அத்தியாயம் 26
அதிகாலை ஆறு மணி..
எப்பொழுதும் கண் விழிக்கும் வேளையில் தன் அருகில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் தன் கணவனை இன்று காணாமல் சுற்றிலும் திரும்பிப் பார்த்து தேடினாள் மித்ரா..
எப்பொழுதும் அவன் தாமதமாகத் தான் எழுந்து , கிளம்பி அலுவலகம் செல்வான்..
ஆனால் இன்று தன்னருகில் அவன் இல்லாததை கண்டு அவளுக்கு குழப்பம் ஏற்பட்டது..
எழுந்து சென்று அவனை தேடினாள் எங்கும் அவனை காணவில்லை பால்கனியிலும் அவன் இல்லை பாத்ரூமிலும் இல்லை.. ஒருவேளை சீக்கிரமே எழுந்து அலுவலகம் கிளம்பி சென்று விட்டாரோ என்கிற யோசனை வந்தது அவளுக்கு..
இருந்தாலும் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு பீரோவிலிருந்த சிவப்பு நிற மைசூர் சில்க் சேலையை எடுத்து கொண்டு குளியலறை நோக்கி சென்றாள்..
குளிக்கும் போது ஏனோ சம்மந்தமே இல்லாமல் முதல்முறையாக அவளுக்கு தீரன் நினைவு வந்தது..
அதுவும் நேற்று இரவு நடந்த நிகழ்வு அவளுக்கு ஞாபகம் வந்தது..
“உடம்பு சரியில்லையா”, என்று கேட்டு கையை அவன் நெற்றியில் வைக்கவும் அதை அழுத்தமாக பிடித்துக் கொண்ட தீரனை வித்தியாசமாக பார்த்து வைத்தாள் மித்ரா.
கண்களில் தேங்கிய கண்ணீர் துளிகளோடு தன் கணவனின் முகம் சோர்வடைந்து இருப்பதை காணவும் அவளுக்கு என்னவோ போலாகிவிட்டது அதனால் மேலும் அவனை நெருங்கி..
“என்னாச்சு??”, என்று கேட்டாள்.
“அது.. எனக்கு நீ.. அது உன்.. உன்னோட அன்பு எனக்கு..”, திக்கித் திணறி அவன் பேச முயல்வதை கண்டதும்..
“ என்னாச்சு என்ன பிரச்சனை??”
” ஒன்னுமில்ல மித்ரா நீ போய் தூங்கு..”, என்று கூறி அவளை அனுப்பி வைத்தான்.
மழுப்பலான பதிலை கூறி தன் கணவன் அனுப்பி வைத்ததை அவள் நன்றாக உணர்ந்து கொண்டாள் என்னவோ சமாளிக்கிறான் என்று அவளுக்கு புரிகிறது ஆனால் அது என்னவென்று தெரியவில்லை அவளுக்கு..
அவன் சரியில்லை அவனிடம் ஏதோ ஒரு மாற்றம் தென்படுகிறது என்பதை மட்டும் உணர்ந்து கொண்டாள்..
குளித்து முடித்து அந்த மைசூர் சில்க் சேலையை அழகாக உடுத்திக் கொண்டு அலுவலகம் நோக்கி கிளம்பினாள்..
“ அத்தை.. நான் ஆபீஸ் போயிட்டு வரேன்”
“ சரிமா சந்தோஷம்.. போயிட்டு வா நீயும் வீட்டுக்குள்ளேயே இருந்து என்ன பண்ணுவ ?? போரடிக்கும்..”
” சரிங்க அத்தை நான் கிளம்புறேன்..”, என்று கூறிவிட்டு வாசலை நோக்கி சென்றவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை மீண்டும் திரும்பி தன் அத்தையிடம் வந்தாள்.
“ என்னம்மா எதுவும் மறந்து வச்சிட்டு போயிட்டியா??”
“ இல்ல.. அது வந்து.. அவர்.. அவரை காலையிலிருந்து நான் பார்க்கல.. ஆபீஸ்க்கு கிளம்பி போயிட்டாரா??”
ஆவலோடு தன் அத்தை என்ன பதில் சொல்ல போகிறார் என்று எதிர்பார்த்த வண்ணம் அவள் கேட்க..
அவள் முகத்தில் தென்பட்ட ஆவலை கண்டதும் வசுந்தராவுக்கு மனதிற்குள் சிறு மகிழ்ச்சி உண்டானது..
இருக்காதா பின்னே.. முதல் முறையாக கணவனை பற்றி அக்கறையாக விசாரிக்கிறாளே.. அதான்..!!
” ஆமாம்மா அவன் காலையிலேயே கிளம்பி போயிட்டான் சாப்பிட கூட இல்லை.. என்ன அவசரமோ தெரியல”, என்று சொல்லிவிட்டு அவர் தன் வேலையை பார்க்கத் தொடங்கி விட்டார் இவளும் யோசனையுடனே அங்கிருந்து கிளம்பி போய்விட்டாள்..
அலுவலகம் செல்லும் வழிநெடுக அவளுக்கு தீரனின் நினைவுதான்..
ஒரு நாளும் இப்படி சீக்கிரமாக அவன் கிளம்பி பார்த்ததே இல்லையே..
அப்படி என்ன முக்கியமான வேலை?? சரி அதைப்பற்றி அப்புறம் யோசிப்போம் முதலில் போய் வேலை பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டவள் தன்னை சமன்ப்படுத்திக் கொண்டு நிகழ்காலத்திற்கு வந்தாள்.
அலுவலகம் சென்றதும் எந்தவித யோசனையுமின்றி அவள் பாட்டுக்கு வேலை செய்தாள்..
வேலைக்கு கிளம்பும்போது எங்கே தீரன் மீண்டும் வம்பு செய்வானோ என்று எதிர்பார்த்தாள் ஆனால் அவனை காணவில்லை..
ஒருவேளை அன்று போலவே இன்றும் ஆபீஸ் வந்து ரகளை செய்வானோ என்று பார்த்தால் அதுவும் இல்லை.. அவன் வரவே இல்லை மாலை வரை..!!
ஒரு பக்கம் இதை நினைத்து நிம்மதியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவனுக்கு என்னாயிற்று இப்படி எல்லாம் இருக்க மாட்டானே என்கிற யோசனையும் வந்தது..
நிம்மதியாக எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு சிறு புன்னகையுடன் வீட்டை நோக்கி விரைந்தாள் மித்ரா.
வீட்டிற்குள் நுழைந்ததும் வாம்மா என்று வரவேற்ற தன் மாமியாரிடம் அவருக்கு பிடித்த பால்கோவா டப்பாவை திணித்தாள்.
“ என்னம்மா இது??”
” இது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமே வர வழியில் கடையில் பார்த்தேன் அதான் வாங்கிட்டு வந்தேன் வாங்க சூடா காபி சாப்பிட்டுட்டு இதை சாப்பிடுவோம்..”, என்றாள் அவள்.
இத்தனை நாட்களில் தன் மகன் தனக்காக எதையும் வாங்கி கொடுத்ததே இல்லை என்று கூற முடியாது தான் ஆனால் ஆசையாக இப்படி தனக்கு பிடித்ததை அவன் ஒரு நாளும் வாங்கி வந்ததில்லை வீட்டிற்கு வரும் பொழுது..
சொல்லப்போனால் அவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்கிற விஷயமே அவனுக்கு தெரியுமோ என்னமோ?? அதுவே சந்தேகம் தான்..
ஆனால் என்னதான் மருமகளாக இருந்தாலும் சொந்த மகள் போல தன் மீது அக்கறை காட்டும் மித்ரா மீது அவருக்கு அளவுகடந்த அன்பு தோன்றியது..
வாஞ்சையோடு அவளின் தலையை வருடி கொடுத்தவர்…உடனே சூடாக காபி தயாரித்து அவளுடன் கதை பேசிக்கொண்டே இரவு உணவையும் தயாரிக்க தொடங்கினார்.
இரவு மணி பத்தை நெருங்கியது..
மாமியார் மருமகள் இருவரும் டிவி பார்த்துக் கொண்டும் கதை பேசிக் கொண்டும் இரவு உணவை உண்டு விட்டு தூங்க போனார்கள்..
அறைக்குள் நுழைந்ததும் தான் அவளுக்கு தன் கணவனின் நினைவு வந்தது..
நேற்று நள்ளிரவில் அவனைப் பார்த்தது.. அதற்கு பிறகு அவனை பார்க்கவே இல்லை.. இன்னமும் வீடு வந்து சேராமல் இருக்கிறானே அப்படி என்ன பெரிய வேலை இருக்கிறது ஆஃபீஸில்..?? முக்கியமான மீட்டிங் எதுவும் இருக்குமோ?? என்று யோசித்தாள்.
சுவர் கடிகாரத்தை பார்த்துக் கொண்டே படுத்திருந்தவள் ஒரு கட்டத்தில் அப்படியே உறங்கிப் போனாள்.
நள்ளிரவு இரண்டு மணி..
ஏதோ கனவு கண்டது போல திடீரென்று விழித்துப் பார்த்தாள் மித்ரா.
பக்கத்தில் படுத்திருக்கும் தன் கணவனின் உருவத்தை அங்கே காணாமல் கவலையோடு எழுந்தமர்ந்தாள்..
ஏதாவது வேலையாக இருக்கும் வேலை முடிந்த பிறகு 12 மணி அல்லது ஒரு மணி போல எப்படியும் வீடு வந்து சேர்ந்து விடுவான் என்கிற நம்பிக்கையில் படுத்தாள்..
ஆனால், மணி இரண்டை தாண்டியும் அவன் இன்னும் வீடு வந்து சேராமல் இருக்கவே அவளுக்கு சிறு அச்சம் உண்டானது..
என்னாச்சு நேத்து வேற அவன் முகமே சரியில்ல நடவடிக்கைகளும் உன்ன மாதிரி இல்ல கொஞ்சம் மாறிடுச்சு என்னவா இருக்கும்??
உடம்பு எதுவும் சரி இல்லையா ஏதாவது பிரச்சனையானு கேட்டதுக்கு எதுவும் பதில் சொல்லாமல் அமைதியா இருந்துட்டான் நேத்து.. சரி எப்படியும் வந்துடுவான் வீட்டுக்கு என்று பார்த்தால் அவன் இன்னும் வராமல் இருக்கிறானே??!!
கண்ணெல்லாம் கலங்கி ஒரு மாதிரி சோர்வா சோகமா இருந்தான் எதுவும் மனசு சரியில்லையா அவனுக்கு??
அதான் அவன் வீட்டுக்கு வரலையா??
ஒருவேளை என் மீது எதுவும் கோபமா??
கடவுளே.. ஒன்னும் புரியலையே இன்னும் வீடு வராமல் இருக்கிறானே என்று கைகளை பிசைந்து கொண்டு அறைக்குள் குட்டி போட்ட பூனை போல நடை பயின்றாள்..
நொடிக்கொரு முறை சுவர் கடிகாரத்தை பார்ப்பதும் வாசலை பார்ப்பதுமாக இருந்தாள்..
வழக்கமாக தன்னிடம் வந்து வம்பிழுத்துக் கொண்டும், கதற வைத்துக் கொண்டும் இருந்த கணவன் சட்டென்று அமைதியாகிவிட.. அவளுக்கு ஏனோ அந்த நடவடிக்கை வித்தியாசமாகப்பட்டது..
அதனால் தான் அவளுடைய மனம் பதைப்பதைத்து போனது..!!
அதிகபட்ச ஸ்பீடில் ஓடிக்கொண்டிருந்த ஃபேன் காற்றையும் தாண்டி அவளுக்கு நெற்றியில் வேர்வை முத்துக்கள் பூக்க தொடங்கியது..
பால்கனி வழியே தெரியும் வெளிவாசலை ஒவ்வொரு முறையும் பார்த்துக் கொண்டாள்..
நேரம் கடந்ததே தவிர அவன் வீடு வரவில்லை..
பேசாமல் போன் பண்ணி பார்த்தால் என்ன என்று தோன்றியது..
உடனே தன் மொபைலை எடுத்து அவனுக்கு டயல் செய்ய முற்பட்டாள்..
அப்பொழுதுதான் அவள் புத்திக்கு உரைத்தது..
அவளிடம் அவன் மொபைல் எண் இல்லை என்று..!!
நெற்றியில் அடித்துக் கொண்டு உச்சு கொட்டினாள் அவள்..
கல்யாணம் ஆயிடுச்சு என்றுதான் பேர்.. கணவன் மனைவி என்ற பதவியில் இருவரும் சுற்றிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இதுவரை அவனுடைய மொபைல் எண் என்ன என்று யாரிடமும் கேட்டு வாங்க தோன்றவும் இல்லை அவனிடமும் கேட்க தோன்றவில்லை..
இப்பொழுது அவசரம் என்று வரும்பொழுது அவனுக்கு போன் செய்ய முடியவில்லை..
அவனுடைய மொபைல் நம்பர் என்னவென்று அத்தையிடம் போய் கேட்டால் சொல்லுவார்கள் தான்..
ஆனால் நம்பர் கேட்கும் நேரமா இது?? இந்த நேரத்தில் போய் கேட்டால் என்ன நினைப்பார்கள் ??புருஷன் போன் நம்பர் கூட தெரியலையா என்று யோசிப்பார்கள்.. இன்னொன்று இந்த நேரத்தில் வந்து கேட்கிறாள் இன்னும் அவன் வீடு வரவில்லையா என்று கவலைப்படுவார்கள்..
இரண்டுமே அனாவசியமான ஒன்றுதான் இப்பொழுது..
அதனால் அமைதியாக அறைக்குள் காத்திருப்போம் அவன் வரும் வரை என்று எண்ணிக்கொண்டாள் அவள்..
நடந்து நடந்து அவளுக்கு கால் வலி வந்ததோ இல்லையோ ஆனால் அதிகாலை நாலு மணி வந்தது..!!
இன்னும் ஒரு மணி நேரம் தாண்டி விட்டால் ஆதவன் வருகை தந்து விடுவான்..
ஆனால் தன்னை அடக்கியாளும் அவள் கணவன் இன்னும் வரவில்லையே என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள் பாவம் அவள்..
சரியாக நாலரை மணிக்கு வீட்டிற்குள் அவனுடைய கார் நுழைந்தது..
விடிய விடிய ஊர் சுற்றி விட்டு இப்பொழுதுதான் ஐயா வீடு வந்து சேர்கிறாரோ என்று மனதிற்குள் கோபம் ஒரு புறம் வந்தாலும், எப்படியோ வீடு வந்து சேர்ந்தானே அதுவே போதும் என்கிற நிம்மதியும் உண்டானது அவளுக்கு..
வாசல் வரை ஓடிச் சென்று அவனை வரவேற்க வேண்டும் என்று அவளுடைய கை கால்கள் பரபரத்தது..
ஆனால் அதை அடக்கிக் கொண்டு அமைதியாக அறைக்குள் நின்றிருந்தாள் அவன் உள்ளே வருவதற்காக..
சற்று நேரத்தில் அவனும் வந்தான்..
போட்டிருந்த கோட்டை கழட்டி தோளில் போட்டுக் கொண்டு சோர்வாக நடந்து உள்ளே வந்தவனை பார்த்ததும் அவளுக்கு சந்தேகமாக இருந்தது ஒருவேளை நேற்று போல இன்றும் மது அருந்திவிட்டு வந்திருக்கிறானோ என்று எண்ணினாள்..
வேகமாக அவன் அருகே சென்றவள்..
“ என்னாச்சு ஏன் இவ்வளவு லேட்டா வீட்டுக்கு வரீங்க எங்க போனீங்க??”
பதட்டமாக கேள்வி கேட்ட தன் மனைவியை ஆச்சரியமாக பார்த்தான் தீரன்..
திருமணமான நாள் முதல் நேற்று வரை ஒரு நாளும் அவள் தன்னை தேடியது கிடையாது அதுவும் இத்தனை பதட்டத்துடன்..!!
இன்று முதல்முதலாக தன்னை எதிர்பார்த்து பதட்டமாக காத்திருக்கும் தன் மனைவியின் முகத்தை காணவும் அவனுக்கு சந்தோஷம் உண்டானது மனதிற்குள்..
ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான்.
“ பதில் சொல்லுங்க என்ன ஆச்சு”
” ஒன்னுமில்ல கொஞ்சம் டயர்டா இருந்தது ஆபீஸ்லயே படுத்து தூங்கிட்டேன் அப்புறமா தான் டைம் பார்த்து எந்திரிச்சு வந்தேன்..”, என்று கூறிவிட்டு அவளுடைய பதிலுக்காக காத்திராமல் வேகமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
என்னாச்சு இவனுக்கு?? கேட்ட கேள்விக்கு சரியா பதில் சொல்லவே மாட்டேங்கிறான்.. அதுவும் ரொம்ப டயர்டா இருப்பது போல் காட்டிக் கொள்கிறானே நிஜமாகவே சோர்வா ??அல்லது என்னிடம் பேச பிடிக்கவில்லையா??
நேற்று வரை சுற்றி சுற்றி வந்தான் பின்னாடியே..
எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக கையை பிடித்து உட்கார வைத்து கதை பேசுவான்.. இல்லையென்றால் சில்மிஷ வேலைகள் செய்து கோபப்படுத்துவான்.. ஆனால் இந்த இரண்டு நாட்களாக அவனுடைய நடவடிக்கையே சரி இல்லையே என்னவாக இருக்கும்?? என்று சிந்தித்தாள் அவள்..!!
– தொடரும்..
