அத்தியாயம் 26: மௌனங்களின் சங்கீதம்

கொடைக்கானல் தந்த ஞானத்தோடும், குருவின் ஆசியோடும் ஆரியனும் யாழினியும் சங்கீதாவை கையில் ஏந்தியபடி சென்னைக்குத் திரும்பினர். கௌதம் அவர்களை   வரவேற்று புதிய இசை வாய்ப்பினை பற்றி விளக்கினான்.

“ஆர்யா… நாம நெனச்சத விட நம்ம ஆடியோ கம்பெனி நல்ல லாபத்தை கொடுத்திருக்கு, நீ சினிமாவுக்கு போட்ட அத்தனை படங்களும் சூப்பர் ஹிட், உன்னோட ஒவ்வொரு பாட்டும் இளைய தலைமுறையின் காலர் டியூனாக இருக்கு! இன்னும் எத்தனை புது படங்கள் உன் பாட்டுக்காக காத்திருக்கு தெரியுமா?”

“ கௌதம், எல்லாம் சரி. இதுவரைக்கும் நீ சொன்ன எந்த விஷயத்தையும் நான் மறுத்தது இல்லை”

கௌதம் ஆமோதித்தான். “ ஆனால் இப்ப, நாம ஒரு மியூசிக் ஸ்கூல் ஆரம்பிக்கப்போறோம்”

ஆச்சர்யத்தில் புல்லரித்து போன கௌதம், “ செம்ம ஐடியா, எப்போ எங்கன்னு சொல்லு வேலையை நான் ஆரம்பிச்சுடுறே, உங்க ரெண்டு பேருக்கு இருக்குற நல்ல பேருக்கு நிச்சயமா மக்கள் கூடி நின்னு அட்மிஷன் கேட்பாங்க”

அவர்கள் இப்போது வெறும் திரையுலக நட்சத்திரங்கள் அல்ல; ஒரு மாற்றத்திற்கான தூதர்கள். ஆரியன் தனது ஒட்டுமொத்தச் சொத்துக்களையும், புகழையும் பயன்படுத்தி “பிரகாஷ் மௌன ராகங்கள்” என்ற இசைப் பள்ளியைத் தொடங்கினான்.

இது வெறும் இசைப் பள்ளி அல்ல. காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்காக, இசையின் அதிர்வுகள் (Vibrations) மூலம் இசை எனும் மொழியைக் கற்றுக்கொடுக்கும் ஒரு ஆராய்ச்சி மையம்.

பள்ளி திறப்பு விழா அன்று, எந்த ஒரு அரசியல் பிரமுகரையும் ஆரியன் அழைக்கவில்லை. அந்த விழாவின் சிறப்பு விருந்தினர்கள் ஆதரவற்ற இல்லங்களில் இருந்த குழந்தைகள்தான்.

 இந்த முன்னெடுப்பே பத்திரிகை, மற்றும் ஊடகங்கள், சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்தது.  பத்திரிகையாளர்கள், மற்றும் நெருங்கிய உறவுகள் முன்னிலையில் மேடையில் ஆரியன் நின்றான். அவனுக்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான திரையில் “யாழினி” என்ற பெயர் மின்னியது. யாழினி சங்கீதாவைத் தூக்கிக்கொண்டு மேடைக்கு வந்தாள். அனைவரும் அவர்களை வரவேற்கும் விதமாக கரகோஷம் எழுப்பினர்.

“இசைங்கிறது வெறும் காதுகளால கேட்குற விஷயம் இல்லை. அது இதயத்தால உணர வேண்டியது. எனக்குக் காது கேட்காம போன அந்த நாட்கள் தான், மௌனத்தோட அழகை எனக்குக் கத்துக் கொடுத்தது. என் மனைவி யாழினியோட மௌனம் தான் எனக்கு இந்த உலகத்தைக் காமிச்சது,” என்று ஆரியன் சைகை மொழியிலும், பேச்சிலும் ஒரே நேரத்தில் விவரித்தான்.

மாற்று திறனாளி குழந்தைகள், தங்களுக்கென்று ஒரு புதிய உதயம் உருவாகிவிட்டது. என நம்பிக்கை கொண்டனர்.

அன்று ஒரு அதிசயம் நடந்தது. மேடையில் ஆரியன் ஒரு சிறப்பு ஒலியதிர்வு கருவியை இசைக்க, அங்கிருந்த காது கேளாத சிறுவன் ஒருவன், முதன்முதலாக ஒரு இசையின் தாளத்தை உணர்ந்து நடனமாடினான். அந்தத் தருணத்தில் ஒட்டுமொத்த அரங்கமும் கண்ணீர் சிந்தியது. மாற்று திறனாளி குழந்தையை பெற்ற பெற்றோர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது. இனி நம் குழந்தையும் மற்ற குழந்தைகள் போல இசைத்துறையில் ஒரு இடத்தை பிடிப்பார்கள். அவர்களும் சமூகத்தில் பாராட்டை பெறுவார்கள் என்ற புத்துணர்வு அவர்களுக்குள் பிறந்தது. யாழினி ஆரியனின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். அவர்களின் போராட்டங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுதான்.

பிரகாஷ் மௌன ராகம் இசை பள்ளி, மாற்றுத்திறனாளி மாணவர்களால் நிறைந்தது. வாரம் ஒருமுறை மற்ற மாவட்டங்களுக்கு அழைத்து சென்று இசை கச்சேரி நடத்தி, மற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் நம்பிக்கையை விதைத்தனர். சில தொழில் அதிபர்கள், ஆர்யனின்  இசை கல்வி முறையை பெரிதும் பாராட்டி அவர்களின் மாவட்டத்தில் அதே பெயரில் இசை பள்ளி ஆரம்பிக்க நிதியுதவியும் வழங்கினர். சில மாதங்களிலேயே பிரகாஷ் மௌன ராகம் பள்ளி பல கிளைகளை பரப்பி சாதனை படைத்து இருந்தது.

அன்று மாலை, அவர்களது மகள் சங்கீதாவின் முதல் பிறந்தநாள். வீடே மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரியா, கௌதம் மற்றும் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கூடியிருந்தனர்.

சங்கீதா ஒரு தேவதை போல உடை அணிந்திருந்தாள். அவள் கேக் வெட்டும் போது, ஆரியன் அவளது காதோரம் மெல்ல ஒரு மெட்டைப் பாடினான்.

“ நீயும்…. நல் இசையும்…

பேசும் இனி காலங்கள்

முழுவதும் நேசம் அது தான் பூ வாசம்….

நானும்… உன் தாயும்…

இனிய கீர்த்தனைகள்…

புது உலகம் இதுவே நீயே என் இசையே….

என்று மனம் மயங்கி பாடினான். சங்கீதா திரும்பிப் பார்த்துத் தன் சின்னஞ்சிறு கைகளால் ஆரியனின் முகத்தைத் தடவினாள்.

 

“ஆர்யன், நாம ஜெயிச்சிட்டோம்ல?” என்று யாழினி மெல்லக் கேட்டாள்.

“நாம மட்டும் இல்லை யாழினி… நம்ம காதல் ஜெயிச்சிருக்கு. அநியாயமா கொல்லப்பட்ட உன் அண்ணனோட ஆன்மா இப்போ இந்த இசைப் பள்ளியில இருக்குற ஒவ்வொரு குழந்தையோட சிரிப்புலயும் வாழுது,” என்றான் ஆரியன்.

அன்று இரவு, நிலவொளியில் அவர்கள் மாடியில் அமர்ந்திருந்தனர். ரியா வந்து ஒரு செய்தியைச் சொன்னாள். “ஆர்யன், சிறையில் இருந்த ரத்தினவேல் மனநிலை பாதிக்கப்பட்டு ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கார். அவர் இப்போ யாரையுமே அடையாளம் கண்டுக்க முடியலையாம்.”

ஆரியன் அமைதியாக இருந்தான். “இயற்கையோட நீதி யாரையும் விடாது ரியா. அவருக்கு நாம பழிவாங்குறதை விட, காலம் கொடுத்த தண்டனை தான் பெருசு.”

ஆர்யன் கூறியது உண்மை தான். எத்தனையோ எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் நன்றாக இருப்பது போலத் தோன்றினாலும், காலத்திற்கு முன் அவர்கள் விதைத்த எதிர்மறை எண்ணங்களை செயல்களாக அவர்களுக்கே திரும்பி செல்லும் என்பதை ரத்ன வேல் விஷயத்தில் ரியா தெரிந்து கொண்டாள்.

யாழினி ஆரியனின் தோளில் சாய்ந்து கொண்டாள். “இனி எந்தப் பயமும் இல்லை ஆர்யன். நம்ம சங்கீதா வளர்ந்து இந்த இசைப் பள்ளியை ஒரு பெரிய இடத்துக்குக் கொண்டு போவாள்.”

“ஆமாம் யாழினி. மௌனம் எப்போவுமே தோற்காது. அது சரியான நேரத்துல இசையா மாறும்,” என்று சொல்லி ஆரியன் அவளது கைகளில் முத்தமிட்டான்.

“ உண்மை தான் ஆர்யா… எத்தனையோ நாள் வாழ்க்கை என்னவாக போகிறது? எப்படி எளிய மனிதர்களுக்கு நீதி கிடைக்கப் போகிறது அப்படிங்கிற கேள்வியே என்ன தூக்க விடல, நானும் மனசு உடஞ்சு நின்னுருக்கேன். ஆனால் நம்ம வாழ்க்கையில நடந்த ஒவ்வொரு விஷயமும் நியாயம் நம்ம பக்கம் இருந்தா!  நாலா பக்கம் இருந்து எதிர்ப்பு வந்தாலும் வெற்றி நமக்குத்தான்னு இந்த வாழ்க்கையும், நீயும் எனக்கு புரிய வச்சிடீங்க” என்றாள் யாழினி.

“ சரிதான் யாழினி. ஆனால் நியாயத்தோடு, உன்ன மாதிரி ஒரு பெண்ணோடு காதல் கிடைச்சா, எட்டு திக்கும் இருந்து எதிரிகள் வந்தாலும் எதிர்த்து நிக்க துணிவு கிடைக்கும்”

என்று ஆர்யன் பதில் கூறியதும், இருவரும் தங்களை மறந்து சிரித்தனர்.

அவர்களின் வாழ்க்கை இப்போது ஒரு நிறைவான ஆற்றுப் படுகையைப் போல அமைதியாக ஓடத் தொடங்கியது. ஆற்றின் ஆழம் அதில் இறங்கியவனுக்குத் தான் தெரியும். இருவரும் காதல் எனும் ஆற்றில் நீந்தி, ஊழல் என்ற பாறையில் மோதி, அதிகாரம் என்ற அருவியில் விழுந்து, சூழ்ச்சி எனும் சூழலில் சிக்கி, இயலாமை என்ற அணையில் காத்திருந்து இறை அருள் எனும் பெரு மழையில் பெருகி இயலாமையை உடைத்து இன்று ஆனந்தமாக, அமைதியாக பயணம் செய்யும் வற்றாத ஜீவா நதியாக இவர்களின் பயணம் தொடர்கிறது. 

காலம் அதன் வேகத்தில் உருண்டோடியது. ஆரியன் மற்றும் யாழினியின் காதல் கதை இப்போது ஒரு இதிகாசமாகத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேசப்பட்டது. காதலர்களாக இணைந்து நீதிக்காக அவர்கள் போராடிய போராட்டங்கள் இன்று காதலில் விழும் இளைய தலைமுறைக்கு ஒரு படமாக இருந்தது. கௌதம் இவர்களின் காதலை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி பெரிய இயக்குநராக புது வடிவம் பெற்றிருந்தான். ரத்ன வேல்  புத்தி பேதலித்து தன்னை தானே தாக்கிக்கொண்டு இறுதியில் பசி, உறக்கம் இல்லாமல் கொடூர மரணத்தை சந்தித்தார். விக்ரம் என்ன ஆனான் என்று யாரும் அறியவில்லை, அவனது குணத்திற்கு எதுவும் ஆகாமல் தன்னையே அழிப்பான் என்பது விதியின் நியதி. ரியா ராணுவத்தில் பெரிய பொறுப்பில் அமர்ந்திருந்தாள். ஆர்யன், யாழினி தொடங்கிய ‘பிரகாஷ் மௌன ராகங்கள்’ இசைப் பள்ளி, ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றியிருந்தது. அதில் இசை பயின்ற மாணவர்கள் பல்வேறு நாடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இசை ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு…

சென்னை மியூசிக் அகாடமி அரங்கம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பல மாற்று திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் வருகை புரியும் விருந்தினர்களை புன்னகையுடன் வரவேற்றனர். மேடையின் நடுவில் ஒரு பிரம்மாண்டமான திருவுருவப் படம் இருந்தது – அது ஆரியன் மற்றும் யாழினியின் படம்.

மேடைக்கு முன்னால் முதல் வரிசையில், முதிர்ந்த தோற்றத்தில் இருந்தாலும் அதே கம்பீரத்துடன் ஆரியன் அமர்ந்திருந்தான். ஒரு மூக்கு கண்ணாடியை அணிந்திருந்தாள் யாழினி, காதோரம் நரைத்த முடிகள் உதட்டில் எப்போதும் குடியிருக்கும் புன்னகை, ஆர்யனின் கைகளைப் பற்றி அமர்ந்திருந்தாள் யாழினி. அவளது கண்களில் இன்னும் அந்தப் பழைய காதலின் ஒளி குறையாமல் இருந்தது. அவர்கள் இருவரும் இப்போது ஒரு வெற்றிகரமான வாழ்க்கையின் விளிம்பில் நின்றிருந்தனர். அவர்களுக்கு பின்னால் ஒரு மாற்றுத்திறனாளி கூட்டமே வெற்றிக்காக வீர நடை போட்டுக்கொண்டு இருந்தது.

மேடையில் ஒரு இளம்பெண் வீணையுடன் அமர்ந்திருந்தாள். அவள் வேறு யாருமல்ல, அவர்களது மகள் சங்கீதா. முகத்தில் ஒரு தெய்வீக வசீகரம். உதட்டில் அனைவரையும் அரவணைக்கும் புன்னகை. கண்களில் தன்னம்பிக்கை நிறைந்த மதிப்பு மிக்க பார்வை.

அவள் வீணையை மீட்டிய போது, அந்த அரங்கம் ஒரு விசித்திரமான அமைதியில் மூழ்கியது. அது ஆரியன் உருவாக்கிய அந்தப் புகழ்பெற்ற ‘மௌன ராகம்’. சங்கீதா அந்த ராகத்தை வாசித்து அனைவரின் மனதையும் வாசம் மிகுந்த பூந்தோட்டம் போல  இசையால் நறுமணம்  வீச செய்தாள். விழாவை சிறப்பிக்க வந்திருந்த மக்களும் ரசித்து மகிழ்ந்தனர். ஆர்யனுக்கும், யாழினுக்கு பெருமை தாங்க முடியவில்லை. சங்கீதா குழந்தை முதலே இசையில் வளர்ந்து இருந்தாலும் மற்ற துறைகளிலும் இயந்திரவியல், கணிதம், அறிவியல், விவசாயம் என்று பள்ளிப் பருவத்திலே ஒரு சுற்று சுற்றி வந்திருந்தார். ஆனால் எல்லாம் விடவும் இசையே அவளுக்கு பிரதானமாக இருந்தது. கச்சேரி சிறப்பாக முடித்ததும், அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.

சங்கீதா அனைவரையும் நன்றியுடன் வணங்கினார். சங்கீதா மைக்ரோபோன் முன்னால் வந்து பேசினாள். “இன்று நான் ஒரு கலைஞராக இங்கே நிற்பதற்குக் காரணம், என் அப்பா மீட்டின அந்தப் போராட்ட இசையும், என் அம்மா காட்டிய அந்த மௌனமான அன்பும்தான். காதலுக்குக் காது தேவையில்லை, மொழி தேவையில்லை… இதயம் இருந்தால் போதும் என்று உலகுக்கு நிரூபித்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு மாபெரும் நன்றியினை சொன்னாலும் நிகர் ஆகாது.  இன்று,  நாட்டில் ஊழல் செய்ய ஒரு தயக்கமும், லஞ்சம் என்பதை அவமானமாக கருதும் நிலைக்கு காரணம், அவர்கள் இளமையில் ஊழலுக்கு எதிராக தொடுத்த போரின் வெற்றி தான். இன்றும் தமிழ் நாடு எங்கும் வெற்றிக் கொடியாக பறக்கிறது. வாழ்வின் ஒரு சிறந்த முடிவை எடுப்பதற்கும், இது தான் நாம் என்று புரிந்து கொள்வதற்கும் இயற்கையே துணை நிற்கும், அதற்கு விடையாக நாம் சில இடங்களில் இருக்கும் பொழுது நல்ல அதிர்வை, அல்லது நல்ல முடிவை எடுத்து அதற்கு முன்பு இருந்த நல்லது இல்லா சம்பவத்தை நல்லாதாக்கி இருப்போம். அப்படி நம் பள்ளியின் நிறுவனர்கள் தங்களை உணர்ந்த அதே கடற்கரையில் ஒரு மாபெரும் இசைத்தூணை நிறுவப்போகிறோம். அது ‘காதல் மற்றும் நீதியின்’ அடையாளமாக இருக்கும்.”

என்று தனது உரையை  முடித்ததும் கச்சேரிக்கு வந்திருந்த சிலர் பூங்கொத்துகளை கொடுத்து  வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். காதல் மற்றும் நீதியின் சின்னமாக, பள்ளியின் பின்புறம் கடற்கரையின் முன் புறம் இசைத்தூண்  ஒன்று நிறுவப்பட்டது. இசை மாணவர்கள் அதை கண்டதும் அவர்களுக்குள் புதிய ஒளி ஒன்று பிறந்ததை போல உணர்ந்தனர். தாமும், தங்களது இசையும் இந்த தூண் போல வானம் தொட்டு நிற்கும் என உறுதிகொண்டனர். விழா முடிந்து, ஆரியனும் யாழினியும் அதே கடற்கரைக்குச் சென்றனர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பயந்த சுபாவமுள்ள யாழினியும், வாழ்க்கையை இழந்த நிலையில் இருந்த ஆரியனும் தங்களை உள்ளூர உணர்ந்த அதே இடம்.

கடலலைகள் இன்றும் அதே தாளத்துடன் கரையில் மோதிக்கொண்டிருந்தன. ஆரியன் யாழினியின் தோளில் கை போட்டபடி நடந்தான். அலைகள் போல என்றும் குறைவில்லா காதலோடு நிம்மதியாக ஆனந்தக் காற்றை  சுவாசித்த படி ஒருவரை பார்த்தனர்.  

“ஞாபகம் இருக்கா யாழினி? இதே இடத்துல தான் நீ ஒரு பேப்பர்ல எழுதி என்கிட்ட பேசினாய், அந்த எழுத்தில் உள்ள  அழுத்தம், மன அழுத்தத்தில் இருந்த என்னையும் புதிய ஒரு பாதைக்கு அழைத்து சென்றது” என்று ஆரியன் பழைய நினைவுகளில் மூழ்கினான்.

யாழினி சிரித்தாள். “அன்னைக்கு என்கிட்ட பேச வார்த்தைகள் இல்லை ஆர்யன். ஆனா இன்னைக்கு, என் மனசு முழுக்க உன்னைப் பத்தின நினைவுகள் மட்டும்தான் இருக்கு. நாம கடந்து வந்த வலிகள், அந்தத் துரோகங்கள், லண்டன் பயணங்கள்… எல்லாமே இன்னைக்கு ஒரு அழகான கனவு போல இருக்கு,” என்றாள்.

அப்போது கௌதம், தனது மனைவியோடு வந்து சேர்ந்தான். அவனது இரண்டு மகன்களும் ஆஸ்திரேலியா வில், முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பினை படித்துக்கொண்டு இருந்தனர்.

“ சாரி நண்பா… ஒரு புதிய திரைப்படத்தின் பூஜை கொஞ்சம் லேட் ஆகிடுச்சு,” கௌதம் இன்று முன்னணி திரைப்பட தயாரிப்பாளராக வளர்ந்து இருந்தான்.

“ நீ எப்போ வந்தாலும் அது தான் சரியான நேரம், ஆனால் நிகழ்ச்சி முடிஞ்சிருச்சு” என்றான் கிண்டலுடன்.

“ நிகழ்ச்சியில நானும் தான் இருந்தேன்”

ஆர்யன் ஆச்சர்யமாக பார்க்க, “ அட ஆன்லைன் ல, பாத்துட்டு தான் இருந்தேன்.” என்றதும், இருவரும் ஒன்றாக புன்னகைத்தனர்.

கௌதம், மற்றும் அவரது மனைவி, ஆர்யனுக்கும், யாழினிக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பினர்.

இருவரும் கடற்கரை மணலில் கால் பதித்து நின்றனர்.  ஆரியன், யாழினியை புதியதாக பார்ப்பது போல பார்த்து நின்றான். அவனது பார்வையில் யாழினிக்கு இளமை கடந்தும் வெட்கம் அவளது முகத்தில் குடியேறியது.   அவன் யாழினியை நேருக்கு நேர் பார்த்தான். “ என்ன ஆர்யா அப்படி பாக்குற?, இளமை திரும்புதோ”

 “யாழினி, என் வாழ்க்கையில நான் வாங்குன எல்லா விருதுகளையும் விட, உன் மௌனத்தை நான் புரிஞ்சுகிட்ட அந்த நிமிஷம் தான் எனக்குப் பெரிய விருது. இனி வர்ற ஒவ்வொரு பிறவியிலயும், எனக்கு நீயும் உன் மௌனமும் தான் வேணும்.”

யாழினி அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். “எனக்கும் தான் ஆர்யன். வார்த்தைகள் முடிவடையும் இடத்தில் தான் உண்மையான காதல் தொடங்குது.”

சூரியன் மெல்லக் கடலில் மறையத் தொடங்கியது. வானம் சிவந்து, ஒரு புதிய ராகத்தை இசைப்பது போல இருந்தது. தூரத்தில் சங்கீதா தனது மகனுடன் (ஆரியனின் பேரன்) விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

ஆரியன் தனது ஜிப்பா பையிலிருந்து ஒரு சிறிய புல்லாங்குழலை எடுத்து மெல்ல ஊதினான். அந்த இசை காற்றின் வழியாகக் கடலோடு கலந்தது. இருவரும் கடற்கரை மணலில் அமைந்து இசையோடு, மழலை ஆனார்கள். யாழினி அவனது ராகத்தை ரசிப்பதை தாண்டு தன்னை ராகமாகவே உணர்ந்தாள்.  ஒரு காலத்தில் ஊமையாக இருந்த யாழினியின் குரலும், செவிடாக இருந்த ஆரியனின் காதுகளும் இப்போது ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தின் இசையையும் அனுபவித்துக்கொண்டிருந்தன.

மௌனம் முடிந்தது… ஆனால் அந்த மௌனம் உருவாக்கிய ராகம், காலங்களைத்தாண்டி ஒலித்துக்கொண்டே இருக்கும்.

சுபம்

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page