயோ பார்த்திருக்கேனே?’ என நினைத்தவள் சட்டெனத் திரும்பி அங்கிருந்த அவன் ஆளுயர போட்டோ ஃப்ரேமைப் பார்த்தாள். ‘அப்போ இது நிஜமாவே அவர் சிரிச்சு எடுத்த போட்டோ தானா?!’ தனக்குள்ளே நினைத்துச் சிரித்தாள்.

அப்போதுதான் மிதுன் அவள் கையிலிருந்த வளையலைப் பார்த்தான். “இந்த வளையல்..” அவன் யோசனையோடு அதைச் சுட்டிக்காட்டிக் கேட்டிட, “இது என்னோட அப்பா ஜெய்ப்பூர்ல இருந்து வாங்கிட்டு வந்தாங்க. அங்க லேக் பாங்கிள்ஸ்னு(அரக்கு வளையல்கள்) நம்ம கேட்கிற கலர்ல உடனே செஞ்சு தருவாங்களாம். எனக்கு ஒயிட் கலர் பிடிக்கும். அதனால ஒயிட் வித் மல்டி கலர்ல ஜிலேபி டிசைன்ல எனக்காக வாங்கிட்டு வந்தாங்க. இதுல என் பேரோட முதல் எழுத்து ‘N’ கூட போட்டிருக்கும் பாருங்க” வளையலின் கதையை அவள் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டிருக்க, 

மிதுன் வேகமாக டிரெஸ்ஸிங் ரூமிற்குள் நுழைந்தவன், அங்கிருந்த நகை வைக்கும் லாக்கரைத் திறந்து ஒரு வளையலை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான். அதே மாதிரி லேக் வளையல் தான். அவள் அதை வாங்கி திருப்பித் திருப்பிப் பார்த்தால், அதிலும் ‘N’ போட்டிருந்தது.

“இது என்னோட வளையல் தான், எங்கேயோ தொலைஞ்சிடுச்சு. அன்னைக்கு நாம என்னோட வீட்டுக்குப் போனோமே அப்போ இது ஒண்ணு தான் இருந்தது. அப்பா ரெண்டு வாங்கிட்டு வந்தார். இன்னொன்னு காணோமே அப்படின்னு தேடிப் பார்த்தேன், அங்க கிடைக்கல. உங்க கிட்ட இந்த வளையல் எப்படி வந்தது?” என்று கேட்டவள் பதிலுக்காக அவன் முகத்தைப் பார்க்க, மறுபடியும் உள்ளே சென்றவன் ஒரு வெள்ளை நிற ஷாலோடு வந்தான். 

அதை விரித்துப் பார்த்தவள், “இது என்னோட ஷால் தானே. மயில் டிசைன் பிரிண்ட் பண்ணியிருந்த ஷால் ஒண்ணுதான் வச்சிருக்கேன். ஆமா இதை ஏன் எடுத்துட்டு வந்தீங்க?” அவள் மீண்டும் பதிலை எதிர்பார்த்து அவன் விழி நோக்க, பேச்சற்றுத் திகைத்து நின்றிருந்தான்.

“நதியா.. என்னை நீ இந்த வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா?” அவன் கண்களில் தவிப்போடு கேட்டிட, “ஆமா ஆபீஸ்ல பார்த்தோமே” என்றாள்.

“அதுக்கும் முன்னால என்னைப் பார்த்திருக்கியா?”

“இல்லையே.. ஏன் கேட்கிறீங்க?”

“உன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆக்சிடென்ட் நடந்தது சரவணம்பட்டிலயா?”

“இல்ல அவிநாசியில” என்றவள் சில நிமிடங்கள் யோசித்தபின், “அன்னைக்கு நான் காலேஜ் முடிஞ்சு சரவணம்பட்டில இருந்து கிளம்புனப்போ அங்க ஒரு பெரிய ஆக்சிடென்ட் நடந்தது. நானும் பார்த்தேன். அங்க இருந்த ஸ்டூடன்ட்ஸ் நாங்க, பக்கத்துல இருக்க எல்லாரும் போய் ஆக்சிடென்ட்ல காயமானவங்களை தூக்கி ஹெல்ப் பண்ணோம்” அவள் நினைவுகூர்ந்து சொல்லி முடித்ததும்,

மிதுன் தளர்ந்து போய் மெத்தையில் அமர்ந்தவன், தலைமுடியை அழுத்தமாய் கோதினான். 

“ஏன் என்னாச்சு? திடீர்னு எதுக்கு கேட்கிறீங்க?” நதியா அவன் கேள்விகளாலும், முக பாவனைகளைப் பார்த்தும் குழம்பியிருந்தாள்.

“அன்னைக்கு நீதான் என்னைக் காப்பாத்துன? உனக்கு என்னைப் பார்த்ததா ஞாபகம் இல்லையா?”

“நாங்க நிறைய பேரைக் காப்பாத்தினோம். அதோட என்னோட பேரண்ட்ஸ்க்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னு போன் வந்ததும் நான் அங்கிருந்து வேகமா கிளம்பிட்டேன். அதுக்கப்புறம் நடந்த பிரச்சனைல எனக்கு எதுவும் ஞாபகம் இல்லையே”

“இந்த வளையல் ஹாஸ்பிடல்ல நான் கண் முழிச்சப்போ என் கைல இருந்தது, நீ என்னோட தலையில கட்டின ஷால் இது ரெண்டையும் நான் பத்திரமா எடுத்து வச்சிருந்தேன்” 

“ரொம்ப தேங்க்ஸ்” வளையலை அணிந்து கொண்டவள் சிரித்தவாறு சொல்லிட, 

இந்தச் சில மாதங்களாய் அவன் மனதில் தீட்டியிருந்த காதல் ஓவியம், உயிர்பெற்று கண் முன் நின்றிருக்க, ‘அவளிடம் நன்றியைச் சொல்வதா? காதலைச் சொல்வதா?’ அவனது வார்த்தைகள் வெளிவர மறுத்தன.

அவன் விழியோரம் துளிர்த்து நின்ற கண்ணீரைப் பார்த்தவள், “என்னாச்சு மிதுன்?” என்றவாறு அவன் கரங்களைப் பற்றினாள்.

மிதுன் எப்படி தன்னுடைய காதலை அவளிடம் சொல்வான்? ‘என் உயிரைக் காப்பாற்றியவளை ஒப்பந்தம் போட்டு இந்த வீட்டிற்குள் கொண்டு வந்தேன். அவளை ஒரு வேலையாள் போல நடத்தினேன். அவள் சூழ்நிலையை எனக்குச் சாதகமாக்கி அவளை என் கைப்பாவையாய் செய்து வைத்தேன். நம்பிக்கையே இல்லாமல் அவளுடைய செல்போனை சோதனை செய்தேன். எனக்கு அவளைக் காதலிக்க என்ன தகுதி இருக்கிறது?’ உள்ளுக்குள் கதறினான். செய்த தவறுகள் அவன் கண்முன்னே வந்து அவனை குற்ற உணர்விற்குள் தள்ளின. 

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்தியவன், “வா போகலாம்” என்று குழப்பத்தோடு அருகில் அமர்ந்திருந்தவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான். திருமண மண்டபத்தில் மிதுன் நண்பர்களோடு இருந்தாலும், அவன் பார்வை அவளைத்தான் தழுவிக் கொண்டிருந்தது. 

அவள் அணிந்திருந்த லெஹென்கா பிளவுஸி‍ன் முன்புறம் லோ நெக் வைக்கப்பட்டிருக்க, அவள் போட்டிருந்த நெட் தாவணி விலகியபோது தெரிந்த, அவளது முன்னழகையும், இடையழகையும் கண்டு லயித்திருத்தான். “மித்து.. மித்து..” யாரோ சத்தமாக அழைக்க, அவன் திரும்பிப் பார்த்தால் ராகுல் நின்றிருந்தான். 

“எவ்ளோ நேரமா உன்னைக் கூப்பிடுறது. அந்த பொண்ணைக் கண்டுபிடிச்சுட்டேன். ஆனா இந்த ஃபுட்டேஜ்ல எனக்கு ஃபேஸ் சரியா தெரியலை, பாரு..” ராகுல் தன்னுடைய செல்போனை அவனிடம் தந்ததும், வேகமாய் அதை வாங்கிப் பார்த்தான். 

அது நதியாவே தான். அவள் போட்டிருந்த வளையல், அந்த ஷால், மங்கலாய் தெரிந்தாலும் அவன் ரசித்துப் பார்த்த அவளுடைய முகத்தை அவனுக்குத் தெரியாதா? பெரும் போராட்டத்தில் இருந்த மனதை அமைதிப்படுத்தியவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

❤️‍🔥 மோகம் தீர்ப்பாள் ❤️‍🔥

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page