லண்டன் மாநகரம் ஆரியனின் இசையில் இன்னும் மயங்கிக் கிடந்தது. ஆனால், ஆரியனுக்கும் யாழினிக்கும் தங்கள் சொந்த ஊரின் மணத்தை நுகர வேண்டும் என்ற ஏக்கம் அதிகரித்துவிட்டது. பல போராட்டங்கள், துரோகங்கள், மற்றும் மரண பயத்தைத் தாண்டிய பிறகு, ஒரு வழியாக அவர்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் “ராக்ஸ்டார் ஆரியன்” என்றும் “தைரியத்தின் அடையாளம் யாழினி” என்றும் முழக்கமிட்டனர். ஆனால், ஆரியன் எதற்கும் மயங்கவில்லை. அவன் யாழினியின் கரங்களை ஒரு நொடி கூட விடாமல் கோர்த்திருந்தான்.
அவர்கள் நேராகச் சென்றது யாழினியின் அண்ணன் பிரகாஷின் நினைவிடத்திற்கு. அங்கே மௌனமாக அஞ்சலி செலுத்தியபோது யாழினியின் கண்கள் மீண்டும் நனைந்தன.
“அண்ணா… நீ பார்த்த கனவு நனவாகிடுச்சு. அந்த அநீதி அழிஞ்சுடுச்சு. இதோ, உன் தங்கையை ஒரு ராணியா தாங்கிப் பிடிக்கிற ஆரியன் என் கூட இருக்கார்,” என்று விம்மி அழுதுகொண்டே சொன்னாள்.
ஆரியன் அவளைத் தேற்றி, அங்கிருந்து ஒரு அமைதியான இடத்திற்கு அழைத்துச் சென்றான். ஆழ் கடலின் அமைதியை போல, இருவரின் மனமும் சாந்தமாக கடலை பார்த்துகொண்டு இருந்தது. எத்தனை ஆர்ப்பாட்டம் காதலை நிலை குலைக்க கடல் அலை போல ஆர்யன் வாழ்வில் வந்தாலும் நிலையான மனம் உறுதியுடன் காதலி யாழினி இருந்துவிட்டால் எண்ணிலடங்கா பிரச்னைகளையும் எதிர் நோக்கி வெற்றி பெறுவது எளிது என ஆர்யன் நிரூபித்துக் காட்டியிருந்தான். ஆர்யன் போல ஒரு ஆண் மகன் தன் வாழ்வில் கிடைத்ததை எண்ணி யாழினி இயற்கைக்கு நன்றி சொன்னாள், ஆர்யனும் நன்றியை அர்பணிப்பது போல ஒரு இனிய ராகத்தில் பரந்து விரிந்த கடலின் பாட ஆரம்பித்தான்.
கௌதம் விக்ரமை விடாமல், அவன் செய்த செயலுக்காக சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததை நேரில் சந்தித்து “ என்னடா பெரிய பணம், சென்னையில் அவனை வெல்ல முடியாமல் தோத்து போய் லண்டன் வந்த, இங்க வந்தாவது எதையாவது உருப்படியா காத்துகிட்டு நல்ல பெயரோடு வாழ்ந்து இருக்கலாம், ஆனால் வெளி நாடு, அவனால் என்ன செய்யமுடியும்னு உன்னோட சில்லித் தனமான ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து கலையின் உயரத்தில் உயர்ந்து இருப்பவனை கீழ தள்ள முயற்சி பண்ணின, ஆனா நடந்தது உன்னையே புதர் குழியில தள்ளிடுச்சா? இனி தப்பிக்க முடியாது. ஆர்யன் வெற்றியையும் தள்ளிப் போட முடியாது” என்று கோபமான பார்வையை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அன்று மாலை, செந்நிற சூரியன் கடலில் மறையத் தொடங்கியது. ஆரியன் மணலில் அமர்ந்து கடலைப் பார்த்துக்கொண்டிருந்தான். காலை சூரியன் உதயத்தை கண்டது, இப்போது மறைவையும் காண்கிறான். சில நிமிடம் தன் வாழ்வில் வந்த பிரச்சினையும், அது மறைந்து இப்போது கிடைத்து மன நிம்மதியும் ஒரு பெரும் இறை உணர்வை அவனுக்குள் கடத்தியது. அவனது செவித்திறன் இப்போது 100% மீண்டுவிட்டது. அலைகளின் ஓசை அவனுக்கு ஒரு மகா மந்திரம் போலக் கேட்டது.
யாழினி மெல்ல அவன் அருகில் வந்து அமர்ந்தாள். அவளது முகத்தில் ஒரு சொல்ல முடியாத பிரகாசம் இருந்தது.
“ஆர்யன்… உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்,” என்றாள் யாழினி. அவளது குரலில் ஒரு மெல்லிய நடுக்கமும், எல்லையற்ற மகிழ்ச்சியும் கலந்திருந்தது.
ஆர்யன் அவளது முகத்தைத் திருப்பிப் பார்த்தான். “சொல்லு யாழினி… இப்போ எனக்கு எல்லாம் தெளிவா கேட்கும். உன் மனசோட துடிப்பைக் கூட என்னால கேட்க முடியும்.”
யாழினி அவனது கையைத் தனது வயிற்றின் மீது வைத்தாள். “நம்ம போராட்டங்களுக்கு ஒரு விடை கிடைச்சிருச்சு ஆர்யன். நம்ம காதலோட அடையாளமா… ஒரு உயிர் எனக்குள்ள துடிக்க ஆரம்பிச்சிருக்கு.”
ஆர்யன் ஒரு நிமிடம் சிலையாக உறைந்து போனான். அவனது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் ஊற்று போல உற்பத்தி ஆனது. அவன் அவளை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான். அந்தச் செய்தி அவனது உலகத்தையே மாற்றிவிட்டது. ஒரு கலைஞனாக அவன் படைத்த ஆயிரக்கணக்கான பாடல்களை விட, இந்தப் புதிய படைப்பு அவனுக்குப் புனிதமானதாகத் தெரிந்தது.
“யாழினி… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. இத்தனை நாள் மௌனமா இருந்த நாம, இனி ஒரு மழலையின் சத்தத்துக்காகக் காத்துட்டு இருக்கப்போறோம். இதுதான் என் வாழ்க்கையோட மிகப்பெரிய விருது,” என்று சொல்லி அவளது நெற்றியில் நீண்ட முத்தமிட்டான்.
அந்தக் கடற்கரை மணலில், அலைகளின் சாட்சியாய், அவர்கள் இருவரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அறியாத ஒரு விஷயம்… சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ரத்தினவேல் இன்னும் அடங்கவில்லை. அவன் தனது கடைசி அஸ்திரத்தைத் தயார் செய்து கொண்டிருந்தான்.
உள்ளம் ஒரு ஆலயம், அந்த ஆலயத்தை தூய்மையாக வைத்துக்கொண்டால், நடப்பது நிச்சயம் நன்மையில் துவங்கும், ஆனால் ரத்ன வேல் மன நிலை மலத்தில் நெளியும் புழுவை போல ஆர்யனை அழிக்கும் எண்ணத்தை தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டு இருந்தார். இதனால் எப்போதும் எரிந்து விழும் குணத்தில் வெறி பிடித்த நாய் போல, சிறைக்குள் முட்டி, மோதிக் கிடந்தார்.
சென்னையில் ஆரியனின் வீடு இப்போது ஒரு நந்தவனமாக மாறியிருந்தது. வேலையாட்கள் சிறு, சுறுப்பாக சுழன்று வேலை யாழினி தேவையான ஊட்டசத்து நிறைந்த உணவினை தயார் செய்துகொண்டு இருந்தனர். யாழினி கருவுற்றிருக்கும் செய்தி தெரிந்ததிலிருந்து, ஆரியன் அவளை ஒரு நிமிடம் கூடத் தனியாக விடுவதில்லை. அவனது உலகமே அவளைச் சுற்றித்தான் சுழன்றது. காலையில் அவளுக்குப் பிடித்த மூலிகை தேநீர் தயாரிப்பதில் தொடங்கி, இரவில் அவள் உறங்கும் வரை அவளது பாதங்களை வருடிவிடுவது வரை அவன் ஒரு சிறந்த கணவனாகத் திகழ்ந்தான்.
“ஆர்யன், நீ இவ்வளவு கவனிப்பு செஞ்சா நான் சோம்பேறியா ஆகிடுவேன்,” என்று யாழினி செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.
ஆரியன் அவளது வயிற்றில் காது வைத்து, பிறக்கப்போகும் குழந்தையின் இதயத்துடிப்பைக் கேட்க முயன்றான். “நீ சோம்பேறியா ஆகுறது பத்தி எனக்குக் கவலை இல்லை யாழினி. ஆனா, இந்தச் சின்ன இதயம் துடிக்கிறது எனக்கு உலகத்திலேயே பெரிய மியூசிக் ஆல்பமா இருக்கு,” என்றான் நெகிழ்ச்சியுடன்.
அவர்கள் இப்படி ஒரு பொற்காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, சிறைச்சாலையின் இருண்ட அறையில் முன்னாள் அமைச்சர் ரத்தினவேல் தனது கடைசித் திட்டத்தைத் தீட்டினார்.
“அந்தப் பொண்ணு இப்போ பலவீனமா இருக்கா. அவளோட வாரிசு இந்த உலகத்துக்கு வர்றதுக்கு முன்னாடி, அவங்க ரெண்டு பேரையும் நிம்மதி இழக்கச் செய்யணும். என் சொத்துக்கள் பறிபோகக் காரணமான அந்த ஆரியனை அவனாலயே அழிக்க வைக்கணும்,” என்று ரத்தினவேல் தனது வழக்கறிஞரிடம் ரகசியமாகக் கூறினார்.
மறுநாள் காலை, ஆரியனுக்கு ஒரு மர்மமான லீகல் நோட்டீஸ் (Legal Notice) வந்தது. அதில், ஆரியன் லண்டனில் பாடிய அந்தப் பாடல்கள் அனைத்தும் வேறொரு கலைஞருடையது என்றும், அவன் காது கேட்காத நிலையை வைத்துப் பொய் சொல்லி அனுதாபம் தேடிக்கொண்டான் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது ஒரு பெரிய ‘காப்பிரைட்’ (Copyright) வழக்கு.
ஆரியன் இதைப் பார்த்துச் சிரித்தான். “அவர் இன்னும் திருந்தல யாழினி. என்னைப் பலவீனப்படுத்தப் பார்க்கிறார்.”
அப்போது கௌதம் அங்கே வந்து, “ஆர்யா ஒரு குட் நியூஸ் ரெண்டு புதிய படத்துக்கு இசை அமைப்பாளரா உன்ன புக் பண்ணிருக்காங்க.”
ஆர்யன் வந்திருந்த வக்கீல் நோட்டீசை காட்டினான். இவன் இன்னும் திருந்தல மாமா, என்னும் காமெடி வசனத்தை நினைத்து, கௌதம் அதனை படித்துப் பார்த்தான். “ ஆர்யா இதெல்லாம் நினைச்சு நீ வருத்தப்படாத, எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். அவன் எந்த எல்லைக்கு போனாலும் அந்த எல்லையின் முடிவா அவன் செய்த கெட்ட செயலே அவனை கருவருக்கும்” என உண்மையின் நீதியை விளக்கிச் சொன்னான்.
ஆனால், அந்தச் சதி அங்கேயே நிற்கவில்லை. வருமான வரித்துறையில் போலியான புகார்களை அடுக்கி, ஆரியனின் இசைப் பயணத்திற்கு நிதியுதவி செய்த வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அவர்களுக்குச் சொந்தமான அந்த அழகான பண்ணை வீட்டை அரசு கையகப்படுத்தப் போவதாக அறிவிப்பு வந்தது.
சில மாதங்கள் இப்படியே ஆர்யனுக்கு இறங்கு முகமாகவே வழக்கு சென்று கொண்டிருந்தது. அதற்கு ஆர்யன் பக்கம் இருந்து விளக்கம் என்று கோர்ட் வாசலுக்கு ஆர்யனும், கௌதமும் அலைந்து கொண்டிருந்தாலும் கமல்ஹாசன் பாடல் போல “ விழுவது போல விழுந்து எழுவேன், எதிரிகள் சுக காண” என்ற தோரணையில் கடினமான வாழ்க்கையை நடத்துவது போல காண்பித்துக்கொண்டனர். பத்திரிக்கைகளும் அவர்களது பங்கிற்கு உண்மையை அறியாமல் ஆர்யனை பற்றி எதிர்மறை கருத்துகளை சமூகத்தில் விதைத்துக் கொண்டு இருந்தனர். ஆர்யனுக்கு சில மாதங்களுக்கு முன்னால் தன்னை புகழ்ந்து எழுதிய அதே பேனா, இப்போது இகழ்கிறது. வாழ்வில் எந்த நிலையும் உண்மையில்லை புகழும், குற்ற சாட்டும் ஒன்று தான். என ஒரு ஞானி மன நிலையில் இருந்து நடப்பவற்றை கவனித்தான். கௌதம் அவனுக்கு பக்க பலமாக நின்று தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை விளக்கப்படுத்தினான். ஆனால் அதிகார வர்க்கம் எப்போதும் எளிமையான நிலையில் இருந்து உயர்ந்தவனை எப்படி மீண்டும் கீழே தள்ளலாம், அவனது இடத்தில் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களை எப்படி உட்கார வைக்கலாம் என்ற சிந்தனையில் செயல் ஆற்றியது.
ஆறு மாத கற்பினியான யாழினி பதற்றம் நிறைந்து இருந்தாள். தலை பிரசவம் பெண்களுக்கு மறு பிறவி எடுப்பதற்கு சமம். ஒவ்வொரு நொடியும் கடினமாக கடந்து சென்றாள். ஆர்யன் இப்படி வழக்கு, கோர்ட், என்று அலைவதை தாங்க முடியவில்லை, இதனால் அவளது மனதும் பாதிக்கப்பட்டு இருந்தது. அவளது உடல்நிலை இப்போது அதிக மன அழுத்தத்தைத் தாங்கும் நிலையில் இல்லை.
ஒப்பந்தம் செய்யப்பட்ட பட கம்பெனிகளும், ஆர்யனுக்கு புகுத்தப்பட்ட கெட்ட பெயரால் திரைப்படத்தில் இருந்து நீக்கும் நிலைக்கு சென்று இருந்தனர்.
கௌதம் உடன் தயாரிப்பாளர்கள் ஆர்யனை சந்திக்க வந்திருந்தனர்.
“ ஆர்யன் சார், இத எப்படி சொல்றதுன்னு தெரியல, ஆனா நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும், இந்த கடினமான முடிவ நாங்க கஷ்டப்பட்டு தான் எடுத்திருக்கோம். உங்க மேல இருக்குற கேஸ் வச்சு நம்ம படத்தையும் முடக்க சதி நடக்குதுனு கேள்விப்பட்டோம், ஏற்கெனவே நிறையா பிரச்னைக்கு மத்தியில தான் படமே எடுக்கிறோம். அதுனால் நீங்களே படத்துல இருந்து விலகியதா ஒரு அறிக்கை விட்டா, நல்லா இருக்கும்”
“சரிங்க சார்.” என எளிமையா ஒப்புக்கொண்டான்.
தயாரிப்பாளர்களும் சந்தோசமான முகத்தோடு வெளியேறி சென்றனர்.
இதை கேட்டுக்கொண்டிருந்த யாழினி,
“ஆர்யன், நாம ஏன் இங்க இருக்கணும்? எங்கயாவது தூரமாப் போயிடலாம்,” என்றாள் கண்ணீருடன்.
ஆரியன் அவளை அணைத்துக்கொண்டான். “பயப்படாதே கண்ணம்மா… இது அவரோட கடைசி சதி மூச்சு. ஒரு கலைஞனை அவனோட புகழை அழிச்சுத்தான் கொல்ல முடியும்னு அவர் நினைக்கிறார். ஆனா, என் புகழ் மக்களோட இதயத்துல இருக்கு, வங்கிக் கணக்குல இல்லை.”
அதற்கேற்ப ஆர்யனின் ரசிகர்களும், சமூக வலைதளங்களில் ஆர்யனுக்கு சப்போர்ட் செய்து பல ஹேஸ்டாக்கு களை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர்.
ஆர்யன் அன்று மாலைப் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தான்.
#ஆர்யன் சார், லண்டன் பயணம் மிக வெற்றிகரமாக முடிந்ததில் யார் கண்ணு பட்டுச்சோ, இப்படி தொடர்ந்து வழக்கு, மேல் வழக்காக சந்தித்து வருகிறீர்கள், இதை பத்தி உங்களோட கருத்து”
“ வழக்கு தொடுத்தவரை கேட்டால், சரியான பதில் கிடைக்கும்! முதலில் எனது அழைப்பை ஏற்று வந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றிகள், மேலும் நான் இப்போது இருக்கும் மன நிலையும், குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளதால், ஒப்புக்கொண்ட திரைப் படங்களில் இருந்து வெளியேறுவதை தெரிவிக்கத்தான் உங்களை அழைத்தேன்.”
பத்திரிக்கையாளர் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.
“ சார், அப்போ இசைத் துறையில் இருந்து மொத்தமாக வெளியேறி செல்கிறீர்களா?”
“ நான் சொல்ல வேண்டிய செய்தியை சொல்லி முடித்து விட்டேன். மேற்பட்ட கேள்விகளுக்கு இன்னொரு நாளில் நானே உங்களை அழைத்து செய்தியைத் தருகிறேன் நன்றி வணக்கம்”
அன்று இரவு, யாழினிக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டது. ஆரியன் பதற்றத்துடன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தயாரானான். ஆனால், வீட்டின் வாசலில் ஒரு பெரிய கும்பல் திரண்டு நின்றது. அவர்கள் முன்னாள் அமைச்சரால் விலைக்கு வாங்கப்பட்ட ஒரு போலிப் போராட்டக் குழு.
“ஏமாற்றுக்காரன் ஆரியன் ஒழிக!” என்று அவர்கள் கத்தினார்கள்.
காசுக்காக எதையும் செய்யும் மனிதர்கள் இருக்கும் வரை நாட்டில் நல்லவர்கள் வாழ்வது கடினம் தான். இப்படிப் பட்ட மனிதர்களை முதலில் இறைவன் தண்டிக்க வேண்டும். கருணையின் உருவாய் உள்ள இறைவன் எனது கணவனுக்கு கருணை காட்டமாட்டாரா என யாழினி வேண்டாத தெய்வம் இல்லை.
ஆரியன் யாழினியைப் பார்த்தான். அவளது முகம் வலியால் சுருங்கியிருந்தது. வெளியே இருக்கும் அந்த வன்முறைக் கும்பலைத் தாண்டி அவன் அவளை எப்படிக் காப்பாற்றப் போகிறான்?
