அத்தியாயம்- 26

பாகம். 26

” அடேய் சைக்கோ பயலே..நீ செய்றது எப்படி தெரியுமா இருக்கிறது. வாழவும் விடாமல் சாகவும் விடாமல் மொன்னைக் கத்திய கழுத்துல வச்சு அறுக்கிற மாதிரி இருக்கு.திரும்பத் திரும்ப இந்த வார்த்தையை சொல்கிறேன் என்று பார்க்காதே .. இந்த எழவுக்கு தான் சொல்றேன் .. “என்று நவீன் இதோடு எத்தனை முறை தான் இந்த வார்த்தையை சொல்லி இருப்பானோ..

” சரி சரி நீ திரும்பவும் ஆரம்பிக்காதே.. இப்பொழுது என்ன செய்வது.. “

” போடா நான் இனிமேல் எதுவும் சொல்ல முடியாது ..எனக்கு சொல்லி சொல்லி அலுத்து போச்சு..நீயாக எது வேண்டும் என்றாலும் செஞ்சுக்கோ ..நான் என்ன உனக்கு வாத்தியாரா, நீ என்ன எனக்கு மாணவனா ..திரும்பத் திரும்ப பாடம் நடத்திக் கொண்டிருப்பதற்கு.. போடா போ என் முகத்திலேயே விழிக்காதே..
உன்னிடம் பேசி பேசி எனக்கு பசி வந்தது தான் மிச்சம் நான் சாப்பிட போகிறேன்..” என்று கோபமாய் கேண்டீனுக்கு புறப்படுகிறான்..

“டேய் நீ அங்க போய் சாப்பிட வேண்டாம் உனக்கும் சேர்த்து தான் உன் தங்கை சாப்பாடு செய்து கொடுத்திருக்கா..”

” அப்பா சாமி எனக்கு எந்த சாப்பாடும் வேணாம்..உங்க சந்தேகமும் வேணா.. உங்க சந்தோசமும் வேண்டாம் ..என்னை ஆளை விடுங்கடா ..உன்னால நான் ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் கூட செய்து கொள்ள முடியலடா..கல்யாணம் செய்தால் நானும் இப்படித்தான் கஷ்டப்படுவேன் என்று அப்படியே எனக்கும் மனசுல பதியுதுடா.. ஏன்டா என்ன இம்சை படுத்துற.. எனக்காகவாவது கொஞ்சம் நான் சொல்கிற வேலையை செய்யுடா..” என்று கை எடுத்து கும்பிடுகிறான்..

“சரிடா என்னால உன் வாழ்க்கையும் கெட்டுப் போயிடுமோங்கற ஒரு பயத்தால உன் மேல இருக்கிற அக்கறையால நான் இந்த வேலையை செய்யப் போகிறேன்..  ஆனாலும் எனக்கு பயமாயிருக்கு டா.. எப்படி செய்யப் போகிறேன் என்று தெரியல..நீ தான் எனக்கு உறுதுணையாக இருக்கணும் .. “

“நான் என்ன உனக்கு கடவுளா.. நீ செய் உனக்கு நான் பக்க பலமா இருக்கேன்..”

” அப்படின்னா நீ கடவுள் தான்டா .. “என்று அரவிந்த்  நண்பனை கட்டிக் கொள்கிறான்..

” இப்ப என்ன சொல்ற .என்னோட வந்து சாப்பிட போறியா இல்லையா..”

” வரேன் வரேன் இல்லன்னா நீ போய் வீட்டுல தங்கச்சி கிட்ட ஏதாச்சும் பத்த வச்சு விட்டுடுவ ..பிறகு என் மேல வேற அந்த பொண்ணு கோபமா இருக்கும்.. ” என்று மித்ராவின்  சாப்பாட்டை நவீன் ஆசையாய் சாப்பிடச் செல்கிறான்..

அப்படியே கடவுளிடமும் வேண்டிக் கொள்கிறான் .. ‘ ஆண்டவா சித்த வயித்துக்கு சோறு போட்ட அந்த புண்ணியவதி நல்லா இருக்கணும்..எந்தவித தவறும் அவங்க வாழ்க்கையில இருக்க கூடாது ..அவங்க இரண்டு பேரும் ரொம்ப காலத்துக்கு நன்றாக வாழ வேண்டும் .., நவீனின் நல்ல மனதிற்காகவேணும் அவர்கள் நன்றாக வாழ வேண்டும் ..

போகும் போது  அரவிந்தை கூப்பிட்டு வைத்து பாடம் நடத்துகிறான் .. “இன்றே செய், அதை நன்றே செய் என்று செய்து முடித்து அதோட எல்லாவற்றையும் மறந்து விடு .. “என்றதும் அவன் நவீன் முகத்தை கேள்விக் குறியாய் பார்க்கிறான்..

” ஆமாம் டா நல்லதோ கெட்டதோ அதை இன்றோடு மறந்து விடு ..நானுமே உங்கள் வாழ்க்கையில் குறிக்கிட்டு இருவரின் வாழ்க்கையையும் கெடுக்கிறானோ என்று எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது .. அதனால் தான்டா இப்படி சொல்கிறேன்.. நீ ஏன்டா என்கிட்ட வந்து எல்லாவற்றையும் சொன்ன.. ” சொல்லும் போதே நவீனுக்கு கண் கலங்குகிறது..

” நானுமே அதே மனநிலையில் தான்டா இருக்கிறேன். நீ சொன்னது மாதிரி இன்றே போய் சரி செய்து விடுகிறேன்.. அதே போல நீ சொன்னது மாதிரியே நல்லதோ கெட்டதோ எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன்டா..” இதை சொன்னதுமே கண்களை துடைத்தவன் அரவிந்தை இறுக கட்டிக் கொள்கிறான்..

” இப்பொழுது தான்டா நீ பழைய மாதிரி அழகா பேசுற ..இனிமேல் எனக்கு எந்த பயமும் இருக்காது..நீ தைரியமா போ. எதுவும் தவறா நடக்காது.. “

அரவிந்த் ஒரு வழியாய் வீடு வந்து சேர்கிறான் .ஏற்கனவே அடித்த ஜுரத்தினாலா அல்லது தான் செய்யப் போகும் காரியத்தின் பயத்தினாலோ கொஞ்சம் படபடப்பாகிறான்..

பதட்டமா அல்லது அதீத ஆர்வக் கோளாறா..எது என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கிறான் அரவிந்த் ..வீட்டிற்கு சென்றதுமே தனது அறைக்கு சென்றவன் கடபுட என்று கபோர்டை உருட்டுகிறான்.

வழக்கம் போல மகனும் அம்மாவும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்…

“ஏங்க என்ன செய்றீங்க .தம்பி பயப்படுகிறான் ..என்னம்மா சத்தம் கேட்கிறது என்று .. “என்றதும் தான் சுதாரிக்கிறான்..தன் பதட்டமே தன்னைக் காட்டி கொடுத்து விடும் என்று அமைதியாகிறான்..

“அது ஒன்றும் இல்லைடி .என்னுடைய பழைய பைல் ஒன்றை காணோம் ..அது இங்கே இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். வேறு ஒன்றும் இல்லை.. சரி நீங்கள் இரண்டு பேரும் அறையில் இல்லாத போது நான் வந்து தேடிக் கொள்கிறேன் .. “என்றதும் அவன் அருகில் வந்த மித்ரா சிரிக்கிறாள் ..

“எந்த அடையாளம் என்று சொல்லுங்கள்.. நான் வேண்டுமானால் தேடித் தருகிறேன்..” இதற்கு என்ன பதில் சொல்வது..

” இல்லடி அது ஒன்றும் அவ்வளவு முக்கியம் கிடையாது .நான் மெதுவாய் தேடிக் கொள்கிறேன் .நீங்க உங்க வேலையைப் பாருங்க..” அவளை அனுப்பி விடுவதிலேயே குறியாக இருக்கிறான் …

“உங்கள் பையனுக்கும் எப்பொழுதுதான் இந்த அனுபவம் எல்லாம் கிடைக்கப் போகிறது .. நீங்க பாட்டுக்கு தேடி எடுத்துக் கொண்டு போங்க ..நாங்க ரெண்டு பேரும் விளையாடுகிறோம்.. ” என்று கூறி விட்டு செல்கிறாள்..

வைத்த இடத்தை மறந்து மற்ற இடங்களைத் தேடவும் நேரம் ஆகிறது. அதன் பிறகு தான் கப்போர்ட் அடி அடுக்கில் தேவையில்லாத பொருள்கள் என்று ஒதுக்கி விட்டது நினைவுக்கு வரவும் கையை விடுகிறான்..

மித்ரா உடைத்த செல்கள் ஒன்று ஒன்றாய் கைகளில் அகப்படுகிறது ..மலைத்துப் போகிறான்..இத்தனை செல்லுகளா சரியான கோபக்காரி தான் இவள்.. பிறகு ஆனாலும் அவள் உடைத்தது சிலது தான்.. குழந்தை அழுகிறான் என்று பதறிப் போய் ஓடியதில் தான் நிறைய செல்களை உடைத்து இருக்கிறாள்..இதை எதிலிருந்து எப்படி பார்ப்பது என்று ..அவசரமாய் தன்னுடைய அலுவலக தோல் பையில் அள்ளிப் போட்டுக் கொண்டு மனைவியிடம் செல்கிறான் ..

“நான் தேடிய ஃபைல் கிடைத்து விட்டதடி…சாரிடி அறையையே அலங்கோலமாய் ஆக்கி விட்டேன்.. மறுபடியும் வந்து கலைத்த பொருள்களை அடுக்கி வைத்து விடுகிறேன்..”
மனைவியின் கன்னத்தை செல்லமாய் தட்டி விட்டுப் போகிறான்..

‘இப்படியே இருந்தால் என்ன ..அவளும் பிரியமாய் தான் இருக்கிறாள் ..நானும் ஆசையாய்தான் இருக்கிறேன்.. இப்பொழுது எதற்கு நான் தேவையில்லாமல் பழசை எல்லாம் கிளறிக் கொண்டிருக்கிறேன்.. ஏதாவது தவறாய் கிடைத்தால் நான் என்ன என்று சொல்வேன் .. அவளிடம் எப்படி பேசுவேன் ..,எதுவும் புரியாமல் புலம்புகிறான் அரவிந்த்..

இப்படி புலம்பியதுமே நவீன் கையில் செருப்பை வைத்துக் கொண்டு தன்னை அடிக்க ஓடி வருவதைப் போல கண் முன்னே காட்சிகள் தோன்றி மறைகிறது.. வேறு வழியில்லை அவனுக்காகவாவது செய்து தான் ஆக வேண்டும் ..
முயற்சியில் இறங்கி ஆயிற்று ..
என்னதான் ஆகப் போகிறது என்று பார்ப்போம் என மனதை உறுதிப் படுத்திக் கொள்கிறான்.. கடைசி முடிவாக அவள் உடைத்த செல்களை எடுத்துக் கொண்டு ரிப்பேர் செய்வதற்கு கடைக்கு செல்கிறான்..அதிலும் கூட பெரிய தவறு ஒன்றை செய்து விடுகிறான் அதனாலேயே விடைகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறான் …

கடைக்காரரோ  வாங்கி சரி பார்த்ததுமே சிரிக்கிறார்.. ” சார் இந்த செல் ரிப்பேரே இல்லை ..நீங்கள் லேசாக உடைந்ததுமே தூக்கிப் போட்டு விட்டு வேற செல் வாங்கி விடுவீர்களா..” என்றதும் அரவிந்தும் சிரிக்கிறான்..

” ஆமாம் என் மனைவிக்கும் உடைப்பதும் எனக்கு வாங்கிக் கொடுப்பதும் தான் வேலை.. இந்த ஒரு செல் மட்டும் இல்லங்க.. இது மாதிரி இன்னும் நிறைய செல்லு வீட்டில் இருக்கு ..வரிசையா ஒவ்வொன்றாய் கொண்டு வந்து கொடுக்கிறேன்.. சரி செய்து கொடுங்க.”

“சரிங்க  இதற்கு டெம்பர் கிளாஸ் மட்டும் மாற்றி விட்டால் போதும் ..சிம் போட்டால் நல்ல வேலை செய்யும்.. ” என்கிறார்..
உடனடியாக சரி செய்தும் கொடுத்து விடுகிறார்.. வீட்டில் வைத்திருந்து இதை கண்டிப்பாக நோட்டமிட முடியாது என்று தன்னுடைய பேக்கிலேயே வைத்துக் கொண்டு அலைகிறான்..இந்தப் பதட்டமான மனநிலைக்காகத்தான் ஒரு செல்லை மட்டும் சரி செய்து பார்க்கிறான்..

அலுவலகத்துக்கும் வந்து விடுகிறான் வந்ததுமே நவீனையும் கூப்பிட்டுக் கொள்கிறான்.. நவீன் யோசனை கூறுகிறானே தவிர, இந்த விஷயத்திற்கு கொஞ்சம் சங்கடப்படுகிறான்..

” நீயும் உன் மனைவியும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பீங்க.. அதை எல்லாம் ஏன்டா என்னிடம் பார்க்க கேட்க கூப்பிடுகிறாய்.. நீ மட்டும் பாரேன் .. “

“ஆமாம் உதவிக்கு கூப்பிட்டால் ஏன்டா இப்படி உயிரை வாங்கி தொலைகிற .. எனக்கே என்ன செய்வது என்று பதட்டமாக இருக்கிறது. உடனே செல்லை எடுத்து பார்க்க வேண்டியதில்லை. என்ன செய்ய வேண்டும் என்று கொஞ்சம் யோசனை செய்வோம். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கலாம்.. அப்படியே இருந்தாலும் என்ன செய்து இருக்கப் போகிறோம்..மிஞ்சிப் போனால் முத்தம் சத்தம் என்று பேசி இருக்க போகிறோம்.. அதை எல்லாம் கேட்காமல் காதை மூடிக்கொள் ..மற்றவற்றை எல்லாம் கவனி .. “கொண்டு வந்த செல் பேக்கிலேயே இருக்கிறது. அதை ஓபன் செய்து கூட பார்க்கவில்லை..அலுவலக நேரத்தில் இதை கவனிக்க முடியவில்லை என்றதுமே மதிய சாப்பாட்டோடு ஆபீஸ்க்கு இருவரும் லீவு சொல்லி விடுகிறார்கள்..

லீவு சொல்லி விட்டார்களே தவிர எங்கு செல்வது என்று யோசிக்கிறார்கள்.. தன் வீட்டிற்கும் செல்ல முடியாது .நவீன் வீட்டிற்கு போக முடியாது. என்ன ஏது என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் வரும். அதனால் என்ன செய்வது என்று யோசித்து ஆபீஸ் அருகிலேயே ஒரு ஹோட்டலில் அறை பிடிக்கிறார்கள்.. அங்கு வைத்துக் கொண்டு அந்த செல்லை துப்பு துலக்கலாம் என்று..

என்ன செய்து எங்க மாட்டப் போகிறார்களோ?

தொடரும்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page