அத்தியாயம் 25: மேகங்கள் மீட்டும் மெல்லிசை

கொடைக்கானலின் அதே மலைச்சாலை. அன்று ஓடியபோது இருந்த அதே பனிமூட்டம், அதே ஜில்லென்ற காற்று. ஆனால் இன்று ஆரியன் மற்றும் யாழினியின் மனநிலை வேறாக இருந்தது. அவர்கள் ஓடவில்லை; தழுவிக் கொண்டு பயணித்தனர். காரின் பின் இருக்கையில் சின்னஞ்சிறு சங்கீதா, ஆரியனின் ஜாக்கெட்டைப் பிடித்தபடி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

“யாழினி, ஞாபகம் இருக்கா? இதே ரோட்ல தான் நீயும் நானும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாமலே பயத்தோட பயணிச்சோம்,” என்று ஆரியன் ஸ்டீயரிங்கைத் திருப்பியபடி கேட்டான்.

யாழினி ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த பசுமையைப் பார்த்தாள். “பயம் இல்லை ஆர்யன்… அது ஒரு தேடல். என் மௌனத்துக்கு ஒரு மொழி கிடைக்கும்னு என் உள்மனசு அன்னைக்கே சொல்லுச்சு,” என்றாள்.

அவர்கள் அந்தப் பழைய மலைக்குடிலை அடைந்தனர். கௌதம் ஏற்கெனவே தயார் நிலையில் இருந்த ஆட்களை வைத்து முன்னதாகவே வந்து வீட்டைச் சுத்தம் செய்து, தேவையான உணவு வகைகளையும், குழந்தைக்கு தேவையான விளையாட்டு பொருட்களையும் நிரப்பி வைத்திருந்தான். அந்த வீட்டின் வாசலில் கால் வைத்ததும், யாழினிக்குத் தன் அண்ணன் பிரகாஷின் நினைவு வந்தது. அவள் ஒரு கணம் கண்கள் கலங்கி நின்றாள். தான் வீட்டை விட்டு செல்லும் போது பத்திரமாக எடுத்து சென்ற குடும்ப போட்டோவை மீண்டும் அதே வீட்டில் அதே இடத்தில் நிலை நிறுத்திய போது கண்ணீர் சற்று சாந்தமானது.  

புகைபடத்தை கண்ட ஆரியன் மகிழ்வுடன் அவளது கையைப் பற்றினான். “அண்ணன் இப்போ ரொம்ப சந்தோஷமா இருப்பார் யாழினி. அவர் விரும்பின நீதியும் கிடைச்சிருச்சு, அவர் தங்கை ஒரு மகாராணியா இப்போ இங்கே வந்திருக்கா,” என்று அவளைத் தேற்றினான்.

இருவரும் சில நாட்களுக்கு பிறகு எந்த அழுத்தமும் இல்லாமல் உணவை சுவைத்து அருந்தினர். குழந்தை சங்கீதாவுக்கு தாய் பால் ஊட்டிய நிம்மதியில் தாய்மை உணர்வோடு நடுவில் குழந்தையும் அவளுக்கு பாதுகாப்பாய் இரு பக்கமும் காதலர்களும் நிம்மதியான ஒரு தூக்கத்தில் நிறைந்தனர்.

அன்று மாலை, மலைச்சிகரத்தில் சூரியன் மறையும் அந்தத் தருணத்தில், ஆரியன் தனது கிதாரை எடுத்தான். சில மாதங்களுக்குப் பிறகு அவன் மனதிற்குள் எந்தப் பாரமும் இல்லாமல் இசைக்கத் தொடங்கினான். அந்த இசையை கூடி இருந்த பறவைகளும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆர்யனின் இசையும், பறவைகளின் கொண்டாட்ட கூச்சலும், பூக்களின் புன் சிரிப்பும்  அந்த வீட்டை புவியில் நிலைத்து நிற்கும் சொர்க்கமாக மாற்றியது.

யாழினி சங்கீதாவைத் தூக்கிக்கொண்டு அவன் அருகில் வந்தாள்.

“இந்தத் தாலாட்டு இப்போ உனக்காக மட்டும் இல்லை… நம்ம மகளுக்காகவும் தான்,” என்று ஆரியன் சொல்ல, ஒரு மென்மையான ராகம் பிறந்தது. ஆர்யனும் பாடத் தொடங்கினான்.

“ காலம் … மாறும்…

கண்ட கனவுகள் நிறைவேறும்…

ஊரும்… போரும்…

வென்ற வீரனுக்கு சுகமாகும்…

நாளை போல, நேற்று இல்லை…

இன்றை போல அடுத்த நொடியும்

மகிழ்வாகும் அதுவே நமக்கு வழித் துணையாகும்.

வாழ்வோம் நாமும்… நம்மை போல

அனைவரையும் வாழ வைப்போம்…

என்று பாடலை ரசித்து பாடினான்.

யாழினிக்கு ஆர்யனின் தாளம், மற்றும் அன்பின் பிணைப்பில் உருவான ராகத்தில் மெல்ல இணைய நினைத்தாள். யாழினி அந்த மெட்டுக்கு ஏற்பத் தன் குரலைச் சேர்த்தாள்.

கொண்ட, காதல் இன்னும் நீளும்…

வானில் வானவில் குடியேறும் நாளும் இது தானோ…

வாழ்வில் வந்த காதலா…

நீயும் நானும் இணைவது தானோ…

இறைவன் கொண்ட பேரருளா…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர்கள் இருவரும் இணைந்து பாடினார்கள். காடும் மலையும் அந்த இசையில் மௌனமாகிக் கிடந்தன. இருவரின் குரலை கேட்டு ரசித்தன. சங்கீதா தன் பிஞ்சுக்கைகளால் காற்றில் எதையோ பிடிக்க முயன்றாள், அவளுக்கு கடவுள் வந்து வளர்ந்த மனித கண்களுக்கு புலப்படாத மின்மினி வண்ண பூச்சிகளை விளையாட கொடுத்திருக்கிறார். அதையே சங்கீதா பிடிக்க முயன்று, அதில் வெற்றியும் பெற்று தனக்குள் அத்தனையும் பிணைத்துகொண்டு,  தன் அப்பாவின் இசையிலும் அம்மாவின் மடியிலும் அப்படியே ஆழ்ந்து உறங்கினாள். இறைவன் இவர்களை ஆசீர்வதிப்பாராக.

“ஆர்யன், நாம இங்கேயே கொஞ்ச நாள் தங்கியிருக்கலாமா? சென்னைக்குத் திரும்பினா அந்த வெளிச்சம், புகழ்… இதெல்லாம் நம்ம காதலைச் சில நேரம் மறைச்சிடுது,” என்றாள் யாழினி மெல்ல.

ஆரியன் அவளைத் தழுவிக்கொண்டான். “நிச்சயமா யாழினி. இசைங்கிறது மேடைகள்ல மட்டும் இல்லை, இதுமாதிரி தனிமையிலயும் தான் இருக்கு. இன்னும் சில காலத்துக்கு நாம மூணு பேர் மட்டும் இந்த அமைதியான உலகத்துல இருப்போம்.”

அன்று இரவு, குடிலின் உள்ளே நெருப்பு மூட்டி அதன் கதகதப்பில் அவர்கள் அமர்ந்திருந்தனர். யாழினி ஆரியனின் தோளில் சாய்ந்து கொண்டு, “நமக்குள்ள இன்னும் எத்தனையோ ராகங்கள் பாக்கி இருக்குல்ல ஆர்யன்?” என்று கேட்டாள்.

ஒரு ராகம் உன் மடியில் உறங்கிக் இருக்க, அடுத்த ராகத்தை இசைக்க நானும் தயார், தாயாராக நீ தயாரா?

யாழினி வெட்கத்தில் சிவந்து போனாள், உனக்கு இப்படி யார் பேச கற்றுக் கொடுத்தது, என ஆர்யன் கண்களை பார்த்தாள்.

ஆரியன் அவளது கண்களைப் பார்த்தான். “வாழ்க்கையே ஒரு ராகம் தான் யாழினி. அதுல இன்பம், துன்பம் எல்லாமே ஸ்வரங்கள் தான். நாம அதை அழகா மீட்ட கத்துக்கிட்டோம்,” என்றான்.

அவர்கள் இப்படி அமைதியாக இருந்த அந்த நேரத்தில், நெருப்பு  அவர்களின் குளிரை விரட்டி பாதுகாப்பு அளித்தது. அந்த இரவு முழுவதும் இருவரின் காதல் மொழிகளால் நிறைந்து இருந்தது. அன்பு, பாசம், நேசம் கடந்து ஒரு உயிர் மற்றொரு உயிரை எங்கனம் நேசிக்க வேண்டும் என்பதை இரவும் கற்றுக்கொள்ளும் படி அவர்களின் உரையாடல் தொடர்ந்தது.

“ஏன், ஆர்யா… என்ன விரும்பின?”

“ நீ பிறந்த காரணத்தில் தான்”

“நீ விரும்பியதும் நான் ஏன் உன்னை விரும்பினேன்?”

“நான் உனக்காக பிறந்த காரணத்தால்”

“நாம் ஏன் நம்மை விரும்பினோம்”

“காதல் என்ற ஒன்றை  காலம் முழுவதும் இயங்க வைக்க”

“ இயக்கத்தில் இருப்பது நீயா, நானா”

“இருவரும் ஒருவரை, ஒருவர் இயக்கினாலும், இசை நம் இயக்கத்திற்கு துணை நிற்கிறது”

“ சரி இசையை யார்  இசைப்பது?”

“ வேகத்தில் நீயும், ஆழ்ந்த அழுத்தத்தில் நானும்”

“ அப்ப இறை…?”

“ நம் செயலில் இறை தான் வெளிப்படுகிறார்”

அவர்கள் அன்று பேசிய உரையாடல், நேரம் கடந்து சூரியனையும் தட்டி எழுப்பியது. அந்த சூரியனின் மென் வெளிச்சத்தின் தூரத்தில் ஒரு பழைய ஜீப் வந்து நின்றது. ஆர்யனும், யாழினியும் இது என்னடா புது நல்லது இல்லாத நிகழ்வா? என சந்தேகம் கொண்டாலும் இருவரும் இல்லை மூவரும் இணைந்து நல்லது இல்லாததை நல்லதாக்குவோம் என்ற தைரியத்தில் ஜீப்பை உற்று நோக்கினர். சங்கீதாவும் மழலை பார்வையில் பார்த்தாள். ஜீப்பிலிருந்து இறங்கிய அந்த உருவத்தைப் பார்த்ததும் ஆரியன் திகைத்தான். உறைந்தான். உலகில் உள்ள வார்த்தைகள் எல்லாம் ஒன்றிணைந்து,  என்னை பயன்படுத்து, என்னை பயன்படுத்து என மன்றாடி கேட்டுக்கொண்டாலும் அவனால் வார்த்தையை பயன்படுத்தி தொடர்பு கொள்ள முடியாத மாபெரும் மாந்தர் அவர்.   அவர்  அவனது இசை குரு சிவ நந்தர், பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர்.

யாழினியின் குடிலின், சூரிய ஒளியின் பிரகாசத்தில் வாசலில் நின்றிருந்த அந்த உருவத்தைப் பார்த்ததும் ஆரியனின் கையில் இருந்த கிதார் நழுவியது. நரைத்த தாடி, கண்களில் ஒரு தீர்க்கமான ஒளி, முதுகில் ஒரு பழைய வீணை. அது ஆரியனின் முதல் இசை  குரு, சிவநந்தர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இமயமலை நோக்கிச் சென்றவர், இன்று மீண்டும் அவன் முன்னால் நிற்கிறார்.

“குருவே…” என ஆரியன் ஓடிச் சென்று அவரது கால்களில் விழுந்தான்.

மெல்லிய புன்னகையுடன் சிவநந்தர் அவனைத் தூக்கி அணைத்துக்கொண்டார். “ஆரியன், உன் புகழ் என்னைத் தேடி வந்தது. இசை உன்னுள்  அடுத்த பரிணாமத்தை  எட்ட என்னை உன் ஆன்மா துணைக்கு அழைத்தது. எல்லா நிமிடமும் உனக்கு ஆசியை வழங்கினேன்.  ஆனா உன் இசை இன்னும் முழுமையடையலைன்னு உன் உயிராற்றல்  அழுத குரல் தான் என்னைத் தேடி வரவச்சது,” என்றார் அமைதியாக.

“ ஆர்யனுக்கு தனக்குள் இருந்த, தனக்கு மட்டுமே தெரிந்த  இசையில் இன்னும் ஏதோ ஒன்று நிறைவில்லையே என்ற ஒரு தேடுதல் அவனின் குருவையே அழைத்து வந்ததில் மற்றட்ட மகிழ்ச்சியை அடைந்தான்.”

யாழினி குழந்தையுடன் வெளியே வந்து அந்தப் பெரியவரை மரியாதையுடன் வரவேற்றாள். சிவநந்தர் சங்கீதாவைப் பார்த்துப் புன்னகைத்தார்.  பதிலுக்கு சங்கீதாவும் புன்னகைத்து மழலை மொழியில் பேசியது. “இந்தக் குழந்தை ஒரு மாபெரும் இசைப் பேரரசி,” என்று ஆசி வழங்கினார்.

இசை குருவிற்கு பிடித்த உணவுகளை சமைத்து அவர் முன் வழங்கினான். ஆனால் அவர் விரும்பியது வெறும் பழங்களை மட்டுமே. இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் அத்தனையும் இசை குரு சிவ நந்தரிடம் ஒப்பிவித்தான்.

“ஆரி…  முதல் முறை உன்னை பார்க்கும் பொழுதே எனக்கு தெரியும் வெறும் இசை மட்டும் உனக்கு வாழ்க்கையை திருப்தி பெற வைக்காது. சமூகத்திற்கு தேவையான நீதி போராட்டத்தை அரங்கேற்றிய பின்னரே உன் மனம் சாந்தி அடையும், அது போலவே  தான் நிகழ்ந்துள்ளது.”

என்று கூறியது. ஆர்யன் பட்ட கஷ்டங்களில் இருந்த சமூக பொறுப்பையும், அது ஒரு கடினமே இல்லை அவசியத் தேவை என்பதையும் இசை குரு சொல்லிய வார்த்தைகளில் மூலம் புரிந்துகொண்டான்.

இருவரும் இணைந்து பேசிக்கொண்டே நடை பயின்றனர். யாழினி ஒரு குழந்தை போல அவரிடம் உறவாடியதை பார்த்து ஆர்யனுக்கு இப்படி ஒரு முகமா என ஆச்சரியப்பட்டாள்.

அன்று இரவு, அந்த மலைக்குடிலின் முற்றத்தில் நிலவொளியில் குருவும் சீடனும் அமர்ந்திருந்தனர்.

“ஆரியன், நீ இதுவரை வாசிச்சது சத்தம் (Sound). ஆனா நீ மீட்ட வேண்டியது நிசப்தம் (Silence). ஒரு கலைஞன் எப்போ மௌனத்தைப் பாடக் கத்துக்குறானோ, அப்போதான் அவன் கடவுளைத் தொடுறான்,” என்றார் சிவநந்தர்.

சிவ நந்தர் நாத வழிபாடு முறைகளை பயிற்று வித்தார், நாத வழிபாடு என்பது நாதத்தை (ஒலியை) இறைவனாக கருதி பயிற்சி பெறும் ஆன்மீக முறை.

சிவ நந்தர் தனது வீணையை மீட்டத் தொடங்கினார். அந்த இசையில் ஒரு விசித்திரமான சக்தி இருந்தது. ஆரியன் இதுவரை கேட்டிராத ஒரு ராகம் அது. அவனது செவித்திறன் இப்போது வெறும் ஒலிகளைத் தாண்டி, பிரபஞ்சத்தின் அசைவுகளைக் கேட்கத் தொடங்கியது.

“யாழினி, நீயும் வா,” என்று குரு அழைத்தார். “உன் குரல் ஒரு வரம். ஆனா அதை நீ இதுவரை ஒரு ஆயுதமாத்தான் பயன்படுத்திருக்க. இப்போ அதை ஒரு மருந்தா மாத்து.” என இருவருக்கும் தான் அறிந்த இசை மற்றும் இறை நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார். இருவரும் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டனர். இடையே மழலை சங்கீதாவும் அவளது மழலை மொழியில் பாடியது, மூவருக்கும் இறை கூடவே இசையாகிறோம் என்ற உணர்வு மேலோங்கி வளர்ந்தது.

அடுத்த இரண்டு வாரங்கள் அந்தக் குடில் ஒரு தவச்சாலையாக மாறியது. சிவநந்தர் ஆரியனுக்குப் புதிய இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். காலையில் யோகா, மதியம் ராகங்களின் தவம், இரவில் குருவின் உரையாடல் என ஆரியனும் யாழினியும் தங்களைச் செதுக்கிக்கொண்டனர்.

ஒருநாள் மாலை, சிவநந்தர் ஆரியனிடம் சொன்னார், “ஆரியன், உன்னோட உச்சக் கட்டப் படைப்பு (Ultimate Masterpiece) இன்னும் வரல. அது ஒரு தனி மனிதனோட காதல் பாட்டா இருக்கக் கூடாது. அது இந்த உலகத்துல இருக்குற வலிகளுக்கான மருந்தா இருக்கணும். நீ கஷ்டப்பட்ட அந்த மௌனத்தை, லட்சக்கணக்கான ஊமைகளுக்கான குரலா மாற்று.”

அந்த வார்த்தைகள் ஆரியனுக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. அவன் யாழினியின் கையைப் பிடித்துக் கொண்டான்.

“குருவே, நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். நான் இனி கமர்ஷியல் மியூசிக் பண்ணப் போறது இல்லை. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஒரு ‘இசைப் பள்ளி’யைத் தொடங்கப்போறேன். அங்கே யாழினியோட குரலும் என் இசையும் அவங்களுக்கு ஒரு நம்பிக்கையா இருக்கும்,” என்றான் ஆரியன்.

சிவநந்தர் திருப்தியுடன் புன்னகைத்தார். “இப்போதான் நீ உண்மையான ராக்ஸ்டார் ஆகியிருக்க ஆரியன்.”

விடைபெறும் போது குரு ஒரு ரகசியத்தைச் சொன்னார். “ஆரியன், நீ பயந்த அந்த மௌனம் தான் உனக்கு இந்த ஞானத்தைத் தந்துச்சு. அந்த மௌனத்தை என்னிக்கும் கைவிடாதே.”

சிஷ்யருக்கு கற்று தந்த பாடத்தை விட, அவர்கள் சிறப்பான ஒரு வாழ்க்கையை தொடங்க இருக்கிறார்கள் என்ற திருப்தி, சிவ நந்தருக்கு வந்த பணியை நிறைவு செய்தோம் என்ற முழுமை பெற்ற ஒளியாக அவர்கள் முன் ஒளிர்ந்தார். ஆர்யன், யாழினி, சங்கீதாவுக்கு ஆசி வழங்கி நின்றார். அவர்கள் மூவரும் கண்களை மூடி காலில் விழுந்து ஆசி பெற்று எழுந்த போது இசை குரு அங்கு இல்லை. எப்படி கண்ணிமைக்கும் நொடியில் காற்றில் கரைந்திருந்தார். எப்படி, எங்கு என்ற ஆய்விற்கு செல்லாமல் ஆர்யனும், யாழினியும் வானத்தை பார்த்து மீண்டும் வணங்கி நின்றனர். யாழினி கையில் இருந்த சங்கீதா  வானத்தை பார்த்து டாட்டா, காட்டியது. குழந்தை  அவள் கண்களுக்கு இசை குரு டாட்டா காட்டியிருப்பார் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

குரு சென்ற பிறகு, ஆரியனும் யாழினியும் ஒரு புதிய தெளிவுடன் இருந்தனர். இப்போது வரை கற்று அறிந்த பாடங்கள், தமக்கு மட்டும் இல்லை இசையை உயிராக கருதும் அனைவருக்கும் இது சொந்தமே என்ற பொறுப்பில் இருந்தனர். அவர்களின் காதல் இப்போது தனிப்பட்ட ஆசைகளைத் தாண்டி, சமூகத்திற்கான ஒரு சேவையாக மலரத் தொடங்கியது.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page