பாகம் – 28
“சரிடா உனக்கு நல்ல பெண்ணாய் பார்க்க வேண்டியது என்னுடைய பொறுப்பு .கவலைப்படாதே நானும் மித்ராவும் சேர்ந்து உன் கல்யாணத்தை நல்ல படியா நடத்தி வைக்கிறோம் .. ”
என்னதான் பழைய மொபைல்களில் எதுவும் இல்லை என்றாலும் அரவிந்தால் மட்டும் நிம்மதியாக இருக்க முடியவில்லை… அது என்ன பிரச்சனையோ அவனுக்கு ..
அதற்கேற்றாற் போலவே நவீனும் தேவையில்லாமல் ஒரு வார்த்தையை விடுகிறான்..
போகும் போக்கில் நவீன் நாக்கில் சனி தான் இருந்தது போல .தேவையில்லாமல் இந்த வார்த்தையை விடுகிறான்.. அதை அரவிந்தும் வேத வாக்காய் பிடித்துக் கொள்கிறான்..
“இத்தோடு இந்த பிரச்சனையை முடித்து விடுவாய் தானே. ” என்றதும் அரவிந்த் சந்தோசமாய் தலையாட்டுகிறான்..
“ உன்னை நம்ப முடியாதுடா மகனே..வீட்டுக்கு போய் இன்னும் வேறு ஏதாவது செல் இருக்கிறதா என்று நோண்டி பார்த்தாலும் பார்ப்பாய்.. ”
நவீன் சொன்னதுமே அவனது மூளைக்குள் ஏதோ ஒரு பொறி தட்டுகிறது..
“டேய் இருடா இப்ப என்ன சொல்ல .. ”
அவனது பரபரப்பைக் கண்டதுமே நவீனுக்கு பயம் வந்து விடுகிறது.. “நான் ஒன்னும் சொல்லலப்பா.. உடனே இதை பிடித்துக் கொள்ளாதே..”
” இல்லடா வீட்டில் இன்னும் வேறு ஏதாவது செல் இருக்கும் என்று தானே கூறினாய்.. அட ஆமாம்டா அவளுக்கு எங்களின் கல்யாணம் ஆன அன்று நான் செல் வாங்கி கொடுத்தேன் …அதுவும் எந்த நேரம் தெரியுமா.. எனக்கு மனதில் இன்னும் அந்த நினைவுகள் இனிமையாய் பதிந்து இருக்கிறது..எங்களுடைய முதலிரவு அன்று… அவள் வெட்கத்துடன் தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள்.. அவளிடம் கொண்டு போய் இந்த மொபைலை கொடுத்ததும் பிரித்து பார்த்து விட்டு ஆனந்தத்தில் நானே எதிர்பார்க்கவில்லை ..வேகமாக கன்னத்தில் உதட்டில் என்று அழுத்தமாக முத்தம் கொடுததாள்.. என் முதல் முத்தமடா அது..” இதை சொல்லும் போதே கிறங்கிப் போய் அழகாய் பேசுகிறான்..
” சரிடா இதையெல்லாம் ஏன்டா என்கிட்ட சொல்ற.. எனக்கே இன்னும் கல்யாணம் வேற ஆகல. சும்மாவே இருக்க மாட்டடா நீ..” என்று நண்பனை அதட்டுகிறான் நவீன்..
அப்பொழுது வாங்கி கொடுத்த செல் மட்டும் தான்டா இன்னும் பாக்கி
இருக்கு.. “
“அதை உன் மனைவி உடைக்க வில்லையா..”
“அதை அவள் ஆசையாக கையில் வைத்து பத்திரமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.. என் பையன் ஒருநாள் பசியில் வேகமாக அழவும் தம்பி என்று கிச்சனில் இருந்து பதறி கொண்டு ஓடி வந்தவள் எப்பொழுதும் சமைக்கும் போது மொபைலை கிச்சனில் கொண்டு போய் வைப்பது தான் பழக்கம் .. ”
“மகன் அழவும் பதறி ஓடி வரவும் ஷெல்பில் இருந்ததை கவனிக்காமல் இடித்து தள்ளி விட்டு ஓடி வரவும் மொபைல் கீழே விழுந்து உடைந்து விட்டது. அந்த செல் கண்டிப்பாக வேலை செய்யாது..அதனால் அதை ரிப்பேருக்கு கொடுக்க முடியுமா என்னமோ.. போய் பார்க்கிறேன்..”
“வேண்டாம்டா அரவிந்த் நான் வேறு சும்மா இல்லாமல் உன்னிடம் வாயை விட்டு திரும்பவும் பிரச்சனை உண்டு பண்ணுகிறேன்.. நீ ஒன்றும் நினைக்காதடா.. அந்த செல் உடைந்தது உடைந்ததாகவே இருக்கட்டும்.. பேசாமல் உன் வேலையை பார்த்துக் கொண்டு போ.. ”
“ இல்லைடா எல்லாவற்றையும் பார்த்து விட்டேன் .இதையும் சரி செய்து பார்த்தால் தான் எனக்கு மனம் நிம்மதியாக இருக்கும் .. அது என்னவோ தெரியலைடா நவீன்.. என் உள்மனம் ஏதோ ஒரு தப்பு நடந்து இருப்பதாக சொல்லிக் கொண்டே இருக்குடா.. அது என்ன என்று தான் எனக்கு புரிய மாட்டேன் என்கிறது.. ”
ஆனாலும் முன்பு இருந்த பதட்டம் இப்பொழுது அவனுக்கு இல்லை. அந்த ஒரு செல்லில் போய் அப்படி என்ன ரகசியம் இருக்கப் போகிறது ..அதுவும் இல்லாமல் கல்யாணமான புதிதில் அவளுக்கு ஆசையாய் வாங்கி கொடுத்த செல்..அப்பொழுது நாங்கள் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் இணை பிரியாமல் உயிராய் இருந்தோம்.. அதனால் அவளை எக்காரணம் கொண்டும் இனிமேல் சந்தேகப்படக் கூடாது ..ஆனாலும் அந்த செல்லையும் நான் சரி செய்து விடுவேன் . “என்ற படியே வீட்டுக்கு செல்கிறான்.
இவன் கண்டிப்பாய் மதில் மேல் பூனை தான்..
எப்படியடா வீட்டுக்கு சென்று அந்த மொபைலை கையில் எடுப்பது என்று யோசித்து கொண்டே போனவனுக்கு அறைக்கு சென்றதுமே தான் கண்ட காட்சி அதிர்ச்சிக்குள் உள்ளாக்குகிறது..
அப்படி எதை தான் கண்டானோ ..
அன்று அறையை கலைத்துப் போட்டவன் குப்பை மேடாக்கி விட்டு மனைவியிடம், ” நானே சரி செய்து விடுகிறேன்டி செல்லம்.. ” என்று கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு வந்தவன் தானே.. அதன் பிறகு அந்த அறைப் பக்கமே அவன் அதிகம் போகவில்லை.. இரவில் தூங்குவதற்கு மட்டும் தான் ..அதுவும் இந்த இரண்டு மூன்று நாட்களில் எல்லா செல்லிலும் சந்தேகம் படும் படியான எந்த விஷயமும் இல்லை என்றதும் ஆனந்தமான தூக்கம்தான்..
அறையை கலைத்ததோ , மொபைலை எடுத்ததோ எதுவுமே நினைவில் இல்லை.. இதோ அவள் கையில் அந்த பழைய செல்லை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறாள்.. அதை பார்த்ததுமே என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை..பதட்டத்தை குறைத்து ஆசுவாசமான பிறகு அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான் அரவிந்த்..
” என்னடி பழைய செல்லை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்கிறாய்.. ஏதாவது வியாபாரம் செய்யப் போகிறாயா..பழைய இரும்பு சாமான், ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் என்று..இது இரும்பு ஈயம் பித்தளை கூட கிடையாது .. விற்றால் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இருக்காதுடி..”கிண்டலாய் பேசுவதைப் போல பேச்சு கொடுக்கிறான்..
“ ஆமா போங்க நீங்க அறையை கலைத்துப் போட்டு விட்டு போனீங்க இல்ல .. பிறகு ஒரு இடத்தையும் சுத்தம் செய்யல.. நானும் இவன் ஸ்கூல் போகும் நேரம் ஒரு ஒரு அடுக்காக சுத்தம் செய்து அறையையே முழுக்க சரி செய்து விட்டேன்.. ”
சொன்னதும் தான் அறையை சுற்றி பார்க்கிறான்.. துடைத்து வைத்ததைப் போல அத்தனை தூய்மையாக இருப்பதைக் கண்டதும் , “ஆமாம் டி இப்பதான் புதுசா வீடு கட்டின மாதிரி இருக்கு.. ஏன் சும்மா சரி செய்து வைக்க வேண்டியதுதானே.. எதற்காக இவ்வளவு சுத்தம் செய்து வைத்திருக்கிற.. ”
” இந்த குட்டி பையன் இப்பொழுது தானே என்னை விட்டு நகர்ந்து போய் இருக்கிறான். இவ்வளவு நாட்களாக குப்பை மேடாய் வைத்திருந்த அறை இப்பொழுதுதான் பார்க்கவே அழகாக இருக்கிறது. இப்படித்தான் இருக்க வேண்டும் போல.. இப்பொழுதுதான் நானும் கொஞ்சம் கொஞ்சமாய் திருந்திக் கொண்டு வருகிறேன் .. “என்கிறாள் மித்ரா..
அவனுக்கு அவள் பேசுவதைப் பார்க்கவே சிரிப்பு வருகிறது .. “இது நம்முடைய வீடு. நம் இஷ்டம்தான் எப்படி வைத்துக் கொண்டால் என்னடி..”
“கடைசியாய் இன்று தான் அடி அடுக்கை கலைத்தேன் .. இடுக்கில் இந்த செல் பாவமாய் கிடந்தது ..எனக்கு எப்பொழுது இந்த செல்லை வாங்கி கொடுத்தீர்கள் என்று நினைவு இருக்கிறதா..” சொல்லி விட்டு வெட்கத்துடன் தலையை குனிந்து கொள்கிறாள் ..
மொபைலைப் பார்த்ததும் பதறியவன் ‘அவளிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை என்றதும் ,அந்த மொபைலிலும் எந்த ரகசியமும் இருக்கப் போவதில்லை. இருந்திருந்தால் அவள் என்னை பார்த்ததுமே மறைத்து வைத்திருக்க மாட்டாளா.., என்று எண்ணத் தோன்றுகிறது..அவள் அருகில் சென்று அப்படியே ஆசையாய் கட்டிக் கொள்கிறான் ..
” நினைவில் இல்லாமலா எல்லாம் இருக்குதுடி ..நம்ம முதல் இரவு அறையில உனக்கு கிஃப்ட்டா கொடுத்த மொபைல் தானே இது ..நீ அதற்கு பதிலா உன்னையே எனக்கு கிப்ட்டா கொடுத்தடி .. அந்த நினைவுகளை எல்லாம் என்னால மறக்கவே முடியாது.. ” முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை பதிக்கிறான்..
“ஆனா இதற்கு பதில் உனக்கு இதுவரை நூறு செல்லாவது வாங்கி கொடுத்திருப்பேனே..”
” அப்படி எல்லாம் இல்லை..நீங்க என்ன கணக்குல வீக்கா ..ஏழு செல்லு தான் வாங்கி கொடுத்து இருக்கிறீர்கள். அதிலும் இரண்டு மூன்று கோபத்தில் உடைத்தது .மற்றது கை தவறி தானாக உடைத்தது .இந்த செல்லுமே தம்பி அழுகிறான் என்று ஓட்டமாய் ஓடி உடைத்தது தானே . ஏங்க இதை ரிப்பேர் செய்தால் நம்ம உபயோகம் செய்து கொள்ளலாமாங்க .. “அப்பாவியாய் கேட்கிறாள்…
“ வேணாம் டி இதை அப்படியே தலையை சுற்றி தூக்கி எறிந்து விடுவோம் ..ஏன் ரிப்பேர் செய்து கொண்டு.. உனக்கு புது செல் வேண்டுமென்றால் சொல் .. வேறு ஒன்று வாங்கி தருகிறேன் .இப்பொழுது வைத்திருக்கும் செல்லை கூட தூக்கி எறிந்து விடலாம்.. கொஞ்சம் பழசாகித்தான் விட்டது .. ”
“ உங்களுக்கு என்ன காசு நம்ம வீட்டு கொல்லையில் உள்ள மரத்திலா காய்க்கிறது..தூக்கி எறிந்து விடுவோம். வேற வாங்கிக் கொள்வோம் என்று ..நீங்களும் ஆபீஸில் இரவும் பகலுமாய் கஷ்டப்பட்டு தானே வேலை செய்கிறீர்கள்..இதை ரிப்பேர் செய்து வைத்தால் ஆபத்துக்கு உதவும் தானே.. ”
“ அப்படி என்றால் நீ இன்னொரு செல்லையும் கண்டிப்பாக கோபத்தில் உடைக்கத்தான் போகிறாய் ..அதற்காக தானே இதை சரி செய்ய சொல்கிறாய்.. ”
“இல்லைங்க பதட்டத்தில் உடைப்பேன் .. தெரியாமல் கை தவறி உடைத்தாலும் உடைப்பேனே ஒழிய, இனிமேல் எல்லாம் கோபம் எல்லாம் வராது.. நீங்கள் தான் பழைய மாதிரி என்னிடம் பிரியமாக பழக ஆரம்பித்து விட்டீர்களே .. ”
” சரி சரி நம்ம பேசிக் கொண்டிருக்கும் போது இது எதற்கு இடையூறாக. தூக்கி ஓரமாக வை. ” என்ற வன் சாமர்த்தியமாய் அந்த செல்லை கையில் வாங்கி கபோர்டு உயரத்தில் மேலடுக்கில் வைத்து விட்டு வருகிறான..
“எங்கடி நீ பெத்த குட்டி சாத்தானைக் காணோம் .. நம்ம பேசுவது தெரிந்தால் இந்நேரம் வந்து நடுவில் உட்கார்ந்து இருப்பானே..”
“ அவன் தான் இப்பொழுது எல்லாம் தாத்தா பாட்டியோட அதிக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டானேங்க..ஸ்கூல் விட்டு வந்ததுமே புத்தகப் பையை தூக்கிக் கொண்டு பாட்டி அறையில் ஹோம் ஒர்க்க எழுதுகிறேன் என்று போய் விட்டான்.. எனக்கு தான் அவன் இல்லாமல் கொஞ்சம் போர் அடிக்கிறது .. ”
“அவ்வளவுதானே உனக்கு துணையாக இன்னொன்று தயார் செய்து விடுவோம் வா.. ” சத்தம் காட்டாமல் கதவை தாழ்ப் போட்டு விட்டு வருகிறான்..
அவளும் ஏதேதோ சொல்லி சமாளிக்க பார்க்கிறாள். அரவிந்த் அவளை விட்டால் தானே.
மன்மதன் ரதி ஆட்டம் ஆரம்பம் ஆகிறது..
தொடரும்.
