யாழினியைக் கொல்ல நடந்த முயற்சி ஆரியனின் பொறுமையைச் சுட்டெரித்தது. என்று ஒரு எதிரி நிம்மதியாக வாழும் வீட்டிற்குள்ளே நுழைந்து நிம்மதியே கெடுக்கப் பார்த்தானோ, இனி அவன் நிம்மதியாக வாழ்ந்து யாருக்கு என்ன புண்ணியம். இனி அந்த ரத்ன வேல் இருப்பது, தன் போல குணாதிசயம் கொண்டு இருக்கும் மனிதர்களுக்கு அவன் ஆபத்தானவனே என உணர்ந்த ஆர்யன். இது வரை ஒரு கலைஞனாக இருந்தவன் இப்போது ஒரு பாதுகாவலனாக விஸ்வரூபம் எடுத்தான். வீட்டிற்கும் சரி நாட்டிற்கும் சரி அவனது செயலே பாதுகாப்பு.
குழந்தையை கவனித்துக்கொண்டு இருந்த யாழினி அருகில் சென்று, அவளை நெருக்கமாக அணைத்துக்கொண்டு
“யாழினி, நீ சங்கீதாவை பத்திரமாப் பார்த்துக்கோ. ரியா இங்கேயே உனக்கு பாதுகாப்புக்கு இருப்பாள். நான் போய் இந்த அத்தியாயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சுட்டு வர்றேன்,” என்று சொல்லிவிட்டு நகர முற்பட்டான்.
அவனை தடுத்து நிறுத்திய யாழினி…. “ஆர்யா நீ போறது, ஒரு நியாமான தேவைக்காக ஆனால் எங்களை ஒரு முறை நினைத்துப் பார்த்தாயா? சரி இனி எந்த பிரச்னையும் வரக்கூடாதுனு நல்ல நோக்கத்திற்காக நீ போற, ஆனா உனக்கொன்னு ஆனா நாங்க எங்க போவோம்?
யாழினியின் கேள்விகள் ஆர்யனை பதில் சொல்ல முடியாமல் செய்தாலும், ஆர்யன் அன்பாக யாழினியை பார்த்து சொன்னான்.
“நம் காதலின் சக்தியை எப்படி நீ மறந்தாய், தாய்மை உள்ளம் காதலை மறந்து விட்டதா, இந்த மாதிரி உன் அண்ணன் யோசித்து இருந்தால் நாம் இன்று காதலோடு வாழவே முடியாது அதை நீ மறந்துட்டியா, நம்ம வீடு ஏறி நம்மள கொல்லப் பார்த்தவங்களை இன்னும் மன்னித்து அருள நான் நீ பிரார்த்திக்கும் இறைவன் இல்லை, உன்னை நேசிக்கும் சாதாரண மனிதன். அந்த நேசம் எப்பொழுதும் இருக்க வேண்டுமானால் நான் இப்போது போய் தான் ஆக வேண்டும்”
யாழினுக்கு அதற்கு மேல் பேச மனம் வரவில்லை, ஆர்யனின் வார்த்தையில் உள்ள நியாயத்தை உணர்ந்த யாழினி.
“ சரி எப்ப வருவ?”
“ நமக்கு இனி பிரச்சினையே இல்லை, பிரச்சனையை கூட நல்லது இல்லாத நிகழ்வு என நம் வார்த்தை பேசும் பொழுது, நம் வீட்டிற்கு இந்த நாட்டின் காவலர்கள், என்று சொல்லும் காவலர்கள் நம் வீட்டு முன் நமது நல் செயலுக்காக காவலுக்கு நிற்கும் பொழுது நானும் இங்கு நிற்பேன்”
சில நொடிகளில் ரியா வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்,
“ நீங்க போங்க ஆர்யன் நான் பாத்துக்கிறே”
ஆர்யன் யாழினி நெற்றியில் ஒரு முத்தத்தையும், மற்றும் குழந்தை சங்கீதா பாதத்தில் ஒரு முத்ததையும் கொடுத்துவிட்டு கிளம்பி சென்றான்.
அவன் போகும் வேகத்தை பார்த்த ரியா, “நாங்க வீட்ட விட்டு பார்டருக்கு போகும் போது, திரும்பி வருவோமா, இல்லை அங்கேயே மாறிப்போமா தெரியாது ஆனால் வெற்றி என்ன பாதுகாப்பு. அதற்கு தானே இத்தனை போராட்டம். ஆர்யன் நிச்சயம் வெற்றியோடு திரும்பி வருவான்”
ரியாவின் கூடுதல் தன்னம்பிக்கை வார்த்தைகள் அப்போது வரை ஆறுதல் அளித்தது.
சென்னை மத்தியச் சிறைச்சாலை. இரும்புக்கதவுகளின் பின்னால், முன்னாள் அமைச்சர் ரத்தினவேல் தனது பழைய கம்பீரம் குலையாமல் அமர்ந்திருந்தார். ஆரியன் அவருக்கு முன்னால் வந்து அமர்ந்தபோது, ரத்தினவேல் ஒரு கேலியான புன்னகையை வீசினார்.
“என்ன ஆரியன்? உன் காதுகள் இப்போ நல்லாக் கேட்குதா? உன் வீட்டுக்கு நான் அனுப்பின ‘பரிசு’ உனக்குப் பிடிச்சிருந்ததா?” என்று ஏகத்தாளமாகக் கேட்டார்.
“ ரொம்ப பிடிச்சிருக்கு சார், ஒரு மக்கள் பிரதிநிதி மக்களை அழிக்க போடுகிற ஒவ்வொரு திட்டமும் அற்புதம், இதை மக்கள் நலனுக்காக யோசித்து இருந்தால் மக்கள் உங்களை எங்கோ கொண்டு வைத்து கொண்டாடி இருப்பார்கள்”
“ டே… நீ மக்களை பத்தி பேசாத, அவனுங்க எல்லாம் சுய ஒழுக்கம் இல்லாமல், ஓட்டுக்கு லஞ்சம் வாங்குற ஊழல் கூட்டம், அவங்களுக்கு கொடுத்த லஞ்ச பணத்தை தான் ஆட்சிக்கு வந்து நாங்க திரும்ப எடுத்துகிறோம் இதுல என்ன தப்பு. அவங்க சரியா இருந்தா நாங்க எதுக்கு ஊழல் பண்ண போறோம்?”
“ என்ன சார், பேசுறீங்க? மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே என்ற கொள்கையை பின் பற்றி வாழுற அப்பாவி கூட்டம் சார், நம்ம மக்கள். அவர்களின் பணத்தேவை எப்போதும் இருக்குமாறு ஆட்சியாளர்கள் அவர்கள் நிலையை வச்சிருக்கீங்க”
“ இங்க பாரு, பொது கருத்து பேசவோ என்ன பாக்க வந்த? என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த உன்ன என்ன செய்றேன் மட்டும் பாரு, அதுக்கப்புறம் ஒரு அரசியல்வாதிய பகைச்சிட்டா என்ன நடக்கும்னு ஒரு பயம் மக்களுக்கு வரும்”
“ பாதுகாப்பு கொடுக்க சொன்ன பயத்தை கொடுக்குற உங்கள மாதிரி அரசியல் வியாதிகளை குணமாக்க வேண்டியது இசை கலைஞனா என்னோட பொறுப்பு”
கோபத்தில் உச்சிக்கு சென்ற ரத்ன வேல், ஆர்யன் முகத்தில் காரித்துப்பினார், நல்ல வேலையாக சட்டென கழுத்தை சாய்த்ததில் ரத்னவேலுவின் எச்சில் எனும் திராவகம் ஆர்யன் மீது படவில்லை.
ஆரியன் ஆத்திரமடையவில்லை. அவன் நிதானமாக ஒரு ஹெட்போனை (Headphone) எடுத்து மேஜை மீது வைத்தான். “அமைச்சர் அவர்களே… நீங்க அதிகாரத்தால ஒரு ஊமையை உருவாக்கலாம், இல்ல ஒருத்தனோட காதைச் செவிடாக்கலாம். ஆனா, ஒரு உண்மையை உங்களால என்னிக்கும் கொல்ல முடியாது,” என்றான்.
“நீ என்ன சொல்ல வர்ற?” என்று ரத்தினவேல் சீறினார்.
“மலர் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா. நீங்க சிறையில இருந்துகிட்டு பண்ற ஒவ்வொரு சதியும் இப்போ ரெக்கார்ட் ஆகியிருக்கு. இதோ இந்த ஹெட்போனை மாட்டிக்கோங்க… நீங்க வெளியில இருக்கிற உங்க அடியாட்களுக்குக் கொடுத்த வாய்மொழி உத்தரவுகள் எல்லாம் இதுல இருக்கு,” என்று ஆரியன் அந்தப் பதிவை ஒலிக்கச் செய்தான்.
அமைச்சரின் முகம் வெளுத்தது. அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்த ரகசியத் தொடர்புகள் அனைத்தும் ஆதாரங்களாய் ஆரியன் கையில் இருந்தன.
சைபர் கிரைம் உதவியுடன், ரத்ன வேல் ரகசிய மொபைல் எண் அழைப்புகள் அனைத்தும் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தான் ஆர்யன். எத்தனை வழக்குகளில் சரியான ஆதாரம் இல்லை என்று வழக்கை இழுதடித்தாலும் இந்த மொபைல் அழைப்புகளின் ஆடியோ ஆதாரம் சட்டத்தின் வாசலை திறந்தது.
“இதை வச்சு நீ என்ன பண்ணுவ? என்னைத் தூக்குல போட முடியுமா?,” என்று கத்தினார் ரத்தினவேல்.
“இல்லை,” என்று ஆரியன் எழுந்து நின்றான். “உங்களைத் தூக்குல போடுறது என் வேலை இல்லை. ஆனா, உங்களை மனரீதியாச் சாகடிக்கப் போறேன். உங்களோட இந்தச் சதிச் செயல்களை நான் ஒரு மியூசிக் ஆல்பமா மாத்தி, மக்கள் முன்னாடி ரிலீஸ் பண்ணப் போறேன். ஒரு காலத்துல நீங்க யாருக்காக மேடையில பேசினீங்களோ, அதே மக்கள் உங்களை ஒரு அருவருப்பான மிருகமாப் பார்ப்பாங்க. அதுதான் உங்களுக்குக் கிடைக்கப் போற பெரிய தண்டனை.”
ஆரியன் அங்கிருந்து வெளியே வந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன. அவன் நேராக ஸ்டுடியோவிற்குச் சென்றான். அன்று இரவு அவன் தூங்கவில்லை. அமைச்சரின் குரல் பதிவுகளை ஒரு பின்னணி இசையாக வைத்து, அநீதிக்கு எதிரான ஒரு மாபெரும் பாடலை உருவாக்கினான். அதில் அவர் முன்பு செய்த ஊழலும், கொலைகளும் வெளிப்படுத்தும் விதமாக வரிகள் அமைந்தன. பொது சேவை செய்ய தியாக மனம் வேண்டும், ஆனால் இன்று அராஜக குணமும், திருட்டுத்தனமும் குடியேறி மக்களை சுரண்டி, சுரண்டி செல்லா காசாக்கும் வேலையை இனி அரசியல் வாதிகள் விடவேண்டும், மக்கள் தான் மன்னர்கள், அவர்களுக்கு போதிய பாதுகாப்பு, மற்றும் அரசின் வெளிப்படைத் தன்மையை மக்களிடம் ஆலோசித்து ஆட்சி நடத்த வேண்டும். இது போன்ற உண்மையான ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை பாடலாக மாற்றி இருந்தது, மக்களை எளிமையாக சென்றடையும் என கௌதமும் நல் வார்த்தை கூறினான்.
மறுநாள் காலை, கௌதம் கூறியது போல அந்தப் பாடல் இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. தமிழகமே அதிர்ந்தது. மக்களுக்கே தங்களுக்கு இவ்வளவு அதிகாரம் உள்ளதா என தெளிவு பெறத் துவங்கினர். அமைச்சரின் எஞ்சியிருந்த ஆதரவாளர்களும் அவருக்கு எதிராகத் திரும்பினர். முன்னாள் அமைச்சருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த பாடலில் உள்ள ஆதாரங்களை அரசு வழக்கறிஞர் சாட்சியாக எடுத்து வைத்தார். மேலும் கடந்த சில நாட்களில் ஆர்யனை தாக்கிய குற்ற வழக்குகளும் மேற்கோள் காட்டப்பட்டன. நீதிமன்றம் இந்த ஆதாரங்களை ஏற்றுக்கொண்டு, ரத்ன வேலுவை கடுமையாக விமர்சித்த நீதி மன்றம் அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்தது.
எல்லாம் முடிந்தது. எத்தனை போராட்டங்கள். மனிதன் தான் வாழ்வில் வெற்றி பெற, கடின உழைப்பு என்ற போராட்டத்தை தாண்டியே வெற்றியின் வாசலை நெருங்க முடிந்தது. வெற்றி பெற்ற பின்பும் ஊழல் வாதிகள் நடத்திய நெருக்கடிகளை தமிழ்நாடு அறிந்திருக்கும். இப்போது அனைத்து நேர்மறை சக்திகளும் ஆர்யன் முன்பாக நின்று அவனை ஆசீர்வதித்து வெற்றி பெற செய்தது. இது ஆர்யனின் வெற்றி மட்டும் அல்ல, அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி. நேர்மையான சமூகத்தின் வெற்றி. இனி எல்லாம் வசந்த காலமே. ஆர்யன் அர்ப்பணிப்போடு செய்த பாடலை கேட்ட திரைக் கலைஞர்களும் மென்மேலும் பாராட்டி ஆர்யனை கலைத் தாய் தன் பக்கம் இணைத்துக்கொண்டாள். ஆர்யனின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ராக் ஸ்டார் ஆர்யன் என்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். சமூக பொறுப்போடு இருக்கும் ஒரு கலைஞனுக்கு ரசிகர்களாக இருக்கிறோம் என்பதை நினைத்து பெருமிதம் கொண்டனர். வெற்றி எல்லாருக்கும் கிடைக்கும், நம் பாதை நமக்கு மட்டும் நன்மை அளிக்காமல் நம்மை சார்ந்தவர்களுக்கு நன்மை தருமானால் வெற்றி அவ்விடத்திலே வசிக்கத் துவங்கிவிடும். ஆதலால் இனி நடப்பவை நல்லதை நோக்கியே பயணப்படும். ஆர்யன் வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கி நீதி மன்றம் உத்தரவு கொடுத்ததால் ஆர்யன் வீட்டு முன் எப்போதும் இரண்டு காவலர்கள் நிறுத்தப்பட்டனர். கௌதமிற்கு இப்போது தான் நிம்மதி பிறந்தது. வெகு நாட்களுக்கு பிறகு கௌதம் நிம்மதியாக உறங்க சென்றான்.
அனைத்து போராட்டங்களையும் நிறைவு செய்த ஆரியன். வீட்டிற்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தான். எப்பொழுதும் எந்த நேரத்தில் ஆபத்து வரும் என்ற தற்காப்பு எண்ணத்திலே இருந்தவன். இன்று மிக ஆத்மார்த்தமாக இசையை ரசித்தபடி பயணம் செய்தான். வீட்டு முன்பு இரண்டு காவலர்கள் வணக்கத்தோடு வரவேற்பதை மகிழ்ச்சியாக உணர்ந்து அவர்களுக்கு பதில் வணக்கத்தை வைத்து வீட்டு காம்பவுண்டுக்குள் கார் நுழைந்தது. ஆரியன் வீட்டிற்குத் திரும்பியபோது, யாழினி வாசலிலேயே காத்திருந்தாள். ஆரியன் அவளை மெல்லக் கட்டி அணைத்துக்கொண்டான். சில நாட்கள் நீ இல்லாத வீடும், தொலை தொடர்பில் இல்லாத வார்த்தையும் வாழ்க்கையை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சேர்த்தது. மேலும் நானும், குழந்தையும் உன்னை எவ்வளவு நினைத்திருப்போம் என்பதை அவளின் அந்த அணைப்பு உணர்த்தியது.
“இனி பயப்படத் தேவையில்லை யாழினி. அந்த அதிகாரம் இப்போ ஒரு வெறும் காகிதமா மாறிடுச்சு. இனி நம்ம வாழ்க்கையில இசை மட்டும்தான் இருக்கும்,” என்றான்.
அருகில் இருந்த ரியா, ஆர்யனை எதிரி நாட்டுக்கு எதிரா, தன் நாட்டை பாதுகாத்த போர் வீரன் நின்றிருந்தான். அவனை மதிப்பு மிக்க ஒரு பார்வையை பார்த்து “ யாழினி ரொம்ப பரிதவிச்சு போயிட்டா” யாழினியை பார்த்த ரியா, நான் சொன்னேன் ல, வெற்றியோடு அவன் வருவான். இப்ப வந்தும் நிற்கிறான். சும்மா இல்ல, உன் குடும்பம் மாதிரி இருக்குற எல்லா குடும்பத்துக்கும் ஒரு பாதுகாப்ப உறுதி செய்து வந்து நிக்கிறான்”
யாழினி கண்ணீரோடு, கடந்த சில நாட்களில் கஷ்டமான மனநிலையில் தனக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருந்த ரியாவிற்கு நன்றி சொல்லும் விதமாக கையெடுத்து வணங்கி நின்றாள்.
“ஒவ்வொரு குடிமக்களுக்கும் நாட்டை பாதுகாக்குற நேர்மையான பொறுப்பு இருக்கு. அதை உணர்ந்து கேள்வி கேட்டாலே இங்கு அராஜகத்திற்கும், ஊழல் போன்ற சுரண்டலுக்கும் வேலையே இருக்காது. மக்களின் பணத்தையும், நாட்டின் செல்வத்தையும் அபகரிக்க எந்த மனமும் துணியாது மக்கள் கேள்வி கேட்பார்கள், நீதி தேவதை தண்டனை வழங்குவாள். என்ற பயத்தில் செய்யும் சேவையை விரும்பி செய்வார்கள். ஆர்யனும், நீயும் அநீதிக்க எதிரான எடுத்த முன்னெடுப்பு இனி ஒவ்வொரு மக்களும் எடுக்கத் துணிவார்கள், நாடும் நலம் பெறும்”
என ஒரு சல்யூட் வைத்து விட்டு, அங்கிருந்து அன்போடு அடுத்த நல் குடிமக்களை பாதுகாக்க கிளம்பி சென்றாள்.
யாழினி ஆர்யன் நெஞ்சில் தலை சாய்த்துக்கொண்டாள். “ஆனா ஆர்யன்… இவ்வளவு போராட்டங்களுக்கு அப்புறம் எனக்கு ஒரு ஆசை,” என்றாள்.
“என்ன ஆசை?”
“நம்ம காதலைத் தொடங்குன அந்த மலைக்குடிலுக்குப் போகணும். அங்கே என் மகளுக்கு நீங்க ஒரு அழகான தாலாட்டுப் பாடணும். அதுதான் எனக்குக் கிடைக்கிற மிகப்பெரிய விருது,” என்றாள்.
ஆர்யனுக்கு ஒவ்வொரு முறை கொடைக்கானல் செல்லும் பொழுதெல்லாம் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் துவங்கியதை நினைத்துக்கொண்டான். இந்த முறை தந்தை எனும் அத்தியாயத்தில் பயணம் செய்யப் போகிறோமா என நினைத்து மெல்லிய புன்னகையுடன் ஆரியன் சிரித்தான். “நிச்சயமா… நாளைக்கே கிளம்புறோம்!”
